Monday, March 9, 2009

நாடக மேடையேற்ற அனுபவங்கள்

என்னுடைய முதல் மேடை நாடக அனுபவம் பற்றி சில மாதங்கள் தொடர்ச்சியாக வடக்கு வாசல் இதழின் சனிமூலை பகுதியில் வெளிவந்த கட்டுரைகளை சில நாட்களாக தொடர்ச்சியாக பதிவேற்றம் செய்து வந்தேன். நல்ல வேளையாக இன்றுடன் இந்தத் தொந்தரவு உங்களுக்கு ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது.

சனிமூலையில் இந்தக் கட்டுரைகளைப் படிக்காதவர்களுக்காக இந்தத் தண்டனை. இனி நாளையிலிருந்து சமர்த்தாக அரசியல் நிகழ்வுகள் பற்றியும் நூல் மதிப்புரைகளையும் எழுதலாம் என்று இருக்கிறேன்.

உங்கள் அனைவரின் அன்புக்கு நன்றி.

நீங்கள் எப்போதும் அளித்து வரும் ஆதரவுக்கும் ஊக்கத்துக்கும் ரொம்ப நன்றி.
எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் சகிப்புத் தன்மைக்கும் பொறுமைக்கு மிக்க நன்றி.


ராகவன் தம்பி

கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞனின் இந்திக் கவிதையை என்னுடைய முதல் மேடை நாடகமாக தலைநகரில் மேடையேற்றிய அனுபவங்களை சில மாதங்களாக உங்களுடன் இங்கே பகிர்ந்து வருகிறேன்.

இந்த இதழுடன் அந்தப் பதிவுகளை ஒருவழியாக முடித்துக் கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியான செய்தி கண்டு உடனே அவசரப்பட்டு ஏதும் சந்தோஷம் அடைய வேண்டாம். இக்கட்டுரையின் இறுதியில் உங்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தியையும் வைத்திருக்கிறேன்.

சென்ற இதழில் நாடக மேடையேற்றத்துக்கு சில நாட்களே இருந்த நிலையில் அப்பாவின் மரணச் செய்தி கேட்டு நாடகத்தைத் தள்ளி வைத்து ஊருக்குக் கிளம்பிப் போனதுடன் நிறுத்தியிருந்தேன். கிருஷ்ணகிரியில் அப்பாவின் இறுதிச் சடங்குகள் நடந்தன. மொத்தம் பதின்மூன்று நாட்கள் நடைபெற்றன சடங்குகள். ஒருபுறம் அப்பாவின் இழப்பு, இன்னொருபுறம் தில்லியில் அறைகுறையாக விட்டு வந்த நாடகம் என மனது எதிலும் நிலையாது சித்திரவதைப் பட்ட நாட்கள் அவை. அப்பாவின் தினசரி திவச காரியங்களை முடித்து தலைதெறிக்க தில்லி நோக்கி ஓடிப்போனேன். அப்பாவின் அஸ்தியை தில்லியில் யமுனையிலும் ஹரித்வார் சென்று கங்கையிலும் கரைத்து விட்டு மீண்டும் நாடக ஒத்திகைகளில் கவனம் செலுத்தினேன். மீண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்தோம். சவுத் இந்தியா கிளப் சத்தியமூர்த்தி அரங்கில் ஒத்திகைகள் தொடர்ந்தன.
குளிர் மிகுந்த டிசம்பர் மாத இரவுகள் மற்றும் பிற்பகல் நேரங்களில் ஒத்திகைகள் நடைபெற்றன. ஊரிலிருந்து திரும்பி வந்ததும் வெறும் 8 நாட்களே இருந்தன. மிகுந்த பரபரப்பில் ஒத்திகைகள் தொடர்ந்தன. மேடை நாடகத்தில் எவ்வித அனுபவமும் எனக்குக் கிடையாது. இதற்காகப் பலரின் உதவியை நாடினேன். தேடித்தேடி அரங்கப் பொருட்களை சேர்த்தோம். ஒப்பனைப் பொருட்கள் மற்றும் உடைகளை நச்சு கவனித்துக் கொண்டான். முக்திபோத் கவிதையில் சுவரொட்டிகள் இரவு நேரங்களில் சுவர்களில் இருந்து பிய்த்துக் கொண்டு வெளியே வந்து நடனமிடும். தங்களுக்கான உரிமைகளை முழக்கமிடும். இதற்காகப் பெரிய பெரிய சுவரொட்டிகளை நச்சுவே வரைந்தான். வெங்கட்டும் இளஞ்சேரனும் ஓடி ஓடி ஒப்பனைப் பொருள்களைச் சேர்த்தார்கள்.ஒலி, ஒளி ஒத்திகைகளைப் பார்க்க எங்களுக்கு நேரம் இல்லை. வசதியும் இல்லை. சொல்லப் போனால் நாங்கள் பார்த்த முதல் ஒலி, ஒளி ஒத்திகை என்பது நாடக அரங்கேற்றத்தின் போது மேடையில் பார்த்ததுதான். அந்த நாடக மேடையேற்றத்தைத் தான் நாங்கள் பின்னாளில் அந்த நாடகத்தின் இறுதி ஒத்திகை என்று கேலியுடன் பேசிக்கொள்வோம். (சொல்லப் போனால் நான் இயக்கிய ஒவ்வொரு நாடக மேடையேற்றமும் அந்த நாடகத்தின் இறுதி ஒத்திகை மட்டுமே என்று நேர்மையுடன் நம்புகிறேன். முழுமை என்பது முடிவில்லாதது இல்லையா-?
1988ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி தில்லி பாராகம்பா சாலையில் உள்ள சப்ரூ ஹவுஸ் கலையரங்கில் யதார்த்தா நாடக இயக்கத்தின் முதல் மேடை நாடகமான "சாந்த் கா மூ டேடா ஹை'' வெற்றிகரமாக மேடையேறியது. சப்ரூ ஹவுஸ் அரங்கில் தமிழர்களும் வட இந்தியர்களும் அடங்கிய கூட்டம் நிரம்பி வழிந்தது.
ஒவ்வொருவரும் மிகவும் சிரமம் எடுத்துக் கொண்டு உயிரைவிட்டு நடித்தார்கள். கிடைத்த மிகக் குறைந்த ஒளியமைப்பு வசதியில் ரவீந்திரனும் மாயத்தை நிகழ்த்தியிருந்தார். என்னுடைய இயக்கத்தின் குறைபாடுகளை ரவீந்திரன் அமைத்த ஒளியமைப்பின் அழகியல் நேர்செய்து தொடர்ந்தது. சக்கூர்பூரின் முத்துசாமி, கந்தசாமி மற்றும் சிவாஜி அன்று மிகவும் அருமையாக வாசித்தார்கள். அன்று சரியில்லாத ஒரே விஷயம் என்னுடைய இயக்கமாகத்தான் இருந்திருக்க முடியும்.
இந்த நாடகத்தை இன்னொரு முறை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தால் இன்னும் சற்று நன்றாகவே செய்ய முயற்சிப்பேன் என்று நினைக்கிறேன். சொல்லப் போனால் ஒவ்வொரு நாடகம் முடிவடையும் போதும் இந்த ரகசியக் குறை எனக்குள்ளே குடைந்து கொண்டே இருக்கும். சாகித்ய கலா பரிஷத் எற்பாடு செய்த விழா என்பதால் விமர்சகர்கள் குவிந்திருந்தனர். பல ஆங்கில நாளிதழ்களிலும் இந்தி நாளிதழ்களிலும் பல விமர்சனங்கள் வெளியாகின. ரேவதி சரண் சர்மா, திவான் சிங் பஜேலி போன்ற அந்தக் கால நாடக விமர்சன ஜாம்பவான்கள் விமர்சனம் எழுதினார்கள். அனைவரும் ஒரு தமிழனாக இருந்து கொண்டு இந்த இந்திக் கவிதையை மேடையேற்றிய என்னுடைய (அசட்டுத்) துணிச்சலைப் பாராட்டி இருந்தார்கள். கூடவே அந்த நாடகத்தில் துருத்திக் கொண்டிருந்த பல குறைகளையும் மிகவும் அழகாகச் சுட்டிக் காட்டி இருந்தார்கள். தேசிய நடகப் பள்ளியில் இயக்குநராக இருந்த அங்கூர் அப்போது இந்தி நாளிதழ்களில் நாடக விமர்சனங்கள் எழுதி வந்தார். ஒரு இந்தி நாளிதழில் அவர் என்னுடைய இந்த நாடக மேடையேற்றத்தைக் கிழிகிழியென்று நார்நாராகக் கிழித்து எறிந்திருந்தார். நாடகத்தில் என்னுடைய ஞானத்தைப் பற்றியும் இந்தி அறிவு பற்றியும் உண்டு இல்லை என்று கிழித்திருந்தார். மொத்தத்தில் சாகித்ய கலா பரிஷத் எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்ததே தவறு என்கிற அளவில் எழுதியிருந்தார்.
அந்த நிலையில் இப்போது வடக்கு வாசல் இதழின் சட்ட ஆலோசகராக இருக்கும் ஆர்.வெங்கட்ராமன் தி பேட்ரியாட் நாளிதழில் எனக்கு மிகவும் ஆதரவாக ஒரு கட்டுரை எழுதினார். இந்த நாடகத்தின் வழியாக தமிழில் ஒரு நாடக இயக்குநர் தோன்றியிருக்கிறார் என்று எழுதினார். வெங்கட்சாமிநாதன் லிங்க் இதழில் ஆங்கிலத்தில் மிகப்பெரிய கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் நாடகத்தில் உள்ள எல்லாக் குறைகளையும் பட்டியலிட்டு இத்தனை குறைகள் இருந்தாலும் ஒன்றை புதிதாகச் செய்ய முன்வந்திருக்கின்ற இவனைப் பாராட்டியே ஆக வேண்டும் என்று உற்சாகப்படுத்தியிருந்தார். என்னுடைய வெளிமுற்ற நாடகங்கள் பற்றியும் அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தார். "தன்னுடைய தவறுகள் வழியாக நாடகங்களைக் கற்றுக் கொண்டு வருகிறார் பென்னேஸ்வரன்'' என்று அந்தக் கட்டுரையில் எழுதினார் வெங்கட்சாமிநாதன். எத்தனை சத்தியமான வார்த்தைகள் அவை-? பல தவறுகள் வழியாகக் கற்றுக் கொள்ளும் என்னுடைய முயற்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை நாடகங்களாகட்டும், நான் முயற்சித்த ஆவணப் படங்களாகட்டும் அல்லது இப்போது நடத்தி வரும் இதழாகட்டும். எல்லாவற்றிலும் பலவகையான தவறுகளை இழைத்து அந்தப் பலவகையான தவறுகளின் வழியாகவே பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முயற்சித்து வருகிறேன்.
அண்ணாமலையின் கணையாழி நேர்காணல் மற்றும் ஷாஜஹான் தில்லியில் நடத்தி வந்த தலைநகரத் தமிழோசை இதழிலும் வெளிவந்த என்னுடைய நேர்காணல் ஒன்றிலும் நாடகம் உங்களுக்கு என்ன கொடுத்திருக்கிறது என்ற ஒரு கேள்விக்கு நாடகம் எனக்கு எனக்கான ஒரு முகத்தைக் கொடுத்திருக்கிறது. யதார்த்தா என்னும் அற்புதமான ஒரு குடும்பத்தைக் கொடுத்திருக்கிறது. பல நல்ல நண்பர்களைக் கொடுத்திருக்கிறது என்று பெருமையுடன் சொல்லியிருக்கிறேன். அதைத் தீவிரமாக நம்புகிறேன்.
ஒரு சிலரின் ஓரிரு சிறு அளவிலான துரோகங்களும் நன்றி மறத்தல்களும் மிகச் சிறிய காலத்துக்கு மனதைச் சற்று வருத்தியிருந்தாலும் இந்த முதல் நாடக மேடையேற்றம் போலவே யதார்த்தாவின் ஒவ்வொரு நாடக மேடையேற்ற நினைவும் நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் நினைத்துப் பார்க்கும் அந்தக் கணங்களை மிகவும் இனிமையாக மாற்றுபவை. மனதுக்குப் பரவசம் ஊட்டுபவை. வாழ்ந்த வாழ்க்கைக்கு சிறிதளவிலாவது அர்த்தம் கொடுத்த பரவசக் கணங்கள் அவை. அந்தக் கணங்களை, அந்த அனுபவத்தை மீண்டும் ஒரு நொடியேனும் வாழ்ந்து பார்க்கத் தூண்டுபவை. அந்தக் கணங்களின் வலிகள், துன்பங்கள் மற்றும் துயரங்கள் எல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கும்போது வேறு ஏதோ ஒரு உலகில் வாழ்ந்து வெளியே வந்தது போன்ற ஒரு தோற்றத்தைத் தருகின்றன. வலிகளை மறக்கும் மாயத்தை நாடக மேடை நிகழ்த்தியது. மேடை எனக்கு உயிர்ப்பை அளித்தது. என்னுடைய நாடக அனுபவங்களில் இறைவன் எனக்கு வரமாக அருளிய பல நல்ல உள்ளங்களைப் பற்றிய பாசம் கலந்த நெகிழ்வுடன் கூடிய நினைவுகளை இறுதி மூச்சு உள்ள வரை நினைத்து நினைத்து மீண்டும் மீண்டும் என் ஆன்மாவுக்கு உயிர்ப்பு ஊட்டிக் கொள்வேன். அந்தக் கணங்களின் மகிழ்வே அலாதியானது தான். அதற்கு எந்த விலையும் கிடையாது.
முதல் மேடை நாடகமேடையேற்றம் பற்றிய என்னுடைய பதிவுகளை சில மாதங்களாக சகித்துக் கொண்டதற்கும் இது குறித்து கடிதங்கள் எழுதி தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் என்னுடைய நன்றி.
அதெல்லாம் இருக்கட்டும். இந்தக் கட்டுரையின் முதல் பத்தியில் சொன்ன விஷயத்துக்கு மீண்டும் வருகிறேன். வடக்கு வாசல் தொடங்கிய பின் நாடக மேடைப் பக்கம் எட்டிப் பார்க்க நேரம் கிடைக்காமல் இருந்தது. ஒவ்வொரு மாதமும் ஒரு இதழைக் கொண்டு வருவது ஒரு பெரிய போராட்டம் என்னும் போது நாடகத்துக்கு எங்கே நேரம் ஒதுக்குவது-? நான் உயிரோடு இருக்கும் வரை கடன் தொல்லைகள் என்னை விடப்போவது இல்லை. இப்போது எல்லாம் பழகிவிட்டன. மீண்டும் நாடகத்தின் பக்கம் எட்டிப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. விரைவில் நானே ஒரு நாடகம் எழுதி இயக்கி மேடையேற்றலாம் என்று இருக்கிறேன். அதற்காக திட்டமிட்டு வருகிறேன்.
பாவம் தலைநகர் தமிழர்கள்.

Friday, March 6, 2009

நாடக மேடையேற்ற அனுபவங்கள் -

அப்பா
அமரர் பி.எஸ்கிருஷ்ணராவ்

கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞனின் ஒரு இந்திக் கவிதையை என்னுடைய முதல் மேடை நாடகமாக தலைநகரில் மேடையேற்றிய அனுபவங்களை உங்களுடன் இங்கே பகிர்ந்து வருகிறேன்.

சாகித்ய கலா பரிஷத் அமைப்பினர் எங்கள் நாடகத்தைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். அந்த மகிழ்ச்சியான செய்தியை மனைவியுடன் பகிர்ந்து கொள்ள வந்த போது என் தந்தையார் உடல்நிலை மிகவும் கவலைக் கிடமாக உள்ளதாகக் கிடைத்த தந்தியை மனைவி என்னிடம் நீட்டினாள்.

என்னுடைய தந்தையார் தொண்டையில் புற்றுநோய் காரணமாக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நோய் முற்றி இனி தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாது என்று மருத்துவமனையில் கைவிரித்ததால் கிருஷ்ணகிரியில் எங்கள் வீட்டில் இருந்தார். நான் ஏற்கனவே அவரைப் போய் பார்த்து விட்டு வந்தேன். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது சென்னையில் மூத்த சகோதரர் வீட்டில் தங்கி மருத்துவ மனைக்குப் போய் வந்து கொண்டிருந்தேன். மேற்கிந்திய நாட்டில் கண் மருத்துவராகப் பணிபுரியும் என்னுடைய சகோதரரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையைப் பார்க்க வந்திருந்தார். புற்றுநோய் மருத்துவமனையில் மனதை நெகிழ வைத்த பல சம்பவங்களை பல மனிதர்களை பல காட்சிகளை வேறு எங்காவது இன்னொரு சந்தர்ப்பத்தில் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.

மருத்துவர்கள் என் தந்தையை வீட்டுக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டதும் என்னை சென்னையில் தங்கவிடவில்லை அவர். உடனடியாக தில்லிக்குப் போகச் சொல்லி எழுதிக்காட்டினர். சுந்தரியும் குழந்தையும் தனியாக இருக்கிறார்கள். உடனடியாக ஊருக்குப் போ என்று முகத்தை மிகவும் கடுமையாக வைத்துக் கொண்டு எழுதினர். நான் தில்லிக்குக் கிளம்புவதற்கு முன்பும் அவர் மருத்துவமனையில் தான் இருந்தார். சொல்லிக் கொண்டு கிளம்பலாம் என்று மருத்துவமனை போனேன். மீண்டும் ஒரு தாளில் எழுதிக் காட்டினார்.

"நாடகம் போடுவது போன்ற விரயமான காரியங்களை நிறுத்து. மனைவியையும் குழந்தையையும் கவனமாகப் பார்த்துக் கொள். இது நன்றி கெட்ட சமூகம். இறுதியில் தெருவில் தான் நிற்கவேண்டும். நீ அவதிப்படும் போது யாரும் உடன் வரமாட்டார்கள். தூரமாக விலகி நின்று சிரிப்பார்கள். சிகரெட் குடிக்காதே. என்னைப் பார். எந்தத் தீய வழக்கமும் இல்லாமல் இருந்த எனக்கு இந்தக் கதி. உன்னை ராகவேந்திரர் காப்பாற்றட்டும்''.

நான் உடைந்து போனேன். அவர் முன்பு அழக்கூடாது என்று மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறி வாசலில் நின்று ஒரு அரைமணி நேரம் கரைந்து கரைந்து அழுதேன். புகைவண்டியில் தில்லி திரும்பும்போது நடு இரவில் தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்து அழுதேன். தில்லி வந்ததும் நாடக வேலைகள் துவங்கின. பகல்கள் நாடக வேலைகளில் கரைந்தன. இரவுகளைக் குடித்துக் கரைத்தேன்.

இந்த விஷயத்தில் யாரை, எங்கே, எப்படி ஏமாற்ற முடியும்? ஒரு வழியாக இப்போது இதோ வந்து விட்டேன் என்று என் தந்தைக்குக் காலன் விடுக்கும் அழைப்பு குறித்த செய்தி இறுமாப்புடன் என் எதிரே வந்து நின்றது.

நாடக மேடையேற்றத்துக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை. சாகித்ய கலா பரிஷத் இயக்குநரின் பெயரில்தான் இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறது. குழுவின் பெயரில் அல்ல. எனவே என்னுடைய தேவை இங்கே மிக அதிகம். ஊருக்குப் போனல் எல்லாம் கெட்டுப்போகும். நாடகம் அரைகுறையாகத் தான் தயாராகி உள்ளது. மனதைக் கல்லாக்கிக் கொண்டேன். தந்தி வந்த விஷயம் என்னையும் என் மனைவியுயம் தவிர என்னுடன் இருந்த ஏஞ்செல்சுக்கு மட்டும்தான் தெரியும். குணசேகரனும் எங்களுடனே வீட்டில் தங்கி இருந்தான். அவனுக்குச் சொல்லவில்லை. அன்று வெங்கட், நச்சு, மகேந்திரன் ரவீந்திரன், சுரேஷ் போன்றவர்களும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். விஷயத்தை யாருக்கும் சொல்லவில்லை. அன்று இரவு மிகவும் அதிகமாகக் குடித்தேன். எல்லோரிடமும் மிகவும் அதிகமாக சண்டை போட்டேன். அதிகமாக அழுதேன்.

மறுநாளில் இருந்து மீண்டும் நாடக ஒத்திகைகளில் கலந்து கொண்டேன். அப்போது எனக்கு இறை நம்பிக்கை என்பது சுத்தமாக இருந்ததில்லை. எனவே வேண்டுதல்கள் என்பது அறவே இல்லை. அப்போது நான் நம்பிய ஒரே கடவுள் என்னுடைய மதுக்குப்பிகள்தான். அவைதான் என்னை உடைந்து போகாமல் பார்த்துக் கொண்டன. அந்த நாட்களின் இரவுகளில் என்னுடைய உளறல்களையும் புலம்பல்களையும் சகித்துக் கொண்டு என்னுடன் வாழத் துணிந்ததற்கு என் மனைவிக்கும் என் மகள் பாரதிக்கும் நான் ஏழேழு ஜென்மங்களுக்கும் பணிவிடைகள் செய்து நன்றிக் கடனைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். நாடக வேலைகள் நாளுக்கு நாள் மெருகேறி வந்தன. முக்தி போத் கவிதை வரிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் புதுப்புது விளக்கங்களுடன் மேடை வடிவம் பெற்று வந்தன.

புதுதில்லி பாராகம்பா சாலையில் உள்ள சப்ரூ ஹவுஸ் அரங்கில் சாகித்ய கலா பரிஷத் அமைப்பின் யுவ கலா மஹோத்சவ் கொண்டாட்டங்களுக்கான அறிவிப்பு தினசரிகளில் வெளிவந்தன. சுமார் ஒரு மாத கொண்டாட்டம் அது. டிசம்பர் 12, 1987 அன்று எங்களின் சாந்த் கா மூ டேடா ஹை. என் புகைப்படம் மற்றும் என்னைப் பற்றிய குறிப்பும் அவர்கள் வெளியிட்ட வண்ணக் கையேட்டில் வந்தது. தினசரிகளில் வெளியிட்ட விளம்பரங்களில் நாடகம் மற்றும் இயக்குநர்களின் பெயர்களுக்கு முன்னல் அவர்களின் சிறிய புகைப்படத்தையும் வெளியிட்டார்கள். நான் மிகவும் பெருமையாக அப்பாவுக்கு எல்லாவற்றையும் அனுப்பி வைத்தேன்.

நாடக மேடையேற்றத்துக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டே வந்தன. இன்னொரு பக்கம் காலனும் என் தந்தையை மிகவும் இறுக்கமாக நெருங்கிக் கொண்டிருந்தான். அன்று இப்போது இருப்பதைப் போன்ற தொலைபேசி வசதிகள் கிடையாது. கிருஷ்ணகிரிக்கு நேரடியான தொலைதூரத் தொலைபேசி வசதி கிடையாது. இரவில் எண்ணைப் பதிவு செய்து காத்திருந்து பேசவேண்டும். அலுவலகத்தில் வேலையில் இருந்தவன் ஏதோ திடீரென்று ஞாபகம் வந்தது போல, திருவனந்தபுரத்தில் இருந்த என் அக்கா மகனுக்கு நேரடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அப்பாவின் உடல்நலம் பற்றி அவனிடம் விசாரிக்க முயன்றேன். அவனுடன் பணியில் இருப்பவர் தொலைபேசியை எடுத்தார். "பத்மநாபனுடைய தாத்தா இறந்து விட்டாராம். அவர் கிருஷ்ணகிரி போயிருக்கிறார்'' என்று சொல்லி தொலைபேசியை துண்டித்தார். அது 8 டிசம்பர் 1987.

இடையில் கிருஷ்ணகிரியில் இருந்தும் என் சகோதரர்கள் என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கிறார்கள். அவர்களால் முடியவில்லை. அப்போது அமரர் வாழப்பாடி ராமமூர்த்தி எங்கள் கிருஷ்ணகிரி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர். என்னுடைய சகோதரரின் நண்பர் அவரைத் தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லியிருக்கிறார். 12 டிசம்பர் நாடகம் இருக்கிறது. எப்படி ஊருக்குப் போவது? சரி. போகவேண்டாம். இங்கேயே இருந்துவிடலாம் என்றுகூட நினைத்தேன். விஷயம் கேள்விப்பட்டு யதார்த்தாவில் ஒவ்வொருவராக என் வீட்டுக்கு வந்து விட்டார்கள். நான் போகவில்லை என்றதும் வெங்கட் என்னை அடிக்கவே வந்து விட்டான். அனைவரும் என்னைத் திட்ட ஆரம்பித்தார்கள். அப்போது வெங்கட் ஒன்று சொன்னன். யுவ மகோத்சவ் ஒரு மாதம் நடக்கும் விழா. எங்கள் நாடகத்தை ஐந்தாவது நாளில் திட்டமிட்டு இருந்தார்கள். இன்னும் 25 நாட்கள் மீதமிருக்கின்றன. நான் ஊருக்குப் போய் காரியம் எல்லாம் முடித்து 15 நாட்களில் திரும்பிவிடலாம் என்றும் சாகித்ய கலாபரிஷத்தின் செயலரை அணுகி இதுகுறித்து அனுமதி கேட்டு வருகிறோம் என்று வெங்கட்டும் நச்சுவும் போய் அனுமதியும் வாங்கி வந்தார்கள். டிசம்பர் 28ம் தேதிக்கு எங்கள் நாடகத்தை ஒத்தி வைக்க சம்மதித்தார் அந்த அதிகாரி.

அப்பா இறந்த அன்று தில்லியில் எங்கள் யதார்த்தா குடும்பம் எனக்குக் கொடுத்த மனோதைரியத்தையும் அமரர் வாழப்பாடி ராமமூர்த்தி மற்றும் இப்போது வடக்கு வாசல் இதழின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர்- பத்திரிகையாளர் ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் எனக்கு நல்கிய உதவிகளையும் உயிர் உள்ளவரை என்னல் மறக்க முடியாது. வானூர்தியில் பயணித்து சென்னையில் இறங்கி அங்கிருந்து ஒரு சிற்றூர்தியைப் பிடித்து கிருஷ்ணகிரி சேர நள்ளிரவு ஒருமணி ஆகிவிட்டது. அப்பாவின் இறுதிச் சடங்குகள் முடிந்து போயிருந்தன. அவருடைய இறுதி தரிசனம் எனக்குக் கிட்டவில்லை.

இது அவர் தீர்மானித்ததாகத்தான் இருக்கவேண்டும். தான் வாழ்ந்த இறுதி மூச்சு வரை தன்னுடைய பேச்சை எந்த வகையிலும் கேட்காத தன் மகனை ஒரு தந்தை இதைவிட வேறு எந்த வகையில் தண்டிக்க முடியும்?

தொடர முடியவில்லை. அடுத்து முடித்து விடுகிறேன்.Wednesday, March 4, 2009

முதல் நாடக மேடை அனுபவங்கள் -7


கஜானன் மாதவ் முக்தி போத் என்னும் இந்தி கவிஞனின் ஒரு இந்திக் கவிதையை என்னுடைய முதல் மேடை நாடகமாக தலைநகரில் மேடையேற்றிய அனுபவங்கள் தொடர்பான பதிவுகளை இங்கே எழுதி வருகிறேன். ஒரு நேர்க்கோட்டில் செல்லாது கிராமத்துச் சாலையில் காளை மாடு பெய்து செல்லும் மூத்திரக்கோடுகள் போல வளைந்தும் நெளிந்தும் ஒழுங்கின்றிப் பதிந்து வருகின்றன. ஆனலும் அந்த நினைவுகளை மல்லுக்கட்டி இழுத்துப் பதிந்து வைக்கும் அந்தக் கணங்கள் மனதுக்கு நெகிழ்வு தரும் அனுபவங்களாக அமைகின்றன. அந்த அற்புதக் கணங்களை மீண்டும் ஒருமுறை வாழ்ந்து பார்க்கின்றது போன்ற லாகிரியை மனப்பரப்பில் கிளர்த்திச் செல்கின்றன. ரயில் பயணத்தின் போது சீறி ஓடும் ரயிலின் வேகத்தில் ஒரு நொடியின் பின்னத்தில் பார்வைக்குத் தவறவிட்ட ஏதாவது ஒரு அற்புதக் காட்சியை ஒரு நொடி ஒருமுறை மீண்டும் காணும் தவிப்பு விளைவதைப் போன்ற ஒரு தவிப்பில் விளைந்த பதிவுகள் இவை.

சாகித்ய கலா பரிஷத் அமைப்பின் யுவ மகோத்சவத்துக்கான நாடகத் தேர்வுக்கு எங்களின் நாடகத்தில் ஒரு காட்சியின் வடிவமைப்பை நடுவர்கள் எதிரில் நிகழ்த்திக் காட்டுவதற்காக நேஷனல் காலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட் கட்டிடத்தில் பதட்டத்துடன் நின்ற கோலத்துடன் சென்ற இதழில் நிறுத்தி இருந்தேன்.

ஏற்கனவே சொன்னது போல, எங்கள் குழுவில் என்னைத் தவிர எல்லோரும் ஏதோ ஒருவகையான மகிழ்ச்சியை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு சிரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் ஒருவன் மட்டுமே எங்கோ ஆப்பு வைக்கப்பட்ட குரங்கைப் போல முகத்தை வைத்துக் கொண்டு தொடர்ச்சியாக சிகரெட் புகைத்துக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தேன்.

என்னுடைய பதட்டத்துக்கு இன்னும் சற்று தீ வைப்பதைப் போல பறைவாசிக்கும் கந்தசாமியும் உறுமி வாசிக்கும் முத்துசாமியும் வாத்தியங்களைக் காய்ச்சிக் கொள்ள நெருப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆரம்பித்தார்கள். அந்த அழகான கட்டிடத்தின் வெளியிலோ அல்லது விரிந்து பரந்த புல்வெளியிலோ எதையாவது கொளுத்தினல் அவர்கள் நம்மைக் கொளுத்தி அங்கேயே புதைத்து விடுவார்கள். இன்னொன்று நேரம் எங்கே இருக்கிறது? நடுவர்கள் குரல் கொடுத்தால் ஓடிப்போய் குரங்காட்டம் ஆடிக்காண்பிக்க வேண்டும். பதட்டம் இன்னும் அநியாயத்துக்குக் கூடியது.

தமிழ், கன்னடம், தெலுங்கு இந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் அந்த நேரத்தில் எனக்குக் கிடைத்த அத்தனை கெட்ட வார்த்தைகளிலும் எங்கள் கோஷ்டியினர் எல்லோரையும் பார்த்து சத்தம் போட ஆரம்பித்தேன். ஏதோ ஒரு இந்திப் பெண்மணியிடம் தங்கள் அன்பையும் நட்பையும் தமிழிசையையும் வளர்க்க முயற்சித்துக் கொண்டிருந்த சங்கரும் ஏஞ்செல்சும் சத்தம் கேட்டு ஓடிவந்தார்கள். ஏஞ்செல்ஸ் என்னிடம், "மாமா, அதுக்கு எதுக்கு இப்படி சத்தம் போடறீங்க? இங்கேயே எந்த அறையிலாவது ராட் ஹீட்டர் இருந்தால் அதில் காய்ச்சிக் கொள்ளலாமே'' என்று ஒரு வழியைக் கொடுத்தான். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. ஆனல், கந்தசாமியும் முத்துசாமியும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. வாத்தியங்களை விறகு நெருப்பில் காய்ச்சினல்தான் சுருதி சரியாக சேரும் என்று பிடிவாதம் பிடித்தார்கள். குறைந்தது குப்பைக் காகிதங்களிலாவது நெருப்பைக் கொளுத்திக் காய்ச்சினல்தான் தங்கள் வாத்தியங்களில் சரியாக சுருதி சேரும் என்று பிடிவாதம் பிடித்தார்கள்.

சங்கர், ஏஞ்செல்ஸ், வெங்கட், குணசேகரன், நச்சு, வீரமணிகண்டன், வீரராகவன், மோகன், ராமசாமி என்று ஒரு பெரிய படையே அந்த வளாகத்தில் குப்பை காகிதங்களை சேகரிக்க அலைந்தார்கள். வேண்டிய அளவு குப்பைக் காகிதங்களை சேர்த்தாகிவிட்டது. அந்த வளாகத்தினுள் எங்கே தீ மூட்டி வாத்தியங்களைக் காய்ச்சிக் கொள்வது? கட்டிடத்தின் காவலரைக் கேட்டபோது அவர் தன்னுடைய சுட்டுவிரலும் ஆகாயமும் கிட்டத்தட்ட சேரும் ஒரு இடத்தைக் காண்பித்து அங்கே காய்ச்சிக் கொண்டால் ஒரு பிரச்னையும் இருக்காது என்றார். அந்த தூரத்தில் காய்ச்சிக் கொண்டு உள்ளே வரும் வேளைக்கு அந்தக் குளிரில் மீண்டும் சுருதி இறங்கி விடும் என்று முத்துசாமி ஆட்சேபித்தார். அது நவம்பர் மாதம். அப்போதெல்லாம் தில்லியில் நவம்பர் மாதங்கள் குளிர் நிறைந்த மாதங்களாக இருந்தன. அவர் சொன்னதிலும் நியாயம் இருந்தது. இன்னொன்று சுருதி கலைந்த வாத்தியங்களை வைத்துக் கொண்டு ஏதாவது செய்தால் அசிங்கமாகிவிடும். உள்ளே நடுவர்களாக இருந்த ஓரிரண்டு முசுடுக் கிழங்கள் நல்ல சங்கீதம் ஞானம் உள்ளவை. சுருதி கெட்ட வாத்தியத்தை வாசித்தால் மானம் போய்விடும். எனவே, யார் யாரையோ கெஞ்சிக் கூத்தாடி, ஏதேதோ வகையில் தாஜா செய்து அந்தக் கட்டிடத்தின் பின்புறம் வாத்தியங்களைக் காய்ச்சுவதற்கு ஏற்பாடு செய்தார்கள் நச்சுவும் வெங்கட்டும்.

இதற்கிடையில் வேறு குழுக்களின் தேர்வுக்கான காட்சிகள் தீவிரமாக நடுவர்கள் முன்னிலையில் அரங்கேறிக் கொண்டிருந்தன. எங்களை நடுவர்கள் கூப்பிடும்போது உள்ளே போகலாம் என்று தயக்கத்துடன் நின்றிருந்தேன். ஒரு பக்கம் தயக்கம் என்றால் இன்னொரு பக்கம் அச்சம். மற்ற குழுக்கள் ஒருவேளை சரியாக செய்யவில்லை என்றால் நடுவர்கள் அங்கேயே எதையாவது சொல்லி மானத்தை வாங்கினர்கள் என்றால் நம்முடைய கதி என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கவே சற்று குலை நடுங்கியது. ஏதாவது குழு ரொம்பவுமே நன்றாக செய்து விட்டால் நம்முடைய வாய்ப்பு தள்ளிப் போவதற்கான வாய்ப்பு அதிகரித்து விடுமே என்றும் அச்சம்.

எனவே மரியாதையாக வெளியிலேயே நின்று கொண்டு கூப்பிடும்போது சென்று நம்முடைய காட்சியை அரங்கேற்றி விட்டு ஒடிவந்து விடலாம் என்று நின்றிருந்தேன். பதட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தைரியம் சொல்வது போல ரவீந்திரன் அருகில் வந்து கை கொடுத்தார். அந்த நேரத்தில் எனக்குக் கிட்டிய அவருடைய பாசம் மிக்க அந்தக் கரங்களின் அழுத்தம் தந்த ஆறுதல் மற்றும் தைரியத்தின் வீரியத்தை இப்போதைக்கு என்னல் எந்த வார்த்தையிலும் மிகச்சரியாக விவரிக்க முடியாது. ஆனல் ஒன்றை நன்றியுடன் சொல்லலாம் என்று தோன்றுகிறது. ரவீந்திரன் பாசத்துடனும் நம்பிக்கையுடனும் அன்று என் கரங்களில் பதித்த அழுத்தம் எனக்குப் பின்னளில் ஏறத்தாழ முப்பது நாடகங்களை இயக்கும் மனவலிமையைக் கொடுத்தது.

ஒருவழியாக எங்கள் முறை வந்தது. மேடை எல்லாம் கிடையாது. ஒரு பெரிய கூடம். மற்ற நாடகக் குழுக்களின் கலைஞர்கள் சுற்றி அமர வைக்கப்பட்டிருந்தார்கள். நடுவர்கள் தனியாக ஒரு மூலையில் நாற்காலிகளில் அமரவைக்கப் பட்டிருந்தார்கள். நாங்கள் நடித்துக் காட்டிய காட்சியில் வசனங்கள் ஏதும் இல்லை. கிராமத்து இரவில் நடக்கும் ஒரு சிறுதெய்வ வழிபாட்டு ஊர்வலம். தலையில் கரகம் போல அலங்கரித்த ஒரு பீடத்தில் சிறுதெய்வத்தை (நாங்கள் பெயர் எல்லாம் வைக்கவில்லை) அமர்த்தி தலையில் வைத்து ராமச்சந்திரன் ஆடி வருவான். நச்சு பூசாரி. குணசேகரனுக்கும் இளஞ்சேரனுக்கும் சாமி வந்து விடும். மிகவும் வலிமையான அடவுகளுடன் ஆட்டம் அமைந்திருந்தது. சிவாஜி, முத்துசாமி மற்றும் கந்தசாமி குழுவினர் மிகவும் அற்புதமாக வாசித்தார்கள். ஆட்டம் உச்சகட்டத்துக்குப் போகும். திடீரென்று ஓரிடத்தில் தகராறு முளைக்கும். அனைவரும் திக்குக்கு ஒருவராக சிதறி ஓடிப்போய் ஒருவர் மற்றவரைத் தாக்கிக் கொள்வார்கள். கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொள்வார்கள். (சொல்லப் போனால் இந்தக் காட்சியில் பேசப்பட்ட உச்சபட்ச வசனங்களே அந்த இந்தி கெட்ட வார்த்தை வசவுகள் தான் இந்தச் சேரி சண்டை ஓயும்போது இன்னொரு பக்கத்தில் அதே மேடையில், ஒரு மிகப்பெரிய செல்வந்தரின் வீட்டு விருந்து ஒன்று மிகவும் பொய்மையுடனும் அனைத்து படாடோபங்களுடனும் நடக்கும். இது தான் நாங்கள் நடித்துக் காட்டிய காட்சி. பிறகு சுவரொட்டிகள் கிளர்ந்து எழுந்து தங்கள் உரிமையை பிரகடனம் செய்யும் இன்னொரு காட்சி. இரண்டையும் முடித்து விட்டு பதட்டத்துடன் அரங்கத்தை விட்டு வெளியேறினர்கள் நடிகர்கள். இப்போது என்னிடமிருந்த பதட்டம் அவர்களிடம் இடம் மாறியது.

நாங்கள்தான் இறுதியாக வந்த குழு. அதற்குப் பிறகு நடுவர்களின் தீர்ப்புதான்.

நீண்ட நேர அமைதிக்குப் பிறகு எங்களை தேர்ந்தெடுத்து இருப்பதாக சாகித்ய கலா பரிஷத் செயலர் சுரேந்திர மாதூர் தெரிவித்தார். ஆனல் அந்த ஆட்டத்தின் இறுதியில் வரும் சண்டையின் போது பரிமாறிக்கொள்ளப்படும் கெட்ட வார்த்தைகளை கண்டிப்பாக நீக்க வேண்டும் என்றார். அது திட்டமிட்டு வந்தது அல்ல என்றும் எங்கள் நடிகர்கள் கொஞ்சம் அதிகமாகவே தத்ரூபமாக இருக்க முயற்சித்தார்கள் என்றும் சொல்லி பலமுறை விழுந்து வணங்கி நன்றிசொல்லி வெளியே வந்தோம். ரவீந்திரன் ஓடிவந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மிக அழுத்தமாகக் கை கொடுத்தார். வீட்டுக்குத் திரும்பும் போதே இரவு பலமான விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி விட்டுப்போனேன்.

அப்போது வீட்டில் தொலைபேசி கிடையாது. மனைவி கதவைத் திறந்ததும் மிகவும் சந்தோஷத்துடன் கத்திச்சொன்னேன்...

"நாங்க ஜெயிச்சிட்டோம்''.

வழக்கத்துக்கு விரோதமாக ஒன்றும் சொல்லாமல் ஒரு காகிதத்தை என்னிடம் கொடுத்தாள் மனைவி.

அது ஊரிலிருந்து என்னுடைய மூத்த சகோதரர் அனுப்பியிருந்த தந்தி.

"அப்பாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கு இடமாக இருக்கிறது. உடனே கிளம்பி வா''.Tuesday, March 3, 2009

பாழடைந்து நிற்கும் சத்தியமூர்த்தி கலையரங்கம்


பாழடைந்து நிற்கும் சத்தியமூர்த்தி கலையரங்கம்

கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞனின் சாந்த் கா மூஹ் டேடா ஹை (சந்திரனின் முகம் கோணியது) என்கிற கவிதையை யதார்த்தாவின் முதல் மேடை நாடகமாக மேடையேற்றிய அனுபவம் குறித்து எழுதத் துவங்கி எங்கெங்கோ அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன். உருப்படியாகச் செய்த ஒரு காரியம் என்னவென்றால் அந்த நாடகத்தில் பங்கேற்ற நண்பர்களைப் பற்றிக் குறிப்புக்கள் தந்து இருந்தேன். எழுதும் போதே ஏதோ பழைய நாட்களில் பயணித்து வந்ததைப் போன்ற ஒரு நெகிழ்வு இருந்தது.

சரி. விஷயத்துக்கு வருவோம். மந்திர் மார்க்கில் உள்ள சவுத் இந்தியா கிளப்பின் சத்தியமூர்த்தி ஹால் அரங்கில் எங்கள் ஒத்திகைகள் துவங்கின. நாடகத்தில் பங்கு கொண்ட எல்லோரையும் பற்றிச் சொன்ன போது எங்களுக்கு ஒத்திகைகள் நடத்தக் கிடைத்த இடத்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்வது தவறில்லை என்று நினைக்கிறேன். இது போன்ற பதிவு இங்கே மிகவும் அவசியமானது என்றும் நினைக்கிறேன்.

இப்போது முழுக்கவும் பாழடைந்து போன இந்த சத்தியமூர்த்தி கலையரங்கம் என்னும் அற்புதமான கட்டிடத்தில் யாரும் தற்போது பிரவேசிக்கவும் வசிக்கவும் ஆபத்தான கட்டிடமாக அறிவித்து ஒரு அறிவிப்பு வைத்துள்ளது தில்லி மாநகராட்சி.. அந்த இடத்தைக் கடக்கும் போது உண்மையிலேயே மனது கனத்துப் போகிறது. தலைநகரில் தமிழர்களாகிய நாங்கள் பாழாக்கிய பல நல்ல விஷயங்களில் இந்தக் கட்டிடமும் ஒன்று. முன்பு பல கலை நிகழ்ச்சிகள் இந்தக் கட்டிடத்தில் நடந்துள்ளன. பல நல்ல இசை நிகழ்ச்சிகள். பல நாடகங்கள், பல கருத்தரங்கங்கள் இங்கே நடைபெற்றுள்ளன.

எனக்கு நினைவு தெரிந்து கி.ராஜநாராயணன் சாகித்ய அகாதமி விருது பெற்றபோது பல தமிழ் அமைப்புக்கள் இணைந்து அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினோம். அது இந்த சத்தியமூர்த்தி கலையரங்கில் நடைபெற்றது. அப்போதே அந்தக் கட்டிடத்தில் ஒரு மாதிரியான நாற்றம் கிளம்ப ஆரம்பித்திருந்தது. மேடையின் விங்ஸ் என்று சொல்லப்படும் துணிப்படுதாக்கள் எல்லாம் கிழிந்து மேடையின் பெரும்பகுதி சிதிலமாகிப்போகத் துவங்கியிருந்தது. கலையரங்கின் மேலே மாடியில் இருப்பது சவுத் இந்தியன் கிளப். அங்கு ஒரு காலத்தில் மைய அரசில் பணிபுரியும் தமிழ் அதிகாரிகளின் மனைவிமார்கள் டேபிள் டென்னிஸ் விளையாடுவார்கள். பாட்டுப் போட்டி, நாடகப் போட்டி போன்ற சுவாரசியமான விஷயங்கள் நடைபெறும். இரவு பகலாக ஒரு கும்பல் கேரம் போர்டு விளையாடும். மாநில அளவில், தேசிய அளவில் கேரம் போட்டிகள் அங்கு நடைபெற்றிருக்கின்றன. திருமண வரவேற்பு விழாக்கள் நடைபெறும். தமிழகத்திலிருந்து குழுவாக யாராவது வந்தால் தற்காலிகமாகத் தங்கிக் கொள்ள அங்கு இடம் கிடைக்கும்.

இந்தக் கட்டிடத்தில் கலையரங்கம், சீட்டாட்டக் கிளப் மட்டும் அல்லாமல் ஒரு உணவகமும் நடைபெற்று வந்தது. ச்சத்தர் சிங் மெஸ் என்ற அழைப்பார்கள். பெருந்தலைவர் காமராஜரிடம் பணியாளராக ச்சத்தர் சிங் என்னும் பெரியவர் ஒருவர் இருந்தார். பெருந் தலைவர் பாராளுமன்ற உறுப்பினருக்கான பதவிக் காலம் முடிந்து தில்லி வீட்டைக் காலி செய்து போகும் போது தன்னிடம் பணிபுரிந்த ச்சத்தர் சிங்குக்கு ஏதாவது வழிகாட்ட வேண்டும் என்று சத்தியமூர்த்தி கலையரங்கில் அமைந்திருந்த இந்த உணவகத்தின் குத்தகையை நிரந்தரமாக அவருக்கு ஏற்பாடு செய்துவிட்டுச் சென்றார் பெருந்தலைவர். ச்சத்தர் சிங் தான் நேரில் கண்ட ஒரே தெய்வம் காமராஜ்தான் என்று சொல்வார். எண்பத்து ஒன்றாம் ஆண்டு தில்லிக்கு வந்து இறங்கிய முதல் நாளில் நான் உணவு அருந்திய முதல் உணவகம் இதுதான். அன்றிலிருந்து சுமார் நான்கு ஆண்டுகள் மூன்று நேரமும் எனக்குச்சோறு போட்ட இடம் இதுதான். அப்போது மாதம் ரூ.75 செலுத்தி விட்டு மூன்று நேரமும் இங்கே சாப்பிடலாம். தென்னக உணவு பரிமாறுவார்கள். மிகச்சிறிய கண்களுடன் மங்கோலிய முகங்களுடன் கர்வாலி சிறுவர்கள் உணவு பறிமாறுவார்கள்.

இப்படி இந்தக் கட்டிடத்தில் எல்லாவற்றுக்கும் இடம் இருந்தது. எல்லாம் கிடைத்தன. தமிழகத்தில் இருந்து தலைநகருக்கு பணியில் சேர வந்தவர்களுக்கு சொந்த ஊரின் சில எச்சங்களைக் காட்டியபடி அந்தக் கட்டிடம் திகழ்ந்தது.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்த அற்புதமான இடம் முழுநேர சீட்டாடும் கிளப்பாக மாறத் துவங்கியது. தங்களைத் தமிழர்கள் என்று அடையாளம் காட்டிக் கொள்வதில் அவமானப்படும் தமிழர்கள், தமிழில் பேசிக்கொண்டு வருபவர்களை ஏதோ தொத்து வியாதி பிடித்தவர்களைக் கண்டது போன்று மிரண்ட தமிழர்கள், மனைவிக்கு பயந்து வெளியிடத்தில் போதையேற்றிக் கொள்ளும் தமிழர்கள் சத்தியமூர்த்தி கலையரங்குக்கு வந்து சீட்டாடத் துவங்கினர்கள். வெள்ளிக்கிழமை மாலை அலுவலகத்தில் இருந்து நேரே வந்து சீடடாட்டம் துவங்கி வீட்டுக்கே போகாமல் திங்கட்கிழமை காலை நேராக அலுவலத்துக்குச் சென்ற தமிழர்களை நான் அங்கே பார்த்து இருக்கிறேன். அப்படி வீட்டை மறந்து சீட்டாட்டத்தில் மூழ்கிய கணவர்களுக்கு அன்புப்பரிசாக துடைப்பக் கட்டையைக் கையிலேந்தி வெளியே ரிக்ஷாக்களில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்த வீரப் பெண்டிர்களையும் பார்த்து இருக்கிறேன். சில சமயங்களில் கிளப்புக்கு உள்ளே கணவர்களுக்கு செருப்படி கிடைத்த வீர வரலாறுகளும் உண்டு. அங்கு கோபால் என்று இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்து ஒரு சேவகன் எல்லோருக்கும் மதுக்குப்பிகளை வாங்கிவருவது மற்றும் வேறு பல குற்றேவல்களை செய்வது போன்ற தொண்டில் ஈடுபட்டு வந்தான். அவனுக்குத் தமிழில் உள்ள அனைத்துக் கெட்ட வார்த்தைகளும் அத்துபடி. உறவுமுறைகளை வைத்துத் திட்டும் அனைத்துக் கெட்ட வார்த்தைகள் மற்றும் மாவட்ட வாரியான கெட்ட வார்த்தைகள் அனைத்திலும் அபாரமான பாண்டித்யம் பெற்றிருந்தான்.

நாளாக நாளாக இந்த அமைப்பின் பதவியில் மற்றும் அதிகாரத்தில் இருந்த தமிழர்கள் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லச் சற்று அவமானப்பட்டதால் மெல்ல மெல்ல தமிழர்கள் அல்லாத மற்றமொழி சார்ந்த குடிகாரர்களும் சூதாடிகளும் இங்கே அதிமாக வரத் துவங்கினர்கள். கோலோச்சத் துவங்கினர்கள். நீண்ட ஆண்டுகளாக மற்றயாரும் அங்கே உறுப்பினர் ஆக்கப்படவில்லை.

அந்தக் கலையரங்கத்தை சீரமைக்க வேண்டும் என்று அந்த அமைப்பைச் சேர்ந்த நண்பர்களிடம் பலமுறை சொல்லிப் பார்த்தேன். அவர்கள் ஏதோ நான் அந்தக் கட்டடத்தை ஆக்கிரமிக்க வந்திருக்கிறேன் என்பதைப் போல என்னை விரோதிக்கத் துவங்கினர்கள். ஓரிருவர் என்னுடன் சண்டைக்கும் வந்தார்கள். பிறகு பலமுறை திரும்பத் திரும்ப நான்கைந்து பேர் சேர்ந்து பேசி ஏதாவது முடிவெடுக்கலாம் என்று அழைத்தார்கள். ஆனல் பலமுறை சென்று காத்திருந்தும் யாரும் வரமாட்டார்கள். அது அப்படியே விட்டுப் போயிற்று. பிறகு பலகாலம் தமிழர்கள் அல்லாதவர்களே அங்கு கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். யாரும் தங்களை உறுப்பினர் என்று உரிமை கொண்டாடக் கூட அங்கே எந்த ஆவணங்களையும் யாரும் விட்டுவைக்கவில்லை. எல்லாம் அழிந்தது. அல்லது வேண்டு மென்றே அழிக்கப்பட்டு இருக்கலாம். தலைமைப் பொறுப்பில் இருந்த யாரும் அந்தக் கட்டிடத்தின் மீதோ அந்த அமைப்பின் மீதோ எவ்வித அக்கறையும் காட்டவில்லை. இப்படியே நாம் இந்த அற்புதமான விஷயத்தை இழந்தோம்.

தலைநகரில் தமிழர்களுக்குச் சொந்தமான ஒரு கட்டிடமும் கலையரங்கமும் நகரின் மிக மையமான சாலையான மந்திர்மார்க்கில், மிகவும் பரிதாபமாக ஒரு பேய் மாளிகையைப் போன்று பல சோகக் கதைகளைச் சுமந்து நின்று கொண்டிருக்கிறது. இதற்கு என்றாவது ஏதாவது விடிவுகாலம் பிறக்குமா என்று தெரியவில்லை.

சரி. விஷயத்துக்கு வருவோம். இந்த அந்த சத்தியமூர்த்தி கலையரங்கில் எங்கள் ஒத்திகைகள் துவங்கின. நாங்கள் ஒத்திகையைத் துவங்கிய போதே அந்தக் கட்டிடம் க்ஷீணமடையத் துவங்கியிருந்தது. பறவைகளின் எச்சங்களும் வவ்வால் நாற்றமும் குடலைப் புரட்டும். நாங்களே அந்த இடத்தை சுமார் மூன்று நாட்களுக்கு மேல் செலவிட்டு நாற்றங்கள் போகும் வகையில் சுத்தம் செய்தோம். பிறகு ஒத்திகைகளைத் துவங்கினோம். பிணம் தூக்கிச் சென்று இறுதிச் சடங்குகள் செய்யும் காட்சி. இரவு நேரத்தில் செல்வந்தர் வீட்டில் நடைபெறும் ஒரு தடபுடலான விருந்துக் காட்சி. இன்னொருபுறம் சேரியில் ஒரு சிறுதெய்வ வழிபாட்டு முறைகள். அதை முடித்ததும் குடிகாரர்கள் ஒரு சர்ச்சையைத் துவங்கி பெரும் கலவரமாக முடியும் காட்சி, இரவு நேரங்களில் சுவரொட்டிகள் தங்கள் உரிமையைக் கோரிப் போரிடும் வண்ணம் நடன அமைப்புக்கள், நகர வாழ்க்கையின் சில காட்சிகள், கிராம வாழ்க்கையின் சில சாட்சிகள் எனத் துண்டு துண்டுகளாக முக்திபோத் கவிதையின் பல படிமங்களையும் காட்சிப்படுத்தப் போராடிக் கொண்டிருந்தேன்.

இளஞ்சேரன் அப்போது மிகவும் பிரபலமாக இருந்த டிஸ்கோ நடனத்தை ஆடினன். நன்றாகத் தான் இருந்தது. ஒரு இந்தி நாளேட்டில் "முக்திபோத்தின் கவிதையில் டிஸ்கோ'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் என்னை நார் நாராகக் கிழித்து என்னுடைய நாடக இயக்கத்தை மிகவும் கடுமையாக விமர்சித்து என் மானத்தை வாங்கி இருந்தார்கள்.

கவிதையின் வரிகளை மிகவும் அற்புதமாகப் பின்னணியில் வாசித்தான் நச்சு என்கிற நரசிம்மன். ஏஞ்செல்ஸ் மற்றும் சங்கர் அருமையாக இசையமைப்பு செய்திருந்தார்கள். சங்கர் வடிவமைத்துக் கொடுத்த நாட்டுப்புற இசைவடிவங்களை நாட்டுப்புற இசைக்கலைஞர்களான சிவாஜி, முத்துசாமி மற்றும் கந்தசாமி ஆகியோர் மிகவும் அற்புதமாக வாசித்தார்கள். உற்சாகத்தில் கொஞ்சம் அதிகமாக போதை ஏற்றிக் கொண்ட நாயனம் வாசிக்கும் சிவாஜி மட்டும் தில்லான மோகனம்பாள் சிவாஜி மாதிரி நாடகத்தில் நடன அமைப்பின் வீரியம் போதாது என்றும் தன்னுடைய நாயனத்தின் முன்பு இவர்களின் கால்கள் பேசவில்லை என்ற ரீதியில் வாசிப்பதை நிறுத்தி நிறுத்தி சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அவர் சமாதானம் அடைந்து ஒரு மாதிரியாக வாசிக்கத் துவங்கும் நேரத்தில் மகேந்திரன் ஏதாவது புதுச் சண்டை துவங்குவான். அல்லது ராமச்சந்திரன் அந்த வாசிப்பில் வீரியம் இல்லை என்று சண்டைக்கு வருவான்.
தில்லான மோகனம்பாளில் வரும் எஸ்.வி.நாகையா போல ரவீந்திரன் நடுவில் வந்து ஏதாவது சமாதானம் சொல்லிப் போவார். இது தினமும் தொடர்ந்தது. ஒத்திகைகளின் நடுவில் ஏற்கனவே சொன்னது போல சாகித்ய கலா பரிஷத் அமைப்பு நாடக விழாவில் கலந்து கொள்ளும் இயக்குநர்கள் தாங்கள் வடிவமைத்த ஏதேனும் ஒரு காட்சியை சில நடுவர்கள் முன்பு நடித்துக் காட்ட வேண்டும். பிறகே அந்த நாடகம் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவது பற்றி முடிவெடுக்கப்படும் என்றநிபந்தனையை விதித்திருந்தார்கள்.

அந்த நிபந்தனையின் படி நடுவர்கள் முன்னிலையில் காட்சியை நடித்துக் காட்டும் நாளும் வந்தது. நேஷனல் காலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட் கட்டிடத்தில் அந்தத் தேர்வினை வைத்து இருந்தார்கள். திவான் சிங் பஜேலி, மோகன் மகரிஷி, டி.என்.ஷர்மா போன்ற தலைநகரின் இந்தி நாடக ஜாம்பவான்களும் விமர்சகர்களும் நடுவர்களாக அழைக்ககப்பட்டிருந்தனர்.

தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்த இயக்குநர்களில் பலபேர் தேசிய நாடகப் பள்ளியில் படித்து பட்டம் பெற்றவர்கள். தில்லியில் இந்தி மற்றும் உருது நாடகக் குழுக்களில் பெரும் பங்காற்றியவர்கள். அனுபவம் மிக்கவர்கள். பல பெரிய மேடைத் தயாரிப்புக்களில் கலந்து கொண்டு பெயரும் புகழும் பெற்றவர்கள். இவை எல்லாவற்றும் எதிரிடையாக இருந்தவன் நான் ஒருவன் மட்டுமே. நாடகம் குறித்த படிப்பு கிடையாது. மேடை நாடகம் குறித்த அனுபவம் எதுவும் கிடையாது. நாடகங்களில் நடித்த அனுபவம் கிடையாது. வாய் திறந்து இந்தி பேசினல் இந்தி மொழியை நேசிக்கும் யாருக்குமே கடுங்கோபத்தை வரவழைக்க வாய்ப்பிருக்கும் ஒரு மோசமான இந்தி உச்சரிப்பு. இத்தனை பலவீனங்களையும் வைத்துக் கொண்டு அந்த அரங்கத்தில் தேர்வுக்காக மிகவும் பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தேன். என் குழுவைச் சேர்ந்த மற்ற எல்லோரும் அங்கங்கே நின்று கொண்டு சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தது.

Sunday, March 1, 2009

நாடக மேடைஅனுபவங்கள்-5


வெங்கட்சாமிநாதன்

கஜானன் மாதவ் முக்திபோத் என்னும் இந்திக் கவிஞனின் "சாந்த் கா மூ டேடா ஹை'' (சந்திரனின் முகம் கோணியது) என்னும் நெடுங்கவிதைக்கு நாடக வடிவம் கொடுக்க முயற்சித்த என்னுடைய முதல் மேடை நாடகத் தயாரிப்பு அனுபவத்தைப் பற்றி எழுதி வருகிறேன். அந்த மேடை நாடகத் தயாரிப்பின் ஒத்திகைகளைப் பற்றி எழுதத் துவங்கியபோது அதில் ஈடுபட்டிருந்த நண்பர்களைப் பற்றி எழுதிச் செல்ல மனமும் கையும் என்னை இழுத்துச் சென்றது.
ஏற்கனவே ஒரு இதழில் கோடிட்டுக் காட்டியது போல, இந்த நாடகம் மட்டுமன்றி என்னுடைய நாடக செயல்பாடுகளின் பெரும்பகுதி ரவீந்திரன் எனக்குக் காட்டிய பாதையில் அமைத்துக் கொண்ட பயணங்களே எனச் சொல்லலாம்.

எண்பதுகளின் துவக்கத்தில் உடன் பணிபுரிந்த நண்பன் சுரேஷ் சுப்பிரமணியனும் நானும் ஊரிலிருந்து வாங்கி வரும் தமிழ் நூல்களைப் பரிமாறிக் கொள்வோம். நார்த் பிளாக் கட்டிடத்தில் உள்ள காபி போர்டு உணவகத்தில் அமர்ந்து நவீன இலக்கியம் பற்றிய உரையாடலுடன் நாளின் பெரும்பகுதியைக் கரைத்தவர்கள் நாங்கள். கோ.விஜயராகவன் என்கிற நண்பரும் உடன் இருப்பார். (வடக்கு வாசல் முதல் இதழில் விஜயராகவன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்) அப்போது வெங்கட்சாமிநாதனின் ஓர் எதிர்ப்புக் குரல், பாலையும் வாழையும் போன்ற கட்டுரைத் தொகுப்புக்களைப் படித்து நாங்கள் ஒருவகையில் ஞானஸ்நானம் பெற்றிருந்தோம். ஜேஜே சில குறிப்புக்கள் எங்களைப் பைத்தியம் பிடிக்க வைத்திருந்தது. க்ரியா பதிப்பகம் வெளியிட்ட ராம் மொழிபெயர்ப்பில் ஆல்பர் காம்யுவின் அந்நியன் எங்களைத் திக்குமுக்காட வைத்துக் கொண்டிருந்தது. தி.ஜானகிராமனின் மோகமுள், அம்மா வந்தாள், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம் போன்ற புதினங்களை எத்தனையாவது முறையாகவோ விடுப்புக்கள் எடுத்துப் படித்து வந்தோம். எங்களைப் பெரிதும் திரும்பிப் பார்க்க வைத்த வெங்கட்சாமிநாதன், க.நா.சுப்பிரமணியம் ஆகியோர் தில்லியில்தான் இருக்கிறார்கள் என்று கிடைத்த செய்தி எங்களுக்கு அதீதமான மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவர்களை சந்திக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டோம். நாகவேணுகோபாலன் என்று ஒரு நண்பர். அவர் யாத்ரா, இலக்கியவட்டம் போன்ற இதழ்களில் சில கட்டுரைகள் எழுதியவர். பல முன்னணி (!) எழுத்தாளர்களுக்கு நண்பர். நாகவேணுகோபாலனும் நானும் லோதி காலனியில் இருந்து செயலகம் செல்லும் பேருந்தில் மேலே உள்ள குறுக்குப் பட்டையைப் பிடித்துத் தொங்கிக்கொண்டே பல நாட்கள் இலக்கியம் வளர்த்து வந்தோம். நாகவேணுகோபாலனிடம் ஒரு நாள் சொன்னேன். "வெங்கட்சாமிநாதனை சந்திக்க வேண்டும்'' என்று. அந்த நேரத்தில் எனக்கும் சுரேஷுக்கும் வெங்கட் சாமிநாதனைப் பற்றிக் கிடைத்த தகவல்கள் திகில் மூட்டுவனவாக இருந்தன. ஏறத்தாழ அவர் கையில் ஒரு பெரிய சாட்டை அல்லது கருப்பசாமியின் கையில் இருப்பதைப் போன்ற ஒரு அரிவாளை ஏந்திக் கொண்டு தன்னிடம் இலக்கிய ரீதியாக உடன்படாதவர்களை வதம் செய்து விடுவார் என்கிற ரீதியில் அவரைப் பற்றிய செவிவழிக் கதைகள் தில்லியிலும் தமிழ்நாட்டிலும் உலவி வந்தன. நவீன இலக்கியம் பற்றி அதிகம் தெரியாதவர்களிடம் அவர் பேசமாட்டார் என்றும் குறைந்த ஞானத்துடன் அவரை அணுகினல் நார்நாராகக் கிழித்து எறிந்து விடுவார் என்றும் படுபயங்கரமான வதந்திகள் உலவின. பொதுவாக சுரேஷ், சாப்பிடுவது, குடிப்பது போன்றவிஷயங்களுக்கு மட்டுமே வாயைத் திறக்க வேண்டும் என்ற கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பவன். நான் கொஞ்சம் ஓட்டை வாய். குறைந்த ஞானம் கொண்டதால் பேச்சு அதிகம் இருந்தது என்னிடம். (இருந்தது என்ன?) எனவே இணைந்திருந்தால் ஒன்று மற்றொன்றைசரி செய்து விடலாம் என்று நம்பினோம். வெங்கட்சாமிநாதனை சந்திக்கலாம் என்று தீர்மானித்தோம். நாகவேணுகோபாலனிடம் சொன்னோம் உங்களுக்குத்தான் அவரைத் தெரியுமே. எங்களை அவரிடம் அழைத்துப் போங்களேன் என்று. அவர், "சேஷாத்திரி என்று ஒரு நண்பர். ராமகிருஷ்ணபுரத்தில் வெங்கட்சாமிநாதன் வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருக்கிறார். அவர் உங்களை சாமிநாதனிடம் அழைத்துச் செல்வார்'' என்று சொன்னது மட்டுமின்றி சேஷாத்திரி அவர்களுடன் எங்களைத் தொடர்பு கொள்ள வைத்தார்.

சேஷாத்திரி மிகவும் அற்புதமான மனிதராக இருந்தார். கவிதைகள் எழுதுவார். நிறைய கவிதைகள். அவருடைய கவிதைகள் எப்படியோ இருக்கட்டும். தன்னுடைய வாழ்க்கையை மிகவும் அற்புதமான பொருள் பொதிந்த கவிதையாக மாற்றிக் கொண்டவர் அவர். இறப்புக்குப் பின் சடங்குகளை மறுத்துத் தன் உடலை மருத்துவ ஆய்வுக்குத் தானமாக வழங்கிய பெருமனம் கொண்டவர் சேஷாத்ரி அவர்கள். வாழும் காலத்திலும் வெளியில் தெரியாமல் பலருக்குப் பலவகைகளில் பெருத்த உதவிகளைச் செய்த நல்ல மனம் படைத்தவர். சேஷாத்திரி என்னையும் சுரேஷையும் வெங்கட்சாமிநாதன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினர்.

வெங்கட்சாமிநாதனின் கையில் சாட்டை இல்லை. கருப்பசாமியின் வெட்டரிவாள் இல்லை. ரொம்பவும் சாதாரணமாகப் பழகினர். மிகவும் எளிமையாகப் பேசிக்கொண்டிருந்தார். சுரேஷுக்கு மட்டும் உள்ளூர உதைத்துக் கொண்டிருந்தது என்னைப் பற்றி. நான் ஏதாவது எக்குத் தப்பாகப் பேசி அல்லது கேள்விகள் கேட்டு சாமிநாதனிடம் வாங்கிக் கட்டிக் கொள்வேனோ என்று. ஒவ்வொரு இரண்டு நிமிடமும் பதட்டத்துடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நல்ல வேளை அப்படி ஏதும் நடக்க வில்லை. என்றும் இல்லாதவாறு அன்று நான் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு அடுத்தவர் பேசுவதைக் கேட்கும் மனநிலையில் இருந்தேன்.

வெங்கட்சாமிநாதன், கொஞ்ச நேரம் எங்களைப் பற்றிக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தவர், "ரவீந்திரன் என்று ஒரு நண்பர் இருக்கிறார். அடுத்து வரும் சனிக்கிழமை அன்று கரோல்பாக்கில் அவருடைய வீட்டில் சந்திக்கலாம்'' என்று முகவரி கொடுத்தார்.

செ.ரவீந்திரன்

சனிக்கிழமை ரவீந்திரன் வீட்டுக்குப் போனோம். சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்றார் ரவீந்திரன். அவருடைய கரோல்பாக் வீட்டில் அன்று துவங்கிய எங்கள் சனிக்கிழமை விஜயம் ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தது. அவர் தில்லி பல்கலைக்கழக வளாகத்துக்கு வீடு மாற்றிய பின்னரும் எங்கள் சனிக்கிழமை விஜயங்கள் தொடர்ந்தன. அவருடைய வீட்டை நாங்கள் செல்லமாக மடம் என்று அழைத்தோம். வீடெங்கும் புத்தகங்கள் எல்லா இடங்களிலும் இறைந்து கிடக்கும். உலகத் திரைப்பட விழாக்களில் வழங்கப்படும் கையேடுகளும் விவரணப் பட்டியல்களும் இறைந்திருக்கும். சனிக்கிழமைகளில் எப்போதும் நண்பர்கள் கூட்டம். மடத்தில் மது அருந்தாத நவீன இலக்கிய வாதிகளும் நவீன நாடகக் காரர்களும் அநேகமாக யாருமே இருக்க முடியாது. பல நாடக நண்பர்கள் அங்குதான் அறிமுகமானர்கள். உலக நாடகங்கள் பற்றிய நூல்களை, நாடகக் கோட்டுபாடுகள் குறித்த நூல்களை, நாடகங்களின் தொழில் நுணுக்கங்கள் குறித்த நூல்களை, நாடகப் படிகளை, பல நாடக அறிஞர்களின் நாடகங்களை ரவீந்திரன் புண்ணியத்தில் படித்தோம். நாடகங்கள் பற்றி, உலக சினிமா பற்றி வெங்கட்சாமிநாதனும் ரவீந்திரனும் எங்களுக்குத் திறந்து வைத்த சாளரங்கள் ஏராளம்.

ரவீந்திரன் அப்போது சென்னையில் கூத்துப்பட்டறையுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார். தன்னுடைய வாழ்நாளின் பெரும்பாலான பகுதிகளை அந்தக்குழுவின் நாடகங்களுக்கு ஒளியமைப்பதற்காகச் சென்ற ரயில் பயணங்களில் கழித்திருக்கிறார். கூத்துப்பட்டறை மட்டுமல்லாது தமிழகத்தில் நிகழ்ந்த அனைத்து நவீன நாடக விழாக்களிலும் ரவீந்திரன் பல இயக்குநர்களுடன் பணி புரிந்திருக்கிறார். இந்திய நகரங்கள் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளிலும் சென்று நாடகங்களுக்கு ஒளியமைத்து வருகிறார். அந்நிய நாட்டுத் திரைப்படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் இருந்திருக்கிறார் ரவீந்திரன். தில்லிப் பல்கலைக் கழகத்தில் இந்திய மொழித்துறையின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்று இப்போது புதுவை பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா மாணவர்களுக்கு வகுப்புக்கள் எடுத்து வருகிறார். என்னுடைய இப்போதைக்குக் கடைசி நாடகமான சாம்பசிவா வரை ரவீந்திரன் ஒளியைமத்துக் கொடுத்தார். என்னுடைய ஒவ்வொரு நாடகத்திலும் ஏதேனும் பொலிவு இருந்தது என்றால் அது ரவீந்திரன் அமைத்துக் கொடுத்த ஒளியமைப்பில்தான் என்று நேர்மையுடன் நம்புகிறேன்.

நான் வடக்கு வாசல் துவங்கியதும் ரவீந்திரன் புதுவைக்கு இடம் பெயர்ந்ததும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் நிகழ்ந்தவை என்று சொல்லலாம். ஒருவேளை ரவீந்திரன் தில்லியில் இருந்திருந்தால் என்னை ஏதாவது நாடகம் மேடையேற்றத் தூண்டிக் கொண்டு இருந்திருப்பார். தெருக்கூத்துக் கலைஞர் புரிசை கண்ணப்பத்தம்பிரான் பற்றிய என்னுடைய ஆவணப் படத்திலும் சி.சு.செல்லப்பா பற்றி நான் தயாரித்த முடிவுறாத ஒரு ஆவணப்படத்திலும் அவர் பெரும் பங்காற்றினர். தமிழின் நவீன நாடக மேடைகளில் ஒளியமைப்புக்கு ஒரு சிம்மாசனத்தைப் பெற்றுத் தந்தவர் ரவீந்திரன் என்று சொன்னல் அது மிகையாகாது. யாத்ராவில் "பின்னோக்கிய மறுபார்வையில்'' என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைகள் மிகவும் தரமானவை. தமிழ் சமூகத்தின் முன்பு பல கேள்விகளை மிகவும் அநாயாசமாக எழுப்பி நிற்பவை. தெருக்கூத்து, யட்சகானம் பாகவதமேளா மற்றும் ரிச்சர்ட் ஷெக்னர் பற்றி அவர் எழுதிய கட்டுரை ஆகியவற்றை ஒவ்வொரு நாடகக் காரனும் அவசியம் படிக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து தில்லிக்கு நாடக விழாக்களில் கலந்து கொள்ள வரும் நவீன நாடகங்களுக்கும் ஒளியமைப்பார் ரவீந்திரன்.

ராம் கலாச்சார மையத்தில் நாடகம் குறித்த ஒரு பகுதிநேர பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டு சுய ஆர்வத்தினல் ஒளியமைப்பின் பல பரிமாணங்களைக் கற்று தமிழ் நாடக மேடைகளைப் பரிமளிக்க வைத்துக் கொண்டிருப்பவர் ரவீந்திரன்.
அவரிடம் உள்ள ஒரே ஒரு குறையாக நான் காண்பது எதையும் முன்னே நின்று செய்ய மாட்டார். பின்னணியில் செயல்வடுவதில் ஆர்வம் காட்டுவார். புரிசை கண்ணப்பத் தம்பிரான் பற்றிய படம் துவங்கிய போது ரவீந்திரனை மனதில் வைத்துத்தான் செயல்பட்டேன். கேமரா, நல்ல கேமராமேன், படம் தயாரிக்கும் செலவுக்கான பணம் அத்தனையும் இருக்கிறது. இந்தப் படத்தை நீங்களே செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். வழக்கப்படி சிரித்துக் கொண்டே எல்லோரும் சேர்ந்து செய்யலாம் என்று பதுங்கினர். ஆனல் அந்தப் பணிகளில் தீவிர ஈடுபாட்டுடன் இயங்கினர். அதே போல செல்லப்பா பற்றிய படத்திலும் அதீதமான ஆர்வம் காட்டினர்.

தமிழ்ச் சமூகம் பற்றிய ஆழ்ந்த அக்கறை உள்ளவர் ரவீந்திரன். அவருடைய கட்டுரைகளில் சமூக அவலங்களை மிகவும் கடுமையாக சாடியிருக்கிறார். தமிழ்ப் பேராசிரியராக இருந்தும் தமிழ்ப் பேராசிரியப் பெருமக்களைப் பல இடங்களில் துவைத்து அலசிக் காயப்போட்டவர். அதனல் பொதுவாக பலருக்கு அவ்வளவாகப் பிடிக்காமல் போனவர். என்னுடைய அனைத்து செயல்பாடுகளின் பின்னணியிலும் வெங்கட்சாமிநாதன் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் அந்நாளில் காட்டிய வெளிச்சங்கள் எப்போதும் வழித்துணைக்கு வந்து கொண்டிருப்பதாக உறுதியுடன் நம்புகிறேன்.

யதார்த்தாவின் அனைத்து நாடகங்களிலும் ரவீந்திரனுக்கு உதவியிருக்கிறான் சுரேஷ் சுப்பிரமணியம். தலைநகரில் கலை இலக்கிய நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டியவன். படிப்பதில் அதீத ஆர்வம் காட்டுபவன். அதிகமாகப் படிப்பவர்களுக்கு இயற்கையில் அமையும் செயல்பாடுகளில் ஆர்வமில்லாமை அவனையும் தாக்கியதால் அதிகமாக வெளியில் வராதவன். யதார்த்தா மற்றும் வடக்கு வாசல் இதழின் துவக்க நாட்களில் பெரும் பணியாற்றியவன் சுரேஷ்.

இனி ஒத்திகைகள் மற்றும் மேடையேற்றத்தைப் பற்றி எழுதி முடித்து விடலாம் என்று இருக்கிறேன்.