Thursday, November 13, 2008

குரு நானக் தேவ் ஜி - 15ம் நூற்றாண்டின் புரட்சி சிந்தனையாளர்இன்று (13 நவம்பர் 2008) குருநானக் தேவ் ஜி ஜெயந்தி சீக்கிய இனத்தவரால் உலகெங்கும் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை சீக்கியர்கள் தீபாவளியாகக் கொண்டாடுகிறர்கள். தலைநகரின் பல பகுதிகளில் ஜன நெரிசல் மிகுந்த ஊர்வலங்கள் ஊரின் பல பகுதிகளை ஸ்தம்பிக்க வைத்துவிடும். சீக்கியர்கள் நகரெங்கும் பழங்கள், ரொட்டி, சப்பாத்தி, மற்றும் பலவகை உணவு வகைகளை அங்கங்கே ஏழைகளுக்கும் மற்றவர்களுக்கும்விநியோகிப்பார்கள். அங்கங்கே நெரிசலாக மக்கள் நின்று இவற்றை வாங்கித் தின்று நின்ற இடத்திலேயே பழத்தோல்கள், இலைகள், தொன்னைகள் போன்றவற்றை அங்கங்கேயே வீசி எறிந்து குறைந்தது நான்கு நாட்களுக்கு தில்லி நகர வீதிகளை நாறடிப்பார்கள். எல்லோருக்கும் இலவசமாக உணவு வழங்கும் தர்மப் பிரபுக்கள் தங்கள் தயாள சிந்தினையை இன்னும் சற்று விரிவுபடுத்தி, அந்தந்த இடங்களை சுத்தம் செய்வதற்கு மிகச்சிறிய தொகையை செலவு செய்தாலே நகரம் சுத்தமாகிவிடும். சரி. அது வேறு விஷயம். குருநானக் தேவ் ஜியை சற்றுப் பார்ப்போம்.


15ம் நூற்றாண்டிலேயே இந்து முஸ்லிம் சகோதரத்துவத்தை வலியுறுத்திய மகான் குரு நானக் தேவ் ஜி. கி.பி.1469ம் ஆண்டில் லாகூர் அருகே உள்ள ஷேக்புரா கிராமத்தில் பிறந்த குரு நானக் தேவ் ஜியின் தந்தையார் கிராம வருவாய்த்துறையில் ஒரு சிறிய பதவி வகித்தவர். பஞ்சாபிய மொழியான குர்முகியைத் தவிர பாரசீகம் மற்றும் அராபிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் குருநானக் தேவ் ஜி.


சுல்தான்பூர் அரசனான தௌலத் கான் லோதி என்னும் குறுநில மன்னனின் அரண்மனையில் பண்டகசாலை மேலாளராக சிறிது காலம் பணிபுரிந்த குரு தேவ் ஜி, அங்கு மர்தானா என்று அழைக்கப்பட்ட இசுலாமியத் துறவியின் தொடர்பு ஏற்பட்டு ஆன்மீக சிந்தனைகளில் ஈடுபடலானார்.


1496ம் ஆண்டினை குரு நானக் தேவ் ஜி ஞானம் பெற்ற ஆண்டாகக் குறிப்பிடுவார்கள். அவருடைய முதல் பிரகடனமே - ஹிந்து என்பவனோ அல்லது முஸல்மான் என்பவனோ யாரும் கிடையாது என்பதே. அனைவரும் ஆண்டவனின் பிள்ளைகள் என்பதே அவருடைய உபதேச மந்திரமாக அமைந்தது. தன்னுடைய ஞானகுரு மர்தானாவுடன் பல புனிதத் தலங்களுக்குப் பயணப்படத் துவங்கினார் குருதேவ் ஜி. சனாதனம் கற்பித்த தீண்டாமையை எதிர்த்து மிகப்பெரிய கலகத்தைத் துவங்கியவர் குருநானக் தேவ் ஜி. பதினைந்தாம் நூற்றாண்டில் பஞ்சாபில் அவருடைய சிந்தனைகளும் செயல்பாடுகளும் அன்றைய காலகட்டத்தில் மிகப் பெரும் புரட்சியாகும். மதங்கள் வலியுறுத்திய மூட நம்பிக்கைகளை முழுமூச்சுடன் எதிர்த்து செயல்பட்டவர் குருதேவ் ஜி. பதினைந்தாம் நூற்றாண்டில் சமத்துவத்தை வலியுறுத்தியவர் குருநானக் தேவ் ஜி.


தன்னுடைய பயணங்களின் போது அவருக்கு தானமாகக் கிடைத்த பரிசுப் பொருட்கள் மற்றும் உணவு தானியங்களை சேகரித்து ஏழை எளியவர்களுக்கான ஒரு பொது சமையல் கூடத்தை உருவாக்கி எவ்வித வேறுபாடுகளும் இல்லாது அனைவரும் இணைந்து ஓரிடத்தில் உணவு உண்ணும் அற்புதமான முறையை முதன்முதலில் உருவாக்கியவர் குருநானக் தேவ் ஜி. அவருக்கு 12 வயதாக இருந்தபோது குரு தேவ் ஜியின் தகப்பனார் அவரிடம் ஒரு சிறு தொகையை அளித்து ஏதேனும் வியாபாரம் செய்து காண்பிக்கச் சொன்னாராம். அந்தத் தொகைக்கு உணவுப்பண்டங்களை விலைக்கு வாங்கி அந்த ஊரின் ஏழை எளியவர்களுக்கு வழங்கி விட்டு அதுவே சிறந்த வணிகம் என்று தந்தையிடம் கூறினாராம் குரு தேவ் ஜி. அவர் முதலில் அப்படி உணவு வழங்கிய ஸ்தலத்தை öஸச்சா ùஸளதாö (உண்மை வணிகம்) என்று அழைக்கப்படுகிறது. அவர் உருவாக்கிய இந்தப் பகிர்ந்துண்ணும் முறையே இன்று உலகில் உள்ள அனைத்து சீக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் லங்கர் என்கிற பெயரில் அற்புதத் தொண்டாகத் தொடர்ந்து வருகிறது.


சீக்கிய மதத்தின் ஸ்தாபகர் என்று வணங்கப்படுபவர் குருநானக் தேவ் ஜி. உலகத்திலேயே மிகச் சமீபத்தில் தோன்றிய மிகவும் இளைய மதம் சீக்கிய மதம். பல நல்ல விஷயங்களை மனித நேயம் தோய்ந்த விஷயங்களை உள்ளடக்கியது சீக்கிய மதக் கொள்கைகள். அனைத்து மாந்தர்களிடையிலும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் மதம். இன்று பல கிளைகளாக பல நம்பிக்கைகள் கொண்ட பல்வேறு ஸ்தாபனங்களாக மடங்களாகப் பல்கிப்போனது சீக்கிய மதம். எண்பதுகளின் துவக்கத்தில் பஞ்சாப் மாநிலமே பற்றியெறிந்து கொண்டிருந்தது. அதன் உச்சபட்சமாக இந்திரா காந்தி படுகொலை நிகழ்ந்தது. அந்தப் படுகொலையை அடுத்து சீக்கிய இனத்தவர்கள் வடநாட்டில் மிகவும் கொடுமையாக ஒடுக்கப்பட்டுத் தாக்கப்பட்டனர். பல வீடுகளும் வியாபார ஸ்தலங்களும் தரைமட்டமாக்கப்பட்டபோதும் மிகக் குறைந்த நாட்களிலேயே அவை மீண்டும் தன்னம்பிக்கையுடன் எழுந்து நின்று மனிதனின் நம்பிக்கை உணர்வுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தன. பயங்கரவாதம் பஞ்சாப் மாநிலத்தின் பல இடங்களில் பலர் மனங்களில் தீராத வடுவை ஏற்படுத்தி இம்சித்தது. இவை எல்லாவற்றையும் எதிர்த்து மீறி, சீக்கிய சகோதரர்களும் சகோதரிகளும் நம்முடைய நாட்டின் வளமைக்கு வலு சேர்த்து வருகிறார்கள்.


சீக்கியர்களை நகைப்புக்கு இடமானவர்களாக சித்தரித்து பல சர்தார்ஜி ஜோக்குகள் பிரசித்தமானவை. இதில் அற்புதமான விஷயம் என்னவென்றால் இவற்றில் பல சர்தார்ஜி ஜோக்குகளை உருவாக்கியவர்கள் பல சர்தார்ஜிக்களே. ஒரு குஷ்வந்த் சிங்கை விடத் தன்னைத் தானே கேலியும் கிண்டலும் செய்து யாராலும் எழுத முடியாது. சீக்கியர்களில் உலக அளவில் பேசப்படக்கூடிய அறிவு ஜீவிகளும் சிந்தனையாளர்களும் உண்டு.இப்போதைக்கு உடனடி உதாரணமாக நம்முடைய மன்மோகன் சிங் மற்றும் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோரை பெருமையுடன் சொல்லலாம். ஏதோ சீக்கியர்களிலேயே முட்டாள்தனங்கள் உண்டு என்பது போல பல சமயங்களில் வட இந்தியாவில் பேச்சு புழங்குவது மாபெரும் அநியாயம் என்றே தோன்றுகிறது. முட்டாள்தனம் என்பது நம்முடைய தேசிய குணம். இந்திய நாட்டின் பெரும்பான்மை குணம் அது.


உடனடி உதாரணமாக ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.
ஒரு தமிழ் அமைப்புக்குப் பலர் பலமுறை பலவிதமான கடிதங்கள் அனுப்பியும் எவ்வித பதில்களும் அனுப்பாது இறுமாப்புடன் மௌனம் சாதித்துக் கொண்டிருந்தார்கள். அந்த அமைப்பில் முக்கியமான பொறுப்பில் இருந்த ஒருவரிடம் இதுகுறித்து விவாதம் செய்தபோது, அந்த அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் யாருக்கும் அதாவது எந்தக் கடிதத்துக்கும் பதில் அனுப்பக்கூடாது என்று தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் விவாதித்தார். அவர் சொன்னது பொதுவாக உண்மையாக இருக்க அத்தனை வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். எந்தக் கடிதத்துக்கும் பதில் அனுப்பக் கூடாது என்று தீர்மானிக்கும் அளவுக்கு ஜனநாயகப் பண்பு இல்லாத ஒரு செயற்குழுவோ அல்லது இத்தனை முட்டாள்தனமாக விவாதித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் அளவுக்கு அங்கே சிந்திக்காதவர்களோ இன்னும் இருக்கிறார்களா என்பதும் கேள்விக்குறி.அடிக்கடி அடுத்தவர்களிடம் சர்தார்ஜி ஜோக் உதிர்க்கும் ஒரு நண்பரிடம் இந்தத் தமிழ் அமைப்பின் தீர்மானம் குறித்து அந்த அமைப்பின் பொறுப்பாளர் கூறியதை நான் சொன்னபோது அந்த சர்தார்ஜி ஜோக் அடிக்கும் நண்பர் சொன்ன விஷயம் -


ööஎன்னய்யா இது? உலகத்தில் இருக்கிற அத்தனை சர்தார்களும் எல்லோரும் ஒண்ணா சேர்ந்து ஒரு தமிழ் அமைப்பை ஏற்படுத்தி நிர்வாகம் பண்ணாக்கூட அவங்களோட செயற்குழு இந்த மாதிரி ஒரு புத்திசாலித்தனமான தீர்மானம் எடுக்காதேய்யா?öö


இதனால் கிடைக்கும் பாடம் -


மூடத்தனங்கள் அல்லது முட்டாள்தனமான காரியங்கள் ஒரு இனத்துக்கு மட்டுமே சொந்தமானது அல்ல.

Monday, November 10, 2008

அமரர் கே.வி.வெங்கடாசலம் அவர்கள் நினைவில்...

அமரர் கே.வி.வெங்கடாசலம் அவர்கள் தில்லிக் கல்விக் கழகம் மற்றும்தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு அரும்பணிகள் ஆற்றியவர். தில்லித் தமிழ்க் கல்விக்கழகத்தின் ஒவ்வொரு பள்ளியின் சுவர்களும் அவருடைய தன்னலம் கருதாத தொண்டினைத் தனக்குள் காவியங்களாய் சுமந்து நிற்கின்றன. ஜøன் மாதம் அவருடைய நூற்றாண்டு துவங்கியது.

தலைநகரில் தமிழ் அமைப்புக்களுக்குத் தன்னலமற்ற வகையில் பணியாற்றித் தடங்கள் பதித்த அமரர் கே.வி.வெங்கடாசலம் அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில் வடக்கு வாசல் நவம்பர் மாத இதழில் சில கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம்.


தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் தில்லித் தமிழ்க் கல்விக்கழகம் போன்ற அமைப்புக்களுக்கு இவர் ஆற்றிய அருந்தொண்டு தலைநகர் தமிழர்கள் என்றும் மனதில் நன்றியுடன் வைத்துப் போற்ற வேண்டும். தான் ஏற்றுக்கொண்ட பணிகளை தனக்கு வழங்கப்பட்ட அதிகாரமாக எடுத்துக் கொள்ளாது தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பாக நினைத்துச் செயல்பட்ட கடமைவீரர் திரு.வெங்கடாசலம் அவர்கள். தன்னை எங்கும் எதிலும் முன்னிறுத்தாது தான் சார்ந்த அமைப்பின் காரியத்தை மட்டுமே முன்னிறுத்திச் செயல்பட்ட மாமனிதர். தான் பொறுப்பேற்று செயல்பட்ட அமைப்பினைத் தனக்கான சுயவிளம்பரப் பலகையாகவும் வணிக நோக்குள்ள செயல்பாடுகளுக்காகவும் பயன்படுத்தாது தன் செல்வாக்கை அமைப்பின் மேம்பாட்டுக்காகவும் வளர்ச்சிககாகவும் பயன்படுத்திய பெருமனது அவருடையது. எவ்வித முனைப்பும் எடுக்காது அடுத்தவர்களின் உழைப்பில் நிகழ்ந்த காரியங்களில் எவ்விதக் கூச்சமும் இல்லாது தங்களின் பெயர்களை அவசரமாகக் கல்வெட்டில் பொறித்துக் கொள்ளும் அற்பத்தனங்கள் இல்லாமல் வாழ்ந்த தலைமுறை அவருடையது. ஜனநாயக மாண்புகளை மறுத்து சட்டத்துக்குப் புறம்பான வகையில் தங்களைப் பதவியில் நீட்டித்துக் கொள்ள விழையும் சிறுமைகள் அற்ற பெருமனம் கொண்டு வாழ்ந்த தலைமுறை அவருடையது. அவரைப் போலவே அவருடைய குடும்பத்தினரும் எவ்வித விளம்பரங்களையும் மறுக்கும் பெருமனம் கொண்டவர்களாகத் திகழ்கிறார்கள். அமரர் வெங்கடாசலம் அவர்களுடைய புதல்வரையும் புதல்வியையும் நேரில் சந்தித்து அவர் குறித்த வாழ்க்கைக் குறிப்பினையும் நிழற்படங்களையும் கேட்டபோது, தங்கள் தந்தையார் தலைநகர் அமைப்புக்களுக்கு ஆற்றிய பணியே அவர் தொடர்பான அனைத்துக் குறிப்புக்களையும் தந்து விடும் என்றும் தங்களைக் குறித்து எந்தக் குறிப்பும் விளம்பரமும் வேண்டாம் என்றும் முகமலர்ச்சியுடன் வேண்டுகோள் விடுத்தார்கள். தகுதிகள் ஏதுமின்றி விளம்பரங்கள் தேடும் இந்தக் காலத்தில் தங்களின் மேலான தகுதிகளை மறைத்து வைத்து தங்களின் தந்தையார் ஆற்றிய தொண்டினை மட்டுமே முன்னிறுத்த விழையும் இவர்களின் பெருமனத்துக்கு எங்கள் தலைதாழ்ந்த வணக்கம்.


அமரர் கே.வி.வெங்கடாசலம் அவர்களுடன் தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தில் இணைந்து பணியாற்றிய பெருந் தகையாளர்கள் புலவர் ஆர்.விசுவநாதன், எஸ்.இராமாமிருதம், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பி.ஆர்.வெங்கடகிரி, தில்லித் தமிழ்க் கல்விக்கழகப் பள்ளியின் மேனாள் முதல்வர் எஸ்.நடராஜன், தில்லி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலர் ஏ.ஆர்.ராஜாமணி ஆகியோர் தங்கள் நினைவுகளை வடக்கு வாசல் நவம்பர் மாத இதழில் பதிவு செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றி.

தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் தில்லிக் கல்விக் கழகத்துக்கும் இந்த இதழ் தயாரிப்புக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இது முழுக்க முழுக்க வடக்கு வாசல் இதழின் முயற்சியாகும்.


கடந்த மூன்று மாதங்களாக வடக்கு வாசல் இதழ் வழியாக தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்தோம். நேரிலும் தொலைபேசியிலும் பலரைத் தொடர்பு கொண்டு அமரர் வெங்கடாசலம் குறித்த தகவல்களையும் நிழற் படங்களையும் அளித்து உதவுமாறு கேட்டுக் கொண்டோம். இது விஷயமாக யாரும் எவ்வித அக்கறையும் காட்டவில்லை என்பதை இங்கே மிகவும் மனவருத்தத்துடன் பதிவு செய்கிறோம். கிடைத்த ஒரு சில விஷயங்களுடன் வரும் இந்த இதழை முழுமையான நினைவு மலராக அறிவிக்க எங்களுக்கு மனம் வரவில்லை. தலைநகரில் தமிழ் பண்பாட்டுக்கும் கல்விக்கும் அருந்தொண்டாற்றிய ஒரு மாமனிதரைப் பற்றிய சில நினைவுகளைப் பதிவு செய்ய எங்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பினை பெரும்பேறாகக் கருதுகிறோம்.


தலைநகர் தமிழர்களின் நன்றியுணர்வும் வரலாற்று உணர்வும் என்றாவது ஒருநாள் மேம்படும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இன்னும் இருக்கிறது.

Thursday, October 16, 2008

புக்கர் விருது பெற்ற வெள்ளைப்புலி


ஸல்மான் ரஷ்டி (1981), அருந்ததி ராய் (1997) கிரண் தேசாய் (2006) ஆகிய இந்தியப் படைப்பாளிகளுக்குப் பிறகு இந்த ஆண்டு புக்கர் பரிசுக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார் மும்பையில் வசிக்கும் அரவிந்த் அடிகா. அவருடைய வெள்ளைப்புலி (வைட் டைகர்) என்னும் புதினம் இந்த ஆண்டின் புக்கர் பரிசுக்குத் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளது.

தில்லிவசிக்கும் ஒரு ஹல்வாய் (இனிப்புக் கடைக்காரன் அல்லது இனிப்புப் பலகாரம் செய்யும் சமையல்கார்) வாழ்வில் நடக்கும் சம்பவங்களைப் பற்றி விவரித்துச் செல்லும் நாவல் இது என்று பத்திரிகைகளில் போட்டிருக்கிறார்கள். மும்பையில் வசித்தாலும் இந்த நாவலை தில்லிவாசிகளுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் அடிகா.

இவருடைய பெயருடன் போட்டிக்கு இருந்து பின்தங்கிய ஜாம்பவான்கள் - அமிதவ் கோஷ் (இந்தியா), ஸ்டீவ் டோல்ட்ஸ் (ஆஸ்திரேலியா), செபாஸ்டியன் பாரி (அயர்லாந்து), லிண்டா கிராண்ட் (பிரிட்டன்), பிலிப் ஹென்ஷர் (பிரித்தான்).

அடிகாவுக்கு வாழ்த்துக்கள் அனுப்பாத வட இந்தியத் தலைவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். அடிகாவுக்குக் கிடைத்த இலக்கிய அங்கீகாரத்தைத் தான் கொண்டாடுவதாக பிரதமர் அவருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.சென்னையில் பிறந்து மங்களூரில் வளர்ந்து சிட்னிக்குப் புலம் பெயர்ந்த அடிகா ஆங்கில இலக்கியம் படித்தது நியூயார்க்கில் உள்ள கொலம்பியா மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில். டைம், ஃபைனான்சியல் டைம்ஸ், இன்டிபெண்டெண்ட் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற பத்திரிகைகளில் பல கட்டுரைகள் எழுதியவர் அரவிந்த் அடிகா.


புக்கர் பரிசுக்கான தொகை ரூ.42 லட்சம். இது தவிர இப்போது இந்த வெள்ளைப் புலியை மூலை முடுக்கெல்லாம் துரத்தித் துரத்தி வாங்கிப் படிப்பார்கள். பல மொழிகளில் மொழிபெயர்ப்பு வரும். அநேகமாக உலகில் பேசி, எழுதப் படும் எல்லா மொழிகளிலும் அரவிந்த் அடிகாவைப் பற்றிக் கட்டுரைகள் வெளிவரும். கண்களை இடுக்கிக் கொண்டு அவர் சிரிக்கும் புகைப்படங்கள் எல்லா நாளிதழ்களிலும், வார, மாத இதழ்களிலும் வரும்.

தமிழில் மட்டும் யாராவது ஒரு தமிழ் பேசத் தெரியாத சேட்டுப் பெண் எப்போதாவது அடிகா ஊருக்கு வரும்போது அவரை ஊடகங்களில் பேட்டி காண வாய்ப்பு இருக்கிறது. பிரபல தமிழ்ப் பத்திரிகைகளில் யாராவது ஒரு தமிழ் பேசத் தெரியாத சேட்டுப்பெண் நடிகை இவரைப் புளகாங்கிதத்துடன் பேட்டி கண்டு உலக இலக்கியம் வளர்க்க வாய்ப்பு இருக்கிறது. உடனடியாக தீபாவளி வருவதால் இந்த வாய்ப்புக்கள் சற்று அதிகமாகவே இருக்கலாம். தமிழின் சில பின்நவீனத்துவ மாமேதைகள் இந்த நாவலைக் கிழி கிழி என்று கிழித்துத் தோரணம் கட்டவோ அல்லது சத்தமில்லாமல் இந்த நாவலில் இருந்து சில உருவகங்களை ராவோடு ராவாக சுட்டு தன் சிறுகதைகளிலோ அல்லது வேறு படைப்புக்களிலோ இடைசெருக வாய்ப்புக்கள் உள்ளன. அதே போல, அகில உலகமும் படிக்கத் தகுதியுள்ள தன் எழுத்துக்கள் தமிழில் வருவதால் மட்டுமே அதிகம் கண்டுகொள்ளப்படுவதில்லை என்று காதுவழியாக புகையை வெளியே அனுப்ப வும் வாய்ப்புக்கள் உள்ளன.

புத்தகத்தை விரைவில் படிக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகிறேன். அதே நேரத்தில் ஒரு காலத்தில் இதே போல புக்கர் பரிசு பெற்று ஏக ரகளையாக ஊதிப் பெருக்கப்பட்ட அருந்ததி ராய் நாவல் போல இது ஏமாற்றமாக அமையக்கூடாது என்று குலதெய்வத்திடம் ஒரு பிரார்த்தனையும் வைத்திருக்கிறேன்.

புத்தகத்தை விலைக்கு வாங்கி அல்லது யாராவது நல்லவர்களிடம் இரவல் வாங்கிப்படித்துத் திருப்பிக் கொடுத்து விட்டு வெள்ளைப் புலி நூலைப் பற்றி எழுதுவது தர்மமான காரியம் என்று நினைக்கிறேன்.

விரைவில் அந்தத் தலைவலியும் உங்களுக்கு உண்டு.Wednesday, October 15, 2008

வடக்கு வாசல் இணையதளம்


ஜெயமோகன் தன்னுடைய இணையதளத்தில் இந்த சனிமூலை வலைப்பக்கங்கள் பற்றி அறிமுகம் செய்திருக்கிறார். 1991ல் அவர் தில்லி வந்தபோது தில்லியில் நான் செய்து கொண்டிருந்த பாவ, புண்ணிய காரியங்களைப் பற்றியும் வெங்கட்சாமிநாதன், மற்றும் என் நண்பன் சுரேஷ், அச்சுதன் அடுக்கா பற்றியும் தன்னுடைய கட்டுரையில் மிகவும் சுவையாக சொல்லியிருக்கிறார். வடக்கு வாசல் இதழ் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் சொல்லியிருக்கிறார். அவரை எழுதச் சொல்லி ரொம்ப நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். மனிதர் மசியவில்லை. மடி ஆசாரங்களை விட்டு எழுதுங்களேன் என்று கேட்டேன். அப்படியெல்லாம் ஏதுமில்லை. திரைக்கதை நாவல்கள் போன்றவற்றில் அதிகம் நேரம் கழிவதால் மற்ற யாருக்கும் எழுத நேரம் இல்லாமல் போய் விட்டது என்று சொல்கிறார். சரி காத்திருப்போம். வடக்கு வாசல் இணைய தளத்தைப் பற்றி அவர் எழுதி அறிமுகப்படுத்தி இருக்கலாமே என்று தோன்றியது.


வடக்கு வாசல் இலக்கிய சிறப்பு மலர் 2008 வெளியிடப்பட்டது

என்னுடைய இந்தப் பக்கங்களிலேயே இது வரை
வடக்கு வாசல் இணைய தளம் பற்றி எதுவும் சொல்ல வில்லை. பிறகு அவரைக் கேட்பது என்ன நியாயம் என்று தோன்றியது.

இன்னொன்று, என்னைத் தெரிந்த எல்லோருக்கும் வடக்கு வாசல் இதழ் இணையத்தில் வருவது பற்றி கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். எனவே அதிகம் கூச்சல் போட வேண்டாம் என்று நினைத்தேன். இருந்தாலும் கொஞ்சமாக அறிமுகப்படுத்தி விடுகிறேனே. யாராவது புதிதாக இந்தப் பக்கம் வந்தால் அவர்கள் தெரிந்து கொள்ளட்டுமே.
செப்டம்பர் 14ம் தேதி புது தில்லி இராமகிருஷ்ணபுரத்தில் உள்ள திருவள்ளுவர் கலையரங்கில் வடக்கு வாசல் இதழின் நான்காம் ஆண்டுத் துவக்க விழாவும் இணைய தளத் துவக்கமும் நடைபெற்றது. வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008 வெளியிடப்பட்டது. அந்த மலரில் அசோகமித்திரன், இந்திராபார்த்தசாரதி, வாஸந்தி, பி.ஏ.கிருஷ்ணன், கி.ராஜநாராயணன், மேலாண்மைபொன்னுசாமி போன்ற ஜாம்பவான்களும் இன்னும் பல குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளும் பங்களித்திருக்கின்றனர். இந்த மலரை வெளியிட்டு வடக்கு வாசல் இணையதளத்தைத் துவக்கி வடக்கு வாசல் இதழைப் பெருமைப்படுத்தினர் முன்னள் குடியரசுத்தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்கள். கவிஞர் ய.சு.ராஜன், நாவலாசிரியர் பி.ஏ.கிருஷ்ணன், ஒரியண்டல் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.ராம்தாஸ், உச்சநீதி மன்ற வழக்கறிஞர் எம்.என்.கிருஷ்ணமணி, சக்தி பெருமாள் ஆகியோர் மேடையில்.

இணைய தளத்தை வடிவமைத்தவர் சென்னை பர்ப்பிள் ரெயின் நிறுவனத்தைச் சேர்ந்த பிரபாகர் மற்றும் அவருடைய நண்பர்கள். எனக்கு மிகவும் திருப்தி. மிகவும் அற்புதமாக வடிவமைத்திருப்பதாக என்னுடைய நண்பர்கள் அவரைப் பாராட்டினர்கள். டாக்டர் கலாம் பிரபாகரை மேடையில் சிறப்பித்தார்.

பி.ஏ.கிருஷ்ணன் மற்றும் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்

வடக்கு வாசல் இதழுக்கு விளம்பர மேலாண்மை செய்யும் சென்னை ஆட்மார்க் உரிமையாளர் அருள்வேல் வந்திருந்தார். புதுவையில் இருந்து சுகுமாரன் வந்திருந்தார்.
விழாவின் முந்தைய நாள் அதாவது 13 செப்டம்பர் அன்று தில்லியில் வெடித்த தொடர் வெடிகுண்டு வெடிப்புக்குப் பிறகும் அடுத்த நாள் நடந்த இந்த விழாவில் சுமார் 800க்கும் மேற்பட்ட தலைநகர் தமிழர்கள் கலந்து கொண்டார்கள்.
விழா குறித்து தீபா எழுதிய கட்டுரையை வடக்கு வாசல் இணைய இதழில் வெளியிட்டுள்ளோம். வடக்கு வாசல் இணைய இதழ் குறித்த விமர்சனத்தை திருநாவுக்கரசு எழுதி இருக்கிறார். அதுவும் இணைய இதழில்.

ய.சு.ராஜன், டாக்டர் அப்துல் கலாம் மற்றும் ஓரியண்டல் இன்்ஸ்யூரன்ஸ் தலைவர் எம்.ராமதாஸ்

இனி ஒவ்வொரு மாதமும் வடக்கு வாசல் மாத இதழ் அந்த மாதத்தின் 20ம் தேதிக்குப் பிறகு வலையேற்றப்படும்.
தலைநகர் தமிழர்களுக்கு என்றே, தலைநகர் பற்றிய பல தகவல்கள், நேர்காணல்கள், கட்டுரைகள், கதைகள் ஆகியவை வடக்கு வாசல் இணையத்தில் தலைவாசல் என்னும் இணைய இதழ் வாராவாரம் திறக்கப்போகிறது. அதற்கான காரியங்களை பிரபாகர் தீவிரமாக செய்து வருகிறார். ஒரு நல்ல சுவை உள்ள இணைய வார இதழ் உங்களுக்காக தலைநகரில் இருந்து வெளிவரக் காத்திருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக வடக்கு வாசல் அச்சு இதழ் இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு ஒவ்வொரு மாதமும் திறந்து வைக்கப்பட்டு வருகிறது. வடக்கு வாசல் இதழ் இணையத்தில் ஒவ்வொரு மாதமும் 20 தேதி திறக்கும்.
மிக விரைவில் உலகத் தமிழர்களுக்கு இந்தியத் தலைநகரின் செய்திகள் இணையம் வழி ஒவ்வொரு வாரமும் திறக்கப் போகிறது.


இணைய தளத்தை சிறப்புற வடிவமைத்த பிரபாகர் சிறப்பிக்கப்படுகிறார்
உங்கள் அன்பும் ஆதரவும் வழி நடத்துதலும் என்றும் எங்களைத் தொடரவேண்டும்.Friday, October 10, 2008

நீதிபதிகளின் மீதான முறையீடுகளும் தேசிய நீதித்துறை கவுன்சிலும்ஜனநாயகத்தின் மிகவும் உறுதியான தூண்களில் ஒன்றான நீதித்துறையின் மீது, அதன் பல பின்னடைவுகளையும் மீறி ஒரு ஆழமான நம்பிக்கை நமக்கு முழுக்க வற்றிவிடாமல் தொட்டும் தொடர்ந்தும் வந்து கொண்டிருக்கிறது. நீதிபதிகள் வேற்று கிரகங்களில் இருந்து வந்தவர்கள் அல்ல. நம் எல்லோரையும் போல அவர்களும் மிகவும் சாதாரணர்கள்தான் என்கிற ஒரு உண்மையும் எப்போதுமே தொடர்கிறது. அவர்களில் ஒரு சிலரின் நடவடிக்கைகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையாக அமைவதில்லை என்பதிலும் நமக்கு நேரடி அனுபவங்கள் உண்டு. நீதிபதிகளில் மிகச்சிலரின் அதீத நடவடிக்கைகளால் அந்தத் தூண் மீது வைத்துள்ள நம்பிக்கையும் சில சமயம் ஆட்டம் கண்டுவிடும் அவல நிலை ஏற்பட்டு விடுகிறது. ஒருசில நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்து நாம் படிக்க நேர்ந்த செய்திகள் நீதித்துறை குறித்த மாண்பினையும் மதிப்பினையும் கேள்விக்கு உரியதாக்கிவிடுகிறது.

உதாரணத்துக்கு பஞ்சாபில் உயர்நீதிமன்ற நீதிபதியான நிர்மல் யாதவ் என்பவருக்கு அனுப்பிய 15 லட்சரூபாய்கள் அடங்கிய பை ஒன்று நிர்மல்ஜித் கௌர் என்னும் நீதிபதியின் வீட்டுக்குத் தவறுதலாக அனுப்பப்பட்டு விஷயம் அமர்க்களப்பட்டது. வழக்கறிஞராகத் தான் இருந்த ஒரு வழக்கில் அரசுக்குக் கையகப்படுத்த வேண்டிய தொகையை தன்னுடைய சொந்தக் கணக்கில் சேர்த்துக் கொண்டதாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜஸ்டிஸ் சௌமித்ரா சென் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வரப்போகும் பாராளுமன்றத்தொடரில் இவர் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தாதாக்களுடன் தொடர்பு கொண்ட பதிப்பகம் ஒன்றிடமிருந்து புத்தகம் எழுதுவதற்காக ரூ.70 லட்சம் முன்பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதவி விலகினர் மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னள் நீதிபதி ஏ.எம்.பட்டாச்சார்யா. தங்கள் உறவினருக்கு சர்வீஸ் கமிஷன் தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்க வழிவகை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பஞ்சாப் ஹரியான உயர்நீதிமன்ற நீதிபதிகள் மெஹ்தால் சிங் கில் மற்றும் அமர்பீர் சிங் ஆகியோர் பதவி விலகினர்கள். உச்ச நிதிமன்றத்தின் தலைமை நீதியரசாக இருந்த ஏ.எஸ்.ஆனந்த் மற்றும் அஹ்மதி ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டும், எவ்விதக் கேள்விகளுக்கு உட்படுத்த முடியாத சக்திகள் என யாரும் இருந்துவிடக்கூடாது என்பது குடியாட்சித் தத்துவத்தின் அடிப்படை. உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கும் பாங்கினில் எவ்வித வெளிப்படையான அணுகுமுறையும் கிடையாது. அதற்கான தனிப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றன. சின்னச்சின்ன நீதிமன்றங்களின் நீதிபதிகள் ஏதேனும் தவறுகள் செய்தால் அவர்களைப் பற்றி விசாரணைகள் நடத்தி அவர்களைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு உள்ளது. ஆனல் உயர்நீதிமன்ற நீதிபதியோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியோ ஏதேனும் தவறு செய்தால் பகவான் பார்த்துப்பார்' என்ற ரீதியில் இருந்துவிடலாம். இல்லையென்றால் இன்னொரு வழி இருந்தது. அதாவது, ஒரு உயர்நீதி மன்றம் அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியின் மீது தொடுக்கப்படும் புகாரின் மீது மூன்று நீதிபதிகள் கொண்ட குழு ஒன்று ஆய்ந்து குற்றம் செய்தவர் என்று தீர்மானிக்க வேண்டும். பிறகு முன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அந்த நீதிபதியை பதவியிறக்கம் செய்ய வேண்டும்.

இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்குக் கூட பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. உயர்மட்டத்தில் உள்ள நீதிபதிகளின் முறைகேடுகள் மீதான புகார்களைக் கவனித்து ஆவன செய்ய தேசிய அளவில் ஒரு கவுன்சில் வேண்டும் என்ற குரல் வலுப்பட்டது. 2003ல் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்த ஜன கிருஷ்ணமூர்த்தி ஒரு தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலுயுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதங்கள் அனுப்பினர். அரசியலமைப்புச் சட்டத்தை மறு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட வெங்கடாசலய்யா கமிஷன், தேசிய நீதித்துறை ஆணையம் அமைத்து தவறிழைக்கும் நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

அப்படி ஒரு சட்ட வரைவினை நிறைவேற்றும் வகையில் ஜட்ஜஸ் (இன்க்வரி) அமென்ட்மெண்ட் பில் 2008 என்னும் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய மைய அமைச்சரவையின் கேபினெட் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவின் படி தனிமனிதர்களும் உயர்மட்ட நீதிபதிகளின் மீதான புகார்களை தாக்கல் செய்யலாம். தேசிய நீதித்துறை அமைப்பு ஒன்றையும் நிறுவி நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்து தண்டனைகள் வழங்குவதற்கும் வழிவகை செய்கிறது இந்த மசோதா. முன்னர் டிசம்பர் 2006ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இதே போன்ற மசோதாவுயம் வாபஸ் வாங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நம்ம ஊர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் அமைந்த பாராளுமன்றக் குழுவின் பரிந்துரையின் பேரில் அமைந்த மாற்றங்கள் இந்த மசோதாவில் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ன. முந்தைய மசோதாவின் மீதான சுதர்சன நாச்சியப்பன் எழுப்பிய ஆட்சேபணைகள் மற்றும் கேள்விகளை இன்றைய நாளேடுகளில் சட்டம் குறித்து எழுதும் வல்லமை படைத்த எல்லோரும் வெகுவாக சிலாகித்து இருக்கிறார்கள். அந்த மசோதாவில் சில அடிப்படை மாற்றங்கள் மற்றும் திருத்தங்களுடன் இந்தப் புது மசோதா பாராளுமன்றத்தின் முன் வைக்கப்படுகிறது.

சுதர்சன நாச்சியப்பன்

தேசிய நீதித்துறை கவுன்சில் அமைப்பு, உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர், மற்றும் இரு மூத்த நீதியரசர்கள் மற்றும் இரு உயர்நீதிமன்றங்களின் மிகவும் மூத்த நீதியரசர்களைக் கொண்டு அமைக்கப்படும். ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியின் மீதும் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதியரசர் மற்றும் நீதிபதிகள் மீதும் ஒரு தனிமனிதர் முறையீடு பதிவு செய்யலாம். முறையீடு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் மீது இருக்கும் பட்சத்தில் அவர் இந்த அமைப்பில் பங்கேற்காமல், கவுன்சிலின் தலைமை குடியரசுத் தலைவரால் அடுத்த மூத்த நிதியரசரிடம் வழக்கு ஒப்படைக்கப்படும். முறையீட்டின் தன்மையை ஆய்ந்து, தக்க விசாரணைகள் செய்து ஒரு நீதிபதியின் மீது குற்றம் நிரூபணம் ஆனல் கவுன்சில் பாராளுமன்றத்துக்குப் பரிந்துரை செய்து அந்த நீதிபதியை பதவி நீக்கம் செய்யலாம். (கொஞ்சம் மூச்சு வாங்கிக்கலாம்),

உயர்மட்ட நீதிபதிகளின் நடவடிக்கைகளைக் கேள்வி கேட்க ஒரு தனிமனிதனுக்கும் அதிகாரம் கிட்டும் அதே நேரத்தில் இன்னொரு ஆபத்து இருப்பதையும் மறுப்பதற்கில்லை. எந்த வழக்கின் தீர்ப்புக்கும் இருபக்கங்கள் உண்டு. ஒன்று வெற்றி. இன்னொன்று தோல்வி. தோல்வியுற்றவர்கள் தங்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக நோக்கங்களைக் கற்பிக்கும் ஆபத்து எப்போதுமே உண்டு. அதனல் ஒரு நீதிபதியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டினை தேசிய நீதித்துறை குழுமம் தீர ஆராய்ந்து, குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிக்கும் தன் பக்கத்து வாதத்தை முன்வைக்க வாய்ப்பளித்து பிறகே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

எனவே எல்லாவகையிலும் ஒரு பாதுகாப்பான ஒரு மசோதாவாகத்தான் பாமரப் பார்வைக்குப் படுகிறது.

ஆனல் சட்ட வல்லுனர்கள் இரு தரப்பிலும் போட்டுக் கிழித்துத் தோரணம் கட்டத் தொடங்கும்போது இந்த மசோதாவின் எல்லாப் பக்கங்களும் நம் பார்வைக்குக் கிட்டும்.

எது எப்படியோ தங்கப்பதக்கம் திரைப்படத்தில் சிவாஜி மற்றும் பிரமிளா ஒரு பாடல் காட்சியில் தங்கள் மிகை நடிப்பின் ஊடாக ஒரு கேள்வியைக் கேட்டு பதிலும் கொடுத்துக் கொள்வார்கள். (வார்த்தைகள் அப்படியே இல்லையென்றாலும் பொருள் மாறாமல் கொடுக்க முயற்சிக்கிறேன்)

ஊருலே இருக்கிற சின்னச் சின்ன நதியெல்லாம் அந்த வற்றாத ஜீவநதியைப் பார்த்து ஆறுதல்
அடையும். அந்த நதியே காய்ந்து போன?

பக்தர்கள் தங்கள் குறையை
தெய்வத்துக்கிட்டே முறையிடுவாங்க... அந்தத் தெய்வமே கலங்கி நின்னா?...
இந்த மாதிரியான சினிமாத்தனமான எடர்னல் கேள்விகளுக்கு எல்லாம் கொஞ்சம் விடை கிடைக்கிற மாதிரி அமைந்திருக்கிறது இந்த மசோதா என்று சொல்லலாமா?

இன்னும் ஒன்று.
நாட்டாமை தீர்ப்பை மாத்தி எளுதூ....
என்று யாரும் நீதிபதிகள் அருகில் போவதற்குக் கொஞ்சம் பயப்படுவார்கள் இல்லையா?Wednesday, October 8, 2008

தூரன் பற்றிய ஒரு நல்ல நூல்

இது பெரியசாமித் தூரனின் நூற்றாண்டு. வழக்கப்படி தமிழ் சமூகத்தால் பெருமளவு எந்தவகையிலும் பேசப்படாது, சரியான வகையில் நினைவுகள் கொண்டாடப்படாது விடப்பட்டவர்களில் தூரனும் ஒருவர். ஒரு நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் ஆண்டிலும் அவரைப் பற்றிய பல தளங்களில் ஆழ்ந்த மௌனம் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டது. இதுபோன்ற ஒரு வருத்தமளிக்கும் சூழலில் பாரதிய வித்யா பவன், கோயமுத்தூர் மையம் பதிப்பித்து இருக்கும் "தொண்டில் கனிந்த தூரன்'' என்னும் நூல் பெரியசாமித் தூரன் போன்ற ஒரு அற்புதப் படைப்பாளியின் பன்முகத் தன்மையை மிகவும் அற்புதமாகப் பதிவு செய்திருக்கின்றது.


சிற்பி பாலசுப்பிரமணியம் தொகுப்பாசிரியராகவும் டாக்டர் இராம.இருசுப்பிள்ளை மற்றும் டாக்டர் ஐ.கே.சுப்பிரமணியன் ஆகியோர் இணை ஆசிரியர்களாகவும் இந்த நூலில் அரும் பங்காற்றியிருக்கின்றனர். பாரதிய வித்யா பவன், கோவை மையம் இதுவரை, ராஜாஜி அவர்களின் உரைகள், கட்டுரைகள் அடங்கிய இரு தொகுப்புக்கள், சி.சுப்பிரமணியம் அவர்களைக் குறித்த Passion for Excellence, இசையரசி டி.கே.பட்டம்மாள் பற்றிய, கான சரஸ்வதி ஆகிய நூல்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அந்த நூல்களின் வரிசையில் நூற்றாண்டு காணும் பெரியசாமித் தூரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நூல் வெளியீடு அமைந்துள்ளது. அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களின் அற்புதமான முன்னுரை இந்த நூலுக்கு அணிசேர்க்கிறது.

Saturday, June 7, 2008

சிங்கம் அசிங்கமான கதை - தெலுங்கானா வீரரின் சோகக் கதை


ஒரு அமைப்பு. அந்த அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் தனிநபர் நிறுவனமாக அந்த அமைப்பை நடத்தி வந்தவர். அவரே தலைவரை நியமிப்பார். அவரே எல்லோரையும் நியமிப்பார். தன்னையே ஒவ்வொரு ஆண்டும் முக்கியமான பொறுப்பில் நியமித்துக் கொள்வார்.


அவர் தன்னுடைய அமைப்பிலேயே கலாட்டா செய்வார். அவருடைய வலுக்கட்டாயங்களுக்கு யாரும் ஒத்துப் போகாத சூழ்நிலையில் எப்போதும் சட்டைப் பையிலேயே தயாராக வைத்து இருக்கும் ராஜிநாமா கடிதத்தை எடுத்து சபையில் வீசுவார். அவரைத் தவிர அந்த அமைப்பில் யாருக்கும் ஓடியாட நேரம் இருக்காததால் அந்தக் கடிதத்தைத் திரும்பப் பெறச்சொல்லிக் கேட்டுக் கொண்டு அந்த மனிதர் வற்புறுத்தும் தீர்மானங்களை செயல்படுத்துவார்கள் அந்த அமைப்பில்.


ஒரு முறை அப்படி ஒரு கூட்டத்தில் அவர் முன்வைத்த தீர்மானத்துக்கு தலைவர் ஒத்துக் கொள்ளவில்லை. இவர் சத்தம் போட்டுப் பார்த்தார். அப்போது வேறு தலைவர். அந்தத் தலைவர் அயரவில்லை. நம்மாள் வழக்கமான தன்னுடைய அஸ்திரத்தை சட்டைப் பையில் இருந்து எடுத்து விட்டார். தலைவர் சத்தம் போடாமல் அதை எடுத்து தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு ""சரி. எல்லா ஆவணங்களையும் நாளை ஒப்படைத்து விடுங்கள்'' என்று சொல்லி எழுந்து சென்றுவிட்டார்.


நம்ம ஆளுக்குக் கையும் காலும் பதற ஆரம்பித்தது. ஏறத்தாழ ஒரு வாரத்துக்கு அந்தத் தலைவர் வீ்ட்டுக்கும் அலுவலகத்துக்கும் மாறி மாறி அலைந்து தலைவர் சட்டைப் பையில் போட்டு வீட்டுக்கு எடுத்துச் சென்ற தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு மீண்டும் தன் டார்ச்சரை தொடர்ந்து வந்தார்.


இது நண்பர் ஒருவர் சொன்ன உண்மைக் கதை.


ஏறத்தாழ இதே போன்ற ஒரு காரியத்தை செய்து முழித்துக் கொண்டிருக்கிறார் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் நிறுவனர் மற்றும் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் அவர்களின் நிலைமையும் சற்றேறக்குறைய இந்த நிலையை ஒட்டியதுதான்.

இத்தனை நாட்கள் அவருடைய தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை மாநில அரசும் மைய அரசும் தான் உதாசீனப் படுத்திக் கொண்டு இருந்தார்கள். இப்போது தெலுங்கானா பிரதேசத்து மக்களே அவரை அநியாயத்துக்குப் போட்டுத் தள்ளி விட்டார்கள். இதுவரை எனக்குத் தெரிந்து எந்தத் தலைவருக்கும் நேராத கொள்கை சார்ந்த சோகம் இது.


சென்ற ஆண்டு 14 சட்டமன்ற உறுப்பினர்களும் 4 பாராளுமன்ற உறுப்பினர்களும் தனி தெலுங்கானா மாநிலத்துக்கான கோரிக்கையை வற்புறுத்தி தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தார்கள். அந்தத் தொகுதிகளில் நடந்த மறுதேர்தலில் மக்கள் காங்கிரசுக்கும் தெலுகு தேசத்துக்கும் ஆதரவு அளித்து சந்திரசேகர ராவுக்கும் அவர் கட்சி வேட்பாளர்களுக்கும் அல்வா கொடுத்தார்கள்.


தெலுங்கு ராஷ்டிர சமிதி உறுப்பினர்கள் ராஜிநாமா செய்த பதினாறு சட்டமன்றத் தொகுதிகளில் அவர்களால் வெறும் ஏழு தொகுதிகளை மட்டும் மீண்டும் பெற முடிந்து இருக்கிறது. பாராளுமன்றத் தொகுதிகளில் நான்கில் இரண்டுதான் அவர்களுக்கு மீண்டும் கிட்டியுள்ளது. தனிப்பட்ட முறையில் சென்ற தேர்தலில் சந்திரசேகரராவ் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று ஒரு சாதனையை நிகழ்த்தினார். இந்த முறை மனிதர் பாவம். பதினைந்து ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அவரால் வெற்றி காண முடிந்தது. இத்தனைக்கும் கரீம் நகர் தொகுதியில் டிஆர்எஸ் கட்சியினர் வாக்குச் சாவடிகளில் அழிச்சாட்டியம் செய்தார்கள் என்று செய்திகள் வெளியாகின. இதையும் மீறி படு மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது அந்தக் கட்சி. தெலுங்கானா பகுதியில் டிஆர்எஸ் கட்சியினர் ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள்.


சரி. தெலுங்கானா பிரதேசம் பற்றிய பூகோள விபரங்களை லேசாகப் பார்ப்போம். ஆந்திர மாநிலத்தில் வாரங்கல், அதிலாபாத், கம்மம், மெஹ்பூப்நகர், நல்கொண்டா, ரங்காரெட்டி, கரீம்நகர், நிஜாமாபாத், மேடக் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது தெலுங்கானா பகுதி. இந்தப் பகுதியில் கிருஷ்ணா, கோதாவரி நதிகள் ஓடுகின்றன. ஆனாலும் ஆந்திராவின் பிற்படுத்தப்பட்ட பிரதேசம் அது. ஆந்திராவில் "தெலங்கானா" என்ற ஓசையில்தான் உச்சரிக்கிறார்கள்.


தெலுங்குப் படங்களில் இந்தத் தெலுங்கானா பகுதி மக்களை ஏறத்தாழ முட்டாள்கள் போல சித்தரிப்பார்கள். அந்தப் பகுதி மக்களைப் பற்றிப் பேசும்போதே உதட்டைக் கடித்துக் கொண்டு நக்கல் அடிக்கிற தொனியில்தான் பேசுவார்கள்.


இந்த நிலையில் தெலுங்கானா பகுதியை தனி மாநிலமாக அமைக்கக் கோரி நீண்ட நாட்களாக போராடி வருகிறது தெலுங்கானா ராஷ்டிர சமிதி. கடந்த மக்களவை தேர்தலில் தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க உதவி செய்வதாக உறுதியளித்து இவர்களைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்ட காங்கிரஸ் கட்சி காரியம் முடிந்ததும் வலுவாக அல்வா கொடுத்தது. அந்த மாநிலம் உருவாக்குதற்கான எந்த நடவடிக்கையினையும் முன்னெடுக்கவில்லை மைய அரசு. பலமுறை வற்புறுத்திய டிஆர்எஸ் கட்சியினர் சென்ற ஆண்டு மைய அரசுக்குத் தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டார்கள்.
இந்தக் கட்சியின் தலைவர் பற்றி சொல்லவேண்டும் என்றால் தெலுங்கு தேசம் கட்சியில் ரொம்ப நாட்கள் இருந்தவர் சந்திரசேகர ராவ். அந்தக் கட்சி ஆட்சியில் இருந்தபோது சட்டசபையில் துணை சபாநாயகர் பொறுப்பில் இருந்தவர். தன்னை கட்சி மதிக்கவில்லை என்றும் தனக்கு சரியான பொறுப்பு தரவில்லை என்றும் குற்றம் சாட்டி அக்கட்சியை விட்டு விலகினார். பிறகு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை துவக்கினார். (நிறைய தேசிய நாளிதழ்கள் மற்றும் ஆங்கில தமிழ் இதழ்கள் கூட தெலுங்கானா ''ராஷ்டிரிய" என்றுதான் தவறாக எழுதுகிறார்கள்).


அவர் கட்சி துவங்கியதே ஒரு சுயநல நோக்குடன்தான் என்று அவருடைய அரசியல் எதிரிகள் குற்றம் சாட்டுகிறார்கள். மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் இருந்து அமைச்சர்களை விலக்கிக் கொண்டதும் நக்ஸலைட்டுகளின் மிரட்டலினால்தான் ஒழிய தெலுங்கானா மாநிலக் கோரிக்கையின் அடிப்படையில் அல்ல என்றும் சொல்கிறார்கள். டிஆர்எஸ் கட்சியின் தொண்டர்கள் சிலரை நக்ஸலைட்டுகள் தாக்கியும் கொன்றும் இருக்கிறார்கள்.


சோனியா காந்தியிடமும் தில்லியின் பல மூத்த காங்கிரஸ் தலைவர்களுடனும் தனக்கு நெருக்கம் அதிகம் என்று பரவலாக ஆந்திராவில் செய்தியைப் பரப்புவார் சந்திரசேகர ராவ். ஆனால் இவர் ராஜினாமா செய்தபோது இவரை யாரும் கண்டுகொள்ள வில்லை. அதுதான் மாபெரும் சோகம்.


சரி. மீ்ண்டும் ஒருமுறை தெலுங்கானா பிரச்னைக்கு வருவோம். வழக்கமாக மற்ற மாநிலங்களில் அவர்கள் பிராந்தியத்தை சார்ந்த பெருமையால். அதன் வளர்ச்சியினால் தனி மாநிலக் கோரிக்கைகள் எழும். ஆனால் தெலுங்கானாவில் வளர்ச்சி என்பது சுத்தமாக இல்லாது போனதால் தனி மாநிலத்துக்கான குரல்கள் எழுந்தன. இத்தனைக்கும் சென்னா ரெட்டியும் நரசிம்ம ராவும் தெலுங்கானா பகுதியை சேர்ந்தவர்கள். ஆனால் அந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு இவர்கள் இருவரும் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்கிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் அங்கே இருக்கிறார்கள். எனவே நக்ஸலைட்டுகள் அதிகமாக அங்கே உருவாகிறார்கள். மக்கள் போராட்டங்களுக்கு தளம் கிடைக்கிறது அங்கே.


ஒடுக்குமுறைக்கான எதிர்ப்பு என்பது இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாகத் தொடர்வது. நிஜாம் காலத்தில் இருந்தே ஒடுக்குமுறைகளை எதிர்த்துக் கிளம்பியவர்கள் இப்பகுதி மக்கள். காங்கிரஸ். தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் இந்தப் பகுதி மக்களுக்கு இழைத்த துரோகங்கள்தான் அதிகம். அதன் விளைவுதான் சந்திரசேகர ராவ் போன்றவர்கள் அதனை தங்களுடைய அரசியல் பகடையாக பாவிக்க வழி செய்கிறது.


மக்கள் டிஆர்எஸ் கட்சிக்கு அளித்த தோல்வி அந்தக் கட்சியின் தனி மாநிலக் கோரிக்கைக்கு எந்த அளவில் ஆதரவு இருக்கிறது என்பதைத் தெளிவாக்குகிறது. அவருக்கு தெலுங்கானா பகுதி மக்கள் நல்லதொரு பாடத்தை அளித்து இருக்கிறார்கள். இந்தப்பதிவின் துவக்கத்தில் சொன்ன கதைபோலத்தான் சந்திரசேகர ராவுக்கும் நடந்து இருக்கிறது.


Friday, June 6, 2008

நம் தாய்மொழியும் நமது குழந்தைகளும்...

நம்முடைய தமிழ் திரைப்படங்களில் நமக்கு அதிகம் காணக்கிடைக்கும் காட்சி இது. கதாநாயக வேடம் புனையும் முதியவர் வழக்கமாகக் கடும் உழைப்பாளி. காலத்தின் கொடுமையால் அவர் சுமார் 20 வயதுள்ள தமிழ் பேசத்தெரியாத ஏதாவது ஒரு சேட்டுப் பெண், தெலுங்கு கன்னடம் அல்லது மலையாளப் பெண் நடிக்கும் கதாநாயகிப் பாத்திரத்தின் வீட்டில் வேலைக்காரராக இருப்பார். இரவல் குரலின் கருணையால் செயற்கையாகத் தமிழ் பேசும் அந்தக் கதாநாயகிப் பெண் நம்முடைய கதாநாயகப் பெரியவரை ஏகத்துக்கும் கேவலப்படுத்திக் கொண்டு இருப்பாள். தோழியருடன் பந்து விளையாடும் போது பந்தைப் பொறுக்கிப் போடச் சொல்வாள். சாணி பொறுக்கச் சொல்வாள். தரையை மெழுகச் சொல்வாள். விறகு பிளக்கச் செய்வாள். வண்டியைத் துடைக்கச் சொல்வாள். தன்னுடைய தோழிகள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அவரை மிகவும் கேவலமாக நடத்துவாள். நம்முடைய கதாநாயக வேடம் அணிந்த பெரியவர் எல்லாவற்றையும் இன்முகத்துடன் பொறுத்துக்கொள்வார். அவள் காலால் இட்ட பணிகளைத் தலையால் செய்வார். பொறுத்துப் பொறுத்து, ஒரு கட்டத்தில் அவமானம் தாங்காது சுனாமி அலையின் சீற்றத்துடன் பொங்கி எழுவார். Look Madam!! What do you think o yourself? You know who I am? I am B.A., Economics from Krishnagiri Government Arts College you know? First of all, you learn how to give respect and take respect. Understand? You better understand... என்கிற ரகத்தில் கைகால்களை ஆட்டி எழுச்சிமிகு வசனங்களைப் பேசுவார். அரங்கில் விசில் சத்தமும் கரவொலியும் வானை முட்டும். நம்முடைய கதாநாயகப் பெரியவரின் ஆங்கில வசனத்தைக் கேட்டு திக்கு முக்காடிப் போவாள் அந்தக் கதாநாயகிப் பெண். அவளுடைய போக்கு உடனடியாகத் தலைகீழாக மாறிப் போய்விடும். அவளுடைய மனதில் சொல்லொணா வண்ணம் காதல் கரைபுரண்டு ஓடும். உடனடியாக வரும் அடுத்த காட்சியில், இருவரும் நைல் நதி அல்லது தேம்ஸ் நதிக்கரையோரத்தில் கைகோர்த்துக் கொள்வார்கள். அல்லது கதாநாயகப் பெரியவர் தலைமுதல் கால்வரை போர்த்திய ஆடையுடனும் கதாநாயகி அந்தக் குளிரில் அரைக்கால் மீட்டர் துணியை உடுத்திக் கொண்டு, ஆல்ப்ஸ் மலைச் சிகரத்தில் புரியாத தமிழில் ஏகப்பட்ட வாத்திய இரைச்சல்களுடன் பாடி ஆடுவார்கள். அங்கே இருமனங்களும் செம்புலப் பெயல் நீர் கலந்தாற்போல் கலந்து விடும்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்தக் கதாநாயகியின் மனமாற்றத்துக்கு மூலகாரணமாக அமைவது நம்முடைய கதாநாயகப் பெரியவர் பொரிந்து தள்ளிய ஆங்கிலம்தான். அவர் பேசிய ஆங்கிலம் தான் அந்த அம்மணியின் மனத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்த அளவு ஆங்கிலம் தெரிந்த இவர் கண்டிப்பாக நல்லவராகவும் வல்லவராகவும் இருந்துதான் ஆகவேண்டும். இந்த அளவு ஆங்கிலம் பேசும் இவருக்குத் தெரியாதது ஒன்றும் இருக்க முடியாது என்றமுடிவுக்குக் கதாநாயகிப் பெண் தள்ளப்பட்டு விடுவாள்.


நம்முடைய குழந்தைகளின் அறிவுத் திறனை அளப்பதற்கும் நாம் இந்தத் தமிழ்த் திரைப்படத்தின் கதாநாயகிப் பெண் மேற்கொள்ளும் இது போன்ற அளவு கோலைத்தான் அதிகமாகப் பயன் படுத்துகிறோம். குழந்தைகள் புத்திசாலிகள் ஆகத்திகழ வேண்டும் என்றால் அவர்கள் வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களை அநியாயமாக வற்புறுத்துகிறோம். அதற்காக சைக்கிளையோ, ஸ்கூட்டரையோ காரையோ வீட்டையோ விற்றாவது அந்தக் குழந்தை ஆங்கிலம் படிக்க வேண்டும். நல்ல ஆங்கிலத்தில் பேசியே ஆகவேண்டும் என்று அவர்கள் மீது திணிக்கிறோம். இந்த வன்முறையின் கொடுமையான விளைவாக நம்முடைய குழந்தைகளுக்கு நம் தாய்மொழியின் அருமை, அதன் இனிமை, அதன் வளமை, அதன் பெருமை பிடிபடாமல் போய்விடுகிறது. பல குடும்பங்களில் குழந்தைகளிடம் வலுக்கட்டாயமாக ஆங்கிலத்தில் பேசுவதை ஒரு குடும்ப வழக்கமாகக் கடைப்பிடிக்கிறார்கள். குழந்தைகள் ஆங்கிலத்தில் தான் பேசவேண்டும் என்று அவர்கள் மீது ஒருவகையான வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு எந்தவகையான இன்பத்தை மறுக்கிறோம் என்பதனை உணர்ந்து கொள்ளாமல் அவர்களை ஆங்கிலம் ஒப்பிக்கும் கிளிகளாக மாற்ற முயற்சிக்கிறோம்.


உலகில் உள்ள எத்தனையோ ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று. இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்வது அல்லது அதில் பாண்டித்தியம் பெறுவது என்பது ஒன்றும் தவறான காரியம் அல்ல. கண்டிப்பாகத் தாய்மொழியைத் தவிர இன்னும் பிறமொழிகளைக் கற்றுக்கொள்வது மனநல ரீதியில் மிகவும் அற்புதமான விஷயம்தான். ஆனால் தாய்மொழியை முற்றாகப் புறக்கணிக்க வைத்து ஒரு மேட்டிமை பாவனைக்காக ஆங்கிலத்தை அவர்கள் மீது திணிப்பது என்பது நம்முடைய குழந்தைகளுக்கு எதிராக நாம் கருத்து ரீதியாகத் திணிக்கும் ஒருவகையான வன்முறைதான் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.


மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியாது. இங்கே தில்லியில் அந்தக் கொடுமை சற்று அதிகம்தான் என்று நினைக்கிறேன். தாங்கள் தமிழர்கள் அல்லது தமிழ் தெரிந்தவர்கள் என்று வெளியில் காட்டிக்கொள்வதை ஒரு அவமானமாக நினைக்கும் ஒரு மனப்பாங்கை குழந்தைகளிடத்தில் இங்குள்ள தலைநகர்த் தமிழர்கள் வளர்த்து வருகிறோம். இது குறித்து ஏற்கனவே ஒரு சனிமூலை கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறேன். தன்னைத் தமிழர்களாகக் காட்டிக் கொள்ள விரும்பாத நல்லவர்களின் மனப்பாங்கு மற்றும் போக்கு குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதனை மீண்டும் இங்கு விவரிக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இங்கு நான் சொல்ல விரும்புவது நம்முடைய குழந்தைகளை, நம்முடைய மொழியில் இருந்து விலக்கி வைக்கும் மனப்பாங்கைப் பற்றித்தான். தலைநகரில் வளரும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ் என்பது அவர்கள் வீட்டில் எப்போதாவது பேசிக்கொள்ளும் ஒரு காட்டுமிராண்டி பாஷை. தொலைக் காட்சிகளில் பெற்றோர்கள் பார்க்கும் அசட்டுத்தனமான தொடர்களில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து கொண்டும் எப்போதும் அழுது கொண்டும் பேசப்படும் ஒரு மொழி. அவ்வளவுதான். தமிழுக்கு அதற்கு மேல் அங்கே வேலையும் பயன்பாடும் இல்லை.

அதிலும் சில தமிழ்ப் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் எதிரில் மிகவும் கவனமாகத் தமிழ் பேசுவதைத் தவிர்த்துத் தனியறையில் காதல் செய்யும் போதும் சண்டை போடும் போது மட்டுமே தமிழ் பேசிக்கொள்கிறார்கள். சில வீடுகளில் தமிழ்த் திரைப்படங்களைக் கூடக் குழந்தைகள் எங்காவது வெளியில் விளையாடப் போகும்போதுதான் தொலைக்காட்சிப் பெட்டியில் போட்டுப் பார்க்கிறார்கள். (ஆனால் இது ஒருவகையில் இது அந்தக் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்யும் காரியம்தான். அதனால், இதனை சற்று சகித்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது). சில வீடுகளில் சிறுகுழந்தைகளிடம் தமிழ் பேசினால் அந்தக் குழந்தை பேயைக் கண்டது போல மிரண்டு போகிறது என்று பெருமையுடன் விருந்தாளிகளிடம் சொல்பவர்களும் உண்டு.


எதையும் சிந்திக்கும்போது நமக்குப் பழக்கமான, நமக்குள் ஊறிப்போன ஒரு மொழியில் சிந்திக்கும்போது சற்று உருப்படியாகச் சிந்திக்கலாம் என்று மொழியியல் அறிஞர்கள் அடிக்கடி வலியுறுத்துகிறார்கள். சிந்தனை அளவில் நமக்குப் பரிச்சயமான மொழியின் தளத்தில் இயங்கும்போது அதன் ஓட்டம் சீராக அமையும் என்பதும் இயற்கை. எனவே அடிப்படை மொழியான தாய்மொழியை மனத்தளவில் சிந்தனை அளிவல் வலுப்படுத்தினாலே பல பெரிய காரியங்களை சாதிக்கலாம். ஆனால் இங்கு நடப்பது என்னவென்றால், சிந்தனை ஓட்டத்தில் நமக்குச் சரளமான தாய்மொழியை ஒதுக்கி வைத்து, அந்நிய மொழிகளையும் அறைகுறையாகக் கற்றுக்கொடுத்து, சிந்தனை ஓட்டத்தைத் தடைபடச் செய்கிறோமோ என்றும் தோன்றுகிறது. இதனை என்னால் சரியாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. மொழியியல் அறிஞர்களும், மனவியல் அறிஞர்களும் இதைப்பற்றி இன்னும் சற்று விரிவாகவும் சொல்லலாம். என்னுடைய சிற்றறிவுக்கு எட்டுவது என்ன என்றால், குழந்தைகளின் மீதான இந்த அறைகுறை மொழித் திணிப்பு என்பது அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் அவர்கள் சொல்ல வருவதை சரியான முறையில் எடுத்துச் சொல்ல முடியாத ஒரு அசௌகர்ய நிலைக்குத் தள்ளப் படுகிறார்களோ என்றும் தோன்றுகிறது. இங்கு தலைநகரில் இந்தியில் சிந்தித்து அதனை மனத்தளவில் உடடினயாக மொழிமாற்றம் செய்து வார்த்தைக் கோர்வைகளைத் தவறாக முன்வைக்கும் பலரைக் காணமுடிகிறது. இதற்கான உடனடி உதாரணமாக என்னுடைய இருமகள்களின் தமிழைச் சொல்லலாம். எங்கள் வீட்டில் வலுக்கட்டாயமாகத் தமிழில் பேசி, அவர்களைத் தமிழ் படிக்க வைத்தே இந்த நிலை என்றால், தமிழை முற்றாக ஒதுக்கி வைத்து ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே பேசவைத்து, வளர்க்கப்படும் குழந்தைகளின் நிலை என்ன என்று நினைத்துப் பாருங்கள். தமிழ் புழங்கும் சூழல் அவர்கள் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. அப்படி இருக்கும்போது ஆங்கிலத்தை மட்டுமே அவர்கள் மீது திணித்து வளர்ப்பது என்பது எந்தக் கொடுமையில் சேர்ப்பது என்று சொல்லத் தெரியவில்லை. இதன் விளைவு என்னவென்றால் அந்தக் குழந்தைகளுக்கு எந்த மொழியின் பாலும் பற்றும் பாண்டித்யமும் ஆழமும் ஞானமும் இல்லாமல் போய்விடும். எல்லாமே அறைகுறையாகத் தான் இருக்கும்.


இந்த நிலையில் தலைநகரில் மரபிசை கற்றுக் கொள்ளவும் மரபுசார் நடனவகைகளைக் கற்றுக்கொள்ளவும் திருப்புகழ், பாசுரங்கள், திருவருட்பா போன்றவற்றைக் கற்றுக்கொள்ளவும் தங்கள் குழந்தைகளுக்கு ஊக்கம் அளிக்கும் பெற்றோர்களைத் தலைவணங்கத் தோன்றுகிறது. இவை நம்முடைய குழந்தைகளை நம்முடைய மரபுடன் ஒத்திசைய வைக்கும் காரியத்தை ஆற்றுபவவை. ஒரு சிறிய அளவிலாவது நம்முடைய மொழியின் வளமையை, பெருமையை, அவர்கள் வளர்ந்த பிறகாவது உணர்ந்து கொள்ள வழிவகை செய்பவவை.


நம்முடைய குழந்தைகளுக்கு நம்முடைய மொழியுடன் நாம் செய்து வைக்கும் பரிச்சயம் குறித்தும், அவர்களுடைய அறிவுத் திறனை ஆங்கிலம் வழி அளப்பதையும் குறித்து நான் சற்று மிகைப்படுத்திச் சொல்வது போலக்கூடச் சில சமயம் தோன்றும். இந்த விஷயத்தை எனக்கே உரிய மிகச் சிறிய அளவிலான ஞானத்தின் விளைவால் சற்றுப் பகிடி செய்வது போலத் தோன்றினாலும் இதன் அடிநாதமாக மிக ஆழமான வேதனை தொக்கி நிற்பதை எப்படி சரியாக விளக்கிச் சொல்வது என்று தெரியவில்லை.

ஏப்ரல் 2008 வடக்கு வாசல் இதழில் வெளியான கட்டுரை.Monday, June 2, 2008

கர்நாடகத் தேர்தல் - மோசமான பக்கத்து வீட்டில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்...

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் பற்றிக் கோட்டு சூட்டு போட்ட ஆட்கள் ஊடகங்களில் மாறி மாறிக் கடித்துக் குதறித் துப்பிய பின் எங்கேனும் கொஞ்சம் மிச்சம் இருந்தால் என் பங்குக்கு நானும் பிளேடு போடலாம் என்று இந்தப் பதிவு.

இரு வாரங்களுக்கு முன்பு மைய அரசில் பொறுப்பேற்ற நான்காவது ஆண்டுவிழாவைக் கொண்டாடிய ஐக்கிய முன்னேற்றக் கூட்டணி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த தோல்வியைக் கண்டு கலங்கிப் போயிருக்கிறது. அதுவும் மக்களவைத் தேர்தல் இன்னும் ஒரே ஆண்டில் நடக்க இருக்கும் இந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைத்த இந்தத் தோல்வி என்பது சற்று ஆட்டம் கொடுக்க வைக்கிற விஷயம்தான். கடந்த நான்கு ஆண்டுகளில் 25 சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்த காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முன்னேற்றக் கூட்டணி தொடர்ச்சியாக 16 தோல்விகளை சந்தித்து இருக்கிறது. 2004ல் காங்கிரஸ் கட்சி, ஆந்திர பிரதேசம், அருணச்சல பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வெற்றி கண்டது ஆனால் கர்நாடகா, ஒரிஸ்ஸô, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தோல்வியைத் தழுவியது. 2005ல் ஹரியானா மாநிலத்தில் மட்டுமே வெற்றியைப் பறித்த காங்கிரஸ் பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் படுதோல்வியைத் தழுவியது. 2006ல் அஸ்ஸôமில் வெற்றி பெற்றது. புதுச்சேரியில் மிகச் சிறிய அளவில் வெற்றி கண்டு திமுகவுடன் கூட்டணி அமைத்தது. அதே ஆண்டு மேற்கு வங்காளத்திலும் கேரளாவிலும் தோல்வி கண்டது. 2007ல் குட்டி மாநிலங்களான மணிப்பூர் கோவா போன்ற இடங்களில் வெற்றிகண்ட காங்கிரஸ், பஞ்சாப், உத்தரகாண்டம், ஹிமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தோல்வியைத் தழுவியது. 2008ல் நிலைமை படுமோசமாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி எந்த மாநிலத்திலும் பெரும்பான்மை பெற்று வரமுடியவில்லை. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் படுதோல்வியைத் தழுவியுள்ளது.

நான் மேலே சொன்ன எல்லா மாநிலங்களிலும் மக்கள் வாக்களித்து இருக்கும் முறையைப் பார்க்கும்போது அவர்கள் ஐக்கிய முற்போக்கு முன்னணியின் கொள்கைகளுக்கு எதிராக, அவர்கள் அறிவித்த திட்டங்களின் தோல்விகளுக்கு தோல்விகளுக்கு எதிராகத்தான் வாக்களித்து இருக்கிறார்கள் என்பது நன்கு புலனாகிறது.

(அடடே... நானும் ஒரு அழுக்குக் கோட்டு போட்டுக் கொண்டு தூர்தர்ஷன் பேட்டிகளில் உட்காரலாம் போலிருக்கிறதே?)

கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சிக்குக் கிட்டிய வெற்றி தென்னகத்தில் அவர்களுடைய வருகையைப் பதிவு செய்திருக்கிறது. ஆனால் இது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஒரு தீர்ப்பாகத்தான் எடுத்துக்கொள்ள முடிகிறதே தவிர, பாரதிய ஜனதா கட்சிக்கு ஏதோ முழு அங்கீகாரம் கிடைத்தது என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

கர்நாடகத் தேர்தல் வெற்றி அவர்களுக்குப் பாராளுமன்றத்தின் கதவுகளைத் திறந்து விடுமா என்று இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியாது.

தேவே கௌடா மற்றும் குமாரசாமி கோஷ்டிகள் செய்த அரசியல் துரோகத்துக்கு அடி கொடுத்திருக்கிறார்கள் மக்கள். அந்தக் கட்சிக்குக் கிடைத்த மிகக் குறைவான வாக்குகள் இவற்றை உறுதிப்படுத்துகின்றன.

இன்னொரு முக்கியமான விஷயம்.

எப்போதும் நாம் கல்யாண வீட்டில் கல்யாணம் பண்ணி வைக்கும் சாஸ்திரிகளை மறந்து விடுகிறோம்.

பொதுவாக வட மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் வன்முறை அதிகம் இருக்கும். Muscle Power அதிகம் பாவிக்கப்படும். தென்னகத்தில் நடக்கும் தேர்தல்களில் Muscle Power குறைந்து Money Power அதிகம் இருக்கும்.

Muscle Power காட்டுபவர்களைக் கூட நான்கு தட்டுத் தட்டி விழுக்காட்டலாம். Money Power காட்டுபவர்கள் கொஞ்சம் ஆபத்தான ஆசாமிகள். அவர்கள் எந்த எல்லை வரை வேண்டுமானாலும் போய் விளையாட்டுக் காட்டுவார்கள். அப்படிப்பட்ட விளையாட்டு வித்தகர்கள் தமிழகத்தைப் போலவே, கர்நாடகாவிலும் மிக அதிகம். Money Power காட்டி விளையாட்டுக் காட்டும் வித்தகர்களுக்கும் விளையாட்டுக்காட்டி இந்தத் தேர்தலை மிகவும் நேர்மையாகவும், திறமையாகவும் அருமையாகவும் நடத்திக் காட்டிய கோபால்சாமியும் அவருடைய அதிகாரிகளும் நம்முடைய பாராட்டுக்கும் தலைவணக்கங்களுக்கும் உரித்தானவர்கள்.


கர்நாடக மக்கள் தண்ணீர் தராத மஹாபாவிகளாக இருக்கலாம். ஒரு மோசமான பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம். மொழி வெறி மற்றும் இன வெறி பிடித்தவர்களாக இருக்கலாம். ஆனால் தேர்தலில் அவர்கள் புத்திசாலிகளாக வாக்களித்து இருக்கிறார்கள்.

ஒன்று இந்தத் தேர்தலில் பிரிவினை பேசும் வாட்டாள் நாகராஜ் போன்ற விருதாவான ஆட்களை அவர்கள் படுகேவலமாகத் தோற்கடித்து இருக்கிறார்கள்.

இரண்டாவது கர்நாடகாவில் தேர்தலில் நின்ற எல்லா திரைப்பட நடிகர்களையும் கட்சி வித்தியாசம் இல்லாமல் படுதோல்வி அடைய வைத்திருக்கிறார்கள். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

இந்த விஷயத்தில் மட்டும் தமிழகம் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

Friday, May 30, 2008

குழந்தைகளும் தேர்வுகளும்...

பிப்ரவரி மாத வடக்கு வாசல் இதழில், மேல்நிலை வகுப்புத் தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ள மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சில நல்ல அறிவுரைகளை வழங்கியிருந்தார் சனத் குமார். அது பெற்றோர்கள் பலருக்கும் பிடித்திருந்தது என்று சொன்னார்கள். மாணவர்களுக்குப் பிடித்திருக்குமா என்று தெரியாது.


இது ஒருவேளை ஒரு தற்செயலான விஷயமாகக் கூட இருக்கலாம். பல ஆங்கில நாளேடுகளில் பிப்ரவரி மாத இறுதி வாரத்தில் சுமார் அரைப்பக்கத்துக்கு பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தேர்வுக்குத் தயார் செய்து கொள்வதற்கான அறிவுரைகளும் மனநல நிபுணர்களிடம் பேட்டிகள், கட்டுரைகள், அறிவுரைகள் என்று தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அவை எல்லாமே மிகவும் அற்புதமான விஷயங்கள். மிகவும் தேவையானவை. ஆங்கில நாளேடுகளில் வந்த ஒட்டு மொத்த கட்டுரைகளில் சாராம்சமாக ஒரு விஷயம் மிகவும் பிரதானமாக இருந்தது.


அந்தக் கட்டுரைகளில் மாணவர்களுக்குச் சொன்னதை விடப் பெற்றோர்களுக்குத் தந்த அறிவுரைகள்தான் மிகவும் பிரதானமாக இருந்தன. நாமும்தான் நேரில் பார்க்கிறோமே, பிளஸ் டூ படிக்கும் மாணவ மாணவியருக்கு அவர்களுடைய பாடத் திட்டங்கள் இழைக்கும் கொடுமையை விட பெற்றோர்கள் அதிகமாகக் கொடுமை இழைக்கிறார்களோ என்று சில சமயங்களில் தோன்றும். சமீப ஆண்டுகளாக இது ஏகத்துக்கும் அதிகரித்து இருக்கிறது. சில சமயங்களில் நம்மைக் கவலை கொள்ளக் கூட வைக்கிறது.


இப்போது பிளஸ் டூ பரிட்சைகள் நடந்து கொண்டிருப்பதால் இதைப் பற்றிக் கொஞ்சம் அதிகமாகப் பேசுகிறோமோ என்று தோன்றுகிறது.


ஆனால் குழந்தைகள் மீதான கொடுமைகள் அவர்கள் நர்சரிப் பள்ளி செல்லும் பருவத்தில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது. அவர்கள் சுமக்கும் மூட்டைகள், வீட்டுப் பாடங்கள், அவர்களைப் போட்டிகளுக்குத் தயார் செய்தல், அவர்களுக்குப் பாட்டு வகுப்புக்கள், நடன வகுப்புக்கள், கராத்தே வகுப்புக்கள், அபாக்கஸ் வகுப்புக்கள், நீச்சல் பயிற்சி, குதிரை ஏறும் பயிற்சி, வேத வகுப்புக்கள், திருப்புகழ் வகுப்புக்கள், விஷ்ணு சஹஸ்ரநாம வகுப்புக்கள் இப்படி ஏகமாகப் பயிற்சிகள், வகுப்புக்கள். குழந்தைகளைத் தீயிலும், கயிற்றின் மேலும் தண்ணீரின் மேலும் நடக்கப் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பாததுதான் பாக்கி. அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் எல்லாம் ஆகவேண்டும். எல்லாவற்றிலும் முதலிடம் வேண்டும். துரதிருஷ்டவசமாக முதலிடம் என்பது ஒன்றுதான். அதை யாராவது ஒரு குழந்தைதான் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலிடத்தைப் பிரிக்க முடியாது.


அப்படி முதலிடம் வராத குழந்தையை உண்டு இல்லை என்று ஆக்கும் பெற்றோர்களைப் பார்த்து இருக்கிறேன். எனக்குத் தெரிந்து பஞ்சமா பாதகங்களில் ஒன்று, சிறு பிஞ்சுக் குழந்தைகளுக்கு இடையில் போட்டி வைக்கும் காரியம். முன்பு, சில வேளைகளில் தில்லியில் சில தமிழ் அமைப்புக்கள் குழந்தைகளுக்கு இடையே பாடல்கள் ஒப்பிக்கும் போட்டி போன்ற விஷயங்களுக்கு வலுக் கட்டாயமாக நடுவராக உட்கார வைத்து விடுவார்கள். வேண்டாம் என்று அதிகமாக மறுத்தால் அதை வேறுவகையாக எடுத்துக்கொள்ளும் அபாயம் இருப்பதால் வழக்கமாக ஒரு அசட்டுச் சிரிப்புடன் அதனை ஏற்றுக் கொண்டு விடுவேன். அந்தப் போட்டியில் குழந்தைகளை பாரதியாரின் பாடல்களைப் பாட வைத்தார்கள்.


நீங்களும் கவனித்து இருக்கலாம். பிள்ளையார் படத்தை யார் எப்படி எந்த வகையில் கோணலாகப் போட்டாலும் அது ஏதோ ஒரு வகையில் அழகாகவே தோன்றுகிற மாதிரி காட்சியளிக்கும். அதே போல, கோணல்மாணலாக ஒரு தலைப்பாகையைக் கட்டிக் கொண்டு திசைக்கு ஒன்றாக மீசையை வரைந்து கொண்டு நின்றாலும் பாரதி வேஷம் கட்டிக் கொண்ட குழந்தைகளை உடனே உச்சிமுகர்ந்து முத்தமிடத் தோன்றும். பாரதியின் பாடல்களை எந்த மோசமான பாடகர் அல்லது பாடகி எப்படிக் கண்றாவியாகக் கழுத்தை நெறித்துக் கொல்ல முயற்சித்தாலும் அந்தப் பாடல் நன்றாகவே இருப்பது போல இருக்கும். பாரதியார் பாடல்களுக்கு, ஒப்பனையால் ஒரு ஐம்பது வருடங்களைக் குறைத்துக் கொள்ள முயற்சிக்கிற நடனமணிகள் காமாசோமா என்று ஆடினாலும் அதுவும் மிக நன்றாகவே இருப்பது போல இருக்கும். இந்த நிலையில், குழந்தைகள் பாரதியின் பாடல்களைப் பாடினால் கேட்க வேண்டுமா? அதுவும். தலைநகரில் தமிழ்ச்சூழலில் அதிகம் வளராத குழந்தைகள். ஆரம்பப் பாடங்களைத் தமிழில் படிக்காத குழந்தைகள். அவர்கள் மிகவும் சிரமங்கள் எடுத்துக் கற்றுக் கொண்டு கணீரென்று முயற்சிப்பதைக் கேட்கும் போது உண்மையில் மெய் உருகும். மழலைக் குரல்களில் பாரதியின் பாடலைக் கேட்பது அதிசுகம். நதிக்கரையோரம் நீரோட்டத்தின் திசையுடன் சேர்ந்து மாலை வேளைகளில் நடந்து செல்வதைப் போன்ற சுகமான விஷயம் அது. இதில் போட்டிகள் வைத்து ஏன் அவர்களைக் கொடுமைப் படுத்த வேண்டும் என்று தோன்றும். பாடல் உச்சரிப்புக்கு எதற்கு அவர்களுக்குத் தனியாக மதிப்பெண்கள் வழங்க வேண்டும்? வயதான கிழங்கட்டைகளே “பாரத தேஷம் என்று பெயர் ஷொல்லுவார்” “”ஓம் ஷக்தி ஓம் ஷக்தி ஓம், ஷொல்லடி ஷிவஷக்தி” என்று மேடைக்கு மேடை பிய்த்து எறியும்போது குழந்தைகள் எப்படி உச்சரித்தால் என்ன? மழலைப் பிஞ்சுகள் பாரதியின் பாடலை எப்படி உச்சரித்தாலும் அதில் எங்கிருந்தோ ஒரு தனி அழகு கூடிவிடுகிறதே? அப்புறம் என்ன ஒரு இதுக்கு உச்சரிப்புக்கும் வெளிப்பாட்டுக்கும் மதிப்பெண்கள்?


இதில் உச்சகட்டக் கொடுமை என்னவென்றால், பரிசு பெறாத குழந்தைகள் வீட்டுக்குத் திரும்பும்போது அம்மாக்களும் அப்பாக்களும் அந்தக் குழந்தையைக் கரித்துக் கொட்டிக் கொண்டே இழுத்துச் செல்வார்கள். திக்கித் தடுமாறும் குழந்தைகளுக்கு அன்று பரிசு கிடைக்காது. ஆனால், அந்தக் குழந்தைகள் திக்கித் தடுமாறுவதும் ஒரு கவித்துவமான விஷயமாக ஏன் இந்த அமைப்பாளர்களுக்குத் தெரிய மாட்டேன் என்கிறது?நான் ஒரு அமைப்பு நடத்திய குழந்தைகளுக்கான பாரதியார் பாட்டுப் போட்டியின் போது சொல்லிக்கூட சொல்லி இருக்கிறேன். அதாவது 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்குப் போட்டி என்று எதுவும் வேண்டாம். கலந்து கொள்ளும் எல்லாக் குழந்தைகளுக்கும் ஏதாவது நினைவுப் பரிசு கொடுக்கலாமே என்று சொன்னேன். தமிழ் அமைப்புக்களின் சாஸ்திர சம்பிரதாய வழக்கப்படி இந்த ஆலோசனையை அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. நினைவுத் திறன், உச்சரிப்புத் திறன், வெளிப்பாட்டுத்திறன் என்று பிரித்துப் பிரித்து தலா 10 மதிப்பெண்கள் வழங்குமாறு நடுவர்களுக்கு நிபந்தனை விதித்து இருந்தார்கள். நான் எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லாவற்றுக்கும் தலா பத்து மதிப்பெண்கள் வழங்கினேன். அடுத்த ஆண்டுப் போட்டிகளில் இருந்து என்னை நடுவராக அழைப்பதை நிறுத்தி விட்டார்கள். எனக்கும் அது மிகப்பெரிய ஆசுவாசத்தைக் கொடுத்தது.


அடுத்து, குழந்தைகளை அவர்களுடைய வயதுக்கு மீறிப் பேச வைப்பது. இந்த வி‘யம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் இருந்தே தமிழ்த் திரைப்படங்களில் காலம் காலமாகத் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பது. வயதுக்கு மீறிய, நடை உடை பாவனைகளில் அவர்களைத் திணிப்பது. தோட்டத்தில் மலர்ந்த ஒரு ரோஜா மலரின் மீது துணி காயப்போடும் கிளிப்பைக் குத்தி வைப்பது போன்ற காரியம் இது. பெற்றோர்கள் குழந்தைகளைப் பேச்சுப் போட்டிக்குத் தயார் செய்வார்கள். அந்தக் குழந்தையை இயற்கையாகப் பேச அனுமதித்தால் அது தூள் கிளப்பி விட்டு வந்து விடும். அம்மாவோ அப்பாவோ அக்காவோ ஆசிரியரோ அல்லது பக்கத்து வீட்டு மாமாவோ அந்தக் குழந்தை போட்டியில் பேசுவதற்கான பேச்சைத் தயார் செய்வார்கள். இது முதல் கட்டம். இந்தக் கட்டத்தில் அந்தக் குழந்தையின் மன முதிர்ச்சி, அந்தப் பிஞ்சு மனம் உள்வாங்கக் கூடிய விஷயங்கள், அதன் கிரகிக்கும் சக்தி, வெளிப்பாட்டுக்கான ஒரு நேரிடையான உத்தி போன்றவற்றை சுத்தமாக உதாசீனப்படுத்துவார்கள். குழந்தைகள் உரக்கக் கத்த வேண்டும். பைத்தியம் பிடித்தது போலக் கைகால்களை உதறிப் பேசவேண்டும் என்பதை மிக முக்கியமாக சொல்லிக் கொடுப்பார்கள். இப்போது பெற்றோர்களின் வேலை மிகவும் சுலபமாகி விட்டது. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு ரூபங்களில் பல தமிழ்ச் சானல்களில் வரும் பட்டிமன்றங்களையும். அரட்டை அரங்கங்களையும் குழந்தைகளோடு சேர்ந்து பார்த்து இந்த நிகழ்ச்சிகளின் பேச்சாளர்கள் பேசுவது போன்ற போலியான பாவங்களும், தொனிகளும், அங்க அசைவுகளும் அந்தக் குழந்தைகளின் மனங்களில் ஏற்றப்படும். அதே பாவனைகளில்.தொலைக்காட்சிகளில் இந்த நிகழ்ச்சிகளை நீங்கள் திறந்த மனத்துடன் என்றாவது பாருங்கள். அதில் கலந்து கொண்டு பேசுபவர்களின் கண்களையும் பாவனைகளையும் சற்று உற்றுப் பாருங்கள். அவற்றில் எத்தனை பொய்மைகள் கலந்து இருக்கின்றன என்று தெரியும். சில நேரங்களில், இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள், நடத்துபவர்கள், பங்கேற்பவர்கள் வெளிக்காட்டும் பாவனைகள், வெடிக்கும் சிரிப்பு, மூக்கு சிந்தி அழுவது இவையெல்லாம் ஏதோ ஒரு மனநல விடுதிக்குச் சென்று மனநலம் பீடித்தவர்களை நாம் வேடிக்கை பார்ப்பது போன்ற ஒரு தோற்றத்தை நமக்கு அவை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது.

இதைப் பற்றி ஏதாவது விமர்சனங்களை முன் வைத்தால் நம்முடைய சமூக அக்கறைகள் பற்றிய கேள்விகளை மிக உரக்க எழுப்புவார்கள். வெறும் கூச்சலும் அழுகையும் மட்டுமே ஒருவருடைய சமூக அக்கறையை உறுதிப்படுத்தாது என்று இவர்களுக்கு யார் சொல்வது? இந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மனநோய் பீடித்த கண்றாவிகளை, அந்த பாவனைகளை, அந்தத் தொனிகளை, அந்த அங்கச் சேஷ்டைகளை நம் குழந்தைகளின் மனங்களில் ஏற்றி, அதே போன்ற சிந்தனா முறைகளை உட்புகுத்தி அவர்களை மேடை ஏற்றினால், வாழ்நாளெல்லாம் அவர்களுடைய ரசனை, மதிப்பீடுகள் வேறு எந்த வகையில் அமையும்? எந்த விதமான அரசியல் மற்றும் சமுதாய விழிப்புணர்ச்சி அவர்களுக்குள் காரியமாற்றும்? வயதாகி வளர்ந்து ஒரு மூன்றாம் தர நடிகனின் கட் அவுட்டுக்குப் பால் அபிஷேகம் செய்யாமல் அவனால் வேறு என்ன செய்ய முடியும்? எந்த சமூக அக்கறையும் அரசியல் ஞானமும் இல்லாதவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டாடுவதைத் தவிர அவனால் என்ன செய்ய முடியும்? எனவே, ஊடகங்கள் வழியாகவும் நாம் குழந்தைகளின் மீது அறிவு ரீதியான வன்முறைகளைப் பிரயோகித்து வருகிறோம். நம்மிடம் உள்ள மூர்க்கங்களையும் மூடத்தனங்களையும் அவர்கள் மீது ஏற்றி நம்முடைய பிம்பங்களாக மட்டுமே அவர்களைக் கொண்டுவர முயற்சிக்கிறோம். எது எப்படியாக இருந்தாலும் அவர்கள் பரீட்சையில் மதிப்பெண்கள் மட்டும் பெற்றுக்கொண்டு வந்தால் போதும். அசட்டுத்தனமான பேச்சுப் போட்டிகளிலும் படு அபத்தமான பட்டிமன்றங்களிலும் கலந்து கொண்டு தொண்டை கிழியக் கத்தியாக வேண்டும். ஏதாவது ஒரு செங்கல்லையாவது பரிசாக வீட்டுக்குக் கொண்டு வரவேண்டும். இதற்காக அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் இல்லையா?வடக்கு வாசல் மார்ச் 2008 இதழில் வெளியான கட்டுரை


Wednesday, May 28, 2008

கொண்டாட்டங்களும் தவிப்பும்...

பரிசல் ஏறியதால் பதவிக்கு ஏறிய மாவீரர்

கர்நாடகத்தில் காங்கிரசும் குமாரசாமியும் எவ்வித உட்டாலங்கடி வேலைகளையும் முயற்சிக்காததால் எடியூரப்பா தலைமையில்தான் அரசு அமையும் என்று உறுதிப்பட்டிருக்கிறது. கர்நாடக மாநில மக்களை விட தமிழகத்தின் எல்லைப் பகுதியான தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் கர்நாடகாவில் அமையப்போகும் ஆட்சி குறித்து மிகவும் ஆவலாக இருக்கிறார்கள்.

தமிழக முதல்வரும் கர்நாடகாவில் புதிய ஆட்சி பொறுப்பேற்கும் வரை ஒகேனக்கல் திட்டத்தை ஒத்திப் போடலாம் என்று அறிவித்தார். அப்போது ஒகேனக்கல் திட்டத்தை எதிர்த்து பரிசல் ஏறி வந்து ரகளையில் ஈடுபட்டவரே இப்போது முதல்வராகப் பொறுப்பேற்கிறார்.

தேர்தலை எதிர்பார்த்து இருந்த அந்த நேரத்தில் எடியூரப்பா அப்படி செய்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது. முதல்வராக இப்போது என்ன செய்யப்போகிறார் என்று பார்க்க வேண்டும். தமிழக பாஜக வினர் இந்த விஷயத்தில் என்ன மாதிரியான நிலைப்பாடு எடுப்பார்கள் என்பது அனைவராலும் கவனிக்கப்படக் கூடிய விஷயமாக இருக்கும்.

ஒகேனக்கல் திட்டடத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஒத்திவைத்த கெடு அநேகமாக முடிவுக்கு வந்து விட்டது.

இப்போது கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா நடந்து கொள்வதைப் பொறுத்து தமிழக அரசுக்கும் நெருக்கடிகள் அமையும். ஜெயலலிதா மற்றும் எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில் தமிழக அரசுக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் எதிராக மேடையை துவம்சம் செய்வதற்கான விஷயங்கள் கிடைக்கும். அவர்களுக்குக் கொண்டாட்டம்தான். கர்நாடகாவைப் பொறுத்த அளவில், எடியூரப்பா இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால் அங்குள்ள எதிர்க்கட்சிகள் விஷயத்தைக் கையில் எடுத்து ரகளையைத் துவங்கி விடும். அவர்களுக்கும் எடுத்த எடுப்பில் ஒரு எதிர்ப்புக்கான விஷயம் கையில் கிடைத்த கொண்டாட்டம்தான்.

இந்த விஷயத்தை ஒரு பொதுநோக்குடன் அணுகாது, அரசியல் நோக்குடன் அணுகினால் இதுவும் காவிரியைப் போலவே பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் இழுத்துக் கொண்டே போகும் அபாயம் இருக்கிறது.

இந்த அரசியல் விளையாட்டினால் கர்நாடகத்தில் இப்போதைக்கு எதிர்க் கட்சி அணியில் அமரப்போகும் காங்கிரசுக்கும், குமாரசாமிக்கும் தமிழகத்தில் ஜெயலலிதா வகையறாக்களுக்கும் கொண்டாட்டம்தான்.

ஆனால் தவிக்கப்போவது என்னவோ, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அப்பாவி மக்கள்தான்.

Friday, May 16, 2008

ஒரு பாராட்டு விழா - ஒரு கச்சேரி - ஒரு கவிதை
தி சண்டே இந்தியன் பதிப்பு ஆசிரியர் அசோகன் மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார். தில்லித் தமிழ்ச் சங்கத்தை விட்டு எப்போது வெளியே வரப்போகிறீர்கள் என்று.

நான் என்ன செய்யட்டும்? கழுதை கெட்டால் குட்டிச் சுவர். அதிகம் தமிழ் மற்றும் தமிழர்கள் தொடர்பான நிகழ்வுகள் தலைநகரில் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தான் நடக்கின்றன. தமிழர்களின் பொழுதுபோக்கு அல்லது கலை இலக்கியம் தொடர்பான நிகழ்விடம் இப்போதைக்கு தில்லியில் தமிழ்ச் சங்கம் மட்டும்தான். இனி மண்டி ஹவுசில் நடக்கும் மற்ற நிகழ்வுகளையும் எழுதலாம் என்று இருக்கிறேன். ஆனால் வார இறுதிகளில், தில்லித் தமிழ்ச் சங்கத்தில் யாராவது ஒருத்தர் தெரிந்தவர் அல்லது வேண்டியவர் அல்லது தெரிந்தவருக்குத் தெரிந்தவர் அல்லது வேண்டியவருக்கு வேண்டியவர் ஏதாவது நிகழ்ச்சியைத் தருகிறார். கண்டிப்பாகப் போயாக வேண்டியிருக்கிறது.

பட்டிமன்றங்கள் அல்லது கவியரங்கங்களுக்கு மட்டும் பொய் சொல்லித் தப்பித்து விடுகிறேன்.


சரி. அசோகனுக்காக தலைநகர் கடந்து ஒரு நிகழ்வு மீதான பதிவு.

பி.சுசீலா, சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் பத்ம விருது பெற்ற சிலருக்கு கடந்த 12 மே 2008 அன்று நல்லி குப்புசாமி செட்டியார் ஒரு மாலை விருந்தும் பாராட்டு விழாவும் உட்லாண்ட்ஸ் ஹோட்டல் வளாகத்தில் மிகவும் விமர்சையாக ஏற்பாடு செய்திருந்தார். நானும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் (பாருங்கள். நான் என்ன செய்வது?) பொதுச் செயலர் முகுந்தனும் கலந்து கொண்டோம்.நிகழ்ச்சிக்கு நல்ல கூட்டம். லேனா தமிழ்வாணன், வலையப்பட்டி சுப்பிரமணியம், ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். விழா தொடக்கத்தில் நித்யஸ்ரீ பாடிக் கொண்டிருந்தார். ஏதோ கல்யாண ரிசப்ஷன் போன்று இருந்தது. நித்யஸ்ரீ வழக்கப்படி அற்புதமாகப் பாடிக்கொண்டிருந்தார். ஆனால் கேட்பதற்கு யாருக்கும் நேரம் இல்லை. ரொம்ப நாட்கள் கழித்து சந்திப்பவர்களிடம் நாற்காலியை இழுத்துப்போட்டு சத்தம் போட்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

தில்லியில் நிசப்தமான சூழலில் கச்சேரிகள் கேட்டு இது சற்றுப் புதுமையாக இருந்தது.
பாராட்டு விழா ரத்ன சுருக்கமாக முடிந்தது. விருது பெற்றவர்களைச் சிறப்பித் கையோடு நல்லி செட்டியார் கலைஞர்களைப் பாராட்டி சில வார்த்தைகள் பேசினார். அவருடைய உரையுடன் விழா முடிவடைந்தது. சிவசிதம்பரம் அன்று இரவே தில்லிக்கு விமானத்தைப் பிடிக்க வேண்டியிருந்ததால் அவசர அவசரமாகக் கிளம்பினார். இரவு நல்ல விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் செட்டியார்.
ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருது பெற்ற கலைஞர்களை அழைத்து சிறப்பிக்கிறார் செட்டியார். தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் விருதுகள் வழங்கும் விழாவில் ஒரு கையேட்டினைத் தருகிறார்கள். அந்தக் கையேட்டில் விருது பெற்றவர்களின் புகைப்படமும் அவர்களைப் பற்றிய குறிப்புக்களும் இடம் பெறுகின்றன. அந்தக் கையேட்டினை சென்னைக்கு எடுத்து வந்து அதில் இருந்து வேண்டிய பக்கங்களை நகல் எடுத்து அழகான சிறிய கையேடாக அனைவருக்கும் வழங்கினார்கள் நல்லி நிறுவனத்தினர். இது மிகவும் அற்புதமான விஷயம்.

சரி. மீண்டும் நித்யஸ்ரீயின் கச்சேரிக்கு வருவோம்.கீழே யாருக்கும் பொறுமையோ நேரமோ இல்லாது இரைச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள் என்றால் மேடையில் மிகவும் அழகான ஒரு கவிதை அரங்கேறிக்கொண்டிருந்தது.

நித்யஸ்ரீயின் இரு பெண் குழந்தைகள். நித்யஸ்ரீ பாடும்போது இரண்டும் மேடையிலேயே இருந்தன. ஒரு குழந்தை அம்மா பாடுவதையே கண்கொட்டாமல் மிருதங்கம் வாசித்த ஸ்கந்தன் சுப்பிரமணியன் பின்னால் உட்கார்ந்தபடி மிகவும் சிரத்தையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. இன்னொன்று விளையாட்டுச் சாமான்களை வைத்துக் கொண்டு நித்யஸ்ரீயின் இன்னொரு பக்கம் உட்கார்ந்து கொண்டு சிரத்தையாக விளையாடிக் கொண்டிருந்தது. அம்மாவையோ அல்லது வாசிப்பவர்களையோ எந்தத் தொந்தரவும் செய்யவில்லை. தனக்கான ஒரு உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தது. உண்மையிலேயே இது பார்ப்பதற்கு ஒரு கவிதையை வாசிப்பது போல இருந்தது.

நித்யஸ்ரீயும் எவ்வகையிலும் கவனம் சிதறாது பாடிக்கொண்டிருந்தார்.

பார்ப்பதற்கே மிகவும் நன்றாக இருந்தது.

சில புகைப்படங்களை இங்கே பதிந்திருக்கிறேன். உண்மையிலேயே ஒரு கவிதை போல இருக்கிறது இல்லையா?
Wednesday, May 14, 2008

ஜெய்ப்பூர் கோரதாண்டவம் - வலுப்படும் ஒற்றுமை
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஹைதராபாத் நகரத்தில் நிகழ்ந்தது தொடர் குண்டு வெடிப்பு. அதன்பிறகு அக்டோபர் மாதத்தில் ஜெய்ப்பூரில். இப்போது மீண்டும் ஜெய்ப்பூரில் அரங்கேற்றியிருக்கிறார்கள். இது தொடர்பாக சில சந்தேகக் கைதுகளும் நிகழ்ந்துள்ளன. இதுவரை (அதாவது இந்த வலைப்பூ பதிவேற்றம் செய்யும் வரை நான்கு பேரை விசாரணைக்காக கைது செய்துள்ளது ஜெய்ப்பூர் காவல் துறை.

நேற்று (13 மே 2008) ஜெய்ப்பூரில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பின் பின்னணியாக ஒரு புதிய கோணத்திலும் ஒரு பார்வையை வைத்திருக்கிறார்கள் சில செய்தியாளர்கள். அவர்கள் சொல்வதாவது, இந்தியா பொக்ரானில் அணுகுண்டு சோதனை நிகழ்த்திப் பத்தாண்டு நிறைவு பெறுகிறது. இது பாகிஸ்தானை ஏகத்துக்கும் உசுப்பி விட்ட ஒரு நிகழ்வு. நம்முடைய வெளியுறவுத் துறை அமைச்சர் விரைவில் பாகிஸ்தான் செல்ல இருக்கிறார். இதுபோன்ற நேரத்தில் இப்படி ஒரு அசம்பாவிதத்தைத் தோற்றுவிப்பது இருநாடுகளுக்கிடையிலான உறவுகள் சீர்படுவதில் சில பின்னடைவுகளை ஏற்படுத்தலாம் என்கிற நோக்கில் சில இசுலாமிய பயங்கரவாத அமைப்புக்கள் இதை செய்திருக்கலாம் என்றும் ஒரு சொல்கிறார்கள். இன்னொரு பக்கம், இசுலாமிய அமைப்புக்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்த சில இந்து அமைப்புக்களே இதை செய்திருக்கலாம் என்றும் வாதிக்கிறார்கள். இந்தத் தொடர் குண்டு வெடிப்புக்கள் அதிகம் சேதம் விளைவிக்காது வேகம் குறைந்து இருப்பதையும் தங்கள் வாதத்துக்கு வலு சேர்ப்பது என்று சொல்கிறார்கள் இவர்கள். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஜெய்ப்பூரில் நடக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் கவலையை அதிகரிக்க வைக்கிறது.

ஜெய்ப்பூருக்கு அருகாமை நகரங்களான ஆக்ரா, தில்லி போன்ற நகரங்களில் காவல் ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதில் மிகவும் ஆறுதல் தரும் விஷயம் என்னவென்றால், கோவில் வளாகத்திலேயே குண்டு வெடித்தும் ஜெய்ப்பூர் மக்கள் எவ்வித வகுப்புக் கலவரங்களையும் ஏற்படுத்தாது அமைதி காத்ததுதான். வேறு சில ஊர்களில் இது நிகழ்ந்திருந்தால் குறிப்பிட்ட சில சமூகத்தினர் தாக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்காது தங்கள் சோகங்களை மனதில் ஏந்தி உடனடியாக மீட்புப்பணிகளிலும் காயமûடைந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்ப்பதிலும் எல்லோரும் அதீதமான கவனம் செலுத்தியிருக்கிறார்கள். காவல் துறையும் நகரில் வதந்திகள் ஏதும் பரவாது தடுக்கும் வகையில் அனைத்து மொபைல் இணைப்புக்களையும் உடனடியாக நிறுத்தி வைத்திருக்கிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த அரைமணி நேரத்துக்குள் எல்லா மொபைல் இணைப்புக்களும் நிறுத்தி வைக்கப்பட்டதனால் எவ்வித வதந்திகளும் வெளியில் பரவாத வண்ணம் தடுக்கப்பட்டிருக்கிறது. காயமடைந்தோர் சேர்க்கப்பட்ட சவாய் மான்சிங் மருத்துவமனையின் மருத்துவர்களும் ஊழியர்களும் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறார்கள்.

வெளிச் சக்திகள் நம்மைச் சூழ்ந்து இடர் விளைக்கும்போது நமக்கு ஒரு பிரத்யேகமான வல்லமையைத் தருகிறாள் அன்னை. இதனை ஒவ்வொரு தாக்குதல்களின் போதும் இந்தியர்களாகிய நாம் நிரூபித்து வருகிறோம் என்பதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது.

Tuesday, May 13, 2008

நெகிழ்வுடன் துரத்தும் நினைவுகள்... சுப்புடு

இந்த மார்ச்- ஏப்ரல் மாதங்களின் அனைத்து வார இறுதிகளிலும் தலைநகரெங்கும் கச்சேரிகளும் நடன நிகழ்வுகளும் அமர்க்களப்பட்டு வருகின்றன. தலைநகரெங்கும் கலைசார் செயல்பாடுகள் உச்சகட்டத்தில் செயல்படும் மாதங்கள் இவை. இந்த அற்புதமான நேரத்தில் பெரியவர் சுப்புடு குறித்த நினைவலைகள் அடிக்கடி நெஞ்சில் நிழலாடுவதைத் தவிர்க்க முடியவில்லை. பல நேரங்களில் அவருடைய நினைவு மனதில் கிளர்ந்து நெகிழவைத்துத் துரத்தி அடிக்கிறது. வெகுசமீபத்தில் ஹரிதாஸ்கிரி சுவாமிகளுடைய நாமசங்கீர்த்தன நிகழ்ச்சியின் குறுவட்டு பார்க்க நேர்ந்தது. ஹரிதாஸ்கிரி சுவாமிகளின் ரசானுபவம் தோய்ந்த குரலும் பாவமும் மனப்பரப்பில் சுழன்று சுழன்று அடித்த அதே வேளையில் அந்த நிகழ்ச்சியில் மனம் தோய்ந்து ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருக்கும் சுப்புடுவின் கார்வைகள் மிதக்கும் வாசிப்பும் லயிப்பும் மனதில் சுகாம்ருத லாகிரியை உண்டுபண்ணியது. மனது மயங்கி நெகிழ்ந்து சுருண்ட நேரத்தில் கர்நாடக சங்கீதசபா மகாதேவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ""இன்னிக்கு சுப்புடு மாமாவோட நினைவுநாள் தெரியுமோ?''


"இதோ உனக்கு நான் அளித்த வரம் என்று இறைவன், பெரியவரின் நெருங்கிய நட்பை வரமாகக் கொடையளித்த குறைந்த ஆண்டுகளிலேயே நினைவுகளை மட்டும் நெஞ்சினில் தேங்கவைத்து இதுபோதும் உனக்கு என்று ஓரிடத்தில் உளியால் அடிப்பது போல, மரண அடியாக அடித்து எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.


எந்தக் கடுங்குளிரிலும் தன்னுடைய மஃப்ளரை ஒருமாதிரி, காதைச் சுற்றி விசித்திரமாகச் சுற்றிக்கட்டி எங்காவது ஏதாவது ஒரு கச்சேரியில் ஆஜராகி விடுவார். சுப்புடு, கச்சேரிகளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு போவதைக் காணக் கண்கோடி வேண்டும். உடல்நிலை மிகவும் தளர்ந்த பின் அவரைக் கச்சேரிகளுக்கு அனுப்பி வைப்பதில் அவ்வளவாக மகிழ்ச்சியைக் காட்டிக் கொள்ள மாட்டார் மாமி. முடிந்த வரை அவரைத் தடுக்கப் பார்ப்பார். நேரில் செ-ன்று யார் அழைத்தாலும் அந்தக் கச்சேரிக்குப் போயே ஆகவேண்டும் என்று குழந்தையைப் போல மாமியிடம் அடம் பிடிப்பார்.


மாமியை சரி செய்து கச்சேரிகளுக்குக் கிளம்புவதில் அசாத்தியமான ஒரு வகைத் தந்திரத்தைக் கையாளுவார் சுப்புடு. வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு பூங்காவுக்கு சரியாக மாலை 4.30 மணிக்குத் தவறாது நடக்கப் போய்விடுவார். அநேகமாக நடைமுடித்து வீடு திரும்பும் அந்த இடைப்பட்ட நேரத்தை எனக்கான வருகை நேரமாக இருக்குமாறு பார்த்துக் கொள்வார். இந்த இடைப்பட்ட நேரத்தில்தான் நான் அவருக்கு வாங்கிச் செல்லும் வாசனைப் பாக்கு மாமிக்குத் தெரியாமல் கைமாறும். அவருடைய உடல்நிலை முழுக்கத் தளர்வடையத் துவங்கிய இறுதிக் கட்டங்களின் முன்பகுதியில், அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வேண்டுமென்றே வாங்கிச் செல்லாமல் மறந்து விட்டதைப் போல நடித்துத் தப்பிக்க முயன்றாலும், சாலையின் ஓரத்தில் ஒதுங்கி நின்றுகொண்டு, ""நான் இங்கே நிக்கறேன். நிமிஷத்துலே ஓடிப்போய் வாங்கி வந்துடு'' என்று பிடிவாதமாக நிற்பார். நானும் ஓட்டமாக ஓடுவதைப்போல அவர் முன்னால் வாங்கப் போவது போல நடித்துக் கொஞ்ச நேரத்துக்குப் பின், ""அந்தக் கடையிலே தீர்ந்துடுச்சாம். போறப்போ வேறே எங்காவது வாங்கிக்கலாம்'' என்று சொன்னால், ஒன்றும் சொல்லாமல் என்னுடன் வீட்டுக்கு நடக்கத் துவங்குவார். ஒன்றும் பேசமாட்டார். கண்டிப்பாக உள்ளுக்குள் ஏதாவது ஒரு வசவு என்மீது எறியப்பட்டிருக்கும். ஒரு எதிரியின் மீது அதிரடித் தாக்குதலைத் துவங்க ஒத்திகை செய்து கொள்வதைப் போன்ற பாவனையில் சற்று ஒதுங்கியே நடப்பார். நாம் ஏதாவது பேச்சுக்கொடுத்தாலும் ரொம்பவும் யோசிப்பதைப் போல ஒற்றை விரலால் வலப்பொட்டில் லேசாகத் தட்டிக் கொண்டே நடப்பார். அவர் வேண்டுமென்றே ஒதுக்குகிறார் என்பது தெளிவாகத் தெரியும். மிட்டாய் வாங்கிக் கொடுக்க மறுக்கும்போது குழந்தை காட்டும் பாவனைகள் அவருடைய நடவடிக்கைகளில் இருக்கும். கோபங்களும் தாபங்களும் இருக்கும்.


அப்போதெல்லாம் எனக்கும் ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொள்ள வேண்டும். ""சரி. நீங்க போயிண்டிருங்கோ. இன்னொரு கடையிலே மசாலா சுபாரி கிடைக்குதான்னு பார்த்துட்டு வர்றேன்'' என்று சொல்லி எதிர்த் திசையில் நடக்கத் துவங்குவேன்.


நெற்றிப் பொட்டில் விரலால் தட்டுவதை நிறுத்தி, ""ஒனக்குப் பொகை ஊதணும். போய்த் தொலை. சீக்கிரமா வந்து சேரு'' என்று வீட்டை நோக்கி நடக்கத் துவங்குவார்.


ஓமகுண்டத்தை முடித்து வீட்டுக்குத் திரும்பிப் போனால் அங்கு பெரிய களேபரம் நடந்து கொண்டிருக்கும். ஏதோ ஒரு போருக்குக் கிளம்பிச் செல்லுவது போல வேண்டுமென்றே நேரமாகிவிட்டது என்று பரபரப்புக் காட்டுவார். இவர் காட்டும் பரபரப்பில் மாமிக்கு ஒன்றும் ஓடாது. அந்த ஒன்றும் ஓடாத மனநிலையில் இவர் கச்சேரிக்குப் போவதைத் தடுக்க வேண்டும் என்று மாமி போட்டு வைத்திருந்த திட்டங்கள் செயலிழக்கத் துவங்கும். மாமா வெளிக்கிளம்பத் தயார் செய்யும் வேலைகளில் தன்னிச்சையாக இயங்கத் துவங்குவார் மாமி.


ஒரு சிறுகுழந்தையை நர்சரிப் பள்ளிக்கு அனுப்பி வைப்பது போல சகல ஜாக்கிரதையாக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து எடுத்துக் கொடுத்துக் கொண்டிருப்பார் மாமி. அதற்குள் ஏதாவது தொலைபேசி அழைப்பு அவருக்கு வந்திருக்கும். இல்லையென்றால் எதையோ நினைத்தது போல, தொலைபேசியில் யாரையாவது அழைத்து எதையாவது பேசத் துவங்குவார். யாருடைய எண்ணையும் எழுதி வைத்துத் தேடிப் பார்த்துத் தொலைபேசியில் அழைத்ததை நான் பார்த்தது கிடையாது. நல்லி செட்டியாரா, நடராஜனா அல்லது ஏதாவது உள்ளூர் நண்பர்களா அல்லது எதிரிகளா... எல்லோருடைய எண்களும் அவருடைய மூளைப் பரப்பில் இருந்து நழுவி விரல் நுனி வழியாக வழிந்து இறங்குவதைப் போன்ற லாவகத்துடன் எண்களைச் சுழற்றிப் பேசத் துவங்குவார். பெயருக்கு ஏதாவது ஒரு சட்டையை மாற்றிக்கொண்டு மாமி எதிரில் நிற்பார். அவரைக் கடிந்து கொண்டு வேறு சலவை செய்த சட்டையை எடுத்து வருவார் மாமி. சட்டையில் எங்காவது காணப்படும் சின்ன சுருக்கங்களைக் கூடக் கையால் நீவி நீவி சரி செய்யத் துவங்குவார் மாமி. மடிந்து கிடக்கும் காலரைச் சரி செய்து விடுவார் நேரம் கடப்பதை அவருக்கு நினைவூட்டிக் கிளப்பி விடுவார் மாமி. வாயைத் துடைத்து, சட்டையில் கைக்குட்டையைக் குத்திவிடுவது ஒன்றுதான் பாக்கி. மாமியிடம் மணிக்கட்டுப் பித்தான்களைப் போடச்சொல்லிக் கைகளை முன்னே நீட்டுவார் பெரியவர். நம்மைப் பார்த்து, பொக்கை வாயை விரியத் திறந்து சிரித்துக் கண்ணடிப்பார்.


"கச்சேரி முடிஞ்சி ஆத்துலே கொண்டுவந்து விட்டுத்தானே போவே?'' என்று கேட்பார் மாமி. ""கண்டிப்பா மாமி'' என்று நான் சொல்லும் இடைப்பட்ட மிகச் சிறிய இடைவெளியில் எங்கோ ஒரு பிரத்யேகமான இடத்தில் யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைத்திருக்கும் ஒரு வாசனைப் பாக்கு பொட்டணத்தை சடாரென்று ஒரு நொடியில் இடுப்பில் வேஷ்டி மடிப்பில் செருகிக்கொண்டு விடுவார் பெரியவர். சில சமயங்களில் மாமியின் கண்ணெதிரிலேயே இது நடக்கும். ஆனால் கண் இமைக்கும் வேகத்தில் கைமாற்றும் அவருடைய லாவகத்தினால் பொதுவாக மாமியின் பார்வையில் படாமலேயே காரியம் நிகழ்ந்து விடும். குழந்தைத் தனமான புன்னகையோடு வீட்டை விட்டு இறங்குவார். வீட்டின் கடைசிப் படியில் கால் வைத்ததும் சடாரென்று ஒரு ஓரிரு பாக்குத் துணுக்குகள் அந்த பொக்கை வாய்க்குள் சென்றடையும். எல்லாமே இமைக்கும் நேரம்தான். மாமிக்கு வயதாக வயதாக வீட்டிலேயே கொஞ்சம் கொஞ்சமாக முடங்கிப்போனார். அதற்கு முன்னர் முக்கியமான கச்சேரிகளுக்கு எல்லாம் பெரியவருடன் கிளம்பி விடுவார். ஏதாவது ஒரு உரிமையில் பெரியவர் யாரிடமாவது அசாத்தியமான ஜோக் எதையாவது அடிக்கும்போது யாராவது சுப்புடுவின் மடியிலேயே உட்கார்ந்து இருந்தால் கூட யாருக்கும் கேட்காத வண்ணம் பெரியவரின் காதினுள் ஒரு சிறு கண்டனத்தை அனுப்புவார் மாமி. மாமா பெட்டிப் பாம்பாக அடங்கிப்போவார். அல்லது நம்மை எதிலாவது இழுத்து விட்டு ஓடப்பார்ப்பார். சடாரென்று ஏதாவது பேச்சை மாற்றுவார்.


அதே போல, நிகழ்ச்சியின் இடைவெளியில் ஏதாவது பெரிய மனிதர்கள் இருந்தால், அவர்களிடம் ஏதாவது ஒரு ஜோக்கைத் தூக்கிப் போடுவார் சுப்புடு. அந்தப் பெரிய மனிதர் இவருடைய ஜோக்குக்கு சிரிக்காமல் வேறு எதையாவது பேச ஆரம்பித்தால் ஒரு மாதிரி பதட்டப் படத் துவங்கி விடுவார். பெரிய மனிதர் அந்தப் பக்கம் நகர்ந்ததும், ""ஒரு நல்ல ஜோக்கை இன்னிக்குக் கல்லைக் கட்டிக் கிணத்துலே போட்டுட்டேன் இல்லையா?'' என்று நம்மிடம் சிரித்துக்கொண்டே கேட்பார்.


ஏதாவது ஒரு கலையரங்கில் எங்காவது ஒரு மூலையில் ஒருவிதமான தியானநிலையில் கண்களை மூடி, பொக்கை வாயை மென்று கொண்டே, தலையில் ஒற்றை விரலால் தாளம் போட்டுக்கொண்டு...அந்த ஆத்மா தலைநகரின் ஏதாவது ஒரு கலையரங்கில் எங்காவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு பாட்டைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கும்.தலைநகரில், எங்கேனும் பாட்டுக் கேட்கப் போகும்போது அல்லது நடனம் பார்க்கப் போதெல்லாம் சுப்புடு பற்றி நெகிழ்வுடன் துரத்தும் நினைவுகளைத் தவிர்க்க முடியவில்லை.
வடக்கு வாசல் ஏப்ரல் 2008 இதழில் வெளிவந்த கட்டுரை

Sunday, May 11, 2008

பத்ம விருதுகளும் பாராட்டு விழாவும்...

நேற்று (10 மே 2008) குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கடந்த வாரம் 05 மே 2008 அன்று சில பேருக்குக் கொடுக்கப்பட்டது. மற்றவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.

இந்த விழாவுக்கு அழைப்பிதழ்கள் வழங்கும் பணியை உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவு கவனித்து கொள்கிறது. அவர்கள் விருது பெற்றவர்கள் பரிந்து உரைப்பவர்கள் (ஒவ்வொரு விருது பெற்றவருக்கும் தலா இரண்டு அழைப்பிதழ்கள் மட்டும்). மேலும் வாங்க வேண்டுமென்றால் அவரவர்கள் பெற்றுள்ள பரிச்சயங்கள், பரிந்துரைகளின் அடிப்படையில் ஓரிரண்டு அழைப்பிதழ்கள் கிடைக்கும். இந்தப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளும் அலுவலர்களும் இந்தப் பத்து நாட்களில் அடிக்கும் பந்தா தாங்காது. பணிச்சுமை ஒருபுறம் இருந்தாலும் இந்தப் பத்து நாட்களும் அவர்கள் யாருடைய வணக்கங்களுக்கும் பதில் சொல்ல மாட்டார்கள். இந்த உலகமே தங்களைத் தொந்தரவு செய்வதற்காக மட்டுமே இயங்குகிறது என்கிற பாவனையில் கொஞ்ச நாட்களுக்குச் சுற்றிக் கொண்டிருப்பார்கள். இருபத்தைந்து ஆண்டுகள் உள்துறை அமைச்சகத்தில் வேலை செய்தும் என்னுடைய மனைவி இப்போதும் அங்கே பணியாற்றிக் கொண்டிருக்கும்போதும், சென்னையில் இருந்து வந்த சில நண்பர்கள் அழைப்பிதழ்கள் கேட்டார்கள் என்று அணுகிய போது புன்சிரிப்புடன் தங்கள் இயலாமையைத் தெரிவித்தார்கள்.

ஆனால் அவர்களிடமிருந்து அழைப்பிதழ்கள் பெற்றுச் செல்கிறவர்களைக் கண்டால் எந்த அடிப்படையில் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் என்ற கேள்வி நம்மைக் குடைந்து கொண்டே இருக்கும். இதற்கெல்லாம் விடை கிடைப்பது மிகவும் அரிதான காரியம்.

என்னைக் கேட்டால் இதுபோன்ற விழாக்களுக்குச் செல்லாமல் தவிர்ப்பது பல அசௌகர்யங்களில் இருந்து நம்மை விலக்கி வைக்கும். பாதுகாப்பு ஏற்பாடுகள் இறுக இறுக இது போன்ற விழாக்களுக்கு செல்லாமல் தவிர்ப்பது மிகவும் நலம். நம்முடைய அத்திம்பேர் அல்லது மச்சினன் யாராவது விருது வாங்கும்போது மட்டும் சென்றால் போதும்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயலர் முகுந்தன் மிகவும் பலவந்தமாக வற்புறுத்தவே, எதற்கும் இருக்கட்டுமே என்று வடக்கு வாசல் லெட்டர் பேடில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைப்பிதழுக்கான ஒரு வேண்டுகோளை தொலைநகலில் அனுப்பி வைத்தேன். மறுநாளே, நானே எதிர்பாராத வண்ணம் அங்கிருந்து தொலைபேசி வந்தது. ஆசிரியர் ஒருவருக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்ப முடியும் என்று யாரோ பேசினார்கள். சிறிது நேரம் கழித்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்து வாங்கிச் செல்லுங்கள் என்று இன்னொரு தொலைபேசி வந்தது.

அன்று விருது வாங்கியவர்களில் சீர்காழி சிவசிதம்பரம் மட்டுமே எனக்கு நன்கு அறிந்தவர். மற்றபடி, பி.சுசீலா, விசுவநாதன் ஆனந்த், மனோஜ் நைட் ஷ்யாமளன் ஆகியோரை எனக்கு மட்டுமே நன்கு தெரியும். அவர்களுக்கு என்னைத் தெரியாது. போக வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் சிவசிதம்பரத்தை வாழ்த்தி விட்டு வருவோமே என்று போனேன். தில்லி வந்த இருபத்து ஏழு ஆண்டுகளில் இன்றுதான் முதன்முதலாக இந்த விழாவுக்குப் போகிறேன். இதற்கு முன்பு யார் யாரோ வாங்கியபோதெல்லாம் போனதில்லை.

காரை வெகுதொலைவில் நிறுத்தி விட்டு எக்கச்சக்க தூரம் நடக்க வேண்டும். பயந்து பயந்து நடந்து உள்ளே சென்றால் மிரள வைக்கும் தூய்மை. ராணுவத்தின் ஒழுங்கு. கட்டுப்பாடு. கைப்பேசிகளை வாசலிலேயே பிடுங்கிக்கொண்டு பெயர் எழுதிய ஒரு சீட்டை அதில் ஒட்டி நம்மிடம் ஒரு சிறு அட்டையைக் கொடுத்து விடுகிறார்கள். குழந்தையைப் பிரிந்து நடக்கும் தாயைப்போலத் தயங்கிக் கொண்டே பலர் கைப்பேசியைக் கொடுத்து விட்டுத் தயங்கி நடந்து கொண்டிருந்தனர்.

விழா நடக்கும் அசோகா ஹாலில் ஒரு பக்கம் விருது வாங்குபவர்களை வரிசையாக நாற்காலிகளில் உட்கார வைத்து இருந்தார்கள். எதிரில் புகைப்படக்காரர்கள். ஊடகங்களின் கேமராக்கள். பிளாஷ் ஒளி வெள்ளம். குடியரசத் தலைவர் உள்ளே வரும் போது எழுந்து நிற்க வேண்டும். தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டும். விருதுகள் வழங்கும்போது உட்காரலாம். மீண்டும் தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டும் போன்ற வழிகாட்டுதல்கள் அடங்கிய சிறு கையேட்டை எல்லா நாற்காலிகளிலும் வைத்து இருந்தார்கள். பிரதமர், சோனியா காந்தி, எதிர்க் கட்சித் தலைவர்கள் ஆகியோர் முதன் வரிசைகளில் அமர வைக்கப்பட்டிருந்தார்கள்.

குடியரசுத் தலைவர் வந்ததும் எல்லோரும் எழுந்து நின்றோம். தேசிய கீதம் இசைத்தார்கள். எழுந்து நின்றோம். ஆங்கில ஆட்சியின் சில மிச்சங்களை இன்னும் அப்படியே வைத்திருக்கிறோம். சில துவக்கச் சடங்குகளைப் பார்த்தபோது அந்த மரபு இன்னும் அப்படியே தொடர்வதைப் பார்க்க முடிந்தது.
உள்துறை செயலர் ஒவ்வொரு பெயராகப் படித்து அவர்களுடைய துறைûயுயம் அறிவிக்க உரியவர் முதல் நாள் ஒத்திகை பார்த்தபடி, நேராக நடந்து நின்று, முன்னோக்கிச் சென்று குடியரசுத் தலைவரிடம் விருதுகளை வாங்கி, பீறிட்டுக் கிளம்பும் பிளாஷ் ஒளி வெள்ளத்தை நோக்கிப் புன்னகைத்து, மீண்டும் ஒருமுறை வணங்கி சட்டையில் குத்தப்பட்ட விருதுடனும், ஒரு நீண்ட டப்பாவில் அழகாக வைத்துத் தரப்பட்ட பட்டயத்துடன் பெருமிதத்துடன் நடந்து அவர்களுடைய ஆசனங்களில் மீண்டும் அமர்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியவர்கள், அவர்களுடைய ஊர்க்காரர்கள் கூரையே இடிந்து விழும் வண்ணம் கைதட்டுகிறார்கள். எல்லாப் பெயர்களும் வரிசையாகப் படித்து முடித்ததும் மீண்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழாவை முடிக்கிறார்கள்.

பிறகு பக்கத்தில் உள்ள பெரிய கூடத்தில் விருந்து பரிமாறப்படுகிறது. அந்த விருந்தின் நேரத்தில் தங்களுக்கு வேண்டியவர்களைக் கட்டிப்பிடித்தும் கரங்களைக் குலுக்கியும் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். விருது வாங்கியவர்களும் சற்றுப் பரபரப்புடன் இருப்பதால் அவர்களுடன் நம்மால் சரியாகப் பேசமுடியாமல் போகிறது. சமோசாவையும் தேநீரையும் குடித்து இடத்தை விட்டு நகர்ந்தால் போதும் என்று ஆகிவிடுகிறது.

மீண்டும் காரை எடுக்க நடந்து செல்ல வேண்டிய தூரத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. இதற்கு வீட்டிலேயே தொலைக்காட்சியில் நிம்மதியாக இரண்டு கால்களை மேலே தூக்கி வைத்துப் பார்க்கலாம் என்று தோன்றியது.

மறுநாள் (11 மே 2008) அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பத்ம விருது பெற்றவர்களுக்குப் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் ஆனந்த் விசுவநாதன், மனோஜ் நைட் ஷியாமளன் ஆகியோர் 10ம் தேதியே ஊருக்குச் செல்வதால் தங்களால் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்து விட்டார்கள். பி.சுசீலா, சீர்காழி ஜி.சிவசிதம்பரம் மற்றும் மிருதங்க வித்வான் யெல்லா வெங்கடேஷ்வர ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் சுப்பிராம ரெட்டியை விமான நிலையத்தில் சந்தித்து இருக்கிறார் செயலர் முகுந்தன். இந்த விழா குறித்து சொன்னதும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்தார் சுப்பிராம ரெட்டி. அதே போல, நாடாளுமன்றத் தொடர் முடிந்து ஊருக்குப்போய்க் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, தன்னுடைய பயணத்தைத் தள்ளிப்போட்டு இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எம்.என்.கிருஷ்ணமணி தலைமை தாங்கினார். பொதுச் செயலர் இரா.முகுந்தன் வரவேற்புரை வழங்கினார். இணைச் செயலர் ரமாமணி சுந்தர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சுப்புராமி ரெட்டி தன்னுடைய பேச்சின் போது சசீலாவுக்கு மிகவும் தாமதமாக வழங்கப்படும் இந்த விருது அறிவிக்கும் வரை வியாதி ஒன்றுமே இல்லாத தனக்கே ரத்தக்கொதிப்பு ஏகமாக எகிறிவிட்டது என்றார். தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு ஒரு லட்ச ரூபாய் நன்கொடையாகத் தருவதாக அறிவித்தார். பிறகு கூடியிருக்கும் பார்வையாளர்களுக்கு எல்லாம் சிவனின் அருளை வழங்குகிறேன் என்று சொல்லி தெலுங்கு மாயாஜாலப் படங்களில் வருவது போன்ற மந்திரவாதி குரலில் உரக்க தேவி மந்திரங்களை உச்சாடனம் செய்தார். தான் உச்சாடனம் செய்யும் போது எல்லோரையும் கண்களை மூடிக்கொள்ளச்சொன்னார். 99 சதவிகிதம் பேர் பயபக்தியுடன் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

பிறகு பத்ம விருது பெற்றவர்களைப் பூங்கொத்து, பொன்னாடை, வெள்ளிக்குத்து விளக்கு ஆகியவற்றைக் கொடுத்து சிறப்பு செய்தார்கள். நான் வாழ்த்துரை வழங்கினேன். வழக்கம் போல எழுதி வைத்துத்தான் படித்தேன்.

பி.சுசீலா ஏற்புரை வழங்கினார். ஏனோ தெரியவில்லை. ஒன்றுக்கொன்று ஏதும் தொடர்பே இல்லாமல் பேசினார். கொஞ்சம் பாடிக்காண்பித்தார். கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் கொஞ்சம் பாடினார். அவரால் மேல் ஸ்தாயிக்கு சுலபமாகப் போகமுடியவில்லை. மிகவும் சிரமப் பட்டார். பாவமாக இருந்தது. தமிழுக்கு மூன்றெழுத்து, தெலுங்குக்கு மூன்றெழுத்து, மலையாளத்துக்கு மூன்றெழுத்து, கன்னடத்துக்கு மூன்றெழுத்து, மிருதங்கத்துக்கு மூன்றெழுத்து என்று விசித்திரமான கணக்குகளைப் போட்டுப் பேசிக்கொண்டிருந்தார். ஒன்றும் புரியவில்லை.

சீர்காழி சிவசிதம்பரம் மிகவும் நெகிழ்ச்சியுடன் தன் தந்தையாரையும் குருநாதரையும் நினைத்துக் கொண்டார்.

யெல்லா வெங்கடேஸ்வரராவ் பேசினார். தெலுங்கு வாடையுடன் தமிழில் பேசினார். நீண்ட நேரம் பேசினார். அவர் பேசியது நிறைய பேருக்கு ஒன்றும் விளங்கவில்லை. மேடையின் பின்னால் இருந்தவர்கள் ஹைதராபாத் சிவாவின் கச்சேரிக்கு நேரமாகிறது என்று பதட்டப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். உள்ளே இருந்து சீட்டு அனுப்பலாம் என்று தீர்மானித்த நேரத்தில் பேச்சை நிறுத்தினார். பொதுவாக இப்படி பாராட்டு விழா நடத்தும்போது யாராவது ஒருவரைத்தான் ஏற்புரை வழங்க அழைப்பது மரபு. அந்த மரபை உடைத்ததனால் இன்று சற்றுப் படவேண்டியிருந்தது என்று தோன்றியது.

இறுதியாக திருச்சி சிவா பேசினார். அற்புதமான பேச்சு. மிகவும் தெளிவாகப் பேசினார். விருது பெறும் கலைஞர்களைப் பாராட்டுவதன் மகத்துவைத்தைப் பற்றிப்பேசினார். நவம்பர் 13ம் தேதி அன்று பி.சுசீலாவின் பிறந்த நாள். அன்று அவரைத் திருச்சிக்கு அழைத்து மாபெரும் பாராட்டு விழா நடத்தப் போவதாகச் சொன்னார். இந்த நாளை நினைவு கொள்ளும் வண்ணம் பி.சுசீலாவுக்கு மெல்லிசைப் பேரரசி என்னும் பட்டத்தை வழங்கினார். வந்திருந்த அனைவரும் எழுந்து நின்ற கரகோஷம் எழுப்பினார்கள்.

பாராட்டு விழா முடிந்ததும் ஹைதராபாத் சிவாவின் கச்சேரி மிகவும் தாமதமாகத் துவங்கியது. தாமதமாகத் துவங்கினாலும் மனச்சுணக்கம் கொள்ளாது வெளுத்து வாங்கிவிட்டார் சிவா. அருணகிரி நாதர் பாடல்கள், நந்தனார் பாடல்கள், காயாத கானகத்தே போன்ற நாடகப் பாடல்கள், காவடிச் சிந்து போன்றவற்றை சிறிது நேரமே ஆனாலும் சிங்காரமாகப் பாடினார். உடன் வயலினில் வி.எஸ்.கே.சக்ரபாணி, மிருதங்கத்தில் தில்லைஸ்தானம் சூரியநாராயணன், மோர்சிங்கில் கரூர் சம்பத், கடத்தில் மன்னை கண்ணன் என அற்புதமான பக்கவாத்தியங்கள். இன்னும் கொஞ்ச நேரம் வாசித்து இருக்கலாமே என்று நினைக்க வைத்த ஒரு நிகழ்வு இது. ஆனால் அன்று இரவே ரயில் பிடிக்கப் போக வேண்டியிருந்ததால் அவசர அவசரமாகக் கச்சேரியை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

இசைக்கலைஞர்களுக்கு அளித்த ஒரு பாராட்டு விழாவில் தமிழிசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். அதே போல, எங்கோ விமான நிலையத்தில் சந்தித்த சுப்புராமிரெட்டியை இந்த விழாவுக்கு அழைத்து அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையும் வாங்கிய முகுந்தனுக்கும் நம்முடைய பாராட்டுக்கள்.
ஆனாலும் ஒரு சில பாடங்கள் இதில் கிடைத்து இருக்கின்றன.
ஒன்று - நன்றாகப் பாடுபவர்கள் எல்லாம் நன்றாகப் பேசவேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது.
இரண்டு - திருச்சி சிவா போன்ற நல்ல பேச்சாளர்களைத் தனியாக அழைத்து அவருடைய சொற்பொழிவை ஏற்பாடு செய்ய வேண்டும்.
மூன்று - பாராட்டு விழாவையும் ஒரு நல்ல இசைக்கச்சேரிûயுயம் சேர்த்து வைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் இரண்டையும் ரசிக்க முடியாமல் போகிறது.
கீழே இருந்தவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.