Sunday, February 8, 2015

பால்சந்த்ர நெமடே - ஆங்கிலத்தை விரட்டும் ஆங்கில வாத்தியார்


எடுத்த உடன் ஒரு உண்மையை நேரடியாக ஒப்புக் கொண்டு இந்தப் பதிவை துவங்குவதுதான் உத்தமமான காரியமாக இருக்கும். 

இந்த ஆண்டின் ஞானபீடப் பரிசுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பால்சந்த்ர நெமடே பற்றி இந்த விருது பற்றிய அறிவிப்புக்குப் பிறகுதான் கேள்விப்படுகிறேன்.  இதற்கு முன்பு  இவரைப் பற்றி நான் எங்கும் படித்தது இல்லை,.  கேள்விப்பட்டது  இல்லை,

இவரைப் பற்றிய விபரங்கள் எல்லாம் விருது அறிவிக்கப்பட்ட பிறகுதான் வழக்கமாக  விருது பெற்றவரைப் பற்றி எழுதுவதற்கு அனைவரும் பிரயோகிக்கும் சம்பிரதாயங்களின் அடிப்படையில் அங்கும் இங்கும் நோண்டியும் பிறாண்டியும்   தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.  

அது சரி.   என்னைப் போன்ற ஆட்களுக்கு  தமிழிலேயே இன்னும் நிறைய பேரை படிக்க வேண்டியது பாக்கி இருக்கு.  இங்கே மராத்தி எழுத்தாளரின் படைப்பைப் பற்றி எங்கிருந்து விருது பெறுவதற்கு முன்பே தெரிந்து கொள்வது?

நம்முடைய சிறுபத்திரிகை ஜாம்பவான்கள் மற்றும் பின் நவீனத்துவ மகாமேதைகளிடமிருந்து கற்றுக் கொண்ட மரபின் படி ஸ்பெயின், மொராக்கோ, ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்வாஹிலி, அரபி, லத்தீன், கிரேக்கம், துருக்கி, சீனம் போன்ற உலக மொழிகளில் எழுதும் மகா மகா எழுத்தாளர்களின்  பெயர்களையும் அவர்களின் படைப்புக்களின் பெயர்களையும் யாரையாவது பயமுறுத்துவதற்கு உதிர்க்க முடிகிறது.

ஆனால்   இந்த நாட்டில் மற்றொரு மொழியில் எழுதி வரும் ஒரு  மனிதருக்கு ஏதாவது ஒரு நாள் சடாரென்று இப்படி இம்மாம் பெரிய விருது கிடைக்கும் என்று யார் எதிர்பார்த்திருக்க முடியும்?


சில ஆண்டுகளுக்கு முன்பு நெமடேக்கு மத்திய அரசு பத்மவிருது அளித்துள்ளது.  அப்போதாவது ஏதாவது நோண்டி எடுத்து தெரிந்து வைத்திருக்கலாம்.  அது சரி.  இப்படி திடீரென்று இந்த மனிதருக்கு ஞானபீட விருது அளிப்பார்கள் என்று  யாருக்குத் தெரியும்?

எதிர்பார்த்து இருந்தால் ஏதாவது ஓரிடத்தில்  இந்த மீசைக்காரரின் பெயரை முன்னாலேயே   உச்சரித்து இருந்திருப்பேன்.  

ஆனால் இப்போதைக்கு உடனடியாக என்னால் எந்த உறுதியும் அளிக்க முடியாது.

எனக்கு வேறு ஏதாவது கோபம் அல்லது யார் மீதாவது தாபம் அல்லது காண்டு போன்ற நற்குணங்கள் எனக்குள் கிளர்ந்தால்  நான்கைந்து நாட்கள் கழித்து நான் நெமடே எழுதித் தள்ளியது எல்லாம் குப்பை என்று சொன்னால் நீங்கள் நம்ப வேண்டும்.

யார் யாரோ யார் யாருடைய படைப்புக்களை எல்லாம் குப்பை என்று கூறும்போது மட்டும் அப்படி பல்லிளித்துக் கொண்டு கேட்கிறீர்களே…

நான் மட்டும் என்ன பாவம் செய்தேன்?  அதனால் என்றாவது நானும் அப்படிக் கூறும் போது நீங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும். 

ஆனால் இந்த மனிதர் – அதுதான் நெமடே மற்றவர்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காமல் இவரே விருது வாங்கிய குஷியில் சல்மான் ரஷ்டி, வி.எஸ்.நய்பால் இப்படி எல்லோருடைய எழுத்துக்களும் ஒன்றும் அத்தனை பெரிய விஷயங்கள் அல்ல என்று கூறியிருக்கிறார்.

ஒரு சிலருக்கு விருதுகள் கிடைத்தால் அவர்கள் திகைத்துப் போய் கிடப்பார்கள்.

இந்த மீசைக்காரர் அடுத்தவர்களை திகைக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஞானபீட விருது வாங்கிய பிறகு நம்ம ஜெயகாந்தன் கூட எத்தனை சமத்தாக பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்தார்?  

இப்படியா  அவர் அச்சு பிச்சென்று பேசிக் கொண்டிருந்தார்?

நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் லண்டன் போன்ற பெருநகரங்களின் பல்கலைக்கழகங்களிலும் ஆங்கிலம் மற்றும் ஒப்பீட்டு இலக்கணம் போதித்த இங்கிலீஷ் வாத்தியாரான இந்த பெரிய மீசைக்காரர் விருது வாங்கிய கையோடு ஆங்கில மொழியை இந்த நாட்டை விட்டே விரட்ட வேண்டும்  என்று முழங்கி வருகிறார்.    

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலப் பாடத்தை உடனடியாக விட்டொழிக்க வேண்டும் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.  அந்தப் பேட்டியில் ஆங்கிலப் பாடத்தை Killer Language என்றும் வருணித்துள்ளார்.  

ஏற்கனவே   மராத்தியில் பல ஆண்டுகளாக இவர் இதனை உறுதியாக சொல்லியிருக்கக் கூடும்.  ஆனால் இந்த மனிதர் விருது வாங்கிய பிறகுதானே என்னைப் போன்ற பாமரர்களுக்கு அந்த அடர்த்தியான மீசையின் பின்னால் இத்தனை விஷயம் இருக்கிறது என்று புரிகிறது.  இப்படி எல்லாம் ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார் என்பது இப்போதுதானே வெளியில் வருகிறது?

அது சரி – இவருக்கென்ன? 

நிறைய பசங்களையும் பொண்களையும் இங்கிலீஷ் பாடத்தில் பெயிலாக்கி விட்டு இப்போது விருது பெற்ற பிறகு திடீரென்று அந்தப் பாடம் வேண்டாமென்றால் அந்த பசங்களுக்கும் பொண்களுக்கும் எத்தனை கோபம் வரும் நீங்களே சொல்லுங்கள்.

ஒன்றும் வேண்டாம் – ஒரு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒருவர் வந்து இப்படி சொல்லியிருந்தால் எங்களுக்கெல்லாம் எத்தனை சந்தோஷமாக இருந்திருக்கும்?  பரவாயில்லை.  நன்றாக இருக்கட்டும்.

ஆனால் இவர் சொன்னதில் ஒன்றிரண்டு நல்ல விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. 

இந்தியப் பள்ளிகளில் துவக்கக் கல்வியும் இடைநிலைக் கல்வியும் மாணவர்களின் தாய்மொழியில்தான் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் அப்படி என்ன பெரிய விஷயம் இருக்கிறது?  அந்த மொழியில் ஒரு காவியம் கூடக் கிடையாது. மகாபாரதம் என்ற ஒரு காவியம் மட்டுமே தனக்குள் பத்து காவியங்களை அடக்கியிருக்கிறது.  ஆங்கிலத்தில் என்ன இருக்கிறது?

ஆங்கிலத்தைக் கட்டாயமாக்க வேண்டாம் – அந்த மொழியை  இந்த நாட்டை விட்டு ஒழிப்பதைக் கட்டாயமாக்குங்கள்.

ஆங்கில மொழி உலகின் மற்ற மொழிகளைக் கொன்றொழிக்கிறது என்று கூறும் இவர் 150 ஆண்டுகளுக்கு முன்பு மொத்தம் 187 மொழிகள் புழங்கி வந்த வட அமெரிக்காவில் தற்போது வெறும் 37 மொழிகள் மட்டுமே உயிர்த்து உள்ளன. 


ஆஸ்திரேலியாவில் மொத்தம் 300 மொழிகள் இருந்தன.  இப்போது வெறும் 65 மொழிகளே புழக்கத்தில் உள்ளன.


ஐந்து மொழிகள் பிரதானமாக இருந்த பிரிட்டனில் இப்போது ஆங்கில மொழியைத் தவிர ஐரிஷ் மொழி மட்டுமே தப்பிப் பிழைத்துள்ளது என்றும் நெமடே கூறியிருக்கிறார்.

அது சரி.  ஒரு விஷயத்தை மிகவும் வெள்ளந்தியாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஆங்கில மொழியிலும்  மராத்தியிலும் புலமை பெற்ற ஒரு மனிதர் ஒப்பீட்டு இலக்கணத்திலும் ஆய்வுகள் செய்து உலக அளவில் பல பல்கலைக்கழகங்களில் தன்னுடைய ஆய்வு கட்டுரைகளை வாசித்த அனுபவம் கொண்ட ஒரு மனிதர் – ஒரு மொழியில் திறமையான படைப்பாளி என்று கொண்டாடப்படுகிற ஒரு மனிதரை   அத்தனை அலட்சியமாக ஒதுக்கி வைக்க முடியாது என்றுதான் எனக்குத்  தோன்றுகிறது.

வெறுமனே பெயர்களை மட்டுமே உதிர்த்துக் கொண்டு கூகுளார் அருளாசியுடன் டகால்டி அடித்து வரும் நம்முடைய   இலக்கிய  அதி மேதாவிகளைக் கண்டு மிரண்டு போகும் என்னைப் போன்ற சாமானியனுக்கு இந்த மாதிரி விஷயமுள்ள ஆட்களைப் பார்த்தாலும் மிரண்டுதான் போக வேண்டியிருக்கிறது.

நான் மிரண்டு போயிருக்கிறேன்.

அப்புறம் இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

இந்த மனிதர் ஜாடையில் அப்படியே நம்ம ந.முத்துசாமி மாதிரியே இருக்கார் இல்லையா?

எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.   




No comments:

Post a Comment