Thursday, May 30, 2013

தில்லித் தமிழ்ச் சங்க செயலரின் கடிதத்துக்கு என்னுடைய எதிர்வினை
தில்லித் தமிழ்ச் சங்க செயலரின் கடிதம்

01-06-2013
அன்பார்ந்த தில்லித் தமிழ்ச் சங்க உறுப்பினர்களே!

வணக்கம்.முனைவர் எம்.என்.கிருஷ்ணமணி அவர்களது சீரிய தலைமையில் தில்லித் தமிழ்ச் சங்கம் பல மைல் கற்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பெற்ற தமிழ்த்தாய் விருது, முதல் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்கு வழங்கப்பட்டது.  இந்த ஆண்டு தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு அந்த அரிய விருது கிடைத்திருக்கிறது என்பது நமது தில்லித் தமிழ்ச் சங்க வரலாற்றில் ஒரு மைல் கல்.


அதனைத் தொடர்ந்து நமது நீண்ட நாள் கோரிக்கையான முத்தமிழ்த் தோரண வாயில் அமைக்கும் பேரவாவைப் பூர்த்தி செய்கின்ற வகையில், தமிழக அரசு அதற்கென ரூபாய் இருபத்தைந்து லட்சத்தை வழங்குவதற்கான அறிவிப்பைச் செய்திருக்கிறது.  இது நமது தில்லித் தமிழ்ச் சங்க வரலாற்றின் மற்றொரு மைல்கல்.  இந்தத் தோரண வாயில் ஆடம்பரத்திற்காக அமையப் போவது இல்லை,  மாறாக, நமது தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கின்ற ஒரு  அம்சமாக அமையும்.  தலைநகரில் தமிழின் பெருமையைப் பறைசாற்றும்.


இவை அனைத்தும் ஒரு தனிப்பட்ட மனிதரின் சாதனையாக நாங்கள் பறைசாற்றவில்லை.  ஒட்டுமொத்த செயற்குழுவின் பணியும், செயற்குழுவில் அல்லாத பல நல்ல நண்பர்களின் ஒத்துழைப்பும்தான் இந்த சாதனைகளை அடைவதற்குக் காரணம் என்பதை இதய நெகிழ்வோடு உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

இவ்வளவு பணிகளை மேற்கொண்டு செயலாற்றும்போது எங்காவது சில தவறுகள் நிகழுமாயின், அவற்றை தனிப்பட்ட தாக்குதல்களை முற்றிலுமாய் தவிர்த்து விட்டு எங்களது கவனத்துக்குக் கொண்டுவந்தால் அவற்றைத் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்..  நமது சங்கம் ஒரு இனிய குடும்பம் போன்றது.  குடும்பத்தில் நிகழும் கருத்து வேறுபாடுகளைக் களைய, தவறுகளைத் திருத்திக் கொள்ள நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.


சில நண்பர்கள் ஆங்காங்கே வைத்திருக்கின்ற நன்றி அறிவிப்பு விளம்பரங்கள் பற்றியும் விமர்சனங்கள் எழுகின்றன.  அந்த நன்றி அறிவிப்பு விளம்பரங்கள் எல்லாம் தனிப்பட்ட சிலரின் ஆர்வ மிகுதியின் வெளிப்பாடே அன்றி வேறல்ல.


சில உறுப்பினர்கள், நமது தமிழ்ப் பள்ளிகளுக்குத் தமிழக அரசிடம் உதவி பெற்றிருக்கலாமே என்று தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்து இருக்கிறார்கள்.  நமது தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவவும் நாங்கள் எப்போதும் காத்திருக்கிறோம்.  பள்ளி நிர்வாகம் அதற்கான அடிப்படைப் பணிகளை மேற்கொண்டு, தமிழக அரசை அணுகினால் உரிய பரிந்துரைகளைச் செய்து, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.  எனவே, இதன் மூலம் பேதங்களை உருவாக்கும் விவாதங்களுக்கு இடம் தரக்கூடாது என்பதே எங்கள் வேண்டுகோள்.


சமீப காலங்களில் நமது சங்கத்தின் பணி தமிழ் கூறும் நல்லுலகால் போற்றப்பட்டும் பாராட்டப்பட்டும் வருகிறது.  தினமும் எங்களுக்கு வரும் ஏராளமான தொலைபேசி அழைப்புக்களே அதற்கு சாட்சி.

எங்களது பணி தொடர உங்கள் அனைவரின் மேலான ஒத்துழைப்பைத் தாருங்கள்.  நாம் சாதிக்க வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன.


வாருங்கள்.  நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்.


இதய அன்புடன்

ஒப்பம்

இரா.முகுந்தன்
பொதுச்செயலாளர்.

தில்லித் தமிழ்ச் சங்க செயலரின் கடிதத்துக்கு என்னுடைய எதிர்வினை
 

புது டெல்லி
30 மே 2013

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலர் அவர்களுக்கு

தில்லித் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு நீங்கள் அனுப்பிய கடிதம் எனக்கு மின்னஞ்சல் வழியாக நேற்று (29 மே 2013) கிடைத்தது.

இந்தக் கடிதம் அனைத்து உறுப்பினர்களுக்காக எழுதப்பட்டிருப்பதாலும், இக்கடிதத்தை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் லெட்டர் பேடில் அச்சிட்டு இருப்பதாலும், தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செலவில் உறுப்பினர்களுக்கு அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டு இருப்பதாலும் இதனை முறைப்படி செயற்குழுவின் ஒப்புதலுடன் நீங்கள் அனுப்பி இருக்க வேண்டும்.  தலைவரின் ஒப்புதல் பெற்று இதனை நீங்கள் அனுப்பி இருக்கவேண்டும்.  இந்த இரண்டையும் நீங்கள் செய்யவில்லை என்பதை மற்றவர்களிடம் இருந்து உறுதிப் படுத்திக் கொண்டேன்.  

எனவே, சங்கத்தின் செலவில், செயற்குழுவின் அனுமதி இன்றி நீங்கள் தனிப்பட்ட முறையில் அனுப்பி இருக்கும் கடிதமாகத்தான் இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறது.

அது இருக்கட்டும்.  

டெல்லி முழுக்க சுவரொட்டிகளும் (உங்கள் சொந்த ஊரான கல்யாணபுரத்திலும் இந்த போஸ்டர்கள் கலக்கிக் கொண்டிருப்பதாக சில நண்பர்கள் சொன்னார்கள்) தினசரிகளில் உங்கள் புகழ்பாடும் விளம்பரங்களும் ஒருவழியாக ஓய்ந்த பிறகு மீண்டும் இந்தக் கடிதம் வழியாக போலியான, செயற்கையான பணிவுடன் உங்கள் கடிதம் துவங்கியிருப்பது உங்கள் ஆஷாடபூதித்தனத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது. 
 
“இவை அனைத்தும் தனிமனிதரின் சாதனையாக நாங்கள் பறைசாற்றவில்லை” என்று எழுதும்போது இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதிக் கொடுத்த யாரோ ஒரு அதிமேதாவி கடிதம் எழுதுவதை நிறுத்தி விட்டு அறையைப் பூட்டிக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்து இருப்பார் என்று நினைக்கிறேன்.  இதை விட சிறந்த நகைச்சுவை கலந்த பொய்யை வேறு யாராலும் எழுத முடியாது என்றுதான் நினைக்கிறேன்.  உங்கள் ஜால்ராக்கள் அடித்து ஒட்டிய போஸ்டர்களும் ஃப்ளெக்ஸ் பேனர்களும் இன்னும் டெல்லியில் பல இடங்களிலும் தமிழ்ச் சங்க வாயிலிலும் அசிங்கமாகப் பல்லை இளித்துக் கொண்டு நிற்கின்றன.  அவற்றில் உள்ள வாசகங்கள் உங்களுடைய இந்தக் கடிதம் எத்தனை பொய்யானது என்பதை நிரூபித்துக் கொண்டு நிற்கின்றன.

“இவ்வளவு பணிகளை மேற்கொண்டு செயலாற்றும்போது எங்காவது சில தவறுகள் நிகழுமாயின் அவற்றை தனிப்பட்ட தாக்குதல்களை முற்றிலுமாய் தவிர்த்து விட்டு எங்களது கவனத்துக்குக் கொண்டு வந்தால் அவற்றைத் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று இன்னொரு செயற்கையான, போலித்தனம் பொங்கி வழியும் வாக்கியத்தை உங்களுக்கு யாரோ எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.

நான் இதுவரை முப்பதுக்கும் அதிகமான கடிதங்களையும் ஐம்பதுக்கும் அதிகமான மின்னஞ்சல்களையும் அனுப்பி இருக்கிறேன்.  அவை அனைத்தும் எவ்வித தனிமனித தாக்குதல்களும் கொண்டிராதவை.  சங்கத்தின் நலனை முற்றிலுமாக மனதில் கொண்டு எழுதப் பட்ட கடிதங்கள்.  அதே போல பெரியவர் பார்த்தசாரதி என்னைவிட அதிகமான கடிதங்களையும் மின்னஞ்சல்களையும் உங்களுக்கு அனுப்பி இருப்பார்.  அவற்றின் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?   

என்னிடமும் மற்றவர்களிடமும் இருந்து வரும் கடிதங்களை தலைவரின் பார்வைக்கும் செயற்குழுவின் பார்வைக்கும் வைக்கும் தைரியம் இல்லாமல் திருட்டுத்தனமாக அவற்றை வீட்டுக்குக் கொண்டு சென்றிருக்கிறீர்கள்.  என்னிடம் இருந்து வந்த மின்னஞ்சல்களை உள்ளறைப் பெட்டியில் இருந்து அழித்து இருக்கிறீர்கள்.  எங்களிடம் இருந்து வந்த எத்தனை கடிதங்களை செயற்குழுவில் வைத்து விவாதித்து இருக்கிறீர்கள் என்று உங்களால் பகிரங்கமாக சொல்ல முடியுமா?  எதற்கு இந்தப் போலியான வேடம் முகுந்தன்?  யாரை ஏமாற்ற இப்படி வேஷம் போடுகிறீர்கள்?  அடுத்தமுறை யாராவது வேறு ஒரு புத்திசாலியை வைத்து உங்கள் கடிதத்தை எழுதி வாங்கி உறுப்பினர்களுக்கு அனுப்புங்கள்.  உங்களின் எழுதி வாங்கிய இந்தக் கடிதத்தில் பொய்மை குரூரமாகப் பல்லிளிக்கிறது.

“சில நண்பர்கள் ஆங்காங்கே வைத்திருக்கின்ற நன்றி அறிவிப்பு விளம்பரங்கள் பற்றியும் விமர்சனங்கள் எழுகின்றன.  அந்த நன்றி அறிவிப்பு விளம்பரங்கள் எல்லாம் தனிப்பட்ட சிலரின் ஆர்வமிகுதியின் வெளிப்பாடே அன்றி வேறல்ல”

இது நீங்கள் எழுதியது -  “விளம்பரங்கள்” என்று உங்களுக்குக் கடிதம் எழுதிக் கொடுத்த மகானே சொல்லும்போது நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இதில் ஒலிக்கும் தொனி அந்த விளம்பரப் போஸ்டர்களை வைத்த “தனிப்பட்ட சில ஆட்களை ஏதோ ஒருவகையில் “பாசக்காரப் பய பிள்ளைக” என்கிறது போலத்தான் ஒலிக்கிறது.  இந்தப் “பாசக்காரப் பய பிள்ளைகளுக்கு” உங்களுக்கான “விளம்பரங்களை” அச்சிடுவதற்கும் நாளேடுகளில் வெளியிடுவதற்கும் ஆன செலவுகளை யாரிடம் இருந்து நீங்கள் உங்கள் சொந்த முயற்சியில் வாங்கித் தந்தீர்கள் என்ற விபரங்கள் எங்களுக்குத் தெரியும்.  உங்களுக்கு அளித்த விளம்பரங்கள் அந்தப் “பாசக்காரப் பய பிள்ளைகள்” தங்கள் சொந்தச் செலவில்தான் செய்தார்கள் என்பதை நீங்கள் எங்காவது மேடையில் வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?  எதற்கு இந்த வேலையெல்லாம் உங்களுக்கு?  நீங்கள் எதையோ, எதற்காகவோ எப்படியோ சமாளிப்பதாக நினைத்து உங்களை நீங்களே மேலும் அசிங்கப்படுத்திக் கொள்கிறீர்கள் முகுந்தன். 

அடுத்த முறை இதுபோன்ற   கடிதங்களை   சிறிதாவது உண்மை கலந்து வேறு யாரையாவது எழுதிக் கொடுக்கச் சொல்லுங்கள். 

தமிழ்ப் பள்ளி நிர்வாகத்துக்கு புதிய பள்ளியைக் கட்டுவதற்கு ஒரு சில உறுப்பினர்கள் அல்ல – ஏறத்தாழ ஏழைத் தமிழ்க் குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை கொண்ட பலருடைய குரலாகத்தான் இது இருக்கிறது.  இங்கு பேதங்களை உருவாக்கும் பணி எங்கு கிளைத்தது?  மறைமுகமான முறையில் உறுப்பினர்களை கேவலமாகத் தூண்டிவிடும் வேலையைத்தானே இந்தக் கடிதம் வழியாக நீங்கள் செய்ய முயற்சிக்கிறீர்கள்?  நீங்கள் தமிழ்ச் சங்கத்தில் பொறுப்பேற்ற நாளில் இருந்து பள்ளியின் வளர்ச்சிக்காக என்ன செய்ய முன்வந்தீர்கள் என்பதை உங்களால் பட்டியலிட்டுச் சொல்ல முடியுமா?  

\மிகவும் போலித்தனமான பணிவுடனும், ஒற்றுமை உணர்ச்சியை வளர்க்க முயல்வது போன்ற  கபட வேஷத்துடனும் உங்களால் கேட்டு எழுதி வாங்கி அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தில் குறிப்பிடாத சில விஷயங்களையும் இங்கு நான் சொல்ல வேண்டியிருக்கிறது.
செயற்குழுவில் எடுக்கப்படும் தீர்மானங்களையும் மாதாந்திர வரவு செலவுக்கணக்குகளையும் தமிழ்ச் சங்கத்தின் வலைத்தளத்தில் பதிவேற்றப்படவேண்டும் என்று 28 ஏப்ரல் 2013 அன்று நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.  அதற்குப் பிறகு நடந்த செயற்குழு கூட்டத்தின் குறிப்புக்களை நீங்கள் பதிவேற்றம் செய்ய எவ்வித அக்கறையும் காட்டவில்லை.  சங்கத்தின் சில உறுப்பினர்கள், தலைவர் திரு.எம்.என்.கிருஷ்ணமணி அவர்களை சந்தித்து இது குறித்து முறையிட்டோம்.  அவர் அந்தக் குறிப்புக்களை வலையேற்றம் செய்ய வேண்டும் என்று எழுத்து வடிவத்தில் உங்களுக்கு ஆணையிட்டார்.  இன்றுவரை அதனை நிறைவேற்ற நீங்கள் எவ்வித அக்கறையும் காட்டவில்லை.  பொதுக்குழுவை நீங்கள்  மதிக்க வில்லை.  உங்கள் தலைவரின் ஆணையையும் புறக்கணித்து இருக்கிறீர்கள்.  பிறகு உங்கள் கடிதத்தின் துவக்கத்தில் எதற்கு தலைவருக்கு போலியான ஒரு பில்டப் கொடுத்து இருக்கிறீர்கள்?  யாரை ஏமாற்றுவதற்கு இந்த வேலை?

அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டணிக்கு தவறான வழிமுறைகளில் முயன்று போலியான ஒரு சான்றிதழை வாங்கி இருக்கிறீர்கள்.  இதனால் இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அறுபது தமிழ்ச் சங்கங்கள் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் முகங்களில் கரி பூசியிருக்கிறீர்கள்.  இந்த முறைகேடான செயலை செய்துவிட்டு, “யாரோ ஒருவர் செய்த தவற்றினால் இப்படி போலியான சான்றிதழ் கிடைத்தது.  அதனை ஒப்படைத்துவிட்டு வேறு வாங்கச் சொல்லியிருக்கிறார்கள்” என்று அப்பட்டமான பொய்யை எல்லோரிடமும் சொல்லி வருகிறீர்கள்.  குழந்தைக்குக் கூடத் தெரியும்.  அந்தப் போலி சான்றிதழ் விவகாரத்தில் குற்றவியல் விசாரணை நடந்து வருகிறது. அந்த விசாரணை முடியும் வரை கூட்டமைப்பின் பெயரால் டெல்லியில் பதிவு செய்ய முடியாது என்பது. 

இது குறித்து ஒரு ஆராயும் குழுவை பொதுக்குழு நியமித்தது.  அந்தக் குழுவுக்கு இதுவரை நீங்கள் எவ்வகையான ஒத்துழைப்பையும் நல்கவில்லை.  அதனை ஒத்திப் போடவே முயற்சிக்கிறீர்கள் என்பது அந்த ஆய்வுக் குழுவின் உறுப்பினர்கள் பெரியவர் திரு.கே.ஹெச்.வி.சுப்பிரமணியன், திரு.சந்தானம் ஆகியோர் உங்களுக்கு அனுப்பி இருக்கும் கடிதங்கள் வழியாகத் தெரிகிறது. 

செத்துப் போனவர்கள் உயிருடன் வந்து மனுவில் கையெழுத்து இடுவதும், போலிக்கையெழுத்துடன் உள்ள சான்றிதழ்களைப் பெறுவதிலும் பொய்மைகளைப் பரப்புவதிலும் நீங்கள் வல்லவர் என்பதை அடிக்கடி பறைசாற்றுகிறீர்கள்.  இதைச் சுட்டிக் காட்டினால் தேர்தலில் தோற்றுப் போன பொறாமையில் பேசுகிறான்.  என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று வீராப்பு பேசுவீர்கள். 

உங்களுடைய இதுபோன்ற  பேச்சுக்களைக்   கேட்டு இப்போது உங்கள் நண்பர்கள் கூட சற்று ஒதுங்கி நின்று கேலியாக தங்களுக்குள் சிரித்துக் கொள்வது உங்களுக்குத் தெரியுமா முகுந்தன்?

இறுதியாக ஒரு விஷயம். நான் உங்களை விட வயதில் பெரியவன்.  அதனால் இதனை என்னுடைய அன்பான அறிவுரையாகவும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். 

உங்கள் சார்பான வாதங்களை மற்றவர்கள் முன் நீங்களே முன்னெடுத்துப் பேசுங்கள்.  மற்றவர்களை விட்டுப் பேசவைக்காதீர்கள்.  இப்போது டெல்லியில் உள்ள தமிழர்கள் எல்லோரும் உங்களின் இந்தப் பழக்கம் குறித்து நன்கு அறிந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.  உங்களால் அனுப்பபடும் ஜால்ராக்கள் பாவம், மற்றவர்களிடம் அநியாயமாகத் திட்டு வாங்குகிறார்கள்.  அவர்களுக்கு உங்களிடம் என்ன காரியமோ தெரியவில்லை. எல்லாவற்றையும் சகித்துக் கொள்கிறார்கள்.  எனவே மற்றவர்களுக்குத் திட்டு வாங்கிக் கொடுக்காமல் நீங்களே நேரிடையாக சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

அதன் பிறகு, தமிழ்ச் சங்கம் ஒரு குடும்பம்,  நாமெல்லாம் அதன் அங்கத்தினர்கள்.  நம்முடைய குறைகளை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற திண்ணை உபதேசங்களை எல்லாம் வேறு யாரிடமாவது கேட்டு எழுதி வாங்கி உறுப்பினர்களுக்கு அனுப்புங்கள்.

தமிழ்ச் சங்கத்தில் உங்கள் பதவிக் காலம் முடியும் தறுவாயில் இருக்கிறது.  இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்தலை நீங்கள் அறிவிக்க வேண்டும்.  அப்படி அறிவிக்கும் நேர்மை உங்களுக்கு இருந்தால் மற்றவற்றைப் பற்றி அனைவரும் நேருக்கு நேர் அமர்ந்து விஷயங்களை நேர்மையுடனும் தெளிவுடனும் திறந்த மனத்துடனும் விவாதிப்போம்.
உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

அன்புடன்

கி.பென்னேஸ்வரன்
ஆயுள் உறுப்பினர் - 347

No comments:

Post a Comment