Saturday, February 7, 2015

67.21 சதவிகிதத்தில் ஒளிந்திருக்கும் நான்…

அர்விந்த் கெஜ்ரிவால் இழைத்த அரசியல் பிழையினால் ஒரு வருடத்துக்குள் டெல்லி மக்களாகிய நாங்கள்  இன்று மீண்டும் ஒருமுறை வாக்களிக்கும் பாக்கியத்தை பெற்றோம்.

நான் வாக்களித்த சாவடி  அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் புது டெல்லியின் மையமான சாவடிகளில் ஒன்று.  காலையில் சுமார் 10.00 மணிக்கு நிதானமாக நாஷ்டா முடித்து விட்டு வாக்குச் சாவடிப் பக்கம் எட்டிப் பார்த்தால் சாவடியில் தேர்தல் அதிகாரிகள் சாவகாசமாக பிரெட் பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  எந்த வரிசையும் கிடையாது.  நிதானமாக சென்று நானும் என் மகளும் டெல்லியின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் டெல்லியின் வாக்காளர்களாக அதிகாரபூர்வமாக பதிவு பெற்ற  1.19 கோடி மக்களில் இருவரானோம்.

என்னைப் போன்று நாற்காலியில் உட்கார்ந்து கோஷ்டி விளையாட்டுக்களை வேடிக்கை பார்க்கும் மற்ற நாற்காலிக்காரர்கள் ஒவ்வொருவராக இந்த கோஷ்டி விளையாட்டில் பங்கேற்க வந்து கொண்டிருந்தார்கள்.

வாக்குச் சாவடியில் இருந்து வெளியேறும் போது இடது கை ஆட்காட்டி விரலை ஆகாயம் நோக்கிக் காட்டி ஏதோ கெட்ட ஜாடை செய்வது போலவும் டெல்லிக்கு ஆப்பு வைத்து முடித்தாகி விட்டது என்று கூறாமல் கூறுவது போலவும் ஆளாளுக்கு ஃபேஸ்புக்கில் போட்டுக்கொள்ள மேல்நோக்கிய இடது கை ஆட்காட்டி விரலுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதில் மும்முரமாக இருந்தார்கள்.


2013-ம் ஆண்டில் இதே வாக்குச் சாவடியில் நீண்ட நேரம் வரிசையில் நின்று வாக்களித்த நினைவு இருக்கிறது.    என்னைப் போலவே பலரும் நீண்ட வரிசைகளில் தவிப்புடனும் சலிப்புடனும்  அப்போது வரிசையில் நின்றிருந்தனர். 

அந்த தேர்தலில்  இளைய தலைமுறையினர் அதிகமாக இருந்தார்கள்.  உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள்.  வாக்குச் சாவடிகளுக்கு வெளியில் ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் பெருந்திரளாகக் குழுமியிருந்தார்கள்.  இப்போது அப்படி ஒன்றும் பெரிய கூட்டம் எல்லாம் இல்லை. வாக்காளர்களை விட போலீஸ்காரர்கள் அதிகமாக இருந்தார்கள்.

Friday, February 6, 2015

All are equal and some are More Equal

லாலு பாய் ஒரு வழியாக டெல்லியில் பல ஆண்டுகளாக விடாப்பிடியாக பிடித்து வைத்துக் கொண்டிருந்த அரசு பங்களாவை  சென்ற மாதம் காலி செய்திருக்கிறார் என்று செய்தி வெளியாகி இருக்கிறது.

கடந்த 2004-ம் ஆண்டில்  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ரயில்வே    அமைச்சராகப் பொறுப்பேற்ற போது புது டெல்லியின் 25 துக்ளக் ரோடு என்னும் முகவரியில் உள்ள  இந்த பங்களாவில் அவர்  குடியேறினார்.

கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 
தகுதி இழப்புக்குப் பிறகு விதிமுறைகளின் அடிப்படையில் டெல்லியில் அவர்   அரசு பங்களாவில் தங்க முடியாது     ஆனால் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இவருடைய வாய்க்கு பயந்து அமைச்சரவைக் கூட்டத்தில் வயிற்றெரிச்சலுடன் தீர்மானம் நிறைவேற்றி  ஒரு ஆண்டு காலத்துக்கு  நீட்டிப்பு வழங்கப்பட்டது.  

இறுதியாக 2014 அக்டோபர் வரை இந்த சலுகை முடிவடைந்ததும் அந்த பங்களாவை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பிக் கொண்டிருந்தது மத்திய அரசு.  தன்னுடைய உடல் நலத்தைக் காரணம் காட்டியும் பேரப்பிள்ளைகளின் படிப்பை காரணம் காட்டியும் மேலும் கால அவகாசம் கோரியிருந்தார் லாலு.

இது தொடர்பாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து லாலு கோரிக்கை விடுத்ததாகவும் அந்த வேண்டுகோளை அமைச்சர் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.