Saturday, April 25, 2009

இரு துயரச் சம்பவங்கள் - இரு வேறுபட்ட எதிர்வினைகள்

டெல்லி மாநகரில் ஒரே வார இடைவெளியில் இரு துயரச் சம்பவங்கள்.

முதல் சம்பவத்தில் ஷன்னோ காதூன் என்னும் பதினொரு வயதுப்பெண். டெல்லி நகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவி. அவளுடைய தகப்பனார் டெல்லிக்கு வெளிப்புறத்தில் உள்ள பவானா என்னும் இடத்தில் உணவகம் ஒன்றில் பணிபுரிகிறவர். ஷன்னோ வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவள். ஆங்கிலப் பாடத்தை ஒழுங்காக ஒப்பிக்காததினாலும் ஆங்கில எழுத்து ஒன்றை ஒழுங்காக எழுதிக் காட்டாததினாலும் கோபம் கொண்ட அவளுடைய ஆசிரியை வெய்யிலில் அவளை முட்டி போட்டு நிறுத்தி வைத்ததால் வலிப்பு நோய் அதிகமாகி மூன்று நாட்கள் மருத்துவ மனையில் நினைவின்றிக் கிடந்து பரிதாபமாக உயிர் விட்டிருக்கிறாள். அவளை இந்த கதிக்கு ஆளாக்கிய ஆசிரியை தலைமறைவாகி விட்டார். அவரை காவல்துறை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது.

ஆசிரியையால் தண்டிக்கப்பட்டு மரணப்படுக்கையில் கிடக்கும் ஷன்னோ காதூன்

இன்னொரு சம்பவத்தில் ஆகிரிதி என்கிற17 வயதுப் பெண். 11ம் வகுப்பு மாணவி. டெல்லியின் மேட்டுக்குடி மக்கள் வசிக்கும் வஸந்த் விஹார் என்னும் பணக்காரப் பகுதியில் உள்ள மாடர்ன் பப்ளிக் ஸ்கூல் என்னும் மஹா பணக்காரப் பள்ளியின் மாணவி. கோடீஸ்வரர்களின் பிள்ளைகள் மட்டுமே படிக்கக் கூடிய பள்ளி. ஆகிருதிக்கு ஏற்கனவே ஆஸ்துமா நோய் இருந்திக்கிறது. சம்பவ தினத்தன்று மதியம் பள்ளியில் அந்தப் பெண்ணுக்கு மிகக் கடுமையான ஆஸ்துமா நோய்த் தாக்குதல் ஏற்பட்டு இருக்கிறது. பள்ளி நிர்வாகம் முதலில் மெத்தனமாக இருந்து விட்டு நிலைமை மோசமானதும் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அவளை எடுத்துச் சென்றிருக்கின்றனர். உரிய நேரத்தில் முதலுதவியும் தேவையான சிகிச்சையும் தரப்படாததால் மருத்துவ மனைக்குச் செல்லும் முன்னரே பரிதாபமாக உயிர் பிரிந்திருக்கிறது.

இந்த இரு துயரச்சம்பவங்களுமே இருவகையான எதிர்வினைகளை சந்தித்து இருக்கின்றன. மிகவும் ஏழைக்குடும்பத்தை சேர்ந்த ஷன்னோவின் மரணம், அந்தப் பெண் வசிக்கும் பகுதியில் உள்ள ஏழைத் தொழிலாளர்கள் காட்டிய சிறு எதிர்ப்புக்களோடு நின்று போயிற்று. விசாரணை செய்ய வந்த காவல் அதிகாரிகள் மீது ஒரு சிறு கும்பல் கல்வீ்ச்சு நடத்தியிருக்கிறது. ஆசிரியை தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடுவதாகக் காவல்துறை சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு நாளைக்குக் குறைந்தது 20 மணி நேரம் அந்தப் பெண் மருத்துவனையில் கோமாவில் படுத்திருந்த கோரமான காட்சியை ஒளிபரப்பிய செய்தித் தொலைக்காட்சி நிலையங்கள் மெல்ல மெல்ல அதைப் பற்றிப் பேசுவதையே நிறுத்திக் கொண்டன. பவானாவை சேர்ந்த ஓரிரு குட்டித் தலைவர்கள் அறைகுறை அறிக்கைகளை வெளியிட்டதோடு நிறுத்திக் கொண்டார்கள். ஷன்னோவின் பெற்றோர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் காட்டிய சிறு எதிர்ப்பையும் அரசியல்வாதிகளின் தூண்டுதலால் அவர்கள் அதில் ஈடுபடுவதாக தில்லி அரசாங்கம் குற்றம் சாட்டியது.

வஸந்த் விஹார் பகுதியைச் சேர்ந்த ஆக்ரிதியின் விஷயத்தில் வேறு வகையான எதிர்வினைகள் கிட்டின. ஆக்ரிதியின் பள்ளியில் உடன் படித்த மாணவிகள் மட்டுமல்லாது நகரத்தின் வேறு பணக்காரப் பள்ளிகளி் இருந்தும் மாணவிகள் மறியலில் கலந்து கொண்டார்கள். பல மாணவிகள் மிகவும் உரத்த குரலில் பள்ளி நிர்வாகத்தைக் குற்றம் சாட்டினார்கள். அவர்கள் குரலில் தர்ம ஆவேசம் இருந்தது. அவர்கள் கதறலில் நியாயத்தின் வலு இருந்தது. மாடர்ன் பப்ளிக் பள்ளியின் முதல்வர் செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது அவரை முற்றுகையிட்டு கூச்சல் போட்டனர். அமைச்சர் ரேணுகா சௌத்ரி ஆக்ரிதியின் பெற்றோர்களை சந்தித்தது தலைநகரில் செய்தியானது. ஆக்ரிதியின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட டெல்லி அரசு தலைநகரின் பள்ளிகளில் அவசர சிகிச்சை வசதிகளோடு மருத்துவ உதவி அறைகளை கட்டாயமாக்கும் சட்டத்தை அமுல்படுத்த ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

ஆகிரிதி பாட்டியா

ஆகிரிதி மரணத்துக்குப் பிறகு அரசின் இந்த உடனடி நடவடிக்கையும் ஊடகங்கள் காட்டும் அதிகபட்ச அக்கறையும் கொஞ்சம் சிந்திக்க வைக்கின்றன.

மரணம் ஏழை பணக்காரன் என்று வேறுபாடு காட்டுவதில்லை. துயரம் என்பது பொதுவானது. துயரத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஆனால் இரு துயரச் சம்பவங்களிலும் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் வேகத்தையும் காட்டப்படும் அதிரடியான எதிர்வினைகளையும் பார்க்கும்போது எங்காவது லேசான வேறுபாடு இருக்கலாமோ என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஒருவேளை ஒரே வாரத்துக்குள் இரண்டு துயரச் சம்பவங்களும் நிகழ்ந்ததால் இரண்டாவது சம்பவம் சற்று முக்கியத்துவம் பெறுகிறது என்று வைத்துக் கொண்டாலும் ஆகிருதி வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்த ரேணுகா சௌத்ரியாலோ அல்லது தில்லி அரசின் அமைச்சர்கள் யாராலோ ஷன்னோ வீட்டுக்குசம் செல்ல வழி தெரியவில்லையா என்னும் கேள்வி எழத்தான் செய்கிறது.

செய்தியாளர் கூட்டத்தில் பள்ளி முதல்வர்

எல்லாம் கிடக்கட்டும். பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பணக்காரப் பள்ளியி்லேயே ஒரு மாணவிக்கு எந்தவித உடனடி மருத்துவ வசதிகளையும் தந்து அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முயற்சிக்க வில்லை என்னும் போது வசதி குறைந்த நிர்வாகத் திறனற்ற மற்ற பள்ளிகளின் குழந்தைகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அவர்களின் கதி என்னாவது?

வழக்கப்படி ஆண்டவன்தான் அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் வழக்கம் சற்று மாறிவருகிறது.

ஆண்டவனும் இப்போதெல்லாம் ஏழைகளை சரிவரப் பார்த்துக் கொள்வதில்லை. ஆள்கிறவர்களும் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை.

8 comments:

 1. நல்ல ஆய்வு... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஓ......


  இதுல கூட இப்படித்தானா.....

  ReplyDelete
 3. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ஹாஸன்.

  ராகவன் தம்பி

  ReplyDelete
 4. அப்படித்தான் இருக்கும் போலிருக்கு சுரேஷ்.

  ராகவன் தம்பி

  ReplyDelete
 5. இங்கே மக்களாட்சி நடக்கிறது ஐயா!
  பணம் பத்தும் செய்யும் என்று முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்.
  - சங்கர்

  ReplyDelete
 6. http://sanimoolai.blogspot.com/2009/04/blog-post_25.html

  என்றுமே ஒரு பணக்கார சமூகத்தில் உயர் தட்டில் இருப்பவர் பாதிக்கப்பட்டவுடன் தான் அனைவரும் வெகுண்டு எழுவார்கள்

  பகடிவதையால் (ரேக்கிங்) பல உயிர்கள் பலியானாலும் ஒரு துனைவேந்தரின் மகன் (நாவரசு) 199ல் பலியான பின்னர் தான் சட்டம் வந்தது

  பெண்பகடியால் (ஈவ் டீசிங்) பல உயிர்கள் பலியானாலும் ஒரு பணக்கார குடும்பத்து சரிகா ஷா 1998ல் பலியான பின்னர் தான் சட்டம் தீவிரமானது

  சத்ரபதி சிவாஜி நிலையத்தை விட்டு தாஜ் விடுதியில் ஊடகங்கள் தீவிரவாதத்தை தேடியது சமீபத்திய உதாரணம்

  பின்குறிப்பு : எதற்கு எடுத்தாலும் காவல் துறையை குற்றம் சொல்பவர்கள் பெண்பகடி வழக்கில் காவல் துறையினர் துப்பறிந்த விதத்தை http://www.expressindia.com/news/ie/daily/19980727/20850084.html பாராட்டப்படவில்லை என்பது எனக்கு வருத்தம் தான்

  ReplyDelete
 7. உங்கள் வருகைக்கும் கருத்துச் செறிவுள்ள ஒரு பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி புரூனோ.

  ராகவன் தம்பி

  ReplyDelete