Thursday, January 29, 2009

தமிழ்ஸ்டூடியோ.காம் - ஒரு நம்பிக்கையின் துவக்கம்

ரொம்ப நாட்களுக்குப் பிறகு இந்தப் பக்கங்களில் நான்.

இனி தொடர்ச்சியாக எழுதுவதாக சத்தியம் எல்லாம் பண்ணப் போவதில்லை. அப்படிப் பண்ணினால் எழுத முடிவதில்லை. எதுக்கு வம்பு?

கடந்த ஆறு மாதங்களாகவே தொடர்ச்சியாக மனைவியின் தேக சுகவீனம். பிறகு என்னுடைய வாயையும் இன்னொன்றையும் சும்மா வைத்துக் கொண்டு இருக்காமல் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் உள்ள சில எஜமானர்களுடன் மோதலைத் துவக்கி நேரத்தை அநியாயத்துக்கு விரயமாக்கியது. தங்களைக் குறுநில மன்னர்களாகவும் மற்றவர்களை தங்களிடம் பாடிப் பரிசில் பெறும் புலவர்களாகவும் கருதும் இறுமாப்பில் உள்ள அவர்கள் விளைவித்த இன்னல்களால் நேர்ந்த மன உளைச்சல்கள். தனிப்பட்ட வகையில் இவர்கள் எனக்கு விளைவித்தது என்னவென்றால் ரத்தக் கொதிப்புக்கான மாத்திரையை தினமும் காலையில் என்னை உட்கொள்ள வைத்த பெருங்கருணை.

என்னைப் பற்றி சில ஈன ஜென்மங்கள் தலைநகரில் நண்பர்களிடையே உண்மைக்குச் சற்றும் தொடர்பே இல்லாத பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டதனால் விளைந்த மன உளைச்சல்கள் போன்றவற்றால் படைப்புக்கான மனநிலையில் சற்றும் இல்லாது பொன்னான சில மாதங்களை வீணடித்து விட்டேன்.

இப்போது மனதில் மீண்டும் பழைய தெம்பு கொஞ்சம் எட்டிப்பார்க்கிறது. இருக்கிறது. எனவே வலைப்பதிவில் மீண்டும் இறங்கலாம் என்று தீர்மானம். வடக்கு வாசல் இதழில் எழுதி வந்த பழைய சனிமூலை கட்டுரைகள் சிலவற்றை இந்தப் பக்கங்களில் சேர்க்கலாம் என்று வேலையைத் துவங்கிய போது இடையில் ஒரு மின்னஞ்சல் வந்தது.

தமிழ் ஸ்டூடியோ.காம் என்னும் ஒரு புதிய தளத்தை அறிமுகப்படுத்தியது அந்த மின்னஞ்சல். தமிழில் ஒரு மாற்று ஊடகம் அமைக்கும் எண்ணத்தில் ஏற்படுத்தப்பட்ட தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் இணையத்தளம் என்று அந்த மின்னஞ்சல் சொன்னது.

மாற்று ஊடகம் அமைக்கப்படுவதே முக்கிய நோக்கமாயினும் இலக்கியத்தின் மீது உள்ள காதலால், இலக்கியமும் வரலாற்றின் மீது உள்ள ஈர்ப்பால் வரலாறு பிரிவும் ஏற்படுத்தப்பட்டு குறும்படம், இலக்கியம், வரலாறு என விரியும் தமிழ்ஸ்டூடியோ.காம் இணையதளத்தைப் பார்வையிட்டு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு இந்த இணையதளம் அழைக்கிறது.

சமீபத்தில் இந்த இணையதளத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. செய்தி மற்றும் புகைப்படங்களையும் அனுப்பி இருக்கிறார்கள்.

சுருக்கமாக அவர்களின் நல்ல கனவுகளை சுமந்த ஒரு எளிய பிரகடனம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர்கள் சொல்கிறார்கள் -

தமிழில் மாற்று ஊடகம் அமைக்கும் முயற்சியின் முதல் படியாக குறும்படத் துறையை / அது சார்ந்த ஆர்வலர்களை ஊக்குவிக்கும் செயலை தமிழ் ஸ்டுடியோ.காம் தொடர்ந்து செய்துக் கொண்டே இருக்கும். இலக்கியங்கள், புகழ் பெற்ற சிறுகதைகள், உலகில் உள்ள மாற்ற நாட்டு இலக்கியங்கள், அழிந்து வரும் வரலாற்று சின்னங்கள், மொழி, கலாச்சாராம் சார்ந்த ஆவணங்கள், கல்வெட்டு ஆவணங்கள், போன்றவற்றை குறும்படங்களாக / ஆவணப்படங்களாக எடுத்து அவற்றை மக்களிடையே பரவலாக கொண்டு போய் சேர்க்கும் முயற்சியில் தமிழ் ஸ்டுடியோ.காம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. மேலும் அவ்வாறு எடுக்கப்படும் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் போன்றவை உலகத்தரத்தில், புதிய தொழில்நுட்பங்களோடு எடுக்கப்படவேண்டும் என்கிற அக்கறையும் இங்கு கவனிக்கப்படும். புதிதாக குறும்படத்துறையில் நுழைய விரும்பும் ஆர்வலர்கள் அனைவருக்கும் அது பற்றிய முழுமையான ஒரு புரிதலை தமிழ் ஸ்டுடியோ.காம் ஏற்படுத்தும்.

மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் தமிழ் ஸ்டுடியோ.காம் செய்துக் கொடுக்கும் என்பதையும் இங்கு தெரியப்படுத்துகிறோம். ஆர்வமும் முயற்சியும், துடிப்பும், படைப்புத்திறனும், எதையும் புதுமையாக சிந்திக்கும் ஆர்வமும் உள்ளவரா நீங்கள்? எனில் உங்களுக்கான களம் அமைத்துக்கொடுக்கும் பணியை தமிழ் ஸ்டுடியோ ஏற்றுக்கொள்ளும்.

இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்காகவும் ஒரு களம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தளத்தை பார்வையிடும் உங்களுக்கும் எழுதும் ஆர்வமோ, ஒளிப்படம் எடுக்கும் ஆர்வமோ, அல்லது ஏதோ ஒருத் துறையில் (அறிவியல், சமூகம், வானவியல் போன்ற துறைகளையும் சேர்த்து) உங்களுக்கு ஆர்வம் இருந்தாலும் அதை வெளிப்படுத்த தமிழ் ஸ்டுடியோ.காம் உங்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் என்று பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த முயற்சி அவசியம் வெற்றி பெறவேண்டும். பொதுவாக தமிழில் இரண்டு நிலைகளைத்தான் தொடர்ச்சியாக நாம் இலக்கியம், நாடகம், சினிமா போன்றவற்றில் கடைப்பிடித்து வருகிறோம். வைத்தால் குடுமி - சிரைத்தால் மொட்டைதான் நமக்கு.

ஒரு பக்கம் அரசு மற்றும் வெகுஜனத்தால் அங்கீகாரம் பெற்ற கலாச்சார சீரழிவுகள். இன்னொரு பக்கம் நேர்மையாக எதையும் அணுக முயற்சிக்கும் இளைய தலைமுறையை அருகில் சேர்க்க விடாமல் தலைதெறிக்க ஓட வைக்கும் நவீன வேடமணிந்த போலித் தனங்கள். இவற்றின் இடையே தமிழ்டூயோ.காம் போன்ற நம்பிக்கை தரும் சில நல்ல முயற்சிகள் நமக்கு உண்மையிலேயே உற்சாகம் அளிக்கின்றன. இவர்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் ஒரு சிறிய அறிவுரை சொல்லலாம் என்று இருக்கிறேன். இலக்கியம், நாடகம், திரைப்படம் போன்ற துறைகளில் சில அறைகுறை அறிவுஜீவி வேடமணிந்த போலிகள் குறும்படங்களையும் முயற்சித்து அப்பாவிகளை இம்சிக்காமல் இல்லை. இவர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு அதிகம் பில்டப் கொடு்க்காமல் இருக்க முயற்சிக்கலாம். இது தமிழ் சமூகத்துக்கு செய்யும் நல்ல தொண்டாக அமையும்.

மின்னஞ்சல் கிடைத்ததும் இணையதளத்தைப் படித்து விட்டு பதில் அஞ்சல் அனுப்பும் பொறுமை இன்றி உடனே இந்த இணையதளத்தை நடத்தும் அருண் என்கிற இளைஞரை அழைத்துப் பேசினேன். மனிதர் ரொம்பவும் தெளிவாக இருக்கிறார். அவருடைய மன உறுதி மனதுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அருண் மற்றும் குணா இருவரும் இணைந்து நடத்தும் நல்ல பயனுள்ள இணையதளம் இது.

இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றி அடைய வேண்டும்.

அடையும்.

2 comments: