Thursday, May 26, 2016

வாழ்தலின் விதி - மனுஷி

கவிதைக்கும் கவிஞர்களுக்கும் மொழியும் இயற்கையும் அளிக்கும் சுதந்திரம் அளவற்றது.
அவர்கள் எதையும் எப்படி வேண்டுமானாலும் உருவகப்படுத்தும் உரிமையும் அந்த உரிமையை கட்டற்ற முறையில் பாவிக்கும் சாதுரியமும் கவிஞர்களுக்கு உள்ளது.
கவியின் பார்வையில் எண்ணம் செல்லப் பறவையாகலாம்.
சிந்தனை செல்லப் பறவையாகலாம்.
உறவு செல்லப் பறவையாகலாம்.
சுதந்திரம் செல்லப் பறவையாகலாம்.
அந்த பறவையுடன் சல்லாபிக்கலாம்.
சண்டையிடலாம்.
வாழ்க்கையின் விந்தைகளை, நொடியின் பின்னத்தில் பளாரென்று ஏதேனும் யதார்த்தத்தை முகத்தில் அறைந்து சிறகடித்து பறக்கலாம்.
வாழ்வென்பது விட்டு விடுதலையாவதுதானே என்று கேள்வி எழுப்புகிறார். ஒரு கட்டத்தில் வாழ்வு அந்த விடுதலையையும் மீறிய ஏதோ ஒன்றுக்கும் கெட்டலையத்தானே செய்கிறது?
எண்ணம், சிந்தை, நட்பு, உறவு பகை அனைத்தையும் செல்லப்பறவையாக பாவித்து கூண்டுக்குள் அடைத்து வைத்து அவற்றுடன் கோபம் கொள்ளலாம். முரண்பாடு கொள்ளலாம் கொள்ளாமல் இருக்கலாம். பேச்சு வார்த்தைகள் அற்று இருக்கலாம். உரையாடல்களுக்கு புதிய பரிமாணம் தரலாம்.
இந்த சுதந்திரம் அனைத்தும் கவிக்கும் கவிதைக்கும் அவை தரும் அனுபவத்துக்கும் உள்ளது.
தளம் இலக்கிய இதழில் (தளம்-3, இதழ் 13, ஜனவரி-மார்ச் 2016) வெளியான மனுஷி கவிதை வழியாக மேற்கண்ட அனுபவத்தை அளிக்கிறார்.

வாழ்தலின் விதி
கீச் கீச்சென குரலெழுப்பும்
செல்லப் பறவைகளுக்கு
என் மீது
எந்தக் கோபமும் இல்லை.
யாதொரு முரண்பாடுகளும் இல்லை.
இருந்தும்
சமீபகாலமாக
நாங்கள் பேச்சுவார்த்தைகள் அற்று இருந்தோம்.
எப்போதாவது சோம்பல் முறித்து
அவை பேசத் துவங்குகையில்
நான் மொழியற்று நின்றேன்.
நான் அருகமர்ந்து பேசுகையில்
வார்த்தைகளைச் சுவைத்தபடி
அதீதக் காதலுடன்
முத்தமிட்டுக் கொண்டிருந்தன.
புது வருடத்தின் இரண்டாம் மாதத்தில்
அவை கூண்டுக்குள்
சிறகு விரிப்பதையும்
வேனிற்காலத்தில் வெப்பத்தை
சுவைக்கும் பேராவலுடன்
பெருவெளிக்குள் பயணிக்கும்
எத்தனிப்புடன் தானியங்களைக்
கொத்தித் தின்றதையும்
நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்.
நாங்கள் பேசிக் கொள்ள
மௌனம் கூட மிச்சமில்லாது போன
ஒரு காலைப் பொழுதில்
நான் வைத்த பெயரைச் சுமந்த படி
என்னிலிருந்து வெளியேறி
பறந்து சென்றன
பறவைகள்.
வாழ்வென்பது
விட்டு விடுதலையாகி
பறத்தல்தானே மாயா.

Tuesday, May 24, 2016

யாத்திரை - இளங்கவி அருள்

கவிதையின் எல்லை எது?

துவக்கப்புள்ளி எது?  ஒரு கவிதை எதை செய்து முடிக்க வேண்டும்?  அல்லது அந்த கவிதை எதை செய்து முடிக்க தன்னுடைய துவக்கப் புள்ளியில் இருந்து கிளம்ப வேண்டும்?

இதுவரை மானிடம் தனக்குள்ளே போட்டுக் கொண்டு தவித்த புதிர் சிக்கல்களையெல்லாம் வென்றெடுத்து விட்டதா கவிதை?

கவிதை என்ற பெயரில் இதுவரை உலகில் உள்ள மொழிகளில் எல்லாம் எத்தனை வார்த்தைகள் விரயப்பட்டுள்ளன?     எத்தனை அனந்த கோடி வார்த்தைகள் கற்பனைகளால் அலங்கரிக்கப்பட்டு யானைகள் மிதித்துச்சென்ற  பாதையின் சிறுமுளைகளாய் சிதிலமடைந்துள்ளன?
கவிதை ஒரு துவக்கமா?  அல்லது கவிதை தனக்குள் தீர்வை பொதித்து வைத்துள்ள முடிவா?

ஒரு வாசகனாக எனக்கென்னமோ கவிதை ஒரு துவக்கமற்ற, முடிவற்ற யாத்திரையாகத்தான் இருக்கும் போல் இருக்கிறது.

அந்த யாத்திரையை கவிதையாக சொல்ல முயற்சித்து இருக்கிறார் இளங்கவி அருள் என்ற கவிஞர்.

கல்வெட்டு மார்ச் 2016 இதழில் இளங்கவிஅருள் எழுதிய யாத்திரை என்னும் கவிதையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது –
இவருடைய யாத்திரைப் பருவம் எதைப்பற்றியும் தீர்மானிக்காமல் கனவுகள் போல தனித்துப் போயிருக்கின்றன.  சக மனிதர்களுக்கும் இதே கதிதான் என்கிறார்.

இரவில் படரும் நிழலை இருள் சுற்றும் பறவை போல வைகறையில் தொடங்கி அந்திக்கு வந்துவிடும் வாழ்க்கை போராடி வெல்லப்படுகிறது – அல் சுற்றும் என்ற மிக நல்ல பிரயோகத்தை இங்கே தந்திருக்கிறார்.  இங்கு ஏதேதோ செயல்கள் யாத்திரிகர்களால் பெயரிடப்படாத விலங்கின் தன்மைக்கு மனிதம் என்று பெயரிடப்படுகிறது என்று முடிக்கிறார்.
இளங்கவி அருள் கவிதையின் இந்த யாத்திரை மீண்டும் எங்கோ துவங்கி மீண்டும் ஏதோ ஒரு முடிவிலாப் பொருளை நோக்கிச் சென்று மீண்டும் பலப்பல கேள்விகளுக்கு விடை தேடி ஒரு புள்ளியை நோக்கி விரைகிறது.


ஒரு கவிதையின் முடிவுறாத்தன்மை கொண்ட பயணம் என்பது இப்படித்தான் இருக்குமோ?

யாத்திரை
எதைப்பற்றியும் தீர்மானிக்காமல்
கனவுகள் போல் தனித்துப் போயின
என் யாத்திரைப் பருவம்.
இதே கதிதான் சக மனிதர்களுக்கும்
வைகறையில் தொடங்கி
அந்திக்கு வந்துவிடுகிறது வாழ்க்கை
இரவில் படரும் நிழலை அல்சுற்றும் பறவை போல்
போராடி வென்று விட்டேன்.
செத்துப் போனவர்களைப் பற்றி
நாம் நிறையப் பேசிக் கொண்டு இருக்கின்றோம்.

மனிதத் தன்மை என்னவென்பதை
பிளாஸ்டிக் புல்களுக்கு நீரையும்
தோல் பொம்மைகளுக்கு உணவையும்
கண்ணாடி பறவைகளுக்கு தானியத்தையும்
மரப்பாச்சிகளுக்கு ஒப்பனையும்
யாத்திரிகள் சேர்த்து விட்டார்கள்
பெயரிடப் படாத விலங்கின் தன்மையை
மனிதமென்று.

Saturday, February 20, 2016

ஆத்துலே வெள்ளம் போகுது...

இதுவரை சுமார் 3 கோடியே 70 லட்சம் பாக்கியவான்கள் இணையம் வழியாக ஃப்ரீடம் 250 மொபைல் போன் வாங்குவற்காக பதிவு செய்துள்ளார்கள் என்று எங்கோ ஒரு செய்தி படித்தேன்.

இத்தனை பேருக்கும் விருதாவாக நிறைய நேரம் இருந்திருக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகி இருக்கிறது.

ஏனென்றால் பல மணி நேரங்கள் செலவழித்தால் மட்டுமே ஒருவரால் இந்த பாக்கியத்தை பெறமுடியும் என்று சொன்னார்கள்.

இதற்கு நான் எந்தவகையான முயற்சியும் எடுக்கவில்லை.
வெகுவிரைவில் கரோல்பாக் கஃபார் மார்க்கெட்டில் இந்த போன் 200 ரூபாய்க்கு கூவிக்கூவி விற்கப்படும் சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளன.  இது தவிர இணையத்தில் பதிவு செய்து வாங்கிய சில தர்மவான்கள் மாலை நேர க்வார்ட்டர் தாகத்துக்காக 300 ரூபாய் அல்லது அதிகபட்சம் 450 ரூபாய்க்கு விற்க முன்வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன.

எனக்கென்னவோ எப்போதும் கெட்ட சிந்தனைதான்.