Thursday, January 10, 2008

சனிமூலை

இலக்கியத்திலும் தமிழர் பண்பாட்டு வரலாற்றிலும் ஆர்வம் உடைய உயர் அதிகாரி ஒருவர் எங்களிடம் ஒருநாள் மிகவும் சலிப்பான குரலில் குறைப்பட்டுக் கொண்டார்.

"என்னோட மாணவப் பருவத்திலே பல பட்டிமன்றங்களைக் கேட்டிருக்கேன். நானே பல பட்டிமன்றங்கள்லே கலந்துகிட்டிருக்கேன். அப்போ எல்லாம் நாங்க ஒரு பட்டிமன்றத்துலே பேசணும்னா ரொம்ப கனமான விஷயங்களா கொடுப்பாங்க. நிறைய படிக்கணும். கனமான விஷயங்களா பேசறப்போ சுவாரசியமா இருக்கறதுக்காக பல சுவாரசியமான சங்கதிகளை அங்கங்கே சேர்க்கணும். . ஆனா இப்போ நடக்கிற பட்டிமன்றங்களைப் பாருங்க. ரொம்ப மோசமா இருக்கு இல்லே?'' என்று ஆதங்கத்துடன் கேட்டார்.


அவர் கேட்பது கிடக்கட்டும். அவர் அப்படிப் பேசிக்கொண்டு போனபோது எனக்கு இரண்டு காதுகளிலும் லேசாகக் கொஞ்சம் புகை கசிந்தது. பெரிய இடத்தில் இருக்கிறார். இவர் பாட்டுக்கு எதை வேண்டுமானால் யாரிடம் வேண்டுமானால் பேசலாம். அவர்களும் இவர் இருக்கிற இடத்தைப் பார்த்துக் கொஞ்சம் பயப்படுவார்கள். இவருடைய படிப்பைப் பார்த்துக் கொஞ்சம் மிரளுவார்கள்.


எனக்கு இரண்டும் இல்லை. என்னதான் மிக உயரமான படிகளால் அமைக்கப்பட்டு இரண்டாவது தளத்தில் அமைந்திருந்தாலும் வடக்கு வாசல் ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கிறது என்பதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நண்பர் அளவுக்கு எனக்குப் படிப்பும் இல்லை. ஆனாலும் இதே கருத்தை நான் ஒரு அசட்டுத் தைரியத்துடன் அடிக்கடி சொல்லிக் கொண்டு இருக்கும்போது முகத்துக்கு நேராக சிரித்தாலும் மனத்தளவில் என்மீது எறிவதற்குக் கல்லின் அளவையும் இடத்தையும் குறித்து வைத்துக் கொண்டிருப்பார்கள் சில நண்பர்கள்.


ஆனாலும் சில விஷயங்களை வெட்கத்தை விட்டு ஒரு குருட்டுத் தைரியத்தோடு சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. அதுவும் என்னைப்போல, நட்புக்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் தொடர்ச்சியாகப் பட்டிமன்றங்களைக் கேட்டு ஏறத்தாழ தற்கொலை முடிவின் விளிம்புக்கு வந்திருக்கும் பாவாத்மாக்கள் கொஞ்சம் தைரியத்தோடு முன்வந்துதான் ஆகவேண்டும். இன்றைய பட்டிமன்றங்களில் பட்டிமன்றப் பாவலர்கள் அடிக்கும் குத்தாலங்கடி கூத்துக்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது.


நண்பர் சொன்னது போல என்னுடைய சிறிய வயதில் எங்கள் ஊரில் பல பட்டிமன்றங்களைக் கேட்டிருக்கிறேன். எங்கள் பள்ளித் தமிழாசிரியர்கள் பட்டிமன்றங்களை நடத்துவார்கள். அவை கம்பராமாயணப் பாத்திரங்களைப் பற்றி இருக்கும். சிலப்பதிகாரம் பற்றி இருக்கும். மணிமேகலை பற்றி இருக்கும். சீவகசிந்தாமணி பற்றி இருக்கும். எங்கள் பெருமாள் ராசு வாத்தியார், சுந்தரராமன் வாத்தியார், செல்வமணி டீச்சர், அறிவுக்கரசு வாத்தியார், திருஞானசம்பந்தம் வாத்தியார் ராமானுஜம் வாத்தியார் போன்ற அறிவுக்கடல்கள் எல்லாம் பட்டிமன்றங்களில் கலந்து கொள்வார்கள். தாங்கள் தேர்ந்தெடுத்த தலைப்புக்களைப் பற்றிக் கரைத்துக் குடித்து இருப்பார்கள். அவர்களுடைய வாதங்களில் கடலின் ஆழம் இருக்கும். புயலின் சீற்றம் இருக்கும். வாய்மையின் வர்ணங்கள் ஜாலங்கள் புரியும்.


இவர்கள் வாதங்களின் போது தங்கள் அணிக்கான காட்சிகளை விவரித்துச் செல்லும்போது இராம லட்சுமணர்களோடு எங்களையும் ஆற்றின் அக்கறைக்கு அழைத்துச் சென்று விட்டு வருவான் குகன். கண்ணகி மதுரையை எரிக்கும் சுவாலைகள் எங்கள் மனத்திரைகளில் கங்குகளாய்க் கனன்று எட்டுத் திக்கும் விரியும். பாஞ்சாலியின் அவிழ்த்த கூந்தலும், துரியோதனனின் தொடை தெறித்துச் சிதறும் ரத்தமும் எங்கள் முகங்களில் தெறிக்கும்.


இத்தனையும் நடக்க வேண்டுமென்றால் அவர்களுடைய உழைப்பு எந்த அளவுக்கு இருந்திருக்க வேண்டும்? ஏதோ ஒரு நாள் பட்டிமன்றத்துக்காகப் படித்த படிப்பாக இருந்திருந்தால் இது சாத்தியப்பட்டிருக்குமா? வாதுக்குத் துணையாக அழைத்து உலா வரச் செய்யும் கதைமாந்தர்களை எல்லாம் தங்களின் மனங்களில் சுமந்து திரிந்திருக்க வேண்டும் இவர்கள். அந்தக் கதைமாந்தர்கள் வாழ்ந்து திரிந்த வெளிகளிலும் அலைந்திருக்க வேண்டும். அவர்களுடன் கதையாடியிருக்க வேண்டும். சல்லாபமும், சரசமும், மல்யுத்தமும் நிகழ்த்தியிருக்க வேண்டும்.


அதன் தொடர்விளைவாக இந்தத் தமிழறிஞர்களின் வாதங்கள் மேடைகளில் உயிர் கொண்டு சண்டமாருதமாகத் திகழ்ந்திருக்க வேண்டும். நான் சொல்வது எங்கள் ஊர்ப்பெருமைக்காக மட்டுமல்ல. அநேகமாக உங்கள் ஊர்களிலும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அங்கும் ஏதாவது உங்களது ஊரின் பெருமாள் ராசு வாத்தியார்களும் சுந்தர ராமன் வாத்தியார்களும் உங்களின் மனவெளிகளில் ஞானச்சுடர்களை ஏற்றியிருப்பார்கள். உங்கள் ஊரில் அப்போது நடந்த பட்டி மன்றங்களிலும் இவைதான் நடந்திருக்கும்.


சரி. இப்போதைய பட்டிமன்றங்களைப் பற்றி வருவோம். என்னைப் போல, விதி துரத்தி வீடு விட்டு ஓடி வந்த பாவாத்மாக்களின் வசதிக்காக பட்டிமன்றங்களை இரண்டு படுபயங்கரமான பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பரந்து பட்ட நகரங்களில் கதிகலக்கிக் கொண்டிருக்கும் பட்டிமன்றங்கள். இன்னொன்று தில்லி போன்ற இடங்களில் உள்ளூர் அறிஞர்கள் அப்பாவித் தமிழர்களை வதைக்க ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ளும் லோக்கல் பட்டிமன்றங்கள்.


முன்னது காடு, மலை, ஆறு, குளம், கடல்தாண்டி திக்கெட்டும் தமிழ்மணம் பரப்பி, தொலைக்காட்சி ஊடகங்கள் வழியாக உங்கள் வீட்டு வரவேற்பறையிலேயே பார்வையாளர்களைக் குற்றுயிராக்கும் பட்டிமன்றங்கள்.


பின்னது உள்ளூர் வஸ்தாதுக்கள் எதிர் அணியினருடன் சமர் புரிந்து வெற்றிக்கொடி நாட்டி பார்வையாளர்களைக் குதூகலிக்க வைக்கும் அதே நேரத்தில் மேடையில் பேசும் பேச்சாளனின் மூடத்தனத்தை விரித்து வைத்த புகையிலையாக நம்முடைய கைகளில் திணித்து வைக்கும் பட்டிமன்றங்கள்.


முன் சொன்னதில், அதாவது சென்னை, மதுரை போன்ற இடங்களில் நடக்கும் அகிலஉலகப் புகழ் பெற்ற பட்டிமன்றங்களின் தலைப்புக்கள் அநேகமாக மிகவும் பொதுத்தன்மை கொண்டதாக இருக்கும். அத்தலைப்புக்களை ஒட்டி வாதாடுபவர்கள் எந்த நூலையும் படித்திருக்கத் தேவையில்லை. எந்தவிதமான முன்தயாரிப்பும் தேவைப்படாமல், தூங்கி எழுந்த பின்னரோ அல்லது படுக்கையில் எல்லாக் காரியத்தையும் முடித்துவிட்டோ அல்லது சாப்பிட்ட பின்னரோ அல்லது ஒரு இருட்டறையில் தன்னைத் தானே பூட்டிக்கொண்ட நிலையில் பல ஆண்டுகளைக் கழித்துப் பின்னர் என்றாவது ஒருநாள் விடுதலை ஆகிவிட்டுக்கூட நேராக வந்து இந்தப் பட்டிமன்றங்களில் கலந்து கொள்ளலாம். கொடுக்கப்பட்ட தலைப்புக்கும் பேச்சுக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்கிற அவசியம் ஏதும் கிடையாது.


பட்டிமன்றங்களில் நடக்க வேண்டிய வாதங்களை அவர்களே ஒத்திகை பார்த்துக் கொள்வார்கள். ""நான் உன்னை இப்படி மட்டம் தட்டுகிறேன். நீ என்னை இப்படிக் கேவலமாகப் பேசு'' என்று எல்லா ஒத்திகைகளும் திரை மறைவிலேயே தீர்மானிக்கப்படும்.


இந்தப் பட்டிமன்றங்களில் விவாதிக்கப்படும் விஷயங்கள் எல்லாம் மிகவும் பொருள் பொதிந்ததாக மேலோட்டமாகத் தோன்றும். மிகச் சாதாரணமாக, அதிகம் சிரமம் எடுத்துக்கொள்ளாமல் ஒரு சிறிய அளவிலான தர்க்க நியாயத்துடன் அதன் பொருளை உடைத்து உள்ளே சென்றால் அந்தப் பட்டிமன்றத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு மிகவும் கேனத்தனமாகத் தோன்றும்.


அந்தப் பட்டிமன்றங்களின் நடுவர்களும் பேச்சாளர்களும் அணித்தலைவர்களும் ஒன்றும் இல்லாத ஒரு விஷயத்தை மூக்கை விடைத்துக் கொண்டு உரக்கக் கூப்பாடுபோட்டு, உடம்பில் இருக்கும் நரம்புகளை எல்லாம் ஓரிடத்துக்குக் கொண்டு வந்து முறுக்கி கசரத்து வேலைகள் எல்லாம் செய்து கேட்பவர்களை புல்லரிக்கச் செய்வதில் வித்தகர்கள். அதுவும் தொலைக்காட்சிக்குப் படமாகிறது என்றால் அவர்கள் காட்டும் தில்லாலங்கடி வேலைகளுக்கு எவ்விதப் பஞ்சமும் இருக்காது. இந்தத் தொலைக்காட்சிப் படப்பிடிப்புக்கு என்றே ஆண்டவன் அனுப்பி வைத்தது போல மிக அழகான பல்வரிசையுடன் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க மிக அழகான பெண்களும், மூக்கைச் சிந்தி அழுவதற்காகவே பட்டுப்புடவை கட்டிக்கொண்டு வந்த மாமிகளும் பார்வையாளர்களில் பிரசன்னமாகி இருப்பார்கள். தொலைக்காட்சி ஒளிபரப்பில் இவர்களுடைய பிரசன்னமான சிரிப்புக்களும் கண்ணீர் மல்கிய மூக்கு சிந்தல்களும் அடிக்கடி காண்பிக்கப்பட்டு அந்த நிகழ்ச்சிக்கு வராத பார்வையாளர்களின் ஜென்மங்கள் சாபல்யம் அடைய வைக்கப்படும்.


இந்தப் பொங்கல், தீபாவளி, சுதந்திரநாள், மாடுவிரட்டு, காதலர் நாள், கிழவர்கள் நாள், குமரிகள் நாள், அரைக்கிறுக்குகள் நாள் போன்ற விசேஷமான நாட்களில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றங்களின் ஜொலிப்பே தனியாக இருக்கும். அநேகமாகப் பல இடங்களில் பேசிப்பேசித் தேய்த்த தலைப்புக்களே இருக்கும். ஒரே நடுவர் அல்லது ஒரே பேச்சாளரின் பேச்சைக் கேட்கக் குறைந்தது ஐந்து பட்டிமன்றங்களுக்கு அவர்கள் பின்னாலேயே சென்று பாருங்கள். அவர்கள் என்ன மாதிரியான உட்டாலங்கடி வேலைகள் செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியவரும்.



சரி. இப்போது உள்ளூர் பட்டிமன்றப் பாவலர்களைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். இவர்கள் செய்யும் அட்டூழியம் சொல்லி மாளாது. இவற்றில் யார் வேண்டுமானாலும் நடுவர் பதவியை ஏற்கலாம். யார் வேண்டுமானாலும் அணித்தலைவர் இடத்தைப் பிடிக்கலாம். யார் வேண்டுமானாலும் பேச்சாளர் ஆகலாம். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எதையும் படிக்கத் தேவையில்லை. எவ்விதத் தயாரிப்பும் தேவையில்லை. ஆழமான விஷயங்கள் எவை குறித்தும் கவலை இல்லை.


இந்த உள்ளூர்ப் பட்டிமன்றங்களில் பேச்சாளராவதற்கு மிக முக்கியமான தகுதி என்னவென்றால் மேடையில் எதையும் பேசுவதற்கான சுதந்திரத்தை எடுத்துக் கொள்வதற்காகக் கூச்சத்தை விடவேண்டும். வெட்கத்தை முற்றிலும் துறக்க வேண்டும்.


எதிர் அணியில் இருப்பவர்களை மிகவும் மட்டமாக விமர்சிக்க வேண்டும். நடுவரின் நிறம், உடலமைப்பு, தொந்தி, வழுக்கை ஈறான சகல அங்கலாவண்யங்களையும் விடம்பனம் செய்து கைதட்டல்கள் வாங்கவேண்டும். மேடையில் இருக்கும் யாருடைய மனைவியாவது பார்வையாளர்களில் இருந்து விட்டால் ""அக்காவைக் கேட்டேன். அவர் எதுக்கும் லாயக்கு இல்லே என்று சொன்னாங்க'' போன்ற திடுக்கிடும் தகவல்களையும் மேடையில் சொல்லலாம். எதிர் அணித்தலைவரையும் மற்ற அணிச்சிங்கங்களையும் ஏறுமாறாகப் பேசலாம். அவர்களும் பதிலுக்கு தங்கச்சி, தம்பி, மாமா, மச்சான் என்று உறவாடிக்கொண்டு இவர்களைப் பற்றி தர்மசங்கடமான தகவல்கள் எதையாவது அவிழ்த்து விடலாம்.


இந்த உள்ளூர்ப் பட்டிமன்றங்களில் பேச எவ்விதமான விவஸ்தையும் தேவையில்லை. எவ்விதமான பயிற்சியும் தேவையில்லை. எவ்விதமான படிப்பும் தேவையில்லை. நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு வேண்டியவர்களாக மட்டும் இருந்துவிட்டால் போதும்.


இந்தப் பட்டிமன்றப் பாவங்கள் குழந்தைகளையும் விட்டுவைப்பதில்லை. அவர்களை வயதுக்கு மீறிப்பேச வைத்து, அவர்கள் சிந்திக்கும் திறனை மீறிய விஷயங்களை, தமிழ்சினிமாவில் அசட்டுத்தனமாக சித்தரிக்கப்படும் குழந்தைகளைப்போல ஒரு போலியான பாவனையில், போலியான குரலில் அவர்களைப் பேசவைத்து அவர்களையும் இவர்களுடைய வழியிலேயே தொலைக்காட்சி விவாதங்களில் பேசுவதைப்போன்ற ஒரு பொய்யான பாவனைகளில் பேசவைத்துக் கைத்தட்டல்கள் வாங்கும் கொடுமைகளும் நடக்கின்றன.


இன்னும் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இந்தப் பட்டிமன்றங்களின் அடுத்த ஆபத்தான விளைபொருளான அரட்டை அரங்கங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றியும் கொஞ்சம் சீண்டலாம் என்று ஆசை. சொல்லி என்ன ஆகப்போகிறது? இவையெல்லாம் மண்ணுள்ளவரை, விண்ணுள்ளவரை, நீருள்ளவரை நிலமுள்ள வரை, காற்றுள்ள வரை நடந்து கொண்டுதான் இருக்கும். எப்போதாவது இப்படியும் இருக்கே என்று சொல்லிப்பார்க்கத்தான் இந்தக் கஷ்டம். ஆனால் மிகச்சில நல்ல பட்டிமன்றங்களும் இன்னும் இருக்கத்தான் இருக்கின்றன. நமக்குத்தான் பார்க்கவோ கேட்கவோ பாக்கியம் இதுவரை லபிக்கவில்லை. எல்லாம் சரி. அடுத்த பட்டிமன்றத்தில் எத்தனை பேர் என் முதுகில் டின் கட்டப்போகின்றார்கள் என்பதைப் பொ-றுத்து இருந்து பார்த்து, கேட்டு ஆனந்தம் அடையுங்கள்.


வடக்கு வாசல் டிசம்பர் 2008 இதழில் வெளியான கட்டுரை.