Sunday, November 14, 2010

ஒபாமாவின் இந்தியப் பணயம்

எல்லாக் காட்சி ஊடகங்களும், எல்லா அச்சு ஊடகங்களும், எல்லா வலைத்தளங்களும், ஒபாமா வருகை பற்றிப் பத்தி பத்தியாக பக்கம் பக்கமாகப் பேசி விட்டார்கள். நம்முடைய பொதுவுடமைச் சிங்கங்களும் அரசியல் புலிகளும் நரிகளும் எல்லாச் சுவர்களிலும் சுவரொட்டிகள் ஒட்டியாயிற்று.
ஒபாமாவும் மாமியுடன் வேண்டிய அளவு சிரித்து விட்டு ஊருக்குக் கிளம்பி விட்டார்.
ஒவ்வொரு அமெரிக்க அதிபரும் அவங்களோட ஆத்து மாமிகளும் இந்தியா வரும்போது செய்யும் சகல சடங்குகளையும் இவர்களும் சாங்கோபாங்கமாக செய்து முடித்து விட்டார்கள்.
இனி இந்தியாவின் பஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிந்து விடும். நாம் எல்லோரும் ஒழுங்காக ஆங்கிலம் பேசத் துவங்கி விடுவோம். தற்போதைக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கும் சூரியன் சுக்கிரமேட்டுக்கு நகர்ந்து வந்து பாகிஸ்தானுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கும். இனி அவர்கள் நல்ல புத்தியுள்ள தீவிரவாதிகளாக நம்முடைய கடற்கரையோரம் அனுப்புவார்கள். நமக்கு இடையில் உள்ள பாதகங்கள் அழியும். இப்படி எதையாவது எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

அகில இந்திய வானொலியின் பாஷையில் எல்லாம் சுமுகமாக முடிந்தது. அமெரிக்க அதிபரின் பயணம் சகலவகைகளிலும் வெற்றிப் பயணமாக அமைந்தது. நம்பிக்கையைத் தோற்றுவித்தது. நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது. இரு நாடுகளின் உறவு மேம்படும் என்று வேண்டுமானாலும் எழுதலாம். அல்லது நம்முடைய சிறுபத்திரிகைகளின் சம்பிரதாயப்படி படிக்கிறவர்கள் எல்லாம் இருக்கும் கொஞ்ச மசிரையும் பிய்த்துக் கொள்கிற மாதிரியும் எழுத முயற்சிக்கலாம். ஆனால் நான் கோதாவுக்கு சற்று தாமதமாக வந்திருக்கிறேன். அதனால் கொஞ்சம் யோசித்துத்தான் எதையாவது புரியாத மாதிரி எழுத வேண்டும்.

No comments:

Post a Comment