Wednesday, February 26, 2014

கபாலி கான்

எங்கள் வீட்டு வாசலில் எனக்காக எப்போதும் காத்திருக்கும் கபாலி கான் டெல்லி முனிசிபாலிடி ஆட்களால் நேற்று மாலை பிடித்துச் செல்லப்பட்டது என்ற தகவலை கார் துடைக்கும் பையன் காலையில் சொன்ன போது மனதுக்குக் கொஞ்சம் கனமாக இருந்தது.

பொதுவாக நாய்களுக்கு ஆங்கிலப் பெயர்களை வைப்பதை எப்போதும் எதிர்ப்பவன் நான். சில ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டுக்கு தெருவில் இருந்து என் மகள் எடுத்து வந்து இப்போது எங்கள் வீட்டில் கம்பீரமாக வளர்ந்து வரும் ரஸ்டிக்கு அப்படி ஒரு பெயரை வைக்கும் சுதந்திரம் இல்லை எனக்கு. அந்த சுதந்திரத்தை மகள்கள் எடுத்துக் கொண்டார்கள். 

என் வீட்டு ரஸ்டி சில நாள் குட்டியாக இருந்தபோது அதற்கு முனியாண்டி என்று பெயர் வைத்தேன். என் அம்மாவின் அப்பா குப்புராவ் பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் கிருஷ்ணகிரியில் என்னுடன் பிறந்தவர்கள் என்னைத் தொலைத்து விடுவார்கள். அதனால் பொதுவாக எங்கள் வீட்டுக் காவல் தெய்வமாக முனியாண்டி என்று இருக்கட்டுமே என்று யோசித்தேன். சில நாட்கள் கழித்து அது காலைத்தூக்காமல் அகட்டி சிறுநீர் கழித்ததும் தான் தெரிந்தது. அதற்கு முனியாண்டி என்று பெயர் வைக்க முடியாது என்று. முனியம்மா என்ற பெயர் நன்றாக இருக்காது. காமாட்சி, விசாலட்சி என்று நல்ல அம்மன் பெயர் சூட்டலாம் என்று நினைத்தேன். ஆனால் அதுபோன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் முடிவெடுக்கும் சுதந்திரம் எங்கள் வீட்டில் பொதுவாக எனக்குத் தருவதில்லை. அதனால் என் மகள் ரஸ்டி என்று அதற்கு பெயர் வைத்தபோது நான் ஆட்சேபிக்கவில்லை. ஆட்சேபித்து இருந்தாலும் அது ரஸ்டியாகத்தான் இருந்திருக்கும். இப்போதும் இருக்கிறது.

சரி. புதிதாக வந்து சேர்ந்திருக்கும் இதனை எப்படிப் பெயர் இல்லாமல் கூட வைத்துக் கொள்வது? வீட்டுக்கு வெளியில் இருந்தாலும் ஒரு பெயர் வேண்டுமே. எந்த வகையிலும் அதற்கோ என் மகள்களுக்கோ மனைவிக்கோ இந்தப் பெயரில் ஆட்சேபம் இருக்காது என்ற தைரியத்தில் வீட்டுக்கு வெளியில் இருந்த இதற்கு கபாலி கான் என்று பெயர் வைத்தேன். எங்கள் வீட்டின் பெங்காலி வேலைக்காரி உட்பட அனைவரும் அதனை கபாலி கான் என்றே அழைக்கத் துவங்கினார்கள். அதுகூட நாங்கள் கபாலி கான் என்று கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கத் துவங்கியது.

Saturday, December 14, 2013

இதுவும் என் விருப்பே...

பாலியல் தேர்வில் நான் Straight என்பதை இப்போது தயக்கத்துடன் கூறக்கூடிய காலகட்டத்தில் நிற்கிறோமோ என்கிற சந்தேகம் சற்று எழத்துவங்கியிருக்கிறது. இதுவரை ஓரினச்சேர்க்கை குறித்த அனுபவம் ஏதுமில்லை. 55 வயதுக்குப் பிறகு இதற்கு அவசியமும் இருக்காது என்று நினைக்கிறேன். நினைவு தெரிந்து என் சிறுவயதில் - சுமார் 10 அல்லது 12 வயது இருக்கும். வீட்டுக்கு அருகில் ஒருவன் சர்க்கஸ் நோட்டீஸ் கொடுப்பதாக ஒரு பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று என்னுடைய டவுசரைக் கழற்ற முயற்சித்த போது அவனுடைய கால் மீது பெரிய கல் ஒன்றைத் தூக்கிப் போட்டு வீட்டுக்குத் தலைதெறிக்க ஓடிய ஞாபகம் எப்போதாவது இதுகுறித்து பேசும்போது வரும். மற்றபடி ஓரினச்சேர்க்கை என்பது என்னுடைய தேர்வும் இல்லை. விருப்பமும் இல்லை. பெண்களுடனான கலவியில்தான் எனக்கு எப்போதும் பெருவிருப்பம். இதுவும் என்னுடைய சுதந்திரம்தான் என்று உறுதியாக நம்புகிறேன்.

ஓரினச் சேர்க்கை அல்லது வேறெதுவும் தனிமனித விருப்பம் அல்லது தேர்வு சார்ந்தது என்று நினைக்கிறேன். இது முற்றிலும் அந்தரங்கம் சார்ந்தது என்றும் நினைக்கிறேன். போனவாரம் உச்சநீதிமன்றம் பிரிவு 377 குறித்த தீர்ப்பை வழங்கியதும் இத்தனை நாட்கள் அடங்கியிருந்த பேச்சு குபீரென்று மீண்டும் கிளம்பியது. சில தொலைக்காட்சிகளில் (நான் இந்தியை சொல்றேனப்பா) ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் சிறுவர் சிறுமிகளுடன் அவர்களுடைய பெற்றோர்களும் கூட உட்கார்ந்து நாளையில் இருந்து என் பையன் என்ன செய்வான் என்பது போன்ற மிக முக்கியமான கவலையில் ஆழ்ந்ததும் சிங்வி சாஹிப்புக்கு கொடுரமான சாபங்கள் கொடுத்ததும் பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருந்தது.

இதுபற்றி சாங்கோபாங்கமாக ஏதாவது எழுத முயற்சிக்கலாமா என்றிருந்தேன். ஆனால் நான் எழுதி என்ன ஆகப்போகிறது? சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் போன்ற தேசபக்தர்கள் இதுகுறித்து தங்களின் தெளிவான கருத்தைக் கூறியிருக்கும்போது என்னைப் போன்றவர்கள் எல்லாம் சொல்லி என்ன ஆகப்போகிறது என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக் கொண்டு அமைதியைக் கடைப்பிடிக்க முயற்சிக்கிறேன்.