Thursday, December 20, 2012

சுருதி நழுவிய சோகம் - நித்யஸ்ரீ மஹாதேவன்

எங்கள் வீட்டுப் பெண் என்று எங்கள் குடும்பத்தில் நாங்கள் எப்போதும் அழைக்கும் நித்ய ஸ்ரீ,

வடக்கு வாசல் இசைவிழாக்கள் அனைத்திலும் கலந்து கொண்டு அற்புதமான தமிழிசை வழங்கி அனைவரையும் நெகிழ வைத்த  நித்யஸ்ரீ,

வடக்கு வாசல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு வந்தபோதெல்லாம் தன்னுடைய சகோதரன் வீட்டுக்கு வருவது போன்ற மகிழ்ச்சி தனக்கு உண்டாவதாக பெருமையுடன் அறிவித்த என் அருமை சகோதரி நித்யஸ்ரீ குடும்பத்தில் நிகழ்ந்த சோகம் மிகவும் வருத்தம் அளிக்கிறது.

அவருடைய சோகத்தில் மிகுந்த துயரத்துடன் பங்கேற்கிறேன்.

இதனை எழுதும்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தொலைக்காட்சி செய்தியில் சொல்கிறார்கள். அப்படி எல்லாம் இல்லை என்று நண்பர்கள் சொல்கிறார்கள்.  இரண்டாவதே உண்மையாக இருக்க வேண்டும் என்று
இறையருளை வேண்டுகிறேன். 
 
எல்லாவற்றையும் தாங்கும் மனத் திடம் இறைவன் அவருக்கு அருள வேண்டும் என்று மனமுருகி பிரார்த்தனை செய்கிறேன்.

நித்யஸ்ரீ மஹாதேவன் தம்பதியருக்கு.அழகான இரு சுட்டிப் பெண் குழந்தைகள்  ஒருமுறை சென்னையில் நடந்த அவருடைய இசை நிகழ்ச்சி ஒன்றில்  நித்யஸ்ரீ பாடிக் கொண்டிருந்தபோது மேடையில் அங்கங்கு  சிதறி இருந்த பூக்களைப் பொறுக்கி அந்தக் குழந்தைகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்த காட்சி இன்னும் மனதில் நிற்கிறது.

ஏதோ அவசரத்தில் எதற்கும் கொடுத்து வைக்காத மனிதனாகி விட்டார் மஹாதேவன்.

மனது மிகவும் கனத்து இருக்கிறது.

Friday, December 7, 2012

மச்சம் - இஸ்மத் சுக்தாய்

“சௌத்ரி... ஓ சௌத்ரி...  கொஞ்சம்  நான் சொல்றதைக் கேளேன்”

கணேஷ்சந்த் சௌத்ரி அமைதியாக இருந்தார்.
“உஷ்... உஷ்”...

“எதுக்கு இப்படி சில்வண்டு மாதிரி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கே?”

“எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு”

“மரியாதையா சும்மா உட்காரு.  இல்லேன்னா...”
“இனிமேலும் என்னால உட்கார முடியாது.  இங்கே பாரு.  உக்காந்து உக்காந்து முதுகெல்லாம் பலகை மாதிரி ஆகிப்போச்சு.  ஹே ராம்”­­

“ச்சு... ச்சு...

“எனக்கு  அப்படியே உடம்பெல்லாம் நடுக்கமா இருக்கு”

சௌத்ரி ஒன்றும் சொல்லவில்லை.