Wednesday, February 26, 2014

கபாலி கான்

எங்கள் வீட்டு வாசலில் எனக்காக எப்போதும் காத்திருக்கும் கபாலி கான் டெல்லி முனிசிபாலிடி ஆட்களால் நேற்று மாலை பிடித்துச் செல்லப்பட்டது என்ற தகவலை கார் துடைக்கும் பையன் காலையில் சொன்ன போது மனதுக்குக் கொஞ்சம் கனமாக இருந்தது.

பொதுவாக நாய்களுக்கு ஆங்கிலப் பெயர்களை வைப்பதை எப்போதும் எதிர்ப்பவன் நான். சில ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டுக்கு தெருவில் இருந்து என் மகள் எடுத்து வந்து இப்போது எங்கள் வீட்டில் கம்பீரமாக வளர்ந்து வரும் ரஸ்டிக்கு அப்படி ஒரு பெயரை வைக்கும் சுதந்திரம் இல்லை எனக்கு. அந்த சுதந்திரத்தை மகள்கள் எடுத்துக் கொண்டார்கள். 

என் வீட்டு ரஸ்டி சில நாள் குட்டியாக இருந்தபோது அதற்கு முனியாண்டி என்று பெயர் வைத்தேன். என் அம்மாவின் அப்பா குப்புராவ் பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் கிருஷ்ணகிரியில் என்னுடன் பிறந்தவர்கள் என்னைத் தொலைத்து விடுவார்கள். அதனால் பொதுவாக எங்கள் வீட்டுக் காவல் தெய்வமாக முனியாண்டி என்று இருக்கட்டுமே என்று யோசித்தேன். சில நாட்கள் கழித்து அது காலைத்தூக்காமல் அகட்டி சிறுநீர் கழித்ததும் தான் தெரிந்தது. அதற்கு முனியாண்டி என்று பெயர் வைக்க முடியாது என்று. முனியம்மா என்ற பெயர் நன்றாக இருக்காது. காமாட்சி, விசாலட்சி என்று நல்ல அம்மன் பெயர் சூட்டலாம் என்று நினைத்தேன். ஆனால் அதுபோன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் முடிவெடுக்கும் சுதந்திரம் எங்கள் வீட்டில் பொதுவாக எனக்குத் தருவதில்லை. அதனால் என் மகள் ரஸ்டி என்று அதற்கு பெயர் வைத்தபோது நான் ஆட்சேபிக்கவில்லை. ஆட்சேபித்து இருந்தாலும் அது ரஸ்டியாகத்தான் இருந்திருக்கும். இப்போதும் இருக்கிறது.

சரி. புதிதாக வந்து சேர்ந்திருக்கும் இதனை எப்படிப் பெயர் இல்லாமல் கூட வைத்துக் கொள்வது? வீட்டுக்கு வெளியில் இருந்தாலும் ஒரு பெயர் வேண்டுமே. எந்த வகையிலும் அதற்கோ என் மகள்களுக்கோ மனைவிக்கோ இந்தப் பெயரில் ஆட்சேபம் இருக்காது என்ற தைரியத்தில் வீட்டுக்கு வெளியில் இருந்த இதற்கு கபாலி கான் என்று பெயர் வைத்தேன். எங்கள் வீட்டின் பெங்காலி வேலைக்காரி உட்பட அனைவரும் அதனை கபாலி கான் என்றே அழைக்கத் துவங்கினார்கள். அதுகூட நாங்கள் கபாலி கான் என்று கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கத் துவங்கியது.

சரி. கபாலி கான் விஷயத்துக்கு வருவோம்.

சில மாதங்களுக்கு முன்பு எங்கிருந்தோ இந்த கபாலி கான் எங்கள் பகுதியில் வந்து சேர்ந்தது. என் மகள் பாரதி அமெரிக்கா செல்வதற்கு முன்பு சேர்த்துக் கொண்ட புதிய சுற்றம் அது. அதற்கு பால், ரொட்டி, சப்பாத்தி, முட்டை என்று ஏகமாக சிசுருஷைகள் தொடர்ந்தன. பாரதி கார் தூரத்தில் வரும்போதே மூச்சிரைக்க ஓடிப்போய் திறந்து கொள்ளும் கதவின் இடுக்கில் தன்னுடைய மூக்கை நுழைத்துக் கொள்ளும்.

பிறகு ஒருநாள் எங்கள் மாடிப்படிக்குக் கீழே தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொண்டது கபாலி கான். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆட்சேபிப்பார்கள் என்று குலைநடுங்கிக் கொண்டிருந்தது எனக்கு. ஆனால் மற்ற வீட்டுக்காரர்களும் அதற்கு ரொட்டி, பால் என சேவைகள் தொடரவே கொஞ்சம் தைரியம் வந்தது. நான் இரவு வீட்டுக்குத் திரும்பும்போது ஏதோ ராணுவ வீரன் போல என் கூடவே வந்து இரண்டாம் தளத்தில் இருக்கும் என்னுடைய வீட்டு வாசல் வரை கொண்டு வந்து என்னை விட்டு விட்டு தன்னிடத்துக்குத் திரும்பும். எங்கள் ரஸ்டிக்குத் தெரியாமல் அதற்கு ஏதாவது வாங்கி வருவேன். சிக்கன், ஆட்டுக் கறி என்று எங்கள் ரஸ்டிக்கு வாங்கி வரும் எல்லா சமாச்சாரங்களும் கபாலி கானுக்கு நைவேத்தியம் நடந்த பிறகே மேலே எங்கள் வீட்டுக்குப் போகும்.

பாரதி அமெரிக்கா சென்ற பிறகு சில நாட்கள் மிகவும் துக்கமாக இருப்பது போல முகத்தை வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருந்தது. அவளை எல்லா இடங்களிலும் தேடிக்கொண்டிருந்தது.

இந்த வருடம் டெல்லியில் கொல்லும் குளிர். கபாலி கான் கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் வீட்டுக்குக் கதவுக்கு வெளியில் வந்து இரவில் தூங்கத் தொடங்கியது. நானும் அபிநயாவும் அதற்கு ஒரு ஸ்வெட்டர் அணிவித்தோம். கடுமையான போராட்டத்திற்குப் பிறகு அந்த ஸ்வெட்டரை ஏதோ ஒரு புல்வெளியில் கழற்றி எறிந்து விட்டு மீண்டும் தன் இடம் வந்தது கபாலி கான். எங்கள் ரஸ்டியை காலையிலும் இரவிலும் நாங்கள் வெளியில் அழைத்துச் செல்லும் போது மிகவும் நாகரிமான முறையில் லேசாக புட்டத்தை ஒதுக்கி இடம் விட்டுத் தரும். பிறகு எங்களுடன் அதுவும் ரஸ்டிக்கு இருப்பதைப்போல கற்பனையான ஒரு சங்கிலியை கழுத்தில் அணிந்துகொண்டு என்னைப் பின்தொடரும். 

இரவில் அது தூங்குவதற்காக அருகம்புல்லால் தைக்கப்பட்ட என்னுடைய தியானப் பாயை ஒரு நாள் அதற்கு விரித்தேன். அன்றிலிருந்து அது தன்னுடைய சொத்தாக அந்தப் பாயை அறிவித்துக் கொண்டது. யாரும் அதன் மேல் கை வைக்க முடியாது. மழை வந்து தண்ணீர் மேலிருந்து ஒழுகினால் அந்தப் பாயை வாயில் இழுத்துக் கொண்டு வேறு இடம் நோக்கி அதன் மீது ஏறிப்படுக்கும். அது அந்தப் பாயை அந்தத் தளம் முழுதும் ஈரமற்ற இடத்துக்கு இழுத்துச் செல்லும் அழகே அழகு.

காலையில் நானும் மனைவியும் அலுவலகம் செல்லக் கிளம்பும்போது கார் வரை வந்து வழியனுப்பும். என்னுடைய காரை நான் விற்று விட்டேன். பாரதியின் கார் என்னிடம் இருக்கிறது. இப்போதும் கபாலி கானுக்கு அது பாரதி கார்தான். நான் காரை நிறுத்துவதற்கு முன்பு பாரதிக்கு ஓடி வந்ததுபோலவே விரைவாக ஓடிவந்து கதவுக்குள் முகத்தை நுழைத்துப் பார்த்து விட்டு ஏமாந்துபோய் செல்லும். ஆனாலும் அதன் நம்பிக்கை தளரவில்லை. தினமும் வந்து கொண்டிருந்தது.

கபாலி கான் என்னிடம் ஒன்றும் சொல்லாமல் ஏதோ ஒரு முனிசிபாலிடி வண்டியில் இப்படி ஏறிப் போனது மனதுக்குக் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.

அந்த அருகம்புல் தியானப்பாய் எங்கள் கபாலி கான் வந்து தூங்குவதற்காக அங்கேயே காத்திருக்கிறது.

ஏதாவது அதிசயம் நடந்து எங்கள் கபாலி கான் திரும்பி வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 

அதுவரை அந்தப் பாயை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். பெரிய பொறுப்பு அது.

5 comments:

  1. நெகிழ்வு. வாயில்லா ஜீவன்களிடம் காணப்படும் உணர்வுகள் பலசமயங்களில் பிரமிப்பைத் தருகின்றன.

    ReplyDelete
  2. இது மாதிரி அனுபவங்கள் எனக்கும் உண்டு. வேதனையான அனுபவங்கள். பிடித்துக் கொண்டுபோனவர்களைக் கண்டுபிடித்து, அவர்களிடம் பேசினால் அவர்கள் இதனை விட்டு விடுவார்களே... (ஒரு ஆதங்கத்தில்தான் இப்படித் தோன்றுகிறது)

    ReplyDelete
  3. அருமையான பதிவு. பக்கம் எங்கியிலும் வேடிக்கை ததும்பி வழிகிறது. மிக முக்கியமான பொறுப்பை ஏற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பதிவில் பொதிந்திருக்கும் தூய்மையான அன்பும் மனிதநேயமும் மனதை ஏதோ செய்கிறது !

    எனது வலிப்பூ : saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  5. அருமை அருமை அற்புதமாக எழுதி இருகிறீர்கள்.நகைச்சுவையோடு எழுதி இருக்கிறீர்கள் . லேசான சோகமும் இழையோட முடித்தது அருமை.
    நானும் வீட்டில் வளர்த்த நாய் பற்றிய தொடர் பதிவொன்றை எழுதி இருந்தேன். நேரம் கிடைக்கும்போது படிக்கவும்
    செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!

    ReplyDelete