மனம் களைத்து சலித்து சோர்வடையும்  போதெல்லாம், 
எனக்கென்று¬ சில வழிமுறைகளைக் கையாளுவேன்.  அந்த வழிமுறை, பகுத்தறிவு 
சிங்கங்களுக்கும், முன் நவீனத்துவ, பின்நவீனத்துவ இடை நவீனத்துவ அறிஞர் 
பெருமக்களுக்கும் அத்தனை உவப்பானதும் ஏற்றுக் கொள்ளும் விஷயமாகவும்
 இருப்பது சற்று கடினம்.  இருந்தாலும்  மனதுக்குப் பட்டதையும் என்னுடைய 
அனுபவத்தையும் இங்கு பகிர்ந்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை என்று 
நினைக்கிறேன்.
 
 மனம் சஞ்சலப்படும் போதும், பதட்டத்தில் 
இருக்கும்போதும், என்னுடைய புத்தக அலமாரியில் தனித்து வைக்கப்பட்டிருக்கும்
 பகவத் கீதை, திருக்குர்ரான் அல்லது விவிலிய நூல் இவற்றில் ஏதாவது ஒன்றை 
எடுத்து  விரிக்கும்போது கையில் சிக்கும் பக்கத்தைப் படிப்பேன்.  அந்தப் 
பக்கங்களில் ஏதோ ஒரு வகையில் எப்போதும் ஒரு விடை எனக்குக் காத்திருக்கும். 
 ஆறுதல் காத்திருக்கும்.  எச்சரிக்கை காத்திருக்கும்.  பரிகாசம் 
காத்திருக்கும்.
 
 பல சந்தர்ப்பங்களில் இப்படித் தெரிவு செய்து 
படித்த தருணங்களில்  மனம் தெளிந்து லேசானதை உணர்ந்திருக்கிறேன்.  
அனுபவித்து இருக்கிறேன்.  அதே போல, சில ஞானிகளின் கவிதைகளும் உரைநடையில் 
அமைந்த பல உபதேசங்களும் எனக்குப் பலவகைகளில் கை கொடுத்திருக்கின்றன.  
எதுவும் இல்லையென்றால் சிலநேரங்களில் இணையத்தில் மேய்ந்து ஏதேனும் ஒரு 
கவிதைப் பக்கத்தை எடுத்து வாசிப்பேன்.  அந்தக் கவிதைகளிலும் பல சூசகமான 
சமிக்ஞைகள் எனக்குக் கிட்டியிருக்கின்றன.  இதனை என் நேரடி அனுபவத்தில் 
உணர்ந்திருக்கிறேன்.  பல நேரங்களில் பரவசப்பட்டு இருக்கிறேன்.  உணர்ச்சி 
மிகுதியில் நெகிழ்ந்து அழுதிருக்கிறேன்.
 
 இன்று பிற்பகல் அப்படி 
ஒரு வலைத்தளத்தில் உலாவிக் கொண்டிருந்த போது   ஹஜ்ரத் பாபா ஃபரீத் 
அவர்களின் கவிதை ஒன்று என்னை எதிர் கொண்டது.  
 
 ஹஜ்ரத் பாபா ஃபரீத்
 என்று நேசத்துடன் அழைக்கப்படும் ஃபரீஉத்தீன் கஞ்ஜ்ஷக்கர் 12ம் நூற்றாண்டை 
சேர்ந்த சூஃபி ஞானியாவார்.  பஞ்சாபி மொழியில் தலைசிறந்த கவிஞர்களில் 
ஒருவராகக் கொண்டாடப்படுகிறவர்.  ஹிந்துக்களாலும் இஸ்லாமியர்களாலும் மதித்து
 வணங்கப்படும் ஞானி.  இவர் இயற்றிய பஞ்சாபி செய்யுட்கள் பலவற்றை 
சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாஹிப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
 
 இவர் வாழ்ந்த காலத்தில், டெல்லியில் ஹஜ்ரத் பாபா பக்தியார் காக்கி மற்றும்
 ஹஜ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியா ஆகியோரை சந்தித்து இறைப்பணி ஆற்றியவர்.
 
 நான் கீழே மொழிபெயர்த்து இருக்கும் ஹஜ்ரத் பாபா ஃபரீத் அவர்களின் இந்தக் கவிதையும் குரு கிரந்த சாஹிப்பில் இடம் பெற்றுள்ளது.  
 
 இந்த அருமையான செய்யுளை எனக்குத் தெரிந்த அளவில்,  இருக்கிறேன்.  சூஃபி 
இசை நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலைப் பாடிக் கேட்டு இருக்கிறேன்.  பஞ்சாபி 
மொழியில் பெயர்ச்சொல்லின் இறுதியில் ‘ஆ’ காரத்தை சேர்த்துக் கொள்வார்கள்.  
பாடும்போது அந்த ‘ஆ’ காரம் சேர்த்த விளி கேட்க இனிமையாகவும் மனதுக்கு 
நெருக்கமாகவும் இருக்கும்.  உதாரணத்துக்கு “ஃபரீத்’ என்பதை ‘ஓ ஃபரீதா’ 
என்பார்கள்.  ‘புல்லே’ என்கிற பெயர்ச்சொல்லை, ‘ ஓ புல்லேயா’ என்று 
பாடுவார்கள்.
 
 இந்தப் பாடலில் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த 
மக்பூல் இலாஹி, Farid என்று துவங்கியிருப்பார்.  தமிழில் ‘ஆ’ காரம் 
சேர்த்தால் பெயரில் பாலினம் மாற்றம் அடைகிறது போல எனக்குத் தோன்றியது.  
எனவே,  சற்று உரிமை எடுத்துக் கொண்டு பொதுவான வகையில், ‘ஓ ஃபரீத்’ என்று 
விளித்திருக்கிறேன்.  தவறாக இருந்தால் விஷயம் தெரிந்த அறிஞர்கள் என்னை 
மன்னிக்க வேண்டும். 
 
 இன்று என்னை நெகிழ வைத்த இந்த அற்புதமான 
செய்யுளை ஒரு சுமாரான மொழிபெயர்ப்புடன் உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் 
என்று தோன்றியது.  அந்தச் செய்யுள் இங்கே -
 
 1
 
 சரீரம் ஆன்மாவுடன் 
 மணம் புரிந்த நாளில்,
 விதிக்கப்பட்ட மூச்சுக்களின் 
 மொத்தக் கணக்கும் 
 காகிதச் சுருளில் எழுதப்பட்டன.
 இறுதி மூச்சை நெருங்கியதும்
 பிரசித்தமான தேவதை ஒன்று
 மூச்சுக்களின் மொத்த எண்ணிக்கையை 
 மரணத்திடம் கையளித்தது.
 
 2 
 
 எலும்புகளை நொறுக்கிப் பிழிந்து
 உயிரை எடுத்துச் செல்கிறது
 இந்தத் தேவதை.  
 மூச்சை விடும்போது
 நீயே உனக்குச் சொல் -
 “அனைத்தையும் நிர்ணயிப்பது 
 கர்மவினையே”.
 
 3
 
 வாழ்க்கை - மனைவி
 மரணம் அவளுடைய கணவன்
 அவனுடைய திட்டத்துக்கு
 ‘ஆமாம்’ போட்ட பின்பு
 அந்த நாளை அவளால்
 எப்படி நிறுத்த முடியும்?
 
 4
 
 ரோமத்தை விட
 மெலிதான
 பருமனைக் கொண்டது
 சொர்க்கத்துக்கான  பாலம்.
 அப்பாலத்தின்மேல்
 வைக்கும் உன்னுடைய
 காலடிச் சத்தங்கள்.
 ஓ ஃபரீத்-
 ஒரு குரல் ஏனோ
 உள்ளீடாய்
 எனக்குள் அதிர்கிறது - 
 பேராசையின் சீறல்  கண்டு 
 உஷார்… உஷார்… உஷார்…
 
 5
 
 ஓ  ஃபரீத்…
 புனிதர்களின் வாயில்கள்
 நுழையக் கடினமானவை!
 உலக பந்தங்களை சுமந்து
 அவற்றைக் கடக்க நினைத்தேன்
 பாசாங்குகளை சுமையாகச்
 சுமந்து சென்று 
 எங்கே அவற்றைப் 
 புதைத்து வைப்பேன்?
 
 6
 
 திகைக்க வைக்கும்  மிக
 ஆழமான  ஓர் புதிர் அது…
 உலக வாழ்க்கை – 
 பதுக்கி வைத்த 
 பெருநெருப்பு
 அல்லாஹ் எனக்கோர்
 அருளைப் புரிந்தார்.
 இல்லையெனில்
 அதில் நானும்
 முற்றாய் எரிந்திருப்பேன்.
 
 7
 ஓ ஃபரீத்!
 வாழ்க்கையின் ஆழி விதைகள்
 அளவில் சிறிதாக இருந்தால்
 நிறுத்தி சற்றே யோசி-
 உள்ளங்கைகளில் அவற்றைக் 
 குவித்து வழிக்க முனையாதே
 உன்னுடைய துணைவன்
 முதிர்ச்சியற்று  இருந்தால்
 பெருமை கொள்ளாதே.
 கர்வத்துக்கு 
 வீழ்ச்சி என்பது 
 என்றும் உண்டு.
 
 8
 
 என்னுடைய பிடி
 நழுவிப் போகும்
 என்பதை நானறிந்திருந்தால்
 அவனை நான் 
 இறுகப் பற்றியிருப்பேன்.
 என் நாயகனைவிட
 வேறேதும் கிடையாது
 இந்த உலகிலும்
 அதற்கப்பாலும்.
 
 9
 
 ஓ ஃபரீத்!
 நற்புத்தி உனக்கிருந்தால்
 உன் காகிதச் சுருளை
 மைக்கறை ஆக்காதே ,
 புறம் பேசுவோர்
 உன்முன் சுருளுமுன்  
 சிரம்  தாழ்த்தி
 உன்னை உனக்குள் 
 விழித்துப் பார். 
 
 10 
 
 ஓ ஃபரீத்!
 உதையும் அடியும் 
 உனக்குக் கிட்டியிருந்தால்
 அடிக்கு அடியும்
 உதைக்கு உதையும்
 திருப்பித் தராதே.
 அவர்களின் பாதங்களைப் 
 பணிவுடன் முத்தமிடு,
 பின்னர் வீடுதிரும்பு. 
 
 11
 
 ஓ ஃபரீத்!
 நற்காரியங்கள் 
 செய்வதற்கான நேரத்தை
 வண்ணமயமான
 இளமைக் காலத்தில்
 அனுப்பி வைத்தாய்.
 மேலும் 
 மரணத்தை
 உன் ஆன்மா நேசிக்கும்.
 விதிக்கப்பட்ட மூச்சுக்கள்
 நிறைவு பெற்ற கணமே
 ஆன்மா எனும் படகுக்கு 
 மரணம் துடுப்பாகும். 
 
 12
 
 இதோ பார் ஃபரீத்!
 காலத்தின் ஓட்டத்தில்
 வயோதிகத்தால்
 நரைத்துத் திரளும்
 உன்னுடைய தாடி.
 வருங்காலம் உனக்கருகில்
 இறந்த காலம் 
 வெகுதொலைவில்.
 
 13
 
 ஓ ஃபரீத்…
 இங்கு எல்லாமே
 தலைகீழ்தான்,
 இங்கு 
 சர்க்கரை விஷமாகும்.
 என்னைக் குணமாக்கும்
 என்னுடைய ஆண்டவனை விட்டு
 என் கேடுகளை
 வேறு யாரிடம்தான்
 ஒப்படைப்பேன்?
   
 14 
 
 ஓ ஃபரீத்
 காட்சிகளால் 
 களைப்படைந்தன
 கண்கள்
 கேட்டவற்றால்
 காதுகள் புண்ணாகின. 
 உண்மைதான் -
 காய்ப்புக் காலத்தில்
 வேறு கிளைகளை
 சூடுகின்றன விருட்சங்கள்.
 
 15
 
 என்னுடைய கேசம்
 முற்றிலும்  கருத்திருந்தபோது 
 அவனை நான் வணங்கவில்லை.
 இப்போது எங்கும் நரைத்திரள்,
 எப்படி அவனை நான் வணங்குவது?
 நாயகனை நேசியுங்கள்!
 எதற்கும் எப்போதும் 
 தாமதம் கிடையாது!
 உ ன்னுடைய நரைத்திரளை
 கறுக்க வைத்திடுவான் அவன்.
 
 16
 
 பலவீனம்
 அல்லாஹ்வின் மேல்
 காதல் கொள்ளும்.
 யாராக இருப்பினும்
 ஒன்றாக இருப்பினும்
 பலவாக இருப்பினும்
 பொங்கி வழிய
 அன்பினைக் கோப்பையில்
 தான் விரும்பும் யாருக்கும்
 அன்புடன் அளிக்கலாம்.
 
 17
 
 ஓ ஃபரீத்!
 அந்தக் கவர்ச்சியான கண்கள்,
 கவர்ந்திழுக்கும் வார்த்தைகள்
 தங்களின் பருவகாலத்தில்
 புருவக் கண்மை வரிகளின்
 பளுவை அவர்களால்
 தாங்க முடிந்ததில்லை.
 பறவைகளை அவை
 அடைகாத்ததை பார்த்திருக்கிறேன்,
 பகல் நேரங்களில்.
 
 18.
 
 ஓ ஃபரீத்!
 களங்கம், அறிவுரை 
 மற்றும் கடிந்துரை என
 அனைத்தும் வீணாகின:
 சாத்தான் முத்திரையிட்ட
 இதயம் என்றும்
 உன் கோரிக்கைகளுக்கு
 செவி சாய்க்காது.
 
 19
 
 ஓ ஃபரீத்!
 நாயகனை நீ தேடும்போது
 பணிவான புல்லாகக் குனிந்திடு
 வெட்டியும் உரித்தும்
 ஊறவைத்தும் மிதிபட்டும்
 மிருதுவாகப் பதப்படுத்தப்பட்டும்
 பிரார்த்தனைப் பாயாக உருமாறி
 நாயகனின் இல்லத்தில்
 பிரவேசிக்க அனுமதி பெறுகிறது.
 
 -ஹஜ்ரத் பாபா ஃபரீத்
 
 (ஆங்கிலம் வழித் தமிழில் – யதார்த்தா கி. பென்னேஸ்வரன்)
 உசாத்துணை – விக்கிவீடியா
 ஆங்கிலத்தில் இந்த செய்யுளை வாசிக்க
 http://www.chishti.ru/poem-hazrat-farid.htm
 
