Thursday, April 15, 2010

Mystery Trails - துரோகத்தின் வழித்தடங்கள்...

நேற்று (14 ஏப்ரல் 2010) ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் ஒரு முக்கியமான செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள்.

Mystery Trails என்கிற பெயரில் கர்நாடக அரசின் சுற்றுலாத்துறை ஒரு புதிய சுற்றுலாத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை ஒட்டி அவன் பிறந்த ஊர், வாழ்ந்த இடங்கள், பதுங்கி இருந்த இடங்கள், பணயக் கைதிகளை அவன் பிணைத்து வைத்திருந்த இடங்கள் என சுற்றுலாப் பயணிகளுக்கு வீரப்பன் தொடர்பான அனைத்துத் தலங்களையும் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்கிறதாம் சுற்றுலாத்துறை.

கர்நாடக அரசு சுற்றுலாத் துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையின் படி Mystery Trails என்கிற பெயரில் ஒரு மலையேற்றம் ஏற்பாடு செய்யப்படும். அந்த மலையேற்றத்தில் வீரப்பனை சுற்றியுள்ள வாய்வழித் தகவல்கள், புதிர்கள் போன்றவற்றை ஆராயும் விதமாகவும், இருபது ஆண்டுகளுக்கும் அவன் ஆட்சி செய்துவந்த காட்டுப்பகுதியில் பதுங்கு குழிகள், தப்பித்த வழிகள் போன்ற இடங்களும் சுற்றுலாப் பயணிகளுக்குக் காண்பிக்கப்படும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

வீரப்பன் இருந்த பதுங்கு குழி, அவன் தப்பித்த இடம், அவன் பணயக்கைதிகளை வைத்திருந்த இடம் எல்லாம் சரி - வீரப்பன் கதையின் இன்னொரு பகுதியான கர்நாடக போலீசின் அத்துமீறல்களையும் கன்னட வெறியர்கள் கர்நாடக எல்லையில் வசித்த தமிழர்களுக்கு எதிராக இழைத்த கொடுமைகளையும் அந்தச் சுற்றுலாத் திட்டம் உள்ளடக்கி இருக்குமா?

சதாசிவம் கமிஷன் விசாரணையின் போது அளிக்கப்பட்ட சாட்சியங்களின் வாக்குமூலங்களில் பொதிந்திருக்கும் பயங்கரங்கள் இந்த சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு வைக்கப்படுமா?

பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி புதினத்தில் விளக்கியிருக்கும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு மீண்டும் காட்சிப்படுத்தப்படுமா?

வீரப்பன் புழங்கிய காட்டுப் பகுதிகளில் வசித்த பழங்குடியை சேர்ந்த தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் மீது இழைக்கப்பட்ட பாலியல் வன்முறைகள் குறித்த பதிவுகள் இந்த Mystery Trails திட்டத்தில் இடம் பெறுமா?

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது பெங்களூர் மற்றும் இதர பகுதிகளில் தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட வன்முறைகள் பற்றிய பதிவுகள் எங்காவது கிடைக்குமா?

வீரப்பனுக்கு உதவி செய்பவர்கள் என்று கொடுமைப்படுத்தப்பட்ட அப்பாவி மக்களின் துயரக் கதைகள் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு வைக்கப்படுமா?

கர்நாடக அரசின் சுற்றுலாத் துறை ஒரு பகுதியை மட்டும் காண்பித்தால் எப்படி? ஒரு சுற்றுலாப் பயணிகளுக்கான திட்டம் வகுக்கும்போது அந்த சுற்றுலாத் தலம் குறித்த அனைத்து சரித்திர உண்மைகளையும் எவ்வித பாரபட்சமும் இன்றி பார்வைக்கு வைப்பதுதானே முறை?

கர்நாடக போலீஸ் அதிகாரிகள் மற்றும் கன்னட வெறியர்களின் படுபாதகங்களை மறைத்து வைக்கும் வீரப்பன் சரித்திரம் முழுமை பெறுமா?

ஏற்கனவே தமிழர்களைப் பார்த்து எல்லாவற்றுக்கும் கொதிக்கிறார்கள் கன்னட வெறியர்கள். வீரப்பன் செய்ததற்கு எல்லாம் அப்பாவித் தமிழர்களை கிடைத்த இடங்களில் தாக்கியவர்கள் அவர்கள். அவர்களுக்கு மீ்ண்டும் வீரப்பனை நினைவுபடுத்தி தமிழர்களின் மீதான வெறுப்பினை ஏன் நெய் ஊற்றி வளர்க்க வேண்டும்?

இது குறித்த சட்ட வரையறை என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் தமிழக அரசின் சார்பில் அல்லது தமிழ் ஆர்வலர்களின் சார்பில் இது போன்ற சுற்றுலாத் திட்டத்தைக் கைவிடுமாறு கர்நாடக அரசை கேட்டு்க் கொள்ளலாம். அதற்கான உரிமையும் நமக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன்.

கேட்பார்களா தெரியாது.

எங்கள் ஊர் தலைவர்களுக்கு கர்நாடகத்தில் நிலங்களும் சொத்துக்களும் வாங்கவேண்டும். அந்த ஊர்த்தலைவர்களை நாங்கள் சமீபத்தில் சகோதரர்களாக தத்து எடுத்து இருக்கிறோம்.

இதை எல்லாம் கேட்பதற்கு நேரமும் இதனை எதிர்த்துக் கேட்கும் தைரியமும் எங்கள் தலைவர்களுக்கு இருக்குமா என்று தெரியவில்லை.

தமிழகத்தின் மனித உரிமை அமைப்புக்கள் இதுகுறித்து ஏதேனும் நடவடிக்கை எடுக்கலாம்.

15 ஏப்ரல் 2010

உங்கள் கருத்துக்களை raghavanthambi@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

Tuesday, April 6, 2010

விடியலை நோக்கும் டெல்லித் தமிழ்ப் பள்ளிகள்

இந்த நிர்வாகக் குழு ஏறத்தாழ ஒரு பாழடைந்த மாளிகைக்குள் நுழைவதைப் போன்ற நிலையில்தான் பொறுப்பினை ஏற்றுள்ளது என்று சொல்லாம். அத்தனை துல்லியமான கணக்கு என்னிடம் இல்லை என்றாலும் ஏறத்தாழ எழுபது லட்சத்துக்குக் குறையாத கடன் நிலுவையுடன் தான் பொறுப்பேற்று இருக்கிறது இந்த நிர்வாகம். இவர்கள் பொறுப்பேற்ற முதல் மாதத்திலேயே ஒரு பெரிய பிரச்னையுடன்தான் பள்ளிக்குள் நுழைந்து இருக்கிறார்கள்.