Tuesday, September 26, 2017

ஏ.கே.செட்டியார் - அண்ணல் காந்தியடிகள் பற்றிய முதல் ஆவணப்படம்

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்


                அனைவருக்கும் வணக்கம்.

வேறு எந்த சமூகத்திலும் காணாத அளவுக்கு நம் தமிழ் சமூகத்தில் விசித்திரங்களும் வேடிக்கைகளும் வினோதங்களும் எக்கச்சக்கமாகக் கொட்டிக் கிடக்கின்றனஇரு வேறுபட்ட முனைகளில், ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத இருநிலைகளில் எதிரும் புதிருமான தளங்களில் சமூகக் கலாச்சார நிகழ்வுகள் நம்முன் பல சமயங்களில் காணக் கிடைக்கின்றனவெற்று ஆரவாரங்களாலும் கோஷங்களாலும் உருவாக்கப்பட்டு  எதிலும் ஒரு பூரணத்தையும் ஒழுங்கையும் வேண்டி நிற்காது  ஒரு சிறு அளவிலேனும் பகுத்தறிவின் பிரயோகத்தையும் வேண்டி நிற்காத விஷயங்கள் பிராபல்யம் அடைந்து நிறுவப்பட்ட வெற்றிகளின்  சூத்திரங்கள் ஆகின்றன

அதே நேரம் நாம் மற்ற சமூகங்களின் முன், மற்ற மொழி மற்றும் கலாச்சாரக் குழுமங்களின் பெருமையுடன் முன் வைக்கத் தகுதியும் ஆகிருதியும் கொண்ட பல உன்னதங்கள் எவ்வித ஆரவாரமும் இன்றி ஒரு அர்த்தம் பொதிந்த மௌனத்துடன் இச்சமூகத்தின் மூளைச் செயல்பாட்டினை நிராகரித்த புறக்கணிப்பினை எதிர்கொண்டு கால ஓட்டத்தில் பயணித்து வருகின்றன.  

அப்படிப்பட்ட பல உன்னத நிகழ்வுகளில் ஒன்றுதான் .கே.செட்டியார்.   ஒன்றும் இல்லாத வெற்றுக் கலாச்சார நிகழ்வுகள் பொய்யான ஒரு சரித்திரத்தினை உருவாக்கி தமக்கான தகுதியில்லாத இடங்களை ஸ்தாபித்துக் கொண்டு பதவி பட்டங்களுடன் பிரம்மாண்டமாக இயங்கும் இந்த சூழலில்  எவ்வித ஆரவாரமும் இன்றி தன்னைப் பற்றிய எவ்விதமான பதிவுகளையும் வருங்காலத்துக்காக முன்வைக்காமல் சென்றிருக்கிற ஒரு உன்னத நிகழ்வு .கே.செட்டியார்.