நம்முடைய தமிழ் திரைப்படங்களில் நமக்கு அதிகம் காணக்கிடைக்கும் காட்சி இது. கதாநாயக வேடம் புனையும் முதியவர் வழக்கமாகக் கடும் உழைப்பாளி. காலத்தின் கொடுமையால் அவர் சுமார் 20 வயதுள்ள தமிழ் பேசத்தெரியாத ஏதாவது ஒரு சேட்டுப் பெண், தெலுங்கு கன்னடம் அல்லது மலையாளப் பெண் நடிக்கும் கதாநாயகிப் பாத்திரத்தின் வீட்டில் வேலைக்காரராக இருப்பார். இரவல் குரலின் கருணையால் செயற்கையாகத் தமிழ் பேசும் அந்தக் கதாநாயகிப் பெண் நம்முடைய கதாநாயகப் பெரியவரை ஏகத்துக்கும் கேவலப்படுத்திக் கொண்டு இருப்பாள். தோழியருடன் பந்து விளையாடும் போது பந்தைப் பொறுக்கிப் போடச் சொல்வாள். சாணி பொறுக்கச் சொல்வாள். தரையை மெழுகச் சொல்வாள். விறகு பிளக்கச் செய்வாள். வண்டியைத் துடைக்கச் சொல்வாள். தன்னுடைய தோழிகள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அவரை மிகவும் கேவலமாக நடத்துவாள். நம்முடைய கதாநாயக வேடம் அணிந்த பெரியவர் எல்லாவற்றையும் இன்முகத்துடன் பொறுத்துக்கொள்வார். அவள் காலால் இட்ட பணிகளைத் தலையால் செய்வார். பொறுத்துப் பொறுத்து, ஒரு கட்டத்தில் அவமானம் தாங்காது சுனாமி அலையின் சீற்றத்துடன் பொங்கி எழுவார். Look Madam!! What do you think o yourself? You know who I am? I am B.A., Economics from Krishnagiri Government Arts College you know? First of all, you learn how to give respect and take respect. Understand? You better understand... என்கிற ரகத்தில் கைகால்களை ஆட்டி எழுச்சிமிகு வசனங்களைப் பேசுவார். அரங்கில் விசில் சத்தமும் கரவொலியும் வானை முட்டும். நம்முடைய கதாநாயகப் பெரியவரின் ஆங்கில வசனத்தைக் கேட்டு திக்கு முக்காடிப் போவாள் அந்தக் கதாநாயகிப் பெண். அவளுடைய போக்கு உடனடியாகத் தலைகீழாக மாறிப் போய்விடும். அவளுடைய மனதில் சொல்லொணா வண்ணம் காதல் கரைபுரண்டு ஓடும். உடனடியாக வரும் அடுத்த காட்சியில், இருவரும் நைல் நதி அல்லது தேம்ஸ் நதிக்கரையோரத்தில் கைகோர்த்துக் கொள்வார்கள். அல்லது கதாநாயகப் பெரியவர் தலைமுதல் கால்வரை போர்த்திய ஆடையுடனும் கதாநாயகி அந்தக் குளிரில் அரைக்கால் மீட்டர் துணியை உடுத்திக் கொண்டு, ஆல்ப்ஸ் மலைச் சிகரத்தில் புரியாத தமிழில் ஏகப்பட்ட வாத்திய இரைச்சல்களுடன் பாடி ஆடுவார்கள். அங்கே இருமனங்களும் செம்புலப் பெயல் நீர் கலந்தாற்போல் கலந்து விடும்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்தக் கதாநாயகியின் மனமாற்றத்துக்கு மூலகாரணமாக அமைவது நம்முடைய கதாநாயகப் பெரியவர் பொரிந்து தள்ளிய ஆங்கிலம்தான். அவர் பேசிய ஆங்கிலம் தான் அந்த அம்மணியின் மனத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்த அளவு ஆங்கிலம் தெரிந்த இவர் கண்டிப்பாக நல்லவராகவும் வல்லவராகவும் இருந்துதான் ஆகவேண்டும். இந்த அளவு ஆங்கிலம் பேசும் இவருக்குத் தெரியாதது ஒன்றும் இருக்க முடியாது என்றமுடிவுக்குக் கதாநாயகிப் பெண் தள்ளப்பட்டு விடுவாள்.
நம்முடைய குழந்தைகளின் அறிவுத் திறனை அளப்பதற்கும் நாம் இந்தத் தமிழ்த் திரைப்படத்தின் கதாநாயகிப் பெண் மேற்கொள்ளும் இது போன்ற அளவு கோலைத்தான் அதிகமாகப் பயன் படுத்துகிறோம். குழந்தைகள் புத்திசாலிகள் ஆகத்திகழ வேண்டும் என்றால் அவர்கள் வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களை அநியாயமாக வற்புறுத்துகிறோம். அதற்காக சைக்கிளையோ, ஸ்கூட்டரையோ காரையோ வீட்டையோ விற்றாவது அந்தக் குழந்தை ஆங்கிலம் படிக்க வேண்டும். நல்ல ஆங்கிலத்தில் பேசியே ஆகவேண்டும் என்று அவர்கள் மீது திணிக்கிறோம். இந்த வன்முறையின் கொடுமையான விளைவாக நம்முடைய குழந்தைகளுக்கு நம் தாய்மொழியின் அருமை, அதன் இனிமை, அதன் வளமை, அதன் பெருமை பிடிபடாமல் போய்விடுகிறது. பல குடும்பங்களில் குழந்தைகளிடம் வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தில் பேசுவதை ஒரு குடும்ப வழக்கமாகக் கடைப்பிடிக்கிறார்கள். குழந்தைகள் ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் என்று அவர்கள் மீது ஒருவகையான வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு எந்தவகையான இன்பத்தை மறுக்கிறோம் என்பதனை உணர்ந்து கொள்ளாமல் அவர்களை ஆங்கிலம் ஒப்பிக்கும் கிளிகளாக மாற்ற முயற்சிக்கிறோம்.
உலகில் உள்ள எத்தனையோ ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று. இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்வது அல்லது அதில் பாண்டித்தியம் பெறுவது என்பது ஒன்றும் தவறான காரியம் அல்ல. கண்டிப்பாகத் தாய்மொழியைத் தவிர இன்னும் பிறமொழிகளைக் கற்றுக்கொள்வது மனநல ரீதியில் மிகவும் அற்புதமான விஷயம்தான். ஆனால் தாய்மொழியை முற்றாகப் புறக்கணிக்க வைத்து ஒரு மேட்டிமை பாவனைக்காக ஆங்கிலத்தை அவர்கள் மீது திணிப்பது என்பது நம்முடைய குழந்தைகளுக்கு எதிராக நாம் கருத்து ரீதியாகத் திணிக்கும் ஒருவகையான வன்முறைதான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியாது. இங்கே தில்லியில் அந்தக் கொடுமை சற்று அதிகம்தான் என்று நினைக்கிறேன். தாங்கள் தமிழர்கள் அல்லது தமிழ் தெரிந்தவர்கள் என்று வெளியில் காட்டிக்கொள்வதை ஒரு அவமானமாக நினைக்கும் ஒரு மனப்பாங்கை குழந்தைகளிடத்தில் இங்குள்ள தலைநகர்த் தமிழர்கள் வளர்த்து வருகிறோம். இது குறித்து ஏற்கனவே ஒரு சனிமூலை கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறேன். தன்னைத் தமிழர்களாகக் காட்டிக் கொள்ள விரும்பாத நல்லவர்களின் மனப்பாங்கு மற்றும் போக்கு குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதனை மீண்டும் இங்கு விவரிக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இங்கு நான் சொல்ல விரும்புவது நம்முடைய குழந்தைகளை, நம்முடைய மொழியில் இருந்து விலக்கி வைக்கும் மனப்பாங்கைப் பற்றித்தான். தலைநகரில் வளரும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் என்பது அவர்கள் வீட்டில் எப்போதாவது பேசிக்கொள்ளும் ஒரு காட்டுமிராண்டி பாஷை. தொலைக் காட்சிகளில் பெற்றோர்கள் பார்க்கும் அசட்டுத்தனமான தொடர்களில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து கொண்டும் எப்போதும் அழுது கொண்டும் பேசப்படும் ஒரு மொழி. அவ்வளவுதான். தமிழுக்கு அதற்கு மேல் அங்கே வேலையும் பயன்பாடும் இல்லை.அதிலும் சில தமிழ்ப் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் எதிரில் மிகவும் கவனமாகத் தமிழ் பேசுவதைத் தவிர்த்துத் தனியறையில் காதல் செய்யும் போதும் சண்டை போடும் போது மட்டுமே தமிழ் பேசிக்கொள்கிறார்கள். சில வீடுகளில் தமிழ்த் திரைப்படங்களைக் கூடக் குழந்தைகள் எங்காவது வெளியில் விளையாடப் போகும்போதுதான் தொலைக்காட்சிப் பெட்டியில் போட்டுப் பார்க்கிறார்கள். (ஆனால் இது ஒருவகையில் இது அந்தக் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்யும் காரியம்தான். அதனால், இதனை சற்று சகித்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது). சில வீடுகளில் சிறுகுழந்தைகளிடம் தமிழ் பேசினால் அந்தக் குழந்தை பேயைக் கண்டது போல மிரண்டு போகிறது என்று பெருமையுடன் விருந்தாளிகளிடம் சொல்பவர்களும் உண்டு.
எதையும் சிந்திக்கும்போது நமக்குப் பழக்கமான, நமக்குள் ஊறிப்போன ஒரு மொழியில் சிந்திக்கும்போது சற்று உருப்படியாகச் சிந்திக்கலாம் என்று மொழியியல் அறிஞர்கள் அடிக்கடி வலியுறுத்துகிறார்கள். சிந்தனை அளவில் நமக்குப் பரிச்சயமான மொழியின் தளத்தில் இயங்கும்போது அதன் ஓட்டம் சீராக அமையும் என்பதும் இயற்கை. எனவே அடிப்படை மொழியான தாய்மொழியை மனத்தளவில் சிந்தனை அளிவல் வலுப்படுத்தினாலே பல பெரிய காரியங்களை சாதிக்கலாம். ஆனால் இங்கு நடப்பது என்னவென்றால், சிந்தனை ஓட்டத்தில் நமக்குச் சரளமான தாய்மொழியை ஒதுக்கி வைத்து, அந்நிய மொழிகளையும் அறைகுறையாகக் கற்றுக்கொடுத்து, சிந்தனை ஓட்டத்தைத் தடைபடச் செய்கிறோமோ என்றும் தோன்றுகிறது. இதனை என்னால் சரியாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. மொழியியல் அறிஞர்களும், மனவியல் அறிஞர்களும் இதைப்பற்றி இன்னும் சற்று விரிவாகவும் சொல்லலாம். என்னுடைய சிற்றறிவுக்கு எட்டுவது என்ன என்றால், குழந்தைகளின் மீதான இந்த அறைகுறை மொழித் திணிப்பு என்பது அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் அவர்கள் சொல்ல வருவதை சரியான முறையில் எடுத்துச் சொல்ல முடியாத ஒரு அசௌகர்ய நிலைக்குத் தள்ளப் படுகிறார்களோ என்றும் தோன்றுகிறது. இங்கு தலைநகரில் இந்தியில் சிந்தித்து அதனை மனத்தளவில் உடடினயாக மொழிமாற்றம் செய்து வார்த்தைக் கோர்வைகளைத் தவறாக முன்வைக்கும் பலரைக் காணமுடிகிறது. இதற்கான உடனடி உதாரணமாக என்னுடைய இருமகள்களின் தமிழைச் சொல்லலாம். எங்கள் வீட்டில் வலுக்கட்டாயமாகத் தமிழில் பேசி, அவர்களைத் தமிழ் படிக்க வைத்தே இந்த நிலை என்றால், தமிழை முற்றாக ஒதுக்கி வைத்து ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே பேசவைத்து, வளர்க்கப்படும் குழந்தைகளின் நிலை என்ன என்று நினைத்துப் பாருங்கள். தமிழ் புழங்கும் சூழல் அவர்கள் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. அப்படி இருக்கும்போது ஆங்கிலத்தை மட்டுமே அவர்கள் மீது திணித்து வளர்ப்பது என்பது எந்தக் கொடுமையில் சேர்ப்பது என்று சொல்லத் தெரியவில்லை. இதன் விளைவு என்னவென்றால் அந்தக் குழந்தைகளுக்கு எந்த மொழியின் பாலும் பற்றும் பாண்டித்யமும் ஆழமும் ஞானமும் இல்லாமல் போய்விடும். எல்லாமே அறைகுறையாகத் தான் இருக்கும்.
இந்த நிலையில் தலைநகரில் மரபிசை கற்றுக் கொள்ளவும் மரபுசார் நடனவகைகளைக் கற்றுக்கொள்ளவும் திருப்புகழ், பாசுரங்கள், திருவருட்பா போன்றவற்றைக் கற்றுக்கொள்ளவும் தங்கள் குழந்தைகளுக்கு ஊக்கம் அளிக்கும் பெற்றோர்களைத் தலைவணங்கத் தோன்றுகிறது. இவை நம்முடைய குழந்தைகளை நம்முடைய மரபுடன் ஒத்திசைய வைக்கும் காரியத்தை ஆற்றுபவவை. ஒரு சிறிய அளவிலாவது நம்முடைய மொழியின் வளமையை, பெருமையை, அவர்கள் வளர்ந்த பிறகாவது உணர்ந்து கொள்ள வழிவகை செய்பவவை.
நம்முடைய குழந்தைகளுக்கு நம்முடைய மொழியுடன் நாம் செய்து வைக்கும் பரிச்சயம் குறித்தும், அவர்களுடைய அறிவுத் திறனை ஆங்கிலம் வழி அளப்பதையும் குறித்து நான் சற்று மிகைப்படுத்திச் சொல்வது போலக்கூடச் சில சமயம் தோன்றும். இந்த விஷயத்தை எனக்கே உரிய மிகச் சிறிய அளவிலான ஞானத்தின் விளைவால் சற்றுப் பகிடி செய்வது போலத் தோன்றினாலும் இதன் அடிநாதமாக மிக ஆழமான வேதனை தொக்கி நிற்பதை எப்படி சரியாக விளக்கிச் சொல்வது என்று தெரியவில்லை.
ஏப்ரல் 2008 வடக்கு வாசல் இதழில் வெளியான கட்டுரை.
