Thursday, October 15, 2009

ஒரு அறிவிப்புஅன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

கடந்த ஓரிரு மாதங்களாக இந்தப் பக்கத்தில் தொடர்ச்சியாக எதையும் நான் எழுதவில்லை.

(அய்யோ... எத்தனை பிரகாசம் மற்றும் மகிழ்ச்சி உங்கள் முகங்களில்!)

இதற்கான முக்கியமான காரணம் ஒன்று இருந்தது.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலைநகரில் ஏழு தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அந்தப் பள்ளிகளின் மேலாண்மை மற்றும் செயல்பாடுகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை எற்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் ஒரு அறிவிப்பினை வடக்கு வாசல் இதழிலும் இணையதளத்திலும் வெளியிட்டு இருந்தோம்.

இதற்கான முக்கியமான காரணம் - பொது இடங்களுக்கு ஏதாவது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போதெல்லாம் யாராவது இந்தப் பள்ளிகளின் நிலை பற்றிய தன் கவலைகளையும் வருத்தங்களையும் ஆதங்கங்களையும் சொல்லிப் புலம்புவார்கள்.

சில தனிமனிதர்களின் சுயநலக் கூடாரம் போல இந்தப் பள்ளிகள் இயங்கத் துவங்கிவிட்டன என்று முறையிட்டனர் பலர்.

இந்தப் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் ஏதோ ஒருவகையில் ஒரு சோகக் கதையை சுமந்து கொண்டிருப்பதாகத் தலைநகரில் பரவலாகப் பேசிக் கொண்டார்கள்.

பலவகைகளில் நேர்கொண்ட சிறுமைகள் தாங்காது விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு இப்பள்ளிகள் இருக்கும் திசை நோக்கிக் கும்பிடு போட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடிப் போன ஆசிரியர்களின் கதைகள் தலைநகரில் உலவி வருகின்றன.

அதே போல பணியில் இருந்தும் பலவகைகளில் பழிவாங்கப்பட்டு சிறுமைகளைத் தாங்கி பணிபுரிந்து வரும் பல ஆசிரியர்களின் சோகக் கதைகளும் இங்கு உண்டு.தங்கள் பிள்ளைகளை நல்ல வசதியான கான்வெண்ட் பள்ளிகளில் சேர்த்து விட்டு இந்தத் தமிழ்ப் பள்ளிகளின் வழியாக தங்களின் அரசியல் சுயலாபங்களைக் கணக்கிட்டு காய் நகர்த்திக் கொண்டு வரும் செயல்வீரர்கள் பற்றிய விமர்சனமும் தலைநகரில் பரவலாக உள்ளன.

ஆனால் இவை எல்லாமே நடப்பு யதார்த்தத்தின் அடிப்படையில் சீற்றம் ஏதும் கொள்ளாது சிறு முணுமுணுப்புகளாக மட்டுமே தலைநகர் தமிழர்களிடையே உலவி வந்தன. இந்தப் பிரச்னையை ஒரு இதழியல் அறத்தின் வெளிப்பாடாக எடுத்துக் கொண்டு வடக்கு வாசல் இதழிலும் வடக்கு வாசல் இணையதளத்திலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டோம். தமிழ்ப் பள்ளிகளின் மேலாண்மை குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் கருத்துக்களைப் பதிவு செய்ய ஒரு வாய்ப்பு அளித்தோம்.

யாருக்காவது தங்களுடைய பெயர்களை ரகசியமாக வைத்துக் கொள்ள விருப்பம் இருந்தால் அதையும் அனுமதித்தோம். பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையில் அவர்களுடைய பெயர்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தோம்.

ஆனால் எதிர்வினைகள் அனுப்பிய பலரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்களுடன் தங்களுடைய கருத்துக்களை எங்களுக்கு அனுப்பினார்கள்.

ஒரு சிலர் அனுப்பி விட்டு முதலில் தங்கள் பெயர் வெளியிட வேண்டாம் என்றார்கள். நாங்கள் காத்திருந்தோம். ஒரிரு நாட்களுக்குப் பிறகு தங்கள் கடிதத்தை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு மதிப்பளித்து நாங்கள் அவர்கள் கடிதங்களை வெளியிடவில்லை.

ஒரு சிலர் மிகவும் தைரியமாக கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். அவற்றில் பல குற்றச்சாட்டுக்களை மிகவும் தைரியமாக அடுக்கியிருக்கிறார்கள். மிகவும் உணர்ச்சி வசப்பட்டு நிறைய எழுதியிருக்கிறார்கள். வெளியிட்டு இருந்தால் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கும். ஆனால் இதழியல் அறத்தின் அடிப்படையில் கடிதம் எழுதியவர்களின் எதிர்கால நலனைக் கருதி அந்தக் கடிதங்களை நாங்கள் வெளியிடவில்லை.

தற்போது தமிழ்ப் பள்ளிகளின் செயற்குழுவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்து விட்டது. தேர்தல் நடத்தச் சொல்லி நீதிமன்றம் அறிவுறுத்தியதாக செய்தி கிட்டியிருக்கிறது. தேர்தலுக்குத் தயாராகி வருகின்றது பள்ளி நிர்வாகம் என்று கேள்விப்பட்டோம்.

இந்நிலையில் தேர்தல் முடிவடையும் வரை தமிழ்ப் பள்ளிகளின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் பற்றி வடக்கு வாசல் இதழிலோ இணைய தளத்திலோ வெளியிடுவது சரியான காரியமாக இருக்காது என்று நினைக்கிறேன்.

பள்ளியின் தற்போதையை நிர்வாகக் குழு பற்றிய என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களும் எதிர்வரும் தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதையும் என்னுடைய தனிப்பட்ட சுதந்திரமாக வைத்துக் கொள்கிறேன்.

பெற்றோர்களே ஒரு சரியான முடிவெடுத்து நேர்மையான மற்றும் செயல்திறனுள்ள ஒரு நிர்வாகத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அரசியல் மற்றும் ஜாதி ரீதியான காரணங்கள் தேர்தலை முடிவு செய்யும் களங்களாக அமையால் பெற்றேர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்கான ஜனநாயக ரீதியான செயல்முறைகள் மற்றும் தர்மத்தின் அடிப்படையிலான செயல்பாடுகளை தற்போதைய நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.பள்ளிக்கான தேர்தல் பணிகள் துவங்கி விட்டதாகத் தெரிகிறது.

எனவே தலைநகரில் தமிழ்ப் பள்ளிகள் பற்றிய பதிவுகளை இந்தப் பக்கத்தில் வெளியிடுவதை இத்துடன் தற்போதைக்கு நிறுத்தி வைக்கிறோம்.

பல நண்பர்கள் தனிப்பட்ட வகையில் இந்தப் பக்கங்களில் புதிதாக எதையும் எழுதாதது குறித்து தங்களுடைய ஆதங்கத்தை தொலைபேசியிலும் மின்னஞ்சல்கள் வழியாகவும் பகிர்ந்து கொண்டார்கள்.
அவர்களுக்கு என்னுடைய நன்றி.

பல நூல் மதிப்புரைகளும் திரைப்பட விமர்சனங்களும் எழுத வேண்டி இருக்கிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் வழக்கமான ராகவன் தம்பி பக்கங்கள் பழையபடி தொடரும்.விதி யாரை விட்டது?

ராகவன் தம்பி

உங்கள் எதிர்வினைகளை raghavanthambi@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.