Thursday, October 16, 2008

புக்கர் விருது பெற்ற வெள்ளைப்புலி


ஸல்மான் ரஷ்டி (1981), அருந்ததி ராய் (1997) கிரண் தேசாய் (2006) ஆகிய இந்தியப் படைப்பாளிகளுக்குப் பிறகு இந்த ஆண்டு புக்கர் பரிசுக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார் மும்பையில் வசிக்கும் அரவிந்த் அடிகா. அவருடைய வெள்ளைப்புலி (வைட் டைகர்) என்னும் புதினம் இந்த ஆண்டின் புக்கர் பரிசுக்குத் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளது.

தில்லிவசிக்கும் ஒரு ஹல்வாய் (இனிப்புக் கடைக்காரன் அல்லது இனிப்புப் பலகாரம் செய்யும் சமையல்கார்) வாழ்வில் நடக்கும் சம்பவங்களைப் பற்றி விவரித்துச் செல்லும் நாவல் இது என்று பத்திரிகைகளில் போட்டிருக்கிறார்கள். மும்பையில் வசித்தாலும் இந்த நாவலை தில்லிவாசிகளுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் அடிகா.

இவருடைய பெயருடன் போட்டிக்கு இருந்து பின்தங்கிய ஜாம்பவான்கள் - அமிதவ் கோஷ் (இந்தியா), ஸ்டீவ் டோல்ட்ஸ் (ஆஸ்திரேலியா), செபாஸ்டியன் பாரி (அயர்லாந்து), லிண்டா கிராண்ட் (பிரிட்டன்), பிலிப் ஹென்ஷர் (பிரித்தான்).

அடிகாவுக்கு வாழ்த்துக்கள் அனுப்பாத வட இந்தியத் தலைவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். அடிகாவுக்குக் கிடைத்த இலக்கிய அங்கீகாரத்தைத் தான் கொண்டாடுவதாக பிரதமர் அவருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.



சென்னையில் பிறந்து மங்களூரில் வளர்ந்து சிட்னிக்குப் புலம் பெயர்ந்த அடிகா ஆங்கில இலக்கியம் படித்தது நியூயார்க்கில் உள்ள கொலம்பியா மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில். டைம், ஃபைனான்சியல் டைம்ஸ், இன்டிபெண்டெண்ட் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற பத்திரிகைகளில் பல கட்டுரைகள் எழுதியவர் அரவிந்த் அடிகா.


புக்கர் பரிசுக்கான தொகை ரூ.42 லட்சம். இது தவிர இப்போது இந்த வெள்ளைப் புலியை மூலை முடுக்கெல்லாம் துரத்தித் துரத்தி வாங்கிப் படிப்பார்கள். பல மொழிகளில் மொழிபெயர்ப்பு வரும். அநேகமாக உலகில் பேசி, எழுதப் படும் எல்லா மொழிகளிலும் அரவிந்த் அடிகாவைப் பற்றிக் கட்டுரைகள் வெளிவரும். கண்களை இடுக்கிக் கொண்டு அவர் சிரிக்கும் புகைப்படங்கள் எல்லா நாளிதழ்களிலும், வார, மாத இதழ்களிலும் வரும்.

தமிழில் மட்டும் யாராவது ஒரு தமிழ் பேசத் தெரியாத சேட்டுப் பெண் எப்போதாவது அடிகா ஊருக்கு வரும்போது அவரை ஊடகங்களில் பேட்டி காண வாய்ப்பு இருக்கிறது. பிரபல தமிழ்ப் பத்திரிகைகளில் யாராவது ஒரு தமிழ் பேசத் தெரியாத சேட்டுப்பெண் நடிகை இவரைப் புளகாங்கிதத்துடன் பேட்டி கண்டு உலக இலக்கியம் வளர்க்க வாய்ப்பு இருக்கிறது. உடனடியாக தீபாவளி வருவதால் இந்த வாய்ப்புக்கள் சற்று அதிகமாகவே இருக்கலாம். தமிழின் சில பின்நவீனத்துவ மாமேதைகள் இந்த நாவலைக் கிழி கிழி என்று கிழித்துத் தோரணம் கட்டவோ அல்லது சத்தமில்லாமல் இந்த நாவலில் இருந்து சில உருவகங்களை ராவோடு ராவாக சுட்டு தன் சிறுகதைகளிலோ அல்லது வேறு படைப்புக்களிலோ இடைசெருக வாய்ப்புக்கள் உள்ளன. அதே போல, அகில உலகமும் படிக்கத் தகுதியுள்ள தன் எழுத்துக்கள் தமிழில் வருவதால் மட்டுமே அதிகம் கண்டுகொள்ளப்படுவதில்லை என்று காதுவழியாக புகையை வெளியே அனுப்ப வும் வாய்ப்புக்கள் உள்ளன.

புத்தகத்தை விரைவில் படிக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகிறேன். அதே நேரத்தில் ஒரு காலத்தில் இதே போல புக்கர் பரிசு பெற்று ஏக ரகளையாக ஊதிப் பெருக்கப்பட்ட அருந்ததி ராய் நாவல் போல இது ஏமாற்றமாக அமையக்கூடாது என்று குலதெய்வத்திடம் ஒரு பிரார்த்தனையும் வைத்திருக்கிறேன்.

புத்தகத்தை விலைக்கு வாங்கி அல்லது யாராவது நல்லவர்களிடம் இரவல் வாங்கிப்படித்துத் திருப்பிக் கொடுத்து விட்டு வெள்ளைப் புலி நூலைப் பற்றி எழுதுவது தர்மமான காரியம் என்று நினைக்கிறேன்.

விரைவில் அந்தத் தலைவலியும் உங்களுக்கு உண்டு.



5 comments:

  1. //
    தமிழில் மட்டும் யாராவது ஒரு தமிழ் பேசத் தெரியாத சேட்டுப் பெண் எப்போதாவது அடிகா ஊருக்கு வரும்போது அவரை ஊடகங்களில் பேட்டி காண வாய்ப்பு இருக்கிறது
    //

    இந்த வரியையும் அடுத்து வரும் வரிகளையும் படித்து வாய் விட்டு சிரித்தேன்.. ஆனால் அதுதான் நிஜமும் கூட..

    இவர் சென்னையில் பிறந்திருந்தாலும் தமிழர் அல்ல. அதனால் "விரைவில் புக்கர் பரிசு பெற இருக்கும் முதல் தமிழர் ******" என்று நம் தலைவர்களுக்கு ப்ளக்ஸ் போர்டுகளை தமிழகமெங்கும் பார்க்கலாம்..

    ReplyDelete
  2. வெண்பூ

    உங்கள் வருகைக்கும் பின்னோட்டத்துக்கும் மிக்க நன்றி.

    ராகவன் தம்பி

    ReplyDelete
  3. நம்ம ஆளுகளுக்கு எத்தன பேருக்கு இந்த விஷயம் தெரிஞ்சுறுக்கும்?..

    ஊடகங்கள் அஜென்டால இதெல்லாம் எங்க இருக்கு...


    அடித்தட்டு மக்களின் யதார்த்த வாழ்க்கையை பற்றிய நாவல்னு கேள்வி பட்டேன்...

    ஒரு நேர்கானல்ல 'ஏன் நீங்கள் இந்தியாவில் காண முடியாத சில சம்பவங்களை குறிப்பிட்டிருக்கிறீர்கள்' னு கேட்டு இருக்காங்க... grass root ல என்ன எப்படி நடக்குதுனு தெரியாம...social perspective இல்லாம கேள்விகள் கேட்பதை எப்ப தான் நிறுத்தப் போகிறார்களோ...

    ReplyDelete
  4. Noble prize winner Mr.Vengi born when his father at Cidambaram,But he studied basic education in chidambaram and his further studies in orrisa,gujarat and in foreign countries.He settled in America and submit his thesis on cemistry and won the said prize as amrican citizen Our news papers and other communications. have a tamilian has attained the stage and praised as they get tired. the same kind of treatment is being created.

    ReplyDelete