Sunday, July 14, 2013

தில்லித் தமிழ்ச் சங்கம் - பொதுச்செயலருக்கு ஒரு கடிதம்



11 ஜூலை 2013
பெறுதல்

திரு.ஆர்.முகுந்தன்
பொதுச்செயலாளர்
தில்லித் தமிழ்ச் சங்கம்
இராமகிருஷ்ண புரம்
புது டெல்லி

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு.ஆர். முகுந்தன் அவர்களுக்கு

வணக்கம்.

உங்களுடன்  நேரடியாகப்   பேசி நீண்ட காலம் ஆகிவிட்டதால்    இது போன்ற கடிதங்கள் வழியாக மட்டுமே என்னுடைய கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் உங்களிடம் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் ஆயுள் உறுப்பினர் என்கிற முறையில் எனக்கு உள்ள அடிப்படை உரிமையைப் பயன்படுத்தி,  சங்கத்தின் பொதுச்செயலாளரான  உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.  இவை மட்டுமே நமக்குள் பொதுவானவை.  மற்றபடி உங்களிடம் வேறு எந்த வகையான பகைமையும் எனக்குக் கிடையாது.  உங்களுக்கும் அப்படித்தான் என நம்புகிறேன்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினராக, அதன் செயலாளரான உங்களிடம் எனக்குள் மேலோங்கி இருக்கும் வருத்தம் என்னவென்றால், உறுப்பினர்களாகிய நாங்கள் எழுதும் எந்தக் கடிதத்துக்கும் பதில் எழுத வேண்டும் என்ற நாகரிகம் உங்களுக்கு அறவே அற்றுப் போயிருக்கிறது.   உங்களிடம் இருந்து பதிலை எதிர்பார்த்து இக்கடிதத்தை நான் எழுதவில்லை.  யாருக்கும் எதற்கும் பதில் தராத உங்களுடைய அநாகரிகப் போக்கு குறித்து எங்காவது பதிவு செய்தாக வேண்டும்.  அதற்காகவும் இக்கடிதத்தை எழுதுகிறேன். 

யாருக்கும் எதற்காகவும்  பதில் எழுத மறுக்கும்   நாகரிமற்ற ஒரு ஆசாமிக்கு மீண்டும் மீண்டும் கடிதங்களை எழுதி  எனக்கும் ஒருவகையில் வெட்கமற்றுப் போய்க்கொண்டிருக்கிறது.  சுரணை குறைந்து வருகிறது.  ஆனாலும் சில விஷயங்களை  சங்கத்தின் நலன் கருதி உங்கள் பார்வையில் வைத்தே ஆகவேண்டும். எனவே, இவை போன்ற கடிதப் பதிவுகள்  மிகவும் தேவையாக இருக்கின்றன. வேறு வழியில்லை.

சரி. விஷயத்துக்கு வருகிறேன்.

இந்திய பதிவு சட்டம் வரையறைத்திருக்கும் விதிகளின் அடிப்படையில், செயற்குழுக் கூட்டத்தின் குறிப்புக்களை எந்த உறுப்பினரும் பார்வையிடலாம்.  அவற்றில் ஏதேனும் ஐயங்கள் இருந்தால் உரிய விளக்கங்களையும் பெறலாம்.  இது பதிவு பெற்ற சங்கங்களின்/நிறுவனங்களின் உறுப்பினர்களுக்கு சட்டம் அளித்திருக்கும் அடிப்படை உரிமை. 

நம்முடைய சங்கத்தின் விதிமுறைகளில் இது பற்றி   குறிப்பிடப்படவில்லை என்றாலும் இந்தியப் பதிவு சட்டத்தில் (Registration of Societies Act) அளிக்கப்பட்டிருக்கும் இந்த உரிமை நாடு தழுவிய அளவில், இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட மிகவும் அடிப்படையான, தேவையான உரிமைகளில் ஒன்றாகும்.   

நான்,  திரு,வி.பார்த்தசாரதி, திரு.எஸ்.துரை, திரு,சக்தி பெருமாள் ஆகிய தில்லித் தமிழ்ச் சங்கத்தின் ஆயுள் உறுப்பினர்கள் சமீபத்தில் உங்களுக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பி இருந்தோம்.  ஜனவரி 2012ல் இருந்து  ஜூன் 2013 வரை நடைபெற்ற செயற்குழுக் கூட்டங்களின் குறிப்புக்களை நான் மேற்கூறிய சட்டம் வரையறுத்துள்ள உரிமையின் அடிப்படையில் பார்வையிடுவதற்காக வேண்டி அந்த விண்ணப்பத்தை அனுப்பி இருந்தோம்.
அதற்கு முன்பு, 28 ஏப்ரல் 2013 அன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், (ஏற்கனவே 2011ம் ஆண்டு உறுப்பினர் ஆர்.ஷாஜஹான்  அவர்களால் முன்வைக்கப்பட்டு முழுமனதாக ஆதரவு  பெற்ற தீர்மானத்தை) திரு.எம்.சேதுலிங்கம் அவர்கள் மீண்டும் முன் மொழிந்து, நான் வழி மொழிய மீண்டும் முழுமனதாக பொதுக்குழுவின்  ஆதரவு பெற்று எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி செயற்குழுவின் குறிப்புக்களை வலைத்தளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

துரதிருஷ்டவசமாக அதனை நீங்கள் எந்தவகையிலும் மதிக்கவில்லை.  சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.கிருஷ்ணமணி அவர்களை நேரில் சந்தித்து இது குறித்து ஒரு கடிதம் அளித்தோம்.  “யாராக இருந்தாலும் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை கண்டிப்பாக மதித்தாக வேண்டும்” என்று எங்களிடம் கூறிய தலைவர், செயற்குழுக் கூட்டக் குறிப்புக்களை பதிவேற்ற வேண்டும் என்று எங்கள் கடிதத்திலேயே   குறிப்பு எழுதி  உங்களுக்கு அனுப்பினார்.

அதையும் மதிக்க வில்லை நீங்கள்.    எங்கள் காதுகளுக்குக் கண்டிப்பாக விஷயம் வந்து சேரவேண்டும் என்ற நோக்கில் உங்கள் நண்பர்களிடம், தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவரைப் பற்றி நீங்கள் கூறிய வார்த்தைகளை இந்தக் கடிதத்தில் எழுதி உங்களுக்கு நினைவுபடுத்துவது கண்டிப்பாக நாகரிமாக இருக்காது.   அது போகட்டும்.
பொதுக்குழுவின் தீர்மானம் உங்களுக்கு ஒரு பொருட்டல்ல.  உங்கள்  தலைவரின் உத்தரவு உங்களுக்கு எந்த வகையிலும் பொருட்டல்ல. 

எனவே, சட்டத்துக்காவது பயப்படுவீர்கள் என்று சங்கங்களின் பதிவுச் சட்டத்தில் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையைப் பயன்படுத்தி  கடந்த 07 ஜூலை 2013 அன்று காலை 11.00 மணியில் இருந்து பிற்பகல் 12.30 மணிவரை அந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தபடி தில்லி தமிழ்ச் சங்கத்தில் நான், திரு.பார்த்தசாரதி, திரு.எஸ்.துரை, திரு.சக்தி பெருமாள் மற்றும் சில தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களுடன் தமிழ்ச் சங்க அலுவலகத்தில் உங்களுக்காகக் காத்திருந்தோம்.     

நெடுநேரம் உங்களிடம் இருந்து எந்த எதிர்வினையும் கிடைக்காததால், மூத்த உறுப்பினர் திரு.பார்த்தசாரதி அவர்கள் உங்களை அலுவலகத்துக்கு வந்து குறிப்புக்களைக் காட்டுமாறு தொலைபேசியில் அழைத்த போது உங்களால் வரமுடியாது என்பதை அவரிடம் மிகவும் கடுமையான தொனியில் கூறினீர்கள்.  “நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை சங்க அலுவலகத்தில் எழுதிக் கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என்று அகந்தை கலந்த குரலில் கூறினீர்கள். 

நாங்கள் மீண்டும் ஒரு விண்ணப்பத்தை அப்போதே அங்கேயே எழுதி சங்க அலுவலகத்தில் அளித்து விட்டு வந்தோம்.  இன்றுவரை அது குறித்த ஆழ்ந்த மௌனத்தைக் கடைப்பிடித்து வருகிறீர்கள்.

இப்படி நடந்து கொள்ளும் உங்களுடைய போக்கு எங்களுக்கு பெருத்த சந்தேகத்தை அளிக்கிறது.     இப்படி சட்டப்படி எங்களுக்குக் காட்ட வேண்டிய குறிப்புக்களை காட்டாமல் நீங்கள் இப்படிப் பிடிவாதம் பிடித்தால் அந்தக் குறிப்புக்களில் உங்களுக்கு சாதகம் இல்லாத விஷயங்கள் ஏதோ இருக்க வேண்டும்.  அதனை மறைக்கப்பார்க்கிறீர்கள் என்ற சந்தேகம் கண்டிப்பாக யாருக்கும் எழத்தான் செய்யும். 

நீங்களே தமிழ்ச் சங்கத்தில் பொறுப்பில் இல்லாத போது,  வழக்கமாக நீங்கள் எப்போதும் செய்வது போல, நீங்களே நேரடியாகக்   கேட்காமல் யாரையாவது தூண்டி விட்டு  பொறுப்பில் இருப்பவர்கள் உங்களுக்குக் கொடுக்க மறுத்தால்   இன்று உங்களைப் பற்றி எங்கள் அனைவருக்கும்   எழும் அதே சந்தேகம் உங்களுக்கும் அப்போது கண்டிப்பாக எழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது இல்லையா? 

இன்று பெரியவர் பார்த்தசாரதி அவர்கள் இதுவிஷயமாக உங்களுக்கு மீண்டும் தொலைபேசியில் நினைவுறுத்தியபோது, “செயற்குழுக் குறிப்புக்களைப் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் அதற்குரிய பணம் கட்ட வேண்டும்” என்றீர்கள்.  இதனை நாங்கள் சென்றமுறை காத்திருந்தபோது கூறவில்லை.  எங்களுக்குப் புரிகிறது.  நீங்கள் வேறு விதமான விளையாட்டை முயற்சிக்கிறீர்கள் என்று.  பரவாயில்லை.

எத்தனை பணம் கட்ட வேண்டும் என்று கேட்டதற்கு நீங்கள் சரியான பதில் அளிக்கவில்லை.  நாங்கள் உரிய பணத்தைக் கட்டுவதற்குத் தயாராக இருக்கிறோம்.  அதுவேறு விஷயம்.  ஆனால் உங்களுக்கு உண்மையாகவே வேண்டியது அது அல்ல என்று எங்களுக்குத் தெரியும்.  உங்கள் விளையாட்டு வேறு ரகம் இல்லையா?
பிறகு, “இணையத்தில் இன்று வெளியிட்டிருக்கிறோம்.  பார்த்துக் கொள்ளுங்கள்”  என்று கூறினீர்கள். 

ஏதோ ஒருவகையில் ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் மதிப்பு அளிக்கத் துவங்கி விட்டீர்கள் என்று மகிழ்ச்சியில் திளைத்து பல எதிர்பார்ப்புக்களுடன் இணையத்தைத் திறந்தோம்.  எங்கள் சந்தோஷத்துக்கு அற்பாயுள்தான்.  நீங்கள் திருந்தவில்லை என்று தெரிந்தது.  திருந்தவும் வாய்ப்பு இல்லை என்றும் அதன் வழியாகத் தெரிந்தது.

இணையத்தில் வெளியிட்டிருக்கும் உங்கள் குறிப்புக்களை நீங்களே ஒருமுறை பாருங்கள்.  மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் முகுந்தன் – அது முழுமையான ஒன்றா? அதில் ஏதேனும் நேர்மை இருக்கிறதா?  பொதுவில் வைக்கும் ஒரு விஷயத்தில் எத்தனை அலட்சியமாக நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்று விஷயம் தெரிந்த யாரையாவது கேளுங்கள்.  உங்களுக்கு ஜால்ரா அடிப்பவர்களையும் இப்போதைய சில சௌகர்யங்களுக்காக உங்களுக்கு சொம்பு தூக்கிக் கொண்டு திரிபவர்களையும் தயவு செய்து கேட்காதீர்கள்.  அவர்கள் உங்களை எந்தவகையிலும் கண்டிப்பாகத் திருந்த விடமாட்டார்கள்.

நாங்கள் ஜனவரி 2012ல் இருந்து செயற்குழுக் கூட்டக் குறிப்புக்களை உங்களிடம்   இருந்து கேட்டிருந்தோம்.  நீங்கள் கடந்த இரு மாதங்களாக மாதம் நிகழ்ந்த கூட்டத்தின் குறிப்பை அறைகுறையாக வெளியிட்டு இருக்கிறீர்கள்.  அதில் பல தவறுகளும் வேண்டுமென்றே மறைக்கப்பட்ட உண்மைகளும் உள்ளன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.   (துல்லியமான விபரங்களை திரு.பார்த்தசாரதி அவர்களால் எடுத்துக் காட்ட இயலும்.  அவர் கண்டிப்பாக செய்வார் என்று நம்புகிறேன்).  

வலைத்தளத்தில் நீங்கள் செய்திருக்கும் உட்டாலங்கடி வேலையால் ஒருவகையில் எங்களையும், பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களையும், உங்கள் தலைவரையும், உங்கள் செயற்குழுவையும் ஏமாற்றி இருக்கிறீர்கள் என்பதை உங்களால் உணரமுடிகிறதா?

செயற்குழுவில் தீர்மானிக்கப்படும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அதன் செலவுக்காக  கண்டிப்பாக ஒரு தொகையை நீங்கள் அனைவரும் ஒப்புதல் அளித்திருப்பீர்கள்.  அந்தத் தொகையை ஏன் அங்கு குறிப்பிடவில்லை? தனித்தனி விபரங்கள் வேண்டாம்.  நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றுக்கும் மொத்தம் எத்தனை செலவு என்று குறிப்பிடலாமே? இதில் எதைக்கண்டு   பயம் உங்களுக்கு?  அப்படி அதனை வெளியிடக் கூடாது எந்த அறிவாளி உங்களுக்கு அறிவுறுத்தினான்? யாருடைய அறிவுரையைக் கேட்டு இதுபோன்ற அதிரடி முடிவுகளை எடுக்கிறீர்கள் என்று உண்மையாகவே  தெரியவில்லை. 

இதுபோன்ற தகவல்களை அனைவரும் பார்க்காத வண்ணம் உறுப்பினர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் வலையேற்ற முடியுமே.    ஒவ்வொரு உறுப்பினரையும பயனராகப் பதிவு செய்து அவர்களுக்கு பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை அளித்து வெறும் உறுப்பினர்கள் மட்டுமே இந்த விபரங்களைப் பார்க்கும் வகையில் செய்வதற்கு நிறைய வசதிகள் உள்ளன. Members Area – என்ற தனிப்பகுதியை ஏற்படுத்தி அங்கு பதிவு செய்து கொண்டு  கடவுச்சொல்லைப் பெற்று இந்த விபரங்களைப் பார்க்கலாம்.  உறுப்பினர்களை மட்டுமே,அவர்களிடம் இருந்து சரியான தகவல்களைப் பெற்று அதனை ஓரிரு நிமிடங்களில் உறுதி செய்து கொண்டு அவர்களுக்கு கடவுச் சொல்லை வழங்கும்  வசதி இணையத்தில் ஏராளமாக இருக்கிறது.   

தமிழ்ச் சங்கத்தின் நலன் கருதி இதற்கான ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் நல்க என்றும் நான் தனிப்பட்ட முறையில் ஆயத்தமாக இருக்கிறேன்.  ஆலோசனையைக் கேட்பதும் பயனடைவதும் உங்கள் விருப்பம்.

நீங்கள் சங்கத்தின் செயல்பாடுகளாகக் காட்டிக் கொள்பவை அனைத்தும்  தனிப்பட்ட வகையில் யார் யாரை மகிழ்ச்சியில் திளைக்க வைக்க நினைக்கிறீர்கள் – எந்த வகையான அரசியல் ஆதாயங்களை மனதில் வைத்து தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளை வடிவக்கிறீர்கள் என்கிற விஷயங்கள் எங்களுக்குப் புரியாதவை அல்ல.  உங்கள் செயற்குழுவையும் நீங்கள் எப்படி எல்லாம் இருட்டில் வைக்கிறீர்கள் – அவர்களுக்குள் அடிக்கடி பிளவுகளை ஏற்படுத்தி எட்ட நின்று வேடிக்கை பார்ப்பது மட்டும் அல்லாமல், உங்களுக்குத் தேவையான விஷயங்களை அவர்கள் வழியாக நிறைவேற்றிக் கொள்கிறீர்கள் என்கிற விஷயங்களும் எங்களுடைய கவனத்துக்கு வராமல் இல்லை. 

சரி. மீண்டும் விஷயத்துக்கு வருகிறேன்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர், கடந்த 28 செப்டம்பர் 2013 அன்று நிகழ்ந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அங்கிருந்த உறுப்பினர்கள் அனைவரின் முன்னிலையில் “செப்டம்பர் 2013ல் தேர்தல் கண்டிப்பாக நடக்கும்” என்று மேடையில் உறுதி மொழி அளித்திருக்கிறார். நாங்கள் நேரில் சந்தித்த போதும், சங்கத்தின் தேர்தல் கண்டிப்பாக செப்டம்பர் மாதத்தில் நடக்கும் என்று உறுதி அளித்திருக்கிறார். அதுதவிர, சங்க விதிமுறைப்படியும் நீங்கள் செப்டம்பரில் தேர்தல் கண்டிப்பாக ஏற்பாடு செய்தே ஆகவேண்டும். 

எனவே,  நாங்கள் கேட்டபடி, தில்லித் தமிழ்ச் சங்கத்தின்   செயற்குழுக் கூட்டங்களின் குறிப்புக்களை ஒருமுறையாவது, நீங்கள் செயலராக இருக்கும்போதே பார்க்கும் பாக்கியம் எங்களுக்குக் கிட்ட வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

நீங்கள் தவறு செய்யாவிட்டால் எதற்கு பயப்படவேண்டும் முகுந்தன்? 

எங்களிடம் அவற்றை தாராளமாகக் காட்டலாமே.  இந்த விஷயத்தில் நீங்கள் மிகவும் அதிகமாக   தயக்கமும் முரட்டுத்தனமும் காட்டும் போது எங்கள் சந்தேகங்கள் வேறுவகையில் வலுவடைவதைத் தவிர்க்க முடியவில்லை.

எங்களுக்கு உங்கள் செயற்குழுக் கூட்டக் குறிப்புக்களை ஒருமுறை காட்டினால் நீங்கள் ஒன்றும் குறைந்து விடமாட்டீர்கள்.  உங்களுக்கு எந்த வகையிலும் நாங்கள் ஊறு செய்யமாட்டோம் என்று உறுதி அளிக்கிறேன்.

தில்லித் தமிழ்ச் சங்க செயற்குழுக் கூட்டங்களின் குறிப்புக்களை சங்க அலுவலகத்தில் நாங்கள் வந்து பார்வையிடும் வண்ணம் உங்களிடம் இருந்து ஒரு தேதி மற்றும் நேரத்தை அறிவிக்கும் கடிதம் அல்லது மின்னஞ்சலை (மீண்டும் வெட்கத்தை விட்டு) ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

அன்புடன்

கி.பென்னேஸ்வரன்
ஆயுள் உறுப்பினர் எண்-347
9910031958
___________________________________________________________________________________

2 comments:

  1. கடிதம் வந்ததா இல்லையா

    ReplyDelete
  2. கடிதம் வந்ததா இல்லையா

    ReplyDelete