Tuesday, November 26, 2013

துரியோதனர்களும் துச்சாதனர்களும் சகுனிகளும்...

சில நிறுவனங்களில் அல்லது அமைப்புக்களில் தொடர்ந்து தவறு செய்பவர்கள் அல்லது கேப்மாரித்தனங்கள் செய்பவர்களுடன் சிலர் லஜ்ஜையில்லாமல் ஒட்டிக்கொண்டு திரிவார்கள். அந்த அமைப்புக்களில் பொறுப்பில் இருப்பவர்கள் அல்லது அதிகார மையங்களில் இருப்பவர்கள் என்ன தவறு செய்தாலும் அவர்களைக் கட்டிக் கொண்டு திரிவார்கள். மாலைகள் மாற்றிக் கொள்வார்கள். விருதுகளையும் பட்டங்களையும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டிருப்பார்கள். எந்தக் கேள்வியும் கேட்காமல் ஊழல் செய்பவர்களின் கால்களைக் கழுவி டு அந்தத் தண்ணீரைக் குடிப்பார்கள். தலையில் தெளித்துக் கொள்வார்கள். 

ஏதாவது ஒரு தருணத்தில் யாராவது அப்படி கேப்மாரித்தனங்கள் செய்பவர்களுடன் கோஷ்டி சேர்ந்து இருப்பவர்களை ஏதாவது கேள்விகள் கேட்க நேர்ந்தால் அந்த சொம்பு தூக்கிகள் எப்போதும் தயாராக வைத்திருக்கும் பதில் - “அந்த ஆள் அப்போது, அந்த சந்தர்ப்பத்தில் எனக்கு இந்த உதவி செய்தான். அவன் இல்லை என்றால் நான் நான் ஒன்றுமே இல்லை, அதனால் மட்டுமே அவன் செய்யும் எல்லா அக்கிரமங்களையும் வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டிருக்கிறேன். வேறு விதியில்லாமல் கூட இருந்து தொலைக்கிறேன்” என்று சமாதானம் சொல்வார்கள் அல்லது சொல்லிக் கொள்வார்கள். 

ஆனால் பொதுவாக உண்மையான காரணம் நிச்சயமாக இவர்கள் கூறிக்கொள்ளும் நன்றி உணர்ச்சி கிடையாது. 

இவர்கள் நிச்சயமாக கர்ணர்களாக இருக்க மாட்டார்கள். எந்தக் காலத்திலும் இவர்கள் சொல்லிக் கொள்வதைப் போல கர்ணனாக இருக்கவும் முடியாது.

தூண்டித் துருவித் தடவிப் பார்த்தால் ஒன்றை சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். அப்படிக் கேப்மாரித்தனம் செய்பவர்களுடன் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் அந்த நேரத்தில் கிடைக்கும் சில அல்ப லாபங்களுக்காகவும், அவர்களைப் பகைத்துக் கொள்ள இவர்கள் குலைநடுங்குவதால் மட்டுமே அப்படிக் கூட ஒட்டிக் கொண்டிருப்பார்கள். சில சில்லறை லாபங்களுக்காக மட்டுமே நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அவர்களுடன் அலைவார்கள். மற்றபடி இவர்கள் சொல்லும் அல்லது சொல்லிக் கொள்ளும் சமாதானம் வெறும் போலி வேடம்தான்.

துரியோதனர்களுடன் துச்சாதனர்களும் சகுனிகளும்தான் சேர்ந்து இருக்க முடியும். வேறு வழியில்லை.