Thursday, September 30, 2010

ஆட்டம் துவங்க இன்னும் மூன்றே நாட்கள்...

இந்தத் தொடரைத் தொடங்கிய நான்காவது நாள் இது. நீங்கள் நேரடியாக இன்று இந்தக் கட்டுரைக்கு வந்திருந்தால் உங்களுக்காக ஒரு முக்கியமான குறிப்பு.

நான் டெல்லியில் வசித்து வருவதால் காமன்வெல்த் போன்ற முக்கியமான நிகழ்வு நடக்கும்போது அந்த நேரத்தில் இந்த நகரத்தில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதைப் பதிவு செய்வதுதான் என்னுடைய நோக்கம்.

1982 டெல்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போது நான் இங்கிருந்தேன். அப்போது இதுபோன்று பதிவு செய்யும் வசதி எல்லாம் இல்லை. அந்தப் போட்டிகளுக்கு இருவாரங்களுக்கு முன்பு இந்த நரகம் என்ன களேபரங்களை சந்தித்தது என்று இப்போதும் யோசித்துப் பார்க்கிறேன். தனிப்பட்ட நிகழ்ச்சிகள் எவையும் என் நினைவில் சுத்தமாக இல்லை. அப்போது இங்கிருந்த நண்பர்கள் பலரிடமும் கேட்டுப் பார்த்தேன். அவர்களும் என்னைப் போலவே முழிக்கிறார்கள். எனவே இப்போது இணையம் அளிக்கும் வசதியைப் பயன்படுத்தி இந்த நாட்களைப் பதிவு செய்யும் வேலையைச் செய்யலாம் என்று முன்வந்திருக்கிறேன்.

இங்கு நான் எழுதுகிறவற்றை மிகவும் விரிவாக காட்சி ஊடகங்களிலும் செய்தித்தாள்களிலும் நீங்கள் காணலாம், அவற்றின் ஒருவகையான சுருக்கத்தையும் நான் நேரில் கண்ட சிலவற்றை மட்டுமே இங்கே பதிகிறேன், அவை குறித்த சில பிரத்யேகமான விமர்சனங்களையும் எங்காவது லேசாகத் தொட்டுச் செல்கிறேன்.

இவை இப்போது உங்களுக்குக் கண்டிப்பாக சுவாரசியமாக இருக்காது. அடுத்த மாதத்துக்கு அடுத்த மாதம், அதாவது நவம்பர் மாதத்தில் இந்தப் பதிவுகளை மொத்தமாகப் படித்துப் பாருங்கள். ஒரு சில நாட்கள் கழித்து எப்போதாவது படிக்கும்போது இந்தப் பதிவுகள் அட, இப்படியுமா நடந்தது என்று உங்களுக்குத் தோன்றலாம்.

அந்த ஒரு சில நாட்கள் கழித்தே இதனை எழுதலாமே என்று நீங்கள் கேட்கலாம்.

அப்போது உங்களைப் போலவே எனக்கும் எல்லாம் மறந்து போயிருக்கும்.


சரி. இனி இன்றைய பதிவு.

Wednesday, September 29, 2010

ஊஉஸூலா தலைவலி - அரசியின் அலங்காரக் கைக்கோல்...

ஏற்கனவே அறிவித்தபடி டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுக்கள் முடியும் வரை அந்த விளையாட்டு ஏற்பாடுகள் மற்றும் தலைநகரில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த பதிவுகளை என்னுடைய வலைத்தளத்தில் எழுதும் தொடரின் மூன்றாவது நாள் கட்டுரை இது,

1982ல் ஏசியாட் நடந்த போது டெல்லியில் இருந்தேன். அப்போது நடந்தவை ஏறத்தாழ யாருக்கும் நினைவில் இல்லை. எனவே இன்றைய வலைத்தள வசதிகளை பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் நடப்பவற்றை இங்கே பதிவு செய்யலாம் என நினைத்தேன்.

இதில் புதிதாக ஒன்றும் இல்லை. நீங்கள் ஊடகத்தில் காண்பவைதான்., செய்தித்தாள்களில் படிப்பவைதான்.

ஆனால் இவற்றை ஆறுமாதம் கழித்து நீங்கள் படிக்கும் போது இதன் சுவாரசியம் உங்களுக்குப் புரியும்.

ஆறுமாதம் கழித்தே எழுதலாமே என்று நீங்கள் கேட்கலாம், அப்போது எனக்கு எதுவும் நினைவில் இருக்காது. ஏன் என்றால், நான் பதிவு செய்பவை எல்லாம் மிகவும் அல்பமான அக்கப்போர்கள்.

http://www.kpenneswaran.com

அன்புடன்

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

Tuesday, September 28, 2010

அரசியா? தலைவியா?


விளையாட்டு பற்றி ஒன்றும் தெரியாவிட்டாலும் டெல்லியில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பற்றிய சில பதிவுகளை அன்றன்றே பதிவு செய்லாம் என்று யோசித்து நேற்றில் இருந்து துவங்கிவிட்டேன்.

இன்று இரண்டாவது நாள்.

இது 16 அக்டோபர் 2010 வரை தொடரும்.

இந்த அக்கப்போரைப் படிப்பதற்கு என்னுடைய வலைத்தளம் www.kpenneswaran.com
வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறேன்.

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

Monday, September 27, 2010

இறகைக் கொடு ஆண்டவனே

டெல்லியில் உட்கார்ந்து கொண்டு இங்கு நடக்கும் (Un) காமன்வெல்த் விளையாட்டு தொடர்பான களேபரங்களைப் பற்றி பதிவு செய்யாமல் வேறு எதையாவது செய்தால் மஹாதுரோகம் என்று நண்பர்கள் பலர் அடிக்கடி வெளியூர்களில் இருந்து அறிவுறுத்துகிறார்கள்.

விளையாட்டு பற்றியெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் இந்த விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் மற்றும் டெல்லியில் நடைபெறும் களேபரங்கள் பற்றி வம்பளக்கிற பாணியில் எதையாவது சொல்லலாம். அதுதான் என்னால் முடிந்தது.

மேலும் வாசிக்க...

Saturday, September 25, 2010

SON RISE IN BIHAR!

அன்புள்ள நணபர்களுக்கு

என்னுடைய இணையதளத்தில் பீகார் தேர்தல் - கட்சிகள் மாறுதல் - லாலு சக்ரவர்த்தி தனக்கான அரசியல் வாரிசை அறிவித்தல் போன்ற செய்திகளுடன் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறேன்.

http://www.kpenneswaran.com/

நிகழ்வு என்கிற புதிய இணைப்பில் பல்வேறு நிகழ்வுகள் குறித்த அழைப்பிதழ்களை வலையேற்றம் செய்திருக்கிறேன்.

நல்லா இருக்கே என்ற பகுதியில் பயனுள்ள இணையதளங்கள் மற்றும் வலைப்பூக்களையும் இணைத்திருக்கிறேன்.

வருகை தர உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

அன்புடன்

பென்னேஸ்வரன்
25 செப்டம்பர் 2010

Tuesday, September 21, 2010

முற்றுப்புள்ளியை நோக்கி நகரவேண்டிய துவக்கப்புள்ளி...

வணக்கம்.

இன்று வடக்கு வாசல் செப்டம்பர் மாத இதழை இணையத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறோம். கீழ்க்காணும் கட்டுரைகள் கதைகள் அங்கே உங்களுக்குப் படிக்கக் கிடைக்கும்...

http://www.vadakkuvaasal.com/articlelist.php?id=75

என்னுடைய இணையதளத்தில் காஷ்மீர் பிரச்னை பற்றி ஒரு கட்டுரையை இன்று பதிவு செய்திருக்கிறேன்.

http://www.kpenneswaran.com/

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

அன்புடன்

பென்னேஸ்வரன்

Monday, September 20, 2010

என் புதிய வலைத்தளம்


அன்புள்ள நண்பர்களுக்கு

வணக்கம்.

இந்த வலைப்பூவில் எழுதிக் கொண்டு இருந்தபோது சற்று நிறுத்தி வடக்கு வாசல் இணையதளத்தின் வாசகப் பரப்பைப் பரவலாக்க ராகவன் தம்பி பக்கங்கள் என்ற பெயரில் எழுதிக் கொண்டு இருந்தேன்.

ராகவன் தம்பி பக்கங்கள் துவங்கிய நேரம், டெல்லி தமிழ்ப் பள்ளிகளில் உள்ள பிரச்னைகளை தொடர்ச்சியாக எழுதி வந்தேன். தமிழ்ப் பள்ளிகளின் மேலாண்மை குறித்த பல்வேறு பிரச்னைகளை வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். பள்ளியின் முன்னாள் மாணவர்களும் பள்ளி நலனில் அக்கறை கொண்ட நண்பர்களும் பெருத்த அளவில் ஆதரவு நல்கினார்கள். அவர்களின் ஆதரவு டெல்லித் தமிழ்ப் பள்ளிகளின் நிர்வாகக் குழுவில் பிரதிபலித்தது.

பள்ளியின் நிர்வாகத்தில் மாற்றம் வந்தது. அது மட்டுமில்லாமல் ஒரு நல்ல விழிப்புணர்வும் வந்தது. பலரும் பள்ளிகளின் முன்னேற்றத்துக்கு உதவுவதற்கு முன்வந்தார்கள். வந்து கொண்டிருக்கிறார்கள். இதே நிலைமை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.

வடக்கு வாசல் இதழின் பக்கங்கள் வடக்கு வாசல் இணையதளத்தில் ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி வலையேற்றப்படுகிறது. அந்த இதழின் இணைய பக்கங்களில் தேவையில்லாமல் என்னுடைய இடையீடு இருப்பது போலத் தோன்றியது.

அது மட்டுமல்லாது வடக்கு வாசல் இணையதளத்தை மாதம் ஒருமுறை படிக்கும் வண்ணம் இருக்கிறது. இப்போது அதனை சற்று மேம்படுத்தும் திட்டம் இருக்கிறது. விரைவில் வாரம் ஒருமுறை இலக்கியம், அரசியல், சினிமா, கலை, இசை போன்ற பல்வேறு துறைகள் சார்ந்த பதிவுகளை சேர்க்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதனால் வடக்கு வாசல் பக்கங்களில் இருந்து ராகவன் தம்பி பக்கங்களைத் தனியாகப் பிரித்தெடுக்க முடிவுசெய்தேன். அதன் விளைவு இப்போது ஒரு புதிய இணையதளத்தை என்னுடைய பதிவுகளுக்காக பிரத்யேகமாகத் துவங்கியிருக்கிறேன்.

www.kpenneswaran.com என்னும் இந்த இணையதளத்தில் இனி வாரம் மூன்று கட்டுரைகள் எழுதலாம் என்று திட்டமிட்டு இருக்கிறேன். என்னுடைய சிறுகதைகள், மொழிபெயர்ப்புக்கள், நாடகங்கள், திரை விமர்சனம், நூல் விமர்சனம் எனப் பல்வேறு தலைப்புக்களில் என்னுடைய பதிவுகள் தொடரும்.

இந்தப் புதிய முயற்சிக்கு நண்பர்களின் ஆதரவு தேவை.

இந்தப் புதிய இணையதளத்தைத் துவங்கியிருக்கும் நேரத்தில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சங்கச் சுடரில் சனிமூலை வலைப்பூ பற்றிய அறிமுகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். எனவே இப்போது இதனை விடுவதற்கு மனது இல்லை. வழக்கப்படி சனிமூலையும் உயிர்ப்புடன் தொடரும்.

உங்களை என்னுடைய இன்னொரு வீடான (சின்ன வீடு என்று சொன்னால் கோபிததுக் கொள்வீர்களா?) என்னுடைய இணையதளம் www.penneswaran.com வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறேன்.

அன்புடன்

கி.பென்னேஸ்வரன்
20 செப்டம்பர் 2010

Thursday, September 16, 2010

இருட்டறை


பஞ்சாபி மூலம் – அம்ருதா ப்ரீதம்
ஆங்கிலம் வழி தமிழில் – ராகவன் தம்பி
நன்றி - www.vallamai.com




சிலிர்ப்புடன் படர்ந்தது மெல்லிய காற்று. உன் மூச்சுக்காற்று அதில் கலந்ததனால் இந்தச் சிலிர்ப்பு காற்றில் கலந்து இருக்கலாம். காற்றின் திசை பார்த்து நிற்கும் மரங்களின் இலைகள் நடுங்கத் துவங்கின. எலும்பு மற்றும் சதையால் உருவான ஜடமான நான், நீண்ட நேரமாக ஸ்தம்பித்து ஜடமாக நின்று கொண்டிருந்தேன். ஒருகணம், திடீரென்று, என்னுடைய ஜடத்தன்மை என்னை விட்டுக் கரைவதை உணர்ந்தேன். வெளியில் வீதியைப் பார்த்தேன். நீ கடந்து எங்கோ சென்று கொண்டிருந்தாய். இந்த வீதியில் பல மனிதர்கள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் உன்னுடைய நடையில் மட்டும் ஒரு தனித்துவம் மிளிர்ந்தது போலத் தெந்தது.

நீ நடந்தபோதும் ஒரு நொடி தயங்கி நின்றபோதும் உன்னுடைய காலடி அந்த வீதியுடன் ஏதோ ஒரு உரையாடலை நிகழ்த்தியது போலத் தோன்றியது. அங்கே கிளம்பி புழுதியைப் பல நாட்கள் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

ஒருநாள், என் வீட்டின் வாயில் கதவுக்கு எதில் உள்ள மரத்தின் கீழ் நீ நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஒரு குறுகிய கணத்தில் அந்த மரத்தில் முதன் முறையாகப் பூக்கள் மலர்ந்து விந்து சிப்பதைக் கண்டேன்.

அந்த மலர்களை பலநாட்கள் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு கோடையின் பிற்பகல் நேரத்தில், நீர் நிரம்பி வழியும் ஏதோ ஒரு கிணற்றுக்கு வழி கேட்பதைப் போல, என் வீட்டின் முன்பக்கக் கதவுக்கு எதிராக நீ நின்றிருந்தாய்.

ஆச்சரியத்திலும் திகைப்பிலும் அந்தக் கதவு உன்னிடமிருந்தும் என்னிடமிருந்தும் தன்னைப் பூட்டிக் கொண்டது.
நீ வாயிலை உற்று நோக்க அது உயிர்ப்பு கொண்டு எழுந்தது.

நான் உள்ளே சென்று ஒரு மண்கலயத்தில் நீரை மொண்டு வந்தேன். நீ அமைதியாக உள்ளே வந்து, பருகினாய்.

நீ எங்கிருந்து வந்தாய் என்றோ எங்கே போகிறாய் என்றோ நான் என்றும் அறிந்து கொண்டது இல்லை. என் வீட்டைக் கடந்து நீ போகவேண்டும் என்பது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தது. ஒவ்வொரு முறையும் நீ தாகத்துடன் இருப்பாய். கலயத்தில் நீரை நிரப்பி உன் முன்னால் வைப்பேன்.

“என் பெயர் யுரேனஸ்”, என்று தண்ணீரைக் குடிப்பதற்கு முன்பு ஒரு நாள் சொன்னாய். நீ காலி செய்த குவளையை உன்னிடம் இருந்து வாங்கிக் கொண்டு, “நான் கையா” என்றேன்.

நீ என் வீட்டின் கீழ்த்தளத்தை மட்டுமே பார்த்து இருக்கிறாய். முதல் தளத்தைப் பார்த்தது இல்லை. ஆனால் ஒருநாள், படிக்கட்டுக்களை உன்னுடைய கண்கள் மேய்வதை பார்வையால் தொடர்ந்தேன். படிகளில் ஏறிக்கொண்டே நீ சுவற்றின் மீது உன் கைகளை வைத்தாய்.
எனக்குள் ஒரு பூகம்பம் சுருண்டு ஊடுருவியது.

படிக்கட்டுக்கள் முடியும் இடம் படுக்கை அறைக்கு இட்டுச் செல்லும். கொடிகள் அடர்ந்த ஒரு அலங்கார வளைவு ஒன்று அதன் மேலாக இருக்கும்.

பசுமையான கொடிகள் அடர்ந்த அந்த வளைவின் கீழ் நீ ஒரு கணம் நின்றாய்.

நான் தீயை மூட்டத் துவங்கினேன்.

உனக்குப் பரிமாறுவதற்கு முன்பு உணவை சூடுபடுத்த விரும்பினேன். ஒரு கணம் தயங்கி உன் முகத்தைப் பார்த்தேன்.

கடவுளே…
உன் முகத்தில் சூடேறியிருந்தது. ஒருவேளை தீயின் சுவாலைகள் முகத்தில் பிரதிபலித்ததினால் அப்படி இருக்கலாம். மூட்டப்பட்ட தீயில் இருந்து சில கங்குகள் பறந்து என் காலடியில் விழுந்தன. வெறும் கால்களால் அவற்றை நசுக்கினேன்.

நடுங்கும் கரங்களுடன் சூடான உணவை உனக்குப் பரிமாறினேன். ரொட்டியைப் பிய்க்கும்போது உன்னுடைய விரல்களும் லேசாக நடுங்குவதைப் பார்த்தேன். எனக்குள் கிளர்ந்து எழும் பூகம்பத்தை மறைத்துக் கொண்டேன்- அந்த பூகம்பத்தை என்னில் இருந்து வெளியில் பிய்த்து எடுப்பதுபோல நீ என்னை உற்றுப் பார்த்தாய்.

மூலையில் தீ கங்கு விட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஜøவாலைகள் நம் முகங்களில் பிரதிபலித்தன.

நான் வசிக்கும் மூன்று தளங்கள் கொண்ட வீட்டின் அடித்தளத்தில் யாரும் காண முடியாத ஒரு இருட்டறை உள்ளது. நீ விட்டுச் சென்ற அந்த இரவில் என்னுடைய இருபது வயது இளமையை தேகத்தில் இருந்து பிய்த்து எடுத்து அந்த இருட்டறையில் மிகவும் பத்திரமாக வைத்தேன்.

உனக்குத் தேவைப்படும்போது அதனை உன்னுடைய பார்வைக்கு வைக்கலாம் என்று நினைத்தேன். அதனை உனக்காகவே பிரத்யேகமாக வைத்திருக்கிறேன்.

ஒரு சிறு கேவல், மார்பில் கிளர்ந்து தொண்டையில் இறங்கி என்னுடைய உதட்டை விட்டுப் பியும்போது யு…ரே…ன…ஸ் என்று என் காதுகளை அவை நிரப்பியபடி சின்னஞ்சிறு வார்த்தைச் சிற்பங்களாகக் கிளம்பும்.

என் இரவுகளும் பகல்களும் உன்னுடைய பெயன் ஒலியைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தன.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருநாள் மீண்டும் வந்தாய். அன்று உன் கால்கள் எவ்விதத் தயக்கமும் இன்றி நடைபோட்டன. கீழ்த்தளமா அல்லது மேல் தளமா என்ற தயக்கம் ஏதும் அவற்றுக்கு இல்லை.
பலநாட்களான காத்திருப்பு மற்றும் திறக்கப்படாத புத்தகங்களின் நிசப்தமான பக்கங்களுடன் சிதறி இருக்கும் என்னுடைய இரண்டாவது தளத்துக்கு நீ வந்தாய்.

நீண்ட நேரம் அமைதியாக நின்றிருந்தாய்.

புத்தக வரிசையில் இன்னும் ஒரு புத்தகத்தை சேர்த்தது போல இருந்தது. ஒரு புத்தகத்தை மிருதுவாகத் திறந்து அதன் முதல் பக்கத்தைப் பார்ப்பது போல உன்னருகில் வந்து உன்னுடைய கையைத் தொட்டேன். நீ சிரித்தாய்.

அனைத்துப் பக்கங்களையும் உன் கண்களும் அனைத்து ஞானத்தையும் உன் உதடுகளும் என்னில் அள்ளிப் பருகின.

என் உதட்டின் எல்லாப் பக்கங்களையும் வாசிக்க முயல்வது போல என்னை அன்று முத்தமிட்டாய்.

அப்படியே என்னுடைய கரங்களைப் பற்றிக் கொண்டு என்னை நடுத்தளத்துக்கு இழுத்துப்போனாய். பச்சைக் கொடிகள் படர்ந்த அந்த அலங்கார வளைவைக் கடந்து என்னுடைய அறையில் நுழைந்தோம்.

நரம்புகள் புடைத்த வலுவான உன்னுடைய கரங்களால் நீ படுக்கை விரிப்பை மிருதுவாகத் தடவிக் கொடுத்தாய்.

என்னுடைய இறந்த காலம் என்பது நீண்ட தனிமையான நாட்களாகவும் எதிர்காலம் என்ற ஒன்றில் என்னதான் இருக்கிறது என்று தெரியாமலும் இருந்தேன். ஆனால் நிகழ்காலத்தில் ஒரு கணம் கிளர்ந்து என்னுடைய இறந்த காலத்தை ஒரு கையாலும் எதிர்காலத்தை இன்னொரு கையாலும் இறுக அணைத்துக் கொண்டது.

அந்தக்கணம் இறந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலங்களுக்குத் தன்னைப் படர விட்டுக் கொண்டது.

இதற்கு முன்பு என்னைப்போலவே நீயும் ஒரு சதைச் சுவராகத்தான் இருந்தாய். ஆனால் இப்படி சதைச்சுவரும் சேறும் எப்படிப் பிணைந்து கொண்டது என்று எனக்குத் தெயவில்லை.

ஒரு நதி இன்னொரு நதியுடன் இணைவது போல என்னை நீ சந்தித்தாய். நம்முடைய நீர்ப்பரப்பின் மேல் பல அன்னங்கள் நீந்தி விளையாடிச் சென்றன.

நதிகள் வற்றும்போது அவை மீண்டும் நிலமாகின்றன. நீ என்னுடன் இருந்தபோது ஒரு ஓடையாக உணர்ந்தேன். நீ என்னை விட்டுச் சென்றதும் பாழ் நிலமாக வற்றிவிட்டேன். நான் வெறும் புழுதியாக – சதையும் புழுதியும் கலந்த ஒரு பெண்ணாக இருந்தேன்.

அந்த இரவுக்குப் பிறகு, அதற்குப் பின்னான ஒவ்வொரு இரவிலும் என்னுடைய கர்ப்பப்பையில் ஒரு அழுகுரலைக் கேட்கிறேன்.

நீண்ட காலத்துக்கு இந்த இடத்தை நீ மறந்து விட்டாய். ஒரு இரவில் என்னுடைய கர்ப்பப்பையில் அழுகுரலைக் கேட்டதும் நான் கீழே சென்று இருட்டறையில் கர்ப்பப்பையினையும் அழுகுரலையும் வைத்து விட்டு வந்தேன்.

ஆமாம். என்னுடைய இருபது வயதின் இளமையை வைத்த அதே இருட்டறையில் இவற்றையும் நான் வைத்துவிட்டு வந்தேன்.

சில நேரங்களில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு அந்த இருட்டறைக்குப் போவேன். அங்கே நான் முன்பு வைத்துச் சென்ற என்னுடைய இருபது வயதின் இளமையை உற்று நோக்குவேன்.

அல்லது அங்கே நான் வைத்துச் சென்ற என் கர்ப்பப்பையின் அழுகுரலை உற்றுக் கேட்பேன். என்றாவது என்னை நீ பார்க்க வரும்போது உன்னுடைய கரங்களைப் பற்றிக் கொண்டு இந்த இருட்டறைக்கு உன்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு நீ திரும்பி வந்தாய்.

ஆனால் இம்முறை தனியாக வரவில்லை. உனக்குச் செய்ய வேண்டிய காயங்களும் போகவேண்டிய இடங்களும் நிறைய இருந்தன. ஒரு நொடியில் வந்து அவசரமாக குவளையில் நீர் கேட்டுக் குடித்துப் போனாய்.

இருட்டறையைக் காண உன்னை அழைத்தேன். ஆனால் மீண்டும் வருவதாக உறுதியளித்துவிட்டுச் சென்றாய்.

உன் வாக்கினை ஒரு சிறு மலரைப் போல மிருதுவாக எடுத்து என் உள்ளங்கைகளுக்குள் புதைத்துக் கொண்டேன். பல ஆண்டுகளாக அது என்னுடைய உள்ளங்கையில் மலர்ந்து விரிந்தே இருந்தது.

ஆனால் உள்ளங்கையின் சதை என்பது வெறும் சதை மட்டுமேதான். பூமியைப் போல அது நிரந்தரத் தன்மையோடு இருப்பது இல்லையே. காலப்போக்கில் அது சுருக்கம் காணுகிறது. கட்டாந்தரையாக மாறும்போது அதன் மீது உள்ள இலைகள் அனைத்தும் உதிர்ந்து போகின்றன. ஒருநாள் இருட்டறைக்குப் போய் அந்த வாடிப்போன மலரை வைத்துவிட்டு வந்தேன்.

இரண்டாவது தளத்தின் அறையில் பல புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் ஒரு புத்தகம் மட்டும் காணாமல் போய்விட்டது.

என் இருட்டறையைப் பற்றிய கதையைச் சொல்லும் புத்தகம் அது. பழங்கதைகள் மற்றும் புராணங்களையும் நினைத்துப் பார்க்க ஆர்வம் கொண்டவர்களுக்கு கிரேக்க புராணங்களில் வரும் யுரேனஸ் என்ற ஆணையும் கையா என்ற பெண்ணையும் கண்டிப்பாகத் தெந்து இருக்கும். கையாவின் கர்ப்பத்தில் முகிழ்த்த விளைந்த குழந்தைகளை யுரேனஸ் மண்ணில் புதைத்து வருவான். கையாவுக்கு மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகளின் அழுகுரல் கேட்டுக்கொண்டே இருக்கும்.

ஆனால், கையா இன்றும் வாழ்ந்து வருகிறாள் என்பது யாருக்கும் தெரியாது. அவள் யுரேனஸ்ஸைக் காதலித்தாள். தன்னுடைய கர்ப்பத்தை ஒரு இருட்டறையில் வைத்தாள். கர்ப்பத்தில் ஒலிக்கும் குழந்தையின் அழுகுரலை அவள் கேட்டாள்.

பிறக்கும் குழந்தைகள் மட்டுமே அழவேண்டும் என்பதல்ல.

சிலவேளைகளில் பிறக்காத குழந்தைகளும் அங்கே அழக்கூடும்.

ராகவன் தம்பி
நன்றி: The Little Magazine

Wednesday, September 15, 2010

வல்லமை மின்னிதழில் என் சிறுகதை

மலைமுழுங்கி

மலைமுழுங்கி என்பது அவருக்குக் கிடைத்த பட்டப் பெயர் அல்ல. அவர் செய்து வருகின்ற காயங்களை முன்வைத்த காரணப்பெயரும் அல்ல. யாரும் அவரை அப்படிக் கூப்பிடாத போது அவரே தன்னைப் பற்றி ஜம்பம் அடித்துக் கொள்ளவும் சாதுவான ஆட்களை கொஞ்சம் மிரட்டி வைக்கும் நோக்கத்துடன் “என்னை என்னன்னு நெனச்சிக்கிட்டே? எல்லோரும் என்னை எப்படிக் கூப்பிடுவாங்க தெரியுமா? ஜாக்கிரதையா இருந்துக்கோ…”

இப்படியாக தனக்குத்தானே பட்டப் பெயர் கொடுத்துக் கொண்டு ஊரில் தோளை நிமிர்த்தி உலா வரப்போக அதுவே அவருடைய பட்டப்பெயர், காரணப்பெயர் என்ற கட்டங்களைத் தாண்டி மலைமுழுங்கி என்று காலப்போக்கில் அதுவே அவருக்கு நிஜப் பெயராகவே மாறிவிட்டது.

மாதவன் என்கிற மலைமுழுங்கியின் பெற்றோர் வைத்த பெயரை நாளடைவில் பலரும் மறந்து போகத் துவங்கினார்கள்.

ஊரில் நடக்கும் எந்த ஒரு நல்ல காரியத்துக்கும் யாருடைய அனுமதியும் இல்லாமல் தன்னுடைய பெயரை வெட்கமில்லாத வகையில் எப்படியாவது உள்ளே செருகிக் கொள்வார். யாரோ செய்யும் எல்லாக் காரியங்களிலும் ஒருவகையான பொய்மை பொங்கி வழியும் போலியான பெருமையை வலியத் தேடிக் கொள்வதில் அவரை யாரும் மிஞ்ச முடியாது.

வாயைத் திறந்தால் சாப்பிடுவதற்கும் பொய் சொல்வதற்கும் தவிர வேறு எதற்காகவும் இருக்கக்கூடாது என்று யாருடைய தலைமீதோ அடித்து சத்தியம் செய்து கொடுத்தது போல அமைந்திருக்கும் மலைமுழுங்கியின் சவடால் கலந்த சொல்விளையாட்டுக்கள்.

“நேத்து காமராஜர் சிலைக்கு மாலைபோட்டு வந்தோம். பெருந்தலைவர் பிறந்த நாள் பாருங்க…”

என்று யாராவது மலைமுழுங்கியை வைத்துக் கொண்டு சொல்லித் தப்பிக்க முடியாது.

“அந்தச் சிலையை அங்கே வச்சது யார்னு உனக்குத் தெரியுமோ? உயிரைப் பணயம் வச்சு தலைவரோட சிலையை அங்கே வச்ச என்னைத் தள்ளி வச்சிட்டு கண்டவனையும் விட்டு மாலை போட வைக்கிறாங்க. அந்த சிலையை அங்கே வைக்கிறதுக்கு அந்தக் காலத்துலேயே லட்சக்கணக்கில் செலவு செய்தவன் நான்” என்று அவருடைய சவடால் கலந்த பொய்கள் அவருடைய ஜிப்பா பாக்கெட்டுக்களில் இருந்து கசிந்து வழியும்.

இதைப் பக்கத்தில் இருந்து கேட்கும் நபருக்கும் மலைவிழுங்கி பீலாதான் விடுகிறார் என்பது நன்கு தெரிந்து இருந்தும் அதை மறுத்துப் பேசும் தைரியம் இல்லாமல் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்.

மலைமுழுங்கியின் மகாத்மியம் தெந்த யாரும் அவரை எந்த இடத்திலும் நிறுத்த முடியாது. அப்படி அவரை நிறுத்தி ஏதாவது கேள்விகள் கேட்டுவிட்டால் அடுத்த நாளில் இருந்து கேள்வி கேட்ட நபர் பற்றிய சேறுபூசப்பட்ட அவதூறுகளை வீடுவீடாகத் தேடித் தேடி வீசத் துவங்கி விடுவார்.

எதற்கு மலத்தின் மேல் கல் எறிய வேண்டும் என்ற தயக்கத்தில் அனைவரும் தாங்கிக் கொள்ளும் இவருடைய பொய்களை ஒரு கட்டத்தில் உண்மை என்று மலைமுழுங்கியே நம்பத் துவங்கி விடுவார்.

தமிழ் மன்றத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின் போது வெளியூர் பிரமுகர்கள் யாராவது வந்துவிட்டால் மலைமுழுங்கியின் உற்சாகத்துக்கு அளவே இருக்காது. உள்ளூர் பிரலாபங்கள் தெரியாத அந்தப் பிரபலங்களிடம் மலைமுழுங்கி அளந்து விடும் சரடுகள் மைல் கணக்கில் நீளும்.

“இந்த மன்றம் இப்போ நிக்கற கட்டடத்தைக் கட்டுறதுக்கு கடன் ஏற்பாடு செஞ்சு குடுத்தவனே நான்தான். நான் வேலை பார்த்த வங்கியிலே எக்காரணத்தைக் கொண்டும் இந்த மூஞ்சிகளுக்குத் தரமாட்டேன்னு சொன்னாங்க. பொண்டாட்டியோட நகைகளைக் கொண்டு போய் மேனேஜர் முகத்துலே வீசி எறிஞ்சி கடனுக்கு ஏற்பாடு செஞ்சேன். இன்னிக்கு தகுதியே இல்லாத எவனோ தலைவனா இங்கே உட்கார்ந்துகிட்டு இருக்கான்” என்று துவங்குவார் மலைமுழுங்கி.

தமிழ்மன்றத்தின் மூத்த உறுப்பினர்களே அவருடைய பொய்களை வேறுவழியின்றி வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

கடந்த நாற்பது ஆண்டுகளாக அந்தத்தமிழ் மன்றத்தில் சாதாரண செயற்குழு உறுப்பினராகக் கூட தேர்வு செய்யப்படாமல் தேர்தலில் நிற்கும்போதெல்லாம் ஒரு கை விரல்களுக்குள் அடங்கும் வாக்குகளை மட்டுமே அவர் வாங்கும் வெளிப்படையான ரகசியத்தை எந்தப் பிரபலத்திடமும் சொல்ல யாருக்கும் அங்கே தைரியம் இருக்காது.

மூத்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள் அல்லது அரசியல் தலைவர்கள் யாராவது தமிழ் மன்றத்தின் தேர்தலில் தலைவர் பதவிக்கு வேட்பு மனு செய்திருந்தால் மலைமுழுங்கியும் உடனடியாக தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார். காதி பவனுக்கு சென்று விசித்திரமான வண்ணங்களில் ஜிப்பாக்களை உடனடியாக வாங்கி மாட்டிக் கொள்வார். எதில் வருபவர்களை வம்படியாக நிறுத்தி வைத்து

“இந்தத் தமிழ் மன்றத்தில் நியாயத்தை நிலைநாட்டாமல் விட மாட்டேன். தேர்தலில் ஜெயித்து எல்லாரையும் ஓட ஓட விரட்டலைன்னா நான் மலைமுழுங்கியாடா? தலைவருக்கு நிக்கிற அந்த ஆள் நிறுத்தாம போன் பண்ணிக்கிட்டே இருந்தான். நான் மூணு நாளா எடுக்கலை. இன்னிக்கு போனா போகட்டும்னு எடுத்தா… தயவு செய்து உன்னோட மனுவை வாபஸ் வாங்கிக்கிட்டு என்னை ஒரு தடவையாவது தலைவராக விடணும்னு கெஞ்சறான். தான் வகிக்கிற பதவிக்குக் கூட மரியாதை இல்லை அவனுக்கு. இங்கே தலைவனா வந்து என்ன பண்ணப்போறான்?’’

அன்று மாலையே அந்தப் பிரமுகரை தனியாக சந்தித்து அவருடைய காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, இந்தத் தமிழ் மன்றத்துலே ஊழலை ஒழிக்கணும்னு தான் நான் வேட்பு மனு தாக்கல் செஞ்சேன். எனக்கு இங்கே தலைவர் ஆகணும்னு ஆர்வம் ஒண்ணும் கிடையாது. எனக்கு என்னோட அமைப்பு இருக்கு. நாப்பது வருசமா நடத்தி வர்றேன். தர்ம தேவனான நீங்களே நிக்கறதனாலே உங்களுக்கு ஆதரவு குடுத்து நான் வாபஸ் வாங்கிக்கிறேன்” என்று பில்டப் கொடுத்துக் கொள்வார்.

அந்தப் பிரமுகருக்கும் மலைமுழுங்கியின் மகாத்மியம் கண்டிப்பாகத் தெரிந்து இருக்கும். ஒரு கேலிகலந்த புன்சிப்புடன் நன்றி சொல்லி அவரை வழியனுப்பி வைப்பார்.

மலைமுழுங்கி வெளியில் வந்ததும் நேராக பலரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு “அந்த ஆளு என்னை பிச்சைக்காரத்தனமா கெஞ்சினான்யா. போய்த் தொலையட்டும்னு நான்தான் வாபஸ் வாங்கிட்டேன்” என்பார்.

அதே நேரத்தில் இன்னொரு அணியில் நிற்பவர்களையும் மறக்காமல் தேடிக் கொண்டுபோவார். “இதோ பாரு. நீதான் மதிப்புக் கொடுத்து என்னைத் தலைவரா நிக்கறயான்னு கேக்கலை. இப்போ உங்களுக்காகத் தான் நான் என்னுடைய மனுவை வாபஸ் வாங்கிக்கிறேன் என்று சொல்வார்.

ஒவ்வொரு முறையும் தமிழ் மன்றத்தின் ஆண்டுவிழாக் கூட்டத்தில் அவருடைய அலம்பல்களுக்கு அளவே இருக்காது, புதிதாக முதன்முறையாக அந்தக் கூட்டத்தில் அவரைப் பார்க்கிறவர்களுக்கு அவர் ஏதோ நியாயத்தை நிலைநாட்ட அவதரித்த நாடோடி மன்னன் எம்ஜியாராகவே காட்சியளிப்பார்.

இவரைக் கண்டு வாயைப் பிளக்கும் புதிய அப்பாவிகள் யாருக்கும் மலைமுழுங்கி சொந்தமாக ஒரு அமைப்பை வைத்து இருப்பதும் அந்த அமைப்புக்கு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எந்தத் தேர்தலை நடத்தாததும் அந்த அமைப்பின் கணக்கு வழக்குகளை யாரிடமும் காட்டாமல் டகால்டி வேலைகள் செய்து வருவதும் யாருக்கும் கேட்கத் தோன்றாது.

தன்னுடைய அமைப்பையும் தன்னையும் எதிர்த்து யாரும் கேள்விகள் கேட்க இயலாத வண்ணம் மிகப் பெரிய அதிகாரப் பொறுப்பில் இருக்கும் அப்பாவி அதிகாரி யாரையாவது தலைவராக்கி அவருடைய பெயரைச் சொல்லி அடுத்தவர்களை மிரட்டி வாயடைத்து வைப்பார்.

மலைமுழுங்கி பொறுப்பில் இருக்கும் அமைப்புக்கு தன்னுடைய சவடாலையும் தலைமைப் பொறுப்பில் இருந்த அப்பாவி அதிகாரிகளின் செல்வாக்கையும் வைத்து நகரின் பிரதானமான இடத்தில் கட்டிடம் கட்ட இடம் வாங்கி இருபத்து ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அப்படியே போட்டு வைத்து இருப்பதையும் அந்தக் கூட்டத்தில் யாருக்கும் கேட்கத் தெயாது. அந்த இடத்தில் சாதுயமாக தனக்கும் ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ள மலைவிழுங்கி சமயம் பார்த்துக் காத்திருப்பதையும் யாரும் கேட்க முடியாத வண்ணம் அமைந்த தன்னுடைய அதிருஷ்டத்தில் காலத்தை ஓட்டி வருகின்றவர் என்பது அந்தத் தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் தெரிந்து இருந்தாலும் அவரைத் திருப்பிக் கேள்வி கேட்க பயந்து அவர் காட்டும் எல்லா உதார்களையும் யாருக்கும் தெயாத ஒரு காரணத்துக்காக அந்தப் பொறுப்பாளர்கள் பொறுத்துக் கொண்டிருப்பது எல்லோருக்கும் புரியாத புதிராகவே பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருந்தன.

இத்தனை வீரதீரப் பிரதாபங்கள் நிறைந்த மலைமுழுங்கி ஒருநாள் சர்வநாடியும் ஒடுங்கி மிகவும் பவ்யமாக நின்று கொண்டிருந்தார். அவர் குடும்ப சமேதராகத் தங்கியிருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்குப் பின்புறமாக உள்ள ஊழியர் குடியிருப்பில் தங்கியிருக்கும் ஆட்டோ டிரைவர் தாமோதரன் ஏதோ சாமி வந்தது போல ஆடிக்கொண்டு இருந்தான். சுற்றி ஒரு சிறிய கூட்டம் நின்று கொண்டிருந்தது.

“ஓத்தா… உன்னோட யோக்கியதையை நான் எல்லோருக்கும் சொல்லணுமா? இங்கே இந்த எம்.பிக்கு என்னென்ன சப்ளை செய்யறேன்னு ஊருக்குத் தெரியாதுன்னு நெனச்சிக்காதே. பாவம் அந்த அப்பாவி சலவைப் பொட்டிக்காரனுக்கு விஷயம் தெரியாது. போட்டுக்குடுத்தேன்னா உன்னை செவத்தோட வச்சுத் தேய்ச்சுடுவான் தெரிஞ்சிக்கோ…’’

வழக்கமாக எப்போதுமே மலைவிழுங்கி பேச மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் மற்றவர்களை வைத்து இருப்பார். அன்று தாமோதரன் மட்டுமே பேசிக் கொண்டு இருந்தான். அவரை நகர விடாமல் நிறுத்தி ஏசிக் கொண்டு இருந்தான். மலைமுழுங்கி அமானுஷ்யமான புன்னகையுடன் கஷ்டப்பட்டு தன்னுடைய கைநடுக்கத்தை மறைத்துக் கொண்டு நின்றிருந்தார். அவரைச் சூழ்ந்திருந்த ஓருவர் நல்ல வேளையாக வெளியூர்க்காரர்கள். அதிகமாக உள்ளூர் ஆட்கள் சேருவதற்கு முன்பு இவனை அங்கிருந்து விரட்டவேண்டும்.

வழக்கமான அஸ்திரத்தைக் கையில் எடுத்தார்.

“இதோ பாரு தாமோதரா… நாம உக்காந்து பேசணும். அந்த மயிராண்டி உனக்கு தப்பா போட்டுக் குடுத்து இருக்கான். அவனுடைய யோக்கியதை உனக்குத் தெயாது. அவன் ஆபீஸ்லே என்ன நடந்தது தெரியுமா? எல்லார் கிட்டயும் பேங்கிலேருந்து விஆர்எஸ் வாங்கினதா கதைவிடுறான். ஆனா அவன் மேலே கரப்ஷன் சார்ஜ் போட்டு டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க தெரியுமோ. அவனும் நீயும் சண்டை போட்டுக்கக் கூடாதுன்னுதான் நான் உங்க ரெண்டு பேர் நடுவிலே இத்தனை லோல் படறேன்.’’

“மயிரு… ஏன்யா பொய் சொல்றே. அருணாச்சலம் தன்னோட ஆபீஸ் பேப்பர் எல்லாத்தையும் கையிலே வச்சிக்கிட்டு உன்னை செருப்பாலே அடிக்க தேடிக்கிட்டு இருக்கான். ஊர்லே நாலு பேரை வச்சிக்கிட்டு உன்னை செருப்பாலே அடிக்கணும்னு காத்துக்கிட்டு இருக்கான். நான் என் பேச்சை எடுத்தா அவன் பேச்சை எதுக்குய்யா எடுக்கறே? என்னைப் பத்தி எம்பி கிட்டே என்ன போட்டுக் குடுத்தே? என்னோட பொண்ணுக்கு பரீட்சை இருக்கு தெயுமா? உன் பேச்சைக் கேட்டுக்கிட்டு அந்த எம்பி நாளைக்கு என்னை வீட்டைக் காலி பண்ணச் சொல்றான். அருணாச்சலம் கதையை அப்புறம் வச்சுக்கலாம். உன் கதையை இப்போ பேசலாம். நான் இப்போ உன்னை இங்கேயே நிறுத்தி வச்சு செருப்பால அடிச்சா என்ன செய்வே”

உண்மையில் பயந்து விட்டார் மலைமுழுங்கி. இவன் முட்டாள். அதிகம் படிக்காதவன். லேசாகக் குடித்தும் இருக்கிறான். அடித்தாலும் அடித்துவிடுவான். எதற்கும் கொஞ்சம் மிரட்டிப் பார்க்கலாம் என்று முயற்சித்தார். “இதப்பார்றா… ஏண்டா இப்படி கெட்டு அலையறே? உன் பொண்டாட்டிதான் என்கிட்டே கண்ணீர் விட்டு அளுதா… மாமா… அவரை இங்கேருந்து அளைச்சுக்கிட்டுப் போயிடணும். சகவாச தோஷத்துலே தினமும் குடிச்சிட்டு வர்றார்னு. அந்த கல்காஜி மாமியோட நீ அலையறதும் அவளுக்குத் தெஞ்சிருக்கு. அந்த அருணாச்சலம்தான் அவகிட்டே போட்டுக் குடுத்திருக்கான். ஒருநா உன்னையும் அந்த மாமியையும் சேர்த்து வச்சு பப்ளிக்லே தொடப்பக் கட்டையாலே வெளுக்கறேன்னு சொன்னா. நான்தான் உன் பொண்டாட்டி கால்லே விழுந்து அவளை அடக்கி வச்சிருக்கேன். நாளைக்கு ஒண்ணு கிடக்க ஒண்ணாகி ஒம்பொண்டாட்டி தகறாறு பண்ணிட்டு வீட்டை விட்டு வெளியே கௌம்பினா ஒம் பொண்ணோட படிப்பு என்னடா ஆகறது? ஏண்டா இப்படி நிர்மூடனா இருக்கே கொரங்குக் கம்மனாட்டி..” என்று உருக்கத்துடன் கரையத் தொடங்கினார்.

அஸ்திரம் லேசாக வேலை செய்கிற மாதி இருந்தது. கொஞ்சம் சுருதி இறங்கினான் தாமோதரன். “இதோ பாரு சாமி… இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்லே. என் பொண்ணுக்கு பரீட்சை முடியட்டும்யா. நானே காலி பண்ணிட்டு போயிடறேன். ”

மலைமுளுங்கி மீண்டும் உல்டா கியர் போடத் துவங்கினார்.

“தாமோதரா… நீ அந்த அருணாச்சலம் கம்மனாட்டி பேச்சைக் கேட்டு ஆடினேன்னு எனக்குத் தெரியும். அவனுக்கு பேங்குலே வேலை வாங்கிக் குடுத்ததே நான்தான். அந்த நாய் என்னை இங்கிருந்து கிளப்பப் பாக்குது. நீ அவனை என்னோட காதுகுளிர என்னைத் திட்டின மாதி அவனைத் திட்டணும். அப்போதான் நான் எம்பி சார் கிட்டே பேசி அட்ஜஸ்ட் செய்ய முடியும். அந்தக் கல்காஜி மாமி விவகாரத்துலே இருந்து உன்னைக் காப்பாத்தற பொறுப்பு எனக்கு இருக்குடா மசுராண்டி”

அப்போது மலைமுழுங்கி கீழே இறங்கின மாதி தெரிந்தாலும் அவருடைய கடமையை அவர் சரியாகத்தான் செய்து முடித்திருந்தார். எத்தனை மன்றாடிப் பார்த்தும் தாமோதரனுக்கு இரண்டாம் நாளே அந்த எம்.பியின் ஊழியர் குடியிருப்பில் இருந்து வீட்டைக் காலி செய்து எங்கோ காஜியாபாத் தள்ளி இருக்கும் அவனுடைய சொந்த வீட்டுக்குக் குடிபெயர வேண்டிப்போனது.

அவனுடைய மனைவியும் கோபித்துக் கொண்டு பரீட்சையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மகளையும் இழுத்துக் கொண்டு சொந்த ஊருக்குப் போய்விட்டாள்.

தாடியை வளர்த்துக் கொண்டு இன்னும் அதிகமாகக் குடித்து அலைந்து கொண்டிருந்தான் தாமோதரன்.

அருணாச்சலம் அவனுக்குப் பயந்து தலைமறைவாக மறைந்து திரிந்து கொண்டிருந்தான். ஆனால் தாமோதரன் அருணாசலத்தை விட்டு மûலைமுழுங்கியை முன்னுக்கு இன்னும் அதிகமாகத் திட்டிக் கொண்டு திரிந்தான்.

மலைமுழுங்கியின் பல ரகசியங்கள் தாமோதரன் வழியாக வெஸ்ட் அவென்யூ சந்துபொந்துகளில் எல்லாம் கசியத் துவங்கின. மலைமுழுங்கி தொடர்பான ரகசியங்களின் இலவச இணைப்பாக அவரை தன்னுடைய வீட்டில் தங்க வைத்திருந்த எம்.பியின் வில்லங்கமான ரகசியங்களும் வெளிவரத்துவங்கின.

வாரப்பத்திகை மற்றும் தினசரிகளின் கழுகுகளுக்கும் ஆந்தைகளுக்கும் முந்திரிப் பருப்பைக் கொறித்துக் கொண்டே அந்த எம்பி தொடர்பான அனைத்து ரகசியங்களைப் பரிமாறிக் கொண்டன. செய்தி ஊடகங்களின் ஷர்மாக்களும் தேசாய்களும் கன்னாட் பிளேஸ் போய் புதிய கோட்டு சூட்டை வாங்கிக் கொண்டு அந்த எம்பியின் வில்லங்கங்களை அக்கு வேறு ஆணிவேறாக டிவியில் அலசிப் பிழிந்து காயப்போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு வாரத்துக்குத் தொடர்ச்சியாக அவர்களுக்கு விஷயம் கிடைத்தது.

ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த அந்தக் குட்டிக் கட்சியை சேர்ந்த எம்பிக்கு தலைமை பலத்த எச்சரிக்கைகளை அனுப்பின.

தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருந்த எமதர்மராஜனின் நிலைக்குத் தள்ளப்பட்டார் எம்.பி. மலைமுழுங்கி இதில் எல்லாம் பாதிக்கப்படாதவராக முன்னைக்கு அதிகமாக கலர் கலரான கதர் ஜிப்பாக்களை அணிந்து கொண்டு டெல்லியின் மூலைமுடுக்கெல்லாம் இன்னும் அதிக வீயமுள்ள பீலாக்களுடன் ராஜநடை போட்டுக் கொண்டிருந்தார்.

“அந்த தாமோதரன் பெரிய கிரிமினல் சார். அவனுக்கு எத்தனையோ சொல்லிப் பாத்தேன். கேக்கற மாதி இல்லை. என் கிட்டேயே மோதினான். நான் யாரு? மலைமுழுங்கி. இப்போ பாருங்க தெருத்தெருவா அலையறான். பாவம். அவனுக்கு நான்தான் ஏதாவது செய்யணும்” என்று வெஸ்ட் அவென்யூ முழுக்க சொல்லிக் கொண்டு திந்தார்.

அவரை எதிர்த்துப் பேசவோ, கேள்விகள் கேட்கவோ திராணியற்று சத்தமின்றி சபித்துக் கொண்டு கொண்டு அலைந்தார்கள் வெஸ்ட் அவென்யூவின் ஜீவராசிகள்.

வெஸ்ட் அவென்யூவில் தங்கியிருந்தபோது பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட பத்திகையாளர்களுக்கு எல்லாம் கூப்பிட்டுக் கூப்பிட்டு அல்வாத் துண்டுகள் போலக் கிசுகிசுக்களை விநியோகித்து வந்தான் தாமோதரன். பத்திரிகை ஆட்கள் மலைமுழுங்கியை விட்டு அவரை சுற்றியிருந்த செய்திகளில் அவருக்கு இடம் தந்த எம்பியை தொடர்பு படுத்தி கிசுகிசுத் தீயை தங்கள் பத்திகைகளில் கொழுந்து விட்டு எரிய வைத்தார்கள்.

ஊடகங்கள் மற்றும் செய்தி இதழ்களின் கிசுகிசுப்பின் ஓலம் தாங்காது அந்தக் குட்டிக் கட்சி தங்கள் எம்பியை பலியாடு ஆக்கி மந்திசபையில் தொங்கிக் கொண்டு இருந்த இரண்டு இணை அமைச்சர் பதவிகளை தக்க வைத்துக் கொண்டார்கள். அந்த எம்.பியும் சத்தம் காட்டாது உத்தரபிரதேசத்தின் சிறிய கிராமத்தில் மீண்டும் தன்னுடைய செல்லமான எருமைகளை இன்னும் போஷாக்குடன் வளர்க்கக் கிளம்பினார்.

“அந்த எம்.பிக்கு நான் எத்தனையோ புத்தி சொன்னேம்பா. கேட்ட மாட்டேன்னுட்டுது சனியன். இப்போ அனுபவிக்குது. அந்த தாமோதரன் நாய் பேச்சைக் கேட்டு என்னை அங்கிருந்து காலி பண்ணப் பார்த்தது. நான் விடுவேனா? சமயம் பாத்து பிரைம் மினிஸ்டர் கிட்டே இதோட வண்டவாளங்களை இழுத்து விட்டேன். நான் யாரு? மலைமுழுங்கி…”

அதே வெஸ்ட் அவென்யூவின் வேறொரு எம்பியின் வீட்டை நடுநாயகமாக ஆக்கிரமித்துக் கொண்டு தன்னைக் காண வந்த அப்பாவிகளிடம் வழக்கமான சரடுவிட்டுக் கொண்டிருந்தார் மலைமுழுங்கி. அவருடைய பத்தாயிரம் சரவெடிக்கு ஈடான பீலாக்களை நடுமுதுகுத் தண்டு சிலிர்க்க கேட்டுக் கொண்டிருந்தார்கள் அந்த அப்பாவிகள்.

அந்த இன்னொரு எம்பியின் ஊழியர் குடியிருப்பில் இன்னொரு தாமோதரன் தன்னுடைய குடும்பத்தின் வருங்கால நிலையை அறியாது மலைமுழுங்கியை மரியாதை நிமித்தம் சந்திக்க ஆயத்தமாகிக் கொண்டு இருந்தான்.

•••••••••••••••••••••

நன்றி - அண்ணா கண்ணன்

Tuesday, September 14, 2010

விருதும் வேடிக்கைகளும்

08 செப்டம்பர் 2010
அன்புள்ள திரு.எஸ்.வி.சேகர் அவர்களுக்கு

வணக்கம்.

நேற்றைய தினகரன் (டெல்லி பதிப்பு) மற்றும் இன்றைய The Hindu (டெல்லி பதிப்பு) ஆகிய நாளிதழ்களில் தமிழகத்துக்கு வெளியே தலைசிறந்த முறையில் பணியாற்றும் அமைப்பாக டெல்லியின் முத்தமிழ் பேரவையை, சென்னையின் மயிலாப்பூர் அகாடமி தேர்ந்தெடுத்து விருது வழங்கியதாக ஒரு புகைப்படத்தையும் செய்திக் குறிப்பையும் காண நேர்ந்தது.

அந்தப் புகைப்படத்தில் தங்களையும் உடன் கண்டதனாலும் மயிலாப்பூர் அகாடமியில் தாங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக இங்குள்ள என்னுடைய நண்பர்கள் சொன்னதாலும் உங்களுக்கு இந்த அஞ்சல்.

விருது கொடுப்பது மற்றும் அதனைப் பெற்றுக் கொள்வது (அல்லது ஏற்பாடு செய்து பெற்றுக் கொள்வது) போன்றவை தனிப்பட்ட நபர்களின் விருப்பம், சாமர்த்தியம் அல்லது தந்திரத்தின் அடிப்படையில் அமைந்த விஷயம். இதை எதிர்த்து யாரும் கேள்விகள் எழுப்ப முடியாது என்பது எனக்கும் தெரியும்.

இந்த விஷயத்தில் கேள்வி கேட்பவர்களின் நோக்கத்தை உடனடியாக சந்தேகப்படும் ஆபத்து இருக்கிறது. இருந்தாலும் உண்மை உடன் இருக்கும் தைரியத்தில் இந்தக் கேள்விகளை சற்றுத் தயங்காமல் முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது.

இப்படி ஒரு விருதினை - அதாவது, தமிழகத்தை விட்டு வெளியில் உள்ள அமைப்புக்களில்
சிறந்த ஒன்றாக ஒரு அமைப்பைத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக செய்தித்தாளில் படிக்கும்போது இந்தக் கேள்விகளை கேட்காமல் இருக்க முடியவில்லை -
இந்த விருதினை அறிவிப்பதற்கு முன்பு மயிலாப்பூர் அகாடமி தமிழகத்தை விட்டு வெளியில் உள்ள மற்ற அமைப்புக்கள் குறித்த ஆய்வு எதையாவது மேற்கொண்டார்களா?

மற்ற அமைப்புக்கள் குறித்த அடிப்படைத் தகவல்கள், அதாவது அவற்றின் செயல்பாடுகள், எத்ததனை ஆண்டுகளாக அவை செயலாற்றி வருகின்றன, அந்த அமைப்புக்களில் உள்ள பொறுப்பாளர்கள் தனிப்பட்ட வகையிலும் அந்த அமைப்பு சார்ந்தும் ஆற்றி வரும் பணிகள் குறித்த களப்பணி சார்ந்த தகவல்கள் எவையேனும் பெறப்பட்டனவா?

உதாரணத்துக்கு மும்பையில் பல தமிழ் அமைப்புக்கள் மிகவும் அற்புதமான பணிகளை ஆற்றி வருகின்றன. பெங்களூரில், மைசூரில், கொல்கத்தாவில் என ஒவ்வொரு நகரில் பல அமைப்புக்கள் (உண்மையான) செயலாற்றலுடன் திகழ்ந்து வருகின்றன.

டெல்லியில் தில்லித் தமிழ்ச் சங்கம் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அரும்பணி ஆற்றி வருகிறது. சென்ற மாதம் தில்லித் தமிழ்ச் சங்கம் டெல்லியின் தமிழ்ப் பள்ளிகளுக்காக இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நிதி திரட்டிக் கொடுத்து அற்புதமான பணியை செய்திருக்கிறது.

அதே போல துவாரகாலயா என்னும் அமைப்பு சில ஆண்டுகளாக மிக அற்புதமான மனிதநேயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இங்குள்ள ஏழை மாணவர்களுக்கு எவ்வித விளம்பரமும் இன்றி ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவி வழங்கி வருகிறார்கள்.

இந்த அமைப்புக்கள் எல்லாவற்றையும் அவர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டார்களா என்பது தெரியவில்லை. இந்த விருதே தனிப்பட்ட ஒரு மனிதரின் விளம்பரத்தை நோக்கிய செயல்பாடாகத் தோன்றும்போது மற்ற கேள்விகளைக் கேட்பதும் பயனில்லை என்றுதான் நினைக்கிறேன்.

சென்ற ஆண்டில் ஒரு சிலரின் அரசியல் வசதிகளை மட்டுமே மனதில் கொண்டு துவங்கப்பட்ட ஒரு லெட்டர் பேட் அமைப்பு சென்னையில் உள்ள மயிலாப்பூர் அகாடமிக்கு மட்டும் சிறந்த அமைப்பாகத் தோன்றி இருப்பது மிகவும் விந்தையாக இருக்கிறது.
விருதுகள் தனிப்பட்ட மனிதர்களுக்கா அல்லது அமைப்புக்கா என்ற கேள்வியும் இங்கே மேலோங்கி இருக்கிறது.

அதையும் துரத்தித் துரத்தி நாளேடுகளில் வெளியிட்டுக் கொள்ளும் முறையும் இவர்கள் எந்த இலக்கை நோக்கித் தங்கள் காய்களை நகர்த்தி வருகிறார்கள் என்பதையும் வெட்ட வெளிச்சமாக்குகிறது.

விருது பெற்றவர்களின் புகைப்படங்களை நாளிதழ்களில் பார்க்க நேரிட்ட போது யோவ் நானும் ரௌடிதான்யா என்று போலீஸ் வண்டியில் வலுக்கட்டாயமாக ஏறி உட்காரும் வடிவேலு ஞாபகத்துக்கு வருவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.


அன்புடன்

கி.பென்னேஸ்வரன்

----------------------------------------------------------------------------------
08 செப்டம்பர் 2010
திரு பென்னேஸ்வரன் அவர்களுக்கு

தங்களின் மெயில் கிடைத்தது.உங்களின் நியாயமான வருத்தங்களை மயிலாப்பூர் அகாடமி நிர்வாகிகளுக்கு FORWARD செய்கிறேன்.சில சமயம் தவறான தகவல்கள் தவறான நபர்கள் மூலம் சென்று விடுவதால் சில தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளது.
எந்தவித லாப நோக்கின்றி சுமார் 60 ஆண்டுகளாக சமூக சேவையாற்றிவரும் ஒரு அமைப்பு மயிலாப்பூர் அகாடமி என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்றும் அன்புடன்

எஸ்.வி.சேகர்