Saturday, December 14, 2013

இதுவும் என் விருப்பே...

பாலியல் தேர்வில் நான் Straight என்பதை இப்போது தயக்கத்துடன் கூறக்கூடிய காலகட்டத்தில் நிற்கிறோமோ என்கிற சந்தேகம் சற்று எழத்துவங்கியிருக்கிறது. இதுவரை ஓரினச்சேர்க்கை குறித்த அனுபவம் ஏதுமில்லை. 55 வயதுக்குப் பிறகு இதற்கு அவசியமும் இருக்காது என்று நினைக்கிறேன். நினைவு தெரிந்து என் சிறுவயதில் - சுமார் 10 அல்லது 12 வயது இருக்கும். வீட்டுக்கு அருகில் ஒருவன் சர்க்கஸ் நோட்டீஸ் கொடுப்பதாக ஒரு பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று என்னுடைய டவுசரைக் கழற்ற முயற்சித்த போது அவனுடைய கால் மீது பெரிய கல் ஒன்றைத் தூக்கிப் போட்டு வீட்டுக்குத் தலைதெறிக்க ஓடிய ஞாபகம் எப்போதாவது இதுகுறித்து பேசும்போது வரும். மற்றபடி ஓரினச்சேர்க்கை என்பது என்னுடைய தேர்வும் இல்லை. விருப்பமும் இல்லை. பெண்களுடனான கலவியில்தான் எனக்கு எப்போதும் பெருவிருப்பம். இதுவும் என்னுடைய சுதந்திரம்தான் என்று உறுதியாக நம்புகிறேன்.

ஓரினச் சேர்க்கை அல்லது வேறெதுவும் தனிமனித விருப்பம் அல்லது தேர்வு சார்ந்தது என்று நினைக்கிறேன். இது முற்றிலும் அந்தரங்கம் சார்ந்தது என்றும் நினைக்கிறேன். போனவாரம் உச்சநீதிமன்றம் பிரிவு 377 குறித்த தீர்ப்பை வழங்கியதும் இத்தனை நாட்கள் அடங்கியிருந்த பேச்சு குபீரென்று மீண்டும் கிளம்பியது. சில தொலைக்காட்சிகளில் (நான் இந்தியை சொல்றேனப்பா) ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் சிறுவர் சிறுமிகளுடன் அவர்களுடைய பெற்றோர்களும் கூட உட்கார்ந்து நாளையில் இருந்து என் பையன் என்ன செய்வான் என்பது போன்ற மிக முக்கியமான கவலையில் ஆழ்ந்ததும் சிங்வி சாஹிப்புக்கு கொடுரமான சாபங்கள் கொடுத்ததும் பார்ப்பதற்கு ஒரு மாதிரி இருந்தது.

இதுபற்றி சாங்கோபாங்கமாக ஏதாவது எழுத முயற்சிக்கலாமா என்றிருந்தேன். ஆனால் நான் எழுதி என்ன ஆகப்போகிறது? சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் போன்ற தேசபக்தர்கள் இதுகுறித்து தங்களின் தெளிவான கருத்தைக் கூறியிருக்கும்போது என்னைப் போன்றவர்கள் எல்லாம் சொல்லி என்ன ஆகப்போகிறது என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக் கொண்டு அமைதியைக் கடைப்பிடிக்க முயற்சிக்கிறேன்.

Tuesday, November 26, 2013

துரியோதனர்களும் துச்சாதனர்களும் சகுனிகளும்...

சில நிறுவனங்களில் அல்லது அமைப்புக்களில் தொடர்ந்து தவறு செய்பவர்கள் அல்லது கேப்மாரித்தனங்கள் செய்பவர்களுடன் சிலர் லஜ்ஜையில்லாமல் ஒட்டிக்கொண்டு திரிவார்கள். அந்த அமைப்புக்களில் பொறுப்பில் இருப்பவர்கள் அல்லது அதிகார மையங்களில் இருப்பவர்கள் என்ன தவறு செய்தாலும் அவர்களைக் கட்டிக் கொண்டு திரிவார்கள். மாலைகள் மாற்றிக் கொள்வார்கள். விருதுகளையும் பட்டங்களையும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டிருப்பார்கள். எந்தக் கேள்வியும் கேட்காமல் ஊழல் செய்பவர்களின் கால்களைக் கழுவி டு அந்தத் தண்ணீரைக் குடிப்பார்கள். தலையில் தெளித்துக் கொள்வார்கள். 

ஏதாவது ஒரு தருணத்தில் யாராவது அப்படி கேப்மாரித்தனங்கள் செய்பவர்களுடன் கோஷ்டி சேர்ந்து இருப்பவர்களை ஏதாவது கேள்விகள் கேட்க நேர்ந்தால் அந்த சொம்பு தூக்கிகள் எப்போதும் தயாராக வைத்திருக்கும் பதில் - “அந்த ஆள் அப்போது, அந்த சந்தர்ப்பத்தில் எனக்கு இந்த உதவி செய்தான். அவன் இல்லை என்றால் நான் நான் ஒன்றுமே இல்லை, அதனால் மட்டுமே அவன் செய்யும் எல்லா அக்கிரமங்களையும் வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டிருக்கிறேன். வேறு விதியில்லாமல் கூட இருந்து தொலைக்கிறேன்” என்று சமாதானம் சொல்வார்கள் அல்லது சொல்லிக் கொள்வார்கள். 

ஆனால் பொதுவாக உண்மையான காரணம் நிச்சயமாக இவர்கள் கூறிக்கொள்ளும் நன்றி உணர்ச்சி கிடையாது. 

இவர்கள் நிச்சயமாக கர்ணர்களாக இருக்க மாட்டார்கள். எந்தக் காலத்திலும் இவர்கள் சொல்லிக் கொள்வதைப் போல கர்ணனாக இருக்கவும் முடியாது.

தூண்டித் துருவித் தடவிப் பார்த்தால் ஒன்றை சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். அப்படிக் கேப்மாரித்தனம் செய்பவர்களுடன் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் அந்த நேரத்தில் கிடைக்கும் சில அல்ப லாபங்களுக்காகவும், அவர்களைப் பகைத்துக் கொள்ள இவர்கள் குலைநடுங்குவதால் மட்டுமே அப்படிக் கூட ஒட்டிக் கொண்டிருப்பார்கள். சில சில்லறை லாபங்களுக்காக மட்டுமே நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அவர்களுடன் அலைவார்கள். மற்றபடி இவர்கள் சொல்லும் அல்லது சொல்லிக் கொள்ளும் சமாதானம் வெறும் போலி வேடம்தான்.

துரியோதனர்களுடன் துச்சாதனர்களும் சகுனிகளும்தான் சேர்ந்து இருக்க முடியும். வேறு வழியில்லை.

Saturday, October 12, 2013

நான் மட்டும் இல்லையப்பா... அவனும்தான்...

எனக்கு ஒரு குட்டிக் கதை ஞாபகத்துக்கு வருகிறது.

தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு சென்றிருந்தான் மாப்பிள்ளை. இருவரும் வெளியில் கடைக்குக் கிளம்பினார்கள். வழியில் மாமனாருக்குக் கடன் கொடுத்திருந்த ஒருவன் எதிர்பாராமல் எதிர்ப்பட்டு மாமனாரின் சட்டையைப் பிடித்துக் கொண்டான். மாமனாருக்கு தர்மசங்கடமாகி விட்டது. சமாளிக்கும் வகையில் சொன்னான்.

“உனக்கு எப்படா கடன் கொடுக்கணும்? குடுக்கலைன்னா என்னடா பண்ணுவே?”

“இப்படி எல்லாம் பேசினா உன்னை செருப்பாலேயே அடிப்பேன்”

“தைரியம் இருந்தால் அடிடா பார்ப்போம்”

கடன் கொடுத்தவன் சடாரென்று செருப்பை உருவி பளீரென்று ஒன்று கொடுத்தான்.

மாமனார் அரண்டுவிட்டாலும் சமாளித்தான்.

என்னை அடிச்சிட்டே... தைரியம் இருந்தா என் மாப்பிள்ளை மேலே கை வைடா பார்ப்போம்...

“உன் மாப்பிள்ளை என்னடா புடுங்கி. இப்ப பாரு” என்று மாப்பிள்ளையையும் இரண்டு வெளுவெளுத்தான்.

சரி வாங்க மாப்பிள்ளை போகலாம் என்று மாப்பிள்ளையை அழைத்துச சென்றான் மாமனார்.

மாப்பிள்ளை வீட்டுக்குப் போய் மாமனார் செருப்படி பட்டான் என்று சொல்ல முடியாது பாருங்கள். அவனும் பட்டிருக்கிறானே.

ஏறத்தாழ இதுபோன்ற வேலைதான் டெல்லி தமிழ்ச் சங்கத்தில் தற்போது நடைபெற்று வருகிறது என்று தோன்றுகிறது. தமிழ்ச் சங்கத்தின் செயலாளரின் செட்டப் பட்டம் மற்றும் விருது வாங்கும் சுயமோகம் நாளுக்கு நாள் அதிகரித்து ஏறத்தாழ மனோவியாதி போல மாறிவிட்டது.

யாராவது இரண்டு பேர் சேர்ந்து கிடைத்தாலும் உடனடியாக அந்த இருவருக்கும் கற்பனையான அமைப்பு ஒன்றை உருவாக்கி அவர்கள் வழியாக தனக்கு செட்டப் விருதுகள் மற்றும் பாராட்டுக்களை உடனடியாக ஏற்பாடு செய்து கொள்ளும் அவருடைய சுயமோகம் குறித்து மூலைக்கு மூலை (சிலருக்கு தைரியம் இல்லைவிட்டாலும் மறைமுகமாவது) கிண்டல் செய்து வருகிறார்கள்.

பலரும் மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் என்பது அவருக்கும் தெரியும்.

என்னைப் போன்றவர்கள் இதைப் பார்த்து சத்தம் போட்டு சிரித்தாலும் பொறாமையில் சிரிக்கிறான் என்று தன்னுடைய ஜால்ராக்களை விட்டுக் கூறவைக்கிறார். அவர்களும் தங்கள் முன்பு எறியப்படும் சில பிஸ்கட்டுக்களுக்காக நேரம் கிடைக்கும் போது என்னைக் கடித்து குதற சந்தர்ப்பம் பார்த்து கொண்டிருக்கிறார்கள். சிலர் ஏற்கனவே பலமாக் கடித்தும் விட்டார்கள்.

சரி. விஷயத்துக்கு வருகிறேன்.

இந்த செட்டப் விருதுகளை வைத்து தன்மேல் எழும் கடுமையான விமர்சனங்களை சமாளிக்க ஒரு வழியைக் கண்டுவிடித்து விட்டார் தமிழ்ச் சங்கதிதின் செயலாளர் என்று தோன்றுகிறது. இப்போது தன்னுடன் கூட இருக்கும் தொண்டரடிப் பொடியாழ்வார்களுக்கும் அதே போல செட்டப் விருதுகள் ஏற்பாடுசெய்யத் தொடங்கிவிட்டார்.

தங்கள் கழுத்துக்களில் ஜவ்வந்தி மாலையும் தலையில் மஞ்சள் தண்ணீரும் தெளிக்கப்படுவதை உணர்ந்து கொள்ளாமல் இப்போது தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சில செயற்குழு ஜம்பவான்கள் தங்கள் செயலாளரைப் போலவே
செட்டப் விருதுகளை வாங்கி பெரிதாக ஃப்ளெக்ஸ் பேனர்களும் வைத்துக் கொள்ளத் துவங்கி விட்டார்கள்.

நாளை செயலரை மட்டும் தனியாக யாரும் விமர்சிக்க முடியாது இல்லையா? ஏம்பா. நான் மட்டும் தான் விருதுகள் வாங்கினேனா? ஒண்ணுக்கும் லாயக்கில்லாத இவன்களும் வாங்கலையா? என்று கேட்கலாமே.

டெல்லி தமிழ்ச் சங்கத்தில் இனி இப்படி நிறைய கேளிக்கை அம்சங்கள் கிடைக்கும்.

ஹை.. ஜாலிதான்.

Monday, July 15, 2013

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் பொருளாளர் திரு.பி.கன்னியப்பன் அவர்களின் எதிர்வினை.

தில்லித் தமிழ்ச் சங்க வரலாற்றிலேயே,  ( நான் இருமுறை பொருளாளராக இருந்த   காலம்  உட்பட )  எந்த செயலருக்கும், தலைவருக்கும் தங்கள் நடவடிக்கைகளை திறந்த மனதுடன் ( அதாவது வெளிப்படைத் தன்மையோடு  (- with transparecy ) எந்த உறுப்பினர்களுடனும் பகிர்ந்து கொண்டதாக வரலாறே இல்லை.  அப்படி இருக்க நீங்கள் மட்டும் இப்போது அப்படி அவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் உள்ளது ? 


நான் முதல் முறை பதவிக்கு வரும் முன்பாக நடந்த ஒரு பேரவைக் கூட்டத்தில் - சங்கத்தின் செயல்பாடுகள், மாதக் கணக்கு வழக்குகள், எல்லா உறுப்பினர் விபரங்கள் ( இது தேர்தல் வாக்காளர் பட்டியலுக்கு சமமானது ) - ஆகியவைகள் முதல் கட்டமாக சங்க வரலாற்றில் முதல் முறையாக வலயத்தில்  ஏற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தேன்.  நான் பதவி ஏற்ற பிறகு  அத்தனை விபரங்களும் கணணி  மயமாக்கப்பட்டும் - அதனை செய்ய விட்டார்களா? உரிய பயனர்  மற்றும் கடவுச் சொல்லுடன்.  சிதறிக் கிடந்த ( அதாவது பல முறை செயலராக இருந்து  தனக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும், தன உதவியின்றி பிறர் வாக்காளர் விபரம் பெறக் கூடாது என்று ரகசியமாக வைத்திருந்த  திரு. கிருஷ்ணமூர்த்தியின்) உறுப்பினர் விபரத்தைத் தரம் பிரித்து- அதாவது சாதாரண உறுப்பினர், அசோசியட் உறுப்பினர், ஆயுள் உறுப்பினர், Patron உறுப்பினர் என்பதையெல்லாம் தரம் கண்டு அவைகளைப் பிரித்து முறையே - அடையாளக் குறியாக உறுப்பினர் எண்ணுக்கு முன்      O, A, L and P என்று குறிப்பிட்டு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையையும் வழங்கினோம்.  இன்று வரை அதுதான், நான் வகுத்த அந்த முறை தான் அடிப்படையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. 

Friday, June 14, 2013

ஹஜ்ரத் பாபா ஃபரீத்

மனம் களைத்து சலித்து சோர்வடையும் போதெல்லாம், எனக்கென்று¬ சில வழிமுறைகளைக் கையாளுவேன். அந்த வழிமுறை, பகுத்தறிவு சிங்கங்களுக்கும், முன் நவீனத்துவ, பின்நவீனத்துவ இடை நவீனத்துவ அறிஞர் பெருமக்களுக்கும் அத்தனை உவப்பானதும் ஏற்றுக் கொள்ளும் விஷயமாகவும் இருப்பது சற்று கடினம். இருந்தாலும் மனதுக்குப் பட்டதையும் என்னுடைய அனுபவத்தையும் இங்கு பகிர்ந்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை என்று நினைக்கிறேன்.

மனம் சஞ்சலப்படும் போதும், பதட்டத்தில் இருக்கும்போதும், என்னுடைய புத்தக அலமாரியில் தனித்து வைக்கப்பட்டிருக்கும் பகவத் கீதை, திருக்குர்ரான் அல்லது விவிலிய நூல் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து விரிக்கும்போது கையில் சிக்கும் பக்கத்தைப் படிப்பேன். அந்தப் பக்கங்களில் ஏதோ ஒரு வகையில் எப்போதும் ஒரு விடை எனக்குக் காத்திருக்கும். ஆறுதல் காத்திருக்கும். எச்சரிக்கை காத்திருக்கும். பரிகாசம் காத்திருக்கும்.

பல சந்தர்ப்பங்களில் இப்படித் தெரிவு செய்து படித்த தருணங்களில் மனம் தெளிந்து லேசானதை உணர்ந்திருக்கிறேன். அனுபவித்து இருக்கிறேன். அதே போல, சில ஞானிகளின் கவிதைகளும் உரைநடையில் அமைந்த பல உபதேசங்களும் எனக்குப் பலவகைகளில் கை கொடுத்திருக்கின்றன. எதுவும் இல்லையென்றால் சிலநேரங்களில் இணையத்தில் மேய்ந்து ஏதேனும் ஒரு கவிதைப் பக்கத்தை எடுத்து வாசிப்பேன். அந்தக் கவிதைகளிலும் பல சூசகமான சமிக்ஞைகள் எனக்குக் கிட்டியிருக்கின்றன. இதனை என் நேரடி அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். பல நேரங்களில் பரவசப்பட்டு இருக்கிறேன். உணர்ச்சி மிகுதியில் நெகிழ்ந்து அழுதிருக்கிறேன்.

இன்று பிற்பகல் அப்படி ஒரு வலைத்தளத்தில் உலாவிக் கொண்டிருந்த போது ஹஜ்ரத் பாபா ஃபரீத் அவர்களின் கவிதை ஒன்று என்னை எதிர் கொண்டது.

ஹஜ்ரத் பாபா ஃபரீத் என்று நேசத்துடன் அழைக்கப்படும் ஃபரீஉத்தீன் கஞ்ஜ்ஷக்கர் 12ம் நூற்றாண்டை சேர்ந்த சூஃபி ஞானியாவார். பஞ்சாபி மொழியில் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறவர். ஹிந்துக்களாலும் இஸ்லாமியர்களாலும் மதித்து வணங்கப்படும் ஞானி. இவர் இயற்றிய பஞ்சாபி செய்யுட்கள் பலவற்றை சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

இவர் வாழ்ந்த காலத்தில், டெல்லியில் ஹஜ்ரத் பாபா பக்தியார் காக்கி மற்றும் ஹஜ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியா ஆகியோரை சந்தித்து இறைப்பணி ஆற்றியவர்.

நான் கீழே மொழிபெயர்த்து இருக்கும் ஹஜ்ரத் பாபா ஃபரீத் அவர்களின் இந்தக் கவிதையும் குரு கிரந்த சாஹிப்பில் இடம் பெற்றுள்ளது.

இந்த அருமையான செய்யுளை எனக்குத் தெரிந்த அளவில், இருக்கிறேன். சூஃபி இசை நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலைப் பாடிக் கேட்டு இருக்கிறேன். பஞ்சாபி மொழியில் பெயர்ச்சொல்லின் இறுதியில் ‘ஆ’ காரத்தை சேர்த்துக் கொள்வார்கள். பாடும்போது அந்த ‘ஆ’ காரம் சேர்த்த விளி கேட்க இனிமையாகவும் மனதுக்கு நெருக்கமாகவும் இருக்கும். உதாரணத்துக்கு “ஃபரீத்’ என்பதை ‘ஓ ஃபரீதா’ என்பார்கள். ‘புல்லே’ என்கிற பெயர்ச்சொல்லை, ‘ ஓ புல்லேயா’ என்று பாடுவார்கள்.

இந்தப் பாடலில் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மக்பூல் இலாஹி, Farid என்று துவங்கியிருப்பார். தமிழில் ‘ஆ’ காரம் சேர்த்தால் பெயரில் பாலினம் மாற்றம் அடைகிறது போல எனக்குத் தோன்றியது. எனவே, சற்று உரிமை எடுத்துக் கொண்டு பொதுவான வகையில், ‘ஓ ஃபரீத்’ என்று விளித்திருக்கிறேன். தவறாக இருந்தால் விஷயம் தெரிந்த அறிஞர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

இன்று என்னை நெகிழ வைத்த இந்த அற்புதமான செய்யுளை ஒரு சுமாரான மொழிபெயர்ப்புடன் உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. அந்தச் செய்யுள் இங்கே -

1

சரீரம் ஆன்மாவுடன்
மணம் புரிந்த நாளில்,
விதிக்கப்பட்ட மூச்சுக்களின்
மொத்தக் கணக்கும்
காகிதச் சுருளில் எழுதப்பட்டன.
இறுதி மூச்சை நெருங்கியதும்
பிரசித்தமான தேவதை ஒன்று
மூச்சுக்களின் மொத்த எண்ணிக்கையை
மரணத்திடம் கையளித்தது.

2

எலும்புகளை நொறுக்கிப் பிழிந்து
உயிரை எடுத்துச் செல்கிறது
இந்தத் தேவதை.
மூச்சை விடும்போது
நீயே உனக்குச் சொல் -
“அனைத்தையும் நிர்ணயிப்பது
கர்மவினையே”.

3

வாழ்க்கை - மனைவி
மரணம் அவளுடைய கணவன்
அவனுடைய திட்டத்துக்கு
‘ஆமாம்’ போட்ட பின்பு
அந்த நாளை அவளால்
எப்படி நிறுத்த முடியும்?

4

ரோமத்தை விட
மெலிதான
பருமனைக் கொண்டது
சொர்க்கத்துக்கான பாலம்.
அப்பாலத்தின்மேல்
வைக்கும் உன்னுடைய
காலடிச் சத்தங்கள்.
ஓ ஃபரீத்-
ஒரு குரல் ஏனோ
உள்ளீடாய்
எனக்குள் அதிர்கிறது -
பேராசையின் சீறல் கண்டு
உஷார்… உஷார்… உஷார்…

5

ஓ ஃபரீத்…
புனிதர்களின் வாயில்கள்
நுழையக் கடினமானவை!
உலக பந்தங்களை சுமந்து
அவற்றைக் கடக்க நினைத்தேன்
பாசாங்குகளை சுமையாகச்
சுமந்து சென்று
எங்கே அவற்றைப்
புதைத்து வைப்பேன்?

6

திகைக்க வைக்கும் மிக
ஆழமான ஓர் புதிர் அது…
உலக வாழ்க்கை –
பதுக்கி வைத்த
பெருநெருப்பு
அல்லாஹ் எனக்கோர்
அருளைப் புரிந்தார்.
இல்லையெனில்
அதில் நானும்
முற்றாய் எரிந்திருப்பேன்.

7
ஓ ஃபரீத்!
வாழ்க்கையின் ஆழி விதைகள்
அளவில் சிறிதாக இருந்தால்
நிறுத்தி சற்றே யோசி-
உள்ளங்கைகளில் அவற்றைக்
குவித்து வழிக்க முனையாதே
உன்னுடைய துணைவன்
முதிர்ச்சியற்று இருந்தால்
பெருமை கொள்ளாதே.
கர்வத்துக்கு
வீழ்ச்சி என்பது
என்றும் உண்டு.

8

என்னுடைய பிடி
நழுவிப் போகும்
என்பதை நானறிந்திருந்தால்
அவனை நான்
இறுகப் பற்றியிருப்பேன்.
என் நாயகனைவிட
வேறேதும் கிடையாது
இந்த உலகிலும்
அதற்கப்பாலும்.

9

ஓ ஃபரீத்!
நற்புத்தி உனக்கிருந்தால்
உன் காகிதச் சுருளை
மைக்கறை ஆக்காதே ,
புறம் பேசுவோர்
உன்முன் சுருளுமுன்
சிரம் தாழ்த்தி
உன்னை உனக்குள்
விழித்துப் பார்.

10

ஓ ஃபரீத்!
உதையும் அடியும்
உனக்குக் கிட்டியிருந்தால்
அடிக்கு அடியும்
உதைக்கு உதையும்
திருப்பித் தராதே.
அவர்களின் பாதங்களைப்
பணிவுடன் முத்தமிடு,
பின்னர் வீடுதிரும்பு.

11

ஓ ஃபரீத்!
நற்காரியங்கள்
செய்வதற்கான நேரத்தை
வண்ணமயமான
இளமைக் காலத்தில்
அனுப்பி வைத்தாய்.
மேலும்
மரணத்தை
உன் ஆன்மா நேசிக்கும்.
விதிக்கப்பட்ட மூச்சுக்கள்
நிறைவு பெற்ற கணமே
ஆன்மா எனும் படகுக்கு
மரணம் துடுப்பாகும்.

12

இதோ பார் ஃபரீத்!
காலத்தின் ஓட்டத்தில்
வயோதிகத்தால்
நரைத்துத் திரளும்
உன்னுடைய தாடி.
வருங்காலம் உனக்கருகில்
இறந்த காலம்
வெகுதொலைவில்.

13

ஓ ஃபரீத்…
இங்கு எல்லாமே
தலைகீழ்தான்,
இங்கு
சர்க்கரை விஷமாகும்.
என்னைக் குணமாக்கும்
என்னுடைய ஆண்டவனை விட்டு
என் கேடுகளை
வேறு யாரிடம்தான்
ஒப்படைப்பேன்?

14

ஓ ஃபரீத்
காட்சிகளால்
களைப்படைந்தன
கண்கள்
கேட்டவற்றால்
காதுகள் புண்ணாகின.
உண்மைதான் -
காய்ப்புக் காலத்தில்
வேறு கிளைகளை
சூடுகின்றன விருட்சங்கள்.

15

என்னுடைய கேசம்
முற்றிலும் கருத்திருந்தபோது
அவனை நான் வணங்கவில்லை.
இப்போது எங்கும் நரைத்திரள்,
எப்படி அவனை நான் வணங்குவது?
நாயகனை நேசியுங்கள்!
எதற்கும் எப்போதும்
தாமதம் கிடையாது!
உ ன்னுடைய நரைத்திரளை
கறுக்க வைத்திடுவான் அவன்.

16

பலவீனம்
அல்லாஹ்வின் மேல்
காதல் கொள்ளும்.
யாராக இருப்பினும்
ஒன்றாக இருப்பினும்
பலவாக இருப்பினும்
பொங்கி வழிய
அன்பினைக் கோப்பையில்
தான் விரும்பும் யாருக்கும்
அன்புடன் அளிக்கலாம்.

17

ஓ ஃபரீத்!
அந்தக் கவர்ச்சியான கண்கள்,
கவர்ந்திழுக்கும் வார்த்தைகள்
தங்களின் பருவகாலத்தில்
புருவக் கண்மை வரிகளின்
பளுவை அவர்களால்
தாங்க முடிந்ததில்லை.
பறவைகளை அவை
அடைகாத்ததை பார்த்திருக்கிறேன்,
பகல் நேரங்களில்.

18.

ஓ ஃபரீத்!
களங்கம், அறிவுரை
மற்றும் கடிந்துரை என
அனைத்தும் வீணாகின:
சாத்தான் முத்திரையிட்ட
இதயம் என்றும்
உன் கோரிக்கைகளுக்கு
செவி சாய்க்காது.

19

ஓ ஃபரீத்!
நாயகனை நீ தேடும்போது
பணிவான புல்லாகக் குனிந்திடு
வெட்டியும் உரித்தும்
ஊறவைத்தும் மிதிபட்டும்
மிருதுவாகப் பதப்படுத்தப்பட்டும்
பிரார்த்தனைப் பாயாக உருமாறி
நாயகனின் இல்லத்தில்
பிரவேசிக்க அனுமதி பெறுகிறது.

-ஹஜ்ரத் பாபா ஃபரீத்

(ஆங்கிலம் வழித் தமிழில் – யதார்த்தா கி. பென்னேஸ்வரன்)
உசாத்துணை – விக்கிவீடியா
ஆங்கிலத்தில் இந்த செய்யுளை வாசிக்க
http://www.chishti.ru/poem-hazrat-farid.htm

Thursday, May 16, 2013

தமிழ்த்தாய்க்கு நூறு கோடியில் சிலையும் டெல்லி தமிழ்ச் சங்கத்துக்கு அலங்காரத் தோரண வாயிலும்...

தமிழ்த்தாய்க்கு மதுரையில் நூறு கோடி ரூபாயில் சிலை என்கிற செய்தியை முகநூல் மற்றும் வலைப் பக்கங்களில் அக்குவேறு ஆணிவேறாக அலசி எடுத்து வருகிறார்கள்.

இந்தப் பதிவுகள் அனைத்திலும் உள்ளீடாகப் பொதிந்திருக்கும் விஷயம் நேர்மையான ஆதங்கம் மட்டுமே.

தமிழ் வளர்ச்சிப் பணிக்கென எத்தனையோ விஷயங்கள் நிலுவையில் இருக்கும் வேளையில் இதுபோன்ற சிலை வைக்கின்ற சமாச்சாரங்கள் எல்லாம் ஜெயலலிதாவின் feudalistic மனப்பான்மையைத்தான் காட்டுகிறது. தமிழ்க் கல்வி என்கிற விஷயம் வெகுவாகக் கைநழுவிப் போய்க் கொண்டிருக்கிறது. அதன்மீது எத்தகைய நேர்மையான கவனமும் செலுத்தப்படவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கும் விஷயம்.

தமிழ்ப் பற்று சமாச்சாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தான் சற்றும் குறைந்தவர் அல்ல என்று காட்டிக்கொள்வதற்காகவே இதுபோன்ற அறிவிப்புக்களை வெளியிடுகிறார் ஜெயலலிதா என்று தோன்றுகிறது. கருணாநிதியின் தமிழ்ப் பற்று விவகாரங்கள் எல்லாம் இப்போது இணையத்திலும் இளைய தலைமுறையினரிடமும் சிரிப்பாக சிரித்துக் கொண்டிருக்கிறது. எனவே தமிழக அரசு இதுபோன்ற வெட்டியான போட்டிக்காக மக்களின் வரிப்பணத்தை இப்படி எல்லாம் விரயம் ஆக்கி இருக்க வேண்டாம்.

அப்புறம் டெல்லி தமிழ்ச் சங்கத்துக்கு முத்தமிழ் தோரண வாயில் கட்டுவதற்கு 25 லட்ச ரூபாய் ஒதுக்கி இருப்பது குறித்த முதல்வரின் அறிவிப்பும் பல இடங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

குறிப்பாக டெல்லியில் ஏழு தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வெகுவாக, ஏறத்தாழ 90 சதவிகிதத்துக்கும் மேல் ஏழைக் குடும்பங்களை சேர்ந்தவர்கள். இந்த ஏழை தமிழ்க் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மிகவும் குறைந்த செலவில், தரமான கல்வி கிட்டி வருகிறது. இப்பள்ளிகள் டெல்லி தமிழர்களின் பெருமையான அடையாளமாகத் திகழ்கின்றன.

இப்போது இந்த ஏழு பள்ளிகளுக்குக் கூடுதலாக மயூர்விஹார் பகுதியில் எட்டாவதாக பள்ளி ஒன்றைக் கட்டுவதற்கு டெல்லி அரசு நிலம் ஒதுக்கியிருக்கிறது. இந்த எட்டாவது பள்ளியைக் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது டெல்லி தமிழ்க் கல்விக் கழகம்.
இந்தப் பள்ளி துவங்கினாலும் கிழக்கு டெல்லி பகுதியில் உள்ள மிகவும் பின்தங்கிய ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகள் தான் அதிகம் பயன் அடையப்போகிறார்கள்.

டெல்லியில் இவை போன்ற கல்வி முயற்சிகள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி கவனத்துகுகு செல்லாதது மிகவும் ஆச்சரியம் மற்றும் வருத்தம் அளிக்கிறது.

டெல்லி தமிழ்ச் சங்கத்துக்கு வெறும் ஆடம்பரத்துக்காக அலங்காரத் தோரண வாயில் கட்டுவதற்கு 25 லட்ச ரூபாய் ஒதுக்கிய தமிழக அரசு, டெல்லியில் நடைபெற்று வரும் கல்விப்பணிக்கும் கணிசமான தொகையை ஒதுக்கியிருக்கலாம். பல ஏழைப்பெற்றோர்களின் வாழ்த்துக்களுக்கு ஆளாகியிருப்பார் ஜெயலலிதா. இந்த நல்ல வாய்ப்பை இப்போது அவர் தவற விட்டிருக்கிறார்.

இந்த முத்தமிழ் தோரண வாயில் குறித்த இன்னொரு முரண்பாடான விஷயமும் இருக்கிறது.

கருணாநிதி. முதல்வராக இருந்தபோது தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகள் இதற்காக கணிசமான நிதியைக் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்கள்.

இப்போது ஜெயலலிதா நிதி ஒதுக்கியிருக்கும் இந்த அலங்கார வாயிலுக்கு முத்தமிழ் தோரண வாயில் என்று பெயர் சூட்டியதே அன்றைய முதல்வர் கருணாநிதிதான். இதற்கான அடிக்கல்லை கருணாநிதிதான் நாட்டியிருக்கிறார் என்பதும் அனைவரும் அறிந்த விஷயம்.

இந்த விஷயம் அநேகமாக இன்றைய முதல்வரின் பார்வைக்கு மொத்தமாக மறைத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி மறைக்கப்படாமல் இருந்திருந்தால் தன்னுடைய பிரதான அரசியல் எதிரி கருணாநிதி அடிக்கல் நாட்டி இருக்கும் ஒரு திட்டத்துக்கு 25 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கும் அளவுக்கு ஜனநாயகத் தன்மையும் பரந்து பட்ட பார்வையும் கொண்ட ஒரு புதிய ஜெயலலிதாவைப் பார்க்கும்போது உண்மையிலேயே பலருக்கும் ஆனந்த அதிர்ச்சியாகத் தான் இருந்திருக்கும்.

ஏற்கனவே தில்லி தமிழ் சங்கம் என்னும் அமைப்புக்கு அளிக்கப்பட்ட தமிழ்த்தாய் விருதினைப் பெற்றுக் கொண்டு அதனைத் தனக்கு மட்டுமே அளிக்கப்பட்ட விருது போல தன்னுடைய அடிப்பொடிகளை வைத்து ஊரெல்லாம் போஸ்டர்களும் பேனர்களும் வைத்துக்கொண்ட டெல்லி தமிழ்ச் சங்கத்தின் செயலாளருக்கு இன்னொரு செட்டப் போஸ்டர் அடித்துக் கொள்ள ஒரு வாய்ப்பினை அளித்திருக்கிறது தமிழக அரசு.

அப்புறம் டெல்லி தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அடித்து வெளியிடும் போஸ்டரும் பேனரும் அண்ணா திமுக கட்சிக்காரர்களுடன் கடுமையான போட்டியில் ஈடுபடுவதைப் போல உள்ளது. டெல்லி தமிழ்ச் சங்கம் ஒரு பண்பாட்டு நிறுவனம். கட்சி பேதங்களைக் கடந்தது. தலைநகரில் இருப்பதால் தமிழகத்தின் அரசியல் பேதங்களுக்குள் அடங்காத தன்மை கொண்டது. ஆனால் அந்தத் தன்மையை கேள்விக் குறியாக்கி வருகிறது டெல்லி தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் செட்டப் செய்யும் போஸ்டர்கள்.
தமிழகத்தின் முதல்வரை அதிமுக கட்சியின் தொண்டரடிப் பொடிகளைப் போல புரட்சித்தலைவி – தங்கத்தாய் – அம்மா -என்றல்லாம் விளிப்பது தமிழ்ச் சங்கத்தின் அரசியல் சுதந்திரத் தன்மையை இழிவு படுத்துவது போல இல்லையா?

இந்தப் பட்டங்கள் எல்லாம் சில சலுகைகளுக்காகக் கப்பறை ஏந்தும் கட்சிக்காரர்கள் தங்களின் அரசியல் லாபத்துக்காகக் கொடுப்பதுதானே? இவை எல்லாம் நமக்கு எதற்கு? டெல்லியின் முதல்வரை சின்னப் பெண்களும் பையன்களும் கூட ஷீலாஜி என்று உரிமையுடன் அழைப்பதை நிறைய விழாக்களில் நேரடியாகக் கண்டிருக்கிறேன்.

டெல்லி தமிழ்ச் சங்கத்தைப் பொறுத்தவரையில் மாண்புமிகு தமிழக முதல்வர் என்று அழைத்திருந்தால் போதுமே. தங்கத்தலைவி, புரட்சித்தலைவி சமாச்சாரங்கள் எல்லாம் எதற்கு?

எல்லாம் இருக்கட்டும்.

தமிழக அரசு, தில்லி தமிழ்ச் சங்கத்துக்கு ஆடம்பர அலங்கார வாயிலுக்காக மேலும் 25 லட்ச ரூபாய் ஒதுக்கட்டும். அதை வைத்து அதன் செயலாளர் டெல்லியின் சுவர்கள் எல்லாம் போஸ்டர்களும் பேனர்களும் வைத்துக் கொள்ளட்டும்.

அதே நேரத்தில் தலைநகரில் ஏழைத் தமிழ்க் குழந்தைகளுக்குக் கல்வி விளக்கேற்றும் வகையில் எட்டாவது பள்ளிக்கும் தமிழக அரசு நிதி ஒதுக்கியிருந்தால், அல்லது இனியும் ஒதுக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதுதான் என்னைப் போன்ற பலரின் ஆதங்கமாக இருக்கிறது.

இப்போது கூட ஒன்றும் கெட்டுவிடவில்லை. சற்றுப் பெரிய மனதுடன் தமிழக முதல்வர் இந்தப் பள்ளிகளுக்கு உதவிட முன்வரலாம். இந்தப் புதிய பள்ளி காலத்துக்கும் அவருடைய பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்.