Saturday, June 7, 2008

சிங்கம் அசிங்கமான கதை - தெலுங்கானா வீரரின் சோகக் கதை


ஒரு அமைப்பு. அந்த அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் தனிநபர் நிறுவனமாக அந்த அமைப்பை நடத்தி வந்தவர். அவரே தலைவரை நியமிப்பார். அவரே எல்லோரையும் நியமிப்பார். தன்னையே ஒவ்வொரு ஆண்டும் முக்கியமான பொறுப்பில் நியமித்துக் கொள்வார்.


அவர் தன்னுடைய அமைப்பிலேயே கலாட்டா செய்வார். அவருடைய வலுக்கட்டாயங்களுக்கு யாரும் ஒத்துப் போகாத சூழ்நிலையில் எப்போதும் சட்டைப் பையிலேயே தயாராக வைத்து இருக்கும் ராஜிநாமா கடிதத்தை எடுத்து சபையில் வீசுவார். அவரைத் தவிர அந்த அமைப்பில் யாருக்கும் ஓடியாட நேரம் இருக்காததால் அந்தக் கடிதத்தைத் திரும்பப் பெறச்சொல்லிக் கேட்டுக் கொண்டு அந்த மனிதர் வற்புறுத்தும் தீர்மானங்களை செயல்படுத்துவார்கள் அந்த அமைப்பில்.


ஒரு முறை அப்படி ஒரு கூட்டத்தில் அவர் முன்வைத்த தீர்மானத்துக்கு தலைவர் ஒத்துக் கொள்ளவில்லை. இவர் சத்தம் போட்டுப் பார்த்தார். அப்போது வேறு தலைவர். அந்தத் தலைவர் அயரவில்லை. நம்மாள் வழக்கமான தன்னுடைய அஸ்திரத்தை சட்டைப் பையில் இருந்து எடுத்து விட்டார். தலைவர் சத்தம் போடாமல் அதை எடுத்து தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு ""சரி. எல்லா ஆவணங்களையும் நாளை ஒப்படைத்து விடுங்கள்'' என்று சொல்லி எழுந்து சென்றுவிட்டார்.


நம்ம ஆளுக்குக் கையும் காலும் பதற ஆரம்பித்தது. ஏறத்தாழ ஒரு வாரத்துக்கு அந்தத் தலைவர் வீ்ட்டுக்கும் அலுவலகத்துக்கும் மாறி மாறி அலைந்து தலைவர் சட்டைப் பையில் போட்டு வீட்டுக்கு எடுத்துச் சென்ற தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு மீண்டும் தன் டார்ச்சரை தொடர்ந்து வந்தார்.


இது நண்பர் ஒருவர் சொன்ன உண்மைக் கதை.


ஏறத்தாழ இதே போன்ற ஒரு காரியத்தை செய்து முழித்துக் கொண்டிருக்கிறார் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் அவர்களின் நிலைமையும் சற்றேறக்குறைய இந்த நிலையை ஒட்டியதுதான்.





இத்தனை நாட்கள் அவருடைய தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை மாநில அரசும் மைய அரசும் தான் உதாசீனப் படுத்திக் கொண்டு இருந்தார்கள். இப்போது தெலுங்கானா பிரதேசத்து மக்களே அவரை அநியாயத்துக்குப் போட்டுத் தள்ளி விட்டார்கள். இதுவரை எனக்குத் தெரிந்து எந்தத் தலைவருக்கும் நேராத கொள்கை சார்ந்த சோகம் இது.


சென்ற ஆண்டு 14 சட்டமன்ற உறுப்பினர்களும் 4 பாராளுமன்ற உறுப்பினர்களும் தனி தெலுங்கானா மாநிலத்துக்கான கோரிக்கையை வற்புறுத்தி தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தார்கள். அந்தத் தொகுதிகளில் நடந்த மறுதேர்தலில் மக்கள் காங்கிரசுக்கும் தெலுகு தேசத்துக்கும் ஆதரவு அளித்து சந்திரசேகர ராவுக்கும் அவர் கட்சி வேட்பாளர்களுக்கும் அல்வா கொடுத்தார்கள்.


தெலுங்கு ராஷ்டிர சமிதி உறுப்பினர்கள் ராஜிநாமா செய்த பதினாறு சட்டமன்றத் தொகுதிகளில் அவர்களால் வெறும் ஏழு தொகுதிகளை மட்டும் மீண்டும் பெற முடிந்து இருக்கிறது. பாராளுமன்றத் தொகுதிகளில் நான்கில் இரண்டுதான் அவர்களுக்கு மீண்டும் கிட்டியுள்ளது. தனிப்பட்ட முறையில் சென்ற தேர்தலில் சந்திரசேகரராவ் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று ஒரு சாதனையை நிகழ்த்தினார். இந்த முறை மனிதர் பாவம். பதினைந்து ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அவரால் வெற்றி காண முடிந்தது. இத்தனைக்கும் கரீம் நகர் தொகுதியில் டிஆர்எஸ் கட்சியினர் வாக்குச் சாவடிகளில் அழிச்சாட்டியம் செய்தார்கள் என்று செய்திகள் வெளியாகின. இதையும் மீறி படு மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது அந்தக் கட்சி. தெலுங்கானா பகுதியில் டிஆர்எஸ் கட்சியினர் ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள்.


சரி. தெலுங்கானா பிரதேசம் பற்றிய பூகோள விபரங்களை லேசாகப் பார்ப்போம். ஆந்திர மாநிலத்தில் வாரங்கல், அதிலாபாத், கம்மம், மெஹ்பூப்நகர், நல்கொண்டா, ரங்காரெட்டி, கரீம்நகர், நிஜாமாபாத், மேடக் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது தெலுங்கானா பகுதி. இந்தப் பகுதியில் கிருஷ்ணா, கோதாவரி நதிகள் ஓடுகின்றன. ஆனாலும் ஆந்திராவின் பிற்படுத்தப்பட்ட பிரதேசம் அது. ஆந்திராவில் "தெலங்கானா" என்ற ஓசையில்தான் உச்சரிக்கிறார்கள்.


தெலுங்குப் படங்களில் இந்தத் தெலுங்கானா பகுதி மக்களை ஏறத்தாழ முட்டாள்கள் போல சித்தரிப்பார்கள். அந்தப் பகுதி மக்களைப் பற்றிப் பேசும்போதே உதட்டைக் கடித்துக் கொண்டு நக்கல் அடிக்கிற தொனியில்தான் பேசுவார்கள்.


இந்த நிலையில் தெலுங்கானா பகுதியை தனி மாநிலமாக அமைக்கக் கோரி நீண்ட நாட்களாக போராடி வருகிறது தெலுங்கானா ராஷ்டிர சமிதி. கடந்த மக்களவை தேர்தலில் தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க உதவி செய்வதாக உறுதியளித்து இவர்களைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்ட காங்கிரஸ் கட்சி காரியம் முடிந்ததும் வலுவாக அல்வா கொடுத்தது. அந்த மாநிலம் உருவாக்குதற்கான எந்த நடவடிக்கையினையும் முன்னெடுக்கவில்லை மைய அரசு. பலமுறை வற்புறுத்திய டிஆர்எஸ் கட்சியினர் சென்ற ஆண்டு மைய அரசுக்குத் தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டார்கள்.
இந்தக் கட்சியின் தலைவர் பற்றி சொல்லவேண்டும் என்றால் தெலுங்கு தேசம் கட்சியில் ரொம்ப நாட்கள் இருந்தவர் சந்திரசேகர ராவ். அந்தக் கட்சி ஆட்சியில் இருந்தபோது சட்டசபையில் துணை சபாநாயகர் பொறுப்பில் இருந்தவர். தன்னை கட்சி மதிக்கவில்லை என்றும் தனக்கு சரியான பொறுப்பு தரவில்லை என்றும் குற்றம் சாட்டி அக்கட்சியை விட்டு விலகினார். பிறகு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை துவக்கினார். (நிறைய தேசிய நாளிதழ்கள் மற்றும் ஆங்கில தமிழ் இதழ்கள் கூட தெலுங்கானா ''ராஷ்டிரிய" என்றுதான் தவறாக எழுதுகிறார்கள்).


அவர் கட்சி துவங்கியதே ஒரு சுயநல நோக்குடன்தான் என்று அவருடைய அரசியல் எதிரிகள் குற்றம் சாட்டுகிறார்கள். மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் இருந்து அமைச்சர்களை விலக்கிக் கொண்டதும் நக்ஸலைட்டுகளின் மிரட்டலினால்தான் ஒழிய தெலுங்கானா மாநிலக் கோரிக்கையின் அடிப்படையில் அல்ல என்றும் சொல்கிறார்கள். டிஆர்எஸ் கட்சியின் தொண்டர்கள் சிலரை நக்ஸலைட்டுகள் தாக்கியும் கொன்றும் இருக்கிறார்கள்.


சோனியா காந்தியிடமும் தில்லியின் பல மூத்த காங்கிரஸ் தலைவர்களுடனும் தனக்கு நெருக்கம் அதிகம் என்று பரவலாக ஆந்திராவில் செய்தியைப் பரப்புவார் சந்திரசேகர ராவ். ஆனால் இவர் ராஜினாமா செய்தபோது இவரை யாரும் கண்டுகொள்ள வில்லை. அதுதான் மாபெரும் சோகம்.


சரி. மீ்ண்டும் ஒருமுறை தெலுங்கானா பிரச்னைக்கு வருவோம். வழக்கமாக மற்ற மாநிலங்களில் அவர்கள் பிராந்தியத்தை சார்ந்த பெருமையால். அதன் வளர்ச்சியினால் தனி மாநிலக் கோரிக்கைகள் எழும். ஆனால் தெலுங்கானாவில் வளர்ச்சி என்பது சுத்தமாக இல்லாது போனதால் தனி மாநிலத்துக்கான குரல்கள் எழுந்தன. இத்தனைக்கும் சென்னா ரெட்டியும் நரசிம்ம ராவும் தெலுங்கானா பகுதியை சேர்ந்தவர்கள். ஆனால் அந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு இவர்கள் இருவரும் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்கிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் அங்கே இருக்கிறார்கள். எனவே நக்ஸலைட்டுகள் அதிகமாக அங்கே உருவாகிறார்கள். மக்கள் போராட்டங்களுக்கு தளம் கிடைக்கிறது அங்கே.


ஒடுக்குமுறைக்கான எதிர்ப்பு என்பது இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாகத் தொடர்வது. நிஜாம் காலத்தில் இருந்தே ஒடுக்குமுறைகளை எதிர்த்துக் கிளம்பியவர்கள் இப்பகுதி மக்கள். காங்கிரஸ். தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் இந்தப் பகுதி மக்களுக்கு இழைத்த துரோகங்கள்தான் அதிகம். அதன் விளைவுதான் சந்திரசேகர ராவ் போன்றவர்கள் அதனை தங்களுடைய அரசியல் பகடையாக பாவிக்க வழி செய்கிறது.


மக்கள் டிஆர்எஸ் கட்சிக்கு அளித்த தோல்வி அந்தக் கட்சியின் தனி மாநிலக் கோரிக்கைக்கு எந்த அளவில் ஆதரவு இருக்கிறது என்பதைத் தெளிவாக்குகிறது. அவருக்கு தெலுங்கானா பகுதி மக்கள் நல்லதொரு பாடத்தை அளித்து இருக்கிறார்கள். இந்தப்பதிவின் துவக்கத்தில் சொன்ன கதைபோலத்தான் சந்திரசேகர ராவுக்கும் நடந்து இருக்கிறது.


Friday, June 6, 2008

நம் தாய்மொழியும் நமது குழந்தைகளும்...

நம்முடைய தமிழ் திரைப்படங்களில் நமக்கு அதிகம் காணக்கிடைக்கும் காட்சி இது. கதாநாயக வேடம் புனையும் முதியவர் வழக்கமாகக் கடும் உழைப்பாளி. காலத்தின் கொடுமையால் அவர் சுமார் 20 வயதுள்ள தமிழ் பேசத்தெரியாத ஏதாவது ஒரு சேட்டுப் பெண், தெலுங்கு கன்னடம் அல்லது மலையாளப் பெண் நடிக்கும் கதாநாயகிப் பாத்திரத்தின் வீட்டில் வேலைக்காரராக இருப்பார். இரவல் குரலின் கருணையால் செயற்கையாகத் தமிழ் பேசும் அந்தக் கதாநாயகிப் பெண் நம்முடைய கதாநாயகப் பெரியவரை ஏகத்துக்கும் கேவலப்படுத்திக் கொண்டு இருப்பாள். தோழியருடன் பந்து விளையாடும் போது பந்தைப் பொறுக்கிப் போடச் சொல்வாள். சாணி பொறுக்கச் சொல்வாள். தரையை மெழுகச் சொல்வாள். விறகு பிளக்கச் செய்வாள். வண்டியைத் துடைக்கச் சொல்வாள். தன்னுடைய தோழிகள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அவரை மிகவும் கேவலமாக நடத்துவாள். நம்முடைய கதாநாயக வேடம் அணிந்த பெரியவர் எல்லாவற்றையும் இன்முகத்துடன் பொறுத்துக்கொள்வார். அவள் காலால் இட்ட பணிகளைத் தலையால் செய்வார். பொறுத்துப் பொறுத்து, ஒரு கட்டத்தில் அவமானம் தாங்காது சுனாமி அலையின் சீற்றத்துடன் பொங்கி எழுவார். Look Madam!! What do you think o yourself? You know who I am? I am B.A., Economics from Krishnagiri Government Arts College you know? First of all, you learn how to give respect and take respect. Understand? You better understand... என்கிற ரகத்தில் கைகால்களை ஆட்டி எழுச்சிமிகு வசனங்களைப் பேசுவார். அரங்கில் விசில் சத்தமும் கரவொலியும் வானை முட்டும். நம்முடைய கதாநாயகப் பெரியவரின் ஆங்கில வசனத்தைக் கேட்டு திக்கு முக்காடிப் போவாள் அந்தக் கதாநாயகிப் பெண். அவளுடைய போக்கு உடனடியாகத் தலைகீழாக மாறிப் போய்விடும். அவளுடைய மனதில் சொல்லொணா வண்ணம் காதல் கரைபுரண்டு ஓடும். உடனடியாக வரும் அடுத்த காட்சியில், இருவரும் நைல் நதி அல்லது தேம்ஸ் நதிக்கரையோரத்தில் கைகோர்த்துக் கொள்வார்கள். அல்லது கதாநாயகப் பெரியவர் தலைமுதல் கால்வரை போர்த்திய ஆடையுடனும் கதாநாயகி அந்தக் குளிரில் அரைக்கால் மீட்டர் துணியை உடுத்திக் கொண்டு, ஆல்ப்ஸ் மலைச் சிகரத்தில் புரியாத தமிழில் ஏகப்பட்ட வாத்திய இரைச்சல்களுடன் பாடி ஆடுவார்கள். அங்கே இருமனங்களும் செம்புலப் பெயல் நீர் கலந்தாற்போல் கலந்து விடும்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்தக் கதாநாயகியின் மனமாற்றத்துக்கு மூலகாரணமாக அமைவது நம்முடைய கதாநாயகப் பெரியவர் பொரிந்து தள்ளிய ஆங்கிலம்தான். அவர் பேசிய ஆங்கிலம் தான் அந்த அம்மணியின் மனத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்த அளவு ஆங்கிலம் தெரிந்த இவர் கண்டிப்பாக நல்லவராகவும் வல்லவராகவும் இருந்துதான் ஆகவேண்டும். இந்த அளவு ஆங்கிலம் பேசும் இவருக்குத் தெரியாதது ஒன்றும் இருக்க முடியாது என்றமுடிவுக்குக் கதாநாயகிப் பெண் தள்ளப்பட்டு விடுவாள்.


நம்முடைய குழந்தைகளின் அறிவுத் திறனை அளப்பதற்கும் நாம் இந்தத் தமிழ்த் திரைப்படத்தின் கதாநாயகிப் பெண் மேற்கொள்ளும் இது போன்ற அளவு கோலைத்தான் அதிகமாகப் பயன் படுத்துகிறோம். குழந்தைகள் புத்திசாலிகள் ஆகத்திகழ வேண்டும் என்றால் அவர்கள் வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களை அநியாயமாக வற்புறுத்துகிறோம். அதற்காக சைக்கிளையோ, ஸ்கூட்டரையோ காரையோ வீட்டையோ விற்றாவது அந்தக் குழந்தை ஆங்கிலம் படிக்க வேண்டும். நல்ல ஆங்கிலத்தில் பேசியே ஆகவேண்டும் என்று அவர்கள் மீது திணிக்கிறோம். இந்த வன்முறையின் கொடுமையான விளைவாக நம்முடைய குழந்தைகளுக்கு நம் தாய்மொழியின் அருமை, அதன் இனிமை, அதன் வளமை, அதன் பெருமை பிடிபடாமல் போய்விடுகிறது. பல குடும்பங்களில் குழந்தைகளிடம் வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தில் பேசுவதை ஒரு குடும்ப வழக்கமாகக் கடைப்பிடிக்கிறார்கள். குழந்தைகள் ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் என்று அவர்கள் மீது ஒருவகையான வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு எந்தவகையான இன்பத்தை மறுக்கிறோம் என்பதனை உணர்ந்து கொள்ளாமல் அவர்களை ஆங்கிலம் ஒப்பிக்கும் கிளிகளாக மாற்ற முயற்சிக்கிறோம்.


உலகில் உள்ள எத்தனையோ ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று. இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்வது அல்லது அதில் பாண்டித்தியம் பெறுவது என்பது ஒன்றும் தவறான காரியம் அல்ல. கண்டிப்பாகத் தாய்மொழியைத் தவிர இன்னும் பிறமொழிகளைக் கற்றுக்கொள்வது மனநல ரீதியில் மிகவும் அற்புதமான விஷயம்தான். ஆனால் தாய்மொழியை முற்றாகப் புறக்கணிக்க வைத்து ஒரு மேட்டிமை பாவனைக்காக ஆங்கிலத்தை அவர்கள் மீது திணிப்பது என்பது நம்முடைய குழந்தைகளுக்கு எதிராக நாம் கருத்து ரீதியாகத் திணிக்கும் ஒருவகையான வன்முறைதான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.


மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியாது. இங்கே தில்லியில் அந்தக் கொடுமை சற்று அதிகம்தான் என்று நினைக்கிறேன். தாங்கள் தமிழர்கள் அல்லது தமிழ் தெரிந்தவர்கள் என்று வெளியில் காட்டிக்கொள்வதை ஒரு அவமானமாக நினைக்கும் ஒரு மனப்பாங்கை குழந்தைகளிடத்தில் இங்குள்ள தலைநகர்த் தமிழர்கள் வளர்த்து வருகிறோம். இது குறித்து ஏற்கனவே ஒரு சனிமூலை கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறேன். தன்னைத் தமிழர்களாகக் காட்டிக் கொள்ள விரும்பாத நல்லவர்களின் மனப்பாங்கு மற்றும் போக்கு குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதனை மீண்டும் இங்கு விவரிக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இங்கு நான் சொல்ல விரும்புவது நம்முடைய குழந்தைகளை, நம்முடைய மொழியில் இருந்து விலக்கி வைக்கும் மனப்பாங்கைப் பற்றித்தான். தலைநகரில் வளரும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் என்பது அவர்கள் வீட்டில் எப்போதாவது பேசிக்கொள்ளும் ஒரு காட்டுமிராண்டி பாஷை. தொலைக் காட்சிகளில் பெற்றோர்கள் பார்க்கும் அசட்டுத்தனமான தொடர்களில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து கொண்டும் எப்போதும் அழுது கொண்டும் பேசப்படும் ஒரு மொழி. அவ்வளவுதான். தமிழுக்கு அதற்கு மேல் அங்கே வேலையும் பயன்பாடும் இல்லை.

அதிலும் சில தமிழ்ப் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் எதிரில் மிகவும் கவனமாகத் தமிழ் பேசுவதைத் தவிர்த்துத் தனியறையில் காதல் செய்யும் போதும் சண்டை போடும் போது மட்டுமே தமிழ் பேசிக்கொள்கிறார்கள். சில வீடுகளில் தமிழ்த் திரைப்படங்களைக் கூடக் குழந்தைகள் எங்காவது வெளியில் விளையாடப் போகும்போதுதான் தொலைக்காட்சிப் பெட்டியில் போட்டுப் பார்க்கிறார்கள். (ஆனால் இது ஒருவகையில் இது அந்தக் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்யும் காரியம்தான். அதனால், இதனை சற்று சகித்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது). சில வீடுகளில் சிறுகுழந்தைகளிடம் தமிழ் பேசினால் அந்தக் குழந்தை பேயைக் கண்டது போல மிரண்டு போகிறது என்று பெருமையுடன் விருந்தாளிகளிடம் சொல்பவர்களும் உண்டு.


எதையும் சிந்திக்கும்போது நமக்குப் பழக்கமான, நமக்குள் ஊறிப்போன ஒரு மொழியில் சிந்திக்கும்போது சற்று உருப்படியாகச் சிந்திக்கலாம் என்று மொழியியல் அறிஞர்கள் அடிக்கடி வலியுறுத்துகிறார்கள். சிந்தனை அளவில் நமக்குப் பரிச்சயமான மொழியின் தளத்தில் இயங்கும்போது அதன் ஓட்டம் சீராக அமையும் என்பதும் இயற்கை. எனவே அடிப்படை மொழியான தாய்மொழியை மனத்தளவில் சிந்தனை அளிவல் வலுப்படுத்தினாலே பல பெரிய காரியங்களை சாதிக்கலாம். ஆனால் இங்கு நடப்பது என்னவென்றால், சிந்தனை ஓட்டத்தில் நமக்குச் சரளமான தாய்மொழியை ஒதுக்கி வைத்து, அந்நிய மொழிகளையும் அறைகுறையாகக் கற்றுக்கொடுத்து, சிந்தனை ஓட்டத்தைத் தடைபடச் செய்கிறோமோ என்றும் தோன்றுகிறது. இதனை என்னால் சரியாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. மொழியியல் அறிஞர்களும், மனவியல் அறிஞர்களும் இதைப்பற்றி இன்னும் சற்று விரிவாகவும் சொல்லலாம். என்னுடைய சிற்றறிவுக்கு எட்டுவது என்ன என்றால், குழந்தைகளின் மீதான இந்த அறைகுறை மொழித் திணிப்பு என்பது அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் அவர்கள் சொல்ல வருவதை சரியான முறையில் எடுத்துச் சொல்ல முடியாத ஒரு அசௌகர்ய நிலைக்குத் தள்ளப் படுகிறார்களோ என்றும் தோன்றுகிறது. இங்கு தலைநகரில் இந்தியில் சிந்தித்து அதனை மனத்தளவில் உடடினயாக மொழிமாற்றம் செய்து வார்த்தைக் கோர்வைகளைத் தவறாக முன்வைக்கும் பலரைக் காணமுடிகிறது. இதற்கான உடனடி உதாரணமாக என்னுடைய இருமகள்களின் தமிழைச் சொல்லலாம். எங்கள் வீட்டில் வலுக்கட்டாயமாகத் தமிழில் பேசி, அவர்களைத் தமிழ் படிக்க வைத்தே இந்த நிலை என்றால், தமிழை முற்றாக ஒதுக்கி வைத்து ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே பேசவைத்து, வளர்க்கப்படும் குழந்தைகளின் நிலை என்ன என்று நினைத்துப் பாருங்கள். தமிழ் புழங்கும் சூழல் அவர்கள் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. அப்படி இருக்கும்போது ஆங்கிலத்தை மட்டுமே அவர்கள் மீது திணித்து வளர்ப்பது என்பது எந்தக் கொடுமையில் சேர்ப்பது என்று சொல்லத் தெரியவில்லை. இதன் விளைவு என்னவென்றால் அந்தக் குழந்தைகளுக்கு எந்த மொழியின் பாலும் பற்றும் பாண்டித்யமும் ஆழமும் ஞானமும் இல்லாமல் போய்விடும். எல்லாமே அறைகுறையாகத் தான் இருக்கும்.


இந்த நிலையில் தலைநகரில் மரபிசை கற்றுக் கொள்ளவும் மரபுசார் நடனவகைகளைக் கற்றுக்கொள்ளவும் திருப்புகழ், பாசுரங்கள், திருவருட்பா போன்றவற்றைக் கற்றுக்கொள்ளவும் தங்கள் குழந்தைகளுக்கு ஊக்கம் அளிக்கும் பெற்றோர்களைத் தலைவணங்கத் தோன்றுகிறது. இவை நம்முடைய குழந்தைகளை நம்முடைய மரபுடன் ஒத்திசைய வைக்கும் காரியத்தை ஆற்றுபவவை. ஒரு சிறிய அளவிலாவது நம்முடைய மொழியின் வளமையை, பெருமையை, அவர்கள் வளர்ந்த பிறகாவது உணர்ந்து கொள்ள வழிவகை செய்பவவை.


நம்முடைய குழந்தைகளுக்கு நம்முடைய மொழியுடன் நாம் செய்து வைக்கும் பரிச்சயம் குறித்தும், அவர்களுடைய அறிவுத் திறனை ஆங்கிலம் வழி அளப்பதையும் குறித்து நான் சற்று மிகைப்படுத்திச் சொல்வது போலக்கூடச் சில சமயம் தோன்றும். இந்த விஷயத்தை எனக்கே உரிய மிகச் சிறிய அளவிலான ஞானத்தின் விளைவால் சற்றுப் பகிடி செய்வது போலத் தோன்றினாலும் இதன் அடிநாதமாக மிக ஆழமான வேதனை தொக்கி நிற்பதை எப்படி சரியாக விளக்கிச் சொல்வது என்று தெரியவில்லை.

ஏப்ரல் 2008 வடக்கு வாசல் இதழில் வெளியான கட்டுரை.



Monday, June 2, 2008

கர்நாடகத் தேர்தல் - மோசமான பக்கத்து வீட்டில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்...

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் பற்றிக் கோட்டு சூட்டு போட்ட ஆட்கள் ஊடகங்களில் மாறி மாறிக் கடித்துக் குதறித் துப்பிய பின் எங்கேனும் கொஞ்சம் மிச்சம் இருந்தால் என் பங்குக்கு நானும் பிளேடு போடலாம் என்று இந்தப் பதிவு.

இரு வாரங்களுக்கு முன்பு மைய அரசில் பொறுப்பேற்ற நான்காவது ஆண்டுவிழாவைக் கொண்டாடிய ஐக்கிய முன்னேற்றக் கூட்டணி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த தோல்வியைக் கண்டு கலங்கிப் போயிருக்கிறது. அதுவும் மக்களவைத் தேர்தல் இன்னும் ஒரே ஆண்டில் நடக்க இருக்கும் இந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைத்த இந்தத் தோல்வி என்பது சற்று ஆட்டம் கொடுக்க வைக்கிற விஷயம்தான். கடந்த நான்கு ஆண்டுகளில் 25 சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்த காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முன்னேற்றக் கூட்டணி தொடர்ச்சியாக 16 தோல்விகளை சந்தித்து இருக்கிறது. 2004ல் காங்கிரஸ் கட்சி, ஆந்திர பிரதேசம், அருணச்சல பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வெற்றி கண்டது ஆனால் கர்நாடகா, ஒரிஸ்ஸô, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தோல்வியைத் தழுவியது. 2005ல் ஹரியானா மாநிலத்தில் மட்டுமே வெற்றியைப் பறித்த காங்கிரஸ் பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் படுதோல்வியைத் தழுவியது. 2006ல் அஸ்ஸôமில் வெற்றி பெற்றது. புதுச்சேரியில் மிகச் சிறிய அளவில் வெற்றி கண்டு திமுகவுடன் கூட்டணி அமைத்தது. அதே ஆண்டு மேற்கு வங்காளத்திலும் கேரளாவிலும் தோல்வி கண்டது. 2007ல் குட்டி மாநிலங்களான மணிப்பூர் கோவா போன்ற இடங்களில் வெற்றிகண்ட காங்கிரஸ், பஞ்சாப், உத்தரகாண்டம், ஹிமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தோல்வியைத் தழுவியது. 2008ல் நிலைமை படுமோசமாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி எந்த மாநிலத்திலும் பெரும்பான்மை பெற்று வரமுடியவில்லை. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் படுதோல்வியைத் தழுவியுள்ளது.

நான் மேலே சொன்ன எல்லா மாநிலங்களிலும் மக்கள் வாக்களித்து இருக்கும் முறையைப் பார்க்கும்போது அவர்கள் ஐக்கிய முற்போக்கு முன்னணியின் கொள்கைகளுக்கு எதிராக, அவர்கள் அறிவித்த திட்டங்களின் தோல்விகளுக்கு தோல்விகளுக்கு எதிராகத்தான் வாக்களித்து இருக்கிறார்கள் என்பது நன்கு புலனாகிறது.

(அடடே... நானும் ஒரு அழுக்குக் கோட்டு போட்டுக் கொண்டு தூர்தர்ஷன் பேட்டிகளில் உட்காரலாம் போலிருக்கிறதே?)

கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சிக்குக் கிட்டிய வெற்றி தென்னகத்தில் அவர்களுடைய வருகையைப் பதிவு செய்திருக்கிறது. ஆனால் இது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஒரு தீர்ப்பாகத்தான் எடுத்துக்கொள்ள முடிகிறதே தவிர, பாரதிய ஜனதா கட்சிக்கு ஏதோ முழு அங்கீகாரம் கிடைத்தது என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

கர்நாடகத் தேர்தல் வெற்றி அவர்களுக்குப் பாராளுமன்றத்தின் கதவுகளைத் திறந்து விடுமா என்று இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியாது.

தேவே கௌடா மற்றும் குமாரசாமி கோஷ்டிகள் செய்த அரசியல் துரோகத்துக்கு அடி கொடுத்திருக்கிறார்கள் மக்கள். அந்தக் கட்சிக்குக் கிடைத்த மிகக் குறைவான வாக்குகள் இவற்றை உறுதிப்படுத்துகின்றன.

இன்னொரு முக்கியமான விஷயம்.

எப்போதும் நாம் கல்யாண வீட்டில் கல்யாணம் பண்ணி வைக்கும் சாஸ்திரிகளை மறந்து விடுகிறோம்.

பொதுவாக வட மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் வன்முறை அதிகம் இருக்கும். Muscle Power அதிகம் பாவிக்கப்படும். தென்னகத்தில் நடக்கும் தேர்தல்களில் Muscle Power குறைந்து Money Power அதிகம் இருக்கும்.

Muscle Power காட்டுபவர்களைக் கூட நான்கு தட்டுத் தட்டி விழுக்காட்டலாம். Money Power காட்டுபவர்கள் கொஞ்சம் ஆபத்தான ஆசாமிகள். அவர்கள் எந்த எல்லை வரை வேண்டுமானாலும் போய் விளையாட்டுக் காட்டுவார்கள். அப்படிப்பட்ட விளையாட்டு வித்தகர்கள் தமிழகத்தைப் போலவே, கர்நாடகாவிலும் மிக அதிகம். Money Power காட்டி விளையாட்டுக் காட்டும் வித்தகர்களுக்கும் விளையாட்டுக்காட்டி இந்தத் தேர்தலை மிகவும் நேர்மையாகவும், திறமையாகவும் அருமையாகவும் நடத்திக் காட்டிய கோபால்சாமியும் அவருடைய அதிகாரிகளும் நம்முடைய பாராட்டுக்கும் தலைவணக்கங்களுக்கும் உரித்தானவர்கள்.


கர்நாடக மக்கள் தண்ணீர் தராத மஹாபாவிகளாக இருக்கலாம். ஒரு மோசமான பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம். மொழி வெறி மற்றும் இன வெறி பிடித்தவர்களாக இருக்கலாம். ஆனால் தேர்தலில் அவர்கள் புத்திசாலிகளாக வாக்களித்து இருக்கிறார்கள்.

ஒன்று இந்தத் தேர்தலில் பிரிவினை பேசும் வாட்டாள் நாகராஜ் போன்ற விருதாவான ஆட்களை அவர்கள் படுகேவலமாகத் தோற்கடித்து இருக்கிறார்கள்.

இரண்டாவது கர்நாடகாவில் தேர்தலில் நின்ற எல்லா திரைப்பட நடிகர்களையும் கட்சி வித்தியாசம் இல்லாமல் படுதோல்வி அடைய வைத்திருக்கிறார்கள். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

இந்த விஷயத்தில் மட்டும் தமிழகம் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.