Friday, November 16, 2007

குப்த்ஹொத்யா (ரகசியப்படுகொலை) - அசாம் மாநிலத்தை அதிரவைக்கும் விசாரணை அறிக்கை

அசாம் மாநில அரசியலில் இப்போது ஒரு புதிய அமர்க்களம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு என்னுடைய வயதிருந்தால் அல்லது எனக்கு மூத்தவராக இருந்தால் எண்பதுகளின் துவங்கங்களில் அப்பாவியாக ஒரு முகம் அடிக்கடி ஊடகங்களில் தென்பட்டது நினைவுக்கு வரலாம். அஸ்ஸôம் மாநிலத்தில் ஒரு கல்லூரி மாணவனின் அரசியல் பிரவேசம் அகில இந்திய அரசியலில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. எங்கள் வயது இளைஞர்களுக்கு அப்போது அது மிகப்பெரிய விஷயமாகப் பட்டது.

உள்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அந்த மாணவர் தலைவர் எங்கள் அமைச்சரைப் பார்க்க வருகிறார் என்று செய்தி கிடைக்கும்போதெல்லாம் ஒரு சினிமா நடிகனைப் பார்க்கின்ற பரவசத்துடன் தூரத்தில் நின்று பார்த்து விட்டு அன்று இரவே பரபரப்புடன் நண்பனுக்குக் கடிதம் எழுதிய நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது. அந்த மாணவத் தலைவன் - பிரஃபுல்ல குமார் மஹந்தா இப்போது என்னைப் போலவே சற்று வயதாகி முன் மண்டையில் வழுக்கை விழுந்து கண்களை இடுக்கிக் கொண்டு சிரிக்கிறார்.

உங்களுக்கு என்னுடைய வயதிருந்தால் அல்லது எனக்கு மூத்தவராக இருந்தால் அஸ்ஸôம் தொடர்பான இன்னொரு நிகழ்வும் வேதனையுடன் உங்கள் நினைவில் இருக்கலாம்.

1983ல் அசாமின் நவ்கோன் மாவட்டத்தில் நெல்லி என்னும் இடத்தில் வெளிநாட்டவர்களுக்கு குறிப்பாக பங்களாதேஷ் முஸ்லிம்களுக்கு எதிராகக் கையில் எடுத்த படுபாதகமான கலவரத்தில் சுமார் 1800 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தப் படுகொலைகளை அரங்கேற்றிய பாதகர்கள் பெண்கள், சிறுவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை. அப்போது தினசரிகளில் இந்தப் படுகொலைகள் தொடர்பாக வந்த புகைப்படங்கள் பார்ப்பவர்களை கதிகலங்க வைத்தது. நல்ல வேளை. இப்போது போல அப்போது ஊடகங்கள் பரவலாக இல்லை. பல கோரக்காட்சிளைக் காண்பதில் இருந்து நாங்கள் அப்போது தப்பித்தோம். மிகக் கோரமான கொலைகள் அங்கு நிகழ்த்தப்பட்டன. மிகச்சரியாக ஞாபகம் இல்லை. இந்தியா டுடே என்று நினைக்கிறேன். மற்றும் உள்துறை அமைச்சகத்தின் நூலகத்தில் கிடைத்த சில வெளிநாட்டு சஞ்சிகைகளிலும் நெல்லி படுகொலைகள் குறித்த மிகக் கோரமான புகைப்படங்கள் காணக்கிடைத்தன.

என்னைப் போன்ற பயந்தாங்கொள்ளிகள் மற்றும் பலவீனமானவர்களைப் பதறவைத்த புகைப்படங்கள் அவை.


இவற்றைத்தவிர வன்முறைக்குப் பலியாகிப் பிழைத்தவர்கள் மற்றும் கொலையுண்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் தப்பிப் பிழைத்தவர்களை சந்தித்து மனித உரிமைக் கழகங்களும் ஆங்கில சஞ்சிகைகளுக்கும் பேட்டிகளைப் பிரசுரித்தார்கள். ஒவ்வொரு பேட்டியும் மனதைப் பதறவைத்தன.
இப்போதைய குஜராத் வன்முறைக்கு எந்தவகையிலும் குறையாத ஏன் சொல்லப்போனால் இன்னும் படுபாதகமான படுகொலைகள் - வன்முறைச் சம்பவங்களை உலகம் கண்டது அப்போது. அந்த நேரத்தில் அஸ்ஸôம் கணசங்ராம் பரிஷத் என்னும் அமைப்பும் ஆல் அஸ்ஸôம் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் என்னும் அமைப்புக்கள் அஸ்ஸôமில் மிகவும் பிரபலம் அடைந்து வந்தன. ஆல் அஸ்ஸôம் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் அமைப்புக்கு பிரஃபுல்ல குமார் மஹந்தா தலைவராக இருந்தார்.

இந்த இரண்டு அமைப்புக்களின் ஏற்பாட்டின் பேரில் அப்போது அசாமில் குடியேறியிருந்த அந்நிய நாட்டவர்களை (பங்களாதேஷிகள்) வெளியேற்ற மாபெரும் போராட்டம் ஒன்று வெடித்தது. அந்தப்போராட்டத்தின் ஒரு பகுதிதான் நெல்லியில் மேலே குறிப்பிட்டுள்ள படுகொலைகள் நிகழ்ந்தன. அப்போது ஹிதேஸ்வர் சைக்கியா அஸ்ஸôம் மாநிலத்தின் முதல்வராக இருந்தார். அவர் தலைமையில் இருந்த மாநில அரசு திவாரி கமிஷன் என்ற பெயரில் விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்தார். திவாரி கமிஷன் 1984ல் நெல்லி படுகொலைகள் தொடர்பாக ஒரு அறிக்கையை சுமார் 600 பக்கத்துக்கு சமர்ப்பித்தது.

ஆனால் இதுவரை அந்த அறிக்கை அஸ்ஸôம் மாநில அரசு மற்றும் மைய அரசினால் இன்று வரை மிகப்பெரும் ராஜரகசியமாகப் போஷிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடந்த பதினெட்டு ஆண்டுகளாக அரசின் தூசு படிந்து கிடக்கும் எத்தனையோ கோப்புக்களின் குவியலில் இந்த அறிக்கையும் தூங்கிக்கொண்டு இருக்கலாம் என்கிறார்கள்.

ஆனால் நெல்லி கொடுமைகள் இன்றும் அசாம் மாநிலத்தின் சிறுபான்மையினரால் மிகவேதனையுடன் நினைவு கூரப்படுகிறது. (சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு பழைய ஆவணப்படத்தில் கூட அந்தக் கலவரத்தில் காயப்பட்டு உயிர்பிழைத்த ஒருவர் கண்களில் பீதிபொங்க அந்த சம்பவத்தை விவரித்து வந்தது முதுகுத் தண்டில் குளிரெடுக்க வைத்தது).

அந்த நெல்லி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்போது கிடைத்த ஈட்டுத்தொகை வெறும் ஐந்தாயிரம் ரூபாய்கள். ஆனால் அந்தக் கலவரத்தை நிகழ்த்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அஸ்ஸôம் கணசங்ராம் பரிஷத் 1985ல் நடைபெற்ற தேர்தலில் வென்று பிரஃபுல்ல குமார் மஹந்தாவின் தலைமையில் ஆட்சியமைத்தது. இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டதாக (!) தன் கட்சியைச் சேர்ந்த பலருக்கு பெருத்த ஈட்டுத்தொகையை ஏற்பாடு செய்ததாக அஸ்ஸôமின் பத்திரிகைகள் மஹந்தா மீது குற்றச்சாட்டுக்களை வைத்தன.

மஹந்தா தொடர்பான இன்னொரு சர்ச்சை சமீபத்தில் அசாம் மாநில அரசியலை வெகு பரபரப்பாக்கி இருக்கிறது.

பல ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கே.என்.சைக்கியா கமிஷன் அறிக்கை தற்போது மாநிலத்தின் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கமிஷனின் பின்னணி பற்றிச்சொல்லியாக வேண்டும்.

1996ல் அஸ்ஸôம் கணசங்ராம் பரிஷத் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி ஆட்சி ஏற்பட்டது. இந்தக் கூட்டணி அமைத்த அமைச்சரவையில் மஹந்தா உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது இந்திய ராணுவத்தின் தலைமையில் யூனிஃபைடு கமாண்ட் ஸ்ட்ரக்சர் என்னும் படையை மஹந்தாவின் கீழ் இருந்த மாநில உள்துறை நிர்வாகம் அமைத்தது. இந்தப் படை அப்போது அஸ்ஸôம் அரசுக்கு மிகப்பெரும் தலைவலியாக இருந்த உல்ஃபா தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமைக்கப்பட்ட படை. இந்தப் படை, குப்த்ஹொத்யா (ரகசியக் கொலை) என்ற பெயரில் விசாரணை, கைதுகள் எதுவுமின்றி உல்ஃபா போராளிகளை பரலோகத்துக்கு அனுப்பிவைத்த பரமகைங்கர்யத்தை செய்தன என்று குற்றம் சாட்டப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட உல்ஃபா போரளிகள் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் இந்த விஷயத்தைப் படுகெட்டியாகப் பிடித்துக்கொண்டு அப்போதைய அரசுக்கு எதிராகப் போராட்டங்களைத் துவக்கின. மே, 2001ல் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த ரகசியப்படுகொலைகளை விசாரிக்க ஜஸ்டிஸ் மீரா சர்மா என்னும் நீதியரசர் தலைமையில் ஒரு கமிஷனை அமைத்தது.
நவம்பர் 2002ல் ஜஸ்டிஸ் மீரா சர்மா, அப்போது முதல்வராக இருந்த தருண் கோகோய் தலைமையில் இருந்த அரசு போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்று குற்றம் சாட்டி விசாரணையில் இருந்து விலகினார்.

ஜஸ்டிஸ் ஜே.என்.சர்மாவின் தலைமையில் மீண்டும் விசாரணைக் கமிஷன் தொடர்ந்தது. ஒரு பதினொரு வழக்குகளைக் கணக்கில் கொண்டு விசாரணையைத் தொடர்ந்தார் சர்மா. ஆகஸ்டு 2005ல் அவர் சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில் மஹந்தாவின் மீது எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்தார் சர்மா. கோகோய் இந்த விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்தார். சர்மா மேற்கொண்ட விசாரணையில் பல குளறுபடிகள் இருந்தன என்று அந்த அறிக்கையைத் தூக்கிக் குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு மீண்டும் இன்னொரு விசாரணைக் கமிஷனை அமைத்தார். செப்படம்பர் 2005ல் அமைக்கப்பட்ட இந்த விசாரணைக் கமிஷன் இப்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் ஜஸ்டிஸ் கே.என்.சைக்கியா தலைமையில் அமைக்கப்பட்டு சுமார் 35 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

தற்போது சமர்ப்பிக்கப்பட்டு இருக்கும் இந்த கே.என்.சைக்கியா விசாரணைக் கமிஷன் அறிக்கையின் படி அப்போதைய உள்துறை அமைச்சர் மஹந்தா அந்த ரகசியப் படுகொலைகளில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார் என்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முகமூடி அணிந்த மனிதர்கள் சந்தேகப்படும் நபர்களின் இல்லங்களுக்கு நடுநிசியில் சென்று கதவைத்தட்டுவார்களாம். கதவைத் திறந்ததுமே யார் என்ன என்று கேட்காமல் அவர்களைக் குடும்பத்தோடு வெளியே தரதரவென்று இழுத்து வந்து நடுத்தெருவில் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள். அல்லது குடும்பத்தோடு சுட்டுக்கொன்று பிணங்களை கண்காணாத இடங்களில் வீசி எறிந்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளது இந்த அறிக்கை. உல்ஃபா இயக்கத்தின் ஆள்காட்டிகளின் துணையுடன் மஹந்தாவின் ஆணையின் பேரில் போலீஸ்துறை இந்தப் படுகொலைகளில் ஈடுபட்டன என்றும் நேரடியாகக் குற்றம் சாட்டுகிறது சைக்கியா அறிக்கை.


தற்போது கௌஹாத்தி உயர்நீதிமன்றம், சைக்கியா அறிக்கையுடன் முன்னர் கோகோய் அரசினால் நிராகரிக்கப்பட்ட, மஹந்தாவுக்கு ஆதரவாக சமர்ப்பிக்கப்பட்ட ஜஸ்டிஸ் ஜே.என்.சர்மா கமிஷன் அறிக்கையினையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.
மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தல்கள் மும்முரமாக இருக்கும் நேரத்தில் இப்படிப்பட்ட ஒரு அறிக்கையை சட்டசபையில் வெளியிட்டிருப்பது காங்கிரஸ் கட்சியின் உள்நோக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது என்று கர்ஜிக்கிறார் மஹந்தா. இந்த அறிக்கையின் குற்றச் சாட்டுக்களை மீறி காங்கிரஸ் கட்சியை பஞ்சாயத்துத் தேர்தலில் மண்கவ்விட வைப்பேன் என்று சூளுரைக்கிறார்.

காங்கிரஸ் கட்சி இந்த அறிக்கையை மிகப்பெரும் ஆயுதமாக மஹந்தாவுக்கு எதிராகக் கையில் எடுத்திருக்கிறது.

அசாம் மாநிலத்தில் மாணவர் தலைவனாக ஒரு இயக்கத்தைத் துவக்கி அந்த இயக்கத்தை ஆட்சி பீடத்தைக் கைப்பற்றும் அளவுக்குக் கொண்டு சென்ற மஹந்தாவுக்கான எதிராக அவருடைய கட்சியிலேயே ஒரு சமயம் மிகப்பெரும் எதிர்ப்புக்கள் வலுத்தன. ஒரு பெண்ணுடன் அவருக்கிருந்த தொடர்பைக் காரணமாகக் காட்டி அவரைக் கட்சியில் எந்தப் பதவியை வகிப்பதில் இருந்தும் விலக்கி வைத்தார் அவருடைய கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர் கோஸ்வாமி. இவை போன்ற உள்ளடி அரசியல்களை எதிர்கொண்டு அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அரசிலையும் கவனித்து வந்தார் மஹந்தா.

இப்போது இந்தக் கமிஷன் அறிக்கை மஹந்தாவுக்கு மாநிலத்தில் இன்னும் ஒரு பெரிய நெருக்கடியை முன்வைத்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

எது எப்படியோ, குற்றம் சாட்டப்பட்டவர்களும் குற்றம் சாட்டும் காங்கிரஸ் கட்சியும் அரசியல் விளையாட்டுக்களை மாநிலத்தில் ஒருவிதமான குதூகலமான மனநிலையில் விளையாடிக்கொண்டு இருக்கின்றன.
இந்த விளையாட்டில் மைய அரசும் தென்கிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்டுகிறோம் என்று சொல்லி பல கோடிக்கணக்கில் செலவழித்து உட்டாலங்கடி விளையாட்டைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நெல்லியில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களை இழந்து வாடிய குடும்பங்களும் இந்த குப்த்ஹொத்யாவில் நடுத்தெருவில் இழுத்துக்கொல்லப்பட்ட போராளிகள் மற்றும் போராளிகள் எனச் சித்தரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் நீதிக்காகவும் ஈட்டுக்காகவும் ஒரு சாதாரண மனிதன் வாழவேண்டிய மிகச்சாதாரணமான வாழ்வுக்கும் ஏங்கித்தன் நாட்களைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

Monday, November 12, 2007

பேய்கள் ஆட்சியில் பிணம் தின்னும் சாத்திரங்கள் - பாகிஸ்தான் அரசியல் நெருக்கடி



பாகிஸ்தானில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு படு அமர்க்களப்பட்டு வருகிறது. இதற்கு எதிராகப் போராடும் வழக்கறிஞர்களை வாய் மேலேயே நாலு போடு போட்டு இழுத்துப்போகிறார்கள். மிகப்பெரிய வழக்கறிஞர்கள், படைப்பாளிகள், பத்திரிகையாசிரியர்கள், போராளிகளை பிக் பாக்கெட் திருடர்களைப் போல இழுத்துக் கொண்டு போவதை ஊடங்களில் காண்கிறோம்.

புட்டோவின் திருமகள் இந்த அமளியில் தன்னால் ஆன அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வருகிறார்.< பல ஆண்டுகளாக இவரும் இவருடைய மணாளனும் பாதி பாகிஸ்தானை அடித்து உலையில் போட்டு சாப்பிட்டவர்கள் என்கிற குற்றச்சாட்டில் பல வழக்குகள் இவர்கள் மீது நிலுவையில் உள்ளது. இவர்களும் இப்போது நீதி கேட்டு நெடும்பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.

சுமார் எட்டு ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த மாத இடையில் பெனாஸீர் புட்டோ நாடு திரும்பியபோது நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் சுமார் 140 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்திருக்கிறார்கள். இது உலக அளவில் அதிர்ச்சியை படுத்திய சம்பவம். மதவாதமும் சர்வாதிகாரமும் கைகோர்க்கும் தருணத்தில் ஜனநாயகத்துக்கு நேரும் விபத்துக்கள் இவை. கன்னடத்தில் ஒரு பழமொழி உண்டுஹ÷ச்சு முண்டே மதுவேனல்லி உண்டோரு ஜாணே... என்பார்கள்.அதாவது பைத்தியத்தின் கல்யாணத்தில் முதலில் சாப்பிட்டவன் சாமர்த்தியசாலியாம். பிறகு அந்தப் பைத்தியம் கல் கொண்டு எறியலாம். முதலில் சாப்பிட்டு ஓடுபவன் புத்திசாலி. அங்கு பல சாமர்த்தியசாலிகளும் புத்திசாலிகளும் முதல் பந்தியில் உட்காரத் துவங்கிவிட்டார்கள்.

சரி. எதுக்குக் கன்னடப் பழமொழியெல்லாம்? நம்மூரிலேயே சொல்வார்களே! எரிகிற வீட்டில் பிடுங்குவது என்று. வீடு எரியத் தொடங்கி விட்டது. ஆளுக்கொரு பக்கம் பிடுங்கத் தொடங்கி விட்டார்கள். இந்த நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியதால் சத்தம் போடாமல் மீண்டும் அதிபர் பதவிக்கு வருகின்ற நோக்கத்தோடு பெனாஸீர் புட்டோவுடன் ஒரு உட்டாலங்கடி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டார் முஷாரஃப்.





அதாவது பெனாஸீரின் அரசியல் எதிரியான நவாஸ் ஷெரீஃப் காலத்தில் அவர் மீது தொடுக்கப்பட்ட மெகா ஊழல் வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான ஒரு அவசர சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார் முஷாரஃப். அடுத்து பாகிஸ்தானில் இறையருளால் தேர்தல் நடந்தால் அதில் பெனாஸீர் பங்கு கொண்டு பிரதமர் ஆவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம் என்று சொல்லத் துவங்கிய நேரத்தில் குண்டு வெடிப்பு ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கிறது.

இந்தக் குண்டு வெடிப்பு பாகிஸ்தானில் பாமரர்கள் இடையே பெனாஸீர் மீது ஒரு அனுதாப அலையை வீச வைத்திருக்கிறது. ஒரு கண்ணகி ரேஞ்சில் இப்போது அவர் நீதிகேட்டு நெடும்பயணம் துவங்கியிருக்கிறார். இறையருளால் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அடுத்த பிரதமர் இந்த அம்மணியாகவும் இருக்கலாம் என்கிறார்கள்.நீண்ட நாட்களாக பாகிஸ்தானில் ஒரு விநோதமான விஷயம் உண்டு. அங்கு அவர்கள் தங்களை சொல்லிக் கொள்வது பாராளுமன்ற ஜனநாயம் என்று. ஆனால் ஜெனரல் அயூப்கான் காலத்திலிருந்து அங்கு சாங்கோபாங்கமோ நடைபெறுவதோ ராணுவ சர்வாதிகாரிகளின் ஆட்சிதான்.

இந்தக் கேவலமான மரபில் முஷாரஃப் ராணுவம் மற்றும் சிவில் அதிகாரங்களைத் தன் கையில் ஏந்தியிருந்தார். சொல்லப்போனால் முஷாரஃப் பாகிஸ்தானில் அதிகாரத்துக்கு வந்தபிறகுதான் அங்கே இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகளுக்கு பெரும் ஊக்கம் கிடைத்திருக்கின்றன. ""ஓ ராஜா கா ஸôலா'' என்பார்கள். அதாவது அவர், ராஜாவின் மச்சினர். என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்பார்கள். அது போல, இந்த ராஜா கா ஸôலாக்கள் பண்ணாத அழிச்சாட்டியமே கிடையாது எனலாம்.

முஷாரஃப் பதவி ஏற்ற கையோடு பெனாஸீரையும் நவாஸ் ஷெரீஃபையும் பாகிஸ்தானை விட்டுத் துரத்தி ஜனநாயக மரபினை நிறுவினார். லஷ்கர்களின் கொட்டம் அங்கு அதிகரித்தன. பாகிஸ்தானின் பழங்குடியினர் மிகுதியாக வசிக்கும் வடக்குப்பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைப்புக்கள் அங்கு நிர்வாகம் மேற்கொள்வதில்லை. முஷாரஃபினால் நியமிக்கப்பட்ட தாதாக்களே அங்கு நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள். லஷ்கர் என்னும் தீவிரவாத அமைப்பும் ஆப்கானிஸ்தானின் தாலிபான்களும் அங்க கோலோச்சுகின்றனர்.

குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து போடுவதும் தடுப்பூசிகள் போடுவதும் பெண்கள் படிப்பதும் மதவிரோதம் என்று அங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களின் தாடிகளின் நீளமும் பெண்களின் சல்வார் உடைகளும் அங்கு அளந்து பார்த்து அனுமதிக்கப்படுகின்றன.வடமேற்கு எல்லையில் உள்ள பஷ்டூன்கள் இப்போது அரசுக்கட்டுப்பாட்டில் இல்லை. தங்களுக்கென்று தனிநாடு வேண்டுமென்று போராடிக்கொண்டிருக்கிறார்கள் அந்த ஊர்க்காரர்கள். அங்கு அவர்கள் கேட்பது போல தனிநாடு அமைந்தால் பயங்கரவாதிகளுக்கு மிகப்பெரிய புகலிடமாக அது மாறிவிடும் என்று அமெரிக்காவுக்கு ப் பீதி கண்டுள்ளது. இங்கு ஆட்சி நடத்தும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில தாதாக்களுக்கும் அவர்களின் கட்சிக்கும் அல்கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதே போல, ஸன்னி, ஷியா முஸ்லிம் பிரிவினர்களிடையே நடைபெற்று வரும் மோதல்கள் முஷாஃப்புக்கு மிகப்பெரும் தலைவேதனையைத் தது வருகிறது.முஷாரஃப் பாடுதான் ரொம்பத் திண்டாட்டம் இப்போது. ஒரு புறம் தன்னுடைய எஜமானர்களான அமெரிக்கர்களைத் திருப்திப்படுத்த வேண்டும். அதேவேளை அங்கு தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள அடிப்படைவாத, தீவிரவாத அமைப்புக்களையும் ஆதரிக்க வேண்டும்.

அமெரிக்க எஜமானர்கள் ஆணைக்கு அடிபணிரûடிந்து, பிப்ரவரியில் தேர்தல் நடத்தப் போவதாக முஷாரஃப் அறிவித்து இருக்கிறார். அரசியலில் மாற்றுக் கருத்து கொண்டவர்களைப் பல இடங்கில் ஆளொழிப்பு வேலைகள் ஏற்கனவே துவங்கி விட்டதாகச் சொல்கிறார்கள். நீதிபதிகள் முதற்கொண்டு வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார்கள். அரசியல் எதிரிகள் பந்தாடப்படுகிறார்கள். பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு அமெரிக்காவே முழுக்கக் காரணம் என்று பலர் குற்றம் சாட்டுகிறார்கள். ஆப்கானிஸ்தானத்துக்கு ஆப்பு வைக்க வேண்டும் என்று பாகிஸ்தானில் சில தீவிரவாத அமைப்புக்களை ஊக்குவித்தார்கள். இப்போது அவர்கள் வளர்த்து விட்ட பூதம் அவர்கள் தலைமீது கைவைத்துப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறது. அதனால் இப்போது மிதவாத சக்திகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறது அமெரிக்கா. முஷாரஃப்புக்கும் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலை உண்டாகி விட்டது.

அவர் அறிவித்த நெருக்கடி நிலை அவருக்கு அவரே வைத்துக்கொண்ட ஆப்பாக இந்தியாவிலிருந்து பார்க்கிறார்கள்.இன்னொரு விஷயத்தையும் இங்கு நாம் கொஞ்சம் பார்த்தால் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கும்.ஏறத்தாழ 32 ஆண்டுகளுக்கு முன்பு சற்றேறக்குறைய இதேபோன்ற ஒரு நிலை இந்தியாவிலும் இருந்தது. தன்னுடைய அதிகாரத்தை நிர்ணயிக்கும் தேர்தலைப்பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முட்டுக்கட்டை போடவே முஷாரஃப் இந்த நெருக்கடி நிலையை அறிவித்து இருக்கிறார்.



ஏறத்தாழ இதே ரீதியில் 1975ல், இந்திரா காந்தி தன்னுடைய தேர்தலில் மிகப்பெரும் ஊழல் நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்று குற்றம் சாட்டி அவருடைய தேர்தல் வெற்றி செல்லாதது என அறிவித்தது அலகாபாத் உச்சநீதிமன்றம். ஆனால் அவர் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்றும் தீர்ப்பு அளித்தது. இந்திரா காந்தி அம்மையார் உச்சதிமன்றமாவது வெங்காயமாவது, தானே எல்லாவற்றுக்குமான உச்ச்ச்ச்ச்ச்ச நீதி மன்றம் என்ற நினைப்பில் இதே போல நெருக்கடி நிலையை அறிவித்தார். தேசம் மீண்டும் ஒருமுறை இருளில் சூழ்ந்தது. அரசியலில் மாற்றுக் கருத்து கொண்டவர்கள் ஒடுக்கப்பட்டனர். பல அப்பாவிகள் ஆளொழிப்பு செய்யப்பட்டனர். பேய்கள் ஆட்சியில் சாத்திரங்கள் பிணம் தின்றன.இப்போது பாகிஸ்தானிலும் அதே நிலைதான்.




ஒருவேளை அதனால்தான் இந்தியக் காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானில் நடப்பது குறித்து அதிகமான அளவில் அதிர்வுகள் இல்லாது மிக மிக மெல்லிய குரலில் தன் மேலான கருத்துக்களைக் கூறிவருகிறதோ என்று ஐயப்படுகிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.




Saturday, November 10, 2007

துக்கிணியூண்டு தீர்த்தமும் பிரவாகமெடுத்த அரசியலும்...

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பாஜக அரசில் மைய நிதியமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறைகளில் அமைச்சராக இருந்தவர் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங். அரசியலில் சேருவதற்கு முன்பு இந்திய ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றியவர். 2001ல் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. தற்போது மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.


கடந்த அக்டோபர் 31ம் தேதியன்று ராஜஸ்தான் மாநிலத்தின் ஜúஸôல் என்ற ஊரிலுள்ள தன் வீட்டில் முக்கிய விருந்தினர்களுக்கு ஒரு விருந்து அளித்தார் ஜஸ்வந்த் சிங்.இந்த விருந்தில் கலந்து கொண்டவர்கள் யார் என்றால், ராஜஸ்தான் மாநிலத்தின் கல்வி அமைச்சர் கன்ஷியாம் திவாரி, நலத்துறை அமைச்சர் மதன் தல்வார், முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் பைரோன் சிங் ஷெகாவத்தின் மருமகன் மற்றும் தொழில்துறை அமைச்சர் நர்பத்சிங் ராஜ்வி, அரசு தலைமைக் கொறடா மகாவீர் பிரசாத் ஜெயின், பாஜக தேசிய துணைத் தலைவர்கள் லலித் கிஷோர் சதுர்வேதி, ரகுபீர் சிங் கௌஷல், சட்டமன்ற உறுப்பினர்கள் சங்கர் சிங், ராஜ்புரோஹித், ஜோகேஷ்வர் கார்க் ஆகியோர் இந்த விருந்தில் கலந்து கொண்ட பெரும்புள்ளிகள்.


அங்கு ஓபியம் கலந்த போதை பானம் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டதாக ஜஸ்வந்த் சிங் மீதும் அவருடைய ஒன்பது சகாக்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அளித்த முறையீட்டின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

5 கிராம் அளவுக்கு மேற்பட்ட ஓபியம் போன்ற போதை வஸ்துக்களைப் பயன்படுத்துவது போதைப் பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இக்குற்றத்துக்குக் குறைந்தது 10 ஆண்டுக்கால சிறைத்தண்டனை வழங்கப்படும். இதன்படி இந்த விருந்தில் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது ஓபியம் கலந்த திரவம் என்று நிரூபிக்கப்பட்டால் ஜஸ்வந்த் சிங்குக்கும் அவருடைய சகாக்களுக்கும் குறைந்தது 10 ஆண்டுக்கால சிறைவாசம் கிடைக்கும்.


இந்த விருந்து குறித்து முதலில் காவல் நிலையத்தை அணுகியிருக்கிறார் ஓம் பிரகாஷ் பிஷ்ணோய் என்கிற உள்ளூர் காரர். அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்காததினால் ஜோத்பூர் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கினை உடனே விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி இப்போது உத்தரவிட்டுள்ளார்.


வடக்கில் அரசியல்வாதிகள் அளிக்கும் விருந்துகள் மிகவும் மனோரம்மியமாக இருக்கும். பீகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பல அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் கைத்தடிகள் அளிக்கும் விருந்துகளில் பல விருந்தினர்கள்உரிமம் பெறாத துப்பாக்கிகள் மற்றும் பெரிய நாட்டுத் துப்பாக்கிகளை வைத்து மிகவும் அநாயாசமாக வானில் சுட்டுக் கொண்டாடுவார்கள்.
அப்படிப்பட்ட சில விருந்தினர்களில் சில அப்பாவிகள் தவறுதலாகக் குண்டடிபட்டு சிவலோகம் மற்றும் விஷ்ணுலோக பிராப்தி அடைந்த சம்பவங்களும் உண்டு. போதை விஷயங்கள் தவிர, ரிகார்டு நடனமாடும் நர்த்தகிகளின் இடுப்பை அளந்து அளந்து நடனமாடும் அரசியல் தலைவர்களும் இவை போன்ற வட இந்திய விருந்து வைபவங்களில் காணக்கிடைக்கும் அரிய காட்சிகள்.


ஜஸ்வந்த் சிங் அளித்த விருந்தில் அப்படிப்பட்ட விஷயங்கள் இல்லையென்றாலும் வேறு வகையில் மிகவும் பரபரப்பாக வடக்கே பேசிக்கொள்ளப்பட்ட விஷயம் இந்த ஓபியம் வழங்கப்பட்ட விஷயம். இந்த விருந்துக் காட்சியை பல வட இந்திய ஊடகங்களில் சென்ற வாரம் அடிக்கடி காண்பித்தார்கள். தொலைக்காட்சிகளில் நமக்குக் காணக்கிடைத்த காட்சி என்னவென்றால் நம்ம ஊர் பெருமாள் கோவிலில் கொடுப்பது போல ஒரு உத்தரணியில் துக்கிணியூண்டு தீர்த்தம் கொடுக்கிறார்கள். இங்கு ஒரு சிறிய மாற்றம் என்னவென்றால் பெருமாள் கோவிலில் நாம் வாங்கிக் கொள்வோம். அந்த விருந்தில் ஜஸ்வந்த் சிங் அந்தத் துக்கிணியூண்டு தீர்த்தத்தைத் தன் கையில் வாங்கிக் கொள்கிறார். விருந்தினர்கள் அதை அவருடைய கையில் இருந்து பயபக்தியுடன் உறிஞ்சிக் குடிக்கிறார்கள். இது ராஜஸ்தானின் டாகூர் வம்சத்து விருந்தோம்பல் முறையாம். அந்தத் துக்கிணியூண்டு தீர்த்தத்தில்தான் ஓபியம் என்னும் போதை மருந்து கலந்து இருக்கிறார்கள் என்று புகார் கூறப்பட்டது.


ஊடகங்கள் இதுகுறித்துக் கேட்ட போது மிகவும் கடுமையாக அதை மறுத்தார் ஜஸ்வந்த் சிங்.தன்னுடைய மகன் மனவேந்திரா மக்களவை தேர்தலில் வென்றதற்கும் தனக்குப் பேத்தி பிறந்ததைக் கொண்டாடும் விதமாகவும் இந்த விருந்தினைத் தன் முன்னார்கள் வாழ்ந்த வீட்டில் ஏற்பாடு செய்ததாகவும் நிருபர்களிடம் கூறினார் ஜஸ்வந்த் சிங். அந்த விருந்தில் பரிமாறப்பட்டது கங்கை ஜலம், வெல்லம் மற்றும் சிறிது தேனீர் கலந்த பானம்தான் என்றும் அதனை அபின் என்று திரித்துக் கூறுவது அரசியல் விளையாட்டு என்றும் மறுக்கிறார். இதற்காகவே காத்திருந்ததுபோல, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியினர் இவரை மேலவை உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக விலக்கவேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவருக்கு மனுக்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.


இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு எதிரான கோஷ்டிகள்.


முதல்வரின் தூண்டுதலிலேயே இப்படி ஒரு வழக்கு தொடரப்பட்டது என்றும் பேசிக்கொள்கிறார்கள்.




ஆனால் ஒரு சந்தேகம். விருந்து முடிந்தது. எல்லோரும் வாயைத் துடைத்துக்கொண்டு வீட்டுக்குப் போயும் நாட்களாகிவிட்டன. போதைத் தடுப்புப் பிரிவுப் போலீசார் விசாரணையை எங்கிருந்து எடுத்துச் செல்வார்கள்?

விருந்தில் பரிமாறப்பட்ட அந்த திரவத்தை யாராவது எங்காவது கைப்பற்றி வைத்து இருக்கிறார்களா? அப்படிக் கைப்பற்றி வைத்திருப்பதாக சொன்னாலும் அது ஒரு சாட்சியமாக ஜஸ்வந்துக்கு எதிராக நிரூபிக்கப்பட வாய்ப்பு உண்டா?


அந்தப் பெருமாள் கோயில் தீர்த்தம் போல் வழங்கப்பட்ட திரவத்தில் கலந்திருந்தது உண்மையிலேயே கங்கா ஜலம், வெல்லம், தேனீர்தானா அல்லது இவர்கள் குற்றம் சாட்டுவது போல அபினும் கலந்திருந்ததா அல்லது அரசியல் மட்டும் கலந்திருக்கிறதா என்பதை எப்படிக் கண்டுபிடிக்கப்போகிறார்கள்?

Friday, November 9, 2007

தலித் எழுச்சியின் முதல் தடம் - அயோத்திதாச பண்டிதர்

தொண்டை மண்டல வல்ல காளத்தி தெய்வப்புலமை. வைத்திய சிம்ஹம். சங்கை கவிராஜ பண்டிட் க.அயோத்தி தாஸ தம்ம நாயகர் - ஸ்ரீலஸ்ரீ அயோத்தி தாச பண்டிதர் வாழ்ந்த காலம் 1845 லிருந்து 1914 வரை.

நீலகிரியை சோந்த அயோத்தி தாசர் பிறப்பால் ஆதி திராவிட வகுப்பை சேர்ந்தவர். தமிழகத்தின் அரசியல் அரசியல் சரித்திரத்தில் மிக நீண்ட காலம், அதாவது சுமார் எண்பது ஆண்டுகளுக்கு மேலாக இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரு மாபெரும் மனிதர் அயோத்திதாசர் என்று சொன்னால் அது மிகையான வார்த்தையாக இருக்காது.

தமிழ்ச் சூழலில் இவை போன்ற காரியஙகள் துரதிருஷ்டவசமாக அதிர்ச்சி தரும் காரியமாக அமைவதில்லை. சமத்துவம். பகுத்தறிவு. நவீனத்துவம் முதலான கொள்கைப் போக்குகளில் தமிழக அளவில் பெரியாருக்கும் தேசிய அளவில் அம்பேத்கருக்கும் முன்னோடியாக விளங்கியவர் அயோத்தி தாசர். இலக்கிய சமூக சமய வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் புதிய சமுதாயம் படைக்கும் பணியில் தம்மை முழுதுமாக அர்ப்பணித்துச் செயல்பட்டவர். ஆதி திராவிடர்களை அரசியல் பேசவைத்தவர்.

ஏற்கனவே சொன்னதுபோல, சுமார் ஒரு எண்பது ண்டு காலம் பகுத்தறிவுச் செம்மல்கள், சமூகநீதிப் போராளிகளான திராவிட இயக்க மாமன்னர்களின் பார்வையில் கூட அவர்கள் தங்களுடையதாக எடுத்தாளும் பல கருத்தாக்கங்களின் முன்னோடியான அயோத்தி தாசர் அகப்படும் பாக்கியம் செய்திருக்கவில்லை என்பது மிகவும் துரதிருஷ்டவசமான விஷயம். இதற்கான காரணங்களை வரலாறு என்றாவது ஒரு நாள் இவர்களுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் முன் எடுத்து வைக்கும்.

சமூக நீரோட்டத்தில் கவிதை, கதை, கட்டுரைகள், நாடகங்கள் போன்றவற்றில் ஆதி திராவிடர்கள் அக்காலத்தில் மிக அருமையானதொரு பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஆனால் மிகவும் துரதிருஷ்டவசமாக 1860லிருந்து 1910 வரை சுமார் 50 ண்டுகள் ஆதி திராவிடர்களால் படைக்கப்பட்ட இந்த கவிதை, கதை, கட்டுரைகள், நாடகங்கள் எங்கும் கிடைக்காமல் போனதால் அவர்களது வரலாற்றையும் அயோத்தி தாசர் போன்ற ஆகிருதிகளின் வரலாற்றையும் விரிவாகத் தெரிந்து கொள்ள அரிதாகிப்போனது. அயோத்தி தாசர் பரவலாக தலித்துகள் இடையிலும் பேசப்படாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

ஆதி திராவிடன். மகாவிகடதூதன். பூலோக வியாசன். பறையன். ஆதி திராவிட மித்திரன் போன்ற பத்திரிகைகள் அக்காலகட்டத்திய தலித்துகளால் கொண்டுவரப்பட்டவை. இந்தப் பத்திரிகைகள் எதுவும் பின்னாளில் ஆய்வாளர்களுக்குக் கிடைக்கவில்லை. இவை கிடைத்திருந்தால் அக்காலத்திய ஆதி திராவிடர்களின் போராட்டங்கள் மற்றும் அயோத்தி தாசரைப் பற்றிய முழு விபரங்கள் கிடைத்திருக்கும்.

இந்நிலையில் அயோத்திதாசரை இருபதாம் நு஡ற்றாண்டின் இறுதியில் கண்டெடுத்த பெருமை - இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தின் தலித்துக்கள் இடையே அயோத்தி தாசரை மறுபிறப்பு எடுக்க வைத்த பெருமை ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ய்வு மாணவராக இருந்த தோழர் ஞான.அலாய்சியஸை சேரவேண்டும். அயோத்திதாசரின் எழுத்துப் பணிகளுக்கு சாகாவரம் அளித்து இருக்கிறார் அலாய்சியஸ் என்று சொன்னால் மிகையாகாது.

அயோத்தி தாசரைப் பற்றி நமக்கு மிக அதிக அளவில் கிடைக்கும் பதிவுகள் என்பவை அவர் 1907 லிருந்து 1914 அதாவது அவருடைய இறப்பு வரை சிரியராக இருந்து வெளியிட்ட ஓரணாத் தமிழன் என்னும் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளின் வாயிலாகத்தான். அயோத்தி தாசரின் இறப்புக்குப் பிறகு அவருடைய மகன் க.அ.பட்டாபிராமன் 1922 வரை தமிழன் இதழ்களை நடத்தியிருக்கிறார்.

மிகுந்த சிரமத்தின் பேரில் இக்கட்டுரைகளை ஓரிடத்தில் தொகுத்து அயோத்தி தாசர் சிந்தனைகள் என்னும் தலைப்பில் இரு தொகுதிகளாக வெளியிட்ட அரும்பணியை செய்தவர் ஞான அலாய்சியஸ். இவருடைய இந்த அற்புதப் பணிக்கு ஊக்கமளித்து பெரும் செலவில் அயோத்தி தாசர் சிந்தனையின் இரு தொகுதிகளையும் வெளியிட்டவர்கள் நாட்டார் வழக்காற்றியல் மையம், தூய சவேரியார் கல்லு஡ரி, பாளையங்கோட்டை. பின்னர் தலித் சாகித்ய அகாடமியால் அயோத்தி தாசர் சிந்தனைகள் மூன்றாம் பகுதி வெளியிடப்பட்டது.
ஞான அலாய்சியசுக்கும் பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மையத்துக்கும் தமிழ்ச் சமூகம் மிகப்பெரிய அளவில் கடமைப்பட்டுள்ளது.
ஞான அலாய்சியசுக்கு தமிழன் இதழ்களை தந்து உதவியவர் தோழர் அன்பு பொன்னோவியம். அவர் தன்னுடைய முன்னுரையில் குறிப்பிடுகிறார் -
தமிழகத்தின் புதைக்கப்பட்ட களஞ்சியமாகக் கிடந்த இது, நான் எண்ணிப் பார்க்க முடியாத அளவில் பல நு஡று பக்கங்களைக் கொண்ட இரு தொகுதிகளாக வெளியாவதை தமிழன் பத்திரிகையின் மறு பிறப்பாக எண்ணி மகிழ்கிறேன். இது தமிழினத்திற்கே கூட அதிர்ச்சியுடன் வியப்பூட்டும் நிகழ்வாகத் தெரியக்கூடும் என்று கருதுகிறேன்...

என்று கூறுகிறார். இருந்தும் இந்த இரு தொகுதிகளிலும் கூட எங்கும் அயோத்தி தாசரின் இளமைப் பருவம். கல்வி குறித்த பதிவுகள் எங்கும் கிடைக்கவில்லை. சமூகம். தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகள் குறித்த சிந்தனைப் பதிவுகள். பெளத்த மதப் பிரச்சாரம் போன்றவற்றுக்கே வாழ்க்கையை அதிகமாக அர்ப்பணித்த அயோத்தி தாசர் தன்னைப் பற்றிய குறிப்பைக்கூட எங்கும் பதிவு செய்யவில்லை. ஓரிடத்தில் அவருடைய முன்னோர்களைப் பற்றி வருகிறது. இதுவும் நம் தமிழ் இலக்கிய சரித்திரம் குறித்த ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக இருக்கிறது.

பிரான்சிஸ் வைட் எல்லிஸ் என்னும் துரை 1796ல் சென்னை வருகிறார். இவர் திருக்குறள் மீது ஆங்கிலத்தில் உரையும் விமர்சனக் கட்டுரையும் எழுதியிருக்கிறார். தமிழ் இலக்கியச் சுவடிகளை சேகரிப்பதில் தன் வாழ்நாளை அதிகம் செலவழித்தவர் இந்த எல்லிஸ் துரை. இவரைப்பற்றி மீனாட்சி சுந்தரம்பிள்ளை தன்னுடைய கட்டுரை ஒன்றில் மிகவும் சிலாக்கியமாக சொல்லியிருப்பார். இந்த எல்லிஸ் துரையின் நண்பர் ரிங்டன் துரையிடம் பட்லராக வேலை பார்த்தவர் கந்தப்பன். இவர் அயோத்தி தாசரின் பாட்டனார். இந்தக் கந்தப்பன், திருக்குறள், நாலடி நானு஡று போன்ற சில ஓலைச் சுவடிகளை எல்லிஸ் துரை வசம் ஒப்படைத்திருக்கிறார். அப்போது சில பிராமணர்கள் துரையிடம் சென்று கந்தப்பன் தீண்டத்தகாத வகுப்பில் பிறந்தவன் என்றும் அவன் கூறுவதையும் அவன் கொடுப்பதைப் பற்றி அதிகம் பொருட்படுத்தத் தேவையில்லை என்றும் அறிவுரை கூறியிருக்கின்றனர். அவற்றைப் பொருட்படுத்தாத எல்லிஸ் துரை திருக்குறளையும் நாலடி நானு஡றையும் நு஡லாக அச்சிட்டு வெளியிட்டார்.
இத்தகவலை அயோத்திதாசர் தன்னுடைய தமிழன் இதழில்.
''எனது பாட்டனார் ஜார்ஜ் ரிங்டியன் துரை பட்லர் கந்தப்பன் என்பவர் ஓலைப்பிரிதியாயிருந்த திருக்குறளையும். நாலடி நானு஡றையும் ஈஸ்ட் இன்டியா கம்பெனியார் காலத்தில் தமிழ்ச் சங்கம் கூட்டி வைத்த கனம் எல்லீஸ் துரை அவர்களிடம் கொடுத்து அச்சுக்கு வந்திருக்கிறது"...
இதுவழியாக அந்தக் காலத்தில் ஆதி திராவிடர்கள் தமிழின் மிக அரிய நு஡ல்களைப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள் என்பது இங்கு தெளிவாகப் பதிவாகிற விஷயம்.


மேலே குறிப்பிட்டது போல அயோத்தி தாசரின் காலகட்டம் 1845லிருந்து 1914 வரை. அரசியல், சமயம், இலக்கியம் போன்றவற்றில் அவர் தீவிர ஈடுபாட்டுடன் செயலாற்றிய காலகட்டம் சுமார் 1865ல் துவங்குகிறது. அந்தக் காலகட்டத்திய தலித் வாழ்வு நிலை மற்றும் தீண்டாமைக் கொடுமைகள் பற்றி இங்கு எதுவும் சொல்லித் தெரிய வேண்டிய காரியமில்லை. இனி இங்கு சொல்லப்போகும் தாசரின் சிந்தனைகளும் இலட்சியங்களும் சாதி மதமற்ற அற வாழ்க்கையும், கருணையும் அன்பும் மிக்க மேம்பட்ட மனித உறவுகளைப் பற்றியிருப்பதால் அவை அனைத்தும் மானிட இனத்துக்கே சொந்தமானவை என்று உறுதி பட எடுத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. ஏனெனில் தாசரின் சிந்தனைகளும் லட்சியங்களும் உலகுக்கு ஒளியாக உதித்த கெளதம புத்தனின் அகிம்சையில் இருந்து உருவானவை. சனாதனம், இன-நிறவாதம், ஆணாதிக்கம், மதவாதம், பயங்கரவாதம் ஆகிய சகலவிதமான வன்முறைகளுக்கும் எதிரானவை.

சாதி இழிவை அகற்றுவதை மட்டுமே தன்னுடைய முழுக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கி இருக்கிறார் தாசர். தீண்டாமை வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் திணிக்கப்பட்டதே ஒழிய அது ஆதிகாலம் தொட்டே இருந்தது கிடையாது என்பது அயோத்தி தாச பண்டிதரின் கருத்து. இதன் அடிப்படையிலேயே அவர் சாதி எதிர்ப்புக் கருத்துக்களையும் செயல்பாடுகளையும் அமைத்துக் கொண்டார். இது போன்ற கருத்தாங்கங்களையே பின்னாளில் பாபா சாகிப் அம்பேத்கர் போன்ற ஆய்வாளர்கள் கையாண்டார்கள் என்பது மிகவும் குறிப்பிடத் தகுந்தது. தீண்டப்படாத மக்களின் அன்றைய இழிவான வாழ்வுக்கு அவர்களையே குறை சொல்லும் கருத்துக்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்ததோடு தீண்டாமை நிலவுவதால் பலன் பெறும் சக்திகளாலேயே இக்கருத்து திணிக்கப் பட்டது என்னும் முடிவை தாசர் எட்டுகிறார்.

அக்காலத்திய தீண்டாமைக் கொடுமை மற்றும் சாதிய இழிவுகளுக்கு சரியான சவுக்கடி ஆதி திராவிடர்கள் ஒவ்வொரும் கல்வி மற்றும் தொழில் துறைகளில் மேன்மையான இடங்களைப் பெறுவது என்ற முடிவுக்கு வருகிறார் தாசர். அக்காலத்தில் பிரபலமாக விளங்கிய சித்த வைத்தியத் துறையைத் தனதாக்கிக் கொள்கிறார் அவர். உள்ளுக்குள் உறைந்து கிடந்த அரசியல் விழிப்புணர்வு அவரை தீவிரமாக செயல்பட வைத்திருக்கிறது.

நல்லவை. பயனுள்ளவை. சுகாதாரமானவை. பொருளாதார தாயமும் ஆதிக்கமும் தரக்கூடியவை ஆகியற்றிலிருந்து மிகவும் திட்டமிட்டுத் தலித்துக்கள் சாதி அடிப்படையில் இந்து சாஸ்திரங்களின் சார அடிப்படையில் விலக்கி வைக்கப்பட்டதை எடுத்துக் காட்டினார். உதாரணமாக, பிரிட்டிஷ் ராணுவத்திலும். மருத்துவத்துறையிலும், கிறிஸ்துவ மிஷனரிகளின் பள்ளிக்கூடங்களிலும், கிறிஸ்துவ மதத்திலும் ரம்பகாலத்தில் உயர்சாதியார்கள் சாதி, மத சாரம் பார்த்து சேர மறுத்து வந்தார்கள். இப்படி தலித்துக்கள் சாதி, மத சாரம் பார்க்க அவசியமில்லாததாலும் சாரக் கேடான விஷயங்கள் அவர்களுக்கு உரியவை என்று பிறர் கருதியதாலும், தலித்துக்கள் அந்தத் துறைகளில் சேர்ந்து நவீன வாழ்க்கையில் முன்னேற்றமடைந்து வந்தார்கள். ஆனால் தலித்துக்களின் புதிய வாழ்க்கை முன்னேற்றத்தைக் கண்ட மேல் சாதி இந்துக்கள் சாரக்கேடெல்லாம் பார்க்காமல் அந்த நவீனத் துறைகளிலும், கிறித்துவ மதத்திலும் சேர்ந்து தலித்துகளைப் பழைய சாதி சாரம் காட்டி வெளியே துரத்திய சம்பவத்தை தாசர் வேதனையோடு குறிப்பிட்டார். (1908)

"இத்தனைக்கும் சாதி மத சாரம் பார்த்த அந்தப் பெரிய சாதியோர் என்போர். காலங்காலமாக 'மதவித்தைகளையும் விருத்தி செய்கிறார்களேயன்றி, பூமியை உழும் நவீனக் கலப்பையையோ, விரைவாக நீர் பாய்ச்சும் ஏற்றத்தையோ, நெல்லையும் அரிசியையும் பிரிக்கின்ற எந்திரத்தையோ, போட்டோ கிராப், டெலிகிராப், போனோ கிராப், மோனோ கிராப், ஸ்டீம் ரயில்வே, டிராட்மவே போன்ற நவீன அறிவியல் சாதனங்களையோ கண்டுபிடிக்கவில்லை. னால் அவர்கள் பராமரித்து வரும் பழைய சாதி மத திக்க நிலையால் மட்டுமே இப்புதிய வசதி வாய்ப்புக்களை அபகரிக்க முடிகிறது" என்று வேதனைப்படுகிறார்.

இந்து சமுதாயத்தில் நல்ல இந்து கெட்ட இந்து என்பதை விட உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏறுவரிசைதான் முக்கியம் என்று அம்பேத்கார் குறிப்பிடுவார். இது போன்ற வரிசைகள் இல்லாத காரணத்தால் அன்று கிறிஸ்துவ மதத்துக்கு ஏராளமான தலித்துக்கள் மாறினார்கள். ஆனால் கிறிஸ்துவத்தின் ஆர்.சி.பிரிவும், புராடஸ்டென்டு பிரிவும் இந்து மதம் போலவே சாதி பேதங்களை ஏற்றுக்கொண்டதால் அதற்கு இந்தியக் கிறிஸ்துவ மிஷனரிகளே காரணமாகிப் போனதால் அயோத்தி தாசர் அதையும் நிராகரித்தார். கிறிஸ்துவ மதம் மாறிய ஆதி திராவிடர்கள் சாதி அடையாளத்தோடு வாழ நேர்ந்ததோடு, பாதிரியார்கள், ஞானஸ்நானம், வாரக்காணிக்கை, அர்ச்சிஷ்டவர்களின் உற்சவம், புதுநன்மை, விசுவாசம், புதைக்கக்குழி தோண்டுதல், மணியடித்தல், து஡ம்பா, குருசு, தேன், மெழுகுவர்த்தி ஆகியவற்றுக்கு விதித்த தொகைகளைக் கொடுத்து ஓட்டாண்டிகள் ஆகிறார்கள் இந்த ஆதி திராவிடர்கள் என்று தாசர் எழுதினார். புராட்டஸ்டண்டு மார்க்கத்தில் சேர்ந்து படித்துப் பதவிகள் வகித்த தலித்துக்களை சாதி இந்துக்கள் அடித்துத் துரத்தித் தாங்களே கிறிஸ்தவம் மாறினார்கள். பழைய கிறிஸ்துர்களைப் பறைக்கிறிஸ்துவர்களாக்கினார்கள். பாதிரிமார்களும் இதற்கு இடம் கொடுத்தார்கள் என்று தாசர் குறிப்பிட்டார்.

இந்தியச் சூழலில் நடைமுறையில் சாதியில் இந்துவாகவும் மதத்தில் கிறிஸ்தவனாகவும் ஏககாலத்தில் பார்ப்பனனையும், கிறிஸ்துநாதரையும் ஏற்றுக்கொள்பவன் அரைக்கிறிஸ்துவன், அரை இந்து என்றார் தாசர்.
தலித்துகளிடம் இருந்து வந்த பாரம்பரியமாக இருந்து வந்த குலதெய்வ மற்றும் கிராம தேவதை வழிபாட்டையும் கூட தாசர் ஏற்கவில்லை. தலித்துகளுக்கு மாற்று மதமாக அவர் முன்மொழிந்தது பெளத்த தன்மமே. புத்த தன்மத்தை தலித்துக்களின் தன்மமாக உலகுக்கு முன்மொழிந்த முதல் தலித் அறிஞர் அயோத்தி தாசரே.

இந்த வகையில் அவர் டாக்டர் அம்பேத்கருக்கு முன்னோடியாகத் திகழ்கிறார். தாசருக்குப்பின் சுமார் அறுபது ண்டுகள் கழித்தே அம்பேத்கர் தலித்துகளுக்கான மதமாக நவயான பெளத்த இயக்கத்தை முன் மொழிந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

போதி சத்துவத்தின் புதிய நவீன வளர்ச்சியை, இந்தியத் துணைக்கண்டத்தின் சரித்திரத்தை புத்தமத தத்துவத்தின் அடிப்படையில் விளக்கம் தந்தார் தாசர்.

1896-98 ம் ண்டுகளில் சென்னையில் ல்காட் துரையுடன் தாசருக்குத் தொடர்பு ஏற்பட்டது. தாசரும் கிருஷ்ண சாமியார் என்னும் அவருடைய நண்பரும் ல்காட்டுடன் இலங்கை சென்று மலிகண்ட விகாரையில் சுமங்கல மஹாநாயக என்னும் பெளத்தத் துறவியிடம் பஞ்சசீலம் பெற்று பெளத்தர்கள் ஆனார்கள்.

பிறகு ல்காட் துரையின் ஒத்துழைப்புடன் சென்னை ராயப்பேட்டையில் பெளத்த விகாரையையும் பெளத்த சங்கத்தையும் நிறுவினார். சமூக வரலாற்றினை மறுவாசிப்பு செய்தல், சமய அடையாளங்களைக் கட்டி எழுப்பல் என இந்த பெளத்த சங்கங்கள் செயல்பட்டன.

1899ல் புத்தர் என்னும் இரவு பகலற்ற ஒளி என்னும் நு஡லை எழுதினார்.
1907லிருந்து 1914 வரை தாம் சிரியராக செயல்பட்டு நடத்திய ஓரணாத் தமிழன் வார இதழில் தொடர்ச்சியாக புத்த சமயம், அரசியல், சமூகம், இலக்கியம் குறித்த கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வந்தார். தமிழனில் சி.எம்.இ.குருமூர்த்தி, சுவப்னேஸ்வரி அம்மாள் (இவர் Tamil Woman, தமிழ்ப் பெண் போன்ற இதழ்களை வெளியிட்டவர்), டி.சி.நாராயணபிள்ளை, ஏ.பி.பெரியசாமி புலவர் போன்றோர் தொடர்ச்சியாக எழுதி வந்தனர். அந்தக் காலத்திலேயே தமிழன் இதழ்களில் வெளியான கேள்வி பதில் பகுதி வழியாக அதற்கான வாசகர்கள் பரவலாக இருந்தமையை அறியமுடிகிறது.

தாசர் மற்றும் அவருடைய நண்பர்களின் முயற்சியால் பெளத்த மத செயல்பாடுகளை சென்னை, செங்கற்பட்டு, வட ற்காடு போன்ற தமிழகத்தின் வடபகுதிகளிலம் கர்நாடகத்தில் ஆதி திராவிடர்கள் பரவியிருந்த கோலார் தங்கவயல், பெங்களூர், ஹூப்ளி மற்றம் பர்மா தென்னாப்பிரிக்கா போன்ற இடங்களில் வசித்த தமிழர்கள் இடையேயும் பரவியது.

ஆங்கிலேயர் காலத்தில் கோலார் தங்கவயல் பணிகளுக்கு வட ஆற்காடு மாவட்டத்தை சேர்ந்த தலித் மக்களே அதிகம் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு சுயமரியாதை மிக்க வாழ்வு அங்கு கிடைத்தது. அவர்கள் பெளத்த செயல்பாடுகளை அங்கு சாத்தியமாக்கினர். தங்கள் நம்பிக்கையை இவர்கள் வட ற்காடு மாவட்டத்தின் கிராமங்களில் பரப்பினார்கள்.

அயோத்தி தாசரோடு இணைந்து செயல்பட்ட க.அப்பாதுரையார், நகுலப்பிள்ளை, சின்னப்புட்டு சாமியார், கே.சி.கிருஷ்ணசாமி, டி.எஸ்.சுந்தரம், முத்து மேஸ்திரி கியோர் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெளத்த மதப் பணிகளை மேற்கொண்டனர். தாசருக்குப் பின்னாலும் இவர்கள் சாக்கைய பெளத்த சங்க செயல்பாடுகளை உயிரோட்டத்தோடு எடுத்துச் சென்றவர்கள்.

சென்னை ராயப்பேட்டை பெளத்த சங்கத்தில் அயோத்தி தாசர் பேசும் போது துவக்க காலத்தில் தமிழ்ப் பெரியார் திரு.வி.கல்யாண சுந்தரனார் தன் இளமைப் பருவத்தில் கற்கள் கொண்டு எறிந்து எதிர்ப்பினைத் தெரிவித்தார். பின்னாளில் அவர் காலில் ஏற்பட்ட கட்டி ஒன்றினை சித்த வைத்திய முறையில் அயோத்தி தாசர் குணமாக்கி இருக்கிறார். அயோத்தி தாசர் மறைவுக்கு மிக அற்புதமான இரங்கற்பாவினை எழுதியிருக்கிறார் திரு.வி.க. 1906ம் ண்டு வட ற்காடு மாவட்டம் திருப்பத்தூர் பெரிய பறைச்சேரி எனப்பட்ட தலித்துக்கள் வாழ்ந்த பகுதியின் பெயர் கெளதம புத்தர் வழி வந்தோர் வாழும் ஊர் என்னும் பொருளில் கெளதமாப்பேட்டை என்று மாற்றப்பட்டது. திருப்பத்தூரை சேர்ந்த ஏ.பி.பெரியசாமிப் புலவர், அனுமந்த உபாசகர் கியோர் பெளத்த சங்க செயல்பாடுகளை முடுக்கி விட்டார்கள். கெளதமாப்பேட்டையில் 1904ம் ண்டில் திட்டமிடப்பட்டு 1906 சாக்கைய பெளத்த லயம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ண்டு அந்த லயத்துக்கு நூறு ண்டுகள் முடிவடைகின்றன. பர்மாவில் கொண்டுவரப்பட்ட ஐம்பொன்னால் ஆன புத்தர் சிலை அங்கு நிறுவப்பட்டது. அயோத்தி தாசரின் வழிகாட்டுதலுடன் அந்தப்பேட்டையில் 87 ஆதி திராவிடர்கள், முடிவெட்டுபவர்கள், சலவைத் தொழிலாளிகளின் குடும்பங்கள் பெளத்த மதத்துக்கு மாறினார்கள்.

இந்து மதத்தின் பல கூறுகளை பெளத்த மதத்தில் இருந்து தோன்றியவை என்பதைத் தீவிரமாக பிரசாரம் செய்து வந்தார் தாசர். புத்தர் இறந்த நாளை புத்தர் பலி விழாவாக போதிப்பண்டிகை என்று பூர்வ பெளத்தர்கள் கொண்டாடி வந்தார்கள். பிராமணர்கள் இதனை போகிப்பண்டிகை என்று திரித்து விட்டார்கள் என்றார் தாசர். அதேபோல திருக்குறளை திரிக்குறள் என்றும் தமிழின் பல பண்டை நூல்களை பெளத்த மத நூல்கள் என்றும் விவாதித்து வந்தார்.

வள்ளுவரை பெளத்தர் என்றும் வள்ளுவர் சொன்ன ஆதி பகவன் ஆதி பகலவன் என்றும் அது கெளதம புத்தர்தான் என்றும் இதேபோல பல குறள்களையும் பெளத்த வழியில் மறுவாசிப்பு செய்து பொருள்கூறினார்.
அயோத்தி தாசரின் முனைப்பால் உயிர்க்கொலை மறுப்புக்காக மாடு அறுக்கும் பழக்கம் பல ஊர்களின் சேரிகளை விட்டு வெளியேற்றப்பட்டது. சேரிக்கு வெளியே மாடு அறுக்கும் தொட்டி என அவை மாறின. ஊரிலும் சேரியிலும் இல்லாத பல தொட்டிகளை சேலம் மாவட்டத்திலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வட ஆற்காடு மாவட்டங்களிலும் பார்க்க முடியும்.

பெரியாரால் நடத்தப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க காலக் கருத்தியல் மற்றும் பிரச்சார நடவடிக்கைகள் பின் வந்த பெளத்த செயல்பாட்டாளர்களோடுதான் அமைந்திருந்தன என்பதை இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.

இந்தி மொழி, இந்துச் சாதி மதத்தோடு தொடர்பு உடையது கையால் அதற்கு இந்தியாவின் பொதுமொழியாகும் தகுதி கிடையாது. ஆங்கிலமே அதற்குத் தகுதி கொண்டது என்று தாசர் பெரியாருக்கு முன்பே எழுதினார். (1911) ( ஆங்கில மொழியைத் தாய்மொழியாக்க வேண்டும் என்று கூடச் சொன்னார். அதன் தாத்பர்யத்தை இன்றைய சூழலை வைத்துப் பார்க்கக்கூடாது).

அயோத்தி தாசரின் முனைப்பினாலும் முயற்சியாலும் சென்னையில் பல பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. ஏழைகளுக்கு இலவசக் கல்வி வழங்குவதில் முன்னோடியாக இருந்தார் தாசர். இப்போது நான் சொல்லும் விஷயம் உண்மையிலேயே உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். மதிய உணவுத் திட்டத்தினை 1894ம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தியவர் தாசர். சென்னை மற்றும் வட ற்காடு மாவட்டங்களில் நடந்த பள்ளிகளில் பகல் உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் அயோத்தி தாசர். இதை நான் சொல்லும்போது இந்த முன்னோட்டமான காரியம் நடந்த ஆண்டினையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் அயோத்தியா தாசரின் வாழ்வும் செயல்பாடுகளும் தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இருந்திருந்திருக்கிறது.

தலித்துக்களுக்கு பிராம்மணரல்லாத திராவிட அடையாளத்தை நிலை நிறுத்தியதில் முதன்மையானவர் தாசர்.

ஏற்கனவே சொன்ன ஆச்சரியத்தைப் போல இன்னும் சில ஆச்சரியங்களும் உண்டு தாசர் சரித்திரத்தில். 1895 முதல் 1907 வரை தலித்துகளுக்காக இந்திய சரித்திரத்தில் முதன்முறையாக அரசு வேலை வாய்ப்புக்களில் இட ஒதுக்கீட்டினை வற்புறுத்தினார் தாசர். இதற்காக பல ஆங்கில துரைமார்களை சந்தித்து மனுக்களை அளித்து, பல இடங்களில் பேசியும், அதிகாரிகளையும் கவர்னர்களையும் சந்தித்து தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்கினார். இந்திய அளவில் இந்த விஷயத்தில் முன்னோடி நம் தமிழகத்தின் அயோத்தி தாச பண்டிதர்தான் என்று நாம் பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் யாரும் சொல்லவில்லை. அது வேறு விஷயம்.

அயோத்தி தாசரின் இந்த இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை அவருக்குப் பிறகு பல மாநிலங்களில் தொடர்ந்தது. மராட்டிய சிங்கம் சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலான சத்ரபதி சாஹூ மஹராஜ் 1902 தன்னுடைய அரசாங்கத்தில் தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார்.

அவர் வாழ்ந்த காலத்தைப் பார்க்கும் போது அயோத்தியா தாசர் சிந்தனைத் தொகுப்பில் உள்ள பல விஷயங்கள் பல நிலைகளில் முன்னோடியானவை. இக்கால தாத்பரியத்துடன் பார்க்கும்போது சில விஷயங்கள் விவாதத்துக்கு உரியன. உதாரணத்துக்கு பண்டைய தமிழ்நூல்கள் பற்றிய அவருடைய கணிப்பு, மொழி பற்றிய கருத்துக்கள், விஞ்ஞான அடிப்படையில் அமையாத மதங்கள் பற்றிய அவருடைய கருத்துக்கள், பிரிட்டிஷ் அரசு மீது அவர் கொண்டிருந்த தேவதா விசுவாசம் போன்றவை பெரிதும் விவாதத்துக்கு உரியவை. னால் பல விஷயங்களில் அவர் வாழ்ந்த காலத்தைத் தாண்டிய பெரும்பாய்ச்சலைத் தன் சிந்தனைத் தளங்களில் நிகழ்த்தியிருக்கிறார்.

1914ம் ண்டு மே மாதம் 5ம் நாள் பண்டிதர் மறைந்தார்.

பண்டிதரின் இறுதி நாட்களைப் பற்றிய குறிப்பினை அவருடைய குமாரர் பட்டாபிராமன் அவர்களுடைய வார்த்தைகளிலேயே முடிக்கிறேன்.

அவர் வியாதியைப் பற்றிக் கொஞ்சமேனும் கவலைப்படவில்லை. தாமே கைதேர்ந்த வைத்திய பண்டித சிகாமணியாயிருந்ததினாலும் தமக்கே தம்மாயுளைக் குறித்து உணர்ச்சி இருந்ததினாலும் வைத்தியரொருவருடைய உதவியையும் அவர் கோரவில்லை. மே மாதம் 3ம் தேதி திவாரம் காலை 5 மணிக்கு பண்டிதரவர்கள் எல்லோரையும் பார்த்து இந்த தேகம் விழப்போகிறது என்றனர். அவருக்கு நெருங்கின பந்துக்களும் நண்பர்களும் அவர்களுடைய கதியைப் பற்றி அவரிடம் வினாவிய போது அவர், தருமமும் கருமமுமே உங்களைக் காக்கும் என்று திருவாய் மலர்ந்தருளினர். அடியேன் பத்திரிகையைக் குறித்து விண்ணப்பித்தபோது, அவர், திரிக்குறள் உரை இதுவரையிலும் நாம் எழுதியதோடு மாத்திரம் நிற்கவேண்டியிருக்கிறதே என்பதுதான் குறை. இந்தப் பொய்ச் சடலம் கூடியிருந்தவரையில் அவ்வளவுதான் செய்யமுடிந்தது. தமிழன் ஆகிய குழந்தையை உன் கையில் ஒப்பித்து விடுகிறேன். உன்னால் வளர்க்க முடியுமல்லவா என்றனர்.
................
பஞ்சஸ்கந்த பிரிவினை அடைந்த பிறகு அவரது திருமுக விலாசத்தை யாவரே வருணிக்கத்தக்கவர். அன்று பகலெல்லாம் அவரது உறவினரும் நண்பர்களும் சீடர்களும் நூற்றுக்கணக்காக வந்து பார்த்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தனர். பகல் 3 மணிக்கு அவருக்குப் பரிசளித்திருந்த 3 மெடல்களையும் அணிந்து அலங்கரித்து அவரைத் தரிசித்தோம். மாலை 5.30 மணிக்கு புஷ்பமாரி பெய்தாப்போல தூறி நிலத்தைக் குளிரச் செய்தது மனோகரமாயிருந்தது.
..........
மாலை 6 மணிக்கு சர்வாலங்கதிருதங்களோடு அவரை வெள்ளைப் பெட்டியில் வைத்து புஷ்பங்களால் அலங்கரித்திருந்த விமானத்தில் இருக்கச் செய்து பெளத்தன்ம சின்னங்களுடன் முன்னால் புத்தருடைய திவேதத்திலிருந்து உருக்கமான பாடல்களைப் பாடிக் கொண்டு வர கோலம் புறப்பட்டது. அநேக பர்மிய பெளத்த பிட்சுக்களும், இந்திய பெளத்தர்களும், பர்மிய பெளத்தர்களும் ஆயிரங்கணக்கான ஜனங்களும் கோலத்துடன் வந்தனர். பண்டித பெருமான் அவர்களே காருண்யம் பொருந்திய பிரிட்டிஷ் கவர்ன்மெண்டிலிருந்து பெளத்தர்களுக்காக வாங்கிய மயானத்திற்கு தேவ விமானம் கொண்டுபோகப் பட்டது. விமானத்தை இறக்கினதும் சென்ற 1500 வருடங்களாக நடந்திராத பெளத்த சடங்குகள் வெகு சிரத்தையுடன் நடத்தப்பட்டன....

ஏறத்தாழ எண்பது ண்டுகளுக்கும் மேலாக சரித்திரத்தில் முழுதும் மறக்கப்பட்ட ஒரு மாமனிதரை இந்த உலகுக்கு மீண்டும் உயிர்ப்பித்துக்கொடுத்த ஞான அலாய்சியஸ் அவர்களையும் பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் மையத்தையும் மீண்டும் ஒருமுறை நன்றியுடன் நினைத்துக்கொண்டு என் உரையை முடிக்கிறேன். அயோத்தி தாசரை தில்லித் தமிழ்ச் சங்கத்தில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பினை எனக்கு சாத்தியப்படுத்தியவர்கள் இவர்களே.

நன்றி. வணக்கம்.


18 நவம்பர் 2006 அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தடம் பதித்த தமிழர்கள் தொடர் சொற்பொழிவுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்.


அயோத்தி தாசரின் எழுத்துப்பணிகள் :


1. புத்தரது திவேதம் (1912)

2. Buddhist Doctrines - Questions and Answers (1912)

3. இந்திரர் தேச சரித்திரம் (1931)

4. விவாக விளக்கம் (1926)

5. ஹரிச்சந்திரனின் பொய்கள் (1931)

தமிழன் பத்திரிகை சென்னையில் 14 வருடங்களாக வெளிவந்தது. 1907 முதல் 1914 வரை அவரது ஆசிரியத்துவத்திலும், அவருக்குப்பின் அவரது புதல்வர் பட்டாபிராமன் அவர்களை சிரியராகக் கொண்டு 1919 வரையிலும் பின்னர் 1919லிருந்து 1922 வரை யார் நடத்தினார்கள் என்று தெரியவில்லை. பின்னர் 1922ல் அப்பாதுரையை ஆசிரியராகக் கொண்டு 1926லிருந்து 1935 வரை வெளிவந்ததாகவும் குறிப்புக்கள் உள்ளன.


இந்தக் கட்டுரையை எழுத எனக்குக் கிடைத்த ஆதாரங்கள்:


1. அயோத்தி தாசர் சிந்தனைகள் - தொகுப்பு 1 மற்றும் இரண்டு - ஞான அலாய்சியஸ், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம். (2003ல் ஞான அலாய்சியஸ் தொகுத்த 3வது தொகுப்பும் வெளிவந்துள்ளது. இது தில்லியில் எனக்குப் படிக்கக் கிடைக்கவில்லை)

2. தலித்திய விமர்சனக் கட்டுரைகள் - ராஜ் கெளதமன் (காலச்சுவடு வெளியீடு)

3. க.அயோத்திதாசர் ஆய்வுகள் (ராஜ் கெளதமன் - காலச்சுவடு வெளியீடு)

4. அயோத்திதாச பண்டிதர் வழியில் வாழும் தமிழ்ப் பெளத்தம் - ஸ்டாலின் ராஜாங்கம் - காலச்சுவடு மாத இதழ்

நந்திகிராமில் மார்க்சிஸ்டுகளின் ஊழிநடனம்

கொல்கத்தாவில் பணிபுரிந்து விட்டு தில்லிக்கு மாற்றலாகி வரும் நண்பர்கள் பலரும் அங்கு பெரும்பான்மையாக உள்ள மார்க்சிஸ்டு கட்சித் தொண்டர்களின் வீரபராக்கிரமங்களைப் பற்றிக் கதைகதையாகச் சொல்வார்கள்.

தசரா நாட்களில் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் - மிரட்டல், பணம் பிடுங்குதல் போன்ற காரியங்களில் எப்படி ஈடுபடுவார்கள், அரசியல் எதிரிகளை எப்படி நடத்துவார்கள் போன்ற விஷயங்களை ஒரு மர்மநாவலின் சுவாரசியம் குறையாமல் சொல்லுவார்கள்.



மார்க்சிஸ்டு கட்சியின் தலைவர்கள்தான் முகங்களை மிகவும் தீவிரமாக வைத்துக்கொண்டு உலக அரசியலை மிகவும் மென்மையான குரலில் பேசுவார்கள். காங்கிரஸ் கட்சியுடன் ஒருசில பேரங்களுக்காக அவர்கள் அடிக்கும் அந்தர் பல்டிகளையும் மிகவும் மென்மையாகத்தான் அடிப்பார்கள். ஆனால் அவர்களுடைய தொண்டர்களோ நம்மூர் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் அவற்றின் தோழமைக்கட்சிகளின் அணுக்கத் தொண்டர்களின் வன்முறைக்கு எந்த அளவிலும் குறையாது மாற்றுக் கருத்து உடையவர்களைக் கவனித்துக் கொள்வார்கள் என்று நண்பர்கள் சொல்வார்கள்.


இப்போது மேற்கு வங்காளத்தின் அந்தக் கொள்கை சிங்கங்கள் மீண்டும் ஒருமுறை தங்கள் வீரபராக்கிரமத்தைக் காட்டி இருக்கிறார்கள். நேற்று மேதா பட்கர் இரண்டு கார்களில் தங்கள் இயக்கத் தோழர்களுடன் நந்திகிராம் போயிருக்கிறார். நந்திகிராமில் தொடர்ந்து நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மேதாவை அவருடைய இயக்கத்தினர் சிலர் அங்கு வருகை தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்களுடைய அழைப்பின் பேரில் நந்திகிராம் பகுதியின் கபேúஸபேரியா என்னுமிடத்தில் அவர் உள்ளே நுழையும்போதே சிபிஎம் கட்சிக் கொடிகளை ஏந்திய தொண்டர்கள்(?) ஆக்ரோஷமாக வண்டிகளின் மீது கல்லெறிந்து தாக்குதலைத் தொடங்கியிருக்கிறார்கள். வண்டிகளை நிறுத்தி மேதா பட்கர் மற்றும் உடன் இருந்தவர்கள் வெளியே இழுத்துப்போட்டு முகத்தில் குத்தி மிகவும் வன்முறையுடன் தாக்கியிருக்கிறார்கள். மேதா பட்கரின் தலைமுடியைப் பற்றி இழுத்துக் கீழே தள்ளி அவர் முகத்தில் குத்தித் தாக்கியிருக்கிறார்கள். மேதா பட்கர் உள்ளே நுழையக்கூடாது என்று மிகவும் ஆவேசத்துடன் கூச்சல் இட்டு எல்லோரையும் தாக்கியுள்ளது அந்த வன்முறைக் கும்பல். ஓரு கார் மிகவும் மோசமாக அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மேதா குழுவினருடன் பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் மிகவும் சமர்த்தாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்திருக்கின்றனர்.திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பூமி உச்சேத் பிரதிரோத் கமிட்டியின் இயக்கத்துக்கு எதிராகத் துவங்கிய சிபிஎம் கட்சியின் வன்முறைத் தாக்குதல்களால் இருபுறமும் வெடித்த வன்முறையில் கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து இதுவரை நான்கு அப்பாவிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். வன்முறை அங்கு கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. அங்கு நிகழ்ந்த வன்முறைகளைப் பார்த்து சிபிஎம் தலைவர் ஜோதி பாசுவே இப்போது தன் குரலை மாற்றிக்கொண்டு பேசத்துவங்கியிருக்கிறார். மைய அரசு காவல் படையை அனுப்புவதை சற்று ஒத்திவைத்து திரிணமூல் காங்கிரசின் தலைவி மம்தா பேனர்ஜியுடன் பேச்சுவார்த்தைகளைத் துவங்கி ஒரு தீர்வைக் காண முயற்சிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்".

மேற்கு வங்கத்தின் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியின் சிறப்பான முயற்சிகளையும் கடந்து, நந்திகிராமில் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறப்பட்டிருக்கிறது'' என்று மேதா பட்கர் கொல்கத்தாவில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் ஆவேசப்பட்டு இருக்கிறார்.

இந்தியா முழுக்க வேறு மாதிரியான முகங்களைக் காட்டும் மார்க்சிஸ்டு கட்சியினர் அங்கு வேறுவகையான ஒரு கோரமுகத்தைக் காட்டுகிறார்கள் என்றால் அங்குள்ள காவல்துறையினரும் அவர்களுடைய அக்கிரமமான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்க்கிறார்கள் என்று குமுறுகிறர்கள் அங்கு செல்லும் மனித உரிமை இயக்கத் தொண்டர்கள். மாற்றுக் கருத்து உடையவர்களை குண்டாந்தடி கொண்டு துரத்தியடிக்கிறார்கள் அங்குள்ள குண்டர்கள். மைய அரசு உடடினடியாகத் தலையிட்டு அங்கு முற்றுகையிட்டுள்ள சிபிஎம் கட்சிக்காரர்களை அகற்ற வேண்டும். சிபிஎம் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படும் போலீசாரும் சேர்ந்து கொண்டு நந்திகிராம் பகுதி முழுவதையும் தங்கள் ஆளுமைக்குள் வைத்திருப்பதாக ஊடகங்களிலும் இதழ்களிலும் பல தொண்டர்கள் குமுறியிருக்கிறார்கள்.

இவர்களின் நியாயமான குமுறல்கள் கேட்கப்படவேண்டும்.மற்ற விஷயங்களில் வாய் கிழிய ஊர் நியாயம் பேசும் பிரகாஷ் காரத் போன்றவர்களும் இந்த விஷயத்தில் தங்களுடைய திருவாயைத் திறந்து மேற்கு வங்காளத்தின் மார்க்சிஸ்டுகளுக்கு அறிவுரை சொல்லவேண்டும். மாநில அரசைய வற்புறுத்த வேண்டும்.

நந்திகிராமில் நடக்கும் ஊழி நடனத்தை உடனடியாக நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

Thursday, November 8, 2007

வாளெ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் - கரு "நாடக அரசியல்'

ராகவன் தம்பி

வாளெ மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்


''நாட்டாமே... தீர்ப்பை மாத்தி எளுது"...


எக்காரணம் கொண்டும் தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று நம்முடன் மல்லுக்கட்டி நின்று தங்கள் மாநிலத்தில் அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த கருநாடக அரசியல்வாதிகள் தங்களுக்குள் மல்லுக்கட்டி நின்று இப்போது சற்று ஓய்ந்திருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்தில் அமலாக்கப்பட்டிருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி இன்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. பாஜக அங்கு ஆட்சி அமைப்பதற்கு வழிவகுத்திருக்கிறது தில்லியின் ஆணை.தேவே கௌடாவின் தலைமையிலான மதசார்பற்ற(?) ஜனதா தளத்துடன் பாஜக ஆட்சியைப் பகிர்ந்து கொள்ளும். பாஜகவும் ஜனதா தளக்கட்சியும் தனித் தனியாகத் தங்கள் (இவர்களை என்ன சொல்வது), சரி. "அவர்களை" தில்லியில் குடியரசுத் தலைவரின் முன்னிலையில் அணிவகுப்பு நடத்தியிருக்கிறது.

குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்துவதற்கு பயந்து குடுமிப்பிடி சண்டை போட்டுக்கொண்டிருந்த பாஜகவும் தேவேகௌடா கட்சியும் மீண்டும் கட்டிப்பிடித்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்து இந்த ஒப்பந்தத்துக்கு வந்திருக்கிறார்கள்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாஜகவை சேர்ந்த (இந்தக் கூத்துக்கு) முன்னாள் துணை முதலமைச்சர் பி.எஸ்.எட்டியூரப்பாவை முதல்வராக அறிவித்து இருக்கிறார்கள்.



ஏறத்தாழ குரங்குகள் ரொட்டியைப் பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்யும் கதைக்கு சற்று அருகில் நெருங்கி வரும் அரசியல் கதை இது என்று தலைநகரில் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.


நவம்பர் 1ம் தேதியன்று தேவே கௌடா செய்திருக்கும் ஒப்பந்தம் (மெமோரண்டம் ஆஃப் அண்டர்ஸ்டேன்டிங்) இது வரை எந்த மாநிலத்திலும் அரசியல் சரித்திரத்தில் கேள்விப்படாத விசித்திரம் என்கிறார்கள். இது ஒரு மோசமான முன் உதாரணத்தைத் தோற்றுவித்து இருக்கும் அரசியல் உட்டாலங்கடி வேலை. இந்த அரசியல் நாடகத்தில் சில திடீர் திருப்பங்கள், மர்மம், நகைச்சுவை, சோகம் போன்ற காட்சிகளை சற்று பின்னோக்கிப் பார்ப்போம்.

கர்நாடகாவில் மே 28, 2004ல் நடந்த பொதுத்தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (அடிக்கடி எதற்கு "மதச்சார்பற்ற' என்று தேவையில்லாமல் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும்? மதச்சார்பில்லாமல் இருக்கலாம். ஆனால் ஜாதிச் சார்பு இல்லாத அரசியல் கர்நாடகாவில் ஏது? எனவே ஒரு அடையாளத்துக்காக ஜனதா தளம் என்றே இப்போதைக்கு சொல்லலாம்) கட்சிகள் ஆட்சியமைக்கக் கூட்டணி அமைத்து தரம் சிங் முதல்வராகப் பதவி ஏற்றார்.

ஜனவரி 16, 2006ல் ஜனதா தளம் தன்னுடைய பங்காளியைத் தூக்கி எறிந்து தன்னுடைய மதச்சார்பற்ற கொள்கையை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் வண்ணம் பாரதிய ஜனதா கட்சியைத் தனது கூட்டாளியாக மாற்றிக் கொண்டது. இதில் கூத்து என்னவென்றால் ஜனதா தளத்தின் தலைவர், தேவே கௌடாவின் தவப்புதல்வர் ஹெச்.டி.குமாரசாமி ஒரு குஜாலான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையில் நவரசங்களும் தெறித்தன.
ஆட்சியில், அதாவது அமைச்சரவையில் பதவிகளைப் பங்கு பிரித்துக் கொள்வது மட்டும் அல்லாது, அரசு வாரியங்களையும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைமைப் பதவிகளையும் பிரித்துக் கொள்வது என்று உடன்பாடு செய்து கொண்டிருக்கிறோம். 70 பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் பாஜகவுக்கு 40 ஜனதா தளத்துக்கு 30 என்று பிரித்துக் கொள்வோம். முதல் 20 மாதங்கள் ஜனதா தளத் தலைவர் குமாரசாமி முதல்வராக இருப்பார். மீதி 20 மாதங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் அவைத்தலைவர் எடியூரப்பா முதல்வராக இருப்பார் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யாத குறையாக ஒரு உடன்படிக்கையை வெளியிட்டார்கள்.

அதன்படி, 03 பிப்ரவரி 2006 அன்று குமாரசாமியை முதல்வராக ஏற்று அமைச்சரவை அமைக்கப்பட்டது. 03 அக்டோபர் 2007ல் அந்த இருபது மாதங்கள் முடிவடைந்தன. கர்நாடகாவின் பாரம்பரியக் கூத்தான யட்சகானத்தின் இரண்யவதம் கூத்தில் ஒரு பிரபலமான பாடல் ஒன்று உண்டு.

"ஏனு அந்தரு மகனு

ஹரியம்பனு பிடனு''

அதாவது என்ன செய்தாலும் உங்கள் மகன் ஹரி என்று சொல்வதை விட மாட்டேன் என்கிறான்''.

அதேபோல, தேவேகௌடா புத்திரன் என்ன தலைகீழாக நின்றாலும் பதவி என்கிற விஷயத்தை விடமாட்டேன் என்று அடம் பிடித்தார். ஒப்பந்தப்படி பாஜகவுக்கு முதல்வர் பதவியை விட்டுத்தரமாட்டேன் என்று குரங்குப் பிடியாக அடம் பிடித்தார்.

07 அக்டோபர் 2007 அன்று பாஜக தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொண்டது. அடுத்தநாளே குமாரசாமி தன்னுடைய முதல்வர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்தார்.


09 அக்டோபர் 2007 அன்று கர்நாடகாவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டது. சட்டசபை கலைக்கப்படவில்லை.24 அக்டோபர் 2007 அன்று தேவே கௌடா, பாஜக தேசியத்தலைவர் ராஜ்நாத் சிங்குக்கும் பிரதமருக்கும் மாநிலத்தின் சட்டசபையைக் கலைக்குமாறு அறிவுறுத்தி ஒரு கடிதம் எழுதினார்.
ஜனதா தளம் சற்று நேரத்துக்கு வெட்கத்தைத் துறந்து மீண்டும் ஆதரவு தேடி பாஜகவின் பாசறைக்கு ஓடிச்சென்றது.

01 நவம்பர் 2007 அன்று தேவேகௌடா மீண்டும் ஒரு ஒப்பந்த அறிக்கையை பாஜக தலைமைக்கு அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையைப் போன்ற ஒரு அரைவேக்காட்டுத் தனமான, ஆபத்தான ஒப்பந்த அறிக்கையை இது வரை இந்திய அரசியல் சரித்திரத்தில் கேள்விப்பட்டது இல்லை என்று ஊடகங்களில் கைகொட்டிச் சிரித்தார்கள் அரசியல் விமர்சகர்கள். தேவே கௌடாவின் 12 அம்சங்கள் நிறைந்த அந்த ஒப்பந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் வேடிக்கையான நிபந்தனைகளில் ஒன்று -

"மிகவும் முக்கியமான நிர்வாகப் பதவிக்கான நபர்கள் மற்றும் அந்த இடங்களுக்கான பதவி உயர்வுகளை கூட்டாளியான ஜனதா தளக் கட்சியின் தலைவரின் ஆலோசனையுடன் முதல்வர் தீர்மானிப்பார். நீதிமன்றப் பொறுப்புக்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் போன்ற விஷயங்களிலும் இந்த உடன்படிக்கை தொடரும். இதில் இருந்து எந்தக் கூட்டாளி பின்வாங்குகிறாரோ அவர் கூட்டணியில் இருந்து வெளியில் வரலாம்'' என்று தெரிவித்துள்ளது.

இந்த வேடிக்கையான, விநோதமான நிபந்தனையை பாரதிய ஜனதா ஏற்றுக்கொண்டு ஆட்சியில் பங்கேற்கிறது. எங்கே போய் அடித்துக் கொள்வது? இது போன்ற சுயநலம் நோக்கிய, சுயலாபம் நோக்கிய உடன்படிக்கைகளின் படி அமையும் அரசு மாநிலத்துக்கு என்ன செய்ய முடியும்? அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வரால் எந்த வகையில் நிம்மதியாக மக்கள் நலனைக் கவனிக்க முடியும்?முழுக்க முழுக்க சுயநலத்தின் அடிப்படையில் மன்னராட்சிக்கு சற்றும் குறையாத வகையில் அமைந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் இப்படி வரும் ஆட்சியால் மக்களுக்கு என்ன சேவையை செய்ய முடியும்?

நமக்குத் தண்ணீர் தருவதற்கு அவர்கள் அப்புறம் அடித்துக் கொள்ளட்டும்.

முதலில் அந்த மாநிலத்தையும் மக்களையும் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.

புகைப்படங்கள் - நன்றி- தி ஹிந்து நாளிதழ்


Wednesday, November 7, 2007

சரித்திரத்தைப் பேசும் சமூக அக்கறையுள்ள குறும்படம் ரேகை

பயாஸ்கோப் முனுசாமி




மருதிருவர் குறும்படத்தை இயக்கிய தினகரன் ஜெய், ஜெகமதி கலைக்கூடத்துக்காக இயக்கியிருக்கும் இன்னொரு சரித்திர ஆவணம் - ரேகை குறும்படம். அவருடைய முதல் முயற்சியான மருதிருவர் படத்தில் மருது சகோதரர்களின் விடுதலைப்போர் வரலாற்றையும் ஆலயங்களுக்கு அவர்கள் ஆற்றிய திருப்பணிகளையும், நல்ல ஓவியங்கள் மற்றும் ஆவணங்களின் வழியாகக் காட்சிப்படுத்தியிருந்தார் தினகரன் ஜெய்.
ரேகை படமும் தமிழக விடுதலைப் போராட்டத்துடன் தொடர்பு உடையது.

பிரிட்டிஷ் அரசின் ஆளுகையில் இருந்த நாடுகளில் அவர்களுக்கு எதிராகக் கலகத்தில் இறங்கிய இனக் குழுக்களையும் சமூகங்களையும் அடக்கி ஆளுவதற்கு பலவிதமான வழிகளை பிரிட்டிஷ் அரசு கடைப் பிடித்தது. அதில் ஒன்று ""குற்றப் பழங்குடிகள் சட்டம்''. 1911ல் நடைமுறைப் படுத்தப்பட்ட இந்தச் சட்டம் நான்கு முறை திருத்தி அமைக்கப்பட்டது. ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடும் குழுக்கள் எவையெவை என்று நாடு முழுதும் கணக்கெடுக்கப்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்ட இந்திய இனக்குழுக்களைத் தேர்ந்தெடுத்தனர். தமிழகத்தில் கள்ளர், மறவர், அகமுடையார் உள்ளிட்ட சுமார் 90க்கும் மேற்பட்ட சாதியரை இந்தக் கொடுஞ் சட்டத்தின் கீழ் வகைப்படுத்தினர். இதில் குறிப்பாக பிற மலைக்கள்ளர்கள் இச்சட்டத்தின் கீழ் மிகவும் அதிகமாகக் கொடுமைப் படுத்தப் பட்டனர். சுமார் 15000 பேர் கண்காணிக்கப்பட்டு பலர் குற்றவாளிகளாகத் தண்டனை பெற்றனர் என இந்த சட்டத்தின் கொடுமையை சொல்லி விரிகிறது திரைப்படம்.

இதற்கு எதிரான கிளர்ச்சிகள் பல இடங்களில் வெடித்தன. ஆனால் போலீசாரோ கள்ளர்களுக்கு எதிராக பிற சாதியினரை புகார் கொடுக்கத் தூண்டி விட்டனர். பிறமலைக் கள்ளர்கள் ராதாரி சீட்டு வாங்கிக் கொண்டுதான் ஊரில் நடமாட வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. போலீசுக்குப் பிடிக்காதவர்களும் இந்தச் சட்டத்தால் பெரிதும் பழி வாங்கப் பட்டனர். 1920ன் இறுதியில் போலீஸ் ரேகை நிபந்தனையை விதித்தது. இந்தக் கொடுமையான சட்டத்தின் படி குற்றம் சாட்டப்பட்ட குழுக்களில் இருக்கும் ஆண்கள் அனைவரும் தங்கள் பகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில் வைக்கப்பட்ட பதிவேட்டில் தங்கள் கைவிரல் ரேகையைப் பதித்து விட்டு இரவு முழுதும் காவல் நிலையத்திலேயே தங்க வேண்டும். அதில் மேலும் கொடுமை என்னவென்றால் அதிகப் போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலத்தில் பல கிராமத்தில் வசித்தவர்களுக்கு நடந்து வந்து காவல் நிலையம் சேரவே பல மணி நேரங்கள் பிடித்தன. அந்த இனக்குழுக்களைச் சேர்ந்த பெண்களும் குழந்தைகளும் அடைந்த துயரங்களுக்கு அளவே இல்லை.

இதை எதிர்த்து 1920, ஏப்ரல் 3 அன்று பெருங்காமநல்லூரில் பெரும் கலவரம் வெடித்தது. படையாச்சி, ஆதிதிராவிடர் போன்ற பல சாதியினரும் இதற்கு எதிராகக் கிளம்பினார்கள். கிளர்ச்சியாளர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ""கட்டை விரலை வெட்டிக்கொள், அல்லது சிறைக்குப்போ. ஆனால் ரேகை மட்டும் வைக்காதே'' என முத்துராமலிங்கத் தேவர் முழங்கினார். வன்னியகுல சத்திரிய சபா நடத்திய ரேகை சட்ட ஒழிப்புப் போராட்டம், செய்யூர் ஆதிதிராவிடர் பேரவை நடத்திய ரேகை எதிர்ப்புப் போராட்டம் எனப் பல போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. ஒரு வழியாக 1947 ஜ÷ன் 05ல் ரேகை சட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த ஒரு பரந்த வரலாற்றை, குற்றப்பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் கதையை, அவர்களுடைய போராட்டத்தின் கதையை திறம்படச் சொல்லிச் செல்கிறது படம். இந்தப் படத்தின் சிறப்பு அம்சம் என்று சொல்ல வேண்டும் என்றால், ஆவணப்படமாக இருந்தும், ஆவணங்களையும் ஓவியங்களையும் மட்டும் துணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தேர்ந்தெடுக்கப் பட்ட சம்பவங்களை நடிகர்களை வைத்து நடிக்க வைத்துப் படமாக்கி இருப்பதும் படத்தின் கதை சொல்லும் களத்தை வலுவாக்குகிறது.இந்திய சுதந்திரப்போர் குறித்த சரித்திரத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறும் குற்றப்பரம்பரை சட்டம் மற்றும் அதன் கொடுமையால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்றையும் முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என்னும் சமூகப் பொறுப்புடனும் அக்கறையுடனும் இந்தப் படைப்பினை வழங்கியிருக்கும் ஜெகமதி கலைக்கூடமும் தயாரிப்பாளர் சி.தீனதயாளபாண்டியனும் எழுதி இயக்கிய தினகரன் ஜெய் மற்றும் இதில் ஈடுபட்ட கலைஞர்கள் அனைவரும் நம் பாராட்டுக்கு உரியவர்கள். சமீபத்தில் ரேகை குறும்படம் மக்கள் தொலைக்காட்சியில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி.

மற்ற தொலைக்காட்சி நிலையங்களும், தினகரன் ஜெய் போன்ற இயக்குநர்களையும் ரேகை போன்ற சமூக அக்கறையுள்ள படைப்புக்களையும் ஊக்குவிக்க வேண்டும். தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் தமிழில் பேச முடியாத தமிழ்த் திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அபத்தமான பேட்டிகளையும் தரமற்ற படங்களுக்கும் நடிகர்களுக்கும் அரசியல் காரணங்களால் தரப்படும் தராதரமல்லாத விளம்பரங்கள் மற்றும் விருதுகள் வழியாக பார்வையாளர்களிடையே கருத்துத் திணிப்பு செய்வதையும் மற்ற மூன்றாம் தரமான கண்றாவிகளையும் சற்றுக் குறைத்து இவை போன்ற நல்ல திரைப்படங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும். இதனால் சமூக அக்கறையுள்ள திரைப்படங்களை எடுக்க முன் வருபவர்களுக்கு மேலும் ஊக்கம் தருவதாக அது அமையும் இல்லையா?

மதராசபட்டிணம்

வியாஸன்

புதினங்கள், சிறுகதைகள் எனப் படைப்புலகில் மிக அற்புதமான தடங்களைப் பதித்து வருகிறவர் நரசய்யா. கற்பனைப் படைப்புக்கள் மட்டும் அல்லாது வரலாறு, தொல்பொருள் ஆய்வு போன்ற துறைகளிலும் தீர்க்கமான ஆர்வம் கொண்டு கடின உழைப்பினை மேற்கொண்டு பல அரிய ஆதாரங்களைத் திரட்டி ஆய்வு நூல்களைப் படைத்து வருகிறார். அந்த வரிசையில் அவருடைய கடல்வழி வணிகம் என்னும் நூல் தமிழில் மிகவும் பயனுள்ள வெளியீடு என்று பல தளங்களிலும் வெகுவாகப் பாராட்டப் பட்ட நூலாகும். பல வடமொழி, தமிழ் இலக்கிய நூல்களில் கிடைத்த குறிப்புக்களின் உதவியுடனும், தொல்பொருள் சான்றுகளின் வலுவுடனும் மிகவும் எளிமையான தமிழ் நடையில் இந்திய கடல் வாணிகம் பற்றிய பல அரிய, பயன்தரும் தகவல்களை உள்ளடக்கி வெளிவந்தது கடல்வழி வணிகம். இந்த நூலை மிகவும் அழகுடன் கட்டமைத்துப் பதிப்பித்து இருந்தார்கள் பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தினர். இப்போது நரசய்யாவின் இன்னொரு அற்புதமான வரலாற்றுப் பதிவுகள் அடங்கிய ""மதராசபட்டினம்'' என்னும் நூலை பதிப்பித்து இருக்கிறார்கள்.


"கடல்வழி வணிகம் எழுதிக் கொண்டிருக்கையில் கிடைத்த பல விவரங்களும் அந்நூலில் சேர்க்க இயலாதவையாய் இருந்தன. அதே போல நீரும் நிலமும் என்ற நூலை இப்போது நான் எழுத முயற்சித்துக் கொண்டிருக்கும் போதும் பல விவரங்கள் எனக்குக் கிடைத்தன. சுனாமியின் போதும், பிறகும் நான் பல கரையோர இடங்களுக்குச் சென்று பார்வையிட நேர்ந்தது. முக்கியமாக, மாமல்லபுரத்துக் கண்டு பிடிப்புக்கள், சுனாமியின் பின்பு இயற்கையால் வெளிக்கொணரப்பட்டவை மூலமும் இந்த மாநகரின் பல முகங்களையும் காண முடிந்தது. ஆகையால் இந்த நூல் எழுத வேண்டிய அவசியமும் அவசரமும் என்னுள் விசுவரூபமாகப் பரிணமித்தன'' என்று தன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் நரசய்யா.

மதராசப்பட்டினத்தின் தொன்மையால் மிகவும் கவரப்பட்டு இருக்கிறார் நரசய்யா. போர்ச்சுகீசிய நாட்டு அரசிளங்குமரியான இன்பெண்டா கேதரைன் இரண்டாம் சார்லûஸ மணந்தபோது சீதனமாக பம்பாய் கொடுக்கப்பட்டதற்கு முன்னரே, 1630ல் பிறந்த ஜாப் சார்னாக், கிழக்கிந்தியக் கம்பெனியில் ஒரு கீழ்நிலை வணிகனாக கம்பெனியின் காஸிம் பஜார் தொழிலகத்தில் 1658ல் சேர்ந்து கல்கத்தாவை, ஒரு ராஜதானி நகரமாக அமைக்க அஸ்திவாரம் போடுவதற்கு முன்னரே இந்த மதராசபட்டினம் உருவானது. எனவே இந்த மூன்று ராஜதானி பட்டினங்களில் மதராசபட்டினம் காலத்தால் முதன்மையானது என்கிறார் நரசய்யா.

மதராசபட்டினம், 1600-1947 வரையிலான சென்னையின் சரித்திரத்தை மிகவும் தெளிவாகவும் எளிதாகவும் வார்த்தைச் சித்திரங்களால் வரைந்து செல்கிறது. சென்னைப் பட்டினத்தின் துவக்க கால வரலாறு கோரமண்டலக்கரை (சாந்தோமின் பிறப்பும் வளர்ச்சியும்) யில் இருந்து துவங்குகிறது. மதராசபட்டினத்தில் ஆங்கிலேயர் வருகை, கோட்டை சீரமைப்பு, அது தொடர்பான சில சம்பவங்கள், நீதிமுறைகள், துபாஷிகள், போக்குவரத்து, தொலைபேசி, பேருந்து, ரயில் மார்க்கம், ஆகாய விமானம், சென்னைப் பட்டினத்தின் பஞ்சங்கள் போன்றவைகளைத் தொட்டு விரிவாகத் தொடர்கிறது. நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் நரசய்யாவின் கடுமையான உழைப்பு பிரத்யட்சமாகத் தெரிகிறது. மதராஸ் பல்கலைக்கழகம், தமிழில் அச்சுக்கலை தோன்றியது, மதமாற்ற முயற்சிகள், அன்றைய பத்திரிகைகள், முதல் நகராண்மை, சுங்கவரி முறைகள் போன்ற நுணுக்கமான விஷயங்களை மிகவும் எளிமையாக சொல்லி அத்தியாயங்கள் விரிகின்றன.

மொத்தத்தில் ஒரு தெளிவான சரித்திரத்தை, சென்னைப் பட்டினத்தை நேசிப்பவர்களை மிகவும் மகிழ்ச்சியுறச் செய்யும் நூல் இது.

கடல் வணிகம் போலவே மிகவும் நேர்த்தியாக அழகுணர்வுடன் கட்டமைக்கப் பட்டிருக்கும் இந்த நூலில் ஒரே ஒரு சிறிய குறையை, - குறை என்று ஏன் சொல்ல வேண்டும்? ஒரு சிறிய நெருடல் என்று சொல்லிக் கொள்ளலாம். இவ்வளவு அற்புதமான தகவல்களைக் கொண்டு கண்ணுக்கு மிகவும் இதமாக அச்சிடப்பட்டிருக்கும் இந்த நூலின் வடிவம் - படிக்கும் போது மிகவும் அசௌகர்யமாக உணர வைக்கிறது. லகுவாகப் படிக்க ஏதுவாக அது இல்லை. மிகப்பெரிய அளவில் படங்கள் அல்லது ஓவியங்கள் கொண்ட நூல் என்றால் இந்தப் பரந்த அளவு சரிதான். ஆனால், சுவாரசியத்தைக் கூட்டும் அளவுக்கு சரித்திரச் சான்றுகளுடன் படிப்பவர்களின் கைகளைப் பிடித்து இட்டுச் செல்லும் இந்த நூலின் அளவு கையில் ஏந்திப் படிக்க மிகவும் அசௌகர்யமாக உள்ளது. பல பதிப்புக்கள் காண வேண்டிய நூல் இது. அடுத்த பதிப்புக்களில் இந்த அசௌகர்யத்தை பதிப்பாளர்கள் சரி செய்ய வேண்டும்.

ஆனால் கஷ்டப்பட்டாவது இந்த நூலைப் படித்து விடுங்கள். சென்னையைப் பற்றிய மிக அரிதான தகவல்களை உங்கள் விரல் நுனிகளில் வைத்திருப்பீர்கள் நீங்கள்.


பதிப்பாளர் முகவரி:

பழனியப்பா பிரதர்ஸ்"

கோனார் மாளிகை'

25, பீட்டர்ஸ் சாலை, சென்னைþ600 014.விலை: ரூ.275/-

Saturday, November 3, 2007

சனிமூலை

ராகவன் தம்பி


நீங்கள் அதிகம் கவனித்து இருப்பீர்களா என்று தெரியாது. சென்னையில் எப்படி என்று தெரியாது.
இங்குள்ள குருமார்கள் - இசை, நாட்டியம் என்று கற்பிக்கிறவர்கள் தங்கள் மாணாக்கர்களை பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளும்போதே அடுத்தவர்களின் நிகழ்ச்சிகளை அவர்கள் பார்க்கப் போகக்கூடாது என்று தலைமேல் அடித்து சத்தியம் வாங்கி செயல்படுவது போல இருக்கும்.

அந்த மாணாக்கர்களும், அடுத்தவர்களின் நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே ஏதோ தங்கள் குருவுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்து விடுவோமோ என்று அச்சப்படுவது போல மற்ற குருமார்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது முடிந்த வரை நிகழ்ச்சி நடக்கும் பகுதியைச் சுற்றிக் குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரத்துக்காவது சுற்றி வளைத்துச் செல்ல முயற்சிப்பார்கள்.சில இடங்களில் ஒரே வேளையில் இரண்டு பேருடைய கச்சேரி அமைந்து விடும்.

அந்த இரண்டு பேரும் வேறு வேறு குருமார்களின் சிஷ்யப் பிள்ளைகளாக இருந்தால் இன்னொருவர் பாடும்போதோ அல்லது நடனமாடும்போதோ அரங்கத்துக்கு உள்ளே ஏதோ வெடிகுண்டு வைத்திருப்பது போன்ற பாவனையில் வெளியே சற்றுத் தூரமாகத் தள்ளி நின்று முந்தைய நிகழ்ச்சி முடிந்ததும் எவ்விதப் பயமும் இன்றி உள்ளே பிரவேசிப்பார்கள்.அப்படித் தவறி உள்ளே இருந்து விட்டால், முந்திப் பாடியவர் அடுத்துப் பாடுபவரின் நிகழ்ச்சி துவங்கியதுமே, படை பரிவாரங்களுடன் அரங்கத்தை விட்டு வெளியேறுவார்கள்.இந்த அரிய காட்சியை நீங்கள் என்றாவது கண்டு களித்தது உண்டா?
நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்கத்துக்குள் தின்பண்டங்கள் அல்லது திரவ பானங்களைக் கொண்டு செல்லக்கூடாது என்பது பொது விதி. எந்த சட்டமும் இதை வலியுறுத்த வில்லை. ஆனாலும் நாகரிகத்தை மதிக்கும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு சுயக்கட்டுப்பாடு இது. அரங்கம் என்பது ஒரு ஆலயம். சரஸ்வதி அங்கே பிரத்யட்சமாகி இருக்கிறாள். அரங்கத்துள் சூழ்ந்த ஒவ்வொரு அணுவும் துகளும் கலைஞனுக்கு ஆராதனைக்கு உரியவை. பார்வையாளனும் குறைந்த பட்ச மரியாதையையாவது அரங்கத்துக்குத் தரவேண்டும். நீங்கள் ஒருவேளை ஏதாவது ஒரு வண்ணத்தில் துண்டு, கைக்குட்டை, கற்கள் பதித்த மோதிரங்கள், ஏதாவது ஒரு கோயில் வழியாக யாருக்கும் தெரியாமல் அலுவலகத்துக்குப் போவது போன்ற ஒரு சில சின்னத் தள்ளுபடிகளை மட்டும் சலுகையாக்கிக் கொள்ளும் பகுத்தறிவு சிங்கங்களில் ஒருவராக இருக்கலாம். சரஸ்வதி, பிரத்யட்சம், ஆலயம், புனிதம் போன்ற விஷயங்களில் ஏற்பில்லாதவராக இருக்கலாம். அப்படி இருந்தாலும் அரங்கத்தில் தின்பண்டங்களைக் கொண்டு போவது என்பதில் சில கெடுதிகள் உண்டு என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. அரங்கத்தின் உள்ளே மிகவும் விலை உயர்ந்த தரைவிரிப்புக்களை பயன் படுத்தியிருப்பார்கள். நீங்கள் கொண்டு செல்லும் உணவுப்பண்டங்கள் அவற்றில் சிதறியது என்றால், இரவு வேளையில் எலிகள் வந்து அந்த விலை உயர்ந்த தரைவிரிப்பினைக் கடித்துக் குதறிவிடும் ஆபத்து இருக்கிறது.இரண்டாவதாக குளிர் பதனப்படுத்தப்பட்ட அந்த அரங்கில் நீங்கள் வெங்காயம், பூண்டு போன்ற வாசனைத் திரவியங்கள் கலந்த பதார்த்தங்களை சாங்கோபாங்கமாக உள்ளே தள்ளும் போது அþரம்மியமாகப் பரவும் அதன் வாடை கச்சேரியை ரசித்துக் கொண்டிருப்பவர்களை சில கணங்களாவது சற்று நிலைகுலைய வைக்கும். இசைமழை இதமாக வருடிக் கொண்டிருக்கும் வேளையில் அங்கிள் சிப்ஸ் போன்ற வறுவல் விஷயங்களை சத்தம் வரக்கூடாது என்று திருட்டுத்தனமாக நீங்கள் பிரிக்கையில் அடுத்த இருக்கையில் இருப்பவருக்கு மண்டையில் ஏதோ ஆணி வைத்துக் கீறியதைப் போன்ற ரணவேதனையை உண்டாக்கும் பாவம் உங்களுக்கு வந்து சேரும். எல்லாவற்றுக்கும் மேலாக மேடையில் நமக்கு நிகழ்ச்சியை வழங்கும் கலைஞரை நாம் அவமதிக்கிறோம். தலைநகரில் கமானி, ஸ்ரீராம் சென்டர். சிரி ஃபோர்ட் போன்ற அரங்கங்களில் நிகழ்ச்சிகள் நடக்கும் போது எதையும் நீங்கள் எடுத்துச் செல்ல முடியாது. நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் அத்திம்பேராக இருக்கலாம். மாமனாராக இருக்கலாம். மச்சினனாக இருக்கலாம். கைத்தடியாக இருக்கலாம். அங்கு அரங்கத்துக்குள் உள்ளே நுழையும் போது வெறுங்கையுடன் தான் நீங்கள் நுழைய வேண்டும். உணவுப் பண்டங்கள் எதையும் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். அங்கிருக்கும் காவலர்கள் உங்களை வழிமறித்து தின்பண்டங்களை வெளியில் வைத்து விட்டு வருமாறு எச்சரிப்பார்கள். எந்தத் தமிழனும் அங்கு உணவுப் பொருட்களை உள்ளே எடுத்துச் சென்று நான் பார்த்தது இல்லை.இங்கு தலைநகரில் நமக்கென்று ஒரு அற்புதமான அரங்கம் இருக்கிறது. வேறு எந்த மொழிக்காரர்களுக்கும் இல்லாத ஒரு பெருமையைத் தருகிறது அது நமக்கு. தெலுங்கு சங்கங்களும், கன்னட சங்கங்களும் மலையாள சங்கங்களும் இன்னும் பல மொழிச் சங்கங்களும் தலைநகரில் தலைகீழாக முயற்சித்தும் திருவள்ளுவர் கலையரங்கத்தைப் போன்ற ஒரு கலையரங்கத்தை அவர்களால் நிர்மாணிக்க முடியவில்லை. கன்னட சங்கத்தில் சமீபத்தில் ஒரு கலையரங்கத்தை நிர்மாணித்து இருக்கிறார்கள். அதுவும் பரப்பிலும் மற்ற வசதிகளிலும் திருவள்ளுவர் கலையரங்கத்தின் அருகில் நெருங்க முடியாது. தில்லித் தமிழ்ச் சங்கம் தலைநகர்த் தமிழனுக்கு ஒரு பெருமைதரும் முகவரி. அதில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் கலையரங்கம் நாம் சூடிக்கொண்டிருக்கும் ஒரு கலாபூர்வமான மகுடம். ஆனால் நம்மில் எத்தனைபேர் இதை உணர்கிறோம் என்று தெரியவில்லை. தமிழ்ச் சங்கத்தின் இப்போதைய செயற்குழு மிகவும் அருமையான நிகழ்ச்சிகளை ஒவ்வொரு மாதமும் ஏற்பாடு செய்து வருகிறது. தலைநகரில் இதனைப் பாராட்டாத தமிழ் நெஞ்சங்கள் இல்லை என்றுதான் சொல்லலாம். சமீபத்தில் தமிழ்ச் சங்க அரங்கத்தின் ஒலிபெருக்கி சாதனங்களையும் தேசிய நாடகப் பள்ளியின் பேராசிரியர் மனோகரனின் வழி காட்டுதலுடன் மிகவும் நவீனமாக்கி இருக்கிறார்கள். (இன்னும் திரைப்படம் காட்டப்படும் அந்தத் திவச வேஷ்டித் திரையை மட்டும் மாற்ற வேண்டும். அதையும் சீக்கிரம் மாற்றலாம் என்று சொல்லி விட்டார் முகுந்தன்).இப்படி அனைத்து மேன்மைகளும் உள்ள அந்த அரங்கத்தை நாம் எப்படி மதிக்கிறோம் என்பதுதான் மிகவும் வேதனையாக இருக்கிறது. தமிழ்ச் சங்கத்தில் மிகவும் அதிகமான கூட்டம் இருக்கும் நிகழ்ச்சியன்று நீங்கள் போய்ப் பார்த்தால் தெரியும். எந்தக் கட்டுப்பாடும் அங்கு இருக்காது. உங்களுக்குத் தெரிந்த பெரிய ஆட்களே வகை வகையாக தின்பண்டங்களை உள்ளே எடுத்துச் செல்வார்கள். திரவபானங்கள்- சூடானவை, குளிர்ந்தவை என்று விதவிதமாக அரங்கத்துக்கு உள்ளே எடுத்துச் செல்லப்படும். நம் கலாரசிகர்களை விட்டால் அரங்கத்துக்கு உள்ளேயே ஒரு அடுப்பையும் எடுத்துச் சென்று அங்கேயே உப்புமா கிளறி சாப்பிட்டு நிதானமாக ஒரு காப்பியையும் கலந்து சாப்பிட்டு வாயைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்து விடுவார்கள். தமிழ்ச் சங்க ஊழியர்களும் இவர்களைக் கண்டிப்பது இல்லை. நிறுத்துவது இல்லை. அவர்களும் என்ன செய்வார்கள்? அடுத்த தேர்தலில் அந்த முட்டாளோ முரடனோ ஜெயித்து செயற்குழுவில் வரலாம். நமக்கு எதற்குப் பகை என்று அவர்கள் இருப்பார்கள். பார்வையாளர்கள் இப்படி ஒரு பக்கம் என்றால் நாம் தேர்ந்து எடுத்து அனுப்பும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்யும் கொடுமைதான் மிகவும் அதிகபட்சமானது. விழாவுக்கு வரும் பெரிய மனிதர்களுக்கு தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகிகளே வலிந்து உள்ளே காப்பியும் தின்பண்டங்களையும் அனுப்பி வைப்பார்கள். அவர்களுடன் இவர்களும் அமர்ந்து சாப்பிடுவார்கள். அப்படி அந்த பிரபலங்களுடன் பக்கத்தில் அமர்ந்து அரங்கத்தில் சாப்பிடுவது அல்லது குடிப்பதை ஏதோ இந்திர பதவி கிடைத்து விட்டதாக நினைத்து அடுத்தவர்கள் மீது பார்வையை வீசுவார்கள் இந்த இரண்டாண்டு நட்சத்திரங்கள். (பதவி இல்லையென்றால் யார் செத்தாலும் பிழைத்தாலும் இந்தப் பக்கமே எட்டிப்பார்க்க மாட்டார்கள் இந்த இரண்டாண்டு நட்சத்திரங்கள்.). அப்படி அந்த சிறப்பு விருந்தினர்களால் ஒரு அரை மணி நேரத்துக்கு (பொதுவாக எந்த சிறப்பு விருந்தினரும் அரை மணி நேரத்துக்கு மேல் நிகழ்ச்சியில் தங்கி இருந்து அருள்பாலிப்பது இல்லை) பசி தாகம் தாங்க முடியாத நிலை என்று இவர்கள் கருதினால் மேடையின் உள்ளே ஒப்பனை அறைகள் இருக்கின்றன. அங்கே அவர்களுக்கு இவர்கள் ஊட்டிக்கூட விடலாம். அல்லது சங்க அலுவலகத்தில் எல்லா சேவைகளையும் செய்து முடித்து இங்கே அழைத்து வரலாம். ஆனால் முன்வரிசையில் உட்கார்ந்து இப்படி அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருப்பது மிகவும் வேதனை தரும் விஷயம். பல முறை நேரில் சொல்லிப் பார்த்தாகி விட்டது. சில முறை சில விருந்தினர்கள் முன்னிலையிலேயே சத்தம் போட்டு இருக்கிறேன். இதில் நிறைய விரோதங்களையும் கெட்ட பெயரையும் ஈட்டியதுதான் பலன். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றை சொல்லியே ஆகவேண்டும். யாரையும் எப்போதும் எதற்காகவும் ஒன்றும் சொல்லக்கூடாது என்று எனக்குப் பாடம் கற்பித்த நிகழ்ச்சி அது. சமீபத்தில் தமிழ்ச் சங்கத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. உள்ளே பட்டிமன்றத்துக் காரர்கள் பார்வையாளர்களை ஒருவகையான வன்மத்துடன் இரக்கமின்றி வதைத்துக் கொண்டிருந்தார்கள். நான் வெளியே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். எங்கள் நண்பர் ஒருவர் þ அரசு நிறுவனம் ஒன்றில் மிகப் பெரிய பதவியை வகிக்கிறார். இசைக்கலைஞரும் கூட. அவர் தின்பண்டங்களை ஒரு மூட்டையாக சுமந்து கொண்டு அரங்கத்தை நோக்கி வேகமாக வீரநடை போட்டு முன்னேறினார். என்னுடைய கெட்ட காலம். அவரை நிறுத்தி, ""சார், நீங்களே இப்படி பண்ணா எப்படி? தயவு செய்து எல்லோரையும் வெளியே கூப்பிட்டுக் குடுத்துடுங்கோ'' என்று சொன்னேன். சரி, என்று அவர் சிரித்துவிட்டுப்போனார். ஆனால் நான் சொன்னது அவருக்குக் கண்டிப்பாகப் பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரிந்தது. என்ன, என் மேல் விரோதம் பாராட்டத் தலைநகரில் இன்னும் ஒருத்தருக்கு நானே ஆயுதத்தைத் தீட்டிக் கொடுத்து விட்டேன். அதை பத்திரமாக வைத்துக் கொண்டு என்மீது எங்காவது பிரயோகிக்க இன்னும் ஒருவரை ஏற்பாடு செய்து கொண்டேன்.சற்று நேரத்துக்குப் பிறகு அரங்கத்துக்கு உள்ளே போனேன். அந்த மனிதர் ஜென்ம விரோதத்தைக் குரலில் குழைத்துக் கொண்டு என்னைக் கூப்பிட்டார். ""அங்கே பாருங்க'' என்று காட்டினார். அங்கே சிறப்பு விருந்தினராக வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு இரண்டாண்டு நட்சத்திரம் தின்பண்டங்களையும் தேனீரையும் கொடுத்துக் கொண்டிருந்தது. இன்னொரு இரண்டாண்டு நட்சத்திரம் அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பெருமை வழியும் பாவனையுடன் தின்று கொண்டிருந்தது. எனக்கு என்னமோ உபதேசம் பண்ணீரே? இப்போ என்ன சொல்றீர்?'' என்று ஆவேசமாக என்னைக் கேட்டார் அந்த அதிகாரி. என்ன சொல்வது? ""ரெண்டு செருப்பையும் கையாலே எடுத்துண்டு என்னை நாலு சாத்து சாத்துங்க. எனக்குப் புத்தி வந்துடும். என்னை மன்னிச்சிக்குங்க'' என்று கைகூப்பினேன்.இனி யாரையும் ஒன்றும் சொல்வதாக இல்லை. யாராவது இனி வீட்டில் இருந்து அடுப்பை எடுத்துக்கொண்டு வந்து சமைத்துச் சாப்பிட்டாலும் ஒன்றும் சொல்லப் போவதில்லை. ஏற்கனவே ஏழு பிறவிக்குத் தேவையான எதிரிகள் எனக்கு இருக்கிறார்கள். எதற்கு இன்னும் பட்டியலைப் பெரிதாக்க வேண்டும்?

சி.சு.செல்லப்பா பற்றிய முடிவுறாத ஒரு ஆவணப்படம் - 4

ராகவன் தம்பி

சி.சு.செல்லப்பாவின் வீட்டில் அவரைப் பற்றிய ஒரு ஆவணப்படம் தயாரிப்பதற்கான படப்பிடிப்பு துவங்கியதைப் பற்றிய குறிப்புக்களோடு சென்ற இதழில் நிறுத்தியிருந்தேன்.

செல்லப்பா பேசிக் கொண்டே இருந்தார். நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தார். பிறந்த ஊரான வத்தலக்குண்டு பற்றிய மகாத்மியத்தை, பள்ளி, கல்லூரி நாட்கள் பற்றி, தகப்பனார் பற்றி, தான் சரசாவின் பொம்மை மூலமாக எழுத்தாளர் ஆனது பற்றி, புதுமைப்பித்தன், மௌனி, பிச்சமூர்த்தி, க.நா.சு., கு.பரா. ஆகியோருடைய நட்பு கிடைத்தது பற்றி, அவர்களுடன் சண்டை போட்டது பற்றி, தினமணி அனுபவம் பற்றி, ஏ.என்.சிவரானுடன் போட்ட சண்டை பற்றி, எழுத்து இதழ் நடத்தியது பற்றி, தன்னுடைய இலக்கியக் கோட்பாடு பற்றி, இன்றைய இலக்கிய முயற்சிகள் பற்றி, சமகால எழுத்தாளர்கள் பற்றி, இலக்கிய விமர்சகர்கள் பற்றி இன்னும் எத்தனையோ விஷயங்களைப் பற்றிப் பேசத்துவங்கினார் செல்லப்பா. ஓரிடத்தில் அவருடைய வீட்டில் 1924ல் ஏற்றப்பட்ட காங்கிரஸ் கொடி, அவருடைய தகப்பனார் நெய்த கதர் வேட்டி, அவருடைய தாயார் நூற்ற கதர் நூல்கள், கராச்சி காங்கிரஸ் மாநாட்டுக்குப்போன அவருடைய சித்தப்பா அணிந்திருந்த கோட் பொத்தான்கள், சுதந்திரப் போராட்டத்தில் செல்லப்பா சிறை சென்றபோது அவருக்கு வழங்கப்பட்டிருந்த கைதிகளுக்கான கைதி எண் பதிக்கப்பட்ட பித்தளைத் தகடு (""எல்லோரும் திருடிட்டு ஜெயிலுக்குப்போவா. நான் ஜெயிலுக்குப் போய் இதைத் திருடிண்டு வந்தேன்''- என்று சொல்வார் செல்லப்பா) இவற்றையெல்லாம் காண்பித்து அவற்றைக் குறித்த விளக்கம் அளித்தார்.

ஏதோ ஒரு புது சக்தி அவருக்குள் நுழைந்து கொண்டதைப் போலத் தோன்றியது எனக்கு. நாங்கள் களைத்துப் போனாலும் அவர் களைக்கவோ சளைக்கவோ இல்லை. அவர் பேசிக் கொண்டு இருக்கிறார் --கேமரா ஓடிக் கொண்டு இருக்கிறது. கிடைக்கிற நேரத்துக்குள் ஒரு புகை போட்டுக் கொண்டு ஓடிவந்து விடலாம் என்றும் செல்லப்பாவுக்குத் தெரியாது என்று நினைத்து மெல்ல நழுவி வெளியே போவேன். திரும்பி வந்ததும் ""நான் இதை சொல்லிக் கொண்டிருந்தேன். நீ சிகரெட் பிடிக்க வெளியே போயிட்டே'' என்று மீண்டும் தான் சொன்னதில் முக்கியமான விஷயங்களை மீண்டும் சொல்லத் துவங்குவார். பதிவு ஆகியிருக்கும் என்று சொன்னாலும் விடமாட்டார். அன்று ஒரு குழந்தையைப் போல எங்களுடன் ஒத்துழைத்தார் செல்லப்பா.

இடையில் மாமியை அழைத்து சுப்பிரமணியன் கடையில் இருந்து பலகாரங்கள் வாங்கி வரச் சொல்லியும் காபி போட்டுக் கொடுக்கச் சொல்லியும் அதட்டுவார். நாங்கள் விருந்தாளிகள் என்றும் எதையும் வெளியில் இருந்து தருவித்துக் கொள்ளக் கூடாது என்றும் மாமியிடம் மிகவும் கண்டிப்பான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து இருந்தார். நானும் ரவீந்திரனும் அவரைக் கெஞ்சிக் கூத்தாடி வெளியில் இருந்து மதிய உணவை வரவழைக்க ஒப்புதல் அளிக்க வைத்தோம்.

மாமியையும் இந்தப் படத்துக்காக சிறிய நேர்காணல் செய்தேன். தொகுக்கப்படாத இந்தப் படத்தின் மிகவும் நெகிழ்வான கணங்கள் அவை. செல்லப்பா பற்றியும் அவருடைய கோபத்தைப் பற்றியும் வெறுமனே ஒரு கோடு காண்பித்தார் மாமி. நான், ""உங்களிடம் அவர் அப்படிக் கோபித்துக் கொண்ட ஓரிரு சம்பவங்களைச் சொல்லுங்கள் என்று கேட்டேன். ""புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும். அதையெல்லாம் உன்கிட்டே சொல்லிண்டிருக்க முடியாது'' என்று சொல்லும் இடம் ஒரு கவிதையைப் போல இருக்கிறது என்று தொகுக்கப்படாத பட நறுக்குகளைப் பார்த்த சுந்தரராமசாமி நெகிழ்ந்து போய் சொன்னார்.

மாலை ஆறு மணிக்குப் படப்பிடிப்பை நிறுத்தினோம். மீண்டும் மாமியின் கையால்தான் எங்களுக்குக் காபி என்பதை வலியுறுத்தினார். எல்லாம் முடிந்தது. நாங்கள் கிளம்ப வேண்டும்.

செல்லப்பாவுக்கு ஒரு தொகையைக் கொடுத்து விட்டு வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ரவீந்திரனிடம் கேட்டேன். அவர் நாசூக்காக நீங்கள் கொடுத்தால்தான் நன்றாக இருக்கும். நீங்களே அவரிடம் பேசிக் கொடுத்து விடுங்கள் என்று சொல்லிவிட்டுத் காற்று வாங்கப் போகும் சாக்கில் வெளியில் போய் நின்று கொண்டார். எனக்குப் பெரிய உதறல். சமையலறையில் மாமியிடம் சென்று அந்தத் தொகை அடங்கிய உறையை மெல்ல சாமிப் படத்தின் முன் வைத்தேன்.

"இது மாமாவுக்கு...

"மாமாக்குன்னா மாமா கிட்டே குடுத்துக்கோ. இங்கே எதுக்கு வைக்கணும். அதெல்லாம் உங்க விவகாரம். மாமா என்னை வைவார். இங்கே வைக்க வேணாம். அவர் மகா கோபக்காரர். கொன்னுடுவார்'' என்று சொல்லி உறையை எடுத்து என் கையில் திணித்து விட்டார். சரி. சண்டைக்காரரிடமே போகலாம் என்று கொஞ்சம் தைரியம் வரவழைத்துக் கொண்டு செல்லப்பா அருகில் போய் உட்கார்ந்தேன். ஓரிரு விஷயங்கள் ஏதேதோ பேசினேன். பிறகு மெல்ல உறையை எடுத்து அவர் முன் வைத்தேன்.


என்ன இது

"ஒண்ணுமில்லை. இதை உங்களுக்குக் கொடுக்கணும்னு ஆசைப்படுறேன்

அதெல்லாம் ஒண்ணும் வேணாம்-. எடுத்துக்கோ. கையில் இருந்து எதுக்கு நீ செலவு பண்ணணும்?''

இல்லை சார். நாளைக்கு இந்தப் படம் முடிஞ்சா எனக்கு எங்கிருந்தாவது பணம் கிடைக்கும். பரவாயில்லை''.


பணம் கிடைச்சப்புறம் கொண்டு வந்து கொடு. இப்போ வேணாம். எனக்குத் தெரியும். இதெல்லாம் நானும் பட்டதுதானே. என்னைப்போல இருக்காதே'

"நீங்க வாங்கிண்டா எனக்கு சந்தோஷமா இருக்கும்''

பணம் கிடைச்சப்புறம் குடு. நான் இல்லையா, மாமி கிட்டே குடு''

இதைப் பல நேரங்களில் தனியாக இருக்கும்போதும் நினைத்துக்கொள்ளும் போதும் இப்போது மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்து எழுதும் போதும் நெகிழ்ச்சியில் கரைந்து போகிறேன். தன்னிச்சையாகப் பெருகும் கண்ணீரைக் கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை. கரைந்து அழுகிறேன்.

இப்போது செல்லப்பாவும் இல்லை. மாமியும் இல்லை. படமும் முடியவில்லை. அந்த ஒளிப்பேழைகள் மற்றும் குறுந்தகடு மட்டுமே என் நினைவுகளைப்போல மௌனமாக என் வீட்டுப் பரணில் தூசினைச் சுமந்து தவம் புரிந்து வருகின்றன.

சில விஷயங்களை எழுதாமல் விட்டால் பலருக்கு சௌகர்யமாக இருக்கும். முக்கியமாக எனக்கு சௌகர்யமாக இருக்கும். இருக்கிற விஷயத்தை சொல்லப்போய் ஏற்கனவே கெட்ட பெயர் வாங்கிக் கொண்டிருக்கும் என்னால் இன்னும் சில சில்லறை விரோதங்களையும் பழி வாங்கல்களையும் தாங்கிக் கொள்ள முடியாது.

இந்தப் படத்தை எப்படித் திட்டம் இட்டிருந்தேன் என்றால், வத்தலக்குண்டில் துவங்கி, சின்னமன்னூரில் அவருடைய வீடு மற்றும் தெருக்களைப் படம் பிடித்து, செல்லப்பா பதிவினில் குறிப்பிட்டிருக்கும் சில இடங்கள் (புதுமைப்பித்தன், மௌனி ஆகியோரை சந்தித்த திருவல்லிக்கேணி மேன்ஷன், தினமணி அலுவலகம், அவருடைய வாடிவாசல் புதினத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்கள், அவருடைய நூல்கள், எழுத்து இதழ்கள் போன்றவற்றை இப்படத்தில் சேர்க்கத் திட்டம் இட்டிருந்தேன். செல்லப்பா எங்களுக்காகப் படத்தில் பேசியது எல்லாம் நவீனத் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை ஒட்டியது. அது குறித்த பல தகவல்களை விரித்துச் செல்கிறது அவருடைய பேச்சு நவீனத் தமிழிலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பல விஷயங்களை மிகவும் அனாயாசமாகத் தரும் இப்பதிவுகள். அந்தப் பதிவுகளை அங்கங்கு இடைசெருகி மாமியின் நேர்காணலுடன் முடிக்க நினைத்திருந்தேன். இதற்கான பணம் வேண்டும்.

கண்ணப்ப தம்பிரான் படம் முடித்து விட்டு பிறகு செல்லப்பாவைப் பற்றிய இந்தப் படத்தில் ஒரு பகுதியை எடுத்துக் காத்திருந்த எனக்கு ஒரு கிறுக்குப் பிடித்தது. முழுநேரத் திரைப்படத் தயாரிப்பாளன் ஆகவேண்டும் என்கிற கிறுக்கு அது. அந்தப் பைத்தியத்தின் தொடர்ச்சியாக அலுவலகத்தில் விடுப்பு எடுத்தேன். பல மாதங்கள் தொடர்ந்தது அந்த விடுப்பு. அலுவலகத்தில் பணியில் உடனடியாக சேரச்சொல்லி நெருக்கடி வந்தது. அதே நேரத்தில் ஒரு பஞ்சாபிக் கயவன் இந்தியில் தொடர் தயாரிக்கலாம் என்று ஆசை காண்பித்து அலுவலகத்தில் என் சேமிப்பில் இருந்த ஏறத்தாழ இரண்டு லட்சம் ரூபாய்களை செலவழிக்க வைத்து ஒரே மாதத்தில் என்னை ஏமாற்றினான். அதே நேரத்தில் எங்களுடன் தங்கியிருந்த என்னுடைய மைத்துனன், காலையில் ஆரோக்கியமாக அலுவலகம் சென்றவன் மாரடைப்பு ஏற்பட்டு மாலையில் பிணமாக வீடு திரும்பினான். என் மீதும் என் குழந்தைகள் மீதும் அபாரமான அன்பைச்சொரிந்த அவன் எங்களை விட்டுப் பிரிந்தபோது அவனுடைய வயது 32. அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு சற்று நிமிர்ந்தபோது என் அலுவலகத்தில் எனக்குத் தொடர்பே இல்லாத ஒரு பொய் வழக்கில் சில நல்லவர்களால் மாட்டி வைக்கப் பட்டேன். பின்னர் சகல மரியாதைகளுடன் மீண்டு வந்து அலுவலகத்தில் மீண்டும் சில ஆண்டுகள் பணிபுரிந்தேன். பின்னர் வடக்கு வாசலுக்காக பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டேன்.

எதற்கு இத்தனை கதை என்றால், இந்த சோதனைகள் இல்லாது இருந்திருந்தால் ஒருவேளை செல்லப்பா படத்தை முடித்து இருக்கலாமோ என்று தோன்றுகிறது. இடையில் உதவி கேட்டு சிலரிடம் சென்றேன். யாரோ சொல்லி சென்னைத் தொலைக்காட்சி நிலையத்துக்குச் சென்றேன். அங்கு ஒரு அதிகாரி ஆவணப்படங்களைப் பார்த்துக் கொள்பவர் என்றும் அவரை அணுகினால், இந்தப் படத்தை முடிக்க உதவி கிடைக்கலாம் என்றும் சொன்னார்கள். அவர் சொன்னதை அவருடைய வார்த்தைகளிலேயே இங்கு தருகிறேன்.

"யார் சார் செல்லப்பா? எழுத்தாளர்னா எங்களுக்கு நல்ல பாப்புலர் ஆன எழுத்தாளர்களைப் பத்திப் படம் பண்ணணும். (அவர் சொன்ன பெயர்களை இங்கு எழுதினால், உங்களுக்கு உண்மையிலேயே தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வமும் அக்கறையும் இருந்தால் நீங்கள் குமட்டிக் குமட்டி வாந்தி எடுப்பீர்கள். உங்கள் மீது எனக்குக் கருணை உண்டு. வேண்டாம்). போன வேகத்தில் திரும்பி விட்டேன். அந்த நேரத்தில் முன்னாள் இயக்குனர் ஏ.நடராஜன் இருந்திருந்தால் ஒருவேளை இந்தப் படம் சாத்தியப் பட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. நான் தயாரித்து இயக்கிய கண்ணப்பத் தம்பிரான் பற்றிய தெருக்கூத்துப் படத்தின் ஒளிப்பேழையுடன் தொலைக்காட்சி நிலையத்தில் நடராஜனை சந்தித்தபோது என்னை யார் என்று அவருக்குத் தெரியாது. எவ்வித சிபாரிசையும் கொண்டு செல்லவில்லை நான். அவரை முதன்முதலாக சந்தித்த அந்த நாள் அவருடைய பணிக்காலத்தின் இறுதிநாள். என்னை யார் என்று அப்போது தெரியாத போதும் கண்ணப்பத் தம்பிரான் பற்றிய தெருக்கூத்துப் படத்தின் ஒளிப்பேழையைக் கொடுத்ததும் தன்னுடைய உதவியாளரை அழைத்து உடனே என்னுடைய கடிதத்தின் மீது அந்தப் படத்தைத் தேர்வு செய்து குறிப்பு எழுத வைத்தார். அந்தப் படம் தொலைக் காட்சியில் ஒளிபரப்பானது. இப்போது செல்லப்பாவின் படத்துக்காக நான் சந்தித்தது வேறுமாதிரியான அதிகாரி ஒருவரை. வேறு என்ன? எல்லாம் என் நேரம்தான்.

பிறகு தலைநகரில் சாகித்ய அகாடமியில் அப்போது செயலராக ஒரு மலையாள இலக்கியவாதி இருந்தார். செல்லப்பாவின் மீது அதீதமான மதிப்பு வைத்திருப்பதாகவும் நான் சிபாரிசுக்காக யாரிடமும் போகக்கூடாது என்றும் தானே செய்து தருகிறேன் என்றும் சொன்னார். நம்பியிருந்தேன். யாரிடமும் போகவில்லை. ஆனால் அந்த ஆண்டு வேறு யாரோ யாரிடமோ போய் பலத்த சிபாரிசு வாங்கிவந்து வேறு ஏதோ படம் எடுக்க சாகித்ய அகாடமி நிதி உதவி அளித்தது. எனவே அந்த முயற்சியும் தோற்றுப்போனது. இணையத்தில் பல நண்பர்களிடம் வேண்டினேன். அப்போது முதல்வராக இருந்த கலைஞருக்குக் கடிதம் அனுப்பினேன். கடிதத்தை வீட்டுக்குத் தொலைநகலில் அனுப்பி வைத்தேன்.

ஒன்றும் நடக்கவில்லை. என் நினைவுகளைப் போல அதுவும் உறங்கிக் கிடக்கலாம். ஒருவேளை படத்தை வெற்றிகரமாக முடித்திருந்தால் இன்னும் பல தமிழ் படைப்பாளிகளை படம் பிடித்திருப்பேன். எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.

செல்லப்பா படம் எடுக்கத் துவங்கியபோது நண்பர்கள் கேட்டதற்கு இறுமாப்புடன் சொன்னேன். ""யாரும் ஆதரிக்கலைன்னா பரவாயில்லை. பொழுது போகாதப்போ எல்லாம் வீட்டிலே தனியா போட்டுப் பாத்துக்குவேன். செல்லப்பா ஞாபகம் வர்றப்போ எல்லாம் தனியாப் பேட்டுப் பாத்துக்குவேன்''.


அதைத்தான்செய்துகொண்டிருக்கிறேன் இப்போது.

Thursday, September 13, 2007

சி.சு.செல்லப்பா பற்றிய ஒரு முடிவுறாத ஆவணப்படம் - 3

ராகவன் தம்பி




செல்லப்பாவைப் பற்றிய ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டி அவருடைய வீட்டு வாசலில் பேராசியர் சி.ரவீந்திரனும் நானும் நின்ற கோலத்தோடு சென்ற இதழில் நிறுத்தியிருந்தேன்.

செல்லப்பா எங்களைப் பார்த்ததும் மறுபடியும் உற்சாகமாக எழுந்து உட்கார்ந்து கொண்டார். ஏதோ விட்ட இடத்திலிருந்து தொடருவது போல "சுதந்திர தாகம்' புதினம் பற்றி மீண்டும் பேச ஆரம்பித்தார். காந்தியின் முன்னால் சிகரெட் பிடிக்கும் துணிச்சல் கொண்ட ஒரு Rogue என்று நேருவைத் திட்டினார். எழுத்து பத்திரிகையில் இருந்து மீண்டும் சில பகுதிகளை மீண்டும் வாசித்துக் காட்டினார். அன்று இப்படியாகப் பேச்சு போய்க்கொண்டு இருந்தது.

நான் மெல்லக் காரியத்தில் இறங்கினேன். ""உங்களைப் படம் எடுக்கணும்''. சற்று நேரம் அமைதியாக இருந்தார். காதில் விழவில்லையோ என்று மீண்டும், ""சார், உங்களைப் படம் எடுக்கலாம்னு இருக்கோம்''. ""எடுத்துக்கோ. ரவீந்திரன். பக்கத்திலே வாங்கோ. கேமரா கொண்டு வந்திருக்கியா?'' என்றார். சரிதான். இவர் வேறு ஏதோ அர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறார். ""இல்லே சார். உங்களை ஒரு டாகுமெண்டரி படம் எடுக்கணும்''.

"சினிமாவா? நான் என்ன எம்.ஜி.ஆரா? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்''.
சினிமாவெல்லாம் இல்லை சார். உங்களைப் பேச வச்சு உங்க நேர்காணலைப் படமாக்குறோம். அவ்வளவுதான். நீங்க உங்க அனுபவங்களைப் பத்திப் பேசுங்கோ. பதிவு பண்ணி வச்சிக்கிறோம்.




"எந்த டிவியிலே போடப்போறேள்? டிவி எல்லாம் வேணாம். ஏற்கனவே என்னோட ஜீவனாம்சம் நாவலைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி வச்சாங்க. டி.வி. எல்லாம் வேணாம்''

ரவீந்திரன் துணைக்கு வந்தார். டி.வி. எல்லாம் இல்லை சார். இவர் கண்ணப்பத்தம்பிரானைக் கூடப் படம் பண்ணியிருக்கார். உங்க நினைவுகளைப் பதிஞ்சு வச்சிக்கிறோம் அவ்வளவுதான்''

செல்லப்பாவுக்குப் புரியவில்லை. ஆனால் கோபித்துக் கொள்ளவில்லை. சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். ஜீவனாம்சம் நாவல் பற்றியும் அது தொடராக வந்தது பற்றியும் ரவீந்திரனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். நான் சிகரெட் பிடிக்க மெல்ல வெளியே நழுவினேன். சிகரெட் முடித்து உள்ளே வந்தபோது மாமி சமையலறையில் காபி தயார் செய்து கொண்டிருந்தார். மாமியிடம் போய் விஷயத்தை சொன்னேன். ""மாமாவைப் படம் எடுக்கணும். சும்மா ஒரு டாகுமெண்டரி மாதிரிதான். கொஞ்சம் சொல்லுங்களேன்'' என்றேன். ""நான் அதுலே எல்லாம் தலையிட மாட்டேன். நீயே பேசிக்கோ. அவரைப் பத்திதான் உனக்குத் தெரியுமே? என்றார்.

மீண்டும் செல்லப்பா இருந்த அறைக்குப் போனேன். மாமி காபி எடுத்துக் கொண்டு பின்னால் வந்தார். ""மீனா இதோ பாரு. பென்னேஸ்வரன் என்னை எம்.ஜி.ஆர். மாதிரி சினிமா பிடிக்கணும்னு சொல்றான்'' என்றார் சிரித்துக் கொண்டே. காதில் கையைக் குவித்துக் கொண்டு மாமி இன்னும் அவருக்குச் சற்று அருகில் போனார். மீண்டும் அதையே சொல்லிக் கத்தினார் செல்லப்பா. ""ஒங்க ரெண்டு பேருக்கும் விவஸ்தை இல்லே'' என்று வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டே உள்ளே போனார் மாமி.





என்னிடம் கேட்டார் செல்லப்பா. ""அதுக்கு செலவாகுமே? என்ன செய்யப்போறே? யார் உனக்குப் பணம் தர்றா?'' என்று கேட்டார்.

"யாரும் பணம்லாம் தரல்லே. நான் கொஞ்சம் ஏற்பாடு பண்ணி வச்சிருக்கேன். அதுலேயே பண்ணிடலாம்'' என்றேன்.

"இந்த வேலை எல்லாம் எதுக்கு? என்னை மாதிரி தப்பெல்லாம் பண்ணாதே'' என்றார்.

"இல்லை சார். இதுக்காகவே கொஞ்சம் ஒதுக்கி இருக்கேன். எனக்குப் பண்ணணும் சார். உங்களைப் பத்திய ஒரு பதிவு எங்களுக்கு வேணும் சார்'' என்றேன்.

"எழுத்து'' தான் இருக்கே?'' என்றார்.

"இல்லே. நீங்க எல்லாத்தைப் பத்தியும் பேசறமாதிரி பதிவு வேணும் சார். நான் நல்லா பண்ணுவேன் சார். என்னைப் பத்தி உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? என்றேன்.

ஒன்றும் பேசவில்லை. அமைதியாக இருந்தார். சிறிய மௌனத்துக்குப் பின் ""கையிலே இருந்து இதுக்கெல்லாம் செலவு பண்ணாதே'' என்றார்.

"இல்லே சார். போட்ட பணத்தை எடுத்துடுவேன்'' என்றேன்.

"அதெல்லாம் ஆகாத காரியம். பார்ப்போம். வந்து எடுத்துக்கோ. எப்போ வர்றே?'' என்றார்.

"இன்னிக்கு ராத்திரி கிருஷ்ணகிரி போறேன். அடுத்த ஞாயித்துக்கிழமை வந்துடுவேன். வந்து ஏற்பாடு பண்ணிக்கலாம்'' என்றேன். "My lugguage is readily packed. I am ready for a journey". நான் உயிரோட இருந்தா வந்து எடுத்துக்கோ'' என்றார் சிரித்துக் கொண்டே.

ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. ஒரு மாதிரி கண்கலங்கிப் போயிருந்தார் ரவீந்திரன். செல்லப்பாவின் கையை இறுகப் பிடித்துக்கொண்டு நடுங்கிய குரலில், ""கண்டிப்பா இருப்பீங்க சார். நாங்க கண்டிப்பா அடுத்த ஞாயித்துக்கிழமை வர்றோம்'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

அன்று இரவு குடும்பத்துடன் கிருஷ்ணகிரிக்குக் கிளம்பினேன். ஒரு வாரம் கழித்துத் திரும்பி வந்து கண்ணப்பத் தம்பிரான் பற்றிய படம் எடுத்தபோது படப்பிடிப்பு உபகரணங்களை வாடகைக்கு எடுத்த அதே குட்நியூஸ் ஸ்டூடியோவில் காமரா மற்றும் படப்பிடிப்பு விளக்குகளுக்காக சொல்லி வைத்தேன். தயாராக இருக்குமாறு செல்லப்பாவிடம் சொல்லிவிட்டு வருவதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை செல்லப்பா வீட்டுக்குப் போனேன்.

சவரம் எல்லாம் செய்து கொண்டு மாப்பிள்ளை மாதிரி உட்கார்ந்து கொண்டிருந்தார். எனக்குப் பெருத்த ஆச்சரியத்தைக் கொடுத்தது என்னவென்றால், 92ல் அவர் தில்லி வந்திருந்தபோது உள்துறை அமைச்சகத்தில் என்னுடன் பணிபுரிந்த ராமராஜ், பாலசுப்பிரமணியன், மணிகண்டன் ஆகிய நண்பர்கள் நடத்திக் கொண்டு இருந்த ""இளங்குருத்து'' கையெழுத்துப் பத்திரிகை (இளங்குருத்து பற்றி அப்புறம் தனியாக எழுதுகிறேன். இப்போது எங்காவது பாதை மாறினால் உங்களுக்குக் கொலைவெறி வரும் என்று தெரியும்). ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார் செல்லப்பா. அப்போது நாங்கள் அவருக்கு அணிவித்த சால்வையைப் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தார். ஏதோ எனக்காகக் காத்துக் கொண்டு இருந்தது போல இருந்தது அவர் உட்கார்ந்திருந்த நிலை.

என்னைப் பார்த்ததும், ""என்ன கேமரா எல்லாம் கொண்டு வரல்லையா? நான் ரெடி'' என்றார் ஒரு சிறு குழந்தையைப் போல.

"இல்லை சார். நாளைக்குக் கேமரா எடுத்துண்டு வர்றேன். ஒரு படையே வரும். உங்களுக்குத் தொந்தரவு இருக்காது இல்லையா? நான் வர்றேன்று சொல்லிப்போகலாம்னு வந்தேன்'' என்றேன்.

"நான் உயிரோடு தான் இருக்கேன். நாளைக்கும் இருப்பேன். நீ வரலாம்'' என்று சொல்லிவிட்டுத் தூங்கப்போனார்.

அன்று மாலையே மீண்டும் ஸ்டூடியோவுக்குச் சென்று அடுத்த நாளைக்காகக் கேமரா, விளக்கு, உதவியாளர்கள் எல்லாம் புக் செய்து விட்டேன். தெரிந்த நண்பர் மூலம் கிடைத்தார் கேமராமேன் ரங்கசாமி. தமிழ்த்திரையுலகில் பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். குட்நியூஸ் ஸ்டூடியோவின் சுப்பிரமணியனும் சாமிநாதனும் கேமரா உதவியாளர்கள்.
மறுநாள் காலை ரவீந்திரன், நான், ரங்கசாமி கேமராமேன் மற்றும் உதவியாளர்கள் சகிதம் செல்லப்பா வீட்டுக்கு விடியற்காலையில் படையெடுத்தோம்.

நேற்றுப் பார்த்ததுக்கு செல்லப்பா சற்று பலவீனமாக இருந்தார். இரவு உடம்பு ரொம்பவும் சுகமில்லாமல் போனதாகவும் இரவு தான் மிகவும் பயந்துவிட்டதாகவும் மாமி சொன்னார். எனக்கும் ரவீந்திரனுக்கும் தோன்றியது. மறுநாளைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று. ஆனால் செல்லப்பா மிகவும் கடுமையாக வற்புறுத்தினார்.

அவருக்கும் சில விஷயங்கள் தெரிந்திருந்தது. ""எதுக்கு வீணா கேமரா வாடகை, வண்டி வாடகை எல்லாம் வீணாக்குறே? முடிஞ்ச வரைக்கும் எடுத்துக்கிட்டுப் போ'' என்று சொன்னார். ரவீந்திரனும் நானும் ரங்கசாமியும் மனதில்லாமல் படிப்பிடிப்புக்கான வேலைகளைத் துவங்கினோம்.நீங்களே கற்பனை செய்து பாருங்கள். அது சென்னையின் ஜ÷ன் மாதம். ஒரு சரியான மின்விசிறி வசதி கூட இல்லாத ஒரு சிறு அறை. அதில் நாங்கள் அதிகம் வெளிச்சம் பாய்ச்சும் விளக்குகளைப் பொருத்தினால் செல்லப்பாவின் உடல்நிலை கண்டிப்பாகப் பாதிக்கப்படும். எனவே மிகக் குறைந்த ஒளி அளவுள்ள விளக்கை, செல்லப்பாவின் மீது நேரடியாகப் பாயாத வண்ணம் வீட்டின் விட்டத்தின் மீது பாயவிட்டு அதன் எதிர்வினை ஒளியில் படம் பிடிக்கத் தயார் செய்து கொண்டார் ரங்கசாமி.

நிறைய க்ளூகோஸ் பொட்டலங்கள் வாங்கிச் சென்றிருந்தோம். அவற்றைக் கரைத்துத் தயாராக வைத்துக்கொண்டோம். களைத்துப்போனால் அவருக்குக் கொடுப்பதற்கு.அப்போது வெளியாகி வீடெல்லாம் இறைந்து கிடந்த சுதந்திர தாகம் நூல்களை செல்லப்பாவின் பின்னணியில் அடுக்கி வைத்தோம். கட்டிலின் மீது தலையணைகளை சரித்து வைத்து, ஒரு மகாராஜாவின் தோரணையில் அமர்ந்து கொண்டார் செல்லப்பா. (உண்மையிலேயே என் கண்ணுக்கு அந்த நேரத்தில் காம்பீர்யம் மிகுந்த யாருக்கும் தலைவணங்காத ஒரு மன்னனாகத்தான் காட்சியளித்தார் செல்லப்பா).

படப்பிடிப்பு துவங்கியது. கேமராவின் இந்தப்பக்கமிருந்து நானும் ரவீந்திரனும் கேள்விகளைக் கேட்கத் துவங்கினோம். நாங்கள் ஏற்கனவே பேசிக்கொண்டபடி அவருடைய இலக்கிய உலகப் பிரவேசம், மணிக்கொடி நண்பர்களின் தொடர்பு, புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, க.நா.சு. போன்றோர்களுடன் அவருக்கிருந்த நட்பு, அவருடைய தினமணி நாட்கள், எழுத்து அனுபவங்கள் போன்றவற்றை மிகவும் சுவாரசியமாக சொல்ல ஆரம்பித்தார் செல்லப்பா. கேள்விகள் கேட்பதை விட்டு அவர் சொல்வதைக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம் நானும் ரவீந்திரனும். அவரை இடையில் நிறுத்த மனது வரவில்லை எங்களுக்கு. அவர் சோர்வடையும் நேரத்தில் இடையில் நிறுத்த விரும்பினோம். சோர்வடைந்ததைக் காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து கொண்டிருந்தார் செல்லப்பா. ஓரிரு இடங்களில் அவர் மீது ஈ அமர்ந்தபோது அதை அவர் தட்டி விட எத்தனித்தார். அவர் சால்வையில் சேர்த்துப் பின் செய்யப்பட்டிருந்த லேப்பில் மைக்கையும் தட்டி விட்டார். ஒலிப்பதிவு தடையுற்றதால் நான் கேமராவுக்குக் "கட்' சொல்லவேண்டியதானது. "I am not your actor to say Cut and all " என்று என்னைக் கடிந்து கொண்டார் செல்லப்பா. படப்பிடிப்பு தொடர்ந்து கொண்டிருந்தது. எல்லாவற்றைப் பற்றியும் மீண்டும் பேசினார்.

ஆச்சரியம் என்னவென்றால், ஓரிருமுறை மைக்கைத் தட்டிவிட்டதால் தடைபட்டுப்போன இடங்களை அவர் மீண்டும் விவரிக்கத் துவங்கிய போது முன்னைவிட அதில் சுவாரசியம் இன்னும் சற்றுக் கூடியது.

இப்போதைக்கு சற்று நிறுத்திக்கொள்கிறேன். சுவாரசியத்துக்காகவோ அல்லது மர்மத்தைக் கூட்டவோ நிறுத்தவில்லை. இடமில்லாததால் நிறுத்துகிறேன். பலர் இந்தத் தொடர் பற்றிப் பாராட்டினாலும் சில நண்பர்கள் என்னைக் கடிந்து கொண்டார்கள்.

சனிமூலை ஒரே விஷயம் தாங்கி இப்படித் தொடர்ச்சியாக வரக்கூடாது என்றும் ஒரு மாதம் கழித்துப் படிக்கும்போது அதில் சுவாரசியம் குறைந்து விடுகிறது என்றும் சலித்துக் கொண்டார்கள். அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். இன்னும் ஒரே இதழில் முடித்து விடுவேன்.

செல்லப்பா பற்றிய ஆவணப் படம்தான் முடியவில்லை. எடுத்த வரை வீட்டில் தூங்குகிறது. அந்த அனுபவங்களையாவது சற்று முழுமையாகப் பகிர்ந்து கொள்ளலாமே என்ற உரிமையில் இந்தத் தொடர்ச்சி. இந்த முறை மன்னித்துவிடுங்கள். அடுத்த இதழுடன் செல்லப்பாவை முடித்து விடுவேன்.

அதன் பிறகு சனிமூலையில் தனித்தனியான விஷயங்கள்தான். நீங்கள் தான் பாவம். எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள வேண்டும்.