Saturday, February 28, 2009

முதல் மேடை நாடக அனுபவம்-4

கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞனின் "சாந்த் கா மூ டேடா ஹை'' (சந்திரனின் முகம் கோணியது) என்கிற கவிதையை என்னுடைய முதல் மேடை நாடகமாகத் தயாரித்த அனுபவத்தைக் கடந்த மூன்று இதழ்களாக எழுதி வருகிறேன். ஓரிரு இதழ்களில் எழுதி முடித்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டு, மாடு பற்றிய கட்டுரை எழுதிய மாணவன் போல, எங்கெங்கோ அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன்.

ஒத்திகைகளைப் பற்றி எழுதத் துவங்கி, எங்கெங்கோ சுற்றியலைந்து அந்த நாடகத்தில் என்னுடன் பணிபுரிந்த நண்பர்களைப் பற்றிய சிறு குறிப்புக்கள் எழுதினேன். அது இன்னும் முடியவில்லை. கொஞ்சம் மீதமிருக்கிறது.

வெளியில் எதை எதையோ எழுதினலும் உள்ளுக்குள் மனது நெகிழ்ந்து கரைந்து கொண்டிருப்பது ஒரு நல்ல கவிதையை வரைவதற்கான களம். ஆனல் அந்தப் பாழாய்ப் போன கவிதை மட்டும் எனக்குக் கைகூடாமல் தமிழினத்தை நலமாக வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

சரி. இன்னும் வெகு சிலரைப் பற்றி மட்டும் சொல்லி விட்டு மீதியைத் தொடர்கிறேன்.

நச்சு என்று எங்களால் அழைக்கப் படும் நரசிம்மனுடைய சொந்த ஊர் திருவையாறு. நான் குப்பை கொட்டிய அதே அலுவலகத்தில் இன்னும் அழகாகக் குப்பை கொட்ட வந்தவன். அந்த அலுவலகத்தில் குப்பை கொட்டி முடித்து இப்போது கனரா வங்கியில் மேலாளராக இருக்கிறான். தற்போது புதிதாக பெங்களூர் வாசம். சங்கீதத்தில் அபாரமான ரசனை. மேல் ஸ்தாயியில் அநாயாசமாகப் பாடுவான். நாகூர் அனீபாவின் பாடல்களை அதே குரலில் பாடுவான். மசூதியில் பாங்கு ஓதுவதை மிக அநாயாசமாகச் செய்து காட்டுவான். திடீரென்று மூடைக் கெடுத்துக் கொண்டு மிகவும் நிஷ்டூர்யமான குரலுடன் சண்டை போடுவான். சந்திரசேகர கம்பார் எழுதிய கன்னட நாடகமான "ஜோ குமாரசாமி'' நாடகத்தை நேரடியாகக் கன்னடத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தான். இதை நானும் என்னுடைய நண்பன் சுரேஷூம் அலுவலகத்தில் கடன் வாங்கி அந்த நூலைப் பதிப்பித்தோம். தில்லான மோகனம்பாள் படத்தில் நாகேஷ் பார்ப்பவர்களிடம் எல்லாம் ஒரு எலுமிச்சம் பழத்தைக் கொடுப்பார். அது போல நாங்கள் பலருக்கும் இந்த நூலைப் பல காலம் கொடுத்து வந்தோம். இப்போது என்னிடமோ சுரேஷிடமோ ஜோ குமாரசாமியின் ஒரு பிரதி கூட இல்லை. என்னுடைய இயக்கத்தில் ந.முத்துசாமியின் நாற்காலிக்காரர் நாடகத்தில் நச்சுவின் நடிப்பு இப்போதும் என் கண்களிலும் மனத்திரையிலும். ஒரு கைத்துண்டைக் கூட வைத்து பாவனை மாற்றங்கள் செய்ய முடியும் என்று அந்த நாடகத்தில் நிரூபித்தவன் நச்சு.

ராம்ஸ் என்று நாங்கள் அழைக்கும் ராமச்சந்திரன் இந்திய வான்படையில் பணிபுரிந்து வந்தான். பயங்கர கட்டுமஸ்தான தேகம். வான்படை வீரர்கள் வளாகத்தில் அடிக்கடி எங்களுக்கு மது அருந்த ஏற்பாடு செய்த புண்ணியவான். எல்லாவற்றையும் முடித்து உணவு அருந்தச் செல்லும்போது எதிரில் வரும் எல்லா ஆஜானுபாவர்களையும் வம்புக்கு இழுத்து அடித்து விட்டுச் செல்வான். செய்யாறு பக்கம் ஊர் என்பதால் தெருக்-கூத்து போன்ற கலைகளில் மிகவும் ஆர்வம் உடையவன். நாடகத்தில் நான் அமைத்த மேடைச் சலனங்களை, கூத்து அடவுகளை மிகவும் அற்புதமாகச் செய்து காட்டியவன். வான்படை வீரர்களுக்காக பாதல் சர்க்கார் எழுதிய வங்க நாடகம் பிறகொரு இந்திரஜித் ("ஏபங் இந்திரஜித்'' மொழியாக்கம் கோ.ராஜாராம்). அந்த நாடகத்தில் மிகவும் அமைதியான கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தான். ராம்ஸ் இப்போது புனேவில் இருக்கிறான் என்று இளஞ்சேரன் சொன்னன்.

இப்போது நாடகத்தின் பின்புலத்தில் பணிசெய்தவர்கள் பற்றிக் கொஞ்சம் சொல்லலாம் என்று இருக்கிறேன்.

முகவீணை வாசித்த சிவாஜி, உறுமி வாசித்த முத்துசாமி, பலகை வாசித்த கந்தசாமி பற்றி ஏற்கனவே நிறைய எழுதி விட்டேன். இவர்களை அடுத்த நாடகங்களிலும் ஏற்பாடு செய்ய நேராதது நான் செய்த துரதிருஷ்டம்.
அப்போது என்னுடைய நண்பர் பாலரமணி தில்லி அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தார். இப்போதும் எனக்கு மிக நல்ல நண்பர். அவருடைய காலத்தில் அவர் கொடுத்த வானொலி வாய்ப்புக்களால். விளம்பரங்களுக்குக் கண்றாவியான மொழிபெயர்ப்பில், போலியான பாவனைகள் மிகுந்த குரலில் பேசித் தமிழ்த் தொண்டு புரியும் தொழில்முறை விற்பன்னர்கள் பலரை உருவாக்கினர் பாலரமணி. அபாரமான நகைச்சுவை உணர்வு கொண்டவர். யாரிடமாவது யாரைப் பற்றியாவது பேசும்போது பேசப்படும் நபரைப் போன்ற அதே தொனியில் சடாரென்று அதே பாவனைக்கு மாற்றிப் பேசும் திறன் கொண்டவர்.

அகில இந்திய வானொலியின் சில விசித்திரமான நிபந்தனைகளால் அந்தப் பக்கம் பொதுவாகவே எட்டிப் பார்க்காமல் இருந்தேன். இன்னொன்று, என்னைப்போல, அடர்த்தியாக தாடிவிட்டுக் கொண்டு நிமிடத்துக்கு ஒரு சிகரெட் பிடித்துக் கொண்டு, ஜோல்னப் புயடன் அலைந்து கொண்டிருந்த அறிவுஜீவிகளுக்கு அகில இந்திய வானொலி ஒத்துவராது என்கிற ஒரு உள்ளார்ந்த கர்வமும் அப்போது எனக்கு இருந்தது. அதனல் பாலரமணி நட்புடன் விடுத்த பல அழைப்புக்களையும் தட்டிக் கழித்திருக்கிறேன்.

இந்த நாடகம் முடிந்ததும் நானே பாலரமணியை சந்திக்க அவருடைய அறைக்குச் சென்று நாட்டுப்புற வாத்தியங்களை வாசிக்கும் கலைஞர்களுக்கு அகில இந்திய வானொலியில் வாய்ப்புத் தருமாறு கேட்டுக் கொண்டேன். பாலரமணி அடுத்த நாள் காலை என்னுடைய வீட்டுக்குக் கான்ட்ராக்ட் அனுப்பி விட்டார். அந்தக் காண்ட்ராக்ட் என்னுடைய பெயருக்குப் போடப்பட்டு இருந்தது. அவரிடம் சென்று அது என் பெயரில் வேண்டாம் என்றும் வாத்தியம் வாசிக்கும் அந்தக் கலைஞர்கள் பெயரில் அனுப்புங்கள் என்றும் கேட்டேன். அவர்களுடைய நிபந்தனைகளின் படி அப்படித்தான் அனுப்ப முடியும் என்றும்,

ஒருங்கிணைப்பாளராக என்னுடைய பெயரில்தான் அந்தக் கான்டிராக்ட் இருக்க முடியும் என்றும் சொன்னர். வாய்ப்புக் கிடைத்து அவர்கள் வானொலியில் வாசித்தால் போதும் என்று நினைத்தேன். முகவீணையும், உறுமியும் பறையும் தில்லி வானொலி நிலையத்தில் வாசிக்கப்போகிறார்கள் என்கிற நினைப்பே எனக்கு அளவில்லாத பெருமையை அளித்தது.

அப்போதெல்லாம் இதுபோன்ற தொலைபேசி சாதனங்கள் இல்லாத நேரம். சக்கூர்பூருக்கு என்னுடைய ஓட்டை ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு முத்துசாமிக்கும் கந்தசாமிக்கும் நேரில் அந்த செய்தியைச் சொல்ல ஓடினேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

தொலைபேசி வசதி இல்லாது போனலும் கெடுதி நினைப்பவர்களுக்கு எங்கிருந்து எப்படி எந்தத் தொடர்பு சாதனம் கிடைத்தது என்று தெரியாது. யாரோ ஒரு புண்ணியவான், கந்தசாமியிடம், "நாடகம் போடுகிறேன் என்று சொல்லி இவன் உங்களை வைத்து ஏற்கனவே லட்சக்கணக்கில் சம்பாதித்து விட்டான். இப்போது ரேடியோவில் யாரோ ஒரு ஆபீசருடன் சேர்ந்து உங்களை வைத்து நிகழ்ச்சி செய்து இன்னும் பல லட்சக்கணக்கில் அடிக்கப் போகிறான்'' என்ற நற்செய்தியை அவர்களுக்குப் புகட்டியிருந்தார்கள். சாந்த் கா மூ டேடா ஹை நாடக மேடையேற்றத்துக்கு சாகித்ய கலா பரிஷத் அமைப்பு கொடுத்த உதவித்தொகை அப்போது ஐந்தாயிரம் ரூபாய். அந்த நாடகம் மேடையேற்றியதனல் நான் நண்பர்களிடமும் அலுவலகத்திலும் வாங்கித் திரும்பக்கட்டிய கடன் -ஏறத்தாழ முப்பதாயிரம் ரூபாய். அப்போது நானும் என் மனைவியும் வாங்கிய மிகக் குறைந்த சம்பளத்தில் பல மாதங்கள் நண்பர்களை இழுத்தடித்து கடனை அடைத்தேன். அதே போல, அகில இந்திய வானொலி காண்டிராக்டில் குறிப்பிட்டிருந்த தொகை ரூ.300/-_ இதில் எங்கிருந்து இவர் லட்சக்கணக்கில் சம்பாதித்து இருக்க முடியும் என்று அவர்களிடம் நச்சு வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்துக் கேட்டான். அவர்கள் எதையும் கேட்கிற மனநிலையில் இல்லை. வானொலி நிலையத்துக்கு வந்து வாசிக்க மறுத்து விட்டார்கள்.

மிகவும் வருத்தத்துடன் வீடு திரும்பி வந்தேன். கொஞ்சம் சுரணையிருந்து அன்றிலிருந்து நாடகம் போடுவது போன்ற துர்க்காரியங்களை விட்டு என்னுடைய பிழைப்பை மட்டும் கவனித்து இருந்தால் பெருத்த தொகையை என்னல் வாழ்க்கையில் சேமித்து இருக்க முடியும். அதற்குப் பிறகும் தொடர்ந்து பல செருப்படிகளை வாங்கினேன். இன்னும் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.

அந்த சம்பவத்துக்குப் பிறகு அவர்களுடன் தொடர்பு முற்றாக அற்றுப்போனது. அவர்களை எங்கும் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டவில்லை. அது குறித்த பெருத்த வருத்தம் எப்போதுமே எனக்கு உண்டு.

இந்த நாடகத்துக்கு இசைவடிவம் கொடுத்தவர்கள் ஏஞ்செல்ஸ் மற்றும் சங்கர். ஏஞ்ஜெல்ஸ் இப்போது பல ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் கித்தார் வாசிக்கும் ஐந்து நட்சத்திர வாத்தியக்காரன். தில்லியில் தமிழர்கள் அனைவருக்கும் பரிச்சயமான மிகவும் பிரபலமான இசைக் கலைஞன். அவன் தில்லி வந்த புதிதில் நான் கல்யாணத்துக்கு முன்பு குடியிருந்த வீட்டுக்குக் கீழே ஒரு அறையில் தங்க வந்தவன். அந்த அறை நண்பர்கள் வழியாக அறிமுகமாகி என்னுடைய அறைக்கு வந்து என்னுடன் பேசிக்கொண்டு இருப்பான். பேசிக்கொண்டே அங்கேயே தங்கிவிடுவான். என்னுடனே சாப்பிட வருவான். எங்கள் அறையிலேயே தூங்குவான். எங்கள் அறையிலேயே குளித்துவிட்டு அங்கிருந்தே அலுவலகம் செல்வான். என் மீது அளப்பரிய பாசத்தைப் பொழிந்தவன். அங்கே தனியாக எதுக்கு வாடகை கொடுத்து இங்கே தங்கியிருக்கே - இங்கேயே வந்துடேன் என்று ஒருநாள் சொன்னேன். அதற்காகவே காத்திருந்தவன் போல மூட்டை முடிச்சு கட்டிக்கொண்டு என்னுடைய அறைக்கே வந்து விட்டான். அப்போது நானும் குணசேகரனும் முத்துராமலிங்கமும் ஒரு அறையில் இருந்தோம். நான் ஒருவன் மட்டுமே தங்க வேண்டும் என்று நான் ஒரு வீடு எடுத்து சாமியார் பூனை வளர்த்த கதையாக நாங்கள் நால்வர் ஆகிப்போனோம்.

என்னுடைய திருமணத்துக்குப் பிறகும் எங்கள் வீட்டிலேயே எங்களுடன் தங்கியிருந்து அவனுக்குத் திருமணம் ஆனதும்தான் எங்களை விட்டுப் பிரிந்தான். என் வீட்டில் தங்கியிருந்தபோது என்னுடைய மகள் பாரதியை எப்போதும் தோளில் சுமந்து அலைந்து இரவுகளில் அவளைத் தூங்க வைத்தவன் அவன். கல்யாணத்துக்குப் பிறகு எதற்கும் எட்டிக்கூடப் பார்ப்பது இல்லை என்றாலும் இப்போதும் எங்கள் வீட்டுப் பையன் அவன் என்றுதான் என் மனைவி அவனை எப்போதும் சொல்வாள். அவன் அந்த நாடகத்துக்கு சங்கருடன் சேர்ந்து இசை வடிவம் கொடுத்தான்.

சங்கர் தலைநகரில் இப்போது தமிழர்களிடையே மிகவும் பிரபலமான இசையமைப்பாளர். இசைக்கலைஞர். அந்த நாடகத்தில் முத்துசாமி, கந்தசாமி, சிவாஜி போன்ற வாத்தியக் கலைஞர்களுக்கான இசை வடிவங்களை அமைத்து, மிகவும் அற்புதமாக இசையமைத்து இருந்தார். நாடகத்தின் இரவுக் காட்சிகளில் அவர் அமைத்துக் கொடுத்த ஒலி வடிவங்கள் நாடகத்துக்கு மிகப் பெரிய பொலிவு அளித்தன. நான் இயக்கிய ந.முத்துசாமியின் "இங்கிலாந்து'' என்னும் நாடகத்துக்கு சங்கர் மிகவும் அற்புதமாக இசையமைத்து இருந்தார். அவருடைய இசையில் அந்த நாடகக் காட்சிகளுக்குத் தனி அர்த்தம் கிடைத்தன என்று சொல்ல வேண்டும்.

அடுத்த இதழில் அந்த நாடகத்துக்கு ஒளி வடிவமைத்த நண்பர் செ.ரவீந்திரன் பற்றி எழுதி முடித்துவிட்டு ஒத்திகைகளைப் பற்றித் தொடருகிறேன். இந்தக் கட்டுரை இழுத்துக்கொண்டே போகிறது. எதையோ பிடிக்கப்போய் எதிலோ முடிந்த கதையாகப் போய்க்கொண்டிருக்கிறது. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.

அந்த நாடகம் பற்றிய பதிவுகள் முழுமையாக இருக்க வேண்டும் என்கிற முனைப்பில் கட்டுரை சற்று நீண்டு விட்டது.

Thursday, February 26, 2009

முதல் மேடை நாடக அனுபவம் - 3

தில்லி சாகித்ய பரிஷத் அமைப்புக்காக கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞரின் சாந்த் கா மூ டேடா ஹை (சந்திரனின் முகம் கோணியது) கவிதையை மேடை நாடகமாக்க முயற்சித்தது பற்றிக் கடந்த இரண்டு நாட்களாக பதிவேற்றம் செய்து வருகிறேன்.

இந்த இதழில் எங்கள் ஒத்திகைகளைப் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன். சற்று வெளிப்படையாக இருந்தாலும் இந்தப் பதிவுகள் தேவை என்று நினைக்கிறேன். இந்த இதழில் சற்றுத் தூக்கலாக சொந்தக் கதை இருக்கும். இந்த நாடகத்தைப் பற்றிப் பதிவுசெய்யும் போது கண்டிப்பாக இவற்றை விலக்கி எழுத முடியாது என்ற நினைக்கிறேன்.

நாளை யாராவது நாடகம் செய்ய வருபவர்கள் இவற்றைப் படித்துவிட்டு நிறைய தவறுகளில் இருந்து தங்களை விலக்கி வைத்துக் கொள்ள இது உதவி புரிந்தால் நான் பிறவி அடைந்ததன் பயனை அடைவேன் என்று நினைக்கிறேன்.
சிவாஜி, முத்துசாமி, கந்தசாமி போன்ற வாத்தியக் கலைஞர்களின் உதவியுடன் ஒத்திகைகள் துவங்கியது பற்றி சென்ற இதழில் எழுதியிருந்தேன்.

இந்த மூவரும் சக்கூர்புரில் இருந்து ஆட்டோ பிடித்து வருவார்கள். ஒத்திகையில் வாசித்து முடித்த கையோடு அவர்களுக்கு மதுவைத் தயாராக வைக்க வேண்டும். வெறும் ஒரு துண்டு ஊறுகாய் அல்லது ஒரு சிறிய தயிர்சாத பாக்கெட்டின் உதவியுடன் ஒரு முழு பாட்டில் விஸ்கி அல்லது ரம்மை ஒரு மடக்கில் காலி செய்யும் வல்லமை படைத்திருந்தார்கள் அவர்கள்.

எங்களுக்குள் ஒரு ஒழுங்கினை நாங்கள் எப்போதும் கடைப்பிடித்தோம். அதாவது ஒத்திகை நடக்கும் பரப்பில் அல்லது கூடத்தில் யாரும் புகை பிடிக்க மாட்டோம். குடித்து விட்டு வந்தவர்கள் யாரும் என்னுடைய ஒத்திகைகளில் எப்போதும் கலந்து கொள்ள முடியாது. அதே போல நாங்கள் ஒத்திகை நடத்தும் இடங்களில் யாரும் குடிக்க முடியாது. குடிப்பவர்கள் என் வீட்டுக்கு வந்து குடிக்கலாம். அல்லது வேறு யாராவது நண்பர்களின் அறைகளில் குடிக்கலாம். நாங்கள் ஒத்திகைகள் நடத்திய தமிழ்ப்பள்ளி வளாகங்களில் எப்போதும் யாரையும் புகை பிடிக்கவோ மது அருந்தவோ நான் என்றும் அனுமதித்தது இல்லை. நானும் என்றும் இக்காரியங்களை செய்தது இல்லை.

ஒத்திகைகளை முடித்து விட்டு மதுவில் குளிக்கலாம். ஆனல் ஒரு துளிகூட மது அருந்திவிட்டு என்னுடைய ஒத்திகைகளில் கலந்து கொள்ள முடியாது. விஷயம் தெரியாதவர்கள் அப்படிக் குடித்து விட்டு வந்தபோது முக்கியமான ஒத்திகைகளைக் கூட ரத்து செய்து அவர்களைத் திருப்பி அனுப்பி இருக்கிறேன். என் அன்னையின் அருள் மற்றும் சத்குருநாதன் திருவடியின் கருணையால் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான் புகைப்பழக்கம் மற்றும் மது அருந்துவதை திடீரென்று நிறுத்திய போது முன்னர் நானே விதித்துக் கொண்ட இவை போன்ற கட்டுப்பாடுகள் தான் என்னை இந்த இரண்டு சாபக்கேடுகளின் பக்கமும் மீண்டும் திரும்பாமல் இருக்கப் பெருமளவில் உதவியது என்று நினைக்கிறேன். (தடம் மாறிப் போகிறேன். என்னைத் திருத்த முடியாது).

சரி. விஷயத்துக்கு வருவோம். வாத்தியக் கலைஞர்களுக்கு ஒத்திகையின் இறுதியில் மது உண்டு என்று உறுதிப்படுத்தி விட்டு எங்களுக்கும் உண்டு என்று உறுதிப்படுத்திக்கொண்டு நேரம் செல்வது தெரியாமல் ஒத்திகைகளில் ஈடுபட்டு இருப்போம். மற்றவைகளுக்கு எல்லாம் செலவு அதிகமாகிப்போனதால் சாப்பாட்டுச் செலவுக்குப் பணம் இருக்காது. சுமார் இருபத்து ஐந்து பேர்களுக்கு தினமும் என் மனைவி வீட்டில் இருந்து சமைத்து அனுப்புவாள். சில நாட்களில் வெங்கட், மகேந்திரன், குணசேகரன், ஏஞ்செல்ஸ் போன்றோர் என் வீட்டின் சமையலைத் தீர்மானிக்கும் முக்கிய சக்திகளாக விளங்கினர். மளிகைக் கடையில் கடன்கள் ஏறி அந்தத் திசைப் பக்கம் செல்லாமல் பல நாட்கள் இரண்டு நிமிடங்களில் கடக்க வேண்டிய தூரத்தை சுற்றியடித்து ஒரு மணிநேரம் நடந்து சென்ற நாட்களும் பின்னளில் வந்தன.

இரவு சத்தியமூர்த்தி அரங்கில் நெடுநேரம் ஒத்திகைகள் நடத்தி விட்டு கும்பலாக என் வீட்டுக்கு வந்து குடித்துவிட்டு உரக்கப் பேசி, வாதாடி, சண்டைகள் போட்டு, அடுத்த நாள் செய்ய வேண்டிய ஒத்திகைகளை ஏழுகட்டைக் குரலில் விவாதித்து நாங்கள் செய்துவந்த ரகளையால் என்னுடைய இரண்டு வயது மகள் பாரதியின் தூங்கும் பழக்கம் சீர்கெட்டு அவள் படிக்கும் வயதிலும் அந்தப் பிரச்னை தொடர்ந்து வந்தது. இரவு இரண்டு மணிவரை விழித்து வாதாடி ஓய்ந்து தூங்கச் செல்லுவோம் எல்லோரும். வீட்டின் முன்னறையில் குறைந்தது பதினைந்து பேராவது தூங்குவார்கள். காலையில் எல்லோரும் தலைதெறிக்க அலுவலகங்களுக்கு ஓடிப்போவோம். காலையில் சீக்கிரம் போனல்தான் மாலையில் ஏதாவது அல்வா கொடுத்துவிட்டு ஒத்திகைகளில் கலந்து கொள்ள முடியும்.

சரி. மீண்டும் ஒத்திகைகளுக்கு செல்வோம். இந்தக் கட்டுரையை எழுதும்போது என்னுடன் பணிபுரிந்த அனைத்துக் கலைஞர்களின் நினைவுகளும் கண்முன் நின்று விழியோரம் சற்று ஈரத்தை எட்டிப் பார்க்க வைக்கிறது. அவர்களைப் பற்றியும் இங்கே சற்றுப் பதியலாம் என்று இருக்கிறேன். இந்தக் கட்டுரையில் நிறைய இடங்களில் அவர்களுடைய பெயர்களைச் சொல்லிச் செல்கிறேன். எனவே அவர்கள் குறித்த சிறிய குறிப்பினை இங்கு பதிந்து வைத்தால் உங்களுக்கும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். என்னிடம் உள்ள பல ஒழுங்கீனங்களில் முறையான ஆவணங்களைச் சேமித்து வைக்காத பழக்கமும் ஒன்று. இந்தக் கட்டுரையில் பேசப்படும் நாடகத்தின் புகைப்படமோ அல்லது என் உடன் பணிபுரிந்த கலைஞர்களின் புகைப்படங்களோ உடனடி என் கைவசம் கிட்டவில்லை. இந்தக் கட்டுரைகள் நூலாக வடிவம் பெறும் போதாவது அந்தப் புகைப்படங்களைத் தேடி வைக்க வேண்டும். எனவே ஒரு சிறிய அளவில் என்னுடன் பணிபுரிந்த கலைஞர்களைப் பற்றிய பதிவினை இங்கே செய்து வைக்கலாம் என்று தோன்றியது. உங்களுக்குத்தான் பாவம்.

முதல் காட்சியாக கொள்ளி வைக்கும் சடங்கினை ஒத்திகையாகத் துவங்கினோம் என்று எழுதியிருந்தேன். நான்கு பேர் பிணம் தூக்கும் பாவனையில் கைகளைத் தூக்கிச் செல்வார்கள். பின்னணியில் கந்தசாமியின் உறுமி ஒற்றைக்கொட்டும் ஒற்றை இழுப்புமாக அமானுஷ்யமான ஒலி எழுப்பும். சங்கர் சிந்தசைஸரில் இரவு நேர ஒலிகளை எழுப்புவார். மணிகண்டன் ஒத்திகையிலேயே மீசையை மழித்துவிட்டு மிகவும் தத்ரூபமான சோகத்துடன் தீச்சட்டி தூக்கி வருவது போன்ற பாவனையில் வருவான். என்னுடன் உள்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்த மணிகண்டன் எங்கள் அலுவலகத்திலும் அதேபோன்ற முகபாவனையுடன் உலவிவந்தான். சரி. ஒருவேளை நாடகத்தில் தத்ரூபமாக வரவேண்டும் என்று பகலிலும் ஒத்திகைகளைத் தொடர்கிறான் போலிருக்கிறது என்று நானும் சுரேஷூம் சிரித்துக் கொள்வோம். செய்யும் எந்தக் காரியத்திலும் ஒரு நேர்த்தியுயம் தீவிரத்தையும் வலியுறுத்துகிறவன் மணிகண்டன். நிரபராதிகளின் காலம் என்னும் நாடகத்தில் சுமார் இரண்டு பக்க வசனங்களை ஒத்திகை நடந்த இரண்டு மாத காலங்களிலும் எவ்வித மாற்றமும் இன்றி தினமும் ஒரே மாதிரி பேசிக்காட்டியவன் அவன்.

அதே போல வெங்கட் நரசிம்மன். இவனை போன்லெஸ் ஒன்டர் என்று வெங்கட்சாமிநாதன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். அவனும் அளவுக்கு அதிகமான பிரயாசைகள் எடுத்துக் கொள்வான். உடல் அவன் சொன்னபடிக்குக் கேட்கும் மாயவித்தையைத் தன்வசம் வைத்திருந்தான். நம்முடைய வயோதிக நடிகர்கள் சண்டைக் காட்சிகளில் கயிறு கட்டிகொண்டு செய்யும் காமெடியை கயிறு இல்லாமலேயே செய்து காண்பிக்கும் வல்லமை படைத்தவன்.

இயற்கையிலேயே அற்புத நடிப்புத் திறன் கொண்டவன் குணசேகரன். யாரைப் பார்த்தாலும் அவர்களுடைய பாவனையிலேயே பேசுவான். அவர்களின் உடல்மொழியை உடனே தனதாக்கிக் கொள்ளும் திறன் படைத்தவன். சொந்தப் பிரச்னைகள் அவனை இளமைப் பருவத்தில் சூழ்ந்ததால் அவனல் பிரகாசிக்க முடியாது போனது. இல்லையென்றால் தமிழ்த் திரையுலகம் இந்நேரம் தேசிய அளவில் பெருமையுடன் பேசப்படும் ஒரு நடிகனைத் தன்வசம் வைத்திருக்கும். தன் சொந்தப் பிரச்னைகளால் எல்லா உறவுகளையும் சீராகப் பராமரிக்க முடியாமல் போனவன். இப்போது பெங்களூருவில் இருக்கிறான் என்று என்னிடம் அவனை நினைவுபடுத்தும் பழைய நண்பர்கள் யாராவது சொல்வது உண்டு.

இடதுசாரி சிந்தனைகள் கொண்ட மகேந்திரன் எல்லாவற்றையும் உரக்க விவாதிப்பான். அவன் போடும் கூச்சலில் குறைந்தது ஐம்பது பேராவது அக்கம்பக்கத்தில் தூக்கம் இழப்பார்கள். நவீன இலக்கியத்தில் ஆழ்ந்த படிப்பும் அக்கறையும் உள்ளவன் மகேந்திரன். ஒத்திகையின்போது ஒவ்வொரு காட்சியின் லாஜிக்கை உறுதி செய்து கொண்டுதான் அடுத்த அடிக்கு நகருவான். அவனை சமாளித்து காட்சிக்குள் அனுப்புவதற்குள் உயிரேபோய்விடும். இப்போது ஈரோடு பக்கம் வருமான வரித்துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறான். இப்போதும் அதே இடதுசாரி சிந்தனைகளுடன் யாருடனவது சண்டை போட்டுக்கொண்டு இருப்பான என்று தெரியாது.

இன்று திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரியும் இளஞ்சேரன் இயற்கையிலேயே அற்புதத் திறமைகள் கொண்டவன். பராசக்தி வழக்காடு மன்றக் காட்சியை ஒரே மூச்சில் சொல்லி நிறுத்துவான். மிக அரிய நகைச்சுவை உணர்வு உள்ளவன் அவன். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பான். முரண்டு பிடிப்பதைக் கூட சிரித்துக் கொண்டே செய்வான். அவனுடைய குரல் வளம் இன்று திரையில் முன்னணியில் இருக்கும் பல பெண்மைச் சாயல் கொண்ட கதாநாயகர்களிடம் காணாத ஒன்று. சொல்லிக் கொடுப்பதை விட அதிகம் காட்டி நெகிழ வைப்பவன். இங்கிலாந்து என்னும் நாடகத்தில் அவன் கட்டைக்கால் கட்டிக்கொண்டு காந்தியாக வந்து பேசிய வசனங்கள் இன்னும் பல இரவுகளில் என் கனவுகளில் வரும்.

நாங்கள் அன்புடன் வீரு என்று அழைக்கும் வீரராகவன். மெத்தப்படித்த வீரு அப்போதே மிகவும் உயரிய பதவியில் இருந்தாள். ஆனல் அவனுடைய பதவியோ நாங்கள் இன்னும் ஏழு ஜென்மம் எடுத்தாலும் எட்ட முடியாத ஊதியத்தை அப்போதே வாங்கிக் கொண்டிருந்த வீரு, வெற்றியும் பதவியும் தன் தலைக்கேறாது பார்த்துக் கொண்டவன். நவீன இலக்கியத்திலும் நாடகத்திலும் மிகவும் தீவிரமாக ஈடுபட்டவன்.

இன்னும் சிலருடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு விஷயத்தைத் தொடர்வேன். என்றாவது முடித்துதானே ஆகவேண்டும்?

Wednesday, February 25, 2009

முதல் மேடை நாடக அனுபவம் - 2


ஒரு இந்தி நாடக மேடையேற்றத்துக்காக விண்ணப்பித்ததையும் அது தொடர்பாக தில்லி சாகித்ய கலா பரிஷத் அமைப்பின் செயலர் என்னை அழைத்துக் குடைந்து கொண்டிருந்ததையும் அவருக்கு நான் அல்வா கிண்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது பற்றியும் சொல்லி சென்ற இதழில் நிறுத்தி இருந்தேன்.

பல இடங்களில் நீங்களும் உணர்ந்து இருப்பீர்கள். வழக்கமாக சிலருக்குத் தங்களுடைய நாடக மேடையேற்றம் குறித்து பிற்காலத்தில் எழுதும்போது ஒரு அதீதமான வசதி கிடைத்து விடுகிறது. அந்த நாடக மேடையேற்றம் என்ன கண்றாவியாக இருந்தாலும், பார்வையாளர்களைக் குற்றுயிரும் கொலை உயிருமாக வதைத்து அவர்களைக் கதறக் கதற ஓடவிட்டு இருந்தாலும் பின்னாளில் அதைப் பற்றி எழுதும்போது வசதியாக பல அல்பமான டுபாக்கூர்களை விட்டுக் கொள்ளலாம். நாடகத்தின் அடிப்படை இலக்கணம் கூடத் தெரியாதவர்கள், மேடையில் நடிக்கும்போது தானே எப்படி நிற்க வேண்டும், எப்படிப் பேச வேண்டும், அடுத்தவர்களை எப்படி நிறுத்தி வைக்க வேண்டும், அவர்களை எப்படிப் பேசவைக்க வேண்டும் என்று கூடத் தெரியாதவர்கள் அல்லது சில அரசியல் காரணங்களால் அல்லது தங்களின் பதவியின் அதிகாரம் வழி கிட்டும் சில வசதிகளால் நாடகம் தயாரிக்க மேடைக்கு வரும் பலர் நிகழ்காலத்திலேயே இப்படிப் பேசியும் எழுதியும் வருவதை நிறைய பார்த்து இருப்பீர்கள்.

எனவே ஒரு நாடகத்தின் மேடையேற்றம் குறித்துப் பின்னர் எழுதும்போது இவை போன்ற விபத்துக்கள் நேரக்கூடாது என்று மிகவும் கவனம் எடுத்து எழுத வேண்டியிருக்கிறது. கூடிய வரையில் நேர்மையான பதிவாக அமைய வேண்டும் என்று முயற்சிக்கிறேன். என்னுடன் மேடையில் இருந்தவர்களின் முகங்களை மீண்டும் தைரியத்துடன் பார்க்கவும் என்னுடைய முகத்தையே கண்ணாடியில் தைரியமாகப் பார்த்துக் கொள்ளவும் வேண்டியிருக்கிறது இல்லையா?

சரி. விஷயத்துக்கு வருவோம்.

சாகித்ய கலா பரிஷத் செயலர் முக்திபோத் கவிதையை வைத்துக்கொண்டு என்ன செய்வாய்? அது நாடக ரூபத்தில் இல்லையே என்று கேட்டார்.

அந்த நேரத்தில் மேடை நாடகத்தின் சூட்சுமங்கள் அதிகம் கைவசப்படாத நிலை. நாடக சம்பவங்களைக் காட்சிப்படுத்துதல் குறித்த பயிற்சி எதுவும் பெறாத நிலை. நான்கைந்து ஆண்டுகள் தலைநகரில் பார்த்த (தமிழல்லாத) வேற்றுமொழி நல்ல நாடகங்கள், படித்து அரைகுறையாகப் புரிந்து கொண்ட நாடகக் கோட்பாடுகள். செ.ரவீந்திரன், வெங்கட்சாமிநாதன் ஆகிய நண்பர்கள் உடன் இருந்த பலம். எல்லாவற்றுக்கும் மேலாக வெட்கத்தைத் துறந்த நிலை. இதுவே ஒரு மேடை நாடகத்தை அதுவும் இந்தி மேடை நாடகத்தை மேடையேற்றும் அசட்டுத் துணிச்சலை எனக்குத் தந்திருக்கிறது என்று இப்போதும் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.

சரி. செயலர் கேட்ட கேள்விக்கு கவிதைப் படிமங்களைக் காட்சிப் படிமங்களாக மாற்றி மேடையேற்றுவேன் என்று பதிலளித்து விட்டேன். அவரும் ஒரு மாதிரி என்னைப் பார்த்துவிட்டு சரி. முயற்சி செய். ஆனால் நாடகத்தில் ஏதாவது ஒரு காட்சியை எங்களுடைய ஆலோசகர்களின் முன்னிலையில் நடித்துக் காட்ட வேண்டும். அதன் பின்னர்தான் நாடகத்தைத் தேர்வு செய்வோம் என்றார். உடனே சரி என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன். உடன் வெங்கட்டும் குணசேகரனும் இருந்தார்கள். குணசேகரனுக்கு கைகால்கள் உதறத் துவங்கி இருந்தன. ""என்னண்ணா இப்படி ஒரு நிபந்தனையைப் போட்டுட்டானே'' என்று பினாத்திக் கொண்டே வந்தான். வெங்கட் அதிக நம்பிக்கையுடன் இருந்தான். ""பாத்துக்கலாம்டா'' என்று குணசேகரனுக்கு சொல்வது போல தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டு வந்தான்.

அடுத்து என்ன செய்வது என்ற திட்டம் தீட்ட உட்கார்ந்தோம். வழக்கமாக இதுபோன்ற திட்டமிடல்கள் அந்த நாட்களில் மதுக்கிண்ணங்களில் துவங்கி, உளறல்களில் தொடர்ந்து, போதை வலு சேர்க்கும் உதார்களில் முடிந்து போகும். திட்டமிடல் ஏதுமில்லாது போதையில் கரையத் துவங்கின என்னுடைய இரவுகள். என்ன செய்யப்போகிறோம் என்கிற பய உணர்ச்சி போதை நாடுதலை அதிகப்படுத்தியது. லேசான தாடி, கையில் எப்போதும் புகையும் சிகரெட் மற்றும் மாலை வேளைகளின் போதையை மட்டுமே ஒரு இயக்குநருக்கான லட்சணமாக எடுத்துக் கொண்டேன். திறமையை வளர்த்துக் கொள்ளவோ மேலும் நாடகம் குறித்துப் படிக்கவோ முயற்சிக்க வில்லை. என் எதிரே நின்று கொண்டு ஒரு பெரிய சவால் என்னை மிரட்டிக் கொண்டிருந்தது. அதன் மிரட்டல் தாளாது இன்னும் அதிகம் குடித்தேன்.

போதை இல்லாத நேரங்களில் கிட்டிய தெளிவின் வீச்சில் சிறு கீற்றுப்போல ஒரு திட்டம் பிறந்தது. இந்திக் கவிதையின் பின்னணி. மேடையில் பின்னணியில் முக்திபோத்தின் இந்திக் கவிதைகள் படிக்கப்படும் போது அரங்க அமைப்பு, ஒப்பனைகள் போன்றவை ஏன் தமிழ்நாட்டுப் பின்னணியில் இருக்கக் கூடாது என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஒன்றும் இல்லாததற்கு எதையாவது வித்தியாசமாக செய்தாக வேண்டுமே?

இது நன்றாக இருக்கும்போல இருக்கிறது முயற்சிக்கலாமே என்றார்கள் வீருவும் மகேந்திரனும். வீரமணிகண்டனுக்கு அதில் உடன்பாடு இல்லை. அவன் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் நீங்கள் என்ன செய்தாலும் ஒத்துழைப்பேன் என்றான். நச்சு (நரசிம்மன்) அவன் பங்குக்குக் கத்தினான். ராமசாமிக்கு இந்தத் திட்டம் பிடித்து விட்டது. (ராமசாமி இப்போது அமெரிக்காவில் குழந்தைகளுக்கான நாடகங்கள் குறித்துத் தன் ஆய்வுகளை முடித்து பல்கலைக் கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். பாலஸ்தீனப் பெண்மணி ஒருவரை மணந்து கொண்டிருக்கிறார். அவரும் நாடக ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறவர்). மோகன் என்று ஒரு நண்பர் இருந்தார். அவர் மேடையில் பங்கேற்கவில்லை என்றாலும் நாடகத் தயாரிப்புக்களில் அதிகப் பங்கேற்றார். அந்நாட்களில் எங்களுக்கான மதுச்செலவை அதிக அளவில் பார்த்துக் கொண்டு நாடகத் தொண்டு ஆற்றியவர் மோகன். அவருக்கு என் திட்டம் பிடித்திருந்தது. ரவீந்திரனுக்கும் பிடித்தது. சாரு நிவேதிதா எங்கள் ஒத்திகைகளுக்கும் கலந்துரையாடல்களுக்கும் வருவார்.

சரி. தமிழ் நாட்டின் பின்னணி. இந்தி வரிகளுக்கு தமிழக கிராமியப் பின்னணி. நம்முடைய மரபு இசைக்கருவிகள். நாட்டுப்புற இசை என்று திட்டங்கள் வகுத்துக் கொண்டேன். இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அப்போது சங்கீத் நாடக் அகாதமி போன்ற அரசு அமைப்புக்கள் மரபுசார் கலைகளுக்கு முக்கியத்துவம் அளித்துக் கொண்டிருந்தார்கள். இந்திய நாடக வல்லுநர்களும் அளவுக்கு அதிகமாக எவ்விதத் தொடர்பும் இல்லாது மரபுக் கலைகளை நாடக மேடைகளில் கொண்டு வந்து பார்வையாளர்களை இம்சித்துக் கொண்டிருந்தார்கள். அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட மரபாக நிறுவப்பட்டது. அதைத் தவிர்த்த முயற்சிகளை நாடகங்கள் என்று கூறத் தயாராக இல்லாத ஜோல்னாப் பைக் கூட்டம் ஒன்று மந்தை மந்தையாக இந்தியா முழுக்க அலைந்து கொண்டிருந்தது. எனவே அந்த மரபை அப்படியே பின்பற்ற வேண்டும் என்கிற போலியான பாவனையில் நாங்களும் ஜோல்னாப் பை மாட்டிக் கொண்டு மரபு இசைக் கலைஞர்களைத் தேட ஆரம்பித்தோம்.

ஊரில் இருந்து கலைஞர்களை அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்றால், கடுமையாக உழைத்து ஏதாவது சொத்து சேர்த்துக் கொண்டு பிறகு அதை விற்றுத்தான் அவர்களை தில்லிக்குக் கொண்டு வரவேண்டும். அதற்கு அப்போது போதிய நேரம் இல்லை. எனவே உள்ளூரிலேயே யாராவது கிடைப்பார்களா என்று தேடல் துவங்கியது.

என்னுடைய தேடல் முடிந்த இடம் சக்கூர்பூர். தில்லியின் மேற்குப் பகுதியில் பஞ்சாபி பாக் அருகில் உள்ள இடம். சேலம், நாமக்கல், திருச்செங்கோடு போன்ற ஊர்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் இடம். அங்கு மாரியம்மன் கோயில் திருவிழாக்களிலும் இறப்புக்களிலும் மேளம் வாசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டோம். நானும் ராமசாமியும் அங்கு சென்று பலரை விசாரித்தோம். இறுதியில் எங்களுக்குக் கிடைத்தவர்கள் முத்துசாமியும் கந்தசாமியும். முத்துசாமி வயதானவர். பறை வாசிக்கிறவர். கந்தசாமி உறுமி வாசிப்பவர். இருவரும் முதலில் எங்களை நம்பவில்லை. நீ எதுக்கு எங்களைக் கூப்பிட்டு நாடகம் போடணும்? என்று கேட்டார்கள்.

எனக்குக் கிடைத்த இன்னொரு கலாச்சார அதிர்ச்சி என்னவென்றால், என்னை அவர்களிடம் கூட்டிச்சென்ற நண்பர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்தவர். முத்துசாமியும் கந்தசாமியும் இருந்த தெரு வந்ததும் அவர் வீதிமுனையில் நின்று கொண்டு நீங்க போய்ப் பார்த்துட்டு வாங்க. அப்புறம் சந்திக்கலாம் என்றார். நானும் ராமசாமியும் அவரை அழுத்திக் கூப்பிட்டோம். அவர் தயக்கத்துடன், இது அவங்க இருக்கிற வீதி. நீங்க போயிட்டு வாங்க'' என்று அனுப்பி வைத்தார். நண்பரின் மறுப்பு பெரும் அதிர்ச்சி அளித்தது. நாங்கள் முத்துசாமி வீட்டுக்கு போனோம்.

எங்களுடைய தொடர்ந்த இரண்டு மூன்று சந்திப்புக்களில் எங்களுக்கு நல்ல நண்பர்கள் ஆனார்கள் முத்துசாமியும் கந்தசாமியும். மூன்றாவது நாளில் என்னைத் தேடிக்கொண்டு என் வீட்டுக்கு வந்தார் முத்துசாமி. இராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள ராஜ் காலனியில் சிவாஜி என்று ஒருவர் இருப்பதாகவும் அவர் முகவீணை (நாயனம்) வாசிப்பதாகவும் சொன்னார். எங்களுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. உடனே அங்கு சென்று சிவாஜியை சந்தித்தோம். மாலை வேளையில் போனதால் அவருடன் சரியாகப் பேச முடியவில்லை. மறுநாள் காலையில் முத்துசாமி, கந்தசாமி மற்றும் சிவாஜி என்னுடைய வீட்டுக்கு வந்தார்கள். தங்களுடைய வாத்தியங்களைக் கொண்டு வந்தார்கள். இரண்டு அறைகள் கொண்ட அரசுக் குடியிருப்பு வீடு அது. அவர்கள் குழுவாகக் கிடைத்த சந்தோஷத்தில் கொஞ்சம் வாசித்துக் காண்பிக்கச் சொன்னேன். என்னுடைய வீட்டின் சிறிய முன்னறையில் மூவரும் வாசிக்கத் துவங்கினார்கள். உற்சாகம் கரைபொங்கியது எனக்கு. ராமசாமி அப்போதெல்லாம் எப்போதும் என் உடனே இருப்பார். குணசேகரன் என் வீட்டிலேயே தங்கி இருந்தான். இப்போது தலைநகர் மேடைகளில் மெல்லிசை முழங்கும் ஏஞ்ஜெல்ஸ் என்னுடனேயே வீட்டில் இருந்தான். சங்கர் என்னும் நண்பரும் இருந்தார். அவர் இசைக்குழுத் தலைவர். என்னுடைய உற்சாகம் எல்லோரையும் தொற்றிக் கொண்டது. பாதி நாடகம் முடிந்து போனது போல இருந்தது எங்களுக்கு.

சிவாஜி, முத்துசாமி, கந்தசாமி ஆகியோர் வாசிக்கத் துவங்கியதும் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த எனக்கு நாடகத்தில் என்ன செய்யலாம் என்று ஒரு காட்சியாக என்முன் விரிந்தது போலத் தோன்றியது. சிவாஜி குழுவினர் உற்சாகமாக வாசித்துக் கொண்டே இருந்தார்கள். இந்தக் குடியிருப்பில் அதிகம் வாசித்தால் பூமாலை ஊதுவத்திக் கட்டுக்களுடன் அதிகம் பேர் வீட்டுக்கு வரக்கூடிய வாய்ப்பு இருந்ததாலும் ஏற்கனவே சிலர் சோகமான சந்தேகத்துடன் என் வீட்டை எட்டிப் பார்க்கத் துவங்கியதாலும் அப்போதைக்கு வாசிப்பை நிறுத்திவிட்டு மந்திர் மார்கில் உள்ள சத்தியமூர்த்தி கலையரங்கில் ஒத்திகைகளைத் துவங்கலாம் என்று திட்டமிட்டோம்.

சௌத் இந்தியா கிளப் என்னும் சூதாட்ட விடுதியாக மாறிப்போன ஒரு நல்ல அமைப்பின் பொறுப்பில் இருந்த ஹரிஹரன் என்ற நண்பரின் உதவியால் சத்தியமூர்த்தி கலையரங்கில் ஒத்திகைக்கு இடம் பிடித்தோம். நாடகம் மேடையேறி முடிந்த பிறகுதான் பணம் கிடைக்கும். ஆனால் செலவு தினமும் கரைபுரண்டு கொண்டு இருந்தது. மோகன் உதவினார். ரவவீந்திரன் உதவினார். அலுவலகத்தில் கடனுக்கு விண்ணப்பம் செய்தேன். ஒத்திகைகளில் நன்றாக சாப்பிட்டோம். ஒத்திகைகள் முடிந்ததும் நன்றாகக் குடித்தோம். வாத்தியம் வாசிப்பவர்கள் வரும்போதெல்லாம் அவர்களுக்குப் பணம் தரவேண்டியிருந்தது.

சரி. சாகித்ய கலா பரிஷத் அமைப்பின் ஆலோசகர்களுக்கு ஒரிரு காட்சிகளை நடித்துக் காட்ட வேண்டுமே? கவிதையின் முதல் வரி, இரவின் அமைதியில் இருந்தும் ஆந்தைகள் ஊளையில் இருந்தும், சுடுகாட்டில் உள்ள அரசமரத்தில் பொதிந்திருக்கும் அமைதி மற்றும் உழைப்பாளர்களின் சேரியில் முழங்கும் கொண்டாட்டங்களைப் பற்றியும் துவங்கும். இரவின் கனத்தைக் கூட்ட என்ன செய்வது? சோகத்தைக் கூட்ட என்ன செய்வது?
ஒரு பிணத்துக்கு ஈமச் சடங்குகள் செய்வதைப் போன்ற காட்சியுடன் துவங்கலாம் என்று தோன்றியது. கந்தசாமியின் உறுமியில் ஒற்றைத்தாள ஓசையை ஒலிக்கச் செய்தேன். அது சோகத்தின் பரிமாணத்தைக் கூட்டியது போல இருந்தது. மணிகண்டன் கொள்ளிவைப்பவன். வெங்கட்நரசிம்மன், குணசேகரன், நரசிம்மன், வீரராகவன் ஆகியோர் பிணந்தூக்கிகள்.

எனவே அந்த நாடகத்தின் முதல் காட்சியாக ஒரு பிணத்தைத் தூக்கி வந்து கொள்ளி வைப்பதுடன் ஒத்திகையைத் துவங்கினேன். நிறைய நண்பர்கள் ஆட்சேபம் தெரிவித்தார்கள். என்னுடைய முதல் மேடை நாடகப் பிரவேசத்தின் முதல் ஒத்திகையே இப்படிப் பட்ட காட்சியுடன் துவங்க வேண்டுமா என்று என் மனைவி கூடக் கேட்டாள். ஆனால் அதையே தொடர்ந்தோம்.

ஒத்திகை துவங்கிய இருபது நாட்கள் கழித்து, என்னுடைய மேடை நாடகப் பிரவேசமாக நான் வடிவமைத்து நாங்கள் ஒத்திகை பார்த்த முதல் காட்சி கிருஷ்ணகிரியில் என் குடும்பதில் நிஜத்தில் அரங்கேறியது. அதைப் பிறகு சொல்கிறேன். அதற்கு இடையில் நடந்தவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அது நாளை...

Tuesday, February 24, 2009

முதல் மேடை நாடக அனுபவம்...


நாடகத் தயாரிப்புக்களில் ஈடுபாடு ஏற்பட்டு, விதியின் வினையால் இயக்குநர் ஆனது எல்லாம் விளையாட்டுப் போல இப்போது தோன்றுகிறது. ரொம்பவும் அவசரமாக இருபத்து மூன்று ஆண்டுகள் பின்னோக்கி நழுவி ஓடிவிட்டன. கடந்த மூன்றாண்டுகளாக வடக்கு வாசல் என்னும் புலிவாலைப் பிடித்த பின் என்னுடைய நாடக ஈடுபாடு மற்றும் தயாரிப்புக்கள் ஒரு மந்த நிலைக்கு வந்து நின்ற மாதிரியான ஒரு தோற்றம் மனதுக்கு வேதனையளிக்கிறது. ஒரு காலத்தில் விளையாட்டுக்குச் சொல்வேன். நாடகம் போடறதை திடீர்னு நிறுத்தினாலும் ஏண்டா நாயே நாடகம் போடலைன்னு யாரும் கேட்கப் போறதில்லை… என்று. ஆனால் இன்று எதிர்ப்படும் யாரும் என்னிடம் கேட்கும் முதல் கேள்வி - ஏன் நாடகங்களை நிறுத்தி விட்டீர்கள் என்பது தான். சுந்தர ராமசாமி கவிதையில் வருவது போல, என்னுடைய நாடக ஈடுபாட்டில் ஏற்பட்டு இருக்கும் தற்போதைய சுணக்கம் என்பது நான் மேற்கொண்ட உறக்கம் அல்ல - தியானம். பின் வாங்கல் அல்ல பதுங்கல்.

மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு, வடக்கு வாசல் சற்றுத் நிற்கத் துவங்கியிருக்கிறது. இந்த நிலைக்கு வடக்கு வாசலைக் கொண்டு வர நான் மேற்கொண்ட எத்தனங்களும் இழப்புக்களும் பட்ட அவமானங்களும் ஏழு ஜென்மங்களுக்குப் போதும். எப்படியோ இனி வடக்கு வாசல் பிழைத்துக் கொள்ளும் என்னும் நம்பிக்கை துளிர்விட துவங்கி இருக்கிறது. அதற்கு நல்ல மனம் கொண்ட பல நண்பர்கள் அங்கங்கு தோள் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். இனி வடக்கு வாசலுக்கு ஒரு திறமையான ஒருங்கிணைப்பாளர் அல்லது வடக்கு வாசலைப் பார்த்துக் கொள்ள எனக்கான ஒரு நல்ல உதவியாளர் கிடைத்தால் மீண்டும் நாடகத்தின் பக்கம் செல்லும் ஆசை உண்டு. விளையாட்டுக்கோ அல்லது பந்தாவுக்காகவோ சொல்ல வில்லை. என்னுடைய இறுதி மூச்சு நாடக மேடையிலோ அல்லது ஒத்திகையிலோ நின்றுபோக வேண்டும் என்று நேர்மையாக ஆசைப்படுகிறேன். என்னுடைய ஆன்மாவின் இறுதி இயக்கம் வரை நான் நாடகத்துடன் தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்னை நானே பார்த்துக் கொள்ளவும் என்னைப் பலர் பார்க்கவும் வைத்தது நாடகங்கள் தான். எனவே, என்னுடைய ரத்தத்தில், என்னுடைய நினைவில், கனவில் என என்னுள் எல்லாமாக வியாபித்து நிற்பது நாடகமே. இப்போதும் நாடகம் தயாரிக்க இயலாத நிலையில் பல நாடகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். நாடகக் கோட்பாடுகள் குறித்த கட்டுரைகளைத் தொடர்ச்சியாகப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

இந்த நேரத்தில் பல நேரங்களில், யதார்த்தாவில் நாங்கள் மேடையேற்றிய ஒரே இந்தி நாடகம், அதன் ஒத்திகைகள், மேடையேற்றம் என அத்தனையும் எப்போதாவது மனம் சோர்வு அடைகின்ற போது நினைத்துப் பார்த்து இதழ்க் கடையோரம் கீற்றாய்த் தோன்றி மறையும் ஒரு சிறு முறுவலும் சில நேரங்களில் விழியோரம் துளிர்க்கும் கண்ணீர்த் துளிகளுடன் நெஞ்சம் விம்மல் கொள்ளும் சில அற்புதமான அனுபவங்கள் இன்னும் என்னுடன் நனவோடையில் நிழலாகத் தொடர்கின்றன.

வெங்கட் நரசிம்மன், மகேந்திரன், குணசேகரன், நரசிம்மன், ராமசாமி, மணிகண்டன், சந்திரசேகரன், வீரராகவன் இன்னும் பலர். இந்த நாடகத்தின் வழியாக என்னுடைய மேடை நாடகப் பயணைத்தைத் துவக்கி வைத்த அற்புதமான நண்பர்கள். தமிழ் நாடகத்துக்காகத் தன்னைக் கரைத்துக் கொள்ள முன்வந்த கலைஞர்கள். பல நாடகங்களில் என்னுடன் உழைத்து என்னை ஒரு நாடககக்காரனாக உருமாற்றியவர்கள். இப்போது எல்லோரும் அவரவர் வழிப் பயணத்தில் தங்கள் வாழ்க்கையைத் துரத்தி அவரவர் வழியில். அவரவர்களின் கூடுகளில். தொடர்பு அதிகமாக இல்லையே ஒழிய எப்போது இவர்களின் நினைவுகள் நெஞ்சில் நிழலாடினாலும் அந்த நாளின் நினைவுகள் தரும் ஏக்கம் இந்த வயதிலும் விழியோரம் துளிநீரை நிறுத்தி வைக்கும்.

நான் ஈடுபட்டு இருந்ததெல்லாம் வெளிமுற்ற நாடகங்கள்தான். அவற்றை வீதி நாடகங்கள் என்றும் சொல்ல முடியாது. ஆனால் ஒரு அர்த்த வசதிக்காக வீதி நாடகம் என்று எங்களுக்கு நாங்களே குறிப்பிட்டு வந்தோம். நாங்கள் ஈடுபட்டிருந்த வெளிமுற்ற நாடகங்களில் வீதி நாடகங்களுக்கான கூறுகள் எவற்றையும் கண்டுபிடிக்க முடியாது. வெளிமுற்றம் அது இது என்று சொன்னால் குழம்பிப்போவர்கள் என்பதால் சுலபமான வார்த்தையாக இருந்த வீதி நாடகம் என்ற வார்த்தையை உபயோகித்தோம். தொடர்ந்து எங்களுடைய நாடகங்களை வீதி நாடகங்கள் என்று அறியாமல் சொல்லி சந்தோஷப் பட்டுக்கொண்டிருந்தோம். கரோல்பாக்கில் உள்ள ஒரு பூங்காவில், தமிழ்ப்பள்ளிகளின் விளையாட்டு மைதானங்களில், ஏதாவது ஒரு சதுரக்கூடத்தில், சில நண்பர்களின் வீட்டு மொட்டை மாடிகளில், லோதி மற்றும் தால்கத்தோரா பூங்காக்களின் புல்வெளிகளில் என யதார்த்தாவின் வெளிமுற்ற நாடகங்கள் தொடர்ந்து வந்தன. எல்லா நாடக மேடையேற்றங்களும் ஒரு திட்டமிடலுடன் வெளிமுற்றங்களில் தொடர்ந்து வந்தன. திட்டமிடல் என்றால், முன்கூட்டியே நோட்டீசுகள், அல்லது கையால் எழுதப்பட்ட சுவரொட்டிகள் என விளம்பர சௌகர்யத்துடன் இந்த நாடகங்கள் நடந்தேறின.

இந்த நேரத்தில் ஏதாவது ஒரு மேடை நாடகத்தை உடனடியாகத் தயாரிக்கலாமே என்னும் யோசனையை ஒரு சனிக்கிழமையின் பின் மதியத்தில் ரவீந்திரன் ஒரு நாள் அறிவித்தார். அந்த அவரச ஓட்டத்தில் ரவீந்திரன் சொன்னது முழுக்க மண்டையில் ஏறவில்லை. ஆனால் வீடு போய் சேர்ந்ததும் ரவீந்திரன் சொன்ன அந்த மேடை நாடக விஷயம் மீண்டும் மீண்டும் கனவில் நிழலாடுவது போல இருந்தது.

காலையில் தூங்கி எழுந்ததும் மீண்டும் ரவீந்திரன் வீட்டுக்குப் போனேன். ராத்திரி இருந்த அதே தெளிவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தார் ரவீந்திரன். ராத்திரி ஏதோ சொல்லிக்கிட்டு இருந்தீங்க? என்று தயக்கத்துடன் கேட்டேன். ஆமாம். நாம ஒரு மேடை நாடகத்தைத் தயாரிக்கலாம் என்றார். ஸ்கிரிப்ட் ஏதாவது யோசித்து வைத்திருக்கீங்களா என்று கேட்டேன். யோசிக்கிறது என்ன? இந்தியிலே ஒரு நாடகம் போடலாம் என்றார். போங்க சார். விளையாடறீங்க என்று சிரித்துக் கொண்டே எழுந்து கொண்டேன். இல்லைங்க. தாராளமா போடலாம். சாகித்ய கலா பரிஷத்லே ஒரு விளம்பரம் வெளியிட்டு இருக்காங்க பாருங்க. 35 வயசுக்குள்ளே இருக்கிற இளைஞர்களுக்கு இளைய இயக்குநர்கள் திட்டம்னு போட்டு வாய்ப்புக் குடுக்கறாங்க. இந்தி அல்லது உருதுவிலே நாடகம் தயாரிக்கப் பண உதவியும் தராங்க. செலக்ட் ஆனா, இளைய இயக்குநர் விருதும் தராங்க. நீங்க விண்ணப்பம் அனுப்புங்க என்றார்.

எனக்கு உண்மையாகவே போதை சுத்தமாக இறங்கிவிட்டது. இந்த மனிதர் ஏதோ நம்மைக் கிண்டல் செய்கிறார் என்று தோன்றியது. மேடை நாடகம் எனக்கு சுத்தமாகத் தெரியாதது. அதிலும் இந்தியில் ஒரு மேடை நாடகம் என்றால்? என்னுடைய இந்தி ஞானம் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். தமிழின் சாயலில், தமிழின் வாடையுடன், தமிழில் நினைத்து, உடனடியாக உள்ளுக்குள்ளே அபத்தமான நேரடி மொழிபெயர்ப்பு செய்து நான் இந்தி பேசினால், அந்த மொழியை உண்மையாக நேசிப்பவர்கள் என்னைத் துரத்தித் துரத்தி அடிப்பது நிச்சயம். இந்த லட்சணத்தில் ஒரு இந்தி நாடகத்தை எப்படி இயக்குவது? அதுவும் என்னைப் போலவே இந்திப் புலமையுள்ள ஒரு கூட்டத்தை வைத்து எப்படி அது சாத்தியமாகும்?

அதற்கும் விடை வைத்திருந்தார் ரவீந்திரன். கஜானன் மாதவ் முக்திபோத் என்று ஒரு இந்திக் கவிஞன். அவன் பெரிய பொதுவுடமைவாதி. அவனுடைய கவிதைகள் எல்லாம் சிகப்புச் சிந்தனையை ஏந்தியிருக்கும். அவனுடைய ஏதாவது ஒரு கவிதையை எடுத்து நாம் நாடகமாக்கலாம் என்றார். எனக்கு இன்னும் கிழிய ஆரம்பித்து விட்டது. நாடகப் படி என்றாலும் ஏதாவது பேச்சு வழக்கில் உள்ள இந்தியில் இருக்கும். யாரையாவது படிக்க வைத்து, பேசவைத்து சமாளிக்கலாம். ஆனால் இந்த மனிதர் கவிதையை இழுத்து விடுகிறாரே என்று உதறலாக இருந்தது. என்னுடைய தயக்கம் விட்டபாடில்லை. நல்லா பண்ணுவீங்க. முக்திபோத் கவிதைலே சாந்த் கா மூஹ் டேடா ஹை (சந்திரனின் கோணிய முகம்) என்ற ஒரு கவிதை நல்லா இருக்கும். அதிலே நிறைய படிமங்கள் இருக்கு. அதை முயற்சி பண்ணுங்க என்றார். அந்தக் கவிதையிலே இருக்கிற படிமங்களைக் காட்சிகளாக மாற்றி நாடகம் பண்ணலாம். பண்ணுங்க என்றார்.

ஆனாலும் என்னுடைய தயக்கம் என்னைத் தொடர்ந்து கொண்டே இருந்தது. சாகித்ய அகாதமி நூலகத்துக்குப் போய் கஜானன் மாதவ் முக்தி போத் கவிதைத் தொகுப்பை எடுத்து எழுத்துக் கூட்டிப் படித்துப் பார்த்தேன். ஒன்றும் மண்டையில் ஏறவில்லை. உடன் பணிபுரியும் ஒருவரிடம் கொடுத்து படிக்கச் சொன்னேன். மிகவும் சரளமான உரையாடல் நடையில் அமைந்திருந்தது கவிதை. அடுத்தவர் படித்துக் காட்டும்போது கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது. பர்கத் கா பேட் (அரசமரம்) போன்ற விஷயங்களைக் கேட்டுத் தெளிவு படுத்திக் கொண்டேன்.
மறுநாள் ரவீந்திரன் வீட்டுக்குப் போனேன். சாகித்ய அகாடமி வெளியிடும் இதழான இந்தியன் லிட்டரேச்சரில், சாந்த் கா மூஹ் டேடா ஹை கவிதையின் ஆங்கில மொழியாக்கத்தை வெளியிட்டிருக்கிறார்கள் என்று சொல்லி ஒரு பழைய இதழை எனக்குக் கொடுத்தார். ரவீந்திரன் மீது எப்போதும் எனக்கு ஒரு ஆச்சரியம் உண்டு. இப்படி ஏதாவது ஒரு பெரிய விஷயத்தை சர்வ சாதராணமாக தூக்கி வந்து கையில் கொடுப்பார். ரவீந்திரன் கொடுத்த ஆங்கில மொழி பெயர்ப்புப் பக்கங்களை உடனே நகல் எடுத்து வந்தேன். ஆங்கில மொழி பெயர்ப்பு சற்று புரிகிறது மாதிரி இருந்தது. ஆனால் அந்தக் கவிதையின் முழுமையான வீச்சைப் புரிந்து கொண்டேனா என்பது இன்று வரை சந்தேகமான விஷயம்தான் என்று சொல்லவேண்டும்.

ஆங்கில மொழி பெயர்ப்பைப் படித்துக் கொஞ்சம் தைரியம் வந்தமாதிரி இருந்தது. உடனே நண்பர்களுடன் கலந்து ஆலோசித்தேன். முதலில் தயங்கினாலும் நரசிம்மன் (நச்சு) வீரராகவன் (வீரு) மகே (மகேந்திரன்) மணிகண்டன் போன்ற நண்பர்கள் அதி தைரியம் அளித்தார்கள். உடனே சாகித்ய கலா பரிஷத்துக்கு ஒரு விண்ணப்பம் தயார் செய்தேன். இயக்குநரின் நாடக அனுபவங்களைப் பற்றிய கேள்விக்கு வெளிமுற்ற நாடகங்களை மட்டுமே இயக்கியிருப்பதாகவும் இது மேடையில் என்னுடைய முதல் முயற்சி என்றும் குறிப்பிட்டேன். இந்த ஒரு விஷயத்துக்கே என்னைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்ற ஆறுதல் எனக்கு இருந்தது. நாடகம் இந்தியில் இருந்தாலும் அதனைத் தமிழ்ப் பின்னணியில், அதாவது தமிழ் நாட்டின் சாயலுள்ள அரங்கப் பொருட்கள், தமிழர்களின் உடை, ஒப்பனைகள் போன்றவற்றைக் கையாளுவேன் என்று எழுதியிருந்தேன். தெருக்கூத்தில் எனக்கு இருக்கும் ஆர்வத்தையும் எழுதினேன். அனுபவம் என்று பார்க்கும் போது சொல்லிக் கொள்ள ஒன்றும் கிடைக்காத விண்ணப்பம் என்னுடையது. அந்த விழாவுக்கு தேசிய நாடகப் பள்ளியில் நாடகத்துறையில் பட்டம் பெற்றவர்கள், பல இந்தி முன்னணி நாடக இயக்குநர்களுடன் பணி புரிந்தவர்கள் எனப் பலரும் சாகித்ய கலா பரிஷத் அலுவலகத்தில் இருந்து நாடகங்கள் மேடையேற்ற விண்ணப்பங்கள் வாங்கிச் சென்று கொண்டிருந்தார்கள். சரி. இவர்கள் முன்னால் நம்மை யாரும் சீந்தப் போவதில்லை என்ற தயக்கம் எனக்குள் இருந்தது. அந்தத் தயக்கம் ஒருவகையில் மறைமுகமான ஒரு மகிழ்ச்சிûயுயம் அளித்துக் கொண்டிருந்தது. தேர்வு பெறாவிட்டால் ஒரு மிக நல்ல இந்திக் கவிதையைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி ஒரு மோசமான நாடகமாக மஹாமோசமாகத் தயாரிக்கும் சண்டாளத் தனத்தில் இருந்து தப்பிக்கலாம் என்ற சந்தோஷமும் எனக்குள் ஒளிந்து கொண்டிருந்தது.

சரி. தேர்வுக்கு அனுப்பி இருந்த என் விண்ணப்பம் என்ன ஆனது என்ற தகவல் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு காலையில் கடிதம் ஒன்று வந்தது. அனுப்பிய விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டதா என்று ஏதும் குறிப்பிடாமல் சாகித்ய கலா பரிஷத் அமைப்பின் செயலரை அவருடைய அலுவலகத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. கொஞ்சம் உதறலாக இருந்தது. ஆனால் தேர்ந்தெடுக்கப்படா விட்டால் அது எனக்கு நடக்கும் நல்லதாக இருக்கட்டுமே என்று நினைத்து செயலரை சந்திக்கப் போனேன்.

முக்திபோத் கவிதைகள் மிகவும் கடினமானவை. எங்களுக்கே பல இடங்கள் புரியாது. நீ என்ன செய்யப்போகிறாய்? அதுவும் இந்திக் கவிதையை வைத்து நீ என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார்.

கவிதையில் உள்ள படிமங்களை எடுத்துக் காட்டிப் படிமங்களாக மாற்ற முயற்சி செய்வேன் என்று சொன்னபோது நானே ஏதோ சுமாராகப் பேசுவது போல எனக்குத் தோன்றியது. ஆனால் எனக்கு நானே சொல்லிக் கொண்ட தைரியம் அது என்று பல நாட்கள் கழித்து எனக்குப் புரிந்தது.
அடுத்த இதழில்…