Thursday, September 13, 2007

சி.சு.செல்லப்பா பற்றிய ஒரு முடிவுறாத ஆவணப்படம் - 3

ராகவன் தம்பி




செல்லப்பாவைப் பற்றிய ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டி அவருடைய வீட்டு வாசலில் பேராசியர் சி.ரவீந்திரனும் நானும் நின்ற கோலத்தோடு சென்ற இதழில் நிறுத்தியிருந்தேன்.

செல்லப்பா எங்களைப் பார்த்ததும் மறுபடியும் உற்சாகமாக எழுந்து உட்கார்ந்து கொண்டார். ஏதோ விட்ட இடத்திலிருந்து தொடருவது போல "சுதந்திர தாகம்' புதினம் பற்றி மீண்டும் பேச ஆரம்பித்தார். காந்தியின் முன்னால் சிகரெட் பிடிக்கும் துணிச்சல் கொண்ட ஒரு Rogue என்று நேருவைத் திட்டினார். எழுத்து பத்திரிகையில் இருந்து மீண்டும் சில பகுதிகளை மீண்டும் வாசித்துக் காட்டினார். அன்று இப்படியாகப் பேச்சு போய்க்கொண்டு இருந்தது.

நான் மெல்லக் காரியத்தில் இறங்கினேன். ""உங்களைப் படம் எடுக்கணும்''. சற்று நேரம் அமைதியாக இருந்தார். காதில் விழவில்லையோ என்று மீண்டும், ""சார், உங்களைப் படம் எடுக்கலாம்னு இருக்கோம்''. ""எடுத்துக்கோ. ரவீந்திரன். பக்கத்திலே வாங்கோ. கேமரா கொண்டு வந்திருக்கியா?'' என்றார். சரிதான். இவர் வேறு ஏதோ அர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறார். ""இல்லே சார். உங்களை ஒரு டாகுமெண்டரி படம் எடுக்கணும்''.

"சினிமாவா? நான் என்ன எம்.ஜி.ஆரா? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்''.
சினிமாவெல்லாம் இல்லை சார். உங்களைப் பேச வச்சு உங்க நேர்காணலைப் படமாக்குறோம். அவ்வளவுதான். நீங்க உங்க அனுபவங்களைப் பத்திப் பேசுங்கோ. பதிவு பண்ணி வச்சிக்கிறோம்.




"எந்த டிவியிலே போடப்போறேள்? டிவி எல்லாம் வேணாம். ஏற்கனவே என்னோட ஜீவனாம்சம் நாவலைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி வச்சாங்க. டி.வி. எல்லாம் வேணாம்''

ரவீந்திரன் துணைக்கு வந்தார். டி.வி. எல்லாம் இல்லை சார். இவர் கண்ணப்பத்தம்பிரானைக் கூடப் படம் பண்ணியிருக்கார். உங்க நினைவுகளைப் பதிஞ்சு வச்சிக்கிறோம் அவ்வளவுதான்''

செல்லப்பாவுக்குப் புரியவில்லை. ஆனால் கோபித்துக் கொள்ளவில்லை. சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். ஜீவனாம்சம் நாவல் பற்றியும் அது தொடராக வந்தது பற்றியும் ரவீந்திரனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். நான் சிகரெட் பிடிக்க மெல்ல வெளியே நழுவினேன். சிகரெட் முடித்து உள்ளே வந்தபோது மாமி சமையலறையில் காபி தயார் செய்து கொண்டிருந்தார். மாமியிடம் போய் விஷயத்தை சொன்னேன். ""மாமாவைப் படம் எடுக்கணும். சும்மா ஒரு டாகுமெண்டரி மாதிரிதான். கொஞ்சம் சொல்லுங்களேன்'' என்றேன். ""நான் அதுலே எல்லாம் தலையிட மாட்டேன். நீயே பேசிக்கோ. அவரைப் பத்திதான் உனக்குத் தெரியுமே? என்றார்.

மீண்டும் செல்லப்பா இருந்த அறைக்குப் போனேன். மாமி காபி எடுத்துக் கொண்டு பின்னால் வந்தார். ""மீனா இதோ பாரு. பென்னேஸ்வரன் என்னை எம்.ஜி.ஆர். மாதிரி சினிமா பிடிக்கணும்னு சொல்றான்'' என்றார் சிரித்துக் கொண்டே. காதில் கையைக் குவித்துக் கொண்டு மாமி இன்னும் அவருக்குச் சற்று அருகில் போனார். மீண்டும் அதையே சொல்லிக் கத்தினார் செல்லப்பா. ""ஒங்க ரெண்டு பேருக்கும் விவஸ்தை இல்லே'' என்று வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டே உள்ளே போனார் மாமி.





என்னிடம் கேட்டார் செல்லப்பா. ""அதுக்கு செலவாகுமே? என்ன செய்யப்போறே? யார் உனக்குப் பணம் தர்றா?'' என்று கேட்டார்.

"யாரும் பணம்லாம் தரல்லே. நான் கொஞ்சம் ஏற்பாடு பண்ணி வச்சிருக்கேன். அதுலேயே பண்ணிடலாம்'' என்றேன்.

"இந்த வேலை எல்லாம் எதுக்கு? என்னை மாதிரி தப்பெல்லாம் பண்ணாதே'' என்றார்.

"இல்லை சார். இதுக்காகவே கொஞ்சம் ஒதுக்கி இருக்கேன். எனக்குப் பண்ணணும் சார். உங்களைப் பத்திய ஒரு பதிவு எங்களுக்கு வேணும் சார்'' என்றேன்.

"எழுத்து'' தான் இருக்கே?'' என்றார்.

"இல்லே. நீங்க எல்லாத்தைப் பத்தியும் பேசறமாதிரி பதிவு வேணும் சார். நான் நல்லா பண்ணுவேன் சார். என்னைப் பத்தி உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? என்றேன்.

ஒன்றும் பேசவில்லை. அமைதியாக இருந்தார். சிறிய மௌனத்துக்குப் பின் ""கையிலே இருந்து இதுக்கெல்லாம் செலவு பண்ணாதே'' என்றார்.

"இல்லே சார். போட்ட பணத்தை எடுத்துடுவேன்'' என்றேன்.

"அதெல்லாம் ஆகாத காரியம். பார்ப்போம். வந்து எடுத்துக்கோ. எப்போ வர்றே?'' என்றார்.

"இன்னிக்கு ராத்திரி கிருஷ்ணகிரி போறேன். அடுத்த ஞாயித்துக்கிழமை வந்துடுவேன். வந்து ஏற்பாடு பண்ணிக்கலாம்'' என்றேன். "My lugguage is readily packed. I am ready for a journey". நான் உயிரோட இருந்தா வந்து எடுத்துக்கோ'' என்றார் சிரித்துக் கொண்டே.

ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. ஒரு மாதிரி கண்கலங்கிப் போயிருந்தார் ரவீந்திரன். செல்லப்பாவின் கையை இறுகப் பிடித்துக்கொண்டு நடுங்கிய குரலில், ""கண்டிப்பா இருப்பீங்க சார். நாங்க கண்டிப்பா அடுத்த ஞாயித்துக்கிழமை வர்றோம்'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

அன்று இரவு குடும்பத்துடன் கிருஷ்ணகிரிக்குக் கிளம்பினேன். ஒரு வாரம் கழித்துத் திரும்பி வந்து கண்ணப்பத் தம்பிரான் பற்றிய படம் எடுத்தபோது படப்பிடிப்பு உபகரணங்களை வாடகைக்கு எடுத்த அதே குட்நியூஸ் ஸ்டூடியோவில் காமரா மற்றும் படப்பிடிப்பு விளக்குகளுக்காக சொல்லி வைத்தேன். தயாராக இருக்குமாறு செல்லப்பாவிடம் சொல்லிவிட்டு வருவதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை செல்லப்பா வீட்டுக்குப் போனேன்.

சவரம் எல்லாம் செய்து கொண்டு மாப்பிள்ளை மாதிரி உட்கார்ந்து கொண்டிருந்தார். எனக்குப் பெருத்த ஆச்சரியத்தைக் கொடுத்தது என்னவென்றால், 92ல் அவர் தில்லி வந்திருந்தபோது உள்துறை அமைச்சகத்தில் என்னுடன் பணிபுரிந்த ராமராஜ், பாலசுப்பிரமணியன், மணிகண்டன் ஆகிய நண்பர்கள் நடத்திக் கொண்டு இருந்த ""இளங்குருத்து'' கையெழுத்துப் பத்திரிகை (இளங்குருத்து பற்றி அப்புறம் தனியாக எழுதுகிறேன். இப்போது எங்காவது பாதை மாறினால் உங்களுக்குக் கொலைவெறி வரும் என்று தெரியும்). ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார் செல்லப்பா. அப்போது நாங்கள் அவருக்கு அணிவித்த சால்வையைப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தார். ஏதோ எனக்காகக் காத்துக் கொண்டு இருந்தது போல இருந்தது அவர் உட்கார்ந்திருந்த நிலை.

என்னைப் பார்த்ததும், ""என்ன கேமரா எல்லாம் கொண்டு வரல்லையா? நான் ரெடி'' என்றார் ஒரு சிறு குழந்தையைப் போல.

"இல்லை சார். நாளைக்குக் கேமரா எடுத்துண்டு வர்றேன். ஒரு படையே வரும். உங்களுக்குத் தொந்தரவு இருக்காது இல்லையா? நான் வர்றேன்று சொல்லிப்போகலாம்னு வந்தேன்'' என்றேன்.

"நான் உயிரோடு தான் இருக்கேன். நாளைக்கும் இருப்பேன். நீ வரலாம்'' என்று சொல்லிவிட்டுத் தூங்கப்போனார்.

அன்று மாலையே மீண்டும் ஸ்டூடியோவுக்குச் சென்று அடுத்த நாளைக்காகக் கேமரா, விளக்கு, உதவியாளர்கள் எல்லாம் புக் செய்து விட்டேன். தெரிந்த நண்பர் மூலம் கிடைத்தார் கேமராமேன் ரங்கசாமி. தமிழ்த்திரையுலகில் பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். குட்நியூஸ் ஸ்டூடியோவின் சுப்பிரமணியனும் சாமிநாதனும் கேமரா உதவியாளர்கள்.
மறுநாள் காலை ரவீந்திரன், நான், ரங்கசாமி கேமராமேன் மற்றும் உதவியாளர்கள் சகிதம் செல்லப்பா வீட்டுக்கு விடியற்காலையில் படையெடுத்தோம்.

நேற்றுப் பார்த்ததுக்கு செல்லப்பா சற்று பலவீனமாக இருந்தார். இரவு உடம்பு ரொம்பவும் சுகமில்லாமல் போனதாகவும் இரவு தான் மிகவும் பயந்துவிட்டதாகவும் மாமி சொன்னார். எனக்கும் ரவீந்திரனுக்கும் தோன்றியது. மறுநாளைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று. ஆனால் செல்லப்பா மிகவும் கடுமையாக வற்புறுத்தினார்.

அவருக்கும் சில விஷயங்கள் தெரிந்திருந்தது. ""எதுக்கு வீணா கேமரா வாடகை, வண்டி வாடகை எல்லாம் வீணாக்குறே? முடிஞ்ச வரைக்கும் எடுத்துக்கிட்டுப் போ'' என்று சொன்னார். ரவீந்திரனும் நானும் ரங்கசாமியும் மனதில்லாமல் படிப்பிடிப்புக்கான வேலைகளைத் துவங்கினோம்.நீங்களே கற்பனை செய்து பாருங்கள். அது சென்னையின் ஜ÷ன் மாதம். ஒரு சரியான மின்விசிறி வசதி கூட இல்லாத ஒரு சிறு அறை. அதில் நாங்கள் அதிகம் வெளிச்சம் பாய்ச்சும் விளக்குகளைப் பொருத்தினால் செல்லப்பாவின் உடல்நிலை கண்டிப்பாகப் பாதிக்கப்படும். எனவே மிகக் குறைந்த ஒளி அளவுள்ள விளக்கை, செல்லப்பாவின் மீது நேரடியாகப் பாயாத வண்ணம் வீட்டின் விட்டத்தின் மீது பாயவிட்டு அதன் எதிர்வினை ஒளியில் படம் பிடிக்கத் தயார் செய்து கொண்டார் ரங்கசாமி.

நிறைய க்ளூகோஸ் பொட்டலங்கள் வாங்கிச் சென்றிருந்தோம். அவற்றைக் கரைத்துத் தயாராக வைத்துக்கொண்டோம். களைத்துப்போனால் அவருக்குக் கொடுப்பதற்கு.அப்போது வெளியாகி வீடெல்லாம் இறைந்து கிடந்த சுதந்திர தாகம் நூல்களை செல்லப்பாவின் பின்னணியில் அடுக்கி வைத்தோம். கட்டிலின் மீது தலையணைகளை சரித்து வைத்து, ஒரு மகாராஜாவின் தோரணையில் அமர்ந்து கொண்டார் செல்லப்பா. (உண்மையிலேயே என் கண்ணுக்கு அந்த நேரத்தில் காம்பீர்யம் மிகுந்த யாருக்கும் தலைவணங்காத ஒரு மன்னனாகத்தான் காட்சியளித்தார் செல்லப்பா).

படப்பிடிப்பு துவங்கியது. கேமராவின் இந்தப்பக்கமிருந்து நானும் ரவீந்திரனும் கேள்விகளைக் கேட்கத் துவங்கினோம். நாங்கள் ஏற்கனவே பேசிக்கொண்டபடி அவருடைய இலக்கிய உலகப் பிரவேசம், மணிக்கொடி நண்பர்களின் தொடர்பு, புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, க.நா.சு. போன்றோர்களுடன் அவருக்கிருந்த நட்பு, அவருடைய தினமணி நாட்கள், எழுத்து அனுபவங்கள் போன்றவற்றை மிகவும் சுவாரசியமாக சொல்ல ஆரம்பித்தார் செல்லப்பா. கேள்விகள் கேட்பதை விட்டு அவர் சொல்வதைக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம் நானும் ரவீந்திரனும். அவரை இடையில் நிறுத்த மனது வரவில்லை எங்களுக்கு. அவர் சோர்வடையும் நேரத்தில் இடையில் நிறுத்த விரும்பினோம். சோர்வடைந்ததைக் காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து கொண்டிருந்தார் செல்லப்பா. ஓரிரு இடங்களில் அவர் மீது ஈ அமர்ந்தபோது அதை அவர் தட்டி விட எத்தனித்தார். அவர் சால்வையில் சேர்த்துப் பின் செய்யப்பட்டிருந்த லேப்பில் மைக்கையும் தட்டி விட்டார். ஒலிப்பதிவு தடையுற்றதால் நான் கேமராவுக்குக் "கட்' சொல்லவேண்டியதானது. "I am not your actor to say Cut and all " என்று என்னைக் கடிந்து கொண்டார் செல்லப்பா. படப்பிடிப்பு தொடர்ந்து கொண்டிருந்தது. எல்லாவற்றைப் பற்றியும் மீண்டும் பேசினார்.

ஆச்சரியம் என்னவென்றால், ஓரிருமுறை மைக்கைத் தட்டிவிட்டதால் தடைபட்டுப்போன இடங்களை அவர் மீண்டும் விவரிக்கத் துவங்கிய போது முன்னைவிட அதில் சுவாரசியம் இன்னும் சற்றுக் கூடியது.

இப்போதைக்கு சற்று நிறுத்திக்கொள்கிறேன். சுவாரசியத்துக்காகவோ அல்லது மர்மத்தைக் கூட்டவோ நிறுத்தவில்லை. இடமில்லாததால் நிறுத்துகிறேன். பலர் இந்தத் தொடர் பற்றிப் பாராட்டினாலும் சில நண்பர்கள் என்னைக் கடிந்து கொண்டார்கள்.

சனிமூலை ஒரே விஷயம் தாங்கி இப்படித் தொடர்ச்சியாக வரக்கூடாது என்றும் ஒரு மாதம் கழித்துப் படிக்கும்போது அதில் சுவாரசியம் குறைந்து விடுகிறது என்றும் சலித்துக் கொண்டார்கள். அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். இன்னும் ஒரே இதழில் முடித்து விடுவேன்.

செல்லப்பா பற்றிய ஆவணப் படம்தான் முடியவில்லை. எடுத்த வரை வீட்டில் தூங்குகிறது. அந்த அனுபவங்களையாவது சற்று முழுமையாகப் பகிர்ந்து கொள்ளலாமே என்ற உரிமையில் இந்தத் தொடர்ச்சி. இந்த முறை மன்னித்துவிடுங்கள். அடுத்த இதழுடன் செல்லப்பாவை முடித்து விடுவேன்.

அதன் பிறகு சனிமூலையில் தனித்தனியான விஷயங்கள்தான். நீங்கள் தான் பாவம். எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள வேண்டும்.