தமிழ்த்தாய்க்கு
 மதுரையில் நூறு கோடி ரூபாயில் சிலை என்கிற செய்தியை முகநூல் மற்றும் வலைப்
 பக்கங்களில் அக்குவேறு ஆணிவேறாக அலசி எடுத்து வருகிறார்கள்.     
 
 இந்தப் பதிவுகள் அனைத்திலும்  உள்ளீடாகப் பொதிந்திருக்கும் விஷயம் நேர்மையான ஆதங்கம் மட்டுமே. 
 
 தமிழ் வளர்ச்சிப் பணிக்கென எத்தனையோ விஷயங்கள் நிலுவையில் இருக்கும் 
வேளையில் இதுபோன்ற சிலை வைக்கின்ற சமாச்சாரங்கள் எல்லாம் ஜெயலலிதாவின் 
feudalistic மனப்பான்மையைத்தான் காட்டுகிறது.  தமிழ்க் கல்வி என்கிற விஷயம்
 வெகுவாகக் கைநழுவிப் போய்க் கொண்டிருக்கிறது.  அதன்மீது எத்தகைய  
நேர்மையான கவனமும் செலுத்தப்படவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கும் 
விஷயம்.
 
 தமிழ்ப் பற்று சமாச்சாரத்தில்  முன்னாள் முதல்வர் 
கருணாநிதிக்கு தான் சற்றும் குறைந்தவர் அல்ல என்று காட்டிக்கொள்வதற்காகவே 
இதுபோன்ற அறிவிப்புக்களை வெளியிடுகிறார் ஜெயலலிதா என்று தோன்றுகிறது.  
கருணாநிதியின் தமிழ்ப் பற்று விவகாரங்கள் எல்லாம் இப்போது இணையத்திலும் 
இளைய தலைமுறையினரிடமும் சிரிப்பாக சிரித்துக் கொண்டிருக்கிறது.  எனவே தமிழக
 அரசு இதுபோன்ற வெட்டியான போட்டிக்காக மக்களின் வரிப்பணத்தை இப்படி எல்லாம்
 விரயம் ஆக்கி இருக்க வேண்டாம்.
 
 அப்புறம் டெல்லி தமிழ்ச் 
சங்கத்துக்கு முத்தமிழ் தோரண வாயில் கட்டுவதற்கு 25 லட்ச ரூபாய் ஒதுக்கி 
இருப்பது குறித்த முதல்வரின் அறிவிப்பும் பல இடங்களில் விமர்சனத்துக்கு 
உள்ளாகி இருக்கிறது.  
 
 குறிப்பாக டெல்லியில் ஏழு தமிழ்ப் பள்ளிகள்
 இயங்கி வருகின்றன.  இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வெகுவாக, ஏறத்தாழ 
90 சதவிகிதத்துக்கும் மேல் ஏழைக் குடும்பங்களை சேர்ந்தவர்கள்.  இந்த ஏழை 
தமிழ்க் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மிகவும் குறைந்த செலவில், 
தரமான கல்வி கிட்டி வருகிறது.  இப்பள்ளிகள் டெல்லி தமிழர்களின் பெருமையான 
அடையாளமாகத் திகழ்கின்றன.
 
 இப்போது இந்த ஏழு பள்ளிகளுக்குக் 
கூடுதலாக மயூர்விஹார் பகுதியில் எட்டாவதாக பள்ளி ஒன்றைக் கட்டுவதற்கு 
டெல்லி அரசு நிலம் ஒதுக்கியிருக்கிறது.  இந்த எட்டாவது பள்ளியைக் 
கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது டெல்லி தமிழ்க் கல்விக் கழகம்.
 இந்தப் பள்ளி துவங்கினாலும் கிழக்கு டெல்லி பகுதியில் உள்ள மிகவும் 
பின்தங்கிய ஏழைப் பெற்றோர்களின் பிள்ளைகள் தான் அதிகம் பயன் 
அடையப்போகிறார்கள்.  
 
 டெல்லியில் இவை போன்ற கல்வி முயற்சிகள் 
முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி கவனத்துகுகு   செல்லாதது மிகவும் ஆச்சரியம் 
மற்றும் வருத்தம்  அளிக்கிறது.  
 
 டெல்லி தமிழ்ச் சங்கத்துக்கு 
வெறும் ஆடம்பரத்துக்காக அலங்காரத் தோரண வாயில்  கட்டுவதற்கு 25 லட்ச ரூபாய்
 ஒதுக்கிய தமிழக அரசு, டெல்லியில் நடைபெற்று வரும் கல்விப்பணிக்கும் 
கணிசமான தொகையை ஒதுக்கியிருக்கலாம்.  பல ஏழைப்பெற்றோர்களின் 
வாழ்த்துக்களுக்கு ஆளாகியிருப்பார் ஜெயலலிதா.  இந்த நல்ல வாய்ப்பை இப்போது 
அவர் தவற விட்டிருக்கிறார்.
 
 இந்த முத்தமிழ் தோரண வாயில் குறித்த இன்னொரு முரண்பாடான விஷயமும் இருக்கிறது. 
 
 கருணாநிதி.  முதல்வராக இருந்தபோது தில்லித் தமிழ்ச் சங்கத்தின் 
நிர்வாகிகள் இதற்காக கணிசமான நிதியைக் கேட்டு  விண்ணப்பித்து இருந்தார்கள்.
  
 
 இப்போது ஜெயலலிதா நிதி ஒதுக்கியிருக்கும் இந்த அலங்கார 
வாயிலுக்கு முத்தமிழ் தோரண வாயில் என்று பெயர் சூட்டியதே அன்றைய முதல்வர் 
கருணாநிதிதான்.  இதற்கான அடிக்கல்லை கருணாநிதிதான் நாட்டியிருக்கிறார் 
என்பதும் அனைவரும் அறிந்த விஷயம்.
 
 இந்த விஷயம் அநேகமாக இன்றைய 
முதல்வரின் பார்வைக்கு மொத்தமாக மறைத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். 
அப்படி மறைக்கப்படாமல் இருந்திருந்தால் தன்னுடைய பிரதான அரசியல் எதிரி 
கருணாநிதி அடிக்கல் நாட்டி இருக்கும் ஒரு திட்டத்துக்கு 25 லட்ச ரூபாய் 
நிதி ஒதுக்கும் அளவுக்கு ஜனநாயகத் தன்மையும் பரந்து பட்ட பார்வையும் கொண்ட 
ஒரு புதிய ஜெயலலிதாவைப் பார்க்கும்போது உண்மையிலேயே பலருக்கும் ஆனந்த 
அதிர்ச்சியாகத் தான் இருந்திருக்கும்.
 
 ஏற்கனவே தில்லி தமிழ் 
சங்கம் என்னும் அமைப்புக்கு   அளிக்கப்பட்ட தமிழ்த்தாய் விருதினைப் 
பெற்றுக் கொண்டு அதனைத் தனக்கு மட்டுமே அளிக்கப்பட்ட விருது போல தன்னுடைய 
அடிப்பொடிகளை வைத்து ஊரெல்லாம் போஸ்டர்களும் பேனர்களும் வைத்துக்கொண்ட 
டெல்லி தமிழ்ச் சங்கத்தின் செயலாளருக்கு இன்னொரு செட்டப் போஸ்டர் அடித்துக்
 கொள்ள ஒரு வாய்ப்பினை அளித்திருக்கிறது தமிழக அரசு.
 
 அப்புறம் 
டெல்லி தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அடித்து 
வெளியிடும் போஸ்டரும் பேனரும் அண்ணா திமுக கட்சிக்காரர்களுடன் கடுமையான 
போட்டியில் ஈடுபடுவதைப் போல உள்ளது.  டெல்லி தமிழ்ச் சங்கம் ஒரு பண்பாட்டு 
நிறுவனம்.  கட்சி பேதங்களைக் கடந்தது.  தலைநகரில் இருப்பதால் தமிழகத்தின் 
அரசியல் பேதங்களுக்குள் அடங்காத தன்மை கொண்டது.  ஆனால் அந்தத் தன்மையை 
கேள்விக் குறியாக்கி வருகிறது டெல்லி தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் செட்டப் 
செய்யும் போஸ்டர்கள்.  
 தமிழகத்தின் முதல்வரை அதிமுக கட்சியின் 
தொண்டரடிப் பொடிகளைப் போல புரட்சித்தலைவி – தங்கத்தாய் – அம்மா -என்றல்லாம்
 விளிப்பது தமிழ்ச் சங்கத்தின் அரசியல் சுதந்திரத் தன்மையை இழிவு 
படுத்துவது போல இல்லையா?  
 
 இந்தப் பட்டங்கள்  எல்லாம் சில 
சலுகைகளுக்காகக் கப்பறை ஏந்தும்  கட்சிக்காரர்கள் தங்களின் அரசியல் 
லாபத்துக்காகக் கொடுப்பதுதானே?  இவை எல்லாம்   நமக்கு எதற்கு?  டெல்லியின் 
முதல்வரை சின்னப் பெண்களும் பையன்களும் கூட ஷீலாஜி என்று உரிமையுடன் 
அழைப்பதை நிறைய விழாக்களில் நேரடியாகக் கண்டிருக்கிறேன். 
 
 டெல்லி 
தமிழ்ச் சங்கத்தைப் பொறுத்தவரையில் மாண்புமிகு தமிழக முதல்வர் என்று 
அழைத்திருந்தால் போதுமே.  தங்கத்தலைவி, புரட்சித்தலைவி சமாச்சாரங்கள் 
எல்லாம் எதற்கு?
 
 எல்லாம் இருக்கட்டும்.
 
 தமிழக அரசு, 
தில்லி தமிழ்ச் சங்கத்துக்கு ஆடம்பர அலங்கார வாயிலுக்காக மேலும் 25 லட்ச 
ரூபாய் ஒதுக்கட்டும்.  அதை வைத்து அதன் செயலாளர் டெல்லியின் சுவர்கள் 
எல்லாம் போஸ்டர்களும் பேனர்களும் வைத்துக் கொள்ளட்டும்.  
 
 அதே 
நேரத்தில் தலைநகரில் ஏழைத் தமிழ்க் குழந்தைகளுக்குக் கல்வி விளக்கேற்றும் 
வகையில் எட்டாவது பள்ளிக்கும் தமிழக அரசு நிதி ஒதுக்கியிருந்தால்,  அல்லது 
இனியும் ஒதுக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதுதான் என்னைப் 
போன்ற பலரின் ஆதங்கமாக இருக்கிறது.
 
 இப்போது கூட ஒன்றும் 
கெட்டுவிடவில்லை.  சற்றுப் பெரிய மனதுடன் தமிழக முதல்வர் இந்தப் 
பள்ளிகளுக்கு உதவிட முன்வரலாம்.  இந்தப் புதிய பள்ளி காலத்துக்கும் அவருடைய
 பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்.