Wednesday, October 8, 2008

தூரன் பற்றிய ஒரு நல்ல நூல்

இது பெரியசாமித் தூரனின் நூற்றாண்டு. வழக்கப்படி தமிழ் சமூகத்தால் பெருமளவு எந்தவகையிலும் பேசப்படாது, சரியான வகையில் நினைவுகள் கொண்டாடப்படாது விடப்பட்டவர்களில் தூரனும் ஒருவர். ஒரு நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் ஆண்டிலும் அவரைப் பற்றிய பல தளங்களில் ஆழ்ந்த மௌனம் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டது. இதுபோன்ற ஒரு வருத்தமளிக்கும் சூழலில் பாரதிய வித்யா பவன், கோயமுத்தூர் மையம் பதிப்பித்து இருக்கும் "தொண்டில் கனிந்த தூரன்'' என்னும் நூல் பெரியசாமித் தூரன் போன்ற ஒரு அற்புதப் படைப்பாளியின் பன்முகத் தன்மையை மிகவும் அற்புதமாகப் பதிவு செய்திருக்கின்றது.


சிற்பி பாலசுப்பிரமணியம் தொகுப்பாசிரியராகவும் டாக்டர் இராம.இருசுப்பிள்ளை மற்றும் டாக்டர் ஐ.கே.சுப்பிரமணியன் ஆகியோர் இணை ஆசிரியர்களாகவும் இந்த நூலில் அரும் பங்காற்றியிருக்கின்றனர். பாரதிய வித்யா பவன், கோவை மையம் இதுவரை, ராஜாஜி அவர்களின் உரைகள், கட்டுரைகள் அடங்கிய இரு தொகுப்புக்கள், சி.சுப்பிரமணியம் அவர்களைக் குறித்த Passion for Excellence, இசையரசி டி.கே.பட்டம்மாள் பற்றிய, கான சரஸ்வதி ஆகிய நூல்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அந்த நூல்களின் வரிசையில் நூற்றாண்டு காணும் பெரியசாமித் தூரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நூல் வெளியீடு அமைந்துள்ளது. அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களின் அற்புதமான முன்னுரை இந்த நூலுக்கு அணிசேர்க்கிறது.

தூரனின் பன்முகத் திறமைகளைப் பட்டியலிட்டுச் செல்லும் அருட்செல்வர் தூரனைப் போன்றவர்களை அரசு பல துறைகளில் ஆலோசகராக அமர்த்திக் கொண்டிருக்க வேண்டும். அரசு கண்டு கொள்ள வில்லை. இது ஒரு பெரிய குறை. அதே போல, சென்னைப் பல்கலைக் கழகம் ஒரு டாக்டர் பட்டம் கொடுத்து அவரைக் கௌரவித்து இருக்க வேண்டும். அப்படிச் செய்யத் தவறியது ஒரு பெரும் குறை என்று முன்னுரையில் தன்னுடைய வருத்தங்களைப் பதிவு செய்திருக்கிறார் அருட்செல்வர்.

இது தமிழுக்கு ஒன்றும் புதியதல்ல. தமிழ்ச் சமூகம் பல விசித்திரமான புதிர்களை தன்னுள் அடக்கியது. வைத்துக் கொண்டாட வேண்டிய உன்னதங்களைப் பற்றிய ஆழ்ந்த மௌனத்தைத் தன்னுள் புதைத்திருக்கும். எவ்விதத் தகுதியும் பெறாத சில சராசரிகள் பெருத்த ஆரவாரத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டுக் கொண்டாடப்படும். அந்த வகையில் ஒரு ஆழ்ந்த மௌனத்தை உடைக்கும் ஒரு செயல்பாடாக இந்த நூல் வெளியீடு அமைந்திருக்கிறது என மகிழ்ச்சியுடன் சொல்லலாம் என்று தோன்றுகிறது.



மூன்று இயல்களாகப் பகுக்கப்பட்ட இந்த நூலின் முதல் பகுதியில் தூரனின் வாழ்க்கை வரலாறு மிகவும் தெளிவாக நுட்பமான தகவல்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தூரன் அவர்களின் மிக அரிதான நிழற்படத் தொகுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்படத் தொகுப்புக்கு சிகரம் வைத்தாற்போல, தூரன் அவர்கள் தன் வாழ்நாள் சாதனையாக தமிழ் சமூகத்துக்கு அர்ப்பணித்த கலைக்களஞ்சியங்களின் சில முக்கியமான பக்கங்களையும் குழந்தைகளுக்கான கலைக் களஞ்சியத் தொகுப்பின் படத்தையும் பதிந்து இருப்பது அவரைப் பற்றிய பதிவினை முழுமையாக்குகிறது. இரண்டாம் இயலில் தூரன் எழுத்தோவியங்களில் சிறந்த பகுதிகளாகத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் தூரன் குழந்தைகளுக்காகப் படைத்த கவிதைகள், சமூக அக்கறை கொண்ட கட்டுரைகள் அவருடைய படைப்பு மேதைமையைப் பறை சாற்றுகின்றன. கவிதை, நாடகம், காந்தீயம் போன்றவற்றில் தூரன் காட்டிய அதீதமான அக்கறைகள் குறித்து மிகத் துல்லியமான பதிவுகள் இப்பகுதியில் கிடைக்கின்றன. மூன்றாம் பகுதியில் அன்பர்கள் நெஞ்சில் தூரன் என்னும் தலைப்பில் அவினசிலிங்கம் அய்யா, சிலம்புச் செல்வர் ம.பொ.சி, டாக்டர் மு.அறம், பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி, செம்மங்குடி சீனிவாசய்யர், டி.கே.பட்டம்மாள், டைகர் வரதாச்சாரியார், கி.வா.ஜகந்நாதன், டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை ஆகிய பல்வேறு துறைகளின் வித்தகர்கள் தூரனைப் பற்றி எழுதிய கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது தூரனுடைய பன்முகத்தன்மையின் சிறப்பினை மிகவும் அழுத்தமாக நமக்குத் தருகின்றன.

அபூர்வமான வரலாற்றுச் செய்தி ஒன்றும் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உலகெங்கும் உலவும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவானது என்றால் உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்களை மகிழ்விக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் இருபதாம் நூற்றாண்டின் 80 ஆண்டுகளுக்கு முன்னல் கல்லூரி மாணவராக இருந்த பெரியசாமித் தூரன் அவர்களால் உருவாக்கப்பட்டது என்னும் சிறப்புச் செய்தி ஒன்றும் நமக்குக் கிடைக்கிறது.

1928ம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பெரியசாமித் தூரன், மாணவர்களிடையே கிறிஸ்தவர்கள் உலகெங்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைப் பறிமாறிக் கொள்வதைப் போல, உலகெங்கும் உள்ள தமிழர்கள் பொங்கல் வாழ்த்துக்களைப் பறிமாறிக்கொள்ள வேண்டும் என்னும் கருத்தை வற்புறுத்தினர். பொங்கல் வாழ்த்துக்கள் வேண்டும் என்று சொன்னது மட்டுமல்லாது, அகலமான குருத்தோலை ஒன்றைக் கொண்டு வந்து அழகாக வெட்டி வர்ணங்கள் தீட்டி முதல் பொங்கல் வாழ்த்தினை உருவாக்கி தமிழறிஞர் கா.நமச்சிவாய முதலியார், திரு.வி.க., கல்கி மற்றும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பினர். திரு.வி.க அவர்கள் இந்த வாழ்த்தினை வரவேற்று தமிழர்கள் அனைவரும் இதனைப் பின்பற்ற வேண்டும் என்று கட்டுரைகள் எழுதினர். பிறகு தமிழர்களிடையே பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் வேகமாகப் பரவியது. தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான அங்கமாகிப் போன பொங்கல் வாழ்த்து முறைக்கு வித்திட்டவர் பெரியசாமித் தூரன் என்பது இந்த நூலில் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அழகிய அச்சமைப்பும் மிக நேர்த்தியான கட்டமைப்பும், நூற்றாண்டு காணும் ஒரு மாமேதையைப் பற்றிய அற்புதமான பதிவுகளும் கொண்டு விளங்கும் இந்த நூலைத் தமிழுக்கும் உலகத் தமிழர்களுக்கும் வழங்கிய கோவை பாரதிய வித்யா பவன் அமைப்பும் அதன் தலைவர் கிருஷ்ணராஜ வானவராயரும் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்கள் என்பதில் ஐயமில்லை.

தொண்டில் கனிந்த தூரன்
சிற்பி பாலசுப்பிரமணியம்
பாரதீய வித்யா பவன் கேந்திரா
352, டி.பி. ரோடு,
ஆர்.எஸ்.புரம்
கோயம்புத்தூர்- _ 641 002.
விலை ரூ. 125/-





6 comments:

  1. நூல் அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன்.அவர் எழுதிய நூல்களை மறுபதிப்பு செய்தால் இன்றைய தலைமுறைக்கு அவரைப் பற்றிய செய்திகள் சென்றடையும்.

    ReplyDelete
  2. அய்யா, அருமைங்க... இது மாதிரி நல்ல தகவல்களைக் குடுத்துட்டே இருங்க...

    ReplyDelete
  3. periya sami thooran ezhudhiya paadalgallukkaga oro kacheri vaikkalame.

    ReplyDelete
  4. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி, கண்ணன்.

    ReplyDelete