Thursday, April 5, 2012

புன்னகை - இருமாத இதழ்


ஏற்கனவே பல இடங்களில் சொல்லி இருப்பது போல, எழுதுவதை விட படித்துக் கொண்டு இருப்பது ரொம்பவும் பிடித்து இருக்கிறது. எதையாவது எழுதலாம் என்று உட்கார்ந்தால் உண்மையாகவே நெட்டி முறிக்கிறது. எழுதுவதற்கு என்று உட்காருவதே பிரம்மப் பிரயத்தனமாக இருக்கிறது.

கணிணியில் உட்கார்ந்தால் மின்னஞ்சல்களை மீண்டும் திருப்பித் திருப்பிப் பார்த்து ஏதாவது காமாசோமா என்று பதில் எழுதி, கண்ணுக்கும் கவனத்துக்கும் தென்படும் சில இணையதளங்களைப் படிப்பதில் நேரம் கழிகிறது. புத்தகங்களை விற்கும் இணையதளங்களுக்கு சென்று சொத்தை அழிக்கின்ற காரியம் இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கின்றன. நான்தான் கிறுக்கு என்று நினைத்தேன். நான் சந்தித்த அநேக நண்பர்கள் flipkart போன்ற தளங்களுக்கு அடிமை ஆகியிருக்கிறார்கள்.

இணையப் புத்தக சந்தையில் அலைவது, இசை கேட்பது போன்ற வேலைகளுக்கு இடையில் சில எழுத்தாளர்களின் பிரத்தியேக தளங்கள் நல்ல பொழுது போக்குத் தளங்களாக அமைகின்றன.

அது சரி. பைத்தியங்களை வேடிக்கை பார்க்க யாருக்குத்தான் சுவாரசியம் இருக்காது?

இந்தப் பைத்தியங்களை வேடிக்கை பார்ப்பது, ஒரு பைத்தியம் இன்னொரு பைத்தியத்துக்கு விடுக்கும் சவால்கள், கூட்டம் சேர்த்துக் கொள்ளுதல், ரசிகர் மன்ற மோதல்கள் இப்போல்லாம் நாம் இணையத்தில் இருக்கும் அதிக நேரத்தைத் தின்று விடுகின்றன.

இந்தப் பைத்தியங்களை வேடிக்கை பார்க்கும் கழிந்த நேரங்களில், அச்சடித்த புத்தகங்களைப் படிப்பது இப்போது எல்லாம் ரொம்பவும் சுவாரசியம் அளிக்கிறது.

பலநேரங்களில் வேலைகளை விட்டு வெறுமனே உட்கார்ந்து படித்துக் கொண்டு இருப்பது மிகவும் பிடித்து இருக்கிறது. இந்தப் பழக்கம் கொஞ்ச நாட்களுக்கு இருக்கும்.

நட்பிலும் தொழில் தொடர்புகளாலும் நிறைய புத்தகங்கள் படிக்கக் கிடைக்கின்றன. எனக்கு வரும் நூல்கள் அனைத்தையும் ஏதாவது செய்து படித்து விடுகிறேன். படிக்காமல் இருப்பது இல்லை. எப்படி இருந்தாலும் படித்து விடுகிறேன். அன்பை சுமந்து வரும் நூல்களை ஒதுக்கி வைக்க மனதில்லை.

அவற்றைப் பற்றி எங்காவது எழுதலாம் என்று உட்காரும்போது தான் பெரும் அவஸ்தை ஆகிப் போகிறது. எழுதுகிற காரியம் ரொம்பவே கடினமானதாகத் தோன்றுகிறது.

ஒரு சிலர் ஐந்தாறு வரிகளில் டகால்டி அடித்து கூட்டம் சேர்த்துக் கொண்டிருக்க சிலரெல்லாம் மாய்ந்து மாய்ந்து பக்கம் பக்கங்களாக எப்படி எழுதிக் குவிக்கிறார்கள். இது எல்லாம் எப்படி சாத்தியமாகின்றன என்பது ரொம்பவே ஆச்சரியமாக இருக்கிறது.

என்னதான் வெட்டி ஒட்டினாலும் அதற்கென்று தனி நேரம் - தேடுதலுக்கு, ஒட்டலுக்கு, வெட்டலுக்கு என்று நேரம் வேண்டாமா? அதற்காக மெனக்கிட வேண்டாமா?

இப்படி சிலர் வாசகக் கும்பலை சேர்த்துக் கொண்டிருக்க, உண்மையான இலக்கிய அக்கறையுடன் தாங்கள் நம்புகிறவற்றை மிகவும் நேர்மையாக தெளிவாக முன்வைக்கும் சில முயற்சிகளும் தமிழில் தொடர்ந்து கொண்டேதான் வருகின்றன.  

அவற்றில் ஆனைமலையில் இருந்து வெளிவரும் ‘புன்னகை’ இதழும் ஒன்று. இப்போது என் கையில் இருப்பது 68வது இதழ். இரு மாதங்களுக்கு ஒருமுறை புன்னகை பூக்கிறார்கள். ஆசிரியர் குழுவில் க.அம்சப்ரியா மற்றும் செ.ரமேஷ் குமார். வடக்கு வாசல் இதழ் துவக்கிய நாளில் இருந்து அநேகமாக இந்த புன்னகை இதழ்களை பெற்று வருகிறேன். சில நேரங்களில் கிடைக்காமலும் இருந்திருக்கின்றன. பல நேரங்களில் கிடைத்தும் என் கவனத்துக்கு வராமல் போயிருக்கின்றன.

இந்த 68வது இதழில் நான் பார்த்த ஒரு விசேஷம் - ஒரு கவிஞனுக்கு என்று அநேக பக்கங்களை ஒதுக்கி அக்கவிஞனின் பல படைப்புக்களை இந்தச் சிறிய அளவுள்ள ஒரு இதழில் வெகுவாகக் கொடுத்து இருப்பது அந்தக் கவிஞனுக்கு இவர்கள் அளிக்கும் ஒரு தனிச்சிறப்பு.

பொ.செந்திலரசு கவிதைகளுக்கு நிறைய பக்கங்களை ஒதுக்கி இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் முகப்பு அட்டையில் கவிஞரின் புகைப்படத்துடன் (வரைந்தது போன்ற ஒல்லி மீசையுடன்) பொ.செந்திலரசு சிறப்பிதழ் என்றே வெளியிடப்பட்டு உள்ளது.

உள் அட்டையில் ஒரு குட்டியான தலையங்கம். லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள், பௌத்த சமண, வைணவ சைவக் கோட்பாடுகள், மொராவியக் கவிஞர்கள், போன்ற வழக்கமான சிறுபத்திரிகை உட்டாலங்கடிகள் இல்லாமல் நேரடியாக குழந்தைகள் பற்றிய அக்கறையைக் காட்டும் ஒரு தலையங்கம் நிறைவாக இருக்கிறது.

குழந்தைகளிடம் இருந்து சீரிய கதைகளையும் கற்பனையாற்றலையும் பிடுங்கிக் கொண்டு, வெறுமனே அச்சடித்த காகிதங்களை பாடத்திட்டங்களெனத் திணித்து அவர்களை மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக மாற்றினால் சமூகக் குற்றங்கள் பெருகிவிடும் என்பது போன்ற எச்சரிக்கையும், குழந்தகளைப் புறக்கணித்து விட்டு எழுதுகின்ற இலக்கியங்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை - குழந்தைகளுக்கான இலக்கியம் மலரட்டும்.., குழந்தைகளே எக்காலத்திற்குமான கவிதைகள் ஆகட்டும் என்பது போன்ற வரிகள் தலையங்கத்தின் மேன்மையை உயர்த்துகின்றன.

30 பக்க அளவுள்ள புன்னகை இதழில் சுமார் 17 பக்கங்கள் அதாவது பாதிக்கும் மேல் சிறப்பு செய்யப்படும் கவிஞரின் படைப்புக்களை வெளியிட்டு இருக்கிறார்கள். 

இந்தச் சிறப்பிதழில் வந்துள்ள பொ.செந்திலரசுவின் ஏறத்தாழ பன்னிரெண்டு கவிதைகளில் எனக்குப் பிடித்த ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ரொம்ப நாள் கழித்து ஒரு கவிதையைப் படித்த அனுபவத்தை இந்தக் கவிதை எனக்கு அளித்தது என்று சொல்லலாம்.

நதியை வரைபவள்

என்னை உன்னிடம் தோற்றவளை
யாருக்குச் சுடர்த்துகிறாய்
சிற்றகல் நுனியில்
ஒரு நீர்த்துளி கொண்டு...?

••

பகலை உன்னிடம் தோற்கிறேன்
இரவில்
கையோடழைத்து வருகிறாய் ஒரு கடலை.

பகலை இரவெனவும்
இரவைப் பகலெனவும்
மலர்த்தும் மாயமறிந்த
உன்னிதழ் சழிப்பு
வாரியிறைக்கிற தென்னை கிளிஞ்சல்களென.

உன்திசை விழுந்த
தொடுவானத்துக்கப்பால்
வாய்த்த முத்தத்தில்
உயிர்துக் களைத்து
உப்புக் கம்பளம் விரித்தொரு
மந்திரவாதியைப் பிரதியிக்கும்
மரகதத் தீவிலொதுங்குகிறேன்

விருட்சத்தின் கரங்களில்
சிறைகொண்ட நிலாத்துண்டு
பசியாற போதுமானதாகயிருக்கிறது.

இவ்விரவைத் தின்று செரிக்கும்
தனிமையில்
யேதுமறியா பாய்மரக் கடலை
சிந்தும் ரசத்துளியில்
பென்சில்முனைப் பார்வையைக் கூர் தீட்டி
நீயொரு கோட்டோவியக்காரனின்
நதியை வரைந்து முடிக்கிறாய்

கடலின் நினைவில்
இவ்விரவை நனைத்துக் கொண்டிருக்கிறது
துளி ஒளி.

இந்தக் கவிதையின் எளிமை உங்களுக்கும் கண்டிப்பாகப் பிடித்து இருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. இந்த மனிதர் வார்த்தைகளை எடுத்து எடுத்துப் பின்னர் பலவற்றைத் தூக்கி எறிந்து பெருமூச்சுடன் கவிதையின் ஒவ்வொரு பத்தியின் இடையிலும் பெருத்த மௌனத்தைத் தேக்கி நிறுத்துவதை அவதானிக்க முடிகிறது - இந்தக் கவிதையின் வாசிப்பு தொடர்ச்சியாக ஓரிரு தடவைகளுக்கு மேல் நீளும்போது.

பென்சில்முனைப் பார்வையைக் கூர்தீட்டி நீயொரு கோட்டோவியக் காரனின் நதியை வரைந்து முடிக்கிறாய் என்று பத்தி முடியும் இடத்தில் துரத்தும் மௌனம் நீண்ட நேரம் மனதில் திடமாகத் தங்கி நிற்பதை உணர முடிகிறது. கடலின் நினைவில் இவ்விரவை நனைத்துக் கொண்டிருக்கிறது துளி ஒளி என்னும் முத்தாய்ப்பு இந்த அமைதியைக் கலைத்து மீண்டும் ஒரு படிமத்துக்கு இழுத்துச் சென்று மீண்டும் அடர்த்தியான ஒரு மௌனத்தை மனத்துக்குள் கவிழ்த்து விடுகிறது.

லாசராவின் உரைநடையைப் படிக்கும் லாகிரியின் சாயல் இந்தக் கவிதை வரிகளைப் படிக்கும்போது கிடைக்கின்றது. ஏனோ இந்த ஒப்பிடலைத் தவிர்க்க முடியவில்லை. பொதுவாகவே செந்திலரசுவின் கவிதைகளின் பொதுத்தன்மையாக அமைந்தவை இந்த மயக்கும் தன்மைதானோ என்று தோன்றுகிறது. யாராவது கவிதை இயலை ஆழ்ந்து பண்டிதர்கள்தான் இதை ஊர்ஜிதப்படுத்த வேண்டும். என்னைப் போன்ற அறைகுறைகள் தூரத்தில் இருந்து ரசித்து விட்டு ஓடிப்போகின்ற ரகம் மட்டுமே.


சரி. விஷயத்துக்கு வரலாம்.

ஏறத்தாழ ஒரு கவிதைத் தொகுப்பு தரும் அனுபவத்தை இதுபோன்ற சிற்றிதழ்களில் வெளிவரும் கவிஞர்களின் சிறப்புப் பக்கங்கள் தந்து விடுகின்றன. இவை போன்ற நல்ல கவிதைகளை வெளியிட்டு கவிஞனை சிறப்பு செய்வதோடு நிற்காமல் தன்னுடைய ஜீவிதத்தையும் சிறப்பித்துக் கொண்டிருக்கிறது புன்னகை என்று எவ்விதத் தயக்கமும் இல்லாமல் சொல்வதில் மகிழ்ச்சி கிடைக்கிறது.

இந்தச் சிறிய வெளியீட்டில் வேறு என்ன எல்லாம் செய்யலாம் என்பதற்கு உதாரணம், ஒரு நல்ல கவிதைத் தொகுப்பு பற்றிய நல்ல மதிப்பீட்டை கனகச்சிதத்துடன் வெளியிட்டு இருக்கின்ற ஜாலத்தைச் சொல்லலாம்.  அன்பாதவனின் ‘கைபேசிக் கடவுளின் கோட்டோவியங்களை முன்னிறுத்தி... கவிதைத் தொகுப்பு குறித்த லதா ராமகிருஷ்ணனின் மதிப்புரை இந்தத் தொகுப்பை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டி விடுகிறது. கிடைத்த மூன்று குட்டிப் பக்கங்களில் இந்தத் தொகுப்பைப் பற்றிய ஒரு தரமான அறிமுகம் - அலசல் என நேர்த்தியாக அமைந்திருக்கிறது.

திலகபாமா, இலக்குமிகுமாரன் ஞானதிரவியம், ந.பெரியசாமி, சூர்யநிலா, பெ.மகா அமலன், முத்துச்செல்வன் போன்று இன்று இணையத்திலும் அச்சு இதழ்களிலும் தொடர்ச்சியாக படைப்பு இயக்கத்தில் பங்கு கொள்ளும் கவிஞர்களின் படைப்புக்களையும் தாங்கி வெளிவந்து இருக்கிறது மார்ச்-ஏப்ரல் மாதங்களின் புன்னகை இருமாத இதழ்.

ஒரு குட்டி இதழில் நிறைய காரியங்களை நிறைவாக செய்யலாம் என்னும் நம்பிக்கையை அளிக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது புன்னகை இதழ்.


புன்னகை
இருமாத இதழ்
68 பொள்ளாச்சி சாலை
ஆனைமலை-642 104
ஆசிரியர் குழு
க.அம்சப்ரியா (9095507547)
செ.ரமேஷ்குமார்(9865301965)
மின்னஞ்சல் - punnagaikavi@gmail.com
இணையதளம் - punnagai.keetru.com

No comments:

Post a Comment