Monday, July 15, 2013

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் பொருளாளர் திரு.பி.கன்னியப்பன் அவர்களின் எதிர்வினை.

தில்லித் தமிழ்ச் சங்க வரலாற்றிலேயே,  ( நான் இருமுறை பொருளாளராக இருந்த   காலம்  உட்பட )  எந்த செயலருக்கும், தலைவருக்கும் தங்கள் நடவடிக்கைகளை திறந்த மனதுடன் ( அதாவது வெளிப்படைத் தன்மையோடு  (- with transparecy ) எந்த உறுப்பினர்களுடனும் பகிர்ந்து கொண்டதாக வரலாறே இல்லை.  அப்படி இருக்க நீங்கள் மட்டும் இப்போது அப்படி அவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் உள்ளது ? 


நான் முதல் முறை பதவிக்கு வரும் முன்பாக நடந்த ஒரு பேரவைக் கூட்டத்தில் - சங்கத்தின் செயல்பாடுகள், மாதக் கணக்கு வழக்குகள், எல்லா உறுப்பினர் விபரங்கள் ( இது தேர்தல் வாக்காளர் பட்டியலுக்கு சமமானது ) - ஆகியவைகள் முதல் கட்டமாக சங்க வரலாற்றில் முதல் முறையாக வலயத்தில்  ஏற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தேன்.  நான் பதவி ஏற்ற பிறகு  அத்தனை விபரங்களும் கணணி  மயமாக்கப்பட்டும் - அதனை செய்ய விட்டார்களா? உரிய பயனர்  மற்றும் கடவுச் சொல்லுடன்.  சிதறிக் கிடந்த ( அதாவது பல முறை செயலராக இருந்து  தனக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும், தன உதவியின்றி பிறர் வாக்காளர் விபரம் பெறக் கூடாது என்று ரகசியமாக வைத்திருந்த  திரு. கிருஷ்ணமூர்த்தியின்) உறுப்பினர் விபரத்தைத் தரம் பிரித்து- அதாவது சாதாரண உறுப்பினர், அசோசியட் உறுப்பினர், ஆயுள் உறுப்பினர், Patron உறுப்பினர் என்பதையெல்லாம் தரம் கண்டு அவைகளைப் பிரித்து முறையே - அடையாளக் குறியாக உறுப்பினர் எண்ணுக்கு முன்      O, A, L and P என்று குறிப்பிட்டு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையையும் வழங்கினோம்.  இன்று வரை அதுதான், நான் வகுத்த அந்த முறை தான் அடிப்படையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. 


நான் இருந்த கால கட்டத்தில் தான் சங்க கணக்கு முறைகள் சரியாகப் பின் பற்றப்பட்டு - கணிணி மூலம் வரவு செலவு, வங்கி இருப்பு விபரங்கள் முறையாக ஒவ்வொரு மாதாந்திரக் கூட்டத்திலும் சமர்ப்பிக்கப் பட்டு நிர்வாகக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.  ஒவ்வொரு விழாவுக்கும் தனியாக ஒப்புதல் பெற்ற அளவே செலவும் செய்யப் பட்டது.  அதிக செலவு பின்னர் தனி ஒப்புதல் பெற்ற பிறகே செய்யப் பட்டது.  இந்த நடை முறைகளை இப்போதுள்ளவர்கள் பின் பற்றினார்களா என்றால் அது இல்லவே இல்லை.  பின், எப்படி அதை அவர்கள் வலையேற்றம் செய்வார்கள்? வரவு செலவுக் கணக்கும் இருப்பு நிலைக் குறிப்பும்  நிதி ஆண்டு முடிந்த உடனேயே தயார் செய்யப்பட்டு , தணிக்கை செய்யப்பட்டு, பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற - தயார் நிலையில் வைக்கப்பட்டது.  அதெல்லாம் கடந்த காலம்.  கலையரங்கம் உருவான காலம்  தான் சங்க வரலாற்றிலேயே வரவும் செலவுமாக அதிகப் பணம் புழங்கிய காலம்.  கலையரங்கப்  பணியும் நன்முறையில் முடிந்து கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த எனது முதல் பதவிக் கால நிதி நிர்வாகம் காரணமாகவே நான் மறு முறையும் பொருளாளராக இரண்டாம் முறை பதவி ஏற்று , முழுப் பதவிக் காலத்தையும் முடிக்காமல் எனது அரசுப் பணி   மாற்றம் காரணமாக பெங்களூர் வந்த பின்பு -

தமிழ் சங்கத்தின் நிதி நிர்வாகமே பாழாய்ப் போய்விட்டது என்பது தான் நிதர்சனமான உண்மை.  நான் வரும் போது சுமார் ஒரு  கோடி ரூபாய்க்கும் மேலாக வைப்பு நிதியில் வைத்து விட்டுத் தான் வந்தேன்.  இதனை நான் பெருமைக்காகச் சொல்லவில்லை.  நடந்த , உண்மை நிகழ்வுகளைத்தான் சொல்லியிருக்கிறேன்.

பின் வந்த செயலர்களும், பொருளாளர்களும்   ஏன் தலைவரோ கூட நிதி நிர்வாகத்தையோ, பொது நிர்வாக செயல்பாடுகளையோ ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை என்பது தெளிவு.    பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை செயலர் நிறைவேற்றவில்லை என்றால் தலைவர் என்ன செய்திருக்க  வேண்டும்?  ஒன்று கண்டித்திருக்க வேண்டும்.  அல்லது அவர் பதவியை விட்டு விலகி இருக்க வேண்டும்.  இல்லை மறுபடியும் ஒரு அவசர பேரவையைக் கூட்டி, செயலரின் இயலாமயக் கூறி, ஒரு அலுவலகத் தீர்மானத்துடன் அவரைப் பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும்.  இவற்றில் ஏதாவது ஒன்றாவது நிகழ்ந்ததா?  இல்லை.  அந்த செயலரை பதவியில் நீடிக்கச் செய்ததில் தலைவர் பேரு தவறு செய்துள்ளார். இது    உங்கள் மடல் செயற்குழுவில் வைத்து விவாதிக்கப் பட்டதா? அப்படியானால் அதன் முடிவு உங்களுக்கு தெரியப்படுத்தப் படுத்ததா? இல்லையே?  அப்படியானால் உங்கள் மடல் குப்பைக் கூடைக்குப் போனதாகத்தான் அர்த்தம்.

உறுப்பினர்களை  உதாசீனப் படுத்தும் ஒரு அமைப்பாகவே தமிழ் சங்கம்  முற்றிலும் மாறி விட்டது.  செயற்குழுவில் உள்ள எவரும், எந்த உறுப்பினர்களின் வேண்டுதலையும் நிறைவேற்ற இல்லை. மேடையில் பல முக்கிய பிரமுகர்களிடம், நெருக்கமாக உள்ளது போல் காட்டிக் கொள்ளவும் , பதாகைகளில் முகம் காட்டவும்,   புகைப் படம் எடுத்துக் கொள்ளவுமே   தானே தவிர - வேறு ஒன்றுக்குமே இல்லை.  இது வரை என்னிடம் தமிழ் சங்கத்தில் நான் இருந்ததற்கான எந்த வித ஆதாரமும், ஒரு புகைப்படம் கூட இல்லை, நான் அதை, எதையும் வைத்துக் கொள்ளவுமில்லை.  அது எனக்குத் தேவையுமில்லை.  நான் செய்தித் தாளில் கலைஞரிடம் ( இந்து நாளிதழ்) ரூ. பத்து லட்சம் காசோலை வாங்கிய ஒரு படம் தவிர நான் எங்குமேயில்லை. என் வேலையெல்லாம் ( நிதி சம்பந்தப்பட்ட) திரை மறைவில் தான்.  அதே மாதிரி யாரிடமும், சங்கப் பணத்தை முன் பணமாகக் கொடுத்ததும் கிடையாது.  தணிக்கை செய்தவரே இதனை திறந்த மனதுடன் பேரவையில்  பாராட்டினார்.

உங்கள்  மடலில் கண்ட அத்தனை கூற்றும் உண்மையே. 

அன்புடன், 


(  P. KANNIYAPPAN ),
உறுப்பினர் எண்: P-1116

1 comment:

  1. நூற்றுக் கணக்கான, உயிருடன் இருந்த, மூத்த சங்க உறுப்பினர்களையே இந்த சங்க நிர்வாகம் தூக்கி வெளியே எறிந்து அவர்களுக்கு ஓட்டுரிமை கூட இல்லாமல் செய்தது. (எனக்குக் கூட). நடந்து முடிந்த, கடந்த பேரவைத் தேர்தலிலும், அவை நடவடிக்கையிலும் நான் பங்கு பெற வழக்கு மன்றம் வரையிலும் நான் செல்ல வேண்டியதாயிற்று. பின்னர் கோர்ட்டில் அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின்படியும், அவர்கள் அளித்த தீர்ப்பின் படியும் தான் எனக்கும், மற்றும் சில நீக்கப்பட்டவர்களுக்கும், ஓட்டளிக்க உரிமை வந்தது. இப்படி, நாம் ஒவ்வொன்றிலும் போராடவேண்டியதாகவே உள்ளது. சமூக மற்றும் பொது சேவை, தமிழின அபிவிருத்தி என்பன செய்ய வருபவர்கள் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இவர்களே முன் மாதிரி மற்றும் உதாரண புருஷர்கள் என்பதை அவர்கள் உறுதிப் படுத்திக் கொள்ளக் கூடாது. புதிய அடையாள அட்டை வழங்க புகைப்படமும் மற்றும் சகலமும் கொடுத்தும் இன்னமும் அதனை வழங்கவில்லை. உரிய இயந்திரத்தின் மூலம் ஐந்து நிமிடங்களிலேயே ஒரு அட்டைய வழங்க இயலும். இதுவரை வழங்காததில் உள்ள சூட்சுமம் என்னவோ??

    ReplyDelete