Tuesday, November 16, 2010

குழந்தைகள் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது

இந்த ஆண்டு சாகித்ய அகாதமி அகில இந்திய அளவில், இந்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட (சாகித்ய அகாதமியினாலும் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் உள்ள குழந்தை இலக்கியப் படைப்புக்களுக்கு முதன்முறையாக விருது வழங்கியிருக்கிறார்கள். பால் ஸாஹித்ய புரஸ்கார் (சம்ஸ்கிருதம் அல்லது இந்தியை வெறுத்து ஆங்கிலத்தை வழிபடும் தமிழர்களின் வசதிக்கு - BAL SAHITHYA PURASKAAR) என அழைக்கப்படும் குழந்தை இலக்கியத்துக்கான விருது இந்த ஆண்டு முதன்முறையாக அறிவிக்கப்பட்டு குழந்தைகள் தினமான நவம்பர் 14ம் தேதியன்று டெல்லியில் வழங்கப்பட்டது.

தமிழ் மொழிக்காக குழந்தைகள் எழுத்தாளர் கமலவேலன் விருதைப் பெற்றார். அந்தோணியின் ஆட்டுக்குட்டி என்னும் இவருடைய குழந்தைகளுக்கான நாவலுக்கு இந்த ஆண்டின் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை வாங்கும் முதல் தமிழ் படைப்பாளி என்னும் சிறப்பைப் பெறுகிறார் கமலவேலன்.

தூத்துக்குடிக்காரரான கமலவேலன் வசிப்பது திண்டுக்கல். சொல்லப்போனால் 1961ல் எழுதத் துவங்கிய இவருடைய எழுத்துப்பணி இவர் படைப்புலகில் தன்னுடைய 50ம் ஆண்டினைத் துவங்கும் போது இந்த அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது. கண்ணன் மற்றும் பல இதழ்களில் குழந்தைகளுக்காக நிறைய எழுதியவர் கமலவேலன். முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக மட்டுமே தன்னுடைய படைப்புக்களை அர்ப்பணித்து இருக்கிற நல்ல மனம் கமலவேலனுக்கு இருக்கிறது. தன்னம்பிக்கை தந்த பரிசு, நம்பமுடியாத நல்ல கதைகள், மரியாதை ராமன் கதைகள், கம்ப்யூட்டரை வென்ற காரிகை, பாரத ரத்னாக்கள் மற்றும் பல குழந்தைகள் நாடகங்களையும் படைத்து இருக்கிறார். டாக்டர் நாராயணன், டாக்டர் அப்துல் கலாம் மற்றும் பல தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார்.

Sunday, November 14, 2010

ஒபாமாவின் இந்தியப் பணயம்

எல்லாக் காட்சி ஊடகங்களும், எல்லா அச்சு ஊடகங்களும், எல்லா வலைத்தளங்களும், ஒபாமா வருகை பற்றிப் பத்தி பத்தியாக பக்கம் பக்கமாகப் பேசி விட்டார்கள். நம்முடைய பொதுவுடமைச் சிங்கங்களும் அரசியல் புலிகளும் நரிகளும் எல்லாச் சுவர்களிலும் சுவரொட்டிகள் ஒட்டியாயிற்று.
ஒபாமாவும் மாமியுடன் வேண்டிய அளவு சிரித்து விட்டு ஊருக்குக் கிளம்பி விட்டார்.
ஒவ்வொரு அமெரிக்க அதிபரும் அவங்களோட ஆத்து மாமிகளும் இந்தியா வரும்போது செய்யும் சகல சடங்குகளையும் இவர்களும் சாங்கோபாங்கமாக செய்து முடித்து விட்டார்கள்.
இனி இந்தியாவின் பஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிந்து விடும். நாம் எல்லோரும் ஒழுங்காக ஆங்கிலம் பேசத் துவங்கி விடுவோம். தற்போதைக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கும் சூரியன் சுக்கிரமேட்டுக்கு நகர்ந்து வந்து பாகிஸ்தானுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கும். இனி அவர்கள் நல்ல புத்தியுள்ள தீவிரவாதிகளாக நம்முடைய கடற்கரையோரம் அனுப்புவார்கள். நமக்கு இடையில் உள்ள பாதகங்கள் அழியும். இப்படி எதையாவது எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

அகில இந்திய வானொலியின் பாஷையில் எல்லாம் சுமுகமாக முடிந்தது. அமெரிக்க அதிபரின் பயணம் சகலவகைகளிலும் வெற்றிப் பயணமாக அமைந்தது. நம்பிக்கையைத் தோற்றுவித்தது. நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது. இரு நாடுகளின் உறவு மேம்படும் என்று வேண்டுமானாலும் எழுதலாம். அல்லது நம்முடைய சிறுபத்திரிகைகளின் சம்பிரதாயப்படி படிக்கிறவர்கள் எல்லாம் இருக்கும் கொஞ்ச மசிரையும் பிய்த்துக் கொள்கிற மாதிரியும் எழுத முயற்சிக்கலாம். ஆனால் நான் கோதாவுக்கு சற்று தாமதமாக வந்திருக்கிறேன். அதனால் கொஞ்சம் யோசித்துத்தான் எதையாவது புரியாத மாதிரி எழுத வேண்டும்.