Saturday, May 19, 2012

மீண்டும் பாரதமணி

கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளாக பலத்த பொருளாதார நெருக்கடியிலும் எவ்வித சமரசங்களையும்  செய்து கொள்ளாது விடாப்பிடியாக காந்திய நெறிகளைப் போற்றும் கட்டுரைகள் மற்றும் படைப்புக்களைத் தாங்கி வெளிவரும் பாரதமணி இதழ் தேசிய அளவில் நம்முடைய மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் பெருமை அளிக்கும் இதழியல் செயல்பாடாகும்.  வெள்ளிவிழா காணும் பாரதமணிக்கும் அதன் ஆசிரியர் பெரியவர் சீனுவாசனுக்கும் எங்கள் தலைவணக்கங்கள்.  பாரதமணி பிப்ரவரி இதழில் ஆசிரியர்  பாரதமணி சீனுவாசன்  அந்த இதழை நிறுத்தப்போவதாக அறிவித்து இருந்தார்.    அந்தச் செய்தி மிகவும் வருத்தம் அளித்தது.  வடக்கு வாசல் இதழில் திரு.சீனுவாசன் அவர்களின் அறிவிப்பு குறித்து பதிவு செய்திருந்தோம்.  காந்தியச் சுவட்டில் வெளிவரும் ஒரு இதழ் நின்றுபோவது பெரும் வருத்தம் அளித்தது.

Monday, April 23, 2012

செம்மை - சிறுகதைகளுக்கான காலாண்டிதழ்

இன்று உலகப் புத்தக தினத்தில் செம்மை காலாண்டிதழ்  கூரியர் வழியாகக் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  தமிழில் சிறுகதைகளுக்கு என்றே ஒரு இதழ் என்ற விஷயம் அதை விட மகிழ்ச்சி அளித்தது. 

சில நாட்களுக்கு முன்பு  தூறல் சிற்றிதழில் செம்மை இதழின் விளம்பரம் காணநேர்ந்தது.  ஆசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு இதழை என் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டினேன். 

இதழை அனுப்பி வைத்த ஆசிரியர் நஞ்சுண்டனுக்கு என்னுடைய  அன்பான நன்றி.

அதைவிட முதலில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்து அவருக்கு.  சிறுகதைகளுக்கு மட்டுமே என்று ஒரு இதழை துவங்குவதற்கு மிகப் பெரிய தைரியம் வேண்டும்.  சிறுகதைகளை கொஞ்சம் கொஞ்சமாக நாம் உதாசீனப்படுத்தத் துவங்கியிருக்கும் நேரம் இது.  பல பிரபல பத்திரிகைகளில் சிறுகதைகள் இப்போது காணப்படுவது இல்லை.  அவற்றில் வந்தவை பெரும்பாலும் சிறுகதைகள் என்ற ஒரு வரையறைக்குள் அடங்காவிட்டாலும்.  பெரும்பத்திரிகைகளில் சிறுகதைகளின் இடங்களை இப்போது வேறு ஏதேதோ பிடித்துக் கொள்ளத் துவங்கியிருக்கின்றன.