Saturday, April 25, 2009

இரு துயரச் சம்பவங்கள் - இரு வேறுபட்ட எதிர்வினைகள்

டெல்லி மாநகரில் ஒரே வார இடைவெளியில் இரு துயரச் சம்பவங்கள்.

முதல் சம்பவத்தில் ஷன்னோ காதூன் என்னும் பதினொரு வயதுப்பெண். டெல்லி நகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவி. அவளுடைய தகப்பனார் டெல்லிக்கு வெளிப்புறத்தில் உள்ள பவானா என்னும் இடத்தில் உணவகம் ஒன்றில் பணிபுரிகிறவர். ஷன்னோ வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவள். ஆங்கிலப் பாடத்தை ஒழுங்காக ஒப்பிக்காததினாலும் ஆங்கில எழுத்து ஒன்றை ஒழுங்காக எழுதிக் காட்டாததினாலும் கோபம் கொண்ட அவளுடைய ஆசிரியை வெய்யிலில் அவளை முட்டி போட்டு நிறுத்தி வைத்ததால் வலிப்பு நோய் அதிகமாகி மூன்று நாட்கள் மருத்துவ மனையில் நினைவின்றிக் கிடந்து பரிதாபமாக உயிர் விட்டிருக்கிறாள். அவளை இந்த கதிக்கு ஆளாக்கிய ஆசிரியை தலைமறைவாகி விட்டார். அவரை காவல்துறை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது.

ஆசிரியையால் தண்டிக்கப்பட்டு மரணப்படுக்கையில் கிடக்கும் ஷன்னோ காதூன்

இன்னொரு சம்பவத்தில் ஆகிரிதி என்கிற17 வயதுப் பெண். 11ம் வகுப்பு மாணவி. டெல்லியின் மேட்டுக்குடி மக்கள் வசிக்கும் வஸந்த் விஹார் என்னும் பணக்காரப் பகுதியில் உள்ள மாடர்ன் பப்ளிக் ஸ்கூல் என்னும் மஹா பணக்காரப் பள்ளியின் மாணவி. கோடீஸ்வரர்களின் பிள்ளைகள் மட்டுமே படிக்கக் கூடிய பள்ளி. ஆகிருதிக்கு ஏற்கனவே ஆஸ்துமா நோய் இருந்திக்கிறது. சம்பவ தினத்தன்று மதியம் பள்ளியில் அந்தப் பெண்ணுக்கு மிகக் கடுமையான ஆஸ்துமா நோய்த் தாக்குதல் ஏற்பட்டு இருக்கிறது. பள்ளி நிர்வாகம் முதலில் மெத்தனமாக இருந்து விட்டு நிலைமை மோசமானதும் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அவளை எடுத்துச் சென்றிருக்கின்றனர். உரிய நேரத்தில் முதலுதவியும் தேவையான சிகிச்சையும் தரப்படாததால் மருத்துவ மனைக்குச் செல்லும் முன்னரே பரிதாபமாக உயிர் பிரிந்திருக்கிறது.

இந்த இரு துயரச்சம்பவங்களுமே இருவகையான எதிர்வினைகளை சந்தித்து இருக்கின்றன. மிகவும் ஏழைக்குடும்பத்தை சேர்ந்த ஷன்னோவின் மரணம், அந்தப் பெண் வசிக்கும் பகுதியில் உள்ள ஏழைத் தொழிலாளர்கள் காட்டிய சிறு எதிர்ப்புக்களோடு நின்று போயிற்று. விசாரணை செய்ய வந்த காவல் அதிகாரிகள் மீது ஒரு சிறு கும்பல் கல்வீ்ச்சு நடத்தியிருக்கிறது. ஆசிரியை தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடுவதாகக் காவல்துறை சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு நாளைக்குக் குறைந்தது 20 மணி நேரம் அந்தப் பெண் மருத்துவனையில் கோமாவில் படுத்திருந்த கோரமான காட்சியை ஒளிபரப்பிய செய்தித் தொலைக்காட்சி நிலையங்கள் மெல்ல மெல்ல அதைப் பற்றிப் பேசுவதையே நிறுத்திக் கொண்டன. பவானாவை சேர்ந்த ஓரிரு குட்டித் தலைவர்கள் அறைகுறை அறிக்கைகளை வெளியிட்டதோடு நிறுத்திக் கொண்டார்கள். ஷன்னோவின் பெற்றோர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் காட்டிய சிறு எதிர்ப்பையும் அரசியல்வாதிகளின் தூண்டுதலால் அவர்கள் அதில் ஈடுபடுவதாக தில்லி அரசாங்கம் குற்றம் சாட்டியது.

வஸந்த் விஹார் பகுதியைச் சேர்ந்த ஆக்ரிதியின் விஷயத்தில் வேறு வகையான எதிர்வினைகள் கிட்டின. ஆக்ரிதியின் பள்ளியில் உடன் படித்த மாணவிகள் மட்டுமல்லாது நகரத்தின் வேறு பணக்காரப் பள்ளிகளி் இருந்தும் மாணவிகள் மறியலில் கலந்து கொண்டார்கள். பல மாணவிகள் மிகவும் உரத்த குரலில் பள்ளி நிர்வாகத்தைக் குற்றம் சாட்டினார்கள். அவர்கள் குரலில் தர்ம ஆவேசம் இருந்தது. அவர்கள் கதறலில் நியாயத்தின் வலு இருந்தது. மாடர்ன் பப்ளிக் பள்ளியின் முதல்வர் செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது அவரை முற்றுகையிட்டு கூச்சல் போட்டனர். அமைச்சர் ரேணுகா சௌத்ரி ஆக்ரிதியின் பெற்றோர்களை சந்தித்தது தலைநகரில் செய்தியானது. ஆக்ரிதியின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட டெல்லி அரசு தலைநகரின் பள்ளிகளில் அவசர சிகிச்சை வசதிகளோடு மருத்துவ உதவி அறைகளை கட்டாயமாக்கும் சட்டத்தை அமுல்படுத்த ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

ஆகிரிதி பாட்டியா

ஆகிரிதி மரணத்துக்குப் பிறகு அரசின் இந்த உடனடி நடவடிக்கையும் ஊடகங்கள் காட்டும் அதிகபட்ச அக்கறையும் கொஞ்சம் சிந்திக்க வைக்கின்றன.

மரணம் ஏழை பணக்காரன் என்று வேறுபாடு காட்டுவதில்லை. துயரம் என்பது பொதுவானது. துயரத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஆனால் இரு துயரச் சம்பவங்களிலும் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் வேகத்தையும் காட்டப்படும் அதிரடியான எதிர்வினைகளையும் பார்க்கும்போது எங்காவது லேசான வேறுபாடு இருக்கலாமோ என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஒருவேளை ஒரே வாரத்துக்குள் இரண்டு துயரச் சம்பவங்களும் நிகழ்ந்ததால் இரண்டாவது சம்பவம் சற்று முக்கியத்துவம் பெறுகிறது என்று வைத்துக் கொண்டாலும் ஆகிருதி வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்த ரேணுகா சௌத்ரியாலோ அல்லது தில்லி அரசின் அமைச்சர்கள் யாராலோ ஷன்னோ வீட்டுக்குசம் செல்ல வழி தெரியவில்லையா என்னும் கேள்வி எழத்தான் செய்கிறது.

செய்தியாளர் கூட்டத்தில் பள்ளி முதல்வர்

எல்லாம் கிடக்கட்டும். பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பணக்காரப் பள்ளியி்லேயே ஒரு மாணவிக்கு எந்தவித உடனடி மருத்துவ வசதிகளையும் தந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முயற்சிக்க வில்லை என்னும் போது வசதி குறைந்த நிர்வாகத் திறனற்ற மற்ற பள்ளிகளின் குழந்தைகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அவர்களின் கதி என்னாவது?

வழக்கப்படி ஆண்டவன்தான் அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் வழக்கம் சற்று மாறிவருகிறது.

ஆண்டவனும் இப்போதெல்லாம் ஏழைகளை சரிவரப் பார்த்துக் கொள்வதில்லை. ஆள்கிறவர்களும் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை.

Wednesday, April 22, 2009

கலகக் குரலாய் ஒலித்த இசைக்குயில்

இக்பால் பானோ - ஒரு அஞ்சலி
1935 - 2009


தில்லி மாநகரின் கள்ளக் குறுந்தகடுகளின் பிறப்பு மற்றும் சங்கம ஸ்தானங்களான பாலிகா பஜார், நேரு பிளேஸ் போன்ற இடங்களில் எப்போதும் பாகிஸ்தான் நாடகங்கள் மற்றும் பாகிஸ்தான் கஜல் இசைக்கலைஞர்களின் குறுந்தகடுகள் போடுபோடென்று போடும். ஒலிப்பேழைகள் மற்றும் ஒலிநாடாக்களின் காலங்களிலும் பாகிஸ்தான் கலைஞர்களின் நாடகங்கள் மற்றும் பாடல்கள் தில்லி சந்தைகளில் வெகு அமோகமாக விற்பனையாகும். தில்லியின் ஐம்பது மற்றும் அறுபது வயதுகளைத் தாண்டிய பஞ்சாபிகள் கிழவர்கள் இன்றும் என்றும் அதிகம் விரும்பிக் கேட்ட இசைக்கலைஞர்களில் முக்கிய இடத்தை வகித்தவர் நேற்று லாகூரில் காலமான கஜல் அரசி இக்பால் பானோ (இக்பால் பானு என்றும் அழைப்பார்கள்).

இசை அரசி மட்டுமல்லாது பாகிஸ்தான் நாட்டின் கலகக் கவிஞன் ஃபைஸ் முஹமது ஃபைஸ் கவிதைகளை சர்வாதிகார ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாது நாடெங்கும் கொண்டு சென்ற ஒரு கலகக் குயில் இவர்.


தெற்காசியாவின் கஜல் மற்றும் தும்ரி வடிவங்களின் மீது மையல் கொண்ட பல இசை ரசிகர்களின் மனங்களில் புயல் வீச வைத்தவர் இக்பால் பானோ என்று கூறுவார்கள்.

பாகிஸ்தான் வானொலி, திரை இசை, கஜல் மற்றும் தும்ரி மேடைகளில் 2003 வரை இசை ராஜ்ஜியத்தைப் பரிபாலனம் செய்து வந்த இக்பால் பானோ டெல்லியைச் சேர்நத அம்மணி. 1935ல் டெல்லியில் பிறந்தவர். டெல்லி அருகில் உள்ள ஹரியானாவின் ரோதக் நகரில் வளர்ந்தவர். சிறுவயது முதல் இசையில் ஆர்வம் கொண்ட பானோவை அந்தக் காலத்து டெல்லி இசுலாமியத் தகப்பன்களைப் போல அல்லாது அவருடைய இனிய குரல் வளத்தைக் கண்டு பலவகையிலும் ஊக்கப்படுத்தியவர் அவருடைய தந்தையார்.

டெல்லி கரானா எனப்படும் டெல்லி சங்கீதப் பத்ததியில் உஸ்தாத் சாந்த் கான் என்பவரிடம் தந்தையாரின் ஆசியுடன் சாஸ்திரிய சங்கீதத்தில் குருகுலம் மேற்கொண்டார் பானோ. பானோவின் திறனைக் கண்ட உஸ்தாத் சாந்த் கான் அவருக்கு சாஸ்திரிய வடிவங்கள் மட்டுமல்லாது தும்ரி, தாத்ரா போன்ற இசைவடிவங்களையும் சிறப்பாகக் கற்பித்தார். தில்லி வானொலி நிலையத்தில் இவருடைய குருநாதர் இவரை முதன்முதலாகப் பாடவைத்தார்.
1952ல் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமீன்தார் ஒருவர் பானோவின் இசைத்திறனைக் கண்டு சொக்கிப்போனார். தன்னை மணந்து கொண்டால் பானோவின் இசை ஈடுபாட்டுக்கு எவ்வித இடையூறும் நேராது என்று அவருக்கு உறுதி அளித்தாராம் அந்த ஜமீன்தார்.

இதன் வழியாக நம் டெல்லியின் இசைச் செல்வம் ஒன்று பாகிஸ்தானுக்குக் கவர்ந்து செல்லப்பட்டது. 1980ல் இறந்த பானோவின் கணவர் அவர் தந்த உறுதியை இறக்கும்வரை காப்பாற்றினார். பாகிஸ்தானில் பலரையும் இவருக்கு அறிமுகப்படுத்தி பானோவை பாகிஸ்தானில் மிகவும் பிரபலப்படுத்தினார். 1957ல் லாகூர் ஆர்ட்ஸ் கவுன்சில் அரங்கில் துவங்கிய அவருடைய மற்றொரு பிரவேசம், பாகிஸ்தான் வானொலி, திரைப்பாடல்கள், மேடை நிகழ்ச்சிகள் எனப் புகழின் உச்சியில் அவரைக் கொண்டு சென்றது.

பானோவின் இசை நிகழ்ச்சிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவருடைய பாடல்களுக்காகவே பல பாகிஸ்தானிய திரைப்படங்கள் வசூலைக் குவித்தன. அவருடைய இசைத்தட்டுக்களும் ஒலிப்பேழைகளும் விற்பனையைக் குவித்தன. உருது மட்டுமல்லாது பாரசீக மொழியிலும் கஜல்களைப் பாடினார் பானோ. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளில் ஒரு பெருங்கூட்டம் அவர் மேல் பித்துப் பிடித்து அலைந்தது. இன்னும் அலைகிறது. இவருடைய பாரசீக மொழித்திறமை மற்றும் அந்த மொழியில் இவர் பாடிய கஜல் பாடல்களில் மகிழ்ந்து ஆப்கன் மன்னர் பானோவுக்கு தங்கத்தால் செய்த அழகிய வேலைப்பாடுகள் மிகுந்த பூந்தொட்டி ஒன்றைப் பரிசளித்தாராம். நம்முடைய தில்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் அவருடைய இசைத்தட்டுக்கள் விற்பனையைக் குவித்தன.

டெல்லி வானொலி நிலையத்தில் இப்போதும் எப்போதாவது இரவு நேரத்தில் கஜல் கேட்க உட்கார்ந்தீர்கள் என்றால் இக்பால் பானோவின் இனிய குரலை நீங்களும் கேட்கலாம். இன்றும் அவருக்கென்று வானொலி ரசிகர்கள் கூட்டம் இந்தியாவிலும் இருக்கிறது.

1981ல் வேலைக்குச் சேர்ந்த புதிது. இந்தி தெரியாது. கிருஷ்ணகிரி இஸ்லாமியர்கள் பேசும் உருது கொஞ்சம் பரிச்சயம். மற்றபடி எல்லா இந்தி உருது பாடல்களையும் புரியாவிட்டாலும் அந்தப் பாடகர்களின் குரலினிமைக்காகக் கேட்கும் பழக்கத்தை வலுக்கட்டாயமாக உண்டாக்கிக் கொண்டேன். இந்திரஜித் சானன் என்று ஒரு பஞ்சாபி முதியவர் என்னுடன் வேலை பார்த்தார். அவர் பல கஜல் பாடகர்களை அறிமுகப்படுத்தினார். அப்போது உள்துறை அமைச்சகம் இருந்த நார்த் பிளாக் வளாகத்தில் டிரான்ஸிஸ்டர் எடுத்து வரமுடியாது. ஆனால் அவர் எப்படியோ கடத்திக்கொண்டு வந்து எப்படியோ குடைந்து குடைந்து சில பெயர் தெரியாத வானொலி நிலையங்களைக் கேட்பார். அந்த அறைக்குள்ளே ஏமாந்தவன் போல முகத்தை வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்த என்னை அருகில் அழைத்து அவர் ரசிக்கும் பாடல்களை என்னையும் ரசிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவார். அவர் கட்டாயப்படுத்திக் கேட்க வைத்த பல பாடகர்களில் பேகம் அக்தர், இக்பால் பானோ போன்றவர்கள் அடங்குவர். அப்போது புகழின் உச்சகட்டத்தில் இருந்தார் பானோ. பாகிஸ்தானிய திரைப்படப் பாடல்களை டெல்லியில் பலரும் விரும்பிக் கேட்பார்கள். இக்பால் பானோவின் திரைப்படப் பாடல்கள் கூட ஒருவித மரபிசை சார்ந்தும் கஜல், தும்ரி போன்ற இசைவடிவங்களில் இருக்கும். இந்த அற்புதப் பாடலுக்காக எப்படி பாகிஸ்தான் நாட்டின் அந்த நடிகனும் நடிகையும் மரத்தைச் சுற்றி ஓடமுடியும் என்று கற்பனை செய்து கொள்வேன்.
பொதுவாக கலைஞர்களை எப்போதும் ஒரு கலகக் குரல் வழிநடத்திக் கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் பாகிஸ்தானின் கலகக் கவிஞரான ஃபைஸ் அஹமது ஃபைஸ் கவிதை வரிகளை, கஜல் வரிகளை தன்னுடைய மேடையில் அதிகமாகப் பிரபலப் படுத்தத் துவங்கினார் பானோ. பாகிஸ்தானில் ஜியாவின் சர்வாதிகாரப் போக்கினை எதிர்த்துப் பலவகைகளில் குரல் கொடுத்தவர் கவிஞர் ஃபைஸ் அஹமது ஃபைஸ். அவருடைய ஒவ்வொரு கவிதையும் சர்வாதிகாரத்தையும் எதேச்சதிகாரத்தையும் கேள்விகள் கேட்டு நிமிர்ந்து நின்றன. இந்த உண்மையான எழுச்சிக் கவிஞனைப் பலவகைகளிலும் ஒடுக்க பாகிஸ்தான் அரசு முனைந்தது. பலமுறை கடுமையான சிறைவாசங்களை அனுபவித்தார் ஃபைஸ் அஹமது ஃபைஸ். அந்தத் தருணத்திலும் இவருடைய பாடல்களை மேடை தோறும் முழங்கினார் பானோ. ஃபைஸ் இயற்றி அவருக்கே மிகவும் பிடித்தமான "ஹம் தேக்கேங்கே" என்னும் பாடலை ஒவ்வொரு மேடை தோறும் முழங்கினார் பானோ. ஒரு கட்டத்தில் பானோவையும் ஃபைஸ் அகமது ஃபைஸ் ஆகிய இருவரையும் தனித்துப் பார்க்க இயலாத பெயர்களாகக் கருதத் துவங்கினார்கள் பாகிஸ்தான் இசை ரசிகர்கள்.

இந்த இடத்தில் ஒன்று சொன்னால் தவறு இல்லை என்று தோன்றுகிறது. டெல்லித் தமிழ்ச் சங்கத்தில் சென்ற ஆண்டு அதன் முந்தைய தலைவருடனும் செயலாளருடனும் நான் சில காலம் முட்டி மோதிக் கொண்டிருந்தேன். தங்களைக் குறுநில மன்னர்களாகவும் அடுத்தவர்களை இவர்களிடம் பாடிப் பரிசில் பெறும் புலவர்களாகவும் கருதி ஜனநாயக சம்ரட்சணம் பண்ணிக்கொண்டிந்த அந்த இரு செயல்வீரர்களும் பலவகைகளில் என்னை சிறுமைப்படுத்தினார்கள். தனிப்பட்ட வகையில் பலவகைகளில் மனக்காயங்களை ஏற்படுத்தினார்கள். ரத்தக்கொதிப்பு மாத்திரையை நான் தினம் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு என்னை மனவேதனைக்கு ஆளாக்கினார்கள். அவர்கள் கையில் இன்னும் கொஞ்சம் அதிகாரம் இருந்திருந்தால் என்னை குடும்பத்துடன் டெல்லியை விட்டு வெளியே அனுப்பி இருப்பார்கள். அந்த நேரத்தில் எனக்குத் தெரிந்து தங்களைக் கலைஞர்கள் என்று வெட்கமில்லாமல் சொல்லித் திரியும் சில டெல்லி நண்பர்கள் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர், செயலர் அல்லது ஒன்றுக்கும் உதவாத செயற்குழு உறுப்பினர்கள் யாராவது எதிரில் இருந்தால் என்னுடன் பேசுவதைத் தவிர்த்து ஏதோ பேயைக் கண்டது போல மிரண்டு ஓடினார்கள். எனக்கு வணக்கம் தெரிவித்து இருந்தாலோ அல்லது என்னுடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலோ அவர்களுக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த குறுநில மன்னர்கள் மனது உவந்து அளிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லாமல் போயிருக்கும். எனவே அவர்கள் மீதும் தவறு இல்லை. இப்போது அதை எல்லாம் மறந்து விட்டேன்.

எதற்கு இந்தக் கதை என்றால் பாகிஸ்தான் போன்ற ஒரு நாட்டில் ஜியா போன்ற ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியில் அவனால் தடை செய்யப்பட்ட ஒரு கவிஞனின் கவிதைகளை ஒவ்வொரு மேடையிலும் முழங்கியிருக்கிறார் என்றால் அவருடைய கலகக் குணம் எத்தகைய அளவில் வணங்குதற்கு உரியது ! அதுவும் ஃபஸ் அஹமது ஃபைஸ் சிறையில் அடைக்கப்பட்ட தருணத்தில் அவருடைய பாடல்களை மட்டுமே கொண்டு பானோ நடத்திய இசை நிகழ்ச்சிக்கு சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்களாம். அதே போல அவருடைய ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அந்தக் கலகக் கவிஞனின் பாடல்களை இறுதி வரை பாடிக்கொண்டுதான் இருந்தார். கடுமையாகக் கோபம் கொண்ட ஜியாவின் அரசு பல ஆண்டுகாலம் பாகிஸ்தான் வானொலி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பானோவுக்குத் தடை விதித்திருந்தது. அந்தத் தடைகள் எல்லாம் பானோவை ஒன்றும் செய்யவில்லை. 2003க்குப் பிறகு உடல் நலிவடைந்தார் பானோ. அதற்குப் பிறகு அவர் பாடுவதை ஏறக்குறைய நிறுத்தியே விட்டார் என்றும் சொல்லலாம். மிகுந்த புகழ், செல்வம் இவற்றுக்கிடையே வாழ்ந்துவந்த பானோ 2003க்குப் பிறகு தன் குடும்பம் மற்றும் பேரக்குழந்தைகளுடன் எவ்வித ஆரவாரமும் இன்றி மிகவும் எளிமையுடன் காலத்தைக் கழித்து வந்தார். கடந்த ஓரிரண்டு ஆண்டுகளாக உடல் நலம் குன்றி இருந்தார்.
இந்த இசைப்பேரொளி நேற்று (21 ஏப்ரல் 2009 - செவ்வாய்க்கிழமை) லாகூரில் எல்லாம் வல்லோனுக்குப் பிரியமாகிச் சென்றது.

இணைப்பு


ஃபைஸ் அஹமது ஃபைஸ் கவிதைகள் சிலவற்றை மொழி பெயர்த்து இருக்கிறேன். இவை சூன் 2006 வடக்கு வாசல் இதழில் வெளியிடப்பட்டன. இக்பால் பானோவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்தக் கலகக் கவிஞனின் கவிதைகள் இங்கே -

ஃபைஸ் அஹ்மத் ஃபைஸ் (1914-1984)
தமிழில் : ராகவன் தம்பி

பேசு

உன் உதடுகள்

சுதந்திரமானவை

பேசு.



இது

உன் சொந்த நாக்கு

பேசு

இது

உன் சொந்த உடல்

உன் வாழ்வு

இன்னும்

உன்னுடையதே - பேசு.


கொல்லன் பட்டறை உலையின்

சுவாலை உக்கிரத்தில்

கனன்று ஜொலிக்கும் இரும்பு

மூட்டுக்களின் தாடைகள்

பிளக்கும்போது

சிதறும் ஒவ்வொரு

சங்கிலியையும் பார்!


பேசு,

இந்தக் குறுகிய

மணிநேரம்

போதுமான அளவு நீண்டதே.

உடலும் நாவும் மரிக்கும்

முன் பேசு

பேசு -

ஏனெனில்

உண்மை மட்டும்

இன்னும்

மரிக்கவில்லை.

பேசு - பேசு

என்ன பேச வேண்டுமோ

எதுவாக இருந்தாலும்

நீ பேசு.


என்னுடைய நேர்காணல்


கூரையை முட்டிக்

கறுத்து வளர்ந்திருக்கிறது சுவர்

எல்லாப் பயணிகளும் போனபின்

சூனியமாய் வெறிக்கின்றன தெருக்கள்.
என் இரவு

தனிமையுடன்

உரையாடலைத்

துவங்குகிறது.


உணர்கிறேன்.

மீண்டும்

ஒருமுறை

அந்த விருந்தாளியின்

வருகைகயை.


உள்ளங்கை ஒன்றினை

மருதாணியும் மற்றொன்றைற

உதிரமும் ஈரப்படுத்துகின்றன.

ஒரு கண் விஷமேற்றுகிறது
குணப்படுத்துகின்றது மற்றொன்;று.


இதயத்தின் உள்ளிருந்து

யாரும் வெளியேறவோ

உட்புகவோ இல்லை.


வலித்த பூவுக்கு

நீரேதும் ஊற்றாது

வெளியேறுகிறது தனிமை.


யார்

அக் காயங்களின்

பொருக்குகளை

நிறங்களால்

நிறைக்கப் போவது?

உணர்கிறேன்.

மீண்டும்

ஒருமுறை

அந்த விருந்தாளியின்

வருகையை.

பழைய தோழி

மீண்டும் ஒருமுறை

தானாக வந்திருக்கிறாள்

அவள் பெயர் -

மரணம்.

தேவையை

உணர்த்தும் நட்பு

இருந்தும் -

அவள் பகையாளி

கொலைகாரி

ஆனாலும் -

மனதுக்கு மிகவும் இனியவள்.


பத்தி


என் மைக்கூட்டையும்

எழுதுகோலையும் அபகரித்தால்

முறையிடமாட்டேன்-

இதயத்தின் உதிரத்தில்

எனது விரல்களை

நனைத்துக் கொண்டதனால்.


அவர்கள் என் நாவுக்கு

அரக்கு முத்திரையிட்டாலும்

முறையிடக் கூடாது நான் -

என்னைப் பிணைத்த விலங்கின்

ஒவ்வொரு வளையமும்

பேச ஆயத்தம் கொண்ட

நாவாக இருப்பதால்.


ஃபைஸ் அஹமது ஃபைஸ் -





பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் பிறந்தவர். தத்துவமும் ஆங்கில இலக்கியமும் படித்த ஃபைஸ் நிறுவனங்களுக்கு எதிராக செயல்பட்டவர். அதன் விளைவாக ஆங்கிலேய ஆட்சியின் போதும் பின் வந்த சுதந்திர பாகிஸ்தான் அரசினாலும் பலமுறை சிறைக்கு அனுப்பப்பட்டவர். மார்க்சிய சிந்தனைகளால் அதிகமாகத் தாக்கம் பெற்ற இவருடைய படைப்புக்கள் உழைக்கும் வர்க்கத்தின் மீதான ஆழ்ந்த அக்கறையை பிரதிபலிப்பவை. கலைல கலைக்காக என்பதை முற்றாக மறுத்தவர் அவர். அரசியல் கவிதைகளைப் போலவே அவருடைய காதல் கவிதைகளும் மிகுந்த கலை நயத்தோடு இணைந்து செயல்படுபவை. இவர் கவிஞர் மட்டுமல்லாது பத்திரிகையாளர், பாடலாசிரியர் மற்றும் சமூகப் போராளியாக விளங்கியவர். தற்கால உருதுக் கவிதையின் இயைபுடைய சொல்லாட்சிக்கு ஃபைஸ் அளித்த பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.


1963ல் நோபல் பரிசுக்காக இவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டது. லெனின் சமாதானப் பரிசை பெற்ற முதல் ஆசியக் கவிஞர் இவர்.


ராகவன் தம்பி

Monday, April 20, 2009

தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு ஒரு "ஓ"


தில்லித் தமிழ்ச் சங்கம் 19 ஏப்ரல் 2009 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திருவள்ளுவர் கலையரங்கில் கலைமாமணி கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களின் "பாரதியார் வந்தார்" என்னும் தலைப்பில் வில்லிசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் மாதாந்திர நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

குடும்பத்தில் அநேகமாக எல்லோரையும் தன்னுடைய கலையில் ஈடுபடுத்தி இருக்கிறார் சுப்பு ஆறுமுகம். இதுவே எனக்குப் பார்க்க மிகவும் மகிழ்ச்சி அளித்தது. சுப்பு ஆறுமுகத்துடன் அவருடைய மகள் திருமதி பாரதி திருமுகம். ஹார்மோனியம் வாசித்தார். அவருடைய கணவர் முனைவர் எஸ்.திருமகன் கடம். இவர்களுடைய மகன் டி.கலைமகன் வாய்ப்பாட்டு. சுப்பு ஆறுமுகத்தின் மகன் எஸ்.காந்தி உடுக்கை மற்றும் பின்பாட்டு - குடும்பத்துக்கு வெளியே ஒரே ஆளாக மிகவும் அமர்க்களமாக தபேலா வாசித்த பி.கணேஷ் ராவ்.

ஞாயிற்றுக்கிழமை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் மாலையை ஏக அமர்க்களப்படுத்தி விட்டார்கள் இந்தக் குழுவினர்.

வில்லுப்பாட்டில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி அவர்களின் வந்தனம் பகுதி. இந்த பத்ததியில் அவர்கள் ஆசானுக்கு வைக்கும் வணக்கம் கோடி அட்சரம் பெறும். தன்னுடைய ஆசான்கள் ராம அய்யர் மற்றும் தமிழாசிரியர் நவநீத கிருஷ்ணபிள்ளை ஆகியோருக்கு சுப்பு ஆறுமுகம் முன்வைத்த வணக்கம் ரொம்ப நாட்களுக்கு நினைவில் நிற்கும்.

தனக்கு 82 வயது நடக்கிறது என்று சொன்னார். நடக்கும்போது மட்டும் சற்று லேசான தடுமாற்றறம் தெரிகிறது. மற்றபடி அவர் மேடையில் அமர்ந்தபின் அதை நம்புவது சற்று கடினமாக இருக்கிறது. குரலை என்னமாகப் பதப்படுத்தி வைத்திருக்கிறார் மனிதர்? ஒரு பட்டுத் துணியைக் கையாளுவதுபோல மிகவும் பதமாகக் குரலைக் கையாளுகிறார். அந்தக் குரலில் அநியாயத்துக்கு நெல்லை குசும்பு அள்ளித் தெறிக்கிறது. கதையைத் துவங்குவதற்கு முன்பே நெல்லையின் பெருமை. டி.கே.சி வீட்டு வட்டத் தொட்டியின் பெருமை. அதில் இவர் கலந்து கொண்ட வைபவம் எல்லாவற்றையும் சுவைபடச் சொன்னார். (அந்த தோசை மேட்டர் மட்டும் விட்டு விட்டார். டி.கே.சி வீட்டு தோசை பற்றி எழுதாத பெருசுகள் யாரும் இல்லை என்று சத்தியமடித்துச் சொல்லலாம்). அன்று நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மைய கண்காணிப்பு ஆணையத்தின் செயலர் ராமசுப்பனையும் தன் கட்சிக்குள் இழுத்துக் கொண்டார். சுப்பு ஆறுமுகம் புதுக்குளம் - ராமசுப்பன் கருங்குளமாம். நெல்லை பற்றி சுப்பு ஆறுமுகம் பெருமை பொங்க விவரித்துக் கொண்டிருந்தபோது அரங்கில் இருந்த சுமார் 99 சதவிகித நெல்லைக் காரர்கள் பெருமையில் பூரித்துத் துள்ளித் துள்ளிக் கரகோஷம் எழுப்பினார்கள். நெல்லைவாசிகளுக்குத் தங்கள் ஊரைப் பற்றி எப்போதும் பெருமை உண்டாம். பாரதிக்கும் அது நிரம்ப இருந்ததாம். புதுமைப்பித்தனுக்கு இல்லாததா? திகசிக்கு இல்லாததா? வண்ணநிலவனுக்கு இல்லாதா?(அது சரி, என் காதிலும் மற்ற துவாரங்களையும் சுற்றி ஏன் இப்படிப் புகை மண்டுகிறது?)

அற்புதமான வித்வத். ஆழ்ந்த இசைஞானம். பரந்த படிப்பு. இவை எல்லாம் இல்லாமல் வில்லுப்பாட்டுப் பக்கம் வருவது சற்றுக் கடினமான காரியம். மிக விசாலமாக விரிந்து விரிந்து படர்கிறது அவருடைய விவரணங்கள். அதில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கோட்டை விடுகிறார் சுப்பு அண்ணாச்சி. அதுதான் கதை. அந்தக் கதையை மீண்டும் மீண்டும் இழுத்துக் கரை சேர்ப்பதற்கு படாத பாடு படவேண்டி இருக்கிறது அவருக்கு. அந்த வேலையை மிகவும் சாதுரியமாகச மாற்றி மாற்றிச் செய்கிறார்கள் அவருடைய குமாரர் காந்தி அல்லது மருமகன் திருமகன். இடையில் கதையின் இழையை நினைவுபடுத்தி அவர்கள் இழுக்கும் ஒரு சரிகைக்குரல் வெகுநேர்த்தி.

புலவர் விசுவநாதன் அப்புறம் என்னிடம் கொஞ்சம் குறைபட்டுக் கொண்டார். வில்லுப்பாட்டு ரொம்ப நல்லா இருந்தது. அதில் பாரதி மட்டும்தான் இல்லை என்று. அதில் உண்மையும் இருக்கலாம் என்று தோன்றியது.

ஆனால் இது மெத்தப் படித்த, அதிகமாக ஞானம் கொண்ட பல பிரசங்கிகளுக்கும் நேரும் சோகம்தான் இது. நிறைய கதாகாலட்சேபம் செய்பவர்களிடம் இது ரொம்ப வெளிப்படையாகத் தெரியும். அவர்களும் கூடை கூடையாக விஷயங்களை வைத்துக் கொண்டு கதைக்கு வராமல் படுத்தி எடுப்பார்கள். ஒருமுறை இதே மேடையில் கல்யாணபுரம் ஆராவமுதாச்சாருக்கும் இதுதான் நடந்தது. இவருக்கும் அப்படித்தான் நேர்ந்திருக்க வேண்டும்.

ஆனால் இந்த நிகழ்ச்சியின் இடையில் சில அற்புதமான சங்கதிகளை சொன்னார். அவற்றை ஆய்வு பூர்வமாக அணுகி கெடுக்காமல் இருந்தால் அவற்றின் சுவாரசியமே தனி. வில்லுப்பாட்டுக்காரர்கள் சொல்லும் ஆமா வுக்கு ஒரு அற்புதமான விளக்கம் சொன்னார். அது ஆண்டாளையும் மாணிக்க வாசகரையும் குறிப்பது என்றார். அதில் இன்னொரு விசேஷம் ஆண்டாள் தன்னுடைய பாசுரத்தில் மாணிக்கவாசகரைக் குறிப்பது போல "மா"ர்கழித் திங்கள் என்று துவங்கினாள். மாணிக்க வாசகர் தன்னுடைய திருவெம்பாவையில் "ஆ" தியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை" என்று ஆண்டாளைக் குறிப்பிட்டு இருப்பார் என்று சொன்னார்.

இந்த நிகழ்ச்சியின் அழகியலின் உச்சகட்டமாக நான் எடுத்துக்கொண்டது சுப்பு ஆறுமுகத்தின் பேரன் டி.கலைமகன் பாடிய கிட்டப்பாவின் "கோடையிலே இளைப்பாறி..." ராகமாலிகையில் இன்னும் முற்றாத இளசான குரலில் கிட்டப்பாவின் அதே கார்வைகளுடன் அதே சங்கதிகளுடன் பாடினான் பாருங்கள். கண்கள் கலங்கின எனக்கு. அந்தப் பையன் பாடும்போது முழு அரங்கிலும் ஒரு நிசப்தம் பாருங்கள். உண்மையாகவே மகுடிக்குக் கட்டுண்ட நாகங்களாக உட்கார்ந்து கொண்டிருந்தோம் நாங்கள்.

பையன் பாடி முடித்த பிறகு கிட்டப்பாவுடன் ஆர்மோனியம் வாசித்த காதர் பாட்சா பற்றிச் சொன்னார் சுப்பு ஆறுமுகம். காதர் பாட்சாவைத் தூக்கில் போடப்போகிறது ஆங்கிலேய அரசு. இறுதி ஆசையைக் கேட்கிறார்கள். முருகனைப் பற்றிய பாடல்கள் பாடவேண்டும் எனக்கு. ஒரு ஆர்மோனியம் வேண்டும் என்கிறார் காதர் பாட்சா. ஆர்மோனியம் வரவழைக்கப்பட்டது. முருகன் மேல் விடிய விடிய பாடல்களைப் பாடிக்கொண்டே இருக்கிறார் காதர்பாட்சா. எல்லா அதிகாரிகளும் பாடல்களில் மயங்கி இருக்கிறார்கள். மணி விடிகாலை ஐந்தே முக்கால். ஐந்தரைக்கு அவரைத் தூக்கில் போட்டிருக்க வேண்டும். காலம் கடந்து விட்டது. ஆங்கில அரசின் நியதிப்படி அவருடைய தூக்குத் தண்டனை ரத்தாகிவி்ட்டது.

இப்படியான சுவாரசியமான விஷயங்களை சொல்லிப்போனார் பெரியவர்.

அற்புதமான மாலை. வழக்கமாக தமிழ் சங்கத்தில் நிகழ்ச்சி முடிந்து இரவு உணவு இருக்கும். அதைத் தொடர்ந்த சிக்கல்கள் இருக்கும். நிகழ்ச்சியை ஒழுங்காகக் ரசிக்க முடியாது. வேண்டும் என்றே தாமதமாக வருபவர்கள் மற்றவர்களை இம்சித்துக் கொண்டிருப்பார்கள். பசி பொறுக்க முடியாத குழந்தைகள் ஒருவரை ஒருவர் துரத்தித் துரத்தி உதைத்து அரங்கத்துக்குள் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

நல்ல வேளை. அன்று இரவு உணவு ஏற்பாடு செய்யாமல் புண்ணியம் கட்டிக்கொண்டார்கள் செயற்குழுவினர். நல்ல கூட்டம் என்று சொல்லமுடியாவிட்டாலும் தரமான கூட்டமாக அன்று இருந்தது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய மைய அரசு கண்காணிப்பு ஆணையத்தின் செயலர் ராமசுப்பன் மிகவும் அற்புதமாகப் பேசினார். அவருடைய பேச்சிலும் ஊர்ப்பெருமை மிதந்தது. பரவசப்பட்டு இருந்தார் மனிதர். ஏற்கனவே சிரித்த முகம் அவருக்கு. அன்று அவர் சுப்பு ஆறுமுகத்தை மனதாரப் பாராட்டிப் பேசியபோது முகம் எல்லாம் சிரிப்பாக இருந்தது. மைய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு ஆணையத்தின் முன்னாள் தகவல் தொடர்பு அதிகாரி திருமதி பாலா விஸ்வநாதன் (பிரபலமான எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்தினார்கள்.) அன்று அவருடைய பேச்சும் மிக அற்புதமாக இருந்தது. எண்ணெய் வளங்களைப் பற்றி சுப்பு ஆறுமுகத்திடம் ஒரு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தச் சொல்லிக் கேட்டுக்கொண்டபோது அவர் மிக அற்புதமாக நடத்திக் கொடுத்தார் என்று பூரித்தார். இன்னொரு கூடுதல் தகவல் என்னவென்றால் தெலுங்கு மொழிக்காரர்கள் முயற்சிக்கக் கூட முடியாமல் ஓடி விட்டார்களாம். உண்மையிலேயே பெருமையாக இருந்தது.
கிட்டப்பாவின் பாடலை மிக அற்புதமாக வழங்கிய அந்தப்பையன் 150 ஆண்டுகள் வாழவேண்டும் என்று மனதார வாழ்த்தினேன். சுப்பு ஆறுமுகம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்.

தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு தெண்டனிட்டு ஒரு வேண்டுகோள். பலமுறை இதை நான் காலில் விழுந்து கூட கேட்டு விட்டேன். ரட்சிக்க மாட்டேன் என்கிறார்கள். மேடையில் இவருக்கு இவர் பொன்னாடை போர்த்துவார் என்று அக்கிரமம் செய்கிறார்கள். பொதுவாக எதுக்காவதுதானே போர்த்துவார்கள்? பெரியவர்களுக்கு மரியாதை செய்யும்போது பொன்னாடை அணிவிப்பது அல்லது அலங்கரிப்பது என்று அல்லவா சொல்லவேண்டும். பாலமூர்த்தி கடைசி வரை இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு அறிவிப்பு செய்து கொண்டு இருந்தார். எதற்கு இந்த இறுக்கம்? பேச்சுப்பட்டறை எல்லாம் வேறு நடத்தப் போகிறார்கள். யாருக்கு யார் பட்டறை நடத்துவது என்று தெரியவில்லை.
ஆனால் இந்தச் சிறுசிறு குறைகளை மறக்கலாம். சரி செய்து கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் மறந்துவிட்டுநல்லதொரு மாலையை வழங்கிய சுப்பு ஆறுமுகத்துக்கும் பெருமாளுக்கும் அவருடைய செயற்குழு கோஷ்டிக்கும் கண்டிப்பாக ஒரு ஓ போட்டே ஆகவேண்டும். மிகவும் முனைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்தார் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் சக்தி பெருமாள். ஓடி ஓடி உழைத்தார் இணை செயலாளர் பாலமூர்த்தி. அற்புதமாக ஒத்துழைத்தார்கள் அனைவரும்.

தமிழ்ச் சங்க நிகழ்ச்சிக்கு முன்பு தில்லி வந்த சூட்டோடு முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் வீட்டில் அவருக்காக பிரத்யேகமாக நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறர்கள் இந்தக் குழுவினர். நிகழ்ச்சியின் செறிவில் கவரப்பட்டு இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக புழல் சிறைவாசிகளுக்காக ஒருமுறை நிகழ்த்த வேண்டும் என்றும் அதற்கான செலவினைத் தான் ஏற்றுக் கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார் கலாம்.

இதைவிடப் பெரிய "ஓ" என்னவாக இருக்க முடியும்?