Friday, February 6, 2015

All are equal and some are More Equal

லாலு பாய் ஒரு வழியாக டெல்லியில் பல ஆண்டுகளாக விடாப்பிடியாக பிடித்து வைத்துக் கொண்டிருந்த அரசு பங்களாவை  சென்ற மாதம் காலி செய்திருக்கிறார் என்று செய்தி வெளியாகி இருக்கிறது.

கடந்த 2004-ம் ஆண்டில்  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ரயில்வே    அமைச்சராகப் பொறுப்பேற்ற போது புது டெல்லியின் 25 துக்ளக் ரோடு என்னும் முகவரியில் உள்ள  இந்த பங்களாவில் அவர்  குடியேறினார்.

கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 
தகுதி இழப்புக்குப் பிறகு விதிமுறைகளின் அடிப்படையில் டெல்லியில் அவர்   அரசு பங்களாவில் தங்க முடியாது     ஆனால் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இவருடைய வாய்க்கு பயந்து அமைச்சரவைக் கூட்டத்தில் வயிற்றெரிச்சலுடன் தீர்மானம் நிறைவேற்றி  ஒரு ஆண்டு காலத்துக்கு  நீட்டிப்பு வழங்கப்பட்டது.  

இறுதியாக 2014 அக்டோபர் வரை இந்த சலுகை முடிவடைந்ததும் அந்த பங்களாவை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பிக் கொண்டிருந்தது மத்திய அரசு.  தன்னுடைய உடல் நலத்தைக் காரணம் காட்டியும் பேரப்பிள்ளைகளின் படிப்பை காரணம் காட்டியும் மேலும் கால அவகாசம் கோரியிருந்தார் லாலு.

இது தொடர்பாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து லாலு கோரிக்கை விடுத்ததாகவும் அந்த வேண்டுகோளை அமைச்சர் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.


தற்போது ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் சுரேஷ் பிரபு பெயரில் அந்த பங்களாவை ஒதுக்குவதற்காக அமைச்சகத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் புதிய அரசு பொறுப்பேற்றதும் ஏற்கனவே டெல்லியில் அரசு பங்களாக்களில் தங்கியிருந்த பல முன்னாள் அமைச்சர்கள் தேர்தலில் தோற்ற பிறகும் எந்த வித பதவியில் இல்லாத வகையில் தங்கள் பங்களாக்களை காலி செய்யாமல் இருக்க அசுர முயற்சிகளை எடுத்து வந்தார்கள்.


உதாரணத்துக்கு முன்னாள் அமைச்சர் அஜித் சிங்  விதிமுறைகளுக்குப் புறம்பாக தனக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை காலி செய்யமாட்டேன் என்று ஒற்றைக்காலில் நின்றார்.  அவருடைய தொண்டரடிப் பொடிகள் கடந்த செப்டம்பர் மாதம் அரசு உத்தரவின் பெயரில் பங்களாவை வலுக்கட்டாயமாக காலி செய்ய முற்பட்ட டெல்லி போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.  தான் தங்கியிருந்த பங்களாவை தன்னுடைய தகப்பனார் சவுத்ரி சரண் சிங் நினைவாலயமாக மாற்ற வேண்டும் என்று அவர் முன்வைத்த கோரிக்கையை அரசு ஏற்க மறுத்துவிட்டது.

அதே போல, முன்னாள் உள்துறை அமைச்சர் பூட்டா சிங் தன்னுடைய அரசு பங்களாவை காலி செய்யாமல் பிடிவாதம் பிடித்து வருகிறார்.  அவருக்கும் பல நோட்டீசுகள் அனுப்பியிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கிறார்கள்.


டெல்லியில் அரசியல்வாதிகள் தங்களுக்கு ஒதுக்கப்படும் அரசு குடியிருப்புகளில் ஒருமுறை குடியேறிவிட்டால் பிறகு அவர்களை காலி செய்வதற்குள் அரசாங்கத்துக்கு தாவு தீர்ந்து விடும்.

இத்தனை ஏன்?  தன்னை நேர்மையின் தூதுவனாக - அவதாரமாக வர்ணித்துக் கொள்ளும் 49 நாள் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் முதலில் அரசு வீடு தனக்கு வேண்டாம் என்றும் சொந்த வீட்டில் குடியிருப்பேன் என்றும் கர்ஜித்தார்.  பிறகு திலக் மார்க் பகுதியில் பார்த்துப் பார்த்து பெரிய பங்களாவாக தேர்ந்தெடுத்து குடியேறினார்.  49 நாள் ஆட்சி முடிந்ததும் வீட்டை காலி செய்ய தயங்கினார்.  டெல்லி அரசு கிட்டத்தட்ட கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள வேண்டியிருந்தது.  பிறகுதான் வீட்டைக் காலி செய்தார்.

பதவி இழந்தாலும் தேர்தலில் தோற்றாலும் அவர்கள் எதற்கும் கவலைப்படுவதில்லை.  நரசிம்மராவ் காலத்தில் பெரும் அழிச்சாட்டியமே நடந்து கொண்டிருந்தது. பல அரசியல்வாதிகளின் புத்திரர்கள் மற்றும் வாரிசுகள் அந்த பங்களாக்களை தங்கள் பெற்றோர்களின் நினைவகங்களாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஒரு சிறிய அறையில் அந்த அரசியல்வாதிகள் பயன்படுத்திய பொருட்களை பெயருக்கு பார்வைக்கு வைத்து விட்டு மீதிப் பகுதியை ஆண்டு கொண்டிருப்பார்கள்.  

பல நினைவகங்களில் அந்த அரசியல் தலைவர்களின் ஆவி கூட எட்டிப்பார்க்குமா என்பதே  சந்தேகம்தான்.

அதே போல சில தலைவர்கள் தங்களுடைய பாதுகாப்பை காரணம் காட்டி டகால்டி அடிப்பார்கள்.  கடந்த அக்டோபர் மாதம் விஷயம் உச்சநீதிமன்றம் வரை சென்று நீதிபதிகள் கரித்துக் கொட்டிய பிறகு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வழிக்கு வருகிறார்கள்.  தகவல் அறியும் சட்டம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு பயந்து தலைவர்களும் இப்போது லேசாக ஜகா வாங்குகிறார்கள்.

பொதுவாக அப்பாவி அரசு ஊழியர்கள், அதுவும் கீழ்நிலையில் இருப்பவர்கள் டெல்லியில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு குடியிருப்பை பதவி ஓய்வு பெற்றதும் ஒரு மாதத்துக்குள் காலி செய்தாக வேண்டும்.

அவர்கள் அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு ஏதாவது ஒரு சரியான காரணம் காட்டி மார்க்ட் ரெண்ட் என்று கூறக்கூடிய அதிகப்படியான வாடகையில் அந்த  வீட்டில் தங்கிக் கொள்ளலாம்.  மூன்று மாதங்களுக்குப் பிறகு பெட்டி படுக்கை, தட்டு முட்டு சாமான்களை வெளியில் வைத்து விடுவார்கள் அந்தத்துறை அதிகாரிகள்.

ஆனால் அரசியல் தலைவர்கள் எத்தனை  நாட்களுக்கும் மாதங்களுக்கும் வருஷங்களுக்கு  வேண்டுமானால் இப்படி ஜல்லியடித்துக் கொண்டே இருக்கலாம்.
சும்மாவா?  இந்த பெரிய விலங்குப் பண்ணையில் -

All are equal – And some are more equal

இல்லையா?


1 comment:

  1. The plight of the politicians are such they are least bothered about the rules and regulations. Nice narration. Expect more sequels.

    ReplyDelete