Friday, May 30, 2008

குழந்தைகளும் தேர்வுகளும்...

பிப்ரவரி மாத வடக்கு வாசல் இதழில், மேல்நிலை வகுப்புத் தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ள மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சில நல்ல அறிவுரைகளை வழங்கியிருந்தார் சனத் குமார். அது பெற்றோர்கள் பலருக்கும் பிடித்திருந்தது என்று சொன்னார்கள். மாணவர்களுக்குப் பிடித்திருக்குமா என்று தெரியாது.


இது ஒருவேளை ஒரு தற்செயலான விஷயமாகக் கூட இருக்கலாம். பல ஆங்கில நாளேடுகளில் பிப்ரவரி மாத இறுதி வாரத்தில் சுமார் அரைப்பக்கத்துக்கு பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தேர்வுக்குத் தயார் செய்து கொள்வதற்கான அறிவுரைகளும் மனநல நிபுணர்களிடம் பேட்டிகள், கட்டுரைகள், அறிவுரைகள் என்று தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அவை எல்லாமே மிகவும் அற்புதமான விஷயங்கள். மிகவும் தேவையானவை. ஆங்கில நாளேடுகளில் வந்த ஒட்டு மொத்த கட்டுரைகளில் சாராம்சமாக ஒரு விஷயம் மிகவும் பிரதானமாக இருந்தது.


அந்தக் கட்டுரைகளில் மாணவர்களுக்குச் சொன்னதை விடப் பெற்றோர்களுக்குத் தந்த அறிவுரைகள்தான் மிகவும் பிரதானமாக இருந்தன. நாமும்தான் நேரில் பார்க்கிறோமே, பிளஸ் டூ படிக்கும் மாணவ மாணவியருக்கு அவர்களுடைய பாடத் திட்டங்கள் இழைக்கும் கொடுமையை விட பெற்றோர்கள் அதிகமாகக் கொடுமை இழைக்கிறார்களோ என்று சில சமயங்களில் தோன்றும். சமீப ஆண்டுகளாக இது ஏகத்துக்கும் அதிகரித்து இருக்கிறது. சில சமயங்களில் நம்மைக் கவலை கொள்ளக் கூட வைக்கிறது.


இப்போது பிளஸ் டூ பரிட்சைகள் நடந்து கொண்டிருப்பதால் இதைப் பற்றிக் கொஞ்சம் அதிகமாகப் பேசுகிறோமோ என்று தோன்றுகிறது.


ஆனால் குழந்தைகள் மீதான கொடுமைகள் அவர்கள் நர்சரிப் பள்ளி செல்லும் பருவத்தில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது. அவர்கள் சுமக்கும் மூட்டைகள், வீட்டுப் பாடங்கள், அவர்களைப் போட்டிகளுக்குத் தயார் செய்தல், அவர்களுக்குப் பாட்டு வகுப்புக்கள், நடன வகுப்புக்கள், கராத்தே வகுப்புக்கள், அபாக்கஸ் வகுப்புக்கள், நீச்சல் பயிற்சி, குதிரை ஏறும் பயிற்சி, வேத வகுப்புக்கள், திருப்புகழ் வகுப்புக்கள், விஷ்ணு சஹஸ்ரநாம வகுப்புக்கள் இப்படி ஏகமாகப் பயிற்சிகள், வகுப்புக்கள். குழந்தைகளைத் தீயிலும், கயிற்றின் மேலும் தண்ணீரின் மேலும் நடக்கப் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பாததுதான் பாக்கி. அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் எல்லாம் ஆகவேண்டும். எல்லாவற்றிலும் முதலிடம் வேண்டும். துரதிருஷ்டவசமாக முதலிடம் என்பது ஒன்றுதான். அதை யாராவது ஒரு குழந்தைதான் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலிடத்தைப் பிரிக்க முடியாது.


அப்படி முதலிடம் வராத குழந்தையை உண்டு இல்லை என்று ஆக்கும் பெற்றோர்களைப் பார்த்து இருக்கிறேன். எனக்குத் தெரிந்து பஞ்சமா பாதகங்களில் ஒன்று, சிறு பிஞ்சுக் குழந்தைகளுக்கு இடையில் போட்டி வைக்கும் காரியம். முன்பு, சில வேளைகளில் தில்லியில் சில தமிழ் அமைப்புக்கள் குழந்தைகளுக்கு இடையே பாடல்கள் ஒப்பிக்கும் போட்டி போன்ற விஷயங்களுக்கு வலுக் கட்டாயமாக நடுவராக உட்கார வைத்து விடுவார்கள். வேண்டாம் என்று அதிகமாக மறுத்தால் அதை வேறுவகையாக எடுத்துக்கொள்ளும் அபாயம் இருப்பதால் வழக்கமாக ஒரு அசட்டுச் சிரிப்புடன் அதனை ஏற்றுக் கொண்டு விடுவேன். அந்தப் போட்டியில் குழந்தைகளை பாரதியாரின் பாடல்களைப் பாட வைத்தார்கள்.


நீங்களும் கவனித்து இருக்கலாம். பிள்ளையார் படத்தை யார் எப்படி எந்த வகையில் கோணலாகப் போட்டாலும் அது ஏதோ ஒரு வகையில் அழகாகவே தோன்றுகிற மாதிரி காட்சியளிக்கும். அதே போல, கோணல்மாணலாக ஒரு தலைப்பாகையைக் கட்டிக் கொண்டு திசைக்கு ஒன்றாக மீசையை வரைந்து கொண்டு நின்றாலும் பாரதி வேஷம் கட்டிக் கொண்ட குழந்தைகளை உடனே உச்சிமுகர்ந்து முத்தமிடத் தோன்றும். பாரதியின் பாடல்களை எந்த மோசமான பாடகர் அல்லது பாடகி எப்படிக் கண்றாவியாகக் கழுத்தை நெறித்துக் கொல்ல முயற்சித்தாலும் அந்தப் பாடல் நன்றாகவே இருப்பது போல இருக்கும். பாரதியார் பாடல்களுக்கு, ஒப்பனையால் ஒரு ஐம்பது வருடங்களைக் குறைத்துக் கொள்ள முயற்சிக்கிற நடனமணிகள் காமாசோமா என்று ஆடினாலும் அதுவும் மிக நன்றாகவே இருப்பது போல இருக்கும். இந்த நிலையில், குழந்தைகள் பாரதியின் பாடல்களைப் பாடினால் கேட்க வேண்டுமா? அதுவும். தலைநகரில் தமிழ்ச்சூழலில் அதிகம் வளராத குழந்தைகள். ஆரம்பப் பாடங்களைத் தமிழில் படிக்காத குழந்தைகள். அவர்கள் மிகவும் சிரமங்கள் எடுத்துக் கற்றுக் கொண்டு கணீரென்று முயற்சிப்பதைக் கேட்கும் போது உண்மையில் மெய் உருகும். மழலைக் குரல்களில் பாரதியின் பாடலைக் கேட்பது அதிசுகம். நதிக்கரையோரம் நீரோட்டத்தின் திசையுடன் சேர்ந்து மாலை வேளைகளில் நடந்து செல்வதைப் போன்ற சுகமான விஷயம் அது. இதில் போட்டிகள் வைத்து ஏன் அவர்களைக் கொடுமைப் படுத்த வேண்டும் என்று தோன்றும். பாடல் உச்சரிப்புக்கு எதற்கு அவர்களுக்குத் தனியாக மதிப்பெண்கள் வழங்க வேண்டும்? வயதான கிழங்கட்டைகளே “பாரத தேஷம் என்று பெயர் ஷொல்லுவார்” “”ஓம் ஷக்தி ஓம் ஷக்தி ஓம், ஷொல்லடி ஷிவஷக்தி” என்று மேடைக்கு மேடை பிய்த்து எறியும்போது குழந்தைகள் எப்படி உச்சரித்தால் என்ன? மழலைப் பிஞ்சுகள் பாரதியின் பாடலை எப்படி உச்சரித்தாலும் அதில் எங்கிருந்தோ ஒரு தனி அழகு கூடிவிடுகிறதே? அப்புறம் என்ன ஒரு இதுக்கு உச்சரிப்புக்கும் வெளிப்பாட்டுக்கும் மதிப்பெண்கள்?


இதில் உச்சகட்டக் கொடுமை என்னவென்றால், பரிசு பெறாத குழந்தைகள் வீட்டுக்குத் திரும்பும்போது அம்மாக்களும் அப்பாக்களும் அந்தக் குழந்தையைக் கரித்துக் கொட்டிக் கொண்டே இழுத்துச் செல்வார்கள். திக்கித் தடுமாறும் குழந்தைகளுக்கு அன்று பரிசு கிடைக்காது. ஆனால், அந்தக் குழந்தைகள் திக்கித் தடுமாறுவதும் ஒரு கவித்துவமான விஷயமாக ஏன் இந்த அமைப்பாளர்களுக்குத் தெரிய மாட்டேன் என்கிறது?நான் ஒரு அமைப்பு நடத்திய குழந்தைகளுக்கான பாரதியார் பாட்டுப் போட்டியின் போது சொல்லிக்கூட சொல்லி இருக்கிறேன். அதாவது 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்குப் போட்டி என்று எதுவும் வேண்டாம். கலந்து கொள்ளும் எல்லாக் குழந்தைகளுக்கும் ஏதாவது நினைவுப் பரிசு கொடுக்கலாமே என்று சொன்னேன். தமிழ் அமைப்புக்களின் சாஸ்திர சம்பிரதாய வழக்கப்படி இந்த ஆலோசனையை அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. நினைவுத் திறன், உச்சரிப்புத் திறன், வெளிப்பாட்டுத்திறன் என்று பிரித்துப் பிரித்து தலா 10 மதிப்பெண்கள் வழங்குமாறு நடுவர்களுக்கு நிபந்தனை விதித்து இருந்தார்கள். நான் எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லாவற்றுக்கும் தலா பத்து மதிப்பெண்கள் வழங்கினேன். அடுத்த ஆண்டுப் போட்டிகளில் இருந்து என்னை நடுவராக அழைப்பதை நிறுத்தி விட்டார்கள். எனக்கும் அது மிகப்பெரிய ஆசுவாசத்தைக் கொடுத்தது.


அடுத்து, குழந்தைகளை அவர்களுடைய வயதுக்கு மீறிப் பேச வைப்பது. இந்த வி‘யம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் இருந்தே தமிழ்த் திரைப்படங்களில் காலம் காலமாகத் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பது. வயதுக்கு மீறிய, நடை உடை பாவனைகளில் அவர்களைத் திணிப்பது. தோட்டத்தில் மலர்ந்த ஒரு ரோஜா மலரின் மீது துணி காயப்போடும் கிளிப்பைக் குத்தி வைப்பது போன்ற காரியம் இது. பெற்றோர்கள் குழந்தைகளைப் பேச்சுப் போட்டிக்குத் தயார் செய்வார்கள். அந்தக் குழந்தையை இயற்கையாகப் பேச அனுமதித்தால் அது தூள் கிளப்பி விட்டு வந்து விடும். அம்மாவோ அப்பாவோ அக்காவோ ஆசிரியரோ அல்லது பக்கத்து வீட்டு மாமாவோ அந்தக் குழந்தை போட்டியில் பேசுவதற்கான பேச்சைத் தயார் செய்வார்கள். இது முதல் கட்டம். இந்தக் கட்டத்தில் அந்தக் குழந்தையின் மன முதிர்ச்சி, அந்தப் பிஞ்சு மனம் உள்வாங்கக் கூடிய விஷயங்கள், அதன் கிரகிக்கும் சக்தி, வெளிப்பாட்டுக்கான ஒரு நேரிடையான உத்தி போன்றவற்றை சுத்தமாக உதாசீனப்படுத்துவார்கள். குழந்தைகள் உரக்கக் கத்த வேண்டும். பைத்தியம் பிடித்தது போலக் கைகால்களை உதறிப் பேசவேண்டும் என்பதை மிக முக்கியமாக சொல்லிக் கொடுப்பார்கள். இப்போது பெற்றோர்களின் வேலை மிகவும் சுலபமாகி விட்டது. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு ரூபங்களில் பல தமிழ்ச் சானல்களில் வரும் பட்டிமன்றங்களையும். அரட்டை அரங்கங்களையும் குழந்தைகளோடு சேர்ந்து பார்த்து இந்த நிகழ்ச்சிகளின் பேச்சாளர்கள் பேசுவது போன்ற போலியான பாவங்களும், தொனிகளும், அங்க அசைவுகளும் அந்தக் குழந்தைகளின் மனங்களில் ஏற்றப்படும். அதே பாவனைகளில்.தொலைக்காட்சிகளில் இந்த நிகழ்ச்சிகளை நீங்கள் திறந்த மனத்துடன் என்றாவது பாருங்கள். அதில் கலந்து கொண்டு பேசுபவர்களின் கண்களையும் பாவனைகளையும் சற்று உற்றுப் பாருங்கள். அவற்றில் எத்தனை பொய்மைகள் கலந்து இருக்கின்றன என்று தெரியும். சில நேரங்களில், இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள், நடத்துபவர்கள், பங்கேற்பவர்கள் வெளிக்காட்டும் பாவனைகள், வெடிக்கும் சிரிப்பு, மூக்கு சிந்தி அழுவது இவையெல்லாம் ஏதோ ஒரு மனநல விடுதிக்குச் சென்று மனநலம் பீடித்தவர்களை நாம் வேடிக்கை பார்ப்பது போன்ற ஒரு தோற்றத்தை நமக்கு அவை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது.

இதைப் பற்றி ஏதாவது விமர்சனங்களை முன் வைத்தால் நம்முடைய சமூக அக்கறைகள் பற்றிய கேள்விகளை மிக உரக்க எழுப்புவார்கள். வெறும் கூச்சலும் அழுகையும் மட்டுமே ஒருவருடைய சமூக அக்கறையை உறுதிப்படுத்தாது என்று இவர்களுக்கு யார் சொல்வது? இந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மனநோய் பீடித்த கண்றாவிகளை, அந்த பாவனைகளை, அந்தத் தொனிகளை, அந்த அங்கச் சேஷ்டைகளை நம் குழந்தைகளின் மனங்களில் ஏற்றி, அதே போன்ற சிந்தனா முறைகளை உட்புகுத்தி அவர்களை மேடை ஏற்றினால், வாழ்நாளெல்லாம் அவர்களுடைய ரசனை, மதிப்பீடுகள் வேறு எந்த வகையில் அமையும்? எந்த விதமான அரசியல் மற்றும் சமுதாய விழிப்புணர்ச்சி அவர்களுக்குள் காரியமாற்றும்? வயதாகி வளர்ந்து ஒரு மூன்றாம் தர நடிகனின் கட் அவுட்டுக்குப் பால் அபிஷேகம் செய்யாமல் அவனால் வேறு என்ன செய்ய முடியும்? எந்த சமூக அக்கறையும் அரசியல் ஞானமும் இல்லாதவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டாடுவதைத் தவிர அவனால் என்ன செய்ய முடியும்? எனவே, ஊடகங்கள் வழியாகவும் நாம் குழந்தைகளின் மீது அறிவு ரீதியான வன்முறைகளைப் பிரயோகித்து வருகிறோம். நம்மிடம் உள்ள மூர்க்கங்களையும் மூடத்தனங்களையும் அவர்கள் மீது ஏற்றி நம்முடைய பிம்பங்களாக மட்டுமே அவர்களைக் கொண்டுவர முயற்சிக்கிறோம். எது எப்படியாக இருந்தாலும் அவர்கள் பரீட்சையில் மதிப்பெண்கள் மட்டும் பெற்றுக்கொண்டு வந்தால் போதும். அசட்டுத்தனமான பேச்சுப் போட்டிகளிலும் படு அபத்தமான பட்டிமன்றங்களிலும் கலந்து கொண்டு தொண்டை கிழியக் கத்தியாக வேண்டும். ஏதாவது ஒரு செங்கல்லையாவது பரிசாக வீட்டுக்குக் கொண்டு வரவேண்டும். இதற்காக அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் இல்லையா?



வடக்கு வாசல் மார்ச் 2008 இதழில் வெளியான கட்டுரை


Wednesday, May 28, 2008

கொண்டாட்டங்களும் தவிப்பும்...

பரிசல் ஏறியதால் பதவிக்கு ஏறிய மாவீரர்

கர்நாடகத்தில் காங்கிரசும் குமாரசாமியும் எவ்வித உட்டாலங்கடி வேலைகளையும் முயற்சிக்காததால் எடியூரப்பா தலைமையில்தான் அரசு அமையும் என்று உறுதிப்பட்டிருக்கிறது. கர்நாடக மாநில மக்களை விட தமிழகத்தின் எல்லைப் பகுதியான தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் கர்நாடகாவில் அமையப்போகும் ஆட்சி குறித்து மிகவும் ஆவலாக இருக்கிறார்கள்.

தமிழக முதல்வரும் கர்நாடகாவில் புதிய ஆட்சி பொறுப்பேற்கும் வரை ஒகேனக்கல் திட்டத்தை ஒத்திப் போடலாம் என்று அறிவித்தார். அப்போது ஒகேனக்கல் திட்டத்தை எதிர்த்து பரிசல் ஏறி வந்து ரகளையில் ஈடுபட்டவரே இப்போது முதல்வராகப் பொறுப்பேற்கிறார்.

தேர்தலை எதிர்பார்த்து இருந்த அந்த நேரத்தில் எடியூரப்பா அப்படி செய்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது. முதல்வராக இப்போது என்ன செய்யப்போகிறார் என்று பார்க்க வேண்டும். தமிழக பாஜக வினர் இந்த விஷயத்தில் என்ன மாதிரியான நிலைப்பாடு எடுப்பார்கள் என்பது அனைவராலும் கவனிக்கப்படக் கூடிய விஷயமாக இருக்கும்.

ஒகேனக்கல் திட்டடத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஒத்திவைத்த கெடு அநேகமாக முடிவுக்கு வந்து விட்டது.

இப்போது கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா நடந்து கொள்வதைப் பொறுத்து தமிழக அரசுக்கும் நெருக்கடிகள் அமையும். ஜெயலலிதா மற்றும் எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில் தமிழக அரசுக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் எதிராக மேடையை துவம்சம் செய்வதற்கான விஷயங்கள் கிடைக்கும். அவர்களுக்குக் கொண்டாட்டம்தான். கர்நாடகாவைப் பொறுத்த அளவில், எடியூரப்பா இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால் அங்குள்ள எதிர்க்கட்சிகள் விஷயத்தைக் கையில் எடுத்து ரகளையைத் துவங்கி விடும். அவர்களுக்கும் எடுத்த எடுப்பில் ஒரு எதிர்ப்புக்கான விஷயம் கையில் கிடைத்த கொண்டாட்டம்தான்.

இந்த விஷயத்தை ஒரு பொதுநோக்குடன் அணுகாது, அரசியல் நோக்குடன் அணுகினால் இதுவும் காவிரியைப் போலவே பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் இழுத்துக் கொண்டே போகும் அபாயம் இருக்கிறது.

இந்த அரசியல் விளையாட்டினால் கர்நாடகத்தில் இப்போதைக்கு எதிர்க் கட்சி அணியில் அமரப்போகும் காங்கிரசுக்கும், குமாரசாமிக்கும் தமிழகத்தில் ஜெயலலிதா வகையறாக்களுக்கும் கொண்டாட்டம்தான்.

ஆனால் தவிக்கப்போவது என்னவோ, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அப்பாவி மக்கள்தான்.

Friday, May 16, 2008

ஒரு பாராட்டு விழா - ஒரு கச்சேரி - ஒரு கவிதை




தி சண்டே இந்தியன் பதிப்பு ஆசிரியர் அசோகன் மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார். தில்லித் தமிழ்ச் சங்கத்தை விட்டு எப்போது வெளியே வரப்போகிறீர்கள் என்று.

நான் என்ன செய்யட்டும்? கழுதை கெட்டால் குட்டிச் சுவர். அதிகம் தமிழ் மற்றும் தமிழர்கள் தொடர்பான நிகழ்வுகள் தலைநகரில் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தான் நடக்கின்றன. தமிழர்களின் பொழுதுபோக்கு அல்லது கலை இலக்கியம் தொடர்பான நிகழ்விடம் இப்போதைக்கு தில்லியில் தமிழ்ச் சங்கம் மட்டும்தான். இனி மண்டி ஹவுசில் நடக்கும் மற்ற நிகழ்வுகளையும் எழுதலாம் என்று இருக்கிறேன். ஆனால் வார இறுதிகளில், தில்லித் தமிழ்ச் சங்கத்தில் யாராவது ஒருத்தர் தெரிந்தவர் அல்லது வேண்டியவர் அல்லது தெரிந்தவருக்குத் தெரிந்தவர் அல்லது வேண்டியவருக்கு வேண்டியவர் ஏதாவது நிகழ்ச்சியைத் தருகிறார். கண்டிப்பாகப் போயாக வேண்டியிருக்கிறது.

பட்டிமன்றங்கள் அல்லது கவியரங்கங்களுக்கு மட்டும் பொய் சொல்லித் தப்பித்து விடுகிறேன்.


சரி. அசோகனுக்காக தலைநகர் கடந்து ஒரு நிகழ்வு மீதான பதிவு.

பி.சுசீலா, சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் பத்ம விருது பெற்ற சிலருக்கு கடந்த 12 மே 2008 அன்று நல்லி குப்புசாமி செட்டியார் ஒரு மாலை விருந்தும் பாராட்டு விழாவும் உட்லாண்ட்ஸ் ஹோட்டல் வளாகத்தில் மிகவும் விமர்சையாக ஏற்பாடு செய்திருந்தார். நானும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் (பாருங்கள். நான் என்ன செய்வது?) பொதுச் செயலர் முகுந்தனும் கலந்து கொண்டோம்.



நிகழ்ச்சிக்கு நல்ல கூட்டம். லேனா தமிழ்வாணன், வலையப்பட்டி சுப்பிரமணியம், ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். விழா தொடக்கத்தில் நித்யஸ்ரீ பாடிக் கொண்டிருந்தார். ஏதோ கல்யாண ரிசப்ஷன் போன்று இருந்தது. நித்யஸ்ரீ வழக்கப்படி அற்புதமாகப் பாடிக்கொண்டிருந்தார். ஆனால் கேட்பதற்கு யாருக்கும் நேரம் இல்லை. ரொம்ப நாட்கள் கழித்து சந்திப்பவர்களிடம் நாற்காலியை இழுத்துப்போட்டு சத்தம் போட்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

தில்லியில் நிசப்தமான சூழலில் கச்சேரிகள் கேட்டு இது சற்றுப் புதுமையாக இருந்தது.
பாராட்டு விழா ரத்ன சுருக்கமாக முடிந்தது. விருது பெற்றவர்களைச் சிறப்பித் கையோடு நல்லி செட்டியார் கலைஞர்களைப் பாராட்டி சில வார்த்தைகள் பேசினார். அவருடைய உரையுடன் விழா முடிவடைந்தது. சிவசிதம்பரம் அன்று இரவே தில்லிக்கு விமானத்தைப் பிடிக்க வேண்டியிருந்ததால் அவசர அவசரமாகக் கிளம்பினார். இரவு நல்ல விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் செட்டியார்.




ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருது பெற்ற கலைஞர்களை அழைத்து சிறப்பிக்கிறார் செட்டியார். தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் விருதுகள் வழங்கும் விழாவில் ஒரு கையேட்டினைத் தருகிறார்கள். அந்தக் கையேட்டில் விருது பெற்றவர்களின் புகைப்படமும் அவர்களைப் பற்றிய குறிப்புக்களும் இடம் பெறுகின்றன. அந்தக் கையேட்டினை சென்னைக்கு எடுத்து வந்து அதில் இருந்து வேண்டிய பக்கங்களை நகல் எடுத்து அழகான சிறிய கையேடாக அனைவருக்கும் வழங்கினார்கள் நல்லி நிறுவனத்தினர். இது மிகவும் அற்புதமான விஷயம்.

சரி. மீண்டும் நித்யஸ்ரீயின் கச்சேரிக்கு வருவோம்.



கீழே யாருக்கும் பொறுமையோ நேரமோ இல்லாது இரைச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள் என்றால் மேடையில் மிகவும் அழகான ஒரு கவிதை அரங்கேறிக்கொண்டிருந்தது.

நித்யஸ்ரீயின் இரு பெண் குழந்தைகள். நித்யஸ்ரீ பாடும்போது இரண்டும் மேடையிலேயே இருந்தன. ஒரு குழந்தை அம்மா பாடுவதையே கண்கொட்டாமல் மிருதங்கம் வாசித்த ஸ்கந்தன் சுப்பிரமணியன் பின்னால் உட்கார்ந்தபடி மிகவும் சிரத்தையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. இன்னொன்று விளையாட்டுச் சாமான்களை வைத்துக் கொண்டு நித்யஸ்ரீயின் இன்னொரு பக்கம் உட்கார்ந்து கொண்டு சிரத்தையாக விளையாடிக் கொண்டிருந்தது. அம்மாவையோ அல்லது வாசிப்பவர்களையோ எந்தத் தொந்தரவும் செய்யவில்லை. தனக்கான ஒரு உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தது. உண்மையிலேயே இது பார்ப்பதற்கு ஒரு கவிதையை வாசிப்பது போல இருந்தது.

நித்யஸ்ரீயும் எவ்வகையிலும் கவனம் சிதறாது பாடிக்கொண்டிருந்தார்.

பார்ப்பதற்கே மிகவும் நன்றாக இருந்தது.

சில புகைப்படங்களை இங்கே பதிந்திருக்கிறேன். உண்மையிலேயே ஒரு கவிதை போல இருக்கிறது இல்லையா?




Wednesday, May 14, 2008

ஜெய்ப்பூர் கோரதாண்டவம் - வலுப்படும் ஒற்றுமை




கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஹைதராபாத் நகரத்தில் நிகழ்ந்தது தொடர் குண்டு வெடிப்பு. அதன்பிறகு அக்டோபர் மாதத்தில் ஜெய்ப்பூரில். இப்போது மீண்டும் ஜெய்ப்பூரில் அரங்கேற்றியிருக்கிறார்கள். இது தொடர்பாக சில சந்தேகக் கைதுகளும் நிகழ்ந்துள்ளன. இதுவரை (அதாவது இந்த வலைப்பூ பதிவேற்றம் செய்யும் வரை நான்கு பேரை விசாரணைக்காக கைது செய்துள்ளது ஜெய்ப்பூர் காவல் துறை.

நேற்று (13 மே 2008) ஜெய்ப்பூரில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பின் பின்னணியாக ஒரு புதிய கோணத்திலும் ஒரு பார்வையை வைத்திருக்கிறார்கள் சில செய்தியாளர்கள். அவர்கள் சொல்வதாவது, இந்தியா பொக்ரானில் அணுகுண்டு சோதனை நிகழ்த்திப் பத்தாண்டு நிறைவு பெறுகிறது. இது பாகிஸ்தானை ஏகத்துக்கும் உசுப்பி விட்ட ஒரு நிகழ்வு. நம்முடைய வெளியுறவுத் துறை அமைச்சர் விரைவில் பாகிஸ்தான் செல்ல இருக்கிறார். இதுபோன்ற நேரத்தில் இப்படி ஒரு அசம்பாவிதத்தைத் தோற்றுவிப்பது இருநாடுகளுக்கிடையிலான உறவுகள் சீர்படுவதில் சில பின்னடைவுகளை ஏற்படுத்தலாம் என்கிற நோக்கில் சில இசுலாமிய பயங்கரவாத அமைப்புக்கள் இதை செய்திருக்கலாம் என்றும் ஒரு சொல்கிறார்கள். இன்னொரு பக்கம், இசுலாமிய அமைப்புக்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்த சில இந்து அமைப்புக்களே இதை செய்திருக்கலாம் என்றும் வாதிக்கிறார்கள். இந்தத் தொடர் குண்டு வெடிப்புக்கள் அதிகம் சேதம் விளைவிக்காது வேகம் குறைந்து இருப்பதையும் தங்கள் வாதத்துக்கு வலு சேர்ப்பது என்று சொல்கிறார்கள் இவர்கள். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஜெய்ப்பூரில் நடக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் கவலையை அதிகரிக்க வைக்கிறது.

ஜெய்ப்பூருக்கு அருகாமை நகரங்களான ஆக்ரா, தில்லி போன்ற நகரங்களில் காவல் ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதில் மிகவும் ஆறுதல் தரும் விஷயம் என்னவென்றால், கோவில் வளாகத்திலேயே குண்டு வெடித்தும் ஜெய்ப்பூர் மக்கள் எவ்வித வகுப்புக் கலவரங்களையும் ஏற்படுத்தாது அமைதி காத்ததுதான். வேறு சில ஊர்களில் இது நிகழ்ந்திருந்தால் குறிப்பிட்ட சில சமூகத்தினர் தாக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்காது தங்கள் சோகங்களை மனதில் ஏந்தி உடனடியாக மீட்புப்பணிகளிலும் காயமûடைந்தவர்களை மருத்துவமனைகளில் சேர்ப்பதிலும் எல்லோரும் அதீதமான கவனம் செலுத்தியிருக்கிறார்கள். காவல் துறையும் நகரில் வதந்திகள் ஏதும் பரவாது தடுக்கும் வகையில் அனைத்து மொபைல் இணைப்புக்களையும் உடனடியாக நிறுத்தி வைத்திருக்கிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த அரைமணி நேரத்துக்குள் எல்லா மொபைல் இணைப்புக்களும் நிறுத்தி வைக்கப்பட்டதனால் எவ்வித வதந்திகளும் வெளியில் பரவாத வண்ணம் தடுக்கப்பட்டிருக்கிறது. காயமடைந்தோர் சேர்க்கப்பட்ட சவாய் மான்சிங் மருத்துவமனையின் மருத்துவர்களும் ஊழியர்களும் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறார்கள்.

வெளிச் சக்திகள் நம்மைச் சூழ்ந்து இடர் விளைக்கும்போது நமக்கு ஒரு பிரத்யேகமான வல்லமையைத் தருகிறாள் அன்னை. இதனை ஒவ்வொரு தாக்குதல்களின் போதும் இந்தியர்களாகிய நாம் நிரூபித்து வருகிறோம் என்பதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது.

Tuesday, May 13, 2008

நெகிழ்வுடன் துரத்தும் நினைவுகள்... சுப்புடு

இந்த மார்ச்- ஏப்ரல் மாதங்களின் அனைத்து வார இறுதிகளிலும் தலைநகரெங்கும் கச்சேரிகளும் நடன நிகழ்வுகளும் அமர்க்களப்பட்டு வருகின்றன. தலைநகரெங்கும் கலைசார் செயல்பாடுகள் உச்சகட்டத்தில் செயல்படும் மாதங்கள் இவை. இந்த அற்புதமான நேரத்தில் பெரியவர் சுப்புடு குறித்த நினைவலைகள் அடிக்கடி நெஞ்சில் நிழலாடுவதைத் தவிர்க்க முடியவில்லை. பல நேரங்களில் அவருடைய நினைவு மனதில் கிளர்ந்து நெகிழவைத்துத் துரத்தி அடிக்கிறது. வெகுசமீபத்தில் ஹரிதாஸ்கிரி சுவாமிகளுடைய நாமசங்கீர்த்தன நிகழ்ச்சியின் குறுவட்டு பார்க்க நேர்ந்தது. ஹரிதாஸ்கிரி சுவாமிகளின் ரசானுபவம் தோய்ந்த குரலும் பாவமும் மனப்பரப்பில் சுழன்று சுழன்று அடித்த அதே வேளையில் அந்த நிகழ்ச்சியில் மனம் தோய்ந்து ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருக்கும் சுப்புடுவின் கார்வைகள் மிதக்கும் வாசிப்பும் லயிப்பும் மனதில் சுகாம்ருத லாகிரியை உண்டுபண்ணியது. மனது மயங்கி நெகிழ்ந்து சுருண்ட நேரத்தில் கர்நாடக சங்கீதசபா மகாதேவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ""இன்னிக்கு சுப்புடு மாமாவோட நினைவுநாள் தெரியுமோ?''






"இதோ உனக்கு நான் அளித்த வரம் என்று இறைவன், பெரியவரின் நெருங்கிய நட்பை வரமாகக் கொடையளித்த குறைந்த ஆண்டுகளிலேயே நினைவுகளை மட்டும் நெஞ்சினில் தேங்கவைத்து இதுபோதும் உனக்கு என்று ஓரிடத்தில் உளியால் அடிப்பது போல, மரண அடியாக அடித்து எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.


எந்தக் கடுங்குளிரிலும் தன்னுடைய மஃப்ளரை ஒருமாதிரி, காதைச் சுற்றி விசித்திரமாகச் சுற்றிக்கட்டி எங்காவது ஏதாவது ஒரு கச்சேரியில் ஆஜராகி விடுவார். சுப்புடு, கச்சேரிகளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு போவதைக் காணக் கண்கோடி வேண்டும். உடல்நிலை மிகவும் தளர்ந்த பின் அவரைக் கச்சேரிகளுக்கு அனுப்பி வைப்பதில் அவ்வளவாக மகிழ்ச்சியைக் காட்டிக் கொள்ள மாட்டார் மாமி. முடிந்த வரை அவரைத் தடுக்கப் பார்ப்பார். நேரில் செ-ன்று யார் அழைத்தாலும் அந்தக் கச்சேரிக்குப் போயே ஆகவேண்டும் என்று குழந்தையைப் போல மாமியிடம் அடம் பிடிப்பார்.


மாமியை சரி செய்து கச்சேரிகளுக்குக் கிளம்புவதில் அசாத்தியமான ஒரு வகைத் தந்திரத்தைக் கையாளுவார் சுப்புடு. வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு பூங்காவுக்கு சரியாக மாலை 4.30 மணிக்குத் தவறாது நடக்கப் போய்விடுவார். அநேகமாக நடைமுடித்து வீடு திரும்பும் அந்த இடைப்பட்ட நேரத்தை எனக்கான வருகை நேரமாக இருக்குமாறு பார்த்துக் கொள்வார். இந்த இடைப்பட்ட நேரத்தில்தான் நான் அவருக்கு வாங்கிச் செல்லும் வாசனைப் பாக்கு மாமிக்குத் தெரியாமல் கைமாறும். அவருடைய உடல்நிலை முழுக்கத் தளர்வடையத் துவங்கிய இறுதிக் கட்டங்களின் முன்பகுதியில், அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வேண்டுமென்றே வாங்கிச் செல்லாமல் மறந்து விட்டதைப் போல நடித்துத் தப்பிக்க முயன்றாலும், சாலையின் ஓரத்தில் ஒதுங்கி நின்றுகொண்டு, ""நான் இங்கே நிக்கறேன். நிமிஷத்துலே ஓடிப்போய் வாங்கி வந்துடு'' என்று பிடிவாதமாக நிற்பார். நானும் ஓட்டமாக ஓடுவதைப்போல அவர் முன்னால் வாங்கப் போவது போல நடித்துக் கொஞ்ச நேரத்துக்குப் பின், ""அந்தக் கடையிலே தீர்ந்துடுச்சாம். போறப்போ வேறே எங்காவது வாங்கிக்கலாம்'' என்று சொன்னால், ஒன்றும் சொல்லாமல் என்னுடன் வீட்டுக்கு நடக்கத் துவங்குவார். ஒன்றும் பேசமாட்டார். கண்டிப்பாக உள்ளுக்குள் ஏதாவது ஒரு வசவு என்மீது எறியப்பட்டிருக்கும். ஒரு எதிரியின் மீது அதிரடித் தாக்குதலைத் துவங்க ஒத்திகை செய்து கொள்வதைப் போன்ற பாவனையில் சற்று ஒதுங்கியே நடப்பார். நாம் ஏதாவது பேச்சுக்கொடுத்தாலும் ரொம்பவும் யோசிப்பதைப் போல ஒற்றை விரலால் வலப்பொட்டில் லேசாகத் தட்டிக் கொண்டே நடப்பார். அவர் வேண்டுமென்றே ஒதுக்குகிறார் என்பது தெளிவாகத் தெரியும். மிட்டாய் வாங்கிக் கொடுக்க மறுக்கும்போது குழந்தை காட்டும் பாவனைகள் அவருடைய நடவடிக்கைகளில் இருக்கும். கோபங்களும் தாபங்களும் இருக்கும்.


அப்போதெல்லாம் எனக்கும் ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொள்ள வேண்டும். ""சரி. நீங்க போயிண்டிருங்கோ. இன்னொரு கடையிலே மசாலா சுபாரி கிடைக்குதான்னு பார்த்துட்டு வர்றேன்'' என்று சொல்லி எதிர்த் திசையில் நடக்கத் துவங்குவேன்.


நெற்றிப் பொட்டில் விரலால் தட்டுவதை நிறுத்தி, ""ஒனக்குப் பொகை ஊதணும். போய்த் தொலை. சீக்கிரமா வந்து சேரு'' என்று வீட்டை நோக்கி நடக்கத் துவங்குவார்.


ஓமகுண்டத்தை முடித்து வீட்டுக்குத் திரும்பிப் போனால் அங்கு பெரிய களேபரம் நடந்து கொண்டிருக்கும். ஏதோ ஒரு போருக்குக் கிளம்பிச் செல்லுவது போல வேண்டுமென்றே நேரமாகிவிட்டது என்று பரபரப்புக் காட்டுவார். இவர் காட்டும் பரபரப்பில் மாமிக்கு ஒன்றும் ஓடாது. அந்த ஒன்றும் ஓடாத மனநிலையில் இவர் கச்சேரிக்குப் போவதைத் தடுக்க வேண்டும் என்று மாமி போட்டு வைத்திருந்த திட்டங்கள் செயலிழக்கத் துவங்கும். மாமா வெளிக்கிளம்பத் தயார் செய்யும் வேலைகளில் தன்னிச்சையாக இயங்கத் துவங்குவார் மாமி.


ஒரு சிறுகுழந்தையை நர்சரிப் பள்ளிக்கு அனுப்பி வைப்பது போல சகல ஜாக்கிரதையாக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து எடுத்துக் கொடுத்துக் கொண்டிருப்பார் மாமி. அதற்குள் ஏதாவது தொலைபேசி அழைப்பு அவருக்கு வந்திருக்கும். இல்லையென்றால் எதையோ நினைத்தது போல, தொலைபேசியில் யாரையாவது அழைத்து எதையாவது பேசத் துவங்குவார். யாருடைய எண்ணையும் எழுதி வைத்துத் தேடிப் பார்த்துத் தொலைபேசியில் அழைத்ததை நான் பார்த்தது கிடையாது. நல்லி செட்டியாரா, நடராஜனா அல்லது ஏதாவது உள்ளூர் நண்பர்களா அல்லது எதிரிகளா... எல்லோருடைய எண்களும் அவருடைய மூளைப் பரப்பில் இருந்து நழுவி விரல் நுனி வழியாக வழிந்து இறங்குவதைப் போன்ற லாவகத்துடன் எண்களைச் சுழற்றிப் பேசத் துவங்குவார். பெயருக்கு ஏதாவது ஒரு சட்டையை மாற்றிக்கொண்டு மாமி எதிரில் நிற்பார். அவரைக் கடிந்து கொண்டு வேறு சலவை செய்த சட்டையை எடுத்து வருவார் மாமி. சட்டையில் எங்காவது காணப்படும் சின்ன சுருக்கங்களைக் கூடக் கையால் நீவி நீவி சரி செய்யத் துவங்குவார் மாமி. மடிந்து கிடக்கும் காலரைச் சரி செய்து விடுவார் நேரம் கடப்பதை அவருக்கு நினைவூட்டிக் கிளப்பி விடுவார் மாமி. வாயைத் துடைத்து, சட்டையில் கைக்குட்டையைக் குத்திவிடுவது ஒன்றுதான் பாக்கி. மாமியிடம் மணிக்கட்டுப் பித்தான்களைப் போடச்சொல்லிக் கைகளை முன்னே நீட்டுவார் பெரியவர். நம்மைப் பார்த்து, பொக்கை வாயை விரியத் திறந்து சிரித்துக் கண்ணடிப்பார்.


"கச்சேரி முடிஞ்சி ஆத்துலே கொண்டுவந்து விட்டுத்தானே போவே?'' என்று கேட்பார் மாமி. ""கண்டிப்பா மாமி'' என்று நான் சொல்லும் இடைப்பட்ட மிகச் சிறிய இடைவெளியில் எங்கோ ஒரு பிரத்யேகமான இடத்தில் யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைத்திருக்கும் ஒரு வாசனைப் பாக்கு பொட்டணத்தை சடாரென்று ஒரு நொடியில் இடுப்பில் வேஷ்டி மடிப்பில் செருகிக்கொண்டு விடுவார் பெரியவர். சில சமயங்களில் மாமியின் கண்ணெதிரிலேயே இது நடக்கும். ஆனால் கண் இமைக்கும் வேகத்தில் கைமாற்றும் அவருடைய லாவகத்தினால் பொதுவாக மாமியின் பார்வையில் படாமலேயே காரியம் நிகழ்ந்து விடும். குழந்தைத் தனமான புன்னகையோடு வீட்டை விட்டு இறங்குவார். வீட்டின் கடைசிப் படியில் கால் வைத்ததும் சடாரென்று ஒரு ஓரிரு பாக்குத் துணுக்குகள் அந்த பொக்கை வாய்க்குள் சென்றடையும். எல்லாமே இமைக்கும் நேரம்தான். மாமிக்கு வயதாக வயதாக வீட்டிலேயே கொஞ்சம் கொஞ்சமாக முடங்கிப்போனார். அதற்கு முன்னர் முக்கியமான கச்சேரிகளுக்கு எல்லாம் பெரியவருடன் கிளம்பி விடுவார். ஏதாவது ஒரு உரிமையில் பெரியவர் யாரிடமாவது அசாத்தியமான ஜோக் எதையாவது அடிக்கும்போது யாராவது சுப்புடுவின் மடியிலேயே உட்கார்ந்து இருந்தால் கூட யாருக்கும் கேட்காத வண்ணம் பெரியவரின் காதினுள் ஒரு சிறு கண்டனத்தை அனுப்புவார் மாமி. மாமா பெட்டிப் பாம்பாக அடங்கிப்போவார். அல்லது நம்மை எதிலாவது இழுத்து விட்டு ஓடப்பார்ப்பார். சடாரென்று ஏதாவது பேச்சை மாற்றுவார்.


அதே போல, நிகழ்ச்சியின் இடைவெளியில் ஏதாவது பெரிய மனிதர்கள் இருந்தால், அவர்களிடம் ஏதாவது ஒரு ஜோக்கைத் தூக்கிப் போடுவார் சுப்புடு. அந்தப் பெரிய மனிதர் இவருடைய ஜோக்குக்கு சிரிக்காமல் வேறு எதையாவது பேச ஆரம்பித்தால் ஒரு மாதிரி பதட்டப் படத் துவங்கி விடுவார். பெரிய மனிதர் அந்தப் பக்கம் நகர்ந்ததும், ""ஒரு நல்ல ஜோக்கை இன்னிக்குக் கல்லைக் கட்டிக் கிணத்துலே போட்டுட்டேன் இல்லையா?'' என்று நம்மிடம் சிரித்துக்கொண்டே கேட்பார்.


ஏதாவது ஒரு கலையரங்கில் எங்காவது ஒரு மூலையில் ஒருவிதமான தியானநிலையில் கண்களை மூடி, பொக்கை வாயை மென்று கொண்டே, தலையில் ஒற்றை விரலால் தாளம் போட்டுக்கொண்டு...அந்த ஆத்மா தலைநகரின் ஏதாவது ஒரு கலையரங்கில் எங்காவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு பாட்டைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கும்.தலைநகரில், எங்கேனும் பாட்டுக் கேட்கப் போகும்போது அல்லது நடனம் பார்க்கப் போதெல்லாம் சுப்புடு பற்றி நெகிழ்வுடன் துரத்தும் நினைவுகளைத் தவிர்க்க முடியவில்லை.
வடக்கு வாசல் ஏப்ரல் 2008 இதழில் வெளிவந்த கட்டுரை

Sunday, May 11, 2008

பத்ம விருதுகளும் பாராட்டு விழாவும்...

நேற்று (10 மே 2008) குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கடந்த வாரம் 05 மே 2008 அன்று சில பேருக்குக் கொடுக்கப்பட்டது. மற்றவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.

இந்த விழாவுக்கு அழைப்பிதழ்கள் வழங்கும் பணியை உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவு கவனித்து கொள்கிறது. அவர்கள் விருது பெற்றவர்கள் பரிந்து உரைப்பவர்கள் (ஒவ்வொரு விருது பெற்றவருக்கும் தலா இரண்டு அழைப்பிதழ்கள் மட்டும்). மேலும் வாங்க வேண்டுமென்றால் அவரவர்கள் பெற்றுள்ள பரிச்சயங்கள், பரிந்துரைகளின் அடிப்படையில் ஓரிரண்டு அழைப்பிதழ்கள் கிடைக்கும். இந்தப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளும் அலுவலர்களும் இந்தப் பத்து நாட்களில் அடிக்கும் பந்தா தாங்காது. பணிச்சுமை ஒருபுறம் இருந்தாலும் இந்தப் பத்து நாட்களும் அவர்கள் யாருடைய வணக்கங்களுக்கும் பதில் சொல்ல மாட்டார்கள். இந்த உலகமே தங்களைத் தொந்தரவு செய்வதற்காக மட்டுமே இயங்குகிறது என்கிற பாவனையில் கொஞ்ச நாட்களுக்குச் சுற்றிக் கொண்டிருப்பார்கள். இருபத்தைந்து ஆண்டுகள் உள்துறை அமைச்சகத்தில் வேலை செய்தும் என்னுடைய மனைவி இப்போதும் அங்கே பணியாற்றிக் கொண்டிருக்கும்போதும், சென்னையில் இருந்து வந்த சில நண்பர்கள் அழைப்பிதழ்கள் கேட்டார்கள் என்று அணுகிய போது புன்சிரிப்புடன் தங்கள் இயலாமையைத் தெரிவித்தார்கள்.

ஆனால் அவர்களிடமிருந்து அழைப்பிதழ்கள் பெற்றுச் செல்கிறவர்களைக் கண்டால் எந்த அடிப்படையில் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் என்ற கேள்வி நம்மைக் குடைந்து கொண்டே இருக்கும். இதற்கெல்லாம் விடை கிடைப்பது மிகவும் அரிதான காரியம்.

என்னைக் கேட்டால் இதுபோன்ற விழாக்களுக்குச் செல்லாமல் தவிர்ப்பது பல அசௌகர்யங்களில் இருந்து நம்மை விலக்கி வைக்கும். பாதுகாப்பு ஏற்பாடுகள் இறுக இறுக இது போன்ற விழாக்களுக்கு செல்லாமல் தவிர்ப்பது மிகவும் நலம். நம்முடைய அத்திம்பேர் அல்லது மச்சினன் யாராவது விருது வாங்கும்போது மட்டும் சென்றால் போதும்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயலர் முகுந்தன் மிகவும் பலவந்தமாக வற்புறுத்தவே, எதற்கும் இருக்கட்டுமே என்று வடக்கு வாசல் லெட்டர் பேடில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைப்பிதழுக்கான ஒரு வேண்டுகோளை தொலைநகலில் அனுப்பி வைத்தேன். மறுநாளே, நானே எதிர்பாராத வண்ணம் அங்கிருந்து தொலைபேசி வந்தது. ஆசிரியர் ஒருவருக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்ப முடியும் என்று யாரோ பேசினார்கள். சிறிது நேரம் கழித்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்து வாங்கிச் செல்லுங்கள் என்று இன்னொரு தொலைபேசி வந்தது.

அன்று விருது வாங்கியவர்களில் சீர்காழி சிவசிதம்பரம் மட்டுமே எனக்கு நன்கு அறிந்தவர். மற்றபடி, பி.சுசீலா, விசுவநாதன் ஆனந்த், மனோஜ் நைட் ஷ்யாமளன் ஆகியோரை எனக்கு மட்டுமே நன்கு தெரியும். அவர்களுக்கு என்னைத் தெரியாது. போக வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் சிவசிதம்பரத்தை வாழ்த்தி விட்டு வருவோமே என்று போனேன். தில்லி வந்த இருபத்து ஏழு ஆண்டுகளில் இன்றுதான் முதன்முதலாக இந்த விழாவுக்குப் போகிறேன். இதற்கு முன்பு யார் யாரோ வாங்கியபோதெல்லாம் போனதில்லை.

காரை வெகுதொலைவில் நிறுத்தி விட்டு எக்கச்சக்க தூரம் நடக்க வேண்டும். பயந்து பயந்து நடந்து உள்ளே சென்றால் மிரள வைக்கும் தூய்மை. ராணுவத்தின் ஒழுங்கு. கட்டுப்பாடு. கைப்பேசிகளை வாசலிலேயே பிடுங்கிக்கொண்டு பெயர் எழுதிய ஒரு சீட்டை அதில் ஒட்டி நம்மிடம் ஒரு சிறு அட்டையைக் கொடுத்து விடுகிறார்கள். குழந்தையைப் பிரிந்து நடக்கும் தாயைப்போலத் தயங்கிக் கொண்டே பலர் கைப்பேசியைக் கொடுத்து விட்டுத் தயங்கி நடந்து கொண்டிருந்தனர்.

விழா நடக்கும் அசோகா ஹாலில் ஒரு பக்கம் விருது வாங்குபவர்களை வரிசையாக நாற்காலிகளில் உட்கார வைத்து இருந்தார்கள். எதிரில் புகைப்படக்காரர்கள். ஊடகங்களின் கேமராக்கள். பிளாஷ் ஒளி வெள்ளம். குடியரசத் தலைவர் உள்ளே வரும் போது எழுந்து நிற்க வேண்டும். தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டும். விருதுகள் வழங்கும்போது உட்காரலாம். மீண்டும் தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டும் போன்ற வழிகாட்டுதல்கள் அடங்கிய சிறு கையேட்டை எல்லா நாற்காலிகளிலும் வைத்து இருந்தார்கள். பிரதமர், சோனியா காந்தி, எதிர்க் கட்சித் தலைவர்கள் ஆகியோர் முதன் வரிசைகளில் அமர வைக்கப்பட்டிருந்தார்கள்.

குடியரசுத் தலைவர் வந்ததும் எல்லோரும் எழுந்து நின்றோம். தேசிய கீதம் இசைத்தார்கள். எழுந்து நின்றோம். ஆங்கில ஆட்சியின் சில மிச்சங்களை இன்னும் அப்படியே வைத்திருக்கிறோம். சில துவக்கச் சடங்குகளைப் பார்த்தபோது அந்த மரபு இன்னும் அப்படியே தொடர்வதைப் பார்க்க முடிந்தது.
உள்துறை செயலர் ஒவ்வொரு பெயராகப் படித்து அவர்களுடைய துறைûயுயம் அறிவிக்க உரியவர் முதல் நாள் ஒத்திகை பார்த்தபடி, நேராக நடந்து நின்று, முன்னோக்கிச் சென்று குடியரசுத் தலைவரிடம் விருதுகளை வாங்கி, பீறிட்டுக் கிளம்பும் பிளாஷ் ஒளி வெள்ளத்தை நோக்கிப் புன்னகைத்து, மீண்டும் ஒருமுறை வணங்கி சட்டையில் குத்தப்பட்ட விருதுடனும், ஒரு நீண்ட டப்பாவில் அழகாக வைத்துத் தரப்பட்ட பட்டயத்துடன் பெருமிதத்துடன் நடந்து அவர்களுடைய ஆசனங்களில் மீண்டும் அமர்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியவர்கள், அவர்களுடைய ஊர்க்காரர்கள் கூரையே இடிந்து விழும் வண்ணம் கைதட்டுகிறார்கள். எல்லாப் பெயர்களும் வரிசையாகப் படித்து முடித்ததும் மீண்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழாவை முடிக்கிறார்கள்.

பிறகு பக்கத்தில் உள்ள பெரிய கூடத்தில் விருந்து பரிமாறப்படுகிறது. அந்த விருந்தின் நேரத்தில் தங்களுக்கு வேண்டியவர்களைக் கட்டிப்பிடித்தும் கரங்களைக் குலுக்கியும் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். விருது வாங்கியவர்களும் சற்றுப் பரபரப்புடன் இருப்பதால் அவர்களுடன் நம்மால் சரியாகப் பேசமுடியாமல் போகிறது. சமோசாவையும் தேநீரையும் குடித்து இடத்தை விட்டு நகர்ந்தால் போதும் என்று ஆகிவிடுகிறது.

மீண்டும் காரை எடுக்க நடந்து செல்ல வேண்டிய தூரத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. இதற்கு வீட்டிலேயே தொலைக்காட்சியில் நிம்மதியாக இரண்டு கால்களை மேலே தூக்கி வைத்துப் பார்க்கலாம் என்று தோன்றியது.

மறுநாள் (11 மே 2008) அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பத்ம விருது பெற்றவர்களுக்குப் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் ஆனந்த் விசுவநாதன், மனோஜ் நைட் ஷியாமளன் ஆகியோர் 10ம் தேதியே ஊருக்குச் செல்வதால் தங்களால் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்து விட்டார்கள். பி.சுசீலா, சீர்காழி ஜி.சிவசிதம்பரம் மற்றும் மிருதங்க வித்வான் யெல்லா வெங்கடேஷ்வர ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் சுப்பிராம ரெட்டியை விமான நிலையத்தில் சந்தித்து இருக்கிறார் செயலர் முகுந்தன். இந்த விழா குறித்து சொன்னதும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்தார் சுப்பிராம ரெட்டி. அதே போல, நாடாளுமன்றத் தொடர் முடிந்து ஊருக்குப்போய்க் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, தன்னுடைய பயணத்தைத் தள்ளிப்போட்டு இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எம்.என்.கிருஷ்ணமணி தலைமை தாங்கினார். பொதுச் செயலர் இரா.முகுந்தன் வரவேற்புரை வழங்கினார். இணைச் செயலர் ரமாமணி சுந்தர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சுப்புராமி ரெட்டி தன்னுடைய பேச்சின் போது சசீலாவுக்கு மிகவும் தாமதமாக வழங்கப்படும் இந்த விருது அறிவிக்கும் வரை வியாதி ஒன்றுமே இல்லாத தனக்கே ரத்தக்கொதிப்பு ஏகமாக எகிறிவிட்டது என்றார். தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு ஒரு லட்ச ரூபாய் நன்கொடையாகத் தருவதாக அறிவித்தார். பிறகு கூடியிருக்கும் பார்வையாளர்களுக்கு எல்லாம் சிவனின் அருளை வழங்குகிறேன் என்று சொல்லி தெலுங்கு மாயாஜாலப் படங்களில் வருவது போன்ற மந்திரவாதி குரலில் உரக்க தேவி மந்திரங்களை உச்சாடனம் செய்தார். தான் உச்சாடனம் செய்யும் போது எல்லோரையும் கண்களை மூடிக்கொள்ளச்சொன்னார். 99 சதவிகிதம் பேர் பயபக்தியுடன் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

பிறகு பத்ம விருது பெற்றவர்களைப் பூங்கொத்து, பொன்னாடை, வெள்ளிக்குத்து விளக்கு ஆகியவற்றைக் கொடுத்து சிறப்பு செய்தார்கள். நான் வாழ்த்துரை வழங்கினேன். வழக்கம் போல எழுதி வைத்துத்தான் படித்தேன்.

பி.சுசீலா ஏற்புரை வழங்கினார். ஏனோ தெரியவில்லை. ஒன்றுக்கொன்று ஏதும் தொடர்பே இல்லாமல் பேசினார். கொஞ்சம் பாடிக்காண்பித்தார். கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் கொஞ்சம் பாடினார். அவரால் மேல் ஸ்தாயிக்கு சுலபமாகப் போகமுடியவில்லை. மிகவும் சிரமப் பட்டார். பாவமாக இருந்தது. தமிழுக்கு மூன்றெழுத்து, தெலுங்குக்கு மூன்றெழுத்து, மலையாளத்துக்கு மூன்றெழுத்து, கன்னடத்துக்கு மூன்றெழுத்து, மிருதங்கத்துக்கு மூன்றெழுத்து என்று விசித்திரமான கணக்குகளைப் போட்டுப் பேசிக்கொண்டிருந்தார். ஒன்றும் புரியவில்லை.

சீர்காழி சிவசிதம்பரம் மிகவும் நெகிழ்ச்சியுடன் தன் தந்தையாரையும் குருநாதரையும் நினைத்துக் கொண்டார்.

யெல்லா வெங்கடேஸ்வரராவ் பேசினார். தெலுங்கு வாடையுடன் தமிழில் பேசினார். நீண்ட நேரம் பேசினார். அவர் பேசியது நிறைய பேருக்கு ஒன்றும் விளங்கவில்லை. மேடையின் பின்னால் இருந்தவர்கள் ஹைதராபாத் சிவாவின் கச்சேரிக்கு நேரமாகிறது என்று பதட்டப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். உள்ளே இருந்து சீட்டு அனுப்பலாம் என்று தீர்மானித்த நேரத்தில் பேச்சை நிறுத்தினார். பொதுவாக இப்படி பாராட்டு விழா நடத்தும்போது யாராவது ஒருவரைத்தான் ஏற்புரை வழங்க அழைப்பது மரபு. அந்த மரபை உடைத்ததனால் இன்று சற்றுப் படவேண்டியிருந்தது என்று தோன்றியது.

இறுதியாக திருச்சி சிவா பேசினார். அற்புதமான பேச்சு. மிகவும் தெளிவாகப் பேசினார். விருது பெறும் கலைஞர்களைப் பாராட்டுவதன் மகத்துவைத்தைப் பற்றிப்பேசினார். நவம்பர் 13ம் தேதி அன்று பி.சுசீலாவின் பிறந்த நாள். அன்று அவரைத் திருச்சிக்கு அழைத்து மாபெரும் பாராட்டு விழா நடத்தப் போவதாகச் சொன்னார். இந்த நாளை நினைவு கொள்ளும் வண்ணம் பி.சுசீலாவுக்கு மெல்லிசைப் பேரரசி என்னும் பட்டத்தை வழங்கினார். வந்திருந்த அனைவரும் எழுந்து நின்ற கரகோஷம் எழுப்பினார்கள்.

பாராட்டு விழா முடிந்ததும் ஹைதராபாத் சிவாவின் கச்சேரி மிகவும் தாமதமாகத் துவங்கியது. தாமதமாகத் துவங்கினாலும் மனச்சுணக்கம் கொள்ளாது வெளுத்து வாங்கிவிட்டார் சிவா. அருணகிரி நாதர் பாடல்கள், நந்தனார் பாடல்கள், காயாத கானகத்தே போன்ற நாடகப் பாடல்கள், காவடிச் சிந்து போன்றவற்றை சிறிது நேரமே ஆனாலும் சிங்காரமாகப் பாடினார். உடன் வயலினில் வி.எஸ்.கே.சக்ரபாணி, மிருதங்கத்தில் தில்லைஸ்தானம் சூரியநாராயணன், மோர்சிங்கில் கரூர் சம்பத், கடத்தில் மன்னை கண்ணன் என அற்புதமான பக்கவாத்தியங்கள். இன்னும் கொஞ்ச நேரம் வாசித்து இருக்கலாமே என்று நினைக்க வைத்த ஒரு நிகழ்வு இது. ஆனால் அன்று இரவே ரயில் பிடிக்கப் போக வேண்டியிருந்ததால் அவசர அவசரமாகக் கச்சேரியை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம்.

இசைக்கலைஞர்களுக்கு அளித்த ஒரு பாராட்டு விழாவில் தமிழிசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். அதே போல, எங்கோ விமான நிலையத்தில் சந்தித்த சுப்புராமிரெட்டியை இந்த விழாவுக்கு அழைத்து அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையும் வாங்கிய முகுந்தனுக்கும் நம்முடைய பாராட்டுக்கள்.
ஆனாலும் ஒரு சில பாடங்கள் இதில் கிடைத்து இருக்கின்றன.
ஒன்று - நன்றாகப் பாடுபவர்கள் எல்லாம் நன்றாகப் பேசவேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது.
இரண்டு - திருச்சி சிவா போன்ற நல்ல பேச்சாளர்களைத் தனியாக அழைத்து அவருடைய சொற்பொழிவை ஏற்பாடு செய்ய வேண்டும்.
மூன்று - பாராட்டு விழாவையும் ஒரு நல்ல இசைக்கச்சேரிûயுயம் சேர்த்து வைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் இரண்டையும் ரசிக்க முடியாமல் போகிறது.
கீழே இருந்தவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.

Saturday, May 10, 2008

நாற்பது ஆண்டுக்கால உறக்கம் - ஒரு இலக்கியச் சொற்பொழிவு

நேற்று (9 மே 2008) தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பெ.சீனிவாசன் சிறப்பு இலக்கியச் சொற்பொழிவு ஆற்றினார். தலைப்பு - தமிழ் அன்றும் இன்றும்.
இப்போது அதிமுகவில் இருக்கும் சீனிவாசன் அந்தக் காலத்தில் திமுக சார்பாக விருதுநகரில், பெருந்தலைவர் காமராசரைத் தோற்கடித்தவர். தமிழக சட்டமன்றத்தில் துணை சபாநாயகராக இருந்தவர். மதியழகன் சபாநாயகராக இருந்தபோது அவையில் எற்பட்ட ஒரு பெருத்த விவாதத்தின் போது தானே ஒரு நாற்காலியை சபாநாயகரின் இருக்கையின் அருகில் இழுத்துப்போட்டுக்கொண்டு சபையை நடத்தியவர்.

பேசுவதற்கும் பழகுவதற்கும் மிகவும் எளியவராக இருக்கிறார். ""காமராசரைத் தோற்கடிச்சி தமிழ்நாட்டுக்கு நீங்க நல்லது ஒண்ணும் பண்ணலை. அப்புறம் எல்லாம் குட்டிச்சுவராத்தான் போச்சு என்கிற வருத்தம் உங்களுக்கு இல்லையா? என்று கேட்டேன். வேறு யாரிடமாவது கேட்டிருந்தால் பல்லெல்லாம் பெயர்ந்திருக்கும். மனிதர் ஒரு அற்புதமான சிரிப்புடன் ""என்னையா பண்றது? அது அரசியல்'' என்று பதிலளித்தார்.

மேடையிலும் அதே சௌஜன்யத்துடன்தான் பேசினார். தான் லண்டன் சென்றிருந்தபோது அங்கு ஒருவர் கேட்டாராம். ""நீங்கள் என்ன செய்கிறீர்கள்?'' என்று. இவர் சொல்லியிருக்கிறார் ""அரசியலில் இருக்கிறேன்.'' ""அது சரி. சாப்பாட்டுக்கும் பிழைப்புக்கும் என்ன செய்கிறீர்கள்?''அதுதான் சொன்னேனே அரசியலில் இருக்கிறேன். முழு நேர அரசியல்வாதி என்கிற அதிசயம் இங்கு மட்டும்தான் இருக்க முடியும் என்றார். ""நான் எம்.ஏ., பி.எல்., படித்து விட்டு குற்றவாளியாகத்தான் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேனே ஒழிய வழக்கறிஞராக ஒருநாள் கூடப் போனது இல்லை'' என்றார். ""தமிழர்களுக்குள் எந்தக் காலத்திலும் ஒற்றுமை இல்லை. அதனால்தான் அப்போதே மூன்று சாம்ராஜ்யங்களாகப் பிரிந்திருந்தது தமிழகம். இருக்கிற இத்தனூண்டு இடத்தில் சேரன், சோழன் பாண்டியன் என்று பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள்' என்றார். சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்குமான கால வேறுபாடு, இலக்கிய வளம் குறித்து நல்ல குறிப்புக்கள் சொன்னார். அதே போல வீரமாமுனிவர், ஜி.யு.போப் ஆகியோர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் குறித்துப் பேசினார். திருக்குறள் எவ்வளவோ லகுவாக இருக்கிறது. ஆனால் அவற்றுக்கு எழுதிய உரைகள் மஹா கஷ்டம் என்றார். அந்த உரைகளுக்கு யாராவது சுலபமாக உரைநடையில் இன்னும் ஒரு உரை எழுதத் தேவையாக இருக்கிறது என்று சொன்னார்.

இது எல்லாம் சரிதான்.

ஆனால் தற்கால இலக்கியம் பற்றிப் பேசியபோது அநியாயத்துக்கு உளறிக் கொட்டினார். தாங்கலடா சாமி என்று செய்து விட்டார். தற்கால இலக்கியம் பற்றி அவர் வந்ததும் ஒரு விஷயம் மிகவும் தெளிவாகப் புரிந்தது. அவர் இலக்கியம் என்று படிக்க உட்கார்ந்து குறைந்தது சுமார் நாற்பது ஆண்டுகளாவது ஆகியிருக்கும் என்று தெரிந்தது. கல்கிக்கு அப்புறம் யாரும் நாவல் எழுதவில்லை. ஜெயகாந்தன் விகடனில் எழுதத் துவங்கினார். ஆனால் இப்போது எழுதுவதில்லை. கேட்டதற்கு என் பேனாவில் மை தீர்ந்து விட்டது என்று என்னிடம் சொன்னார். சுந்தரராமசாமி போன்றவர்கள் எல்லாம் ஏதோ எழுத வந்தார்கள். ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இப்போதெல்லாம் கவிதை என்றால் இருவரிகளில் ஹைகூ என்கிறார்கள். சினிமாவில்தான் சினிமாப் பாட்டுக்களில்தான் தமிழ் வாழ்கிறது. கண்ணதாசன் நன்றாக எழுதிக்கொண்டிருந்தார். வைரமுத்து ஏதோ எழுதுகிறார். இப்போதெல்லாம் இலக்கியம் பாக்கெட் நாவல்களில் வந்து விட்டது. அவைதான் இலக்கியம். இப்படித் தத்துவ முத்துக்களாக பொழிந்து தள்ளினார்.

இவர் பேச்சில் இரண்டு விஷயங்கள் தெரிந்தன. ஒன்று, இவரை தமிழ்நாட்டில் இருந்து இந்தப் பேச்சுக்காக விமானப் பயணப்படி கொடுத்து தங்கும் செலவுகள் செய்து விளம்பரங்கள் செய்து தில்லித் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த இந்தக் கூட்டத்துக்கு இவர் எந்தவிதமான தயாரிப்பும் இன்றி, ஏதோ ஒரு உள்ளூர் தொகுதி பிரச்சாரக் கூட்டத்துக்கு வருவது போல வந்து மிகவும் தண்டமாகப் பேசிவிட்டுப்போனார்.

இரண்டாவது ஏற்கனவே சொன்னது போல. இவர் தமிழில் அக்கால இலக்கியம் அல்லது தற்கால இலக்கியம் படித்துக் குறைந்தது நாற்பது ஆண்டுகளாவது ஆகியிருக்க வேண்டும். மிக மிக நீண்ட கால உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்து பேசியது போல இருந்தது இவருடைய பேச்சு.
தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர் என்று பெயர் எடுத்தவர் சீனிவா"சன். ஒருவேளை திராவிட இலக்கியங்கள் பற்றிப் பேசத் தலைப்புக் கொடுத்திருந்தால் இவரிடமிருந்து மிக அற்புதமான விஷயங்களும் தகவல்களும் கிடைத்து இருக்குமோ என்று தோன்றியது.

ஆனால் நேற்றுக் கிடைத்தது என்னமோ மிகவும் அநியாயமான ஒரு சொற்பொழிவு.

Friday, May 9, 2008

நீயும் நானுமா.... ஒரு நீண்ட மோதலின் முடிவு...


இந்தியாவின் முதல் இருதய மாற்றுச் சிகிக்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தவர் டாக்டர் வேணுகோபால். அவருடைய வெற்றிகரமான முதல் இருதய மாற்றுச் சிகிச்சை வெற்றியடைந்த நாள் 3 ஆகஸ்டு 1994, இதனை சிறப்பிக்கும் வகையில் அன்றைய பிரதமர் வாஜ்பாய் 3 ஆகஸ்டு 2003 அன்று ஆகஸ்டு 3ம் தேதியை இருதய மாற்றுச் சிகிச்சை நாளாக அறிவித்தார். அதன் பிறகு அவர் வெற்றிகரமாக முடித்த இருதய மாற்றுச் சிகிச்சைகளின் எண்ணிக்கை 26 என்று சொல்கிறார்கள்.


ஜøலை 2003 அன்று தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் நிர்வாக இயக்குநராகப் பதவியேற்றார் வேணுகோபால். இருதய மாற்றுச் சிகிச்சையில் இமாலய அளவில் பெயர் குவித்த வேணுகோபால் ஒரு நிர்வாகியாகப் பெயர் எடுக்க முடியாமல் போனது மிகப்பெரிய துரதிருஷ்டம் என்கிறார்கள் அந்த நிறுவனத்தில் சில மருத்துவர்கள். அவர் நிர்வாக இயக்குநராகத் தன்னுடைய அலுவலக அறையில் அமர்ந்ததை விட ஆபரேஷன் தியேட்டர்களில் கழித்த நேரங்களே மிகவும் அதிகம் என்றார்கள். இவரை நிர்வாகக் காரியங்களுக்காக சந்திக்க வேண்டி பல மூத்த மருத்துவர்களும் நாட்கணக்கில் மாதக்கணக்கில் காத்திருக்க நேர்ந்தது என்றும் இவருடைய மிகவும் கரடுமுரடான அணுகுமுறை அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் பல மறைமுகமான மற்றும் நேரடி எதிரிகளை உருவாக்கியது என்றும் சொல்கிறார்கள்.

2006ல் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் மாணவர்கள் மேற்கொண்ட இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது இவர் போலீசை அழைத்து அவர்களைக் கைது செய்ய வைக்கவில்லை என்ற பெரும் குற்றச்சாட்டு இவர் மேல் எழுந்தது. இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் இவரையும் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள் மைய மருத்துவத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாசையும் ஆதரிக்கத் தொடங்கினார்கள். இதனால் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் இரு கோஷ்டிகள் உருவாகின. இப்படி ஒரு மருத்துவம் மற்றும் விஞ்ஞானக் கழகத்தில் இரு பிரிவாக மாணவர்கள் பிரிந்து போகக் காரணமாக ஆனார் என்று வேணுகோபால் மேல் குற்றம் சுமத்தத் துவங்கினார்கள். மருத்துவமனை வளாகத்தில் இவருக்கு எதிரான சுவரொட்டிகளை ஒட்டினார்கள்.

இவருக்கும் அன்புமணி ராமதாசுக்குமான மோதல் முற்றாக எப்போது வெடித்தது என்றால் மைய அரசினால் தில்லியில் அமைச்சருக்கான இல்லம் ஒன்று அன்புமணி ராமதாசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டபோதும் அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அறையினைக் காலி செய்யாமல் வைத்து இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார் வேணுகோபால். இதுவே இவர்களுக்கு இடையிலான முதல் உரசல் என்று தலைநகரில் சொல்கிறார்கள். அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் செயல்பாடுகள் பற்றி மிகவும் கடுமையான வகையில் கண்டனங்களைப் பதிவு செய்யத் துவங்கினார் அன்புமணி. மருத்துவக் கழகம் மற்றும் மருத்துவமனையின் செயல்பாடுகளில் வெகுவாகத் தலையிடுகிறார் அன்புமணி என்று ஊடகங்களில் குற்றம் சாட்டினார் வேணுகோபால். நிர்வாகத்தை சீரழித்து விட்டார் வேணுகோபால் என்று அன்புமணி குற்றம் சாட்டினார். வேணுகோபால் சார்ந்திருக்கும் இனத்தை மனத்தில் வைத்தே அன்புமணி அப்படி நடந்து கொள்கிறார் என்று வேணுகோபால் ஆதரவாளர்கள் விமர்சித்தார்கள். ஒரு வகையில் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் மருத்துவர்களும் மாணவர்களும் இரண்டு கோஷ்டிகளாகப் பிரிந்து எரிந்த கட்சி எரியாத கட்சி வாதங்களைப்போலத் தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.இருவருக்கிடையிலான மோதல் உச்ச கட்டம் அடைந்தது.

5 ஜøலை 2006 அன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார் வேணுகோபால். இந்தப் பதவி நீக்கத்தை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் அவர். பாஜகவின் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அருண் ஜேட்லி இவருடைய சார்பில் வாதாடினார். உயர்நீதிமன்றம் வேணுகோபாலுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. இதை எதிர்த்து மைய அரசு மேல்முறையீடு செய்தது. மீண்டும் அந்தத் தீர்ப்பை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் முன்பாகவே அவசர அவசரமாக வேணுகோபாலை பதவி இறக்கம் செய்யும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள். நவம்பர் 2007ல் All India Institute of Medical Sciences and Post Graduate Institute of Medical Education and Research Bill 2007 என்னும் மசோதாவுக்குப் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றார். இந்த மசோதா அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் இயக்குநரின் பணிக்கால வரம்பு 5 ஆண்டுகள் அல்லது அவருடைய வயது 65 என்று வரம்பு விதிக்கப்பட்டது. இந்த சட்டதிருத்தத்தின் அடிப்படையில் வேணுகோபால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இது வேணுகோபாலைக் குறி வைத்தே செய்யப்பட்டது என்று விமர்சிக்கப்பட்டது. விமர்சனம் எப்படி இருந்தாலும் இதுதான் உண்மை என்று வெட்ட வெளிச்சமாகப் பலருக்கும் தெரிந்திருந்தது.

அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் நிர்வாகத்தில் அன்புமணியின் தலையீட்டினைக் கடுமையாக எதிர்த்ததற்கு வேணுகோபால் பெற்ற பரிசு என்று அனைவரும் பேசிக்கொண்டார்கள். எழுதினார்கள். ஊடகங்களின் நேர்முகத்தில் பேசினார்கள். வேணுகோபாலுக்கு ஆதரவாக மாணவர்கள் போரட்டத்தில் இறங்கினார்கள்.

அன்புமணியின் ஆதரவாளர்கள் சொல்வது என்னவென்றால், வேணுகோபால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகவும் வேண்டியவர் என்பதால் 65 வயது வரைக்குமே வரம்பு விதிக்கப்பட்ட ஒரு பதவியில் அவர் 67 வயது வரை நீடிக்கிறார் என்றும் அன்புமணி ஆதரித்த சட்டதிருத்தம் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் நிர்வாக ரீதியில் சீர்திருத்தம் கொண்டுவருவதை மட்டுமே மனதில் கொண்டு செய்யப்பட்டது என்று வாதிட்டார்கள்.


அந்தப் பதவி நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேணுகோபால் செய்த முறையீட்டின் அடிப்படையில் நேற்று வேணுகோபாலுக்கு சாதகமான தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்த ஒரு மணிநேரத்துக்குள் டாக்டர் வேணுகோபால் அலுவகலம் சென்று கோப்புக்களில் கையெழுத்திடத் தொடங்கிவிட்டார். அந்தப் புகைப்படம் தில்லியின் தினசரிகளில் பெரிதாக வெளியிட்டு இருக்கிறார்கள். டாக்டர் வேணுகோபாலின் ஆதரவாளர்கள் இனிப்புக்கள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். மலர் அலங்காரம் செய்யப்பட்ட காரில் வேணுகோபாலை அலுவலகத்துக்கு அழைத்து வந்தார்கள் அவருடைய ஆதரவாளர்கள். இனி ஜøலை 2008 வரை வேணுகோபால் பதவியில் தொடரலாம்.


இந்தத் தீர்ப்பு வெளிவந்ததுமே பாஜகவினர் அன்புமணி பதவி விலகவேண்டும் என்று கூச்சல் போட ஆரம்பித்தார்கள். இது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டதிருத்தம் என்றும் அதனால் தான் பதவி விலகத் தேவையில்லை என்றும் பேட்டியளித்தார் அன்புமணி. காங்கிரஸ் தலைவர்களும் கொஞ்சம் அதிகம் சத்தம் இல்லாமல் அன்புமணிக்கு எதிரான ஆதரவுக்குரலில் அறிக்கைகளை வெளியிட்டார்கள்.


இந்த நீண்ட நாள் மோதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பு. ஆனால் இது முற்றுப்புள்ளியாக இருக்குமா என்பது தெரியவில்லை. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மைய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகும் என்று சொல்கிறார்கள். வேணுகோபாலின் பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு மாதங்கள்தான் இருக்கின்றன. அதற்குள் வேணுகோபாலை மீண்டும் ஒருமுறை போட்டுத்தள்ளி விடவேண்டும் என்று முயற்சிக்கிறார் அன்புமணி. முற்றிலும் ஆரோக்கியமற்ற இந்த மோதல் ஜøலை 2008ல் முற்றிலுமாக ஒரு முடிவுக்கு வந்து விடும்.

ஜøலை மாதத்துடன் வேணுகோபாலின் பதவிக்காலம் தானாகவே முடிவுக்கு வந்து விடும்.

சனிமூலை

வைணவ சம்பிரதாயத்தில் இரண்டு வகையான மார்க்கங்களைக் குறிப்பிடுவார்கள். ஒன்று மர்ஜய நியாயம். இன்னொன்று மர்க்கட நியாயம்.


அதாவது தாய்க்குரங்கையும் குட்டிக் குரங்கையும் பார்த்து இருப்பீர்கள். தாய்க்குரங்கு அங்கும் இங்கும் ஏறித் தாவிக் குதித்து சென்று கொண்டே இருக்கும். அதன் வயிற்றில் தொங்கும் குட்டி தாயின் வயிற்றை இறுகப் பற்றி இருக்கும். தாய்க்குரங்கு குட்டியைப் பற்றிக் கவலைப்படாது எங்கு வேண்டுமானாலும் ஏறித்தாவிப் பயணித்துக் கொண்டிருக்கும். குட்டிக் குரங்கு கீழே விழாதபடிக்குத் தாய்க்குரங்கின் வயிற்றை இறுகப் பிடித்திருக்கும். குரங்குக் குட்டி எப்படித் தன் தாயின் வயிற்றை இறுகப் பற்றிக்கொள்ளுமோ அதுபோல மனிதன் தன் முயற்சிûயுயம் சேர்த்து இறைவனை சரணாகதி புகுவது மர்ஜய நியாயம்.


தாய்ப் பூனையானது தன் குட்டியை அதன் கழுத்தில் கவ்விப் பிடித்து அங்கங்கு பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் சென்று வைக்கும். குட்டிப்பூனை யாதொரு பிரயாசையும் இல்லாது தன் பாட்டுக்கு இருக்கும். தாய்ப்பூனை அதனைக் காபந்து பண்ணிக் கொண்டிருக்கும். தாய்ப்பூனை தன் குட்டியைக் கவ்வுவது போல இறைவனே மனிதனை ரட்சிக்கிறார். நானொன்றுமறியேன். நீயே என்னைக் காத்தருள வேண்டும் என இறைவனின் பாதத்தில் சரணாகதியாக இருப்பது மர்க்கட நியாயம்.


வைணவத்தின் வடகலை மரபினர் மர்க்கட நியாயத்தையும் தென்கலை மரபினர் மர்ஜய நியாயத்தையும் கைக்கொள்கின்றனர் என்பார்கள்.


தமிழ் கூறும் நல்லுலகில் இப்போது கவியரங்கம் என்பது அங்கங்கு அடிக்கடி நடக்கும் ஒரு விசேடச் சடங்காக மாறி வருகிறது. அதுவும் ஊடகங்களின் படையெடுப்பு செழுமையடைந்த பின்னர் கவியரங்கங்களின் எண்ணிக்கையும் ஒருவகையில் கூடித்தான் வருகிறது. சுதந்திர நாள், குடியரசு நாள், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ஈத் பெருவிழா மற்றும் இப்போது மேலைய நாடுகளின் தாக்கத்தில் கொண்டாடப்படும் தாய்மார்கள் தினம், தந்தையர் தினம், மாமனார் தினம், மாமியார் தினம், மச்சினிகள் தினம், மச்சினர்கள் தினம், அத்திம்பேர்கள் தினம், அத்தங்காக்கள் தினம், காதலர் தினம், கைவிட்டவர்கள் தினம், விவாகரத்து பெற்றவர்கள் தினம் போன்ற விசேட நாட்களிலும் பல நட்சத்திரக் கவிஞர்கள் பங்கு கொள்ளும் கவியரங்கங்கள் வீடுதேடி இம்சித்து விட்டுச் செல்லும்.


இது தவிர, தமிழில் நடத்தப்படும் கவியரங்கங்களுக்குத் தொடர்ச்சியாக நட்பு கருதியும், ஊழ்வினைப் பயனாலும் மேலாளர்களுக்கு வெண்ணெய் அடிக்கும் உயர்ந்த நோக்கத்துடனும் கவியரங்கத்துக்குச் செல்லும் என்னைப் போன்றவர்களைக் காத்து ரட்சிப்பது - எல்லாம் வல்ல அந்த இறைவன் தான் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.


எனவே வைணவத்தில் மர்க்கட நியாயத்தில் சொல்லப்பட்டிருக்கும் பூனைக்குட்டியின் நிலைக்கு எந்த வகையிலும் குறையாதவர்கள் தமிழில் கவியரங்கங்களுக்குச் செல்லும் என்னைப் போன்றவர்கள் என்று சொல்லலாம்.


எல்லா மொழிகளிலும் கவிதையை மதிக்கிறவர்களை, கவிதையை நேசிக்கிறவர்களை, கவிதை என்னும் இலக்கிய வடிவத்தினைக் கொஞ்சம் தீவிரமாக எடுத்துக் கொள்கிறவர்களைக் கேட்டால், கவிதை என்பது ஒரு மலர் போல, ஒரு தென்றல்போல தானாக மலர்ந்தும் தவழ்ந்தும் வரவேண்டிய ஒரு விஷயம் என்று அடிப்படையாக ஒன்றைச் சொல்வார்கள். மலராக மலர்ந்து, தென்றலாகத் தவழ்ந்து வரும் கவித்துவம் சற்று மொழி நுட்பங்களையும் அழகியலையும் சேர்த்துக் கொண்டு ஒரு அழகியல் அனுபவமாக, அனுபவத்தை முகிழ்க்க வைக்கும் ஒரு செயல்பாடாக இருக்கலாமோ? இது ஒரு முடிவான விஷயமாகவும் இருக்காது என்று நினைக்கிறேன். இதற்குப் பிறகு ஒவ்வொரு கோஷ்டிக்கு வேண்டிய கவிதைக் கோட்பாடுகள் என்று பின்னர் எதையோ தொட்டுத் தொடர்ந்து வரலாம்.


முன்னொரு காலத்தில் கவிதை எழுதுகிறவர்களுக்குக் கவிதையியலின் அடிப்படை இலக்கண ஒழுங்குகள் தெரிந்திருக்க வேண்டும் என்று இருந்தது. தமிழ் படித்த பண்டிதர்களும் புலவர்கள் மட்டுமே, யாப்பிலக்கணம் தெரிந்தவர்கள் மட்டுமே கவிதை எழுதமுடியும் என்று இருந்தது. இதுபோன்ற தளைகளில் இருந்து விடுபட்டுப் புதுக்கவிதை யுகம் பிறந்தது. கவிதை புனைவதற்கான அடிப்படை இலக்கண விதிகளைப் புறக்கணித்து பாடுபொருளைப் பிரதானமாக வைத்து இயக்கங்கள் தோன்றின. இது மிகவும் அற்புதமான விஷயம். ஒரு மொழியின் இலக்கியப் பரப்பில் நேர்ந்த ஒரு யுகப்புரட்சி. ஒரு இலக்கண வடிவின் அடுத்த சக்தி மிளிர்ந்த பரிணாமம் இந்த மாற்றம்.


ஆனால் ஒரு முக்கியமான ஆபத்தும் உடன் தொடர்ந்து நிகழ்ந்தது. அந்த ஆபத்து என்னவென்றால் இந்த மாற்றம் ஒவ்வொரு தெருவுக்கும் குறைந்தது ஒரு பத்துக் கவிஞர்களை உருவாக்கியது. சுந்தரராமசாமி எங்கோ எழுதியது போல நான் சந்திக்கும் யாரும் இதோ நான் எழுதிய கவிதை என்று காட்டாத ஒரு நல்ல தமிழரை சந்திக்க வேண்டும் என்கிற ஆசையை இந்த மாற்றம் அதிகப்படுத்தியது. எதை வேண்டுமானால், என்னத்தை வேண்டுமானால் மடக்கி மடக்கி எழுதிக் கவிப்புனலாகவும், கவிதை அருவியாகவும், கவிச்சிங்கங்களாகவும், புலிகளாகவும் மாறிப்போகலாம் என்கின்ற ஒரு ஆபத்தும் உடன் தொடர்ந்து வந்தது.


இந்த ஆபத்தின் நீட்சி கவியரங்க மேடைகளிலும் விஸ்வரூபம் எடுத்துத் தொடர்ந்தது.


பட்டிமன்றத்தைப் போலவே கவியரங்கத் தலைப்புக்களுக்கும் அவர்கள் பாடும் பொருளுக்கும் தொடர்பு எங்கு தேடினாலும் கிடைக்காது. தொண்டை கிழியக் கத்தும் இரைச்சல்கள் தான் அதிகமாக மிஞ்சும். ஏற்கனவே சொன்னது போல, கவிதை என்பது ஒரு மலராக, தென்றலாக உள்ளார்ந்த ஒரு உணர்ச்சியாக மிகச்சரியான வார்த்தைகளைத் தானே தேர்ந்து மலர வேண்டிய ஒரு விஷயம். பல நேரங்களில் வார்த்தைகளுக்கு இடையில் உறைந்திருக்கும் மௌனமே கவிதையாக உருமாறும் விந்தை பல நல்ல கவிதைகளில் காணக்கிடைக்கும். உதாரணத்துக்குச் சொல்லவேண்டுமென்றால், கங்கை பிரவாகப் பாயும் ரிஷிகேஷ் போன்ற இடங்களில் இதை நீங்கள் உணர்ந்து இருக்கலாம். ஆற்று நீர்ப்பிரவாகம் ஆரவாரத்துடன் செல்லும் ஓசையின் இடையில் ஒரு நிமிடத்துளியின் இடையில் ஒரு சிறுகீற்றில் சட்டென்று மலர்கின்ற ஒரு அமைதி உங்களை ஒரு மாதிரியான தியான நிலைக்கு இழுத்துச் செல்லும். அந்த அமைதியை, அதாவது வார்த்தைகளுக்கு இடையில் உறைந்திருக்கும் மவுனமே பல அதிர்வெடிக் கருத்துக்களை சுமந்திருக்கலாம். சும்மா கூச்சல் போட்டுத்தான் எதையும் சொல்லியாக வேண்டும் என்பதில்லை இல்லையா?


ஆனால் நம்மூர்க் கவியரங்கக் கோமான்கள் செய்கின்ற காரியம் என்னவென்றால், தெருவில் விளையாடும் சிறுவர்கள் நாய்க்குட்டியின் கழுத்தில் கழுத்தை இறுக்கக் கட்டி அதைத் தரதரவென்று இழுத்துச் செல்வதைப் போலக் கவிதையின் கழுத்தில் வார்த்தைகளைக் கட்டி இழுத்துச் செல்வார்கள். அந்தக் குட்டி நாய் நான்கு கால்களையும் பரக்க விரித்துக் கொண்டு அங்குலம் கூட நகராமல் முரண்டு பிடித்து நிற்குமே அது போல கவிதை அனுபவமும் மேடையின் எங்காவது ஒரு மூலையில் எங்கும் நகராது முரண்டு பிடித்து நிற்கும். அப்போது அந்தக் கவியரங்கம் நடக்கும் அரங்கில் பூனைக் குட்டியைப் போல இறைவனிடம் முழுச்சரணாகதி அடைந்து கிடப்பவர்கள் நாமாகத்தான் இருக்க முடியும். அங்கு எவ்விதமான கவிதா அனுபவமும் நிற்காது. வெற்றுக் கூச்சல்கள்தான் மிஞ்சும்.


கவியரங்க மேடைகளில் பாடுபொருள் என்பது அநேகமாக எந்தக் கவிஞனின் கவிதையிலும் தேடினாலும் கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கும். ஒரு கவிதையின் அதிக நேரம் கவியரங்கத் தலைவருக்கு வெண்ணெய் அடிப்பதிலேயே கழியும். அதுவும் அந்தத் தலைவர் விதிவசமாக ஏதாவது அமைச்சராகவோ அல்லது அரசியல் தலைவராகவோ இருந்துவிட்டால் அந்தக் கவிஞனுக்கும் அவன் பாடும் கவிதைக்கும் எதுவும் தேவையில்லை. மேடையில் இருக்கும் அந்தத் தலைமைக் கவிஞருக்கு லாலி பாடுவதிலேயே பெரும்பொழுது கழியும். ஏறத்தாழ 99.90 சதவிகித ஜால்ரா இரைச்சலுக்குப் பின் போனால் போகிறதென்று ஒரு சிறு அளவில் பாடும் பொருள் அந்தக் கவிதையில் இடம்பெறும். கவியரங்கக் கவிச்சிங்கம் தலைவரின் கட்சியை சார்ந்தவராக அமைந்து விட்டால் சொல்லவே தேவையில்லை. தமிழ், தன்மானம் எல்லாம் தொலைத்து அந்தத் தலைவரின் காலில் விழுந்து விழுந்து தெண்டனிட்டு மானத்தை வாங்கித் தொலைக்கும். தலைவருக்கே போதும் போதும் என்று போகும் அளவில் ஜால்ரா சத்தம் காதைப் பிளந்து தள்ளிவிடும்.


அப்படி அரசியல் தலைவர் இல்லாத பட்சத்தில் உள்ளூர் லோக்கல் கவிச்சிங்கம் ஏதாவது அந்தக் கவியரங்கத்துக்குத் தலைமை வகித்தால் ஆண் பெண் என்கின்ற வர்ஜா வர்ஜியமில்லாது அந்தத் தலைமைக் கவிஞரின் அங்கலாவண்யங்கள் - அதாவது தலைவரின் உயரம், தலைமுடி, மீசை, நிறம், தொப்பை இத்தியாதி விஷயங்கள் பாடுபொருளாகும். எஞ்சிப்போன கொஞ்ச நேரத்தில் மற்ற கவிஞர்களைக் கால் வாரி விடுவதில் பொழுது கழியும்.


இதில் உச்சகட்டக் கொடுமை என்பது பட்டிமன்றப் பாணியில் ஏட்டிக்குப் போட்டி வாதாடுமன்றமாக அமையும் கவியரங்கங்கள்தான். இதில் எதிர் அணியினருக்கு சவால், அவர்களுடைய அந்தரங்கங்கள், ""அக்காவைக் கேட்டேன் - மாமா அசமஞ்சம் என்று அங்கலாய்த்தார்'' போன்ற கவித்துவ வரிகள் துள்ளிக்குதிக்கும். எதிர் அணியில் இருப்பவர் எந்த சொந்த மூட்டையை எப்போது அவிழ்த்து விடுவாரோ என்று அதற்கு எதிர் அணியில் இருக்கும் கவிக்கோமகன் அடி வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் திகில் மூட்டும் சம்பவங்களும் நடைபெறும். மேலே சொன்ன பல அம்சங்கள் தமிழ் தொலைக்காட்சிக் கவியரங்கங்களிலும் நடக்கும். எப்போதாவது நேரம் கிடைத்தால், அரசுத் தொலைக்காட்சியில் உருதுக் கவிஞர்களின் ""முஷையரா'' (கவியரங்கம்) கேட்டுப் பாருங்கள். அங்கு என்ன மாதிரி ஒழுக்கங்கள் கடைப்பிடிக்கப் படுகின்றன என்று பாருங்கள். பிறகு நம்முடைய தொலைக்காட்சி கவியரங்கங்களையும் பாருங்கள். நான் சொல்ல வருவது உங்களுக்குப் புரியும்.



அடுத்து நமக்கே உரிய வழிபாட்டுக் கலாச்சாரம். இந்த வழிபாட்டுக் கலாச்சாரம் கேள்வி முறை எதுவும் இல்லாது எதுவரை வேண்டுமானாலும் செல்லும்.


பெரியவர் அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவருடைய பெயர் அமர்க்களப்படாத கவியரங்க மேடைகளே இல்லையென்று சொல்லிவிடலாம். ""கலாமுக்கு சலாம்'' என்று சொல்லாத லோக்கல் சில்லறைக் கவிஞனே எவனும் இல்லையென்கின்ற அளவில் இமயமலை உச்சியிலிருந்து காரிமங்கலம் நரிமேடு வரை கவிதை எழுதுகிற எல்லோரும் ஒரு எதுகை மோனை சமாச்சாரத்துக்காக கலாமுக்கு சலாம் என்று சொல்லிப் படுத்தினார்கள். அவருக்கே போதும் போதும் என்று போகிற அளவில் படுத்தி எடுத்தார்கள். அதே போல, எந்த வகையிலும் கவிதை என்று சொல்ல முடியாதவற்றை பெரியவர் கலாம் எழுத முயற்சித்த போது அவர் பதவியில் இருந்த ஒரே காரணத்துக்காக அவற்றைக் கவிதைகள் என்று கொண்டாடினார்கள். நீங்கள் அவரையே கேட்டீர்கள் என்றால் தான் எழுதியவற்றைக் கவிதைகள் என்று ஒப்புக்கொள்வாரா என்று தெரியாது.


அதை விடக் கொடுமை என்னவென்றால், கவிதைகள் என்று நினைத்துப் பெரியவர் கலாம் எழுதிய ஏதோ ஒன்றுக்கு இசையமைத்துப் பாடத்துவங்கினார்கள் சில இசைமேதைகள். சில நடனமணிகள் ஒருபடி மேலே போய் அந்த ஏதோ ஒன்றுக்கு இசையமைத்து நாட்டிய வடிவமும் கொடுத்து ஸ்பான்சர்களிடம் எக்கச்சக்கமான சில்லறையை ஏற்பாடுசெய்து கொண்டார்கள். சில அமைப்புக்கள் பெரியவரையே சில கவியரங்க மேடைகளுக்குத் தலைமை தாங்க அழைத்தார்கள். அந்தக் கவியரங்க மேடைகளிலும் பெரியவரே பாடுபொருளானார். அது அவருக்கு நிச்சயமாகப் பிடித்து இருந்திருக்காது. அதைப்பற்றி எல்லாம் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவரே கூச்சப்படும் அளவுக்கு மாறிமாறி சலாம் அடித்து அவரையும் பார்வையாளர்களையும் மாறி மாறி வதைத்துக் கொண்டிருந்தார்கள்.


இப்படிக் கவியரங்க மேடைகளை வழிபாட்டுத் தலங்களாக மாற்றியமைக்கும் பெருமை நம்முடைய தமிழ்க் கவிஞர் பெருமக்களுக்கு மட்டுமே உண்டு. நல்ல பொருள் பொதிந்த கவிதைகளை, தலைப்பைத் தழுவிய கவிதைகளை, செறிவும், தெளிவும், அழகும் பொதிந்த கவிதைகளை எப்போதாவது நமது கவியரங்க மேடைகளில் கேட்க மிகவும் ஆசையாக இருக்கிறது.உங்களுக்கும் அப்படித்தானே?


ஜளவரி 2008 வடக்கு வாசல் இதழில் வெளியானது.

Thursday, May 8, 2008

மீண்டும் நான்...


ஒய்ந்தேன் என மகிழாதே

உறக்கம் அல்ல - தியானம்
பின் வாங்கல் அல்ல - பதுங்கல்
நன்றி - பசுவய்யா


ரொம்ப நாளைக்குப் பிறகு இந்தப் பக்கங்களில் நான்.

இடையில் எத்தனையோ வந்து போனது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல என்னுடைய சோம்பேறித்தனம்.

எழுதுவது என்பது எதையோ வெட்டி முறிக்கிற காரியம் போல ஆகிவிட்டது. ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற நல்ல படைப்பாளிகளைப் பார்க்கும் போது இரண்டு காதுகளிலும் மண்டி மண்டியாக, அலை அலையாக, மிகவும் அடர்த்தியாகப் புகை எழும்புகிறது.

அவர்கள் மிகவும் அதிகமாக எழுதுகிறார்கள். மிகவும் நன்றாகவும் எழுதுகிறார்கள். இந்த இரண்டும் என்னால் எப்போதும் முடியாத காரியம்.

சில சமயம் நினைக்கும் போது ரொம்பவும் பயமாக இருக்கிறது. காலம் நழுவிக்கொண்டே இருக்கிறது. ஓடுகிறது.

இந்த ஓட்டத்தில் சோம்பி உட்காருவது மிகவும் குற்ற உணர்ச்சியைத் தருகிறது.

படிக்கிறார்களோ இல்லையோ - யாருக்கும் பிடிக்கிறதோ இல்லையோ. எதையாவது எழுதி வைக்க வேண்டும்.

நாவல் எழுத ஆசையாக இருக்கிறது. மனதில் நிறைய ஆட்கள் தொந்தரவுசெய்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களை எந்த நாவலிலாவது உட்கார வைக்க வேண்டும். அவர்களை நடக்கச் செய்ய வேண்டும். அவர்களைப் பதிந்து வைக்க வேண்டும்.

நாடகம் எழுத ஆசையாக இருக்கிறது. நிறைய கதாபாத்திரங்கள் மனச்சுழலில் அலை பாய்ந்து கொண்டே இருக்கின்றன. அவர்களை எங்காவது பத்திரமாக வைக்கவேண்டும்.

எழுதுகிற ஆசை இருக்கிறவன் இதழ் நடத்தக் கூடாது என்பதை மிகவும் அதிகமாக செலவு செய்து கற்றுக்கொண்டவன் நான்.

ஒவ்வொரு மாதமும் கடன் தருகிறவர்களைத் தேடி ஓட வேண்டும். கடன் வாங்கியவர்களிடம் பயந்து ஓட வேண்டும். விளம்பரங்களுக்குப் பிச்சைப் பாத்திரம் ஏந்த வேண்டும். படைப்புக்களைச் சேர்க்க வேண்டும்.

திரும்பிப் பார்க்கும் வேளையில் அடுத்த இதழின் வேலைகள் துவங்கி விடுகின்றன.

எனவே எழுதுவது என்பது அநியாயத்துக்குத் தள்ளிப் போடும் காரியமாகவே இருக்கிறது. இப்போதெல்லாம் படிப்பதும் அப்படித்தான். வீட்டுக்குப் போய் தலைசாய்த்தாலே அடுத்த நொடி நித்திராதேவி வந்து தழுவிக்கொள்கிறாள். காலையில் எழுந்து எழுத வேண்டும் என்று நினைப்பது. ஆனால் முதல் நாள் இரவே அடுத்த நாள் காலையில் எழுந்ததும் எங்கே ஓடவேண்டும் என்ற நிர்ப்பந்தங்கள் முன்னே நிற்பதால் காலைவேளைகளில் எழுதுவதும் ஆகாத காரியம் ஆகிப்போகிறது.

இனி ஒரு நாளைக்கு ஒரு பக்கமாவது எழுத வேண்டும் என்று உறுதி எடுத்திருக்கிறேன். இதைப்போல எத்தனையோ உறுதிகள் வெறும் காற்றின் பக்கங்களில் எழுதியாகிவிட்டது. இதையாவது காப்பாற்ற வேண்டும்.

இப்போதைக்கு உடனடியாக என்னுடைய முந்தைய சனிமூலை கட்டுரைகள் சிலவற்றை இங்கே பதிக்கிறேன். ஒரு நாளைக்கு ஒன்றாக. நாளையில் இருந்து செய்தி விமர்சனங்களையும் எழுதத் திட்டம்.


பார்ப்போம்.

என்னதான் நடக்கிறது என்று.

நீங்கள்தான் பாவம்.

ராகவன் தம்பி