Thursday, January 29, 2009

தமிழ்ஸ்டூடியோ.காம் - ஒரு நம்பிக்கையின் துவக்கம்

ரொம்ப நாட்களுக்குப் பிறகு இந்தப் பக்கங்களில் நான்.

இனி தொடர்ச்சியாக எழுதுவதாக சத்தியம் எல்லாம் பண்ணப் போவதில்லை. அப்படிப் பண்ணினால் எழுத முடிவதில்லை. எதுக்கு வம்பு?

கடந்த ஆறு மாதங்களாகவே தொடர்ச்சியாக மனைவியின் தேக சுகவீனம். பிறகு என்னுடைய வாயையும் இன்னொன்றையும் சும்மா வைத்துக் கொண்டு இருக்காமல் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் உள்ள சில எஜமானர்களுடன் மோதலைத் துவக்கி நேரத்தை அநியாயத்துக்கு விரயமாக்கியது. தங்களைக் குறுநில மன்னர்களாகவும் மற்றவர்களை தங்களிடம் பாடிப் பரிசில் பெறும் புலவர்களாகவும் கருதும் இறுமாப்பில் உள்ள அவர்கள் விளைவித்த இன்னல்களால் நேர்ந்த மன உளைச்சல்கள். தனிப்பட்ட வகையில் இவர்கள் எனக்கு விளைவித்தது என்னவென்றால் ரத்தக் கொதிப்புக்கான மாத்திரையை தினமும் காலையில் என்னை உட்கொள்ள வைத்த பெருங்கருணை.

என்னைப் பற்றி சில ஈன ஜென்மங்கள் தலைநகரில் நண்பர்களிடையே உண்மைக்குச் சற்றும் தொடர்பே இல்லாத பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டதனால் விளைந்த மன உளைச்சல்கள் போன்றவற்றால் படைப்புக்கான மனநிலையில் சற்றும் இல்லாது பொன்னான சில மாதங்களை வீணடித்து விட்டேன்.

இப்போது மனதில் மீண்டும் பழைய தெம்பு கொஞ்சம் எட்டிப்பார்க்கிறது. இருக்கிறது. எனவே வலைப்பதிவில் மீண்டும் இறங்கலாம் என்று தீர்மானம். வடக்கு வாசல் இதழில் எழுதி வந்த பழைய சனிமூலை கட்டுரைகள் சிலவற்றை இந்தப் பக்கங்களில் சேர்க்கலாம் என்று வேலையைத் துவங்கிய போது இடையில் ஒரு மின்னஞ்சல் வந்தது.

தமிழ் ஸ்டூடியோ.காம் என்னும் ஒரு புதிய தளத்தை அறிமுகப்படுத்தியது அந்த மின்னஞ்சல். தமிழில் ஒரு மாற்று ஊடகம் அமைக்கும் எண்ணத்தில் ஏற்படுத்தப்பட்ட தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் இணையத்தளம் என்று அந்த மின்னஞ்சல் சொன்னது.

மாற்று ஊடகம் அமைக்கப்படுவதே முக்கிய நோக்கமாயினும் இலக்கியத்தின் மீது உள்ள காதலால், இலக்கியமும் வரலாற்றின் மீது உள்ள ஈர்ப்பால் வரலாறு பிரிவும் ஏற்படுத்தப்பட்டு குறும்படம், இலக்கியம், வரலாறு என விரியும் தமிழ்ஸ்டூடியோ.காம் இணையதளத்தைப் பார்வையிட்டு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு இந்த இணையதளம் அழைக்கிறது.

சமீபத்தில் இந்த இணையதளத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. செய்தி மற்றும் புகைப்படங்களையும் அனுப்பி இருக்கிறார்கள்.

சுருக்கமாக அவர்களின் நல்ல கனவுகளை சுமந்த ஒரு எளிய பிரகடனம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர்கள் சொல்கிறார்கள் -

தமிழில் மாற்று ஊடகம் அமைக்கும் முயற்சியின் முதல் படியாக குறும்படத் துறையை / அது சார்ந்த ஆர்வலர்களை ஊக்குவிக்கும் செயலை தமிழ் ஸ்டுடியோ.காம் தொடர்ந்து செய்துக் கொண்டே இருக்கும். இலக்கியங்கள், புகழ் பெற்ற சிறுகதைகள், உலகில் உள்ள மாற்ற நாட்டு இலக்கியங்கள், அழிந்து வரும் வரலாற்று சின்னங்கள், மொழி, கலாச்சாராம் சார்ந்த ஆவணங்கள், கல்வெட்டு ஆவணங்கள், போன்றவற்றை குறும்படங்களாக / ஆவணப்படங்களாக எடுத்து அவற்றை மக்களிடையே பரவலாக கொண்டு போய் சேர்க்கும் முயற்சியில் தமிழ் ஸ்டுடியோ.காம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. மேலும் அவ்வாறு எடுக்கப்படும் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் போன்றவை உலகத்தரத்தில், புதிய தொழில்நுட்பங்களோடு எடுக்கப்படவேண்டும் என்கிற அக்கறையும் இங்கு கவனிக்கப்படும். புதிதாக குறும்படத்துறையில் நுழைய விரும்பும் ஆர்வலர்கள் அனைவருக்கும் அது பற்றிய முழுமையான ஒரு புரிதலை தமிழ் ஸ்டுடியோ.காம் ஏற்படுத்தும்.

மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் தமிழ் ஸ்டுடியோ.காம் செய்துக் கொடுக்கும் என்பதையும் இங்கு தெரியப்படுத்துகிறோம். ஆர்வமும் முயற்சியும், துடிப்பும், படைப்புத்திறனும், எதையும் புதுமையாக சிந்திக்கும் ஆர்வமும் உள்ளவரா நீங்கள்? எனில் உங்களுக்கான களம் அமைத்துக்கொடுக்கும் பணியை தமிழ் ஸ்டுடியோ ஏற்றுக்கொள்ளும்.

இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்காகவும் ஒரு களம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தளத்தை பார்வையிடும் உங்களுக்கும் எழுதும் ஆர்வமோ, ஒளிப்படம் எடுக்கும் ஆர்வமோ, அல்லது ஏதோ ஒருத் துறையில் (அறிவியல், சமூகம், வானவியல் போன்ற துறைகளையும் சேர்த்து) உங்களுக்கு ஆர்வம் இருந்தாலும் அதை வெளிப்படுத்த தமிழ் ஸ்டுடியோ.காம் உங்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் என்று பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த முயற்சி அவசியம் வெற்றி பெறவேண்டும். பொதுவாக தமிழில் இரண்டு நிலைகளைத்தான் தொடர்ச்சியாக நாம் இலக்கியம், நாடகம், சினிமா போன்றவற்றில் கடைப்பிடித்து வருகிறோம். வைத்தால் குடுமி - சிரைத்தால் மொட்டைதான் நமக்கு.

ஒரு பக்கம் அரசு மற்றும் வெகுஜனத்தால் அங்கீகாரம் பெற்ற கலாச்சார சீரழிவுகள். இன்னொரு பக்கம் நேர்மையாக எதையும் அணுக முயற்சிக்கும் இளைய தலைமுறையை அருகில் சேர்க்க விடாமல் தலைதெறிக்க ஓட வைக்கும் நவீன வேடமணிந்த போலித் தனங்கள். இவற்றின் இடையே தமிழ்டூயோ.காம் போன்ற நம்பிக்கை தரும் சில நல்ல முயற்சிகள் நமக்கு உண்மையிலேயே உற்சாகம் அளிக்கின்றன. இவர்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் ஒரு சிறிய அறிவுரை சொல்லலாம் என்று இருக்கிறேன். இலக்கியம், நாடகம், திரைப்படம் போன்ற துறைகளில் சில அறைகுறை அறிவுஜீவி வேடமணிந்த போலிகள் குறும்படங்களையும் முயற்சித்து அப்பாவிகளை இம்சிக்காமல் இல்லை. இவர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு அதிகம் பில்டப் கொடு்க்காமல் இருக்க முயற்சிக்கலாம். இது தமிழ் சமூகத்துக்கு செய்யும் நல்ல தொண்டாக அமையும்.

மின்னஞ்சல் கிடைத்ததும் இணையதளத்தைப் படித்து விட்டு பதில் அஞ்சல் அனுப்பும் பொறுமை இன்றி உடனே இந்த இணையதளத்தை நடத்தும் அருண் என்கிற இளைஞரை அழைத்துப் பேசினேன். மனிதர் ரொம்பவும் தெளிவாக இருக்கிறார். அவருடைய மன உறுதி மனதுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அருண் மற்றும் குணா இருவரும் இணைந்து நடத்தும் நல்ல பயனுள்ள இணையதளம் இது.

இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றி அடைய வேண்டும்.

அடையும்.

Thursday, November 13, 2008

குரு நானக் தேவ் ஜி - 15ம் நூற்றாண்டின் புரட்சி சிந்தனையாளர்



இன்று (13 நவம்பர் 2008) குருநானக் தேவ் ஜி ஜெயந்தி சீக்கிய இனத்தவரால் உலகெங்கும் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை சீக்கியர்கள் தீபாவளியாகக் கொண்டாடுகிறர்கள். தலைநகரின் பல பகுதிகளில் ஜன நெரிசல் மிகுந்த ஊர்வலங்கள் ஊரின் பல பகுதிகளை ஸ்தம்பிக்க வைத்துவிடும். சீக்கியர்கள் நகரெங்கும் பழங்கள், ரொட்டி, சப்பாத்தி, மற்றும் பலவகை உணவு வகைகளை அங்கங்கே ஏழைகளுக்கும் மற்றவர்களுக்கும்விநியோகிப்பார்கள். அங்கங்கே நெரிசலாக மக்கள் நின்று இவற்றை வாங்கித் தின்று நின்ற இடத்திலேயே பழத்தோல்கள், இலைகள், தொன்னைகள் போன்றவற்றை அங்கங்கேயே வீசி எறிந்து குறைந்தது நான்கு நாட்களுக்கு தில்லி நகர வீதிகளை நாறடிப்பார்கள். எல்லோருக்கும் இலவசமாக உணவு வழங்கும் தர்மப் பிரபுக்கள் தங்கள் தயாள சிந்தினையை இன்னும் சற்று விரிவுபடுத்தி, அந்தந்த இடங்களை சுத்தம் செய்வதற்கு மிகச்சிறிய தொகையை செலவு செய்தாலே நகரம் சுத்தமாகிவிடும். சரி. அது வேறு விஷயம். குருநானக் தேவ் ஜியை சற்றுப் பார்ப்போம்.


15ம் நூற்றாண்டிலேயே இந்து முஸ்லிம் சகோதரத்துவத்தை வலியுறுத்திய மகான் குரு நானக் தேவ் ஜி. கி.பி.1469ம் ஆண்டில் லாகூர் அருகே உள்ள ஷேக்புரா கிராமத்தில் பிறந்த குரு நானக் தேவ் ஜியின் தந்தையார் கிராம வருவாய்த்துறையில் ஒரு சிறிய பதவி வகித்தவர். பஞ்சாபிய மொழியான குர்முகியைத் தவிர பாரசீகம் மற்றும் அராபிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் குருநானக் தேவ் ஜி.


சுல்தான்பூர் அரசனான தௌலத் கான் லோதி என்னும் குறுநில மன்னனின் அரண்மனையில் பண்டகசாலை மேலாளராக சிறிது காலம் பணிபுரிந்த குரு தேவ் ஜி, அங்கு மர்தானா என்று அழைக்கப்பட்ட இசுலாமியத் துறவியின் தொடர்பு ஏற்பட்டு ஆன்மீக சிந்தனைகளில் ஈடுபடலானார்.


1496ம் ஆண்டினை குரு நானக் தேவ் ஜி ஞானம் பெற்ற ஆண்டாகக் குறிப்பிடுவார்கள். அவருடைய முதல் பிரகடனமே - ஹிந்து என்பவனோ அல்லது முஸல்மான் என்பவனோ யாரும் கிடையாது என்பதே. அனைவரும் ஆண்டவனின் பிள்ளைகள் என்பதே அவருடைய உபதேச மந்திரமாக அமைந்தது. தன்னுடைய ஞானகுரு மர்தானாவுடன் பல புனிதத் தலங்களுக்குப் பயணப்படத் துவங்கினார் குருதேவ் ஜி. சனாதனம் கற்பித்த தீண்டாமையை எதிர்த்து மிகப்பெரிய கலகத்தைத் துவங்கியவர் குருநானக் தேவ் ஜி. பதினைந்தாம் நூற்றாண்டில் பஞ்சாபில் அவருடைய சிந்தனைகளும் செயல்பாடுகளும் அன்றைய காலகட்டத்தில் மிகப் பெரும் புரட்சியாகும். மதங்கள் வலியுறுத்திய மூட நம்பிக்கைகளை முழுமூச்சுடன் எதிர்த்து செயல்பட்டவர் குருதேவ் ஜி. பதினைந்தாம் நூற்றாண்டில் சமத்துவத்தை வலியுறுத்தியவர் குருநானக் தேவ் ஜி.


தன்னுடைய பயணங்களின் போது அவருக்கு தானமாகக் கிடைத்த பரிசுப் பொருட்கள் மற்றும் உணவு தானியங்களை சேகரித்து ஏழை எளியவர்களுக்கான ஒரு பொது சமையல் கூடத்தை உருவாக்கி எவ்வித வேறுபாடுகளும் இல்லாது அனைவரும் இணைந்து ஓரிடத்தில் உணவு உண்ணும் அற்புதமான முறையை முதன்முதலில் உருவாக்கியவர் குருநானக் தேவ் ஜி. அவருக்கு 12 வயதாக இருந்தபோது குரு தேவ் ஜியின் தகப்பனார் அவரிடம் ஒரு சிறு தொகையை அளித்து ஏதேனும் வியாபாரம் செய்து காண்பிக்கச் சொன்னாராம். அந்தத் தொகைக்கு உணவுப்பண்டங்களை விலைக்கு வாங்கி அந்த ஊரின் ஏழை எளியவர்களுக்கு வழங்கி விட்டு அதுவே சிறந்த வணிகம் என்று தந்தையிடம் கூறினாராம் குரு தேவ் ஜி. அவர் முதலில் அப்படி உணவு வழங்கிய ஸ்தலத்தை öஸச்சா ùஸளதாö (உண்மை வணிகம்) என்று அழைக்கப்படுகிறது. அவர் உருவாக்கிய இந்தப் பகிர்ந்துண்ணும் முறையே இன்று உலகில் உள்ள அனைத்து சீக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் லங்கர் என்கிற பெயரில் அற்புதத் தொண்டாகத் தொடர்ந்து வருகிறது.


சீக்கிய மதத்தின் ஸ்தாபகர் என்று வணங்கப்படுபவர் குருநானக் தேவ் ஜி. உலகத்திலேயே மிகச் சமீபத்தில் தோன்றிய மிகவும் இளைய மதம் சீக்கிய மதம். பல நல்ல விஷயங்களை மனித நேயம் தோய்ந்த விஷயங்களை உள்ளடக்கியது சீக்கிய மதக் கொள்கைகள். அனைத்து மாந்தர்களிடையிலும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் மதம். இன்று பல கிளைகளாக பல நம்பிக்கைகள் கொண்ட பல்வேறு ஸ்தாபனங்களாக மடங்களாகப் பல்கிப்போனது சீக்கிய மதம். எண்பதுகளின் துவக்கத்தில் பஞ்சாப் மாநிலமே பற்றியெறிந்து கொண்டிருந்தது. அதன் உச்சபட்சமாக இந்திரா காந்தி படுகொலை நிகழ்ந்தது. அந்தப் படுகொலையை அடுத்து சீக்கிய இனத்தவர்கள் வடநாட்டில் மிகவும் கொடுமையாக ஒடுக்கப்பட்டுத் தாக்கப்பட்டனர். பல வீடுகளும் வியாபார ஸ்தலங்களும் தரைமட்டமாக்கப்பட்டபோதும் மிகக் குறைந்த நாட்களிலேயே அவை மீண்டும் தன்னம்பிக்கையுடன் எழுந்து நின்று மனிதனின் நம்பிக்கை உணர்வுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தன. பயங்கரவாதம் பஞ்சாப் மாநிலத்தின் பல இடங்களில் பலர் மனங்களில் தீராத வடுவை ஏற்படுத்தி இம்சித்தது. இவை எல்லாவற்றையும் எதிர்த்து மீறி, சீக்கிய சகோதரர்களும் சகோதரிகளும் நம்முடைய நாட்டின் வளமைக்கு வலு சேர்த்து வருகிறார்கள்.


சீக்கியர்களை நகைப்புக்கு இடமானவர்களாக சித்தரித்து பல சர்தார்ஜி ஜோக்குகள் பிரசித்தமானவை. இதில் அற்புதமான விஷயம் என்னவென்றால் இவற்றில் பல சர்தார்ஜி ஜோக்குகளை உருவாக்கியவர்கள் பல சர்தார்ஜிக்களே. ஒரு குஷ்வந்த் சிங்கை விடத் தன்னைத் தானே கேலியும் கிண்டலும் செய்து யாராலும் எழுத முடியாது. சீக்கியர்களில் உலக அளவில் பேசப்படக்கூடிய அறிவு ஜீவிகளும் சிந்தனையாளர்களும் உண்டு.



இப்போதைக்கு உடனடி உதாரணமாக நம்முடைய மன்மோகன் சிங் மற்றும் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோரை பெருமையுடன் சொல்லலாம். ஏதோ சீக்கியர்களிலேயே முட்டாள்தனங்கள் உண்டு என்பது போல பல சமயங்களில் வட இந்தியாவில் பேச்சு புழங்குவது மாபெரும் அநியாயம் என்றே தோன்றுகிறது. முட்டாள்தனம் என்பது நம்முடைய தேசிய குணம். இந்திய நாட்டின் பெரும்பான்மை குணம் அது.


உடனடி உதாரணமாக ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.
ஒரு தமிழ் அமைப்புக்குப் பலர் பலமுறை பலவிதமான கடிதங்கள் அனுப்பியும் எவ்வித பதில்களும் அனுப்பாது இறுமாப்புடன் மௌனம் சாதித்துக் கொண்டிருந்தார்கள். அந்த அமைப்பில் முக்கியமான பொறுப்பில் இருந்த ஒருவரிடம் இதுகுறித்து விவாதம் செய்தபோது, அந்த அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் யாருக்கும் அதாவது எந்தக் கடிதத்துக்கும் பதில் அனுப்பக்கூடாது என்று தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் விவாதித்தார். அவர் சொன்னது பொதுவாக உண்மையாக இருக்க அத்தனை வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். எந்தக் கடிதத்துக்கும் பதில் அனுப்பக் கூடாது என்று தீர்மானிக்கும் அளவுக்கு ஜனநாயகப் பண்பு இல்லாத ஒரு செயற்குழுவோ அல்லது இத்தனை முட்டாள்தனமாக விவாதித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் அளவுக்கு அங்கே சிந்திக்காதவர்களோ இன்னும் இருக்கிறார்களா என்பதும் கேள்விக்குறி.



அடிக்கடி அடுத்தவர்களிடம் சர்தார்ஜி ஜோக் உதிர்க்கும் ஒரு நண்பரிடம் இந்தத் தமிழ் அமைப்பின் தீர்மானம் குறித்து அந்த அமைப்பின் பொறுப்பாளர் கூறியதை நான் சொன்னபோது அந்த சர்தார்ஜி ஜோக் அடிக்கும் நண்பர் சொன்ன விஷயம் -


ööஎன்னய்யா இது? உலகத்தில் இருக்கிற அத்தனை சர்தார்களும் எல்லோரும் ஒண்ணா சேர்ந்து ஒரு தமிழ் அமைப்பை ஏற்படுத்தி நிர்வாகம் பண்ணாக்கூட அவங்களோட செயற்குழு இந்த மாதிரி ஒரு புத்திசாலித்தனமான தீர்மானம் எடுக்காதேய்யா?öö


இதனால் கிடைக்கும் பாடம் -


மூடத்தனங்கள் அல்லது முட்டாள்தனமான காரியங்கள் ஒரு இனத்துக்கு மட்டுமே சொந்தமானது அல்ல.