Sunday, August 30, 2015

டெல்லி தமிழ் சங்க உறுப்பினர்கள் சந்திப்பு

நேற்று 30 ஆகஸ்டு 2015 டெல்லி தமிழ் சங்க உறுப்பினர்கள் சிலர் ஒன்று கூடி டெல்லி தமிழ் சங்கத்தை சார்ந்த சில பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

முதன்முறையாக இதுபோன்று ஒரு கூட்டம் தமிழ் சங்கம் குறித்து நடைபெற்றது குறிப்பிடத் தகுந்த விஷயம்.

இதில் விசேஷம் என்னவென்றால், சங்க செயற்குழுவின் தேர்தல் முஸ்தீபுகள் போன்ற எந்தவிதமான நோக்கமும் இன்றி சங்கத்தின் நலன் கருதி ஒருசிலர் கூடி இதுபோன்ற ஒரு கூட்டத்தை கூட்டியிருப்பது அநேகமாக சங்க வரலாற்றில் இதுதான் முதன்முறை என்று நினைக்கிறேன்.

எந்த வகையான எழுத்துபூர்வமான கடிதமோ அறிக்கையோ அழைப்பிதழோ இன்றி வெறும் என்னுடைய தொலைபேசி அழைப்பின் வழியாக குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் நண்பர்கள் கூடியது நம்பிக்கையை அதிகரிக்கிறது.

கடந்த 2014 ஆகஸ்டு மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அப்போதைய தலைவராலும் செயலாளராலும் ஜனநாயகத்தின் குரல்வளை எப்படி எல்லாம் நசுக்கப்பட்டது என்பது குறித்தும் உறுப்பினர்கள் அல்லாதவர்களை கூட்டத்தில் அனுமதித்து எதிர்ப்பு குரல்கள் எல்லாம் அமுக்கப்பட்டு முறையற்ற கணக்குகளுக்கு ் எப்படி அங்கீகாரம் பெறப்பட்டன என்பது குறித்தும் விளக்கப்பட்டது.

அதுபோன்ற ஆபத்து எதிர்வரும் பொதுக்குழுக் கூட்டத்தில் நடைபெறுவதை தடுப்பது எப்படி என்றும் பேசப்பட்டது.
தனிமனிதர்கள் சிலருக்காக மொத்த தமிழ் சங்கமும் எப்படி இயங்கி வருகிறது என்பதுவும் கூறப்பட்டது.
Quit Pro quo என்கிற கொடுக்கல் வாங்கல் விஷயம் தனிமனிதர்கள் சிலரின் விளம்பர மோகத்தினால் எப்படி தமிழ் சங்கத்தில் வெற்றிகரமாக தமிழ் சங்கத்தின் செலவில் செய்யப்பட்டு வருகிறது என்பதையும் நண்பர்கள் விவாதித்தார்கள்.

வெறும் தனி மனித விளம்பரத்துக்காகவும் சுயநலத்துக்காகவும் சங்கம் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை விரிவாக விளக்கி கூறினேன். சில தனி மனித துவேஷங்களால் எப்படி பழிவாங்கப்படுகிறது என்பதுவும் கூறப்பட்டது.

தங்களை ஆதரிக்கிறவர்களுக்கு எப்படி எல்லாம் சாதகமாக விதிமுறைகள் வளைக்கப்படுகின்றன என்பது பற்றியும் தங்களை எதிர்ப்பவர்கள் எப்படி எல்லாம் பழிவாங்கப்படுகிறார்கள் என்பது பற்றியும் விளக்கப்பட்டது.

தற்போதைய நிர்வாகக் குழு ஒரு சிலரின் பிடியில் சிக்கிக் கொண்டு நிர்வாகம் எப்படி எல்லாம் சீரழிந்து வருகிறது என்பது பற்றியும் பேசப்பட்டது.

உதாரணத்துக்கு தமிழ் சங்கத்தில் நன்றாக முறையாக நடைபெற்று வந்த ஒரு மாதாந்திர இலக்கிய கூட்டம் எப்படி எல்லாம் அதன் நோக்கம் சிதைக்கப்பட்டு வருகிறது என்பதுவும் பேசப்பட்டது.

விரைவில் தமிழ் சங்கத்தில் நடைபெறப்போகும் பன்னாட்டு தமிழ் சங்கங்களின் அமைப்பு குறித்த விளக்கங்களை மொத்தமாக உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து தமிழ் சங்க நிர்வாகத்திடம் விரைவில் பெறுவது பற்றியும் பொதுக்குழுவை விரைவில் நியாயமாக உறுப்பினர்களை மட்டுமே வைத்து நடத்துவதற்காக ஒரு மனுவை அளிக்க வேண்டும் என்பது போன்ற சில செயல்திட்டங்களும் இந்தக் கூட்டத்தில் வகுக்கப்பட்டது.

இதில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை வரும் காலத்தில் அதிகரிக்கலாம்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. அடுத்த கூட்டத்தில் மேலும் நிறைய உறுப்பினர்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்.

ஒன்றாக இணைந்து குரல் கொடுக்கும்போது எப்போதுமே நல்லவைதான் நடைபெறும் என்ற நம்பிக்கை எப்போதும் எனக்கு உண்டு,

No comments:

Post a Comment