Tuesday, November 3, 2009

டெல்லித் தமிழ்ப் பள்ளிகளின் (பரிதாபக்) கட்டமைப்பு

ராகவன் தம்பி

தில்லித் தமிழ்க் கல்விக் கழகம் நடத்தும் தமிழ்ப் பள்ளிகளின் நிர்வாகக் குழுவுக்கான தேர்தல்களை அறிவிக்க வாய்ப்புக்கள் இருப்பதால் அந்தப் பள்ளிகளின் நிர்வாகம் பற்றி அதிகம் எழுத வேண்டாம் என்று நினைத்து இருந்தேன். அதை என்னுடைய அறிவிப்பிலும் வெளியிட்டு இருந்தேன்.

ஆனால் பலரும் தொலைபேசியிலும் நேரிலும் அப்படி எல்லாம் விட்டு விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். தேர்தலும் விரைவில் வரும் என்று தோன்றவில்லை. தேர்தலைத் தள்ளிப் போடுவதற்கான காரணங்கள் தயாராகி வருகின்றன என்று கேள்விப்பட்டேன்.

இதில் ஆச்சரியப்டுவதற்கு எதுவும் இல்லை. இப்படி எல்லாம் இல்லை என்றால்தான் சற்று அதிர்ச்சியாக இருக்கும்.

மேலும் அந்தப் பள்ளிகள் தொடர்பான பொதுநல வழக்கு ஒன்றை வடக்கு வாசல் இதழின் சார்பில் விரைவில் தொடுப்பதற்கு ஏற்பாடு செய்து வருகிறேன். டெல்லி மாநில அரசின் கல்வித்துறைக்கு எதிராக இந்த வழக்கைத் தொடுக்க ஆயத்தம் செய்து வருகிறேன். அதற்குத் தேவையான தகவல்களையும் திரட்டத் துவங்கி இருக்கிறேன். நிறையத் தகவல்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

அதற்கு நடுவில் ஓரிரண்டு கடிதங்களும் என்னிடம் வந்திருக்கின்றன. அவற்றையும் நேரம் வரும்போது இந்தப் பக்கத்தில் வெளியிடலாம் என்று இருக்கிறேன்.

தேர்தல் நடத்துவதாக இருக்கும் இந்த நேரத்தில் சில பள்ளிகளில் ஆண்டு விழாக்களை நடத்தியிக்கிறார்கள். இந்த ஆண்டு விழாக்கள் கண்டிப்பாகக் குழந்தைகளுக்காகவோ ஆசிரியர்களுக்காகவோ கொண்டாடப் பட்டதாகத் தெரியவில்லை. ஒரு சில அரசியல் லாப நோக்கங்கள் கருதி இந்த ஆண்டு விழாக்கள் கொண்டாடப் பட்டதாகத்தான் இந்தப் பள்ளிகளின் நிர்வாகக் குழுவில் இருக்கும் சில உறுப்பினர்களே சொல்கிறார்கள். இந்தப் பள்ளியின் ஆண்டுவிழாக்களி்ல் இந்தப் பள்ளிகள் திறம்பட நடத்தப்படுகின்றன என்று மேடையில் முழங்கிய செயல்வீரர்கள் தங்கள் குழந்தகளை இந்தப் பள்ளியி்யில் படிக்க வைக்கலாமே.

தங்கள் பிள்ளைகளை வசதி மிகுந்த கான்வெண்ட் பள்ளிகளில் படிக்க வைத்து மற்றவர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் அரசியல் விளையாட்டுக்கள் விளையாடுவதில் உள்ள சுகமே தனி இல்லையா? சரி. இப்போதைக்கு அவர்களை சற்று மறந்து விடுவோம்.

பள்ளிகளின் முதல்வர்கள் பாவம் அவர்கள் எல்லாவற்றுக்கும் தலையாட்டும் பொம்மைகளாக இருந்து தொலைக்க வேண்டி இருக்கிறது. இல்லையென்றால் இப்போது ஓய்வு பெற்ற சில முதல்வர்கள் நேர்கொள்ளும் சிறுமைகளை இவர்களும் எதிர்கொள்ள நேரிடும் என்பதால் இவர்கள் மேற்கொள்ளும் மௌனத்தை ஒருவகையில் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் சில நேரங்களில் மனது வெறுத்துப் போகிறது.

இதை எப்படி எழுதுவது என்று தவித்துக் கொண்டு இருந்தேன். சரியான வார்த்தைகள் கிடைக்க வில்லை.

இது இப்படி இருக்க நேற்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். டெல்லியின் தமிழ்ப் பள்ளிகளின் தற்போதைய கட்டமைப்பு என்ன என்று உனக்குத் தெரியுமா என்று கேட்டார்.

கட்டமைப்பு என்றால்?

Constitution என்று சொல்லிக் கொள்ளலாமா?

அந்த நண்பர் ஆங்கிலத்தில் சொன்னதை உங்கள் முன்பு அப்படியே சமர்ப்பிக்கிறேன்.

CONSTITUTION OF DTEA

RUTHLESS ADMINISTRATION
SPINELESS PRINCIPALS
HELPLESS TEACHERS
IRRESPONSIBLE PARENTS
PATHETIC CHILDREN

இன்னும் தொடரும்...




இந்தக் கட்டுரைக்கான எதிர்வினைகளை raghavanthambi@gmail.com என்னும் அஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.