Friday, October 10, 2008

நீதிபதிகளின் மீதான முறையீடுகளும் தேசிய நீதித்துறை கவுன்சிலும்



ஜனநாயகத்தின் மிகவும் உறுதியான தூண்களில் ஒன்றான நீதித்துறையின் மீது, அதன் பல பின்னடைவுகளையும் மீறி ஒரு ஆழமான நம்பிக்கை நமக்கு முழுக்க வற்றிவிடாமல் தொட்டும் தொடர்ந்தும் வந்து கொண்டிருக்கிறது. நீதிபதிகள் வேற்று கிரகங்களில் இருந்து வந்தவர்கள் அல்ல. நம் எல்லோரையும் போல அவர்களும் மிகவும் சாதாரணர்கள்தான் என்கிற ஒரு உண்மையும் எப்போதுமே தொடர்கிறது. அவர்களில் ஒரு சிலரின் நடவடிக்கைகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையாக அமைவதில்லை என்பதிலும் நமக்கு நேரடி அனுபவங்கள் உண்டு. நீதிபதிகளில் மிகச்சிலரின் அதீத நடவடிக்கைகளால் அந்தத் தூண் மீது வைத்துள்ள நம்பிக்கையும் சில சமயம் ஆட்டம் கண்டுவிடும் அவல நிலை ஏற்பட்டு விடுகிறது. ஒருசில நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்து நாம் படிக்க நேர்ந்த செய்திகள் நீதித்துறை குறித்த மாண்பினையும் மதிப்பினையும் கேள்விக்கு உரியதாக்கிவிடுகிறது.

உதாரணத்துக்கு பஞ்சாபில் உயர்நீதிமன்ற நீதிபதியான நிர்மல் யாதவ் என்பவருக்கு அனுப்பிய 15 லட்சரூபாய்கள் அடங்கிய பை ஒன்று நிர்மல்ஜித் கௌர் என்னும் நீதிபதியின் வீட்டுக்குத் தவறுதலாக அனுப்பப்பட்டு விஷயம் அமர்க்களப்பட்டது. வழக்கறிஞராகத் தான் இருந்த ஒரு வழக்கில் அரசுக்குக் கையகப்படுத்த வேண்டிய தொகையை தன்னுடைய சொந்தக் கணக்கில் சேர்த்துக் கொண்டதாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜஸ்டிஸ் சௌமித்ரா சென் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வரப்போகும் பாராளுமன்றத்தொடரில் இவர் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தாதாக்களுடன் தொடர்பு கொண்ட பதிப்பகம் ஒன்றிடமிருந்து புத்தகம் எழுதுவதற்காக ரூ.70 லட்சம் முன்பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதவி விலகினர் மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னள் நீதிபதி ஏ.எம்.பட்டாச்சார்யா. தங்கள் உறவினருக்கு சர்வீஸ் கமிஷன் தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்க வழிவகை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பஞ்சாப் ஹரியான உயர்நீதிமன்ற நீதிபதிகள் மெஹ்தால் சிங் கில் மற்றும் அமர்பீர் சிங் ஆகியோர் பதவி விலகினர்கள். உச்ச நிதிமன்றத்தின் தலைமை நீதியரசாக இருந்த ஏ.எஸ்.ஆனந்த் மற்றும் அஹ்மதி ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டும், எவ்விதக் கேள்விகளுக்கு உட்படுத்த முடியாத சக்திகள் என யாரும் இருந்துவிடக்கூடாது என்பது குடியாட்சித் தத்துவத்தின் அடிப்படை. உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கும் பாங்கினில் எவ்வித வெளிப்படையான அணுகுமுறையும் கிடையாது. அதற்கான தனிப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றன. சின்னச்சின்ன நீதிமன்றங்களின் நீதிபதிகள் ஏதேனும் தவறுகள் செய்தால் அவர்களைப் பற்றி விசாரணைகள் நடத்தி அவர்களைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு உள்ளது. ஆனல் உயர்நீதிமன்ற நீதிபதியோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியோ ஏதேனும் தவறு செய்தால் பகவான் பார்த்துப்பார்' என்ற ரீதியில் இருந்துவிடலாம். இல்லையென்றால் இன்னொரு வழி இருந்தது. அதாவது, ஒரு உயர்நீதி மன்றம் அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியின் மீது தொடுக்கப்படும் புகாரின் மீது மூன்று நீதிபதிகள் கொண்ட குழு ஒன்று ஆய்ந்து குற்றம் செய்தவர் என்று தீர்மானிக்க வேண்டும். பிறகு முன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அந்த நீதிபதியை பதவியிறக்கம் செய்ய வேண்டும்.

இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்குக் கூட பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. உயர்மட்டத்தில் உள்ள நீதிபதிகளின் முறைகேடுகள் மீதான புகார்களைக் கவனித்து ஆவன செய்ய தேசிய அளவில் ஒரு கவுன்சில் வேண்டும் என்ற குரல் வலுப்பட்டது. 2003ல் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்த ஜன கிருஷ்ணமூர்த்தி ஒரு தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலுயுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதங்கள் அனுப்பினர். அரசியலமைப்புச் சட்டத்தை மறு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட வெங்கடாசலய்யா கமிஷன், தேசிய நீதித்துறை ஆணையம் அமைத்து தவறிழைக்கும் நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

அப்படி ஒரு சட்ட வரைவினை நிறைவேற்றும் வகையில் ஜட்ஜஸ் (இன்க்வரி) அமென்ட்மெண்ட் பில் 2008 என்னும் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய மைய அமைச்சரவையின் கேபினெட் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவின் படி தனிமனிதர்களும் உயர்மட்ட நீதிபதிகளின் மீதான புகார்களை தாக்கல் செய்யலாம். தேசிய நீதித்துறை அமைப்பு ஒன்றையும் நிறுவி நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்து தண்டனைகள் வழங்குவதற்கும் வழிவகை செய்கிறது இந்த மசோதா. முன்னர் டிசம்பர் 2006ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இதே போன்ற மசோதாவுயம் வாபஸ் வாங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நம்ம ஊர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் அமைந்த பாராளுமன்றக் குழுவின் பரிந்துரையின் பேரில் அமைந்த மாற்றங்கள் இந்த மசோதாவில் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ன. முந்தைய மசோதாவின் மீதான சுதர்சன நாச்சியப்பன் எழுப்பிய ஆட்சேபணைகள் மற்றும் கேள்விகளை இன்றைய நாளேடுகளில் சட்டம் குறித்து எழுதும் வல்லமை படைத்த எல்லோரும் வெகுவாக சிலாகித்து இருக்கிறார்கள். அந்த மசோதாவில் சில அடிப்படை மாற்றங்கள் மற்றும் திருத்தங்களுடன் இந்தப் புது மசோதா பாராளுமன்றத்தின் முன் வைக்கப்படுகிறது.

சுதர்சன நாச்சியப்பன்

தேசிய நீதித்துறை கவுன்சில் அமைப்பு, உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர், மற்றும் இரு மூத்த நீதியரசர்கள் மற்றும் இரு உயர்நீதிமன்றங்களின் மிகவும் மூத்த நீதியரசர்களைக் கொண்டு அமைக்கப்படும். ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியின் மீதும் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதியரசர் மற்றும் நீதிபதிகள் மீதும் ஒரு தனிமனிதர் முறையீடு பதிவு செய்யலாம். முறையீடு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் மீது இருக்கும் பட்சத்தில் அவர் இந்த அமைப்பில் பங்கேற்காமல், கவுன்சிலின் தலைமை குடியரசுத் தலைவரால் அடுத்த மூத்த நிதியரசரிடம் வழக்கு ஒப்படைக்கப்படும். முறையீட்டின் தன்மையை ஆய்ந்து, தக்க விசாரணைகள் செய்து ஒரு நீதிபதியின் மீது குற்றம் நிரூபணம் ஆனல் கவுன்சில் பாராளுமன்றத்துக்குப் பரிந்துரை செய்து அந்த நீதிபதியை பதவி நீக்கம் செய்யலாம். (கொஞ்சம் மூச்சு வாங்கிக்கலாம்),

உயர்மட்ட நீதிபதிகளின் நடவடிக்கைகளைக் கேள்வி கேட்க ஒரு தனிமனிதனுக்கும் அதிகாரம் கிட்டும் அதே நேரத்தில் இன்னொரு ஆபத்து இருப்பதையும் மறுப்பதற்கில்லை. எந்த வழக்கின் தீர்ப்புக்கும் இருபக்கங்கள் உண்டு. ஒன்று வெற்றி. இன்னொன்று தோல்வி. தோல்வியுற்றவர்கள் தங்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக நோக்கங்களைக் கற்பிக்கும் ஆபத்து எப்போதுமே உண்டு. அதனல் ஒரு நீதிபதியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டினை தேசிய நீதித்துறை குழுமம் தீர ஆராய்ந்து, குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிக்கும் தன் பக்கத்து வாதத்தை முன்வைக்க வாய்ப்பளித்து பிறகே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

எனவே எல்லாவகையிலும் ஒரு பாதுகாப்பான ஒரு மசோதாவாகத்தான் பாமரப் பார்வைக்குப் படுகிறது.

ஆனல் சட்ட வல்லுனர்கள் இரு தரப்பிலும் போட்டுக் கிழித்துத் தோரணம் கட்டத் தொடங்கும்போது இந்த மசோதாவின் எல்லாப் பக்கங்களும் நம் பார்வைக்குக் கிட்டும்.

எது எப்படியோ தங்கப்பதக்கம் திரைப்படத்தில் சிவாஜி மற்றும் பிரமிளா ஒரு பாடல் காட்சியில் தங்கள் மிகை நடிப்பின் ஊடாக ஒரு கேள்வியைக் கேட்டு பதிலும் கொடுத்துக் கொள்வார்கள். (வார்த்தைகள் அப்படியே இல்லையென்றாலும் பொருள் மாறாமல் கொடுக்க முயற்சிக்கிறேன்)

ஊருலே இருக்கிற சின்னச் சின்ன நதியெல்லாம் அந்த வற்றாத ஜீவநதியைப் பார்த்து ஆறுதல்
அடையும். அந்த நதியே காய்ந்து போன?

பக்தர்கள் தங்கள் குறையை
தெய்வத்துக்கிட்டே முறையிடுவாங்க... அந்தத் தெய்வமே கலங்கி நின்னா?...
இந்த மாதிரியான சினிமாத்தனமான எடர்னல் கேள்விகளுக்கு எல்லாம் கொஞ்சம் விடை கிடைக்கிற மாதிரி அமைந்திருக்கிறது இந்த மசோதா என்று சொல்லலாமா?

இன்னும் ஒன்று.
நாட்டாமை தீர்ப்பை மாத்தி எளுதூ....
என்று யாரும் நீதிபதிகள் அருகில் போவதற்குக் கொஞ்சம் பயப்படுவார்கள் இல்லையா?



No comments:

Post a Comment