Wednesday, August 26, 2015

ஸ்டெப் கட்டிங்

டெல்லியில் காலடி எடுத்து வைத்த 1981-ல் இருந்து என்னதான் தலை போகின்ற வேலையாக இருந்தாலும் எங்கிருந்தாலும் முடிவெட்டிக் கொள்வது என்பது கோல் மார்க்கெட்டில் உள்ள ஆசாத் சலூனில்தான்.


காதை மறைக்கும் ஸ்டெப் கட்டிங், காலுக்குக் கீழ் பாதத்தை மறைக்கும் வகையில் பெரிய சூப்பர் சைஸ் பெல் பாட்டம் பேண்ட், பாபி காலர் (யானைக் காது காலர்) சட்டையுடன் கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து டெல்லிக்கு ரயில் ஏறியபோது மற்ற எல்லா கவலையை விட என் ஸ்டெப் கட்டிங்கை பராமரிக்கின்ற கவலைதான் அதிகமாக இருந்தது.

பல ஆண்டுகளாக என் காதுகளை நானே கண்ணாடியில் பார்த்துக்கொள்ள முடியாத நிலை இருந்த காலமும் இருந்தது.


பள்ளிக்கூடம் படிக்கும்போது பழையபேட்டை வெங்கடேஸ் சலூனுக்கு அப்பாவும் கூட வருவார்.  முடி வெட்டும் போது காவல் இருப்பது போல் கூடவே இருந்து கண்காணிப்பார்.

வெட்டி முடித்த பிறகு ஏதோ சிற்பத்தை வடித்த சிற்பியின் மனகுதூகலத்துடன் அப்பாவின் ஆமோதிப்புக்காக அவருடைய முகத்தை ஆவலுடன் பார்ப்பான் வெங்கடேஷ்.

அப்பா விட மாட்டார்.  “இன்னும் அடிடா.  என்னடா ஏதோ கொரங்குக்கு சொரண்டி விட்ட மாதிரி பண்ணியிருக்கே. அஞ்சாறு மாதத்துக்காவது தாங்கணும்.  இன்னும் ஏத்துடா” என்று அடம் பிடிப்பார்.


எனக்கு அழுகை அழுகையாக வரும்.

இன்னும் பத்து பதினைந்து நாட்களுக்கு கொஞ்சமாவது முடி வளரும் வரை சைக்கிள் எடுத்துக்கொண்டு எங்கும் வலம் போக முடியாது.  பெண்களின் நமுட்டு சிரிப்பை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் அந்தக் காலத்தில் சுத்தமாக இருந்து இல்லை.  அதனால் அப்பாவை மனதுக்குள் திட்டிக் கொண்டே பலியாடு மாதிரி தலையை காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பேன்.


துக்கம்  பிரவாகமாக பொங்கி வழியும் என் முகத்தை பார்க்க ரொம்பவும் சந்தோசமாக இருக்கும் வெங்கடேசுக்கு.  “எம்ஜிஆர் தான் அடுத்த முதல்வராகப் போறாரு பாருங்க சாமி” என்று அப்பாவிடம் மெல்ல அரசியலை ஆரம்பிப்பான்.


அப்பாவுக்கு யாராவது ஏதாவது காரியம் செய்யும் போது பேசினால் பிடிக்காது. அதே போல எம்ஜிஆர் முதல்வராக வருவதும் பிடிக்காமல் இருந்திருக்க வேண்டும்.  “பேசாம வேலையை பாருடா.  காதை வெட்டிடப்போறே…


குலை நடுங்கியவாறு நான் உட்கார்ந்திருப்பேன்.  கொலைக் கருவியைப் போல இருக்கும் மெசினை கடகடவென காதோரம் ஓட்டிக் கொண்டு போகும்போது இறுக்க கண்ணை மூடிக் கொண்டு மூச்சைப் பிடித்துக் கொண்டு பிராண பயத்துடன் நேரத்தைக் கடத்துவேன்.


பள்ளியில் படிக்கும்போதே விதம் விதமான கிராப்பு வைத்திருக்கும் ரங்கவிலாஸ் டிரான்ஸ்போர்ட் முதலாளி வீட்டு ரவிச்சந்திரன், சந்தானம், ராஜ்குமார், ப்ரூக்பாண்ட் ஏஜெண்டு  மகன் முரளி ஆகியோரை பார்க்கும் போதெல்லாம்   காதுகளில் அடர்த்தியாக புகை மண்டி வரும்.


ஒருவழியாக ப்ரூஸ் லீ திரைப்படங்களில் ஸ்டெப் கட்டிங்குடன் வந்து எங்களுக்கெல்லாம் நல்ல வழியைக் காட்டினார்.


எங்கள் ஊர் சலூன்காரர்கள் எல்லாம் அமெரிக்கா, ஜப்பான், பாரிஸ் போன்ற உலகநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த ஸ்டெப் கட்டிங் கலையை கற்று வந்ததைப்போல பேசத் துவங்கினார்கள்.  ஸ்டெப் கட்டிங்குக்கு மூன்று மடங்கு அதிகமாக பணம் வாங்கினார்கள்.

கிருஷ்ணகிரியில் புதிது புதிதாக நவீனமான சலூன்கள் தோன்றத் துவங்கின.  பம்பாயில் இருந்து வேலை கற்றுக் கொண்டு வந்தேன் என்று கூறத் துவங்கினார்கள்.  ராஜேஷ் கன்னா, சத்ருகன் சின்கா, சஞ்சீவ் குமார், அமிதாப் பச்சன், ரிஷி கபூர் ஆகியோரும் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகுமார் ஆகியோரும் எங்களுக்கு தலை காட்டினார்கள். 

அவர்களின் புகைப்படங்களை காண்பித்து அதே போல வெட்டச் சொன்னோம்.

கிருஷ்ணகிரியில் வெட்டிய தலையுடன் டெல்லிக்கு பயணமானேன்.


இங்கும் அதே ஸ்டெப் கட்டிங் தொடர்ந்தது.  கிருஷ்ணகிரியில் கொடுத்த பணத்தை விட ஏறத்தாழ ஐந்து மடங்கு சவரத்துக்காக கொடுத்த போது திடுக்கென்று இருந்தது.


டெல்லிக்கு வந்தபோது முதன்முதல் சவரம் செய்து கொண்ட அதே ஆசாத் சலூனில்தான் இன்றும் தொடருகிறேன்.


81-ல் இருந்த முதலாளியின் தம்பி அப்போது சின்ன பையனாக இருந்தான்.  

அந்த பையனிடம் கட்டிங் செய்து கொள்ளும் போது காதைப் பற்றி கொஞ்சம் கவலையாக இருக்கும்.


இப்போது அவனும் பையன் இல்லை.  இனி காதைப் பற்றிய கவலையும் எனக்கு இல்லை.


இன்று காலை முடி வெட்டிக் கொள்ளச் சென்ற போது (அட இருக்கிற ஒன்றிரண்டை சொல்கிறேனப்பா) எனக்கு பக்கத்துக்கு இருக்கையில் முடிவெட்டிக் கொண்டிருந்த இளைஞன் சத்தம் போட்டு கொண்டு இருந்தான்.  முடிவெட்டும் கட்டணம் மிகவும் அதிகம் என்று கூச்சல் போட்டான்.


அவனுக்கு சவால் விடுவது போலவும் அதிக கட்டணத்துக்கு சமாதானம் கூறுவது போலவும் சலூன்காரன் பக்கத்தில் இருந்த என்னை காட்டி சொன்ன பதில்-


இந்த மண்டைக்கே 150 ரூபாய் வாங்கறோம்பா….


26 ஆகஸ்டு 2015



No comments:

Post a Comment