Friday, October 15, 2010

கழுநீர்ப் பானையில் கையை விட்ட மைய அரசு...

டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுக்களைப் பற்றி விளையாட்டாக எழுத ஆரம்பித்தேன். விளையாட்டு பற்றி எழுதமாட்டேன் என்றும் விளையாட்டைச் சுற்றி இருக்கும் அரசியலையும் அக்கப்போர்களைப் பற்றி மட்டுமே எழுதுவேன் என்று சொல்லியே ஆரம்பித்தேன். சொன்னது போலவே அதைப் பற்றித்தான் எழுதியிருக்கிறேன். நான் எழுதியதற்கும் மேல் பலமடங்கு நீங்கள் தினசரிகளிலும் காட்சி ஊடகங்களிலும் நீங்கள் இன்னும் சுவாரசியமான பல விஷயங்களைப் படித்து இருக்கலாம். காட்சி ரூபமாகக் கண்டிருக்கலாம். டெல்லியில் வசிக்க நேர்ந்ததால் லேசாக சில அக்கப்போர் கலந்த அலசல்களை சுத்தமாக மேம்போக்காக இந்தப் பக்கத்தில் பதிந்து வந்தேன். இந்தப் பதிவுகளை சில நாட்கள் கழித்து மீண்டும் படித்துப் பார்த்தீர்கள் என்றால் உண்மையாகவே சுவாரசியமாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் காலமும் வாழ்க்கையும் ஓடும் ஓட்டத்தில் காலை நடந்ததை மாலையே மறந்து விடுகிறோம். மாலைக்கும் இரவுக்கும் வேறொன்று புதிதாக முளைத்து எதிரில் நின்று விளையாட்டுக் காட்டிக் கொண்டு இருக்கும். எனவே இந்தப் பதினொரு நாட்களில் என்னால் முடிந்த நாட்களில் ஒருசில பதிவுகளை உங்கள் பார்வைக்கு வைக்கத் துவங்கினேன். விளையாட்டுக்கள் பற்றியும் அந்தப் போட்டிகளில் இந்தியாவின் சாதனைகள் குறித்தும் நான் எதுவும் எழுதவில்லை. ஏனென்றால் அவை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. புரியாது. புரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை. இங்கு நான் கொடுக்க முயற்சித்தது எல்லாமே மேம்போக்கான சில அக்கப்போர்களைத்தான்.

மேலும் வாசிக்க...

Wednesday, October 13, 2010

சகஜத் தன்மையை நோக்கி நகரும் டெல்லி...

ப்ளூலைன் பேருந்துகள் எனப்படும் எமவாகனங்களைப் பற்றித் தனியாக ஒருமுறை சனிமூலையில் எழுதவேண்டும். இவர்களைப் போலப் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் உலகத்திலேயே எங்கும் இருக்க மாட்டார்கள். காசுகொடுத்துப் பயணம் செய்யும் பயணிகள் இவர்களுக்கு எதிராகப் படையெடுத்து வரும் அயல்நாட்டு மன்னர்கள். இந்த வண்டிகளின் ஓட்டுநர்களின் தோள்களில் எப்போதும் ஒரு எமப்பாசக்கயிறு தொங்கிக் கொண்டே இருக்கும். இந்த ப்ளூலைன் வண்டிகளின் நடத்துனர்களுக்கு எப்போதும் அவர்களின் வண்டி போகாத இடமே தலைநகரில் எப்போதும் கிடையாது. என்னைப் போன்ற ஏமாளிப் பயணி யாராவது வண்டி “கிருஷ்ணகிரி போகுமா?” என்று கேட்டாலும் நடத்துனன் அந்தப் பயணியின் கையை அவசரமாக இழுத்து “போகும் போகும். சீக்கிரம் ஏறு” என்று வண்டிக்குள் தூக்கிப் போட்டுக் கொள்வான். பத்து ரூபாய்க்கு பயணச் சீட்டைக் கிழித்துக் கொடுப்பான். வண்டி கொஞ்சதூரம் போனதும் நிறுத்தி அந்தப் பயணியிடம் ஒரு வழியைக் காட்டுவான். “இப்படியே கொஞ்சதூரம் நடந்து போனா அங்கே இன்னொரு வண்டி வரும். அதுலே ஏறிப்போனா நீ சொல்ற கிருஷ்ணகிரி வந்துடும்”. அந்த பளூலைன் வண்டியின் நடத்துனன் ஏமாளிப் பயணியை இறக்கி விட்ட இடத்திலிருந்து நேராக ஒரு ஆறு கிலோமீட்டர் நடந்தால் புது தில்லி ரயில் நிலையம் வரும். இதுதான் எங்கள் ஊர் ப்ளூலைன் பேருந்துகளின் பராக்கிரமம். இதுவே இப்படி என்றால் இவர்கள் போக்குவரத்து விதிகளை எவ்வளவு மதித்து நடப்பார்கள் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்...