Saturday, February 28, 2009

முதல் மேடை நாடக அனுபவம்-4

கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞனின் "சாந்த் கா மூ டேடா ஹை'' (சந்திரனின் முகம் கோணியது) என்கிற கவிதையை என்னுடைய முதல் மேடை நாடகமாகத் தயாரித்த அனுபவத்தைக் கடந்த மூன்று இதழ்களாக எழுதி வருகிறேன். ஓரிரு இதழ்களில் எழுதி முடித்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டு, மாடு பற்றிய கட்டுரை எழுதிய மாணவன் போல, எங்கெங்கோ அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன்.

ஒத்திகைகளைப் பற்றி எழுதத் துவங்கி, எங்கெங்கோ சுற்றியலைந்து அந்த நாடகத்தில் என்னுடன் பணிபுரிந்த நண்பர்களைப் பற்றிய சிறு குறிப்புக்கள் எழுதினேன். அது இன்னும் முடியவில்லை. கொஞ்சம் மீதமிருக்கிறது.

வெளியில் எதை எதையோ எழுதினலும் உள்ளுக்குள் மனது நெகிழ்ந்து கரைந்து கொண்டிருப்பது ஒரு நல்ல கவிதையை வரைவதற்கான களம். ஆனல் அந்தப் பாழாய்ப் போன கவிதை மட்டும் எனக்குக் கைகூடாமல் தமிழினத்தை நலமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

சரி. இன்னும் வெகு சிலரைப் பற்றி மட்டும் சொல்லி விட்டு மீதியைத் தொடர்கிறேன்.

நச்சு என்று எங்களால் அழைக்கப் படும் நரசிம்மனுடைய சொந்த ஊர் திருவையாறு. நான் குப்பை கொட்டிய அதே அலுவலகத்தில் இன்னும் அழகாகக் குப்பை கொட்ட வந்தவன். அந்த அலுவலகத்தில் குப்பை கொட்டி முடித்து இப்போது கனரா வங்கியில் மேலாளராக இருக்கிறான். தற்போது புதிதாக பெங்களூர் வாசம். சங்கீதத்தில் அபாரமான ரசனை. மேல் ஸ்தாயியில் அநாயாசமாகப் பாடுவான். நாகூர் அனீபாவின் பாடல்களை அதே குரலில் பாடுவான். மசூதியில் பாங்கு ஓதுவதை மிக அநாயாசமாகச் செய்து காட்டுவான். திடீரென்று மூடைக் கெடுத்துக் கொண்டு மிகவும் நிஷ்டூர்யமான குரலுடன் சண்டை போடுவான். சந்திரசேகர கம்பார் எழுதிய கன்னட நாடகமான "ஜோ குமாரசாமி'' நாடகத்தை நேரடியாகக் கன்னடத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தான். இதை நானும் என்னுடைய நண்பன் சுரேஷூம் அலுவலகத்தில் கடன் வாங்கி அந்த நூலைப் பதிப்பித்தோம். தில்லான மோகனம்பாள் படத்தில் நாகேஷ் பார்ப்பவர்களிடம் எல்லாம் ஒரு எலுமிச்சம் பழத்தைக் கொடுப்பார். அது போல நாங்கள் பலருக்கும் இந்த நூலைப் பல காலம் கொடுத்து வந்தோம். இப்போது என்னிடமோ சுரேஷிடமோ ஜோ குமாரசாமியின் ஒரு பிரதி கூட இல்லை. என்னுடைய இயக்கத்தில் ந.முத்துசாமியின் நாற்காலிக்காரர் நாடகத்தில் நச்சுவின் நடிப்பு இப்போதும் என் கண்களிலும் மனத்திரையிலும். ஒரு கைத்துண்டைக் கூட வைத்து பாவனை மாற்றங்கள் செய்ய முடியும் என்று அந்த நாடகத்தில் நிரூபித்தவன் நச்சு.

ராம்ஸ் என்று நாங்கள் அழைக்கும் ராமச்சந்திரன் இந்திய வான்படையில் பணிபுரிந்து வந்தான். பயங்கர கட்டுமஸ்தான தேகம். வான்படை வீரர்கள் வளாகத்தில் அடிக்கடி எங்களுக்கு மது அருந்த ஏற்பாடு செய்த புண்ணியவான். எல்லாவற்றையும் முடித்து உணவு அருந்தச் செல்லும்போது எதிரில் வரும் எல்லா ஆஜானுபாவர்களையும் வம்புக்கு இழுத்து அடித்து விட்டுச் செல்வான். செய்யாறு பக்கம் ஊர் என்பதால் தெருக்-கூத்து போன்ற கலைகளில் மிகவும் ஆர்வம் உடையவன். நாடகத்தில் நான் அமைத்த மேடைச் சலனங்களை, கூத்து அடவுகளை மிகவும் அற்புதமாகச் செய்து காட்டியவன். வான்படை வீரர்களுக்காக பாதல் சர்க்கார் எழுதிய வங்க நாடகம் பிறகொரு இந்திரஜித் ("ஏபங் இந்திரஜித்'' மொழியாக்கம் கோ.ராஜாராம்). அந்த நாடகத்தில் மிகவும் அமைதியான கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தான். ராம்ஸ் இப்போது புனேவில் இருக்கிறான் என்று இளஞ்சேரன் சொன்னன்.

இப்போது நாடகத்தின் பின்புலத்தில் பணிசெய்தவர்கள் பற்றிக் கொஞ்சம் சொல்லலாம் என்று இருக்கிறேன்.

முகவீணை வாசித்த சிவாஜி, உறுமி வாசித்த முத்துசாமி, பலகை வாசித்த கந்தசாமி பற்றி ஏற்கனவே நிறைய எழுதி விட்டேன். இவர்களை அடுத்த நாடகங்களிலும் ஏற்பாடு செய்ய நேராதது நான் செய்த துரதிருஷ்டம்.
அப்போது என்னுடைய நண்பர் பாலரமணி தில்லி அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தார். இப்போதும் எனக்கு மிக நல்ல நண்பர். அவருடைய காலத்தில் அவர் கொடுத்த வானொலி வாய்ப்புக்களால். விளம்பரங்களுக்குக் கண்றாவியான மொழிபெயர்ப்பில், போலியான பாவனைகள் மிகுந்த குரலில் பேசித் தமிழ்த் தொண்டு புரியும் தொழில்முறை விற்பன்னர்கள் பலரை உருவாக்கினர் பாலரமணி. அபாரமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். யாரிடமாவது யாரைப் பற்றியாவது பேசும்போது பேசப்படும் நபரைப் போன்ற அதே தொனியில் சடாரென்று அதே பாவனைக்கு மாற்றிப் பேசும் திறன் கொண்டவர்.

அகில இந்திய வானொலியின் சில விசித்திரமான நிபந்தனைகளால் அந்தப் பக்கம் பொதுவாகவே எட்டிப் பார்க்காமல் இருந்தேன். இன்னொன்று, என்னைப்போல, அடர்த்தியாக தாடிவிட்டுக் கொண்டு நிமிடத்துக்கு ஒரு சிகரெட் பிடித்துக் கொண்டு, ஜோல்னப் புயடன் அலைந்து கொண்டிருந்த அறிவுஜீவிகளுக்கு அகில இந்திய வானொலி ஒத்துவராது என்கிற ஒரு உள்ளார்ந்த கர்வமும் அப்போது எனக்கு இருந்தது. அதனல் பாலரமணி நட்புடன் விடுத்த பல அழைப்புக்களையும் தட்டிக் கழித்திருக்கிறேன்.

இந்த நாடகம் முடிந்ததும் நானே பாலரமணியை சந்திக்க அவருடைய அறைக்குச் சென்று நாட்டுப்புற வாத்தியங்களை வாசிக்கும் கலைஞர்களுக்கு அகில இந்திய வானொலியில் வாய்ப்புத் தருமாறு கேட்டுக் கொண்டேன். பாலரமணி அடுத்த நாள் காலை என்னுடைய வீட்டுக்குக் கான்ட்ராக்ட் அனுப்பி விட்டார். அந்தக் காண்ட்ராக்ட் என்னுடைய பெயருக்குப் போடப்பட்டு இருந்தது. அவரிடம் சென்று அது என் பெயரில் வேண்டாம் என்றும் வாத்தியம் வாசிக்கும் அந்தக் கலைஞர்கள் பெயரில் அனுப்புங்கள் என்றும் கேட்டேன். அவர்களுடைய நிபந்தனைகளின் படி அப்படித்தான் அனுப்ப முடியும் என்றும்,

ஒருங்கிணைப்பாளராக என்னுடைய பெயரில்தான் அந்தக் கான்டிராக்ட் இருக்க முடியும் என்றும் சொன்னர். வாய்ப்புக் கிடைத்து அவர்கள் வானொலியில் வாசித்தால் போதும் என்று நினைத்தேன். முகவீணையும், உறுமியும் பறையும் தில்லி வானொலி நிலையத்தில் வாசிக்கப்போகிறார்கள் என்கிற நினைப்பே எனக்கு அளவில்லாத பெருமையை அளித்தது.

அப்போதெல்லாம் இதுபோன்ற தொலைபேசி சாதனங்கள் இல்லாத நேரம். சக்கூர்பூருக்கு என்னுடைய ஓட்டை ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு முத்துசாமிக்கும் கந்தசாமிக்கும் நேரில் அந்த செய்தியைச் சொல்ல ஓடினேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

தொலைபேசி வசதி இல்லாது போனலும் கெடுதி நினைப்பவர்களுக்கு எங்கிருந்து எப்படி எந்தத் தொடர்பு சாதனம் கிடைத்தது என்று தெரியாது. யாரோ ஒரு புண்ணியவான், கந்தசாமியிடம், "நாடகம் போடுகிறேன் என்று சொல்லி இவன் உங்களை வைத்து ஏற்கனவே லட்சக்கணக்கில் சம்பாதித்து விட்டான். இப்போது ரேடியோவில் யாரோ ஒரு ஆபீசருடன் சேர்ந்து உங்களை வைத்து நிகழ்ச்சி செய்து இன்னும் பல லட்சக்கணக்கில் அடிக்கப் போகிறான்'' என்ற நற்செய்தியை அவர்களுக்குப் புகட்டியிருந்தார்கள். சாந்த் கா மூ டேடா ஹை நாடக மேடையேற்றத்துக்கு சாகித்ய கலா பரிஷத் அமைப்பு கொடுத்த உதவித்தொகை அப்போது ஐந்தாயிரம் ரூபாய். அந்த நாடகம் மேடையேற்றியதனல் நான் நண்பர்களிடமும் அலுவலகத்திலும் வாங்கித் திரும்பக்கட்டிய கடன் -ஏறத்தாழ முப்பதாயிரம் ரூபாய். அப்போது நானும் என் மனைவியும் வாங்கிய மிகக் குறைந்த சம்பளத்தில் பல மாதங்கள் நண்பர்களை இழுத்தடித்து கடனை அடைத்தேன். அதே போல, அகில இந்திய வானொலி காண்டிராக்டில் குறிப்பிட்டிருந்த தொகை ரூ.300/-_ இதில் எங்கிருந்து இவர் லட்சக்கணக்கில் சம்பாதித்து இருக்க முடியும் என்று அவர்களிடம் நச்சு வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்துக் கேட்டான். அவர்கள் எதையும் கேட்கிற மனநிலையில் இல்லை. வானொலி நிலையத்துக்கு வந்து வாசிக்க மறுத்து விட்டார்கள்.

மிகவும் வருத்தத்துடன் வீடு திரும்பி வந்தேன். கொஞ்சம் சுரணையிருந்து அன்றிலிருந்து நாடகம் போடுவது போன்ற துர்க்காரியங்களை விட்டு என்னுடைய பிழைப்பை மட்டும் கவனித்து இருந்தால் பெருத்த தொகையை என்னல் வாழ்க்கையில் சேமித்து இருக்க முடியும். அதற்குப் பிறகும் தொடர்ந்து பல செருப்படிகளை வாங்கினேன். இன்னும் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.

அந்த சம்பவத்துக்குப் பிறகு அவர்களுடன் தொடர்பு முற்றாக அற்றுப்போனது. அவர்களை எங்கும் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டவில்லை. அது குறித்த பெருத்த வருத்தம் எப்போதுமே எனக்கு உண்டு.

இந்த நாடகத்துக்கு இசைவடிவம் கொடுத்தவர்கள் ஏஞ்செல்ஸ் மற்றும் சங்கர். ஏஞ்ஜெல்ஸ் இப்போது பல ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் கித்தார் வாசிக்கும் ஐந்து நட்சத்திர வாத்தியக்காரன். தில்லியில் தமிழர்கள் அனைவருக்கும் பரிச்சயமான மிகவும் பிரபலமான இசைக் கலைஞன். அவன் தில்லி வந்த புதிதில் நான் கல்யாணத்துக்கு முன்பு குடியிருந்த வீட்டுக்குக் கீழே ஒரு அறையில் தங்க வந்தவன். அந்த அறை நண்பர்கள் வழியாக அறிமுகமாகி என்னுடைய அறைக்கு வந்து என்னுடன் பேசிக்கொண்டு இருப்பான். பேசிக்கொண்டே அங்கேயே தங்கிவிடுவான். என்னுடனே சாப்பிட வருவான். எங்கள் அறையிலேயே தூங்குவான். எங்கள் அறையிலேயே குளித்துவிட்டு அங்கிருந்தே அலுவலகம் செல்வான். என் மீது அளப்பரிய பாசத்தைப் பொழிந்தவன். அங்கே தனியாக எதுக்கு வாடகை கொடுத்து இங்கே தங்கியிருக்கே - இங்கேயே வந்துடேன் என்று ஒருநாள் சொன்னேன். அதற்காகவே காத்திருந்தவன் போல மூட்டை முடிச்சு கட்டிக்கொண்டு என்னுடைய அறைக்கே வந்து விட்டான். அப்போது நானும் குணசேகரனும் முத்துராமலிங்கமும் ஒரு அறையில் இருந்தோம். நான் ஒருவன் மட்டுமே தங்க வேண்டும் என்று நான் ஒரு வீடு எடுத்து சாமியார் பூனை வளர்த்த கதையாக நாங்கள் நால்வர் ஆகிப்போனோம்.

என்னுடைய திருமணத்துக்குப் பிறகும் எங்கள் வீட்டிலேயே எங்களுடன் தங்கியிருந்து அவனுக்குத் திருமணம் ஆனதும்தான் எங்களை விட்டுப் பிரிந்தான். என் வீட்டில் தங்கியிருந்தபோது என்னுடைய மகள் பாரதியை எப்போதும் தோளில் சுமந்து அலைந்து இரவுகளில் அவளைத் தூங்க வைத்தவன் அவன். கல்யாணத்துக்குப் பிறகு எதற்கும் எட்டிக்கூடப் பார்ப்பது இல்லை என்றாலும் இப்போதும் எங்கள் வீட்டுப் பையன் அவன் என்றுதான் என் மனைவி அவனை எப்போதும் சொல்வாள். அவன் அந்த நாடகத்துக்கு சங்கருடன் சேர்ந்து இசை வடிவம் கொடுத்தான்.

சங்கர் தலைநகரில் இப்போது தமிழர்களிடையே மிகவும் பிரபலமான இசையமைப்பாளர். இசைக்கலைஞர். அந்த நாடகத்தில் முத்துசாமி, கந்தசாமி, சிவாஜி போன்ற வாத்தியக் கலைஞர்களுக்கான இசை வடிவங்களை அமைத்து, மிகவும் அற்புதமாக இசையமைத்து இருந்தார். நாடகத்தின் இரவுக் காட்சிகளில் அவர் அமைத்துக் கொடுத்த ஒலி வடிவங்கள் நாடகத்துக்கு மிகப் பெரிய பொலிவு அளித்தன. நான் இயக்கிய ந.முத்துசாமியின் "இங்கிலாந்து'' என்னும் நாடகத்துக்கு சங்கர் மிகவும் அற்புதமாக இசையமைத்து இருந்தார். அவருடைய இசையில் அந்த நாடகக் காட்சிகளுக்குத் தனி அர்த்தம் கிடைத்தன என்று சொல்ல வேண்டும்.

அடுத்த இதழில் அந்த நாடகத்துக்கு ஒளி வடிவமைத்த நண்பர் செ.ரவீந்திரன் பற்றி எழுதி முடித்துவிட்டு ஒத்திகைகளைப் பற்றித் தொடருகிறேன். இந்தக் கட்டுரை இழுத்துக்கொண்டே போகிறது. எதையோ பிடிக்கப்போய் எதிலோ முடிந்த கதையாகப் போய்க்கொண்டிருக்கிறது. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.

அந்த நாடகம் பற்றிய பதிவுகள் முழுமையாக இருக்க வேண்டும் என்கிற முனைப்பில் கட்டுரை சற்று நீண்டு விட்டது.

Thursday, February 26, 2009

முதல் மேடை நாடக அனுபவம் - 3

தில்லி சாகித்ய பரிஷத் அமைப்புக்காக கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞரின் சாந்த் கா மூ டேடா ஹை (சந்திரனின் முகம் கோணியது) கவிதையை மேடை நாடகமாக்க முயற்சித்தது பற்றிக் கடந்த இரண்டு நாட்களாக பதிவேற்றம் செய்து வருகிறேன்.

இந்த இதழில் எங்கள் ஒத்திகைகளைப் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன். சற்று வெளிப்படையாக இருந்தாலும் இந்தப் பதிவுகள் தேவை என்று நினைக்கிறேன். இந்த இதழில் சற்றுத் தூக்கலாக சொந்தக் கதை இருக்கும். இந்த நாடகத்தைப் பற்றிப் பதிவுசெய்யும் போது கண்டிப்பாக இவற்றை விலக்கி எழுத முடியாது என்ற நினைக்கிறேன்.

நாளை யாராவது நாடகம் செய்ய வருபவர்கள் இவற்றைப் படித்துவிட்டு நிறைய தவறுகளில் இருந்து தங்களை விலக்கி வைத்துக் கொள்ள இது உதவி புரிந்தால் நான் பிறவி அடைந்ததன் பயனை அடைவேன் என்று நினைக்கிறேன்.
சிவாஜி, முத்துசாமி, கந்தசாமி போன்ற வாத்தியக் கலைஞர்களின் உதவியுடன் ஒத்திகைகள் துவங்கியது பற்றி சென்ற இதழில் எழுதியிருந்தேன்.

இந்த மூவரும் சக்கூர்புரில் இருந்து ஆட்டோ பிடித்து வருவார்கள். ஒத்திகையில் வாசித்து முடித்த கையோடு அவர்களுக்கு மதுவைத் தயாராக வைக்க வேண்டும். வெறும் ஒரு துண்டு ஊறுகாய் அல்லது ஒரு சிறிய தயிர்சாத பாக்கெட்டின் உதவியுடன் ஒரு முழு பாட்டில் விஸ்கி அல்லது ரம்மை ஒரு மடக்கில் காலி செய்யும் வல்லமை படைத்திருந்தார்கள் அவர்கள்.

எங்களுக்குள் ஒரு ஒழுங்கினை நாங்கள் எப்போதும் கடைப்பிடித்தோம். அதாவது ஒத்திகை நடக்கும் பரப்பில் அல்லது கூடத்தில் யாரும் புகை பிடிக்க மாட்டோம். குடித்து விட்டு வந்தவர்கள் யாரும் என்னுடைய ஒத்திகைகளில் எப்போதும் கலந்து கொள்ள முடியாது. அதே போல நாங்கள் ஒத்திகை நடத்தும் இடங்களில் யாரும் குடிக்க முடியாது. குடிப்பவர்கள் என் வீட்டுக்கு வந்து குடிக்கலாம். அல்லது வேறு யாராவது நண்பர்களின் அறைகளில் குடிக்கலாம். நாங்கள் ஒத்திகைகள் நடத்திய தமிழ்ப்பள்ளி வளாகங்களில் எப்போதும் யாரையும் புகை பிடிக்கவோ மது அருந்தவோ நான் என்றும் அனுமதித்தது இல்லை. நானும் என்றும் இக்காரியங்களை செய்தது இல்லை.

ஒத்திகைகளை முடித்து விட்டு மதுவில் குளிக்கலாம். ஆனல் ஒரு துளிகூட மது அருந்திவிட்டு என்னுடைய ஒத்திகைகளில் கலந்து கொள்ள முடியாது. விஷயம் தெரியாதவர்கள் அப்படிக் குடித்து விட்டு வந்தபோது முக்கியமான ஒத்திகைகளைக் கூட ரத்து செய்து அவர்களைத் திருப்பி அனுப்பி இருக்கிறேன். என் அன்னையின் அருள் மற்றும் சத்குருநாதன் திருவடியின் கருணையால் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான் புகைப்பழக்கம் மற்றும் மது அருந்துவதை திடீரென்று நிறுத்திய போது முன்னர் நானே விதித்துக் கொண்ட இவை போன்ற கட்டுப்பாடுகள் தான் என்னை இந்த இரண்டு சாபக்கேடுகளின் பக்கமும் மீண்டும் திரும்பாமல் இருக்கப் பெருமளவில் உதவியது என்று நினைக்கிறேன். (தடம் மாறிப் போகிறேன். என்னைத் திருத்த முடியாது).

சரி. விஷயத்துக்கு வருவோம். வாத்தியக் கலைஞர்களுக்கு ஒத்திகையின் இறுதியில் மது உண்டு என்று உறுதிப்படுத்தி விட்டு எங்களுக்கும் உண்டு என்று உறுதிப்படுத்திக்கொண்டு நேரம் செல்வது தெரியாமல் ஒத்திகைகளில் ஈடுபட்டு இருப்போம். மற்றவைகளுக்கு எல்லாம் செலவு அதிகமாகிப்போனதால் சாப்பாட்டுச் செலவுக்குப் பணம் இருக்காது. சுமார் இருபத்து ஐந்து பேர்களுக்கு தினமும் என் மனைவி வீட்டில் இருந்து சமைத்து அனுப்புவாள். சில நாட்களில் வெங்கட், மகேந்திரன், குணசேகரன், ஏஞ்செல்ஸ் போன்றோர் என் வீட்டின் சமையலைத் தீர்மானிக்கும் முக்கிய சக்திகளாக விளங்கினர். மளிகைக் கடையில் கடன்கள் ஏறி அந்தத் திசைப் பக்கம் செல்லாமல் பல நாட்கள் இரண்டு நிமிடங்களில் கடக்க வேண்டிய தூரத்தை சுற்றியடித்து ஒரு மணிநேரம் நடந்து சென்ற நாட்களும் பின்னளில் வந்தன.

இரவு சத்தியமூர்த்தி அரங்கில் நெடுநேரம் ஒத்திகைகள் நடத்தி விட்டு கும்பலாக என் வீட்டுக்கு வந்து குடித்துவிட்டு உரக்கப் பேசி, வாதாடி, சண்டைகள் போட்டு, அடுத்த நாள் செய்ய வேண்டிய ஒத்திகைகளை ஏழுகட்டைக் குரலில் விவாதித்து நாங்கள் செய்துவந்த ரகளையால் என்னுடைய இரண்டு வயது மகள் பாரதியின் தூங்கும் பழக்கம் சீர்கெட்டு அவள் படிக்கும் வயதிலும் அந்தப் பிரச்னை தொடர்ந்து வந்தது. இரவு இரண்டு மணிவரை விழித்து வாதாடி ஓய்ந்து தூங்கச் செல்லுவோம் எல்லோரும். வீட்டின் முன்னறையில் குறைந்தது பதினைந்து பேராவது தூங்குவார்கள். காலையில் எல்லோரும் தலைதெறிக்க அலுவலகங்களுக்கு ஓடிப்போவோம். காலையில் சீக்கிரம் போனல்தான் மாலையில் ஏதாவது அல்வா கொடுத்துவிட்டு ஒத்திகைகளில் கலந்து கொள்ள முடியும்.

சரி. மீண்டும் ஒத்திகைகளுக்கு செல்வோம். இந்தக் கட்டுரையை எழுதும்போது என்னுடன் பணிபுரிந்த அனைத்துக் கலைஞர்களின் நினைவுகளும் கண்முன் நின்று விழியோரம் சற்று ஈரத்தை எட்டிப் பார்க்க வைக்கிறது. அவர்களைப் பற்றியும் இங்கே சற்றுப் பதியலாம் என்று இருக்கிறேன். இந்தக் கட்டுரையில் நிறைய இடங்களில் அவர்களுடைய பெயர்களைச் சொல்லிச் செல்கிறேன். எனவே அவர்கள் குறித்த சிறிய குறிப்பினை இங்கு பதிந்து வைத்தால் உங்களுக்கும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். என்னிடம் உள்ள பல ஒழுங்கீனங்களில் முறையான ஆவணங்களைச் சேமித்து வைக்காத பழக்கமும் ஒன்று. இந்தக் கட்டுரையில் பேசப்படும் நாடகத்தின் புகைப்படமோ அல்லது என் உடன் பணிபுரிந்த கலைஞர்களின் புகைப்படங்களோ உடனடி என் கைவசம் கிட்டவில்லை. இந்தக் கட்டுரைகள் நூலாக வடிவம் பெறும் போதாவது அந்தப் புகைப்படங்களைத் தேடி வைக்க வேண்டும். எனவே ஒரு சிறிய அளவில் என்னுடன் பணிபுரிந்த கலைஞர்களைப் பற்றிய பதிவினை இங்கே செய்து வைக்கலாம் என்று தோன்றியது. உங்களுக்குத்தான் பாவம்.

முதல் காட்சியாக கொள்ளி வைக்கும் சடங்கினை ஒத்திகையாகத் துவங்கினோம் என்று எழுதியிருந்தேன். நான்கு பேர் பிணம் தூக்கும் பாவனையில் கைகளைத் தூக்கிச் செல்வார்கள். பின்னணியில் கந்தசாமியின் உறுமி ஒற்றைக்கொட்டும் ஒற்றை இழுப்புமாக அமானுஷ்யமான ஒலி எழுப்பும். சங்கர் சிந்தசைஸரில் இரவு நேர ஒலிகளை எழுப்புவார். மணிகண்டன் ஒத்திகையிலேயே மீசையை மழித்துவிட்டு மிகவும் தத்ரூபமான சோகத்துடன் தீச்சட்டி தூக்கி வருவது போன்ற பாவனையில் வருவான். என்னுடன் உள்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்த மணிகண்டன் எங்கள் அலுவலகத்திலும் அதேபோன்ற முகபாவனையுடன் உலவிவந்தான். சரி. ஒருவேளை நாடகத்தில் தத்ரூபமாக வரவேண்டும் என்று பகலிலும் ஒத்திகைகளைத் தொடர்கிறான் போலிருக்கிறது என்று நானும் சுரேஷூம் சிரித்துக் கொள்வோம். செய்யும் எந்தக் காரியத்திலும் ஒரு நேர்த்தியுயம் தீவிரத்தையும் வலியுறுத்துகிறவன் மணிகண்டன். நிரபராதிகளின் காலம் என்னும் நாடகத்தில் சுமார் இரண்டு பக்க வசனங்களை ஒத்திகை நடந்த இரண்டு மாத காலங்களிலும் எவ்வித மாற்றமும் இன்றி தினமும் ஒரே மாதிரி பேசிக்காட்டியவன் அவன்.

அதே போல வெங்கட் நரசிம்மன். இவனை போன்லெஸ் ஒன்டர் என்று வெங்கட்சாமிநாதன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். அவனும் அளவுக்கு அதிகமான பிரயாசைகள் எடுத்துக் கொள்வான். உடல் அவன் சொன்னபடிக்குக் கேட்கும் மாயவித்தையைத் தன்வசம் வைத்திருந்தான். நம்முடைய வயோதிக நடிகர்கள் சண்டைக் காட்சிகளில் கயிறு கட்டிகொண்டு செய்யும் காமெடியை கயிறு இல்லாமலேயே செய்து காண்பிக்கும் வல்லமை படைத்தவன்.

இயற்கையிலேயே அற்புத நடிப்புத் திறன் கொண்டவன் குணசேகரன். யாரைப் பார்த்தாலும் அவர்களுடைய பாவனையிலேயே பேசுவான். அவர்களின் உடல்மொழியை உடனே தனதாக்கிக் கொள்ளும் திறன் படைத்தவன். சொந்தப் பிரச்னைகள் அவனை இளமைப் பருவத்தில் சூழ்ந்ததால் அவனல் பிரகாசிக்க முடியாது போனது. இல்லையென்றால் தமிழ்த் திரையுலகம் இந்நேரம் தேசிய அளவில் பெருமையுடன் பேசப்படும் ஒரு நடிகனைத் தன்வசம் வைத்திருக்கும். தன் சொந்தப் பிரச்னைகளால் எல்லா உறவுகளையும் சீராகப் பராமரிக்க முடியாமல் போனவன். இப்போது பெங்களூருவில் இருக்கிறான் என்று என்னிடம் அவனை நினைவுபடுத்தும் பழைய நண்பர்கள் யாராவது சொல்வது உண்டு.

இடதுசாரி சிந்தனைகள் கொண்ட மகேந்திரன் எல்லாவற்றையும் உரக்க விவாதிப்பான். அவன் போடும் கூச்சலில் குறைந்தது ஐம்பது பேராவது அக்கம்பக்கத்தில் தூக்கம் இழப்பார்கள். நவீன இலக்கியத்தில் ஆழ்ந்த படிப்பும் அக்கறையும் உள்ளவன் மகேந்திரன். ஒத்திகையின்போது ஒவ்வொரு காட்சியின் லாஜிக்கை உறுதி செய்து கொண்டுதான் அடுத்த அடிக்கு நகருவான். அவனை சமாளித்து காட்சிக்குள் அனுப்புவதற்குள் உயிரேபோய்விடும். இப்போது ஈரோடு பக்கம் வருமான வரித்துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறான். இப்போதும் அதே இடதுசாரி சிந்தனைகளுடன் யாருடனவது சண்டை போட்டுக்கொண்டு இருப்பான என்று தெரியாது.

இன்று திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரியும் இளஞ்சேரன் இயற்கையிலேயே அற்புதத் திறமைகள் கொண்டவன். பராசக்தி வழக்காடு மன்றக் காட்சியை ஒரே மூச்சில் சொல்லி நிறுத்துவான். மிக அரிய நகைச்சுவை உணர்வு உள்ளவன் அவன். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பான். முரண்டு பிடிப்பதைக் கூட சிரித்துக் கொண்டே செய்வான். அவனுடைய குரல் வளம் இன்று திரையில் முன்னணியில் இருக்கும் பல பெண்மைச் சாயல் கொண்ட கதாநாயகர்களிடம் காணாத ஒன்று. சொல்லிக் கொடுப்பதை விட அதிகம் காட்டி நெகிழ வைப்பவன். இங்கிலாந்து என்னும் நாடகத்தில் அவன் கட்டைக்கால் கட்டிக்கொண்டு காந்தியாக வந்து பேசிய வசனங்கள் இன்னும் பல இரவுகளில் என் கனவுகளில் வரும்.

நாங்கள் அன்புடன் வீரு என்று அழைக்கும் வீரராகவன். மெத்தப்படித்த வீரு அப்போதே மிகவும் உயரிய பதவியில் இருந்தாள். ஆனல் அவனுடைய பதவியோ நாங்கள் இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும் எட்ட முடியாத ஊதியத்தை அப்போதே வாங்கிக் கொண்டிருந்த வீரு, வெற்றியும் பதவியும் தன் தலைக்கேறாது பார்த்துக் கொண்டவன். நவீன இலக்கியத்திலும் நாடகத்திலும் மிகவும் தீவிரமாக ஈடுபட்டவன்.

இன்னும் சிலருடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு விஷயத்தைத் தொடர்வேன். என்றாவது முடித்துதானே ஆகவேண்டும்?