Tuesday, April 17, 2012

தூறல் - சிறிய வடிவில் பெரிய வேலை

இன்று வட இந்திய தொலைக்காட்சி ஊடகத்தில் மம்தா பானர்ஜியின் அமைச்சரவையை சேர்ந்த ஒரு அமைச்சர் தங்கள் கட்சியினருக்கு விடுத்த ஒரு ஆணை அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ் கட்சியின் தொண்டர்களையும் தலைவர்களையும் சமூக ரீதியாக ஒதுக்கி வைக்கவேண்டும் என்று ஒரு கூட்டத்தில் தன்னுடைய கட்சியனருக்கு ஆணை விடுத்திருக்கிறார் அந்த அமைச்சர்.  மார்க்கிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரின் வீடுகளில் திருமண உறவுகளை தொடராதீர்கள் - அவர்களை எங்காவது தேனீர்க் கடைகளில் பார்த்தால் கூடப் பேசாதீர்கள் என்பது போன்ற சில ஆலோசனைகளையும் கொடுத்திருக்கிறார்.  இப்படி ஆளுக்கு ஆள் கிளம்பினால் தொடர்ச்சியாகக் காமெடிக் காட்சிகள் அரசியல் அரங்கில் மேடையேறும் வாய்ப்புக்கள் அதிகமாகும்.

இது ஒருபுறம் இருக்கட்டும்.  இன்னொரு சம்பவம்.  நான் நேரில் பார்த்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய சொந்த ஊரில் இருந்து சில நண்பர்கள் டெல்லி வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் மட்டும் ஒரு கட்சி. மற்ற நால்வர் வேறு ஒரு கட்சி.  இவர்கள் ஐவரும் தங்கள் வியாபார விஷயமாக டெல்லி வந்திருந்தார்கள்.  மொழிப் பிரச்னை இருப்பதால் என்னை அழைத்துக் கொண்டு எல்லா இடத்துக்கும் போனார்கள்.

வேலை எல்லாம் முடிந்ததும் ஒரு மாலைநேரம் ஐவரில் ஒருவர் எங்கள் ஊர் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டுக்குப் போய் அவரை சந்திக்க வேண்டும் என்றார்.  அப்போது அந்த மனிதருடன் எங்கள் ஊர் எம்பி சார்ந்த கட்சி நட்புறவுடன் இருந்தது.  மற்ற நால்வருக்குத்தான் பிரச்னை.  எங்கள் ஊர் எம்பி சார்ந்த கட்சியின் எதிர்க்கட்சியில் இருந்தார்கள் அந்த நால்வரும் சற்றுத் தயங்கினார்கள்.  அன்று மாலை அந்த ஐவரும் அவர்கள் தங்கியிருந்த அறையில் மது அருந்துவதாக திட்டமிட்டு இருந்தார்கள்.  தனியாக இருந்த மனிதர் நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்து விட்டு மது அருந்த அமரலாம் என்று சொல்லி அவர்களையும் இழுத்துச் சென்றார்.  உடன் நானும் இருந்தேன். 

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டு வாசல் வரை சகஜமாகப் பேசிக் கொண்டு வந்த மற்ற நால்வரும் வாசலுக்கு எதிரே இருந்த புல்தரையில் தடாலடியாக உட்கார்ந்து கொண்டார்கள்.  சண்டி மாடுகள் போல அடுத்த அடி எடுத்து வைக்க மறுத்துவிட்டார்கள்.

எம்பியின் தோழமைக் கட்சியைச் சேர்ந்த நண்பரும் நானும் மட்டுமே வீட்டுக்கு உள்ளே போனோம்.  எம்பி என்னைக் கேட்டார்,  மற்ற நாலு பேரும் எங்கே சார்.  அவங்களையும் கூப்பிடுங்க. 

நான் கொஞ்சம் தயங்கினேன்.  மீண்டும் என்னை அழுத்தினார் எம்பி.  கூப்பிட்டு வாங்க சார் பரவாயில்லை.

நான் வெளியே போய் அவர்களை உள்ளே வருமாறு அழைத்தேன்.  “இது டெல்லிதானேப்பா.  இங்கே என்ன அரசியல் வேண்டியிருக்கு?  யாருக்கு என்ன தெரியப்போகுது.  நம்ம ஊர்க்காரருன்னு நினைச்சிக்கிட்டு வந்து பார்த்துட்டு போங்களேன்”.

அவர்கள் பலமாக மறுத்தார்கள்.  “உனக்குத் தெரியாதுண்ணா.  இப்போதான் கட்சியிலே ஏதோ சின்னதா ஒரு பொறுப்பு தருவாங்க போலிருக்கு.  இந்த நேரத்துலே இந்த ஆள் வீட்டுக்குப் போனேன்னு எவனாவது மேலிடத்துலே போட்டுக்குடுத்துட்டா பத்து வருஷமா காத்துக்கிட்டு இருந்தது வீணாயிடும்.  வேணாம்னா.  நாங்க இங்கேயே இருக்கோம்” என்றார்கள்.

உள்ளே போய் எம்பியிடம் விஷயத்தை சொன்னேன்.  அவர் சிரித்துக் கொண்டே என்னை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.  அவர்களிடம் நெருங்கியதும் ஏதோ தன்னைத் தின்ன வரும் மாயமிருகத்தைப் பார்த்து மிரண்டது போல புல்தரையில் இருந்து எழுந்து ஓடப் பார்த்தார்கள்.  அவர்களைக் கெஞ்சிக் கூத்தாடி உட்கார வைத்தோம்.

“உள்ளே வந்து டீ காப்பியாவது சாப்பிடுங்கப்பா.  கட்சி எல்லாம் ஊர்லே தான்.  உங்களோடு எனக்கு என்ன பிரச்னை இருக்கு.  உள்ளே வாங்கய்யா” என்று எம்பி அவர்களை அழைத்தார்.  அவர்கள் பிடிவாதமாக மறுத்து விட்டார்கள்.  உள்ளே சென்ற நண்பர் திரும்பி வரும்வரை அந்தப் புல்தரையிலேயே காத்திருந்தார்கள்.

இது அரசியல் மட்டத்தில் நடப்பது.  இதற்கு சற்றும் குறையாமல் தமிழ்நாட்டின்   பத்திரிகை உலகின் ஜாம்பவான்கள் மடி ஆச்சாரங்களை சாங்கோபாங்கமாகக் கடைப்பிடிக்கிறார்கள்.  தமிழகத்தின் தமிழ் பத்திரிகை கும்பல் கலாச்சாரம் வேறு எங்கும் காண முடியாத குணாதிசயம். 

இந்த விநோதமான சூழலில் தூறல் சிறுபத்திரிகையின் தலையங்கத்தில் (ஜனவரி 2012) சிறுகதைகளை ஆர்வத்துடன் வெளியிடும் உயிர்மெய், கல்குதிரை, கணையாழி போன்ற இதழ்களை மனதார வாழ்த்தியிருக்கிறார் ஆசிரியர்.  நேர்த்தியான அச்சுடன் வெளிவந்து கொண்டிருந்த யுகமாயினி இதழ் நின்று போனது வருத்தம் தருகிறது.  இருப்பினும் மீண்டும் வரும் என்று நம்புகிறேன் - என்று தன் நம்பிக்கையைத் தெரிவித்து இருக்கிறார்.

ஒரு பத்திரிகை நின்று போனால் இன்னொரு பத்திரிகை பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடும் தமிழின் இதழியல் சூழலில் தூறல் ஆசிரியரின் மனவிசாலம் மனதைக் கவருகிறது.

மணல்வீடு வெளியீடான அருங்கூத்து என்னும் ஒரு அரிய நூலைப் பற்றிய விமர்சனத்தை “சுயத்தை இழக்காத கலைஞனின் ஆளுமை” என்னும்  தலைப்பில் சூர்ய நிலா எழுதியிருக்கிறார்.  ஒரு சிறிய அளவுள்ள இதழில் வெறும் ஒன்றரை பக்கத்தில் இத்தனை தெளிவாக ஒரு நூல் மதிப்புரையை எழுத முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் சூர்ய நிலா.  தவசிக் கருப்புசாமி (நம்ம ஹரிகிருஷ்ணனுங்களா?)  தொகுத்து இருக்கும் பாங்கினை மனம் திறந்து பாராட்டி இருக்கிறார் மதிப்புரையாளர்.

அதேபோல, இன்னொரு நல்ல சிறிய மதிப்புரை - இரா.பிரபாகர் எழுதியிருக்கிறார்.  முனைவர் பி.தமிழகன் தொகுத்து வெளியிட்ட வழக்குச் சொல்லகராதி - ஒரு பார்வை என்னும் தலைப்பில் ஒரு சிறிய ஆனால் விரிவான மதிப்புரையை வழங்கியிருக்கிறார்.  வட்டாரம் சார்ந்து எழுதப்படும் படைப்புக்களைப் புரிந்து கொள்வதற்கு வழக்கு அகரதியின் தேவை அவசியமாகிறது என்னும் ஒற்றைக் கருத்தை மட்டும் கொண்டு வட்டார அகராதியை அணுகுவது சரியாகாது.  மொழியியல் சார்ந்த ஆய்வை வழக்கு மொழியை விடுத்து மேற்கொள்ள முடியாது.  அவ்வாறு விடுப்பின் அது ஆய்வாகாது.  ஊர்த்தோறும் பாஷை வேறு என்னும் மரபு மொழி காலந்தோறும் பாஷை வேறு என்று சொல்லும் அளவுக்கு மாற்றம் அடைந்து வருகிறது.  எனவே அந்தந்தக் காலத்தில் வழக்குச் சொற்களைப் பதிவு செய்வது காலத்தின் கட்டாயம் என்று அழுத்தமாகக் கூறுகிறார் பிரபாகர். 

நாவல் குமாரகேசனின் சிற்பக்கூடம் என்ற சிறுகதை ஒன்றையும் தூறல் வெளியிட்டிருக்கிறது.  கிடைத்த இடத்தை மிகவும் சாதுரியமாகப் பயன்படுத்தியிருக்கும் பாங்கு மகிழச்சி அளிக்கிறது.  குமாரகேசன் எழுதிய ஓரிரு சிறுகதைகளை வடக்கு வாசல் இதழில் பிரசுரித்து இருக்கிறேன்.  அவருடைய இன்னோரு கதை பிரசுரத்துக்கு எங்களிடம் தயாராக இருக்கிறது.  குமாரகேசன் சிறுகதைகளில் ஒரு விசேஷ அம்சத்தைக் கவனிக்க முடிகிறது.  அவருடைய சிறுகதையின் வார்த்தைகள் மிகவும் சுருக்கமாக சிக்கனமாக இருக்கின்றன.  வார்த்தைகளில் ஜிலேபி பிழிகின்ற வம்பெல்லாம் இவரிடம் கிடையாது.  எல்லாம் நேரடியான வார்த்தைகள்.  சிறு சிறு வார்த்தைகளாக ஒரு தேர்ந்த தையல் கலைஞனால் நேர்த்தியாகக் கத்தரிக்கப்பட்ட பட்டுத்துணி போன்ற வார்த்தை அடுக்குகள் குமாரகேசனின் தனிச்சிறப்பு.  அம்சப்ரியா, லக்ஷ்மி மணிவண்ணன் போன்ற நல்ல கவிஞர்களின் நல்ல கவிதைகள் இதழின் கவிதைப் பக்கங்களை அலங்கரிக்கின்றன. 

இந்த இதழில் வெளிவந்த விக்ரமாதித்யன், இரா.கமலக்கண்ணன் மற்றும் அன்பாதவன் ஆகியோரின்  கவிதைகளை என்னுடைய வலைத்தளத்தில் சமீபத்தில் வாசித்த நல்ல கவிதைகள் என்னும் தலைப்பில் பதிவேற்றி இருக்கிறேன்.

தீபம் இதழில் 1966ல் வெளிவந்த “நானும் என் எழுத்தும்” என்னும் தலைப்பிலான கி.ராவின் மிக அருமையான, பலமுறை எல்லோராலும் வாசித்து நேசிக்கப்பட்ட கட்டுரையை மீள்பிரசுரம் செய்திருக்கிறார்கள். 

பெருமாள் முருகனின் துன்பத்தின் அடுக்கு என்னும் தலைப்பில் மிகவும் சுவாரசியமான கட்டுரை ஒன்றும் இந்த இதழில் இடம் பெற்றிருக்கிறது.  பெருமாள் முருகனுக்கே உரிய எளிய உரைநடையில், நேரில் யாரோ அமர்ந்து உரையாடுவது போன்ற பாவனையில் இந்தக் கட்டுரை மன அடுக்குகளில் மிகவும் நைச்சியமாக இடம் பிடித்து கொள்கிறது.  பாடல்களில் உள்ள கவிநயங்களுடன் தன்னுடைய சுய அனுபவங்களையும் இழைத்து இழைத்து இவர் வழங்கியிருக்கும் பாணி வாசிப்பின் சுவையைக் கூட்டுகிறது.

மொத்தத்தில் வடிவத்தில் மட்டுமே சிறு பத்திரிகையாக வந்திருக்கும் தூறல்-10 இதழ் உள்ளடக்கத்தில் தனக்குள் கடலாக விரிந்து பெருகும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறது. மைய அரசின், இந்திய மொழிகள் மையத்தின் நிதி உதவியுடன் இந்த இதழ் வெளியிடப்படுகிறது.

ஆசிரியர் சக்தியூர் கோவிந்தனின் அயராத உழைப்புக்கு சாட்சியமாக தூறல் நம்மை ரம்மியமாக நனைத்துச் செல்கிறது.


தூறல்
இதழ் எண்-10
இலக்கியக் காலாண்டிதழ்
சந்தியூர் அஞ்சல்
மல்லூர் வழி
சேலம் மாவட்டம்-636 203,
govimallur@gmail.com
9894640464
8124626781
தனி இதழ்-ரூ.10
ஆண்டுச் சந்தா-ரூ.50

2 comments:

 1. தூறல் இதழ் குறித்த தங்கள் பதிவு அருமை. அதில் வந்த மூன்று கவிதைகளையும் வாசித்தேன். அவையும் நன்றாக இருந்தது. பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 2. தூறல் பற்றிய பதிவு சிறப்பாக இருந்தது மிக்க நன்றி
  நந்தினி மருதம்
  நியூயார்க்
  2012-சூன் 25

  ReplyDelete