Tuesday, May 24, 2016

யாத்திரை - இளங்கவி அருள்

கவிதையின் எல்லை எது?

துவக்கப்புள்ளி எது?  ஒரு கவிதை எதை செய்து முடிக்க வேண்டும்?  அல்லது அந்த கவிதை எதை செய்து முடிக்க தன்னுடைய துவக்கப் புள்ளியில் இருந்து கிளம்ப வேண்டும்?

இதுவரை மானிடம் தனக்குள்ளே போட்டுக் கொண்டு தவித்த புதிர் சிக்கல்களையெல்லாம் வென்றெடுத்து விட்டதா கவிதை?

கவிதை என்ற பெயரில் இதுவரை உலகில் உள்ள மொழிகளில் எல்லாம் எத்தனை வார்த்தைகள் விரயப்பட்டுள்ளன?     எத்தனை அனந்த கோடி வார்த்தைகள் கற்பனைகளால் அலங்கரிக்கப்பட்டு யானைகள் மிதித்துச்சென்ற  பாதையின் சிறுமுளைகளாய் சிதிலமடைந்துள்ளன?
கவிதை ஒரு துவக்கமா?  அல்லது கவிதை தனக்குள் தீர்வை பொதித்து வைத்துள்ள முடிவா?

ஒரு வாசகனாக எனக்கென்னமோ கவிதை ஒரு துவக்கமற்ற, முடிவற்ற யாத்திரையாகத்தான் இருக்கும் போல் இருக்கிறது.

அந்த யாத்திரையை கவிதையாக சொல்ல முயற்சித்து இருக்கிறார் இளங்கவி அருள் என்ற கவிஞர்.

கல்வெட்டு மார்ச் 2016 இதழில் இளங்கவிஅருள் எழுதிய யாத்திரை என்னும் கவிதையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது –
இவருடைய யாத்திரைப் பருவம் எதைப்பற்றியும் தீர்மானிக்காமல் கனவுகள் போல தனித்துப் போயிருக்கின்றன.  சக மனிதர்களுக்கும் இதே கதிதான் என்கிறார்.

இரவில் படரும் நிழலை இருள் சுற்றும் பறவை போல வைகறையில் தொடங்கி அந்திக்கு வந்துவிடும் வாழ்க்கை போராடி வெல்லப்படுகிறது – அல் சுற்றும் என்ற மிக நல்ல பிரயோகத்தை இங்கே தந்திருக்கிறார்.  இங்கு ஏதேதோ செயல்கள் யாத்திரிகர்களால் பெயரிடப்படாத விலங்கின் தன்மைக்கு மனிதம் என்று பெயரிடப்படுகிறது என்று முடிக்கிறார்.
இளங்கவி அருள் கவிதையின் இந்த யாத்திரை மீண்டும் எங்கோ துவங்கி மீண்டும் ஏதோ ஒரு முடிவிலாப் பொருளை நோக்கிச் சென்று மீண்டும் பலப்பல கேள்விகளுக்கு விடை தேடி ஒரு புள்ளியை நோக்கி விரைகிறது.


ஒரு கவிதையின் முடிவுறாத்தன்மை கொண்ட பயணம் என்பது இப்படித்தான் இருக்குமோ?

யாத்திரை
எதைப்பற்றியும் தீர்மானிக்காமல்
கனவுகள் போல் தனித்துப் போயின
என் யாத்திரைப் பருவம்.
இதே கதிதான் சக மனிதர்களுக்கும்
வைகறையில் தொடங்கி
அந்திக்கு வந்துவிடுகிறது வாழ்க்கை
இரவில் படரும் நிழலை அல்சுற்றும் பறவை போல்
போராடி வென்று விட்டேன்.
செத்துப் போனவர்களைப் பற்றி
நாம் நிறையப் பேசிக் கொண்டு இருக்கின்றோம்.

மனிதத் தன்மை என்னவென்பதை
பிளாஸ்டிக் புல்களுக்கு நீரையும்
தோல் பொம்மைகளுக்கு உணவையும்
கண்ணாடி பறவைகளுக்கு தானியத்தையும்
மரப்பாச்சிகளுக்கு ஒப்பனையும்
யாத்திரிகள் சேர்த்து விட்டார்கள்
பெயரிடப் படாத விலங்கின் தன்மையை
மனிதமென்று.

No comments:

Post a Comment