Thursday, March 5, 2015

ஆவணப்படத்துக்கான தடையும் ஊடக பயங்கரவாதத்தின் ஓநாய் முகமும்…


இன்று (5 மார்ச் 2015) காலை பிபிசி நிறுவனத்துக்காக எடுக்கப்பட்ட நிர்பயா பற்றிய ஆவணப்படம் யூடியூபில் கிடைக்கிறது என்று சில நண்பர்கள் கூறியதும் பரபரப்பாக இருந்தது.  இந்தப் படத்தை திரையிடுதல் மற்றும் ஒளிபரப்புதல் ஆகியவற்றுக்கு நீதிமன்றம் வழியாக அரசாங்கம் தடை ஆணையைப் பெற்றதால் இதனை மீண்டும் எப்போது வேண்டுமானாலும் நிறுத்த வாய்ப்பு இருக்கிறது என்ற பயத்துடனேயே இந்த ஆவணப்படத்தை காண நேர்ந்தது.

இந்த ஆவணப்படத்தின் மீதான என்னுடைய முதல் எதிர்வினையை சொல்ல வேண்டுமென்றால் எனக்குக் கிட்டிய பெரும் அதிர்ச்சியைத்தான் பகிர்ந்து கொள்ளவேண்டும். 

இந்தத் துயரமும் மனக்கிலேசமும் அளித்து வரும் சம்பவத்தைப் பற்றியும்   இந்த சம்பவம் தொடர்பான போராட்டங்கள், பல்வேறு எதிர்வினைகள், வழக்கு விபரங்கள் ஆகியவற்றை ஒரு பத்திரிகையாளனாக தொடர்ந்து கண்காணித்து இருந்தாலும் இந்த சம்பவத்தைப் பற்றிப் படம் முழுதும் பரவலாகப் பேசும் இப் படத்தின் நேரடித்தன்மை என்னை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது என்றுதான் கூறவேண்டும்.

இத்தனை நாள் அனைவரும் நிர்பயா என்று அழைத்துவந்த ஜ்யோதி சிங் என்ற பெண்ணின் பெற்றோர்களின் கண்ணீர் மல்கிய பேட்டிகளை 2012-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இருந்து பல ஊடகங்களிலும் நேரிலும் பார்த்து இருந்தாலும் இந்த ஆவணப்படத்தில் அவர்கள் நேரடியாக நம் கண்களில் ஊடுருவி தங்களின் மாளாத துயரத்தை  நம் மனத்துக்குள் ஏற்றியபோது ஒருவகையான மௌனமான விம்மலுடன்தான் இதனைப் பார்க்க முடிந்தது.

அலுவலகத்தில் சக ஊழியர்கள் முன்னிலையில் என்னுடைய கணிணியில் இதனைப் பார்க்க நேர்ந்ததால்  என்னுடைய  முகத்தை அதீத போலித்தனத்துன் தூக்கி  வைத்துக் கொண்டு ஏதோ மன உறுதி கொண்டவனைப் போல நடித்தாலும் வேறு பக்கம் திரும்பி வழியும் கண்ணீரை மிகவும் சாமர்த்தியமாக துடைத்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது.

வீட்டில் தனிமையில் பார்த்து இருந்தால் கண்டிப்பாக பொங்கிப் பொங்கி அழுதிருக்கலாம்.  கண்டிப்பாக அழுதிருப்பேன்.  என் மகளே…என்று தழுதழுத்திருப்பேன்.

நிர்பயாவின் தாயார் நம்மை நோக்கிக் கேட்கிற கேள்விகள்,   தகப்பனார் தொடர்ந்த சோகத்தினால் இறுகிப் போன முகத்தை வைத்துக் கொண்டு மிகவும் சாதாரணமாகத் தன்னுடைய ரணங்களை நம்முடன் பகிர்ந்து கொள்வது ஆகியவை கண்டிப்பாக யாரையுமே அசைத்துவிடும்.

குற்றவாளி உமேஷ் மற்றும் அந்தக் குற்றவாளியின் மனநிலை பிறழ்ந்த இரு வழக்கறிஞர்களின் உரையாடல்களைப் பற்றி எதுவும் சொல்வதாக இல்லை.

 முகநூல் பக்கங்களில் எல்லோரும் வேண்டிய அளவு திட்டிக் கொண்டு  இருக்கிறார்கள்.  அந்த வழக்கறிஞர்கள் இருவரும் ஏற்கனவே பல தொலைக்காட்சி பேட்டிகளில் கூறியவற்றையேதான் திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறார்கள்.  இதற்காக நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களால் அவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்.  அதனால் அவர்களுடைய கூற்றிலி புதிதாக ஏதுமில்லை. 

குற்றவாளியும் முன்பு கூறியதையேதான் இப்போதும் கூறியிருக்கிறான்.  புதிதாக எதுவும் இல்லை.  அதிர்ச்சி அடையவும் எதுவும் இல்லை.

அவனுடைய பெற்றோர்களும் மனைவியும் அப்படித்தான் பேசியாக வேண்டும்.  பேசுவார்கள்.  அதனால் அதிலும் புதிதாக எதுவும் இல்லை.  அவர்களும் ஏற்கனவே இதே வார்த்தைகளை பல ஊடக பேட்டிகளிலும் இதே துயரத்துடன் நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால்   இந்தப் படம்   ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம் மனப்பரப்பில்  கூர்மையான வேல் ஒன்றை மிகவும் ஆக்ரோஷத்துடன் சொருகிச் செல்கிறது.  அந்த ஆக்ரோஷம் தரும் வலியை நம்மால் நன்றாக உணர முடிகிறது.  

குற்றவாளி  பேசும்போது கூட அந்தக் கூர்வேல் நம்மைத் துளைக்கிறதைத் தவிர்க்க முடியவில்லை.

இது தேவை.  இந்தப் படம் நமக்குத் தேவை.  கண்டிப்பாக நமக்குத் தேவை என்றுதான் மனம் அலறுகிறது. 

இந்த செய்தி இப்படித்தான் சென்று சேர்ந்தாக வேண்டும் என்று இந்தப் படத்துடன் மனம் கிடந்து அடித்துக் கொள்கிறது.

இந்தப் படத்துக்கு தடை விதித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி நாம் விமர்சிக்க முடியாது.  ஆனால் சட்டப்படி நீதிமன்றத்தின் எந்தத்  தீர்ப்பு அல்லது உத்தரவு மேல்முறையீட்டில் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டுக் கொண்டுதான் வருகிறது.  என்றாவது விமர்சிக்கப்படலாம்.  வேண்டும்.

இந்தப் படத்தில் தடைசெய்யப்படுவதற்கான எந்த விஷயமும் கண்டிப்பாக இல்லை என்றுதான் தோன்றுகிறது.   உங்களுக்கும் அப்படித் தோன்ற நிறைய வாய்ப்புக்களை இந்தப்படம் அளிப்பதாக எனக்குத் தோன்றுகிறது.   

இந்தத் தடையானது மிகவும் தேவையற்ற ஒன்று.  அரசாங்கம் தன்னுடைய முகத்தைத் துடைத்துக் கொள்கிற பாவனை மிகுந்த செயல் இது. 

ஆனால் இந்தத் தடையால் ஆர்வம் மிகுந்து பலரும் பார்க்க நேரிடலாம்.  பார்க்க வேண்டும்.

இந்தப் படத்துக்கு தடை கோரிய அரசாங்கத்தை பார்த்து ஒருவகையில் நம்மால் பரிதாபப்படத்தான் முடிகிறது.

சில நேரங்களில் அரசாங்கமும் சில சுயநல ஊடகம் சார்ந்த சக்திகளின் விளையாட்டுக்களுக்கு பகடைக்காய் ஆவதைத்தான் இந்த சம்பவம் வெளிப்படையாக  நிரூபித்து இருக்கிறது.

அந்த ஊடக சக்திகள் மிகவும் தந்திரமாக இந்தப் படத்துக்கு எதிராக கருத்து வன்முறையை பரப்பி இருக்கிறது.  அந்த வன்முறைக்கு நம்முடைய அரசியல்வாதிகளும் பெண்ணியவாதிகளும் பரிதாபமாக பலியாகியிருக்கிறார்கள்.  அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது.

பிபிசி நிறுவனம் எல்லாவற்றுக்கும் காதுகிழியக் கூச்சலிடும் அந்தக் குறிப்பிட்ட ஊடக நிறுவனத்துக்கு இந்தப் படத்தை வெளியிடும் உரிமையை தப்பித் தவறி அளித்திருந்தால் அவர்களும் அவர்கள் சார்ந்த தினசரியும் இந்த விஷயத்தை வேறு விதமாகக் கையாண்டிருக்கும். 

இந்தப் படத்தை பெண்ணியத்துக்கான சுதந்திர பிரகடனமாக அறிவித்து இருக்கும்.

ஆனால் வேறொரு போட்டி  நிறுவனத்துக்கு உரிமை வழங்கப்பட்டதால் இந்தப் படம் எடுக்க அரசாங்கம் அளித்த அனுமதி முதற்கொண்டு கேள்விக்குறியாக்கப்பட்டு நிர்பயா என்ற பெண்ணின் மீதும் மொத்தத்தில்  நம்முடைய சமுதாயம் பெண்ணியத்தை அணுகும் முறை குறித்தும் மனரீதியான கருத்து வன்முறையைத் திணித்து இந்தப் படம் பரவலாகக் காண முடியாதவண்ணம் செய்து விட்டது.

இதற்கான முழுப்பாவத்தையும் அந்த நிறுவனம்தான் சுமக்க வேண்டும்.

ஆனால் அவர்களுக்கு எந்த வகையான லஜ்ஜையும்  இல்லை.  இந்த உலகத்தையே தாங்கள் மட்டுமே உத்தாரணம் புரிய வந்திருப்பது போன்ற வேஷத்தை அணிந்து கொண்டு திரியும் இவர்களின் முகத்திரை வெகுவிரைவில் கிழியும்.  

இது சாபம் அல்ல.  வெகு விரைவில் நடக்கப்போகும் ஒரு நற்காரியம் பற்றிய சுபஹேஷ்யமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

இதில் எல்லாவற்றையும் விட பெரிய வருத்தம் அளித்த ஒரு விஷயம் – தனிப்பட்ட முறையில் நான் வருத்தப்பட்டது என்னவென்றால் -பிரம்மாண்டமான ஒரு மனநோய் விடுதியைப் போல இயங்கி வரும் ஒரு நாட்டில் இருந்து இங்கு வந்து ஒரு ஆவணப்படம் எடுத்துவிட்டு அது திரையிட தடை விதிக்கப்பட்டதும்  இந்த நாட்டை ஒரு மனநோய் பீடித்த சமூகம் என கூறிவிட்டு வெளியேறும் அவலம் நேருவதற்கான வாய்ப்பை நமது அரசாங்கம் அளித்துள்ளது.

முற்றிலும் சுயநலம் பீடித்த  ஊடக நிறுவனம் ஒன்றின் பயங்கரவாதத்தால், அராஜகத்தால் அரசாங்கம் தனக்குத்தானே உருவாக்கிக் கொண்ட நிர்ப்பந்தமாகத்தான் இதனை என்னால் பார்க்க முடிகிறது. 

இது ஊடக பயங்கரவாதத்தின் துவக்கம்.

இன்னும் நிறைய இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.


No comments:

Post a Comment