Thursday, July 12, 2007

டோபா டேக் சிங்




உருது மூலம் ஸதத் ஹஸன் மண்ட்டோ

ஆங்கிலம் வழித் தமிழில் ராகவன் தம்பி



இந்தியாþபாகிஸ்தான் பிரிவினையின் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறைக் கைதிகளைப் போல, இருநாடுகளின் பைத்தியக்கார விடுதிகளில் விடப்பட்ட பைத்தியங்களையும் தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என இருநாடுகளும் முடிவெடுத்தன.இந்த முடிவு சரியானதா இல்லையா என்று சொல்வது சற்றுக் கடினமான காரியம்தான். ஆனால் . இந்த முடிவுக்கு வருவதற்கு, இருநாடுகளின் மிக முக்கியமான உயர் அதிகாரிகள் பல ஆலோசனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்து, பலமுறை கூடி மிகக் கடுமையாக ஆலோசித்தும், விவாதித்தும் எடுக்கப்பட்ட முடிவு இது என்பதை மட்டும் தெளிவாகச் சொல்ல முடியும். இந்த முக்கியமான பரிமாற்றம் செயல்படுத்தப்படும் இறுதிநாள் மற்றும் பிற முக்கியமான விபரங்களும் மிகவும் கவனத்துடன் முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் வசிக்கும் உறவினர்களைக் கொண்ட முஸ்லிம் பைத்தியங்களை எவ்விதத் தொந்தரவும் இன்றி அங்கேயே வசிக்க விடுவதென்றும், மற்ற பைத்தியங்களை பரிமாற்றத்துக்காக எல்லைக்குக் கொண்டு செல்வதென்றும் இந்திய அதிகாரிகள் முடிவு செய்தனர்.


பாகிஸ்தானிலோ, இந்து மற்றும் சீக்கியர்களின் மக்கள் தொகை முழுக்கவும் ஏற்கனவே இந்தியாவுக்குக் குடிபெயர்ந்து விட்டதனால், நிலைமை சற்று மாறுபட்டு இருந்தது. முஸ்லிம் அல்லாத பைத்தியங்களை பாகிஸ்தானில் வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பது போன்ற சிக்கல் அங்கு எழவில்லை. இரு அரசுகளின் இந்தத் தீர்மானத்துக்கு இந்தியாவில் என்னவிதமான எதிர்வினை இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் லாகூரின் பைத்தியக்கார விடுதிகளில் செய்தி பரவியதுமே அது மிகவும் பரபரப்பினைக் கிளப்பியது.


இத்தீர்மானம் குறித்து லாகூரின் அனைத்துப் பைத்தியக்கார விடுதிகளிலும் பரபரப்பான விவாதங்கள் சூடு கிளம்பின. லாகூரின் தீப்பொறி பறக்கும் "ஜமீன்தார்' தினசரியினை தவறாமல் வாசிக்கும் ஒரு பைத்தியத்திடம் கேட்கப்பட்டது þ ""பாகிஸ்தான்'' என்பது என்ன? அதற்கு அந்தப் பைத்தியம் சொன்ன பதில் þ ""இந்தியாவில், கழுத்தை அறுக்கும் கூர்மையான சவரக்கத்திகளைத் தயாரிக்கும் ஒரு இடத்தின் பெயர்''.இந்த ஆழமான கருத்து பலராலும் மிகவும் வெளிப் படையாக ஒருவகைத் திருப்தியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு சீக்கியப் பைத்தியம் இன்னொரு சீக்கியனைக் கேட்டது þ சர்தார்ஜி! நாம் ஏன் இந்தியாவுக்கு அனுப்பப்படுகிறோம்? அங்கு என்ன பாஷை பேசுகிறார்கள் என்பது கூட நமக்குத் தெரியாதே!'' அதற்கு அந்த இன்னொரு சீக்கியர் புன்சிரிப்புடன் சொன்னது



"எனக்கு ஹிந்துஸ்தானியர்களின் மொழி தெரியும். அந்த ராட்சதர்கள் எப்போதும் தாங்கள்தான் இப்பூவுலகின் அதிபதிகள் என்பது போல எப்போதும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பார்கள்''.
ரு முஸ்லிம் பைத்தியம் குளித்துக் கொண்டிருக்கும்போது
"பாகிஸ்தான் ஜிந்தாபாத்'' என்று கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு மிகுந்த உற்சாகத்துடன் முழக்கமிட்டது. உணர்ச்சி வேகத்தில் குளியல் அறையிலேயே கால்வழுக்கி விழுந்து பலமணிநேரம் நினைவு தவறிப்போய்க் கிடந்தது. அந்த விடுதியில் இருக்கும் அனைவருமே பைத்தியங்கள் கிடையாது. சிலர் மிகவும் தெளிவாக இருந்தார்கள். தெளிவான அந்தச் சிலரில் பலர் கொலைகாரர்கள். தூக்குமேடைக் கயிற்றுக்குப் பயந்து இப்படிப் பைத்தியங்கள் போல இந்த விடுதிகளில் தங்கியிருந்தார்கள். இதற்காக இந்தக் கொலைகாரர்களின் உறவினர்கள் மேலதிகாரிகளுக்கு நல்ல லஞ்சம் கொடுத்து இவர்களை பைத்தியங்களாக அங்கு தங்கச் செய்திருந்தார்கள். இவர்களுக்கு இந்தியா ஏன் இரண்டாகப் பிரிக்கப் பட்டது என்றும் பாகிஸ்தான் என்றால் என்னவென்றும் சூசகமாகத் தெரிந்திருந்தது. ஆனால் இவர்களுக்கும் அங்கு இருந்த நிலவரத்தைப் பற்றிய முழுமையான விபரங்கள் ஏதும் தெரிந்திருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.செய்தித் தாள்களும் அத்தனை உதவிகரமாக இல்லை. அந்த விடுதிகளின் காவலர்களும் ஒன்றும் அறியாதவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு அத்தனை படிப்பறிவும் இல்லை. அதனால் இவர்களுடைய பேச்சுக்களை ஒட்டுக் கேட்பதனால் ஒன்றும் எதையும் அதிகமாகத் தெரிந்து கொள்ள முடியாது. முகமது அலி ஜின்னாவோ காய்த்þஏþஆஜம் என்பவேரா யாரோ ஒருத்தர், தனியாக ஒரு நாடு, "பாகிஸ்தான்' என்ற பெயரில் அமைத்திருப்பதாக யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள்.


இந்தப் பாகிஸ்தான் எங்கிருக்கிறது என்று லாகூரின் அந்த விடுதியில் இருக்கும் எந்தப் பைத்தியத்துக்கும் எதுவும் தெரியவில்லை. அதனால் அங்குள்ள முழுப்பைத்தியங்களுக்கும் அரைப் பைத்தியங்களுக்கும் தான் பாகிஸ்தானில் இருக்கிறோமா அல்லது இந்தியாவில் இருக்கிறோமா என்று எதுவும் தெளிவாக விளங்கவில்லை. தாங்கள் இந்தியாவில் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்த இழவு பாகிஸ்தான் எங்கு உள்ளது?



பாகிஸ்தானில் இருப்பதாக இருந்தால் நேற்று வரை அது இந்தியாவாக இருந்தது எப்படி? எந்தப் பைத்தியத்துக்கும் தெளிவாகவோ அரைகுறையாகவோ கூட அது விளங்கவில்லை. ஒரு பைத்தியம், இந்த இந்தியாþபாகிஸ்தான், பாகிஸ்தான்þஇந்தியா என்ற சுற்றி அடிக்கும் பேச்சுக்களால் கொஞ்சம் அதிகமாகப் பாதிப்படைந்து, ஒருநாள், தரையைப் பெருக்கிக் கொண்டிருக்கும் போது தன்னுடைய உடைகளையெல்லாம் களைந்து ஒரு உயரமான மரத்தின் உச்சியில்


மிகவும் வசதியான ஒரு கிளையில் அமர்ந்து கொண்டது.

பாகிஸ்தான்þஇந்தியா பிரிவினை குறித்த அதி நுட்பமான பிரச்னை குறித்து தொடர்ச்சியாக இரண்டு மணிநேரத்துக்கும் அதிகமாக சொற்பொழிவாற்றியது. விடுதியின் காவலர்கள் அந்தப் பைத்தியத்தைக் கீழே இறங்குமாறு கேட்டுக் கொண்டார்கள். அந்தப் பைத்தியம் மரத்தை விட்டுக் கீழே இறங்காமல் இன்னும் உயரமான மற்றொரு கிளையில் ஏறி உட்கார்ந்து கொண்டது. காவலர்களின் மிரட்டல்கள் தண்டனையாக உருமாறியபோது, ""எனக்கு இந்தியாவும் வேண்டாம் þ பாகிஸ்தானிலும் வாழவேண்டாம். இந்த மரக்கிளையிலேயே நான் மிகவும் வசதியாக இருப்பேன்'' என்று அறிவித்தது. ஒருவழியாக கீழே இறக்கப்பட்டதும் தன்னுடைய இந்து மற்றும் சீக்கியத் தோழர்களை கண்ணீர் மல்க ஆரத் தழுவிக் கொண்டது. அவர்கள் தன்னை விட்டுப் போய்த்தான் ஆகவேண்டும் என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டது.



அந்த விடுதியில் எம்.எஸ்.சி பட்டம் பெற்ற ஒரு ரேடியோ இன்ஜினியர், யாருடனும் பேச்சு வார்த்தைகள் வைத்துக் கொள்ளாது. மிக நீளமான ஒரு சாலையில் நடப்பதைப் போன்ற பாவனையில் எப்போதும் விடாது நடந்து கொண்டே இருக்கும். விடுதியில் இடைவிடாது நடந்து கொண்டிருக்கும் இந்தியா பாகிஸ்தான் விவாதங்களால் பாதிப்படைந்து ஒரு நாள் தன்னுடைய உடைகளையெல்லாம் கழற்றி விடுதியின் காவலனிடம் பெரிய பந்தாகச் சுருட்டிக் கொடுத்து விட்டு விடுதியின் தோட்டத்தில் முழுநிர்வாணமாக ஒடிக் கொண்டே இருந்தது.சானியத்திலிருந்து வந்த ஒரு முஸ்லிம் பைத்தியம் அந்த விடுதியில் தங்கியிருந்தது. பைத்தியமாவதற்கு முன் அகில இந்திய முஸ்லீம் லீகின் தீவிரமான தொண்டனாக இருந்திருக்கிறது. ஒரு நாளைக்குக் குறைந்தது பதினாறு முறையாவது குளிக்கும் பழக்கத்துக்கு அடிமையாக இருந்தது. ஒரு நாள் திடீரென்று குளிப்பதையே நிறுத்திவிட்டு தன்னுடைய பெயர் ""முகமது அலி'' என்றும், தான்தான் காய்த்þஏþஆஜம் என்று அழைக்கப்படும் முகமது அலி ஜின்னா என்றும் அறிவித்தது. இதைக் கேட்டதும் விடுதியின் இன்னொரு சீக்கிய பைத்தியம் தன் பெயர் சீக்கியர்களின் தலைவர் ""மாஸ்டர் தாராசிங்'' என்று அறிவித்தது.

இவை போன்ற செயல்களால் அந்த விடுதியில் மிகவும் தீவிரமான மதக்கலவரங்கள் ஏற்படும் சூழல் நிலவுவதை உணர்ந்த விடுதி நிர்வாகம் இவர்கள் இருவரையும் தனித்தனி கொட்டடிகளில் அடைத்து வைத்து அந்த இருவரையும் மிகவும் ஆபத்தானவர்கள் என்று அறிவிப்பு வெளியிட்டது. காதல் தோல்வியினால் பாதிக்கப்பட்டு பைத்தியமான லாகூரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞனும் அந்த விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தான். அவனுடைய காதலி அமிருதசரஸில் வசிக்கிறாள். அமிருதசரஸ் இந்தியாவின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது என்று யாரோ சொன்னதும் உடனே அவன் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளானான். பைத்தியமான போதும், அவன் காதலி அமிருதசரஸில் இருக்கும் விஷயத்தை மட்டும் அவனால் மறக்க இயலவில்லை. அன்று அவன் இந்தியாவை இரண்டாகப் பிளந்து வைத்த அனைத்து இந்து, முஸ்லிம் தலைவர்களையும் வாய்க்கு வந்தபடித் திட்டினான்.

தன் அருமைக் காதலியை இந்தியப் பெண்ணாகவும், தன்னை பாகிஸ்தானியாகவும் பிரித்து வைத்த சண்டாளர்கள் அவர்கள் என்று ஏசினான். இருநாடுகளுக்கு இடையிலான பரிமாற்றத்தைப் பற்றிய செய்தி கிடைத்ததும் விடுதியிலுள்ள தோழர்கள் அவனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள். அவன் தான் நேசிக்கும் இந்தியாவுக்கே அனுப்பப்படுவது குறித்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். ஆனால் அமிருதசரஸில் தன்னுடைய வக்கீல் தொழில் அவ்வளவாகத் தழைக்காது என்பதால் தான் லாகூரை விட்டு வெளியேறப் போவதில்லை என்று அவன் அறிவித்தான். ஐரோப்பியர்களுக்கான வார்டுகளில் இரண்டு ஆங்கிலோ இந்திய பைத்தியங்கள் தங்கி இருந்தார்கள். அவர்களிடம், பிரிட்டிஷார் இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்துவிட்டு இங்கிலாந்துக்குத் திரும்பிச் செல்வதாகத் தெரிவித்ததும் மிகக் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு தங்களுக்குக் கிடைக்கப் போகும் அந்தஸ்து குறித்து அவர்கள் கவலைப்பட ஆரம்பித்தார்கள். தொடர்ச்சியாக தங்களுக்குள் இதுகுறித்து மிகுந்த கவலையுடன் கிசுகிசுவென்று ஆலோசித்துக் கொண்டார்கள். இந்த விடுதியில் சுதந்திரத்துக்குப் பின் ஐரோப்பிய வார்டு தொடர்ந்து செயல்படுமா அல்லது கலைக்கப்படுமா? தங்களுக்கான ஐரோப்பிய காலை உணவு பறிமாறப்படுமா அல்லது கேவலமான இந்திய சப்பாத்திகள் பறிமாறப்படுமா என்பது குறித்து அவர்கள் மிகவும் கவலைப் பட்டார்கள். கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்த விடுதியில் அடைக்கப்பட்ட இன்னொரு சீக்கிய பைத்தியம் ஒருவன் இருந்தான். அவன் எப்போதும் பேசிக் கொண்டிருப்பான். ஆனால் அவன் பேசும் எந்த வார்த்தையும் யாருக்கும் புரியாது. தொடர்ச்சியாக ஒரே வாக்கியத்தை கடந்த பதினைந்து வருடங்களாகத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான்.



"உப்பேர் தி குர்குர் தி அனெக்ஸி தி பே த்யானா தி மூங் தி தால் ஆஃப் தி லால்டின்''



என்று ஒன்றும் புரியாத உளறலைக் கடந்த பதினைந்து வருடங்களாக அந்த விடுதியின் காவலர்கள் அவன் சொல்லக் கேட்டு வருகின்றனர். அவன் கடந்த பதினைந்து வருடங்களாக ஒரு நொடி கூட இமைகளை மூடித் தூங்கியதில்லை என்று அந்தக் காவலர்கள் கூறுவார்கள்.



எப்போதாவது ஒருமுறை விடுதியின் சுவற்றின் மீது சாய்ந்து கொள்வான். மீதி நேரமெல்லாம் எப்போதுமே நின்றுகொண்டுதான் இருப்பான். தொடர்ச்சியாக நின்று கொண்டே இருந்ததனால் இருகால்களும் நிரந்தரமாக வீங்கியே இருந்தன. இதனால் பாதிக்கப் பட்டதாக அவன் என்றும் காண்பித்துக் கொண்டதில்லை. இப்போதெல்லாம் அவன் இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளுக்கு இடையே பைத்தியங்களைப் பறிமாற்றம் செய்து கொள்ளும் திட்டத்தைப் பற்றி விடுதியில் யாராவது பேசிக் கொள்ளும்போது தீவிரமாகக் காது கொடுத்துக் கேட்கத் துவங்கினான். அதைப் பற்றி அவனுடைய அபிப்ராயத்தை யாராவது கேட்டபோது மிகவும் பணிவுடனும் பயபக்தியுடனும் சொன்னான்.


"உப்பேர் தி குர்குர் தி அனெக்ஸி தி பே த்யானா தி மூங் தி தால் ஆஃப் தி கவர்ன்மெண்ட் ஆஃப் பாகிஸ்தான்.''எப்படி இருந்தாலும் அவனைப் பொறுத்த அளவில் இப்போது பாகிஸ்தான் அரசு என்பது டோபா டேக் சிங் அரசாக பெயர் மாற்றம் அடைந்திருந்தது.


டோபா டேக் சிங் என்பது பஞ்சாப் மாநிலத்தின் ஒரு சின்னஞ்சிறிய கிராமம். அது அவனுடைய சொந்த ஊர். அவனும் இப்போதெல்லாம் இந்த டோபா டேக் சிங் எந்த நாட்டுடன் சேரும் என்று கேட்கத் துவங்கியிருந்தான். ஆனாலும் அது இந்தியாவில் இருக்கிறதா அல்லது பாகிஸ்தானிலா என்று அந்த விடுதியில் உள்ள யாரும் தெளிவாக அறிந்திருக்கவில்லை. இந்த மர்மத்தை விடுவிக்க முயற்சி செய்த சிலரும் மொத்தமாகக் குழம்பிப் போனார்கள். ஏனென்றால், பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் முன்பு இந்தியாவில் இருந்தது.


அது இப்போது பாகிஸ்தானுக்குப் போய்விட்டது. இது அவர்களை வெகுவாகக் குழப்பியது. இப்போது பாகிஸ்தானில் உள்ள லாகூர் எந்த நேரத்திலும் சரிந்து இந்தியா பக்கம் போய்விட வாய்ப்பு இருக்கலாம் என்று அந்த விடுதியில் இருந்தவர்கள் ஊகிக்கத் தொடங்கினார்கள். முழு இந்தியத் துணைக்கண்டமும் பாகிஸ்தானாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்தியாவும் பாகிஸ்தானும் என்றாவது ஒருநாள் உலக வரைபடத்திலிருந்தே காணாமல் போய்விட்டாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை என்றும் பேசிக்கொண்டார்கள்.அந்த சீக்கியக் கிழவனுக்கு முடியெல்லாம் கொட்டிப் போயிருந்தது. இருந்த கொஞ்சமான முடியும் அவனுடைய தாடியின் ஒரு பகுதியாக மாறிப்போனது. இது மிகவும் விநோதமாகவும் சமயத்தில் பார்ப்பவர்களுக்குக் கொஞ்சம் அச்சம் தருவதாகவும் இருந்தது. இருந்தாலும் அவன் மிகச் சாதுவாகவும் யாருடனும் சண்டை போடாதவனுமாக இருந்து வந்தான். அவன் டோபா டேக் சிங் கிராமத்தின் வளமான நிலச்சுவான்தாராக இருந்தவன். திடீரென்று பைத்தியமாகிப் போனான். முன்பெல்லாம் மாதம் ஒருமுறை அவனைப் பார்க்க அவனுடைய உறவினர்கள் சிலர் வந்து கொண்டிருந்தார்கள். பஞ்சாபில் மதக்கலவரங்கள் தீவிரம் அடைந்தபிறகு உறவினர்கள் வருவது திடீரென்று நின்றுபோனது. அவனுடைய நிஜப் பெயர் "பிஷன் சிங்'.



எல்லோரும் அவனை கேலியாக "டோபா டேக் சிங்' என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள். அவன் தானே உருவாக்கிக் கொண்ட ஒரு அகவுலகில் வாழ்ந்து கொண்டிருந்தான். அந்த விடுதியில் அடைத்ததில் இருந்து தான் இருப்பது எந்த இடம், என்ன தேதி, என்ன நேரம் என்பதைப் பற்றிய எந்த பிரக்ஞையும் அவனுக்கு கிடையாது. ஆனால் அவனுக்குள் ஒரு ஆறாவது அறிவை வளர்த்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்க விடுதிக்கு அவனுடைய உறவினர்கள் வருகை தரும் நாட்களில் மட்டும் அவன் மணக்க மணக்க சோப்பு தேய்த்துக் குளிப்பான். தலைக்கு எண்ணெய் வைத்துக்கொள்வான்.



தலைமுடியையும் தாடியையும் படியப் படிய சீவித் தன்னை அலங்கரித்துக் கொள்வான். உறவினர்களின் வருகையின் போது அவர்களை சந்திக்கும் வேளையில் ஒன்றும் அதிகமாகப் பேசமாட்டான். அவனுடைய வழக்கமான ""உப்பர் தெ குர்குர் தெ அனெக்ஸி தெ பே த்யானா தெ மூங் தி தால் ஆஃப் தி லால்டின்'' மட்டும் தொடரும். அவனை இந்த விடுதியில் அடைக்கும்போது ஒரு சிறிய அழகான பெண்குழந்தையை கிராமத்தில் விட்டு வந்திருந்தான். அப்பெண் குழந்தை எப்போதாவது உறவினர்களுடன் இவனைப் பார்க்க வரும். இப்போது அப்பெண்ணுக்கு பதினைந்து வயது. இப்போதும் எப்போதாவது ஒருமுறை வருவாள். வரும்போதெல்லாம் அவன் முன் நெடுநேரம் அமர்ந்து கொண்டு கன்னங்களில் கண்ணீர் வடிய மெüனமான விசும்பல்களுடன் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பாள். அவனுடைய விந்தையான உலகில் அவன் காணும் பல முகங்களில் தன் மகளின் முகமும் ஒன்றாக அவனுக்கு இருந்தது. இந்த இந்தியாþபாகிஸ்தான் பிரிவினை மற்றும் இருநாடுகளுக்கிடையிலான பைத்தியங்களின் பரிமாற்றம் குறித்த பேச்சுக்கள் ஆரம்பித்ததிலிருந்து "டோபா டேக் சிங்' இப்போது எங்கிருக்கிறது என்று விடுதியில் எதிரில் வந்தவர்களிடமெல்லாம் கேட்க ஆரம்பித்தான். யாரிடமிருந்தும் அவனுக்குத் திருப்தியான பதில் கிடைக்கவில்லை. ஏனென்றால் யாருக்கும் அது குறித்து ஒன்றும் தெரியவில்லை. அவனைப் பார்க்க வரும் உறவினர்களின் வருகையும் திடீரென நின்று போனது. நாளடைவில் அவனுடைய பதட்டம் அதிகரித்து வந்தது. அதற்கும் மேலாக அது குறித்து, அவனுடைய ஆர்வம் பிரம்மாண்டமாக வளர்ந்து வந்தது. உறவினர்கள் வருகை நாளன்று அவனை எச்சரிக்கை செய்யும் அவனுடைய ஆறாம் அறிவு சார்ந்த எச்சரிக்கை உணர்வும் மெல்ல மெல்ல பலமிழக்கத் துவங்கியது. குடும்பத்தின் பிரிவு அவனை மெதுவாக வாட்டத் துவங்கியது. வருகைகளின் போது உறவினர்கள் அவனுக்காகக் கொண்டு வந்த பரிசுப் பொருட்களையும், அவர்கள் பேச்சில் கனிந்திருந்த பரிவையும் நினைத்து கொஞ்ச நாட்களாக ஏங்கத் துவங்கியிருந்தான்.அவர்களையாவது கேட்டிருக்கலாம். "டோபா டேக் சிங்' இப்போது இருப்பது இந்தியாவிலா அல்லது பாகிஸ்தானிலா என்று கேட்டிருக்கலாம். இந்த விடுதிக்குக் கொண்டு வருவதற்கு முன்பிருந்த டோபா டேக் சிங் கிராமத்திலிருந்து வருபவர்கள் தான் அவர்கள் என்ற ஒரு ஊகம் அவனுக்குள் மெல்ல உருவாகத் தொடங்கி இருந்தது. அந்த விடுதியில் இருந்த ஒரு பைத்தியம் தான் ஒரு கடவுள் என்று அறிவித்தது. பிஷன் சிங் அவனிடம் ஒருநாள் சென்று அது கடவுளாக இருக்கும் பட்சத்தில் அவனுடைய சொந்த ஊரான டோபா டேக் சிங் தற்போது இருப்பது இந்தியாவிலா அல்லது பாகிஸ்தானிலா என்று மிகவும் பவ்யமாகக் கேட்டான். அதற்கு அந்தப் பைத்தியம்,

"உன் டோபா டேக் சிங் இப்போது இந்தியாவிலும் இல்லை þ பாகிஸ்தானிலும் இல்லை. ஏனென்றால் அதைப்பற்றிய ஆணையை இன்னும் நான் பிறப்பிக்க வில்லை என்று கொக்கரித்தது.

அவனுடைய பிரச்னைக்கு உடனடித் தீர்வாக, தேவையான ஆணையை உடனே பிறப்பிக்குமாறு "கடவுளை' மிகவும் பவ்யத்துடன் வேண்டினான் பிஷன் சிங். ஆனால் அவனுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஏனென்றால் அந்தக் "கடவுள்' கவனம் செலுத்துவதற்கு வேறு பல முக்கியமான பணிகள் இருந்ததால், டோபா டேக் சிங் பற்றிக் கவலைப்பட அதற்கு நேரம் கிடைக்கவில்லை. இறுதியில் பிஷன் சிங் அந்தக் கடவுளிடம் மிகவும் கோபத்துடன் ""உப்பர் தெ குர்குர் தெ மூங் தெ தால் ஆஃப் குருஜி தா கால்ஸô அண்ட் குருஜி கி ஃபதேஹ்... ஜோ போலே úஸô நிஹால்... ஸத் ஸ்ரீ அகால்...'' þ அவன் சொல்ல வந்தது என்னவென்றால், ""என்னுடைய பிரார்த்தனைகளுக்கு நீ பதில் சொல்ல வில்லை. ஏனென்றால் நீ ஒரு முஸ்லிம் கடவுள். நீ ஒரு சீக்கியக் கடவுளாக இருந்திருந்தால் எனக்கு சரியான விடை கிடைத்திருக்கும்''.



இருநாடுகளுக்கிடையயோன பைத்தியங்களைப் பரிமாற்றம் செய்யப் படுவதற்கு ஒரு நாளைக்கு முன் டோபா டேக் சிங் கிராமத்தை சேர்ந்த முஸ்லீம் நண்பர்களில் ஒருவன் இந்தப் பதினைந்து வருடங்களில் முதல் முறையாக பிஷன் சிங்கை சந்திக்க விடுதிக்கு வந்திருந்தான். பிஷன் சிங் அவனைப் பார்த்துவிட்டு சடாரென்று முகத்தைத் திருப்பிக் கொண்டான். விடுதியின் காவலன் அவனைக் கூப்பிட்டு

"வந்திருப்பது உன்னுடைய சிறுவயதுத் தோழன் ஃபஸ÷ல் உத்தீன். அவ்வளவு தூரத்திலிருந்து உன்னைப் பார்க்க வந்திருக்கிறான். அவனைப் பார்த்து இப்படி முகம் திருப்பிக் கொண்டால் எப்படி?''

என்று உரிமையுடன் கடிந்து கொண்டான். பிஷன் சிங், மெல்ல ஃபஸ÷ல் உத்தீன் பக்கமாகத் திரும்பி எதையோ புரியாதவண்ணம் முணுமுணுக்க ஆரம்பித்தான். ஃபஸ÷ல் உத்தீன் அவனிடம், ""உனக்கு இந்த செய்தியைக் கொண்டு வரவேண்டும் என்று ரொம்ப நாட்களாக எண்ணிக் கொண்டு அதற்கான சந்தர்ப்பம் வாய்க்காமலே போனது. உன்னுடைய குடும்பத்தினர் எல்லோரும் நலமாகவும் பாதுகாப்புடனும் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வித ஆபத்தும் இன்றி இந்தியா திரும்பி விட்டார்கள். ஒரு நண்பனாக உனக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து விட்டேன். உன்னுடைய மகள் ரூப் கவுர் மட்டும்... என்று தயங்கி, ரூப் கவுர் கூட இந்தியாவில் மிகவும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறாள்'' என்று அவசரமாக முடித்தான். பிஷன் சிங் அமைதியாக இருந்தான். ஃபஸ÷ல் உத்தீன் தொடர்ந்தான்.



"நீ நலமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு உன் குடும்பத்தினர் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். மிக விரைவில் உன்னையும் இந்தியாவுக்கு அனுப்பி விடுவார்கள். சகோதரன் பல்பீர் சிங், சகோதரன் வதாவா சிங் மற்றும் சகோதரி அம்ரித் கவுருக்கும் இந்த ஏழை சகோதரனை நீ நினைவு படுத்தவேண்டும் என்பதைத் தவிர இப்போதைக்கு உனக்குச் சொல்ல எனக்கு ஒன்றும் இல்லை. அல்லாஹ்வின் அருளால் ஃபஸ÷ல் உத்தீன் நலமாக இருக்கிறான் என்று சகோதரன் பல்பீர் சிங்கிடம் போய் நீ சொல்லவேண்டும். அவர்கள் விட்டுப்போன பழுப்பு நிற எருமைகள் இரண்டும் நன்றாக இருக்கினறன. அவையிரண்டும் கன்றுகளை ஈன்றிருக்கின்றன. துரதிருஷ்டவசமாக அவற்றில் ஒன்று, ஆறு நாட்களுக்குப் பின் இறந்து போனது. அவர்களை நான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன் என்று அவர்களிடம் சொல். இந்த ஏழை சகோதரனின் உதவி எதற்காவது தேவைப்பட்டால் உடனே கடிதம் எழுதச் சொல்'' என்றான்.



"இதோ உனக்காகக் கொஞ்சம் அரிசியும் கொண்டு வந்திருக்கிறேன்'' என்றான். பிஷன் சிங் ஒன்றும் பேசாது ஃபஸ÷ல் உத்தீன் கொண்டு வந்த சிறிய அரிசி மூட்டையை வாங்கி அங்கு நின்றிருந்த காவலனிடம் கொடுத்தான்.



"எல்லாம் சரி இப்போது டோபா டேக் சிங் எங்கே இருக்கிறது?''

என்று கேட்டான்.



"டோபா டேக் சிங்கா? ஏன்? அது அங்கேயேதான் அது எப்போதும் இருந்த இடத்திலேயேதான் இப்போதும் இருக்கிறது!''""இந்தியாவிலா? பாகிஸ்தானிலா?"



இந்தியாவில்... இல்லை... பாகிஸ்தானில்...பிஷன் சிங்,



மறுவார்த்தை எதுவும் பேசாது முகத்தை உடனே திருப்பிக் கொண்டு



""உப்பேர் தெ குர்குர் தெ அனெக்ஸி தெ பி தெ மூங் தெ தால் ஆஃப் தி பாகிஸ்தான் அண்ட் ஹிந்துஸ்தான் துர் ஃபிட்டே''



என்று முணுமுணுத்துக் கொண்டே வேகமாக விடுதிக்குள் ஓடிப்போனான்.அதே நேரத்தில் ஏற்கனவே தீர்மானித்தபடி இருநாடுகளுக்கு இடையிலான பைத்தியங்களைப் பரிமாறிக் கொள்ளும் ஏற்பாடுகளும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வந்தன. இரு நாடுகளின் பைத்தியக்கார விடுதிகளில் அடைக்கப் பட்டிருக்கும் பைத்தியங்களின் பெயர்ப் பட்டியலும், பரிமாற்றத்துக்கான தேதியும் மற்ற விபரங்களையும் இருநாடுகளும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன. ஒரு கடுமையான குளிர்காலத்து மாலையில், இந்து பைத்தியங்களையும் மூத்த அரசு அதிகாரிகளையும் நிரப்பிக் கொண்டு பேருந்துகள், ஆயுதங்கள் ஏந்திய போலீஸ் காவலுடன், லாகூர் பைத்தியக்கார விடுதியை விட்டு, இந்தியாþபாகிஸ்தானைப் பிரிக்கும் எல்லைக்கோடான "வாகா' எல்லையை நோக்கிக் கிளம்பின.



இருநாடுகளின் தரப்பிலிருந்தும் மூத்த அதிகாரிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரு தரப்பிலிருந்தும் அந்தப் பைத்தியங்களை பேருந்து களிலிருந்து இறக்கி, மூத்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி சாதாரணமானதாக இல்லை. அதிகாரிகளுக்கு உயிர் போய் உயிர் வந்தது. சில பைத்தியங்கள் பேருந்தை விட்டு இறங்க மாட்டேன் என அடம் பிடித்தன. மிகவும் பிரயத்தனப் பட்டு இறக்கப்பட்ட பைத்தியங்கள் திசைக்கு ஒன்றாக பிய்த்துக் கொண்டு ஓட்டம் பிடித்தன. சிலர் உடைகளைக் கிழித்து எறிந்து முழு நிர்வாணமாக நின்றனர்.



அவர்களுடைய நிர்வாணத்தை மூட முயன்ற அதிகாரிகளின் முயற்சிகள் பலிக்கவில்லை. சில பைத்தியங்கள் அந்த அதிகாரிகளின் உடைகளையும் கிழித்தெறிந்து அவர்களையும் நிர்வாணப் படுத்தி நிறுத்தினர். சிலர் உரக்கப் பாடிக்கொண்டும் சிலர் மிகவும் உரக்க, மிகவும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் எல்லோரையும் திட்டிக் கொண்டும் இருந்தனர். சிலர் உரக்க அழுது கொண்டிருந்தனர். மற்ற பைத்தியங்களுடனும் அரசு அதிகாரிகளுடனும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். சுருங்கச் சொன்னால், அங்கு உச்சகட்ட குழப்பம் நிலவியது. பரிமாற்றம் செய்ய அழைத்து வரப்பட்டிருந்த பைத்தியங்களில் பெண்களும் இருந்தனர். அவர்களும் உச்சக்குரலில் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். பற்கள் கிட்டித்துப் போகும் அளவுக்கு இருந்த வெடவெடக்கும் குளிரிலும் யாரும் கூச்சல் போடுவதை நிறுத்த வில்லை. பெரும்பான்மையான பைத்தியங்கள் அந்தப் பரிமாற்றத்தினை மிகவும் கடுமையாக எதிர்த்தனர். இருந்த விடுதிகளிலிருந்து தங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி எதுவும் புரியாத ஒரு புதிய இடத்தில் தங்களை அடைப்பதை அநேகமாக எல்லாப் பைத்தியங்களும் கடுமையாக எதிர்த்தனர்.
அங்கங்கு கோஷங்களும் எழத் தொடங்கின. சில பைத்தியங்கள், பாகிஸ்தான் ஒழிக எனக் கூச்சலிட்டன. சிலர் இந்தியா ஒழிக எனக் கோஷம் போட்டனர். இந்தக் கோஷங்களைத் தொடர்ந்து பைத்தியங்களுக்குள் அங்கங்கு மிகவும் கடுமையான சண்டைகளும் கிளம்பின. பிஷன் சிங் பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்டு அதிகாரிகளிடம் அழைத்து வரப்பட்டான். பேரேட்டில் அவனைக் கையெழுத்திடுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கு அவன் அவர்களிடம் கேட்ட ஒரே கேள்விþ ""டோபா டேக் சிங் எங்கே இருக்கிறது? இந்தியாவிலா? பாகிஸ்தானிலா? அந்த அதிகாரி மிகவும் அருவெருப்பான வகையில் உரக்க சிரித்து ""பாகிஸ்தானில்'' என்றான். பிஷன் சிங் தன்னை விடுவித்துக் கொண்டு மிக வேகமாக ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தான். பாகிஸ்தான் போலீசார் அவனை விரட்டிப் பிடித்து குண்டுக்கட்டாகத் தூக்கி இந்தியாவின் எல்லைக் கோட்டுக்கு அப்பால் தூக்கி எறிய முயற்சித்தனர். பிஷன் சிங் அசைந்து கொடுக்க வில்லை. ""இதுதான் டோபா டேக் சிங்'' என்று கடுமையான பிடிவாதத்துடன் நகர மறுத்துப் போராடினான்.



பிறகு ""உப்பேர் தெ குர்குர் தெ அனெக்ஸி தெ பி தியானா மூங் தெ தால் ஆஃப் டோபா டேக் சிங் அண்ட் பாகிஸ்தான்'' என்று உரக்க அறிவிப்பது போல கூச்சலிட ஆரம்பித்தான். டோபா டேக் சிங் ஏற்கனவே இந்தியாவுக்குப் போய்விட்டது என்று அவனுக்குப் புரிய வைக்க அவர்கள் எடுத்த கடுமையான முயற்சிகள் அனைத்தும் பயனில்லாமல் போனது.

அந்த இடத்தை விட்டு அவனை நகர்த்த முடியவில்லை. இருநாட்டுக்கும் பொதுவான எல்லைக் கோட்டில் தனது வீங்கிய கால்களுடன், பிரம்மாண்டமான ராட்சத சிலையைப் போல அவன் நின்று கொண்டிருந்தான். அப்பாவியான கிழவனாக இருந்ததால் அவனை இந்தியாவின் பக்கம் நெட்டித் தள்ள அந்த அதிகாரிகள் முயற்சிக்க வில்லை. பைத்தியங்களின் பரிமாற்றம் தொடர்ந்து கொண்டிருந்தது. அவன் நின்று கொண்டிருந்த இடத்திலேயே நின்று கொண்டிருக்க அவனை அனுமதித்தனர். இரவு கரைந்து கொண்டிருந்தது.



சூரிய உதயத்துக்குச் சற்று முன், கடந்த பதினைந்து வருடங்களாக எப்போதும் நின்று கொண்டேயிருந்த அந்த மனிதன் பெரும் கூச்சலுடன் அலறினான். அதிகாரிகள் அவனை நோக்கி விரைந்தபோது தரையில் தலைகுப்புற சரிந்து விழுந்தான். தரையில் முகம் புதைந்திருக்க அசைவின்றிக் கிடந்தான். அங்கு, மின்சாரம் பாய்ச்சிய கம்பிகளால் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலிக்கு அந்தப்பக்கம் இந்தியாவுக்கு அனுப்பப் பட்ட இந்தியாவின் பைத்தியங்கள் நின்று கொண்டிருந்தன. வலுவான மின்சாரம் பாய்ச்சிய கம்பிகளால் பாதுகாக்கப்பட்ட வேலிகளுக்கு வேறுபுறத்தில் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட பாகிஸ்தான் பைத்தியங்களும் நின்று கொண்டிருந்தன. தலை இந்தியாவை நோக்கியும் பாதங்கள் பாகிஸ்தான் அமைந்த திசையிலும் அசையாது கிடந்தான் பிஷன் சிங். மிக வலுவாக அமைக்கப்பட்ட இரண்டு பாதுôப்பு வேலிகளுக்கு இடையில் அவன் முகம் புதைத்துச் சரிந்திருந்த சிறு துண்டு நிலத்துக்கு எந்தப் பெயரும் இல்லை. அது,

="டோபா டேக் சிங்''.

Tuesday, July 3, 2007

காந்திய நெறியில் ஒரு தடம் - கோவை அய்யாமுத்து

ராகவன் தம்பி
அனைவருக்கும் வணக்கம்.

பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தத் தடம் பதித்த தமிழர்கள் தொடர் உயிர்பெற்றுள்ளது, உயிர் கொடுத்த தில்லித் தமிழ்ச் சங்கத்தின் புதிய செயற்குழுவுக்கு நன்றி.

கோவை அய்யாமுத்துவைப் பற்றிப் பேசுவதாக இதுவரை மூன்று தடவை முயற்சித்து ஏதோ காரணங்களால் தடைபட்டுக் கொண்டே போனது. இன்றும் தலைமை தாங்க வருவதாக இருந்த திரு.கார்த்திகேயன் அவர்கள் பணி நெருக்கடியால் வர இயலாமல் போனதை எனக்கான துரதிருஷ்டமாக எண்ணி வருந்துகிறேன். செய்யும் எதையும் திருந்தச் செய்ய வேண்டும் என்னும் திடம் உள்ளவர் அவர், அவருக்கு நேரத்தில் என்னால் அய்யாமுத்து குறித்த குறிப்புக்களையும் புத்தகத்தையும் அனுப்ப முடியாமல் போனது. அதற்கான முழுத்தவறும் என்னுடையதே. அத்தவறுக்குப் பொறுப்பேற்று திரு.கார்த்திகேயன் அவர்களிடமும், தில்லித் தமிழ்ச் சங்கத்திடமும் பார்வையாளர்களாகிய உங்களிடமும் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக்கோருகிறேன்.

வழக்கமாக தமிழுக்கே உரிய சாபக்கேடாக அய்யாமுத்து பற்றிய குறிப்புக்களும் நூல்களும் தமிழில் அதிகம் வரவில்லை. அவர் வாழும் காலத்திலும் மறைந்த பின்னரும் நன்றி மிகுந்த தமிழர்களாலும் அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் இயக்கத்தினராலும் வெகுவாகப் புறக்கணிக்கப்பட்டார். அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் மட்டுமே தனியொருவராக அய்யாமுத்து அவர்களின் நினைவினைப் போற்றி வருகிறார், அவருடைய நிறுவனத்தின் ஆதரவில் வெளிவரும் ஓம்சக்தி இதழ் பலமுறை அய்யாமுத்துவைப் பற்றிய நினைவுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. பொள்ளாச்சியில் அருட்செல்வர் கட்டியுள்ள திருமண மண்டபத்தில் அய்யாமுத்து மற்றும் அவருடைய துணைவியார் கோவிந்தம்மாள் ஆகியோரின் உருவப்படங்கள் அவர்கள் உயிருடன் இருந்த போதே திறந்து வைக்கப்பட்டன.

இதைத் தவிர அந்த மாபெரும் மனிதர் மற்றும் அவருடைய ஒப்பற்ற துணைவியார் பற்றிய நினைவுகள் தமிழர்களின் நினைவுத் தடத்திலிருந்து முற்றாக அழிந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

பல வருடங்களுக்கு முன் வானதி பதிப்பகம் வெளியிட்ட கோவை அய்யாமுத்துவின் எனது நினைவுகள் என்னும் அருமையான புத்தகம் பற்றி என்னுடைய நண்பன் சுரேஷ் சுப்பிரமணியன் மிகவும் சிலாகித்துப் பேசினான். அந்தப் புத்தகத்தில் அய்யாமுத்து நேர்மையாகப் பதிவு செய்திருக்கும் பல விஷயங்கள் பற்றியும் அவன் அடிக்கடி சொல்லவே சாகித்ய அகாடமியின் நூலகத்தில் அந்தப் புத்தகத்தை எடுத்து வாசித்தேன். அந்த வாசிப்பிலிருந்து என்னை மிகவும் ஈர்த்த மனிதர் ஆனார் அய்யாமுத்து. அவரைப் பற்றித் தகவல்கள் சேர்க்க முயற்சித்தேன். அவருடைய தலைமுறை மனிதர்களிடம் பேசிய போதும் அவரைப் பற்றி அதிகம் பேருக்குத் தெரிந்திருக்கவில்லை. தெரிந்த ஒரு சிலர் மிகவும் அலட்சியமான ஒரு கருத்தினை அவர் குறித்து வைத்திருந்தனர். எழுத்து வழித் தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை. அய்யாமுத்துவைப் பற்றிப் பேச ஒப்புக் கொண்டதும் சாகித்ய அகாடமி நூலகத்தில் இருந்த நூல் எங்கோ ஒüõந்து கொண்டது, பலமுறை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் பொள்ளாச்சியில் இருந்து நூலைத் தேடிப் பிடித்து எனக்காக வரவழைத்த தோழர் சக்தி பெருமாள் அவர்களுக்கு என் நன்றி என்றும் உரியது. அதேபோல அய்யாமுத்து இந்திய சுதந்திர தின வெள்ளிவிழாவில் கலந்து கொள்வதற்கு 1972ல் செய்த தில்லி விஜயத்துடன் அந்த நூல் முடிவடையும். அவருடைய அந்திம நாட்களைப் பற்றிய குறிப்பு ஓம் சக்தி இதழின் ஆசிரியர் திரு.சிதம்பரநாதன் அவர்கள் தொலைநகலில் அனுப்பி வைத்தார். அவருக்கும் என் நன்றி என்றும் உரியது.

இனி அய்யாமுத்து....கோவை மாவட்டம் காங்கயத்தை அடுத்த பரஞ்சேர்வழி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அங்கண்ணன் மாரம்மாள் தம்பதியருக்குக் கடைசிப் புதல்வராகக் கோவையில் 1898 டிசம்பரில் பிறந்தவர் அய்யாமுத்து. கொங்கு வேளாளர் சமூகத்தில் பயிரன் கூட்டத்தை சேர்ந்த மிக எளிய விவசாயக் குடும்பம் அது. மிகச் சிறிய வயதிலேயே அய்யாமுத்துவுக்கு நாடகம், இசை போன்ற கலைவடிவங்களுடன் தொடர்பு இருந்திருக்கிறது. அவருடைய மூத்த சகோதரர் நஞ்சப்பன். 1903ம் ஆண்டில் ஐந்து வயதுப்பையனாக இருந்தபோது கோயமுத்தூர் ஆதம்சா மக்கான் கொட்டகையில் நடைபெற்ற நாடகத்தில் வேடமிட அவருடைய சகோதரர் இவரை அழைத்துச் சென்றது தொடங்கி பதிவுகள் இருக்கும். அவர் நடித்தது நல்லதங்காள் நாடகம். நல்லதங்காளின் ஏழு பிள்ளைகளில் ஒருவர் இவர். நல்லதங்காள் ஒவ்வொரு பிள்ளையாகக் கிணற்றில் தள்ளும் காட்சியில் இவர் முறை வந்தபோது அதனை நிஜக் கிணறு என்று நம்பி அழுது ஊரைக் கூட்டி மேடையை விட்டு இறங்கி ஓடியதும் "இந்த சனியனை எங்கிருந்து பிடித்து வந்தாய்' என்று நல்லதங்காள் கூச்சலிட்டதையும் நடிகர் கேட்டதும் மிக அழகாகப்பதிவு செய்திருப்பார் அய்யாமுத்து.இவர் படிக்கும் காலத்தில் வ.உ.சியையும் சுப்பிரமணிய சிவாவையும் கோவை மத்திய சிறையில் அடைக்க போலீசார் விலங்கு பூட்டிக் கோவைத் தெருக்கள் வழியே இழுத்துச் சென்றதைப் பதிவு செய்திருக்கிறார். அன்றிரவு வேறு சில பையன்களுடன் சேர்ந்து வெள்ளை வெளேரென்றிருந்த சுவர்களில் வந்தேமாதரம் என்று அடுப்புக் கரித்துண்டால் கொட்டை கொட்டையாக எழுதினோம் என்று எழுதியிருக்கிறார். கோவை சுவர்களில் கரிக்கட்டையில் அன்று எழுதிய வந்தேமாதரம் அவருடைய மனதில் பதிந்து பின்னாளில் சுதந்திரப் போராளியாகவும் காங்கிரஸ் பேரியக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளவும் வழிவகை செய்திருக்க வேண்டும்.

பள்ளிப் படிக்கும் காலத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தீவிர ஆர்வம் கொண்டு இருமொழிகளையும் பேசவும் எழுதவும் தன்முனைப்புடன் கற்றிருக்கிறார். இளமையில் வெள்ளைக்காரப் பிள்ளைகளுடன் விளையாட்டு மற்றும் குத்துசண்டை முதலியன போட்டியிருக்கிறார். இளமையிலேயே அவருக்குக் கிடைத்த இந்த அனுபவங்கள் பிற்காலத்தில் அவரை மகாதுணிச்சல்காரராக மாற்றியிருக்கிறது. 1918ல் முதல் உலகப்போரின் போது ஐரோப்பியப் படையில் சேர்ந்து பஸ்ரா, மெஸபடோமியா போன்ற நாடுகளில் பணியாற்றியிருக்கிறார். போர் முடிந்து ஊர் திரும்பி வந்து 1921ல் கிணத்துக்கடவைச் சேர்ந்த கோவிந்தம்மாளை மணம் செய்து கொண்டார். 1921ல் கோவைக்கு வருகை தந்த காந்தியின் உரை இத்தம்பதியரை மிகவும் பாதித்துவிட இருவரும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டனர். சுதந்திரப் போராட்டத்தில் தம்பதி சமேதராகப் பங்கு கொள்கின்றனர்.1923ல் கோவையில் குடியேறிய அய்யாமுத்து þ கோவிந்தம்மாள் தம்பதியினர் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு ஊர் ஊராக கதர் விற்பனையில் ஈடுபட்டனர். இக்காலத்தில் தான் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்த ஈ.வெ.ராவின் தொடர்பு அய்யாமுத்துவுக்குக் கிட்டுகிறது. கோவையில் அகில பாரத சர்க்கா சங்கத்தின் கதர் உற்பத்திசாலையை நிறுவி பணியாற்றி வருகிறார். அப்போது (1931) போலீஸ் குடியிருப்பில் அக்குடியிருப்பின் கிணற்றில் தண்ணீர் எடுக்க ஒரு தலித் போலீஸ் காவலரை மற்ற ஜாதிகளை சேர்ந்த போலீசார் அனுமதி மறுத்தனர். இதைக் கேள்விப்பட்ட அய்யாமுத்து தன் மனைவியுடன் அங்கு சென்று அந்தத் கிணற்றுக்கு அழைத்துச் சென்று அந்தப் பொதுக்கிணற்றில் தண்ணீர் இறைக்கின்றனர். ஊர்மக்கள் எல்லோருக்கும் கோபம் பொங்குகிறது. அய்யாமுத்துவை அடித்துக் கொல்ல ஒரு கூட்டம் வருவதாக செய்தி கிடைக்கிறது. அய்யாமுத்துவின் மனைவி தங்கள் கதர்க் கடைக்கு முன் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அய்யாமுத்துவை உட்கார வைக்கிறார். வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தைப் பார்த்து அவர் தன்னுடைய கணவர் இறந்ததும் மாரடித்து அழுவதற்கு பின்னர் வருமாறு அழைக்கிறார். இத்தம்பதியினரின் மன உறுதியினைப் பார்த்து கோவை நகரமே வாய்பிளந்திருக்கிறது அன்று.

1924ல் பெரியாரின் அழைப்பின் பேரில் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். வைக்கம் போராட்டத்தின் போது பாரதியாரின் பாடல்களை உரத்த குரலில் பாடிக்கொண்டு நகர்ப்பிரவேசம் செய்திருக்கிறார் அய்யாமுத்து. பின்னாளில் தமிழகத்தில் சுதந்திரப் போரின்போது பாரதியார் பாடல்களை பாடிச் செல்வதற்கு ஒரு முன்னோடியாக செயல்பட்டிருக்கிறார் அவர். இப்போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பலமாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார்.சுசீந்திரம் ஆலயப்பிரவேசப் போராட்டத்திலும் தீவிரப் பங்கேற்றார். 1926ல் பாரத சர்க்கா சங்கத்தின் தமிழ்நாட்டு செயலாளர் எஸ்.இராமநாதன் வேண்டுகோளை ஏற்று எர்ணாகுளம் வஸ்திராலயத்தை வழிநடத்தினார்.1931ம் வருடம் திருநெல்வேலியில் முதலாவது விவசாயிகள், தொழிலாளர்கள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டின் திறப்பாளராக அழைக்கப்ட்டார் அய்யாமுத்து. சர்தார் வேதரத்தினம் பிள்ளை தலைமை. திறப்புரையை பல நாட்களுக்கு முன்னரே எழுதி அனுப்பினார் அய்யாமுத்து. அதை அச்சிட்டுக் கொடுக்க பல அச்சகத்தினர் மறுத்துவிடுகின்றனர். அந்த அளவு அந்நியர் ஆட்சியை எதிர்த்துக் காட்டமாக எழுதப்பட்டிருந்தது அந்தத் திறப்புரை. அந்தக் கூட்டத்தில் வேதரத்தினம்பிள்ளை காந்தியை அரிச்சந்திரனுடன் ஒப்பிட்டுப் பேச, அய்யாமுத்து அரிச்சந்திரன் ஏற்கனவே நாடு நகரத்தை விசுவாமித்திரன் பெயருக்கு எழுதிவிட்டான். அதில் பொன்னும் பொருளும் அடக்கம். ஆனால் அவனுக்குத் தரவேண்டிய பொன்னுக்காக தானும், மனைவி மகனுடன் அடிமையான அரிச்சந்திரன் அடிமுட்டாள் என்றும் காந்தியார் அப்படிப்பட்ட முட்டாள் அல்ல என்றும் பேசியிருக்கிறார். என்ன காரணத்தால் இவரை கைது செய்யலாம் என்று பார்த்த ஆங்கிலேய அரசு அரிச்சந்திரனைப் பழித்துப் பேசியதால் இந்துக்களின் மனதைப் புண்படுத்தியதாக அவருக்கு ஆறுமாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்குப் பிறகு இவரும் இவருடைய துணைவியாரும் எண்ணிலடங்கா முறை சிறைவாசம் அனுபவித்திருக்கின்றனர்.அயர்வறியாத உழைப்பாளி என்று காந்தியாரால் பாராட்டப்பெற்ற அய்யாமுத்து 1933ல் திருப்பூர் கதர் வஸ்திராலயத் தலைவரானார். 1936ல் தமிழ்நாடு சர்க்கா சங்கத் தலைவரானார். பம்பரம் போல் சுழன்று பணியாற்றி இழப்பில் இருந்த அந்த சங்கத்தை லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றினார். 1940 வரை கதர் இயக்கத்தின் தீவிர வெற்றிக்குக் காரணமாக இருந்தனர்.

1932ல் காந்தியடிகள் சிறைப்பிடிக்கப்பட்டதை எதிர்த்துப் போராடியதால் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்றார் அவருடைய துணைவியார். அதேபோல அய்யாமுத்துவும் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை அடைத்திருக்கும் கண்டம்டு செல்லில் கால்களில் இரும்பு வளையங்கள் பூட்டி அடைக்கப்பட்டார். 1934ல் திருப்பூரில் அகில பாரத சர்க்கா சங்கக் காதிவஸ்திராலய முதல்வராகப் பணியில் இருந்தபோது அவருடைய தாயார் இறந்த செய்தி வருகிறது. அந்த நேரம் அய்யாமுத்துவின் துணைவியார் கோவிந்தம்மாள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கோவையில் அவருடைய சொந்தங்கள் மற்றும் ஜாதியினரின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் தலித் மாணவர்களுக்குப் பாடசாலை நடத்தினார். உண்மை நாடுவோர் சங்கம் ஒன்றை நிறுவி கிராம வாலிபர் பலர் அதில் பங்கு கொண்டு பல விஷயங்களைப் பற்றி விவாதிக்கச் செய்தார். இந்த நேரத்தில் பஞ்சமாபாதகங்கள் என்னும் ஒரு நூலை எழுதிகிறார் அய்யாமுத்து. இந்நூலைப் பற்றி பெரியார் குடியரசுவில் மிகவும் பாராட்டி தலையங்கம் எழுதியிருக்கிறார். இந்நிலையில் ஒரு நாள் பெரியார் இவரைத் தேடிக்கொண்டு இவர் இருந்த புளியம்பட்டிக்கே வந்திருக்கிறார். ஈரோட்டிலிருந்து வெளிவரும் குடியரசு வாரப்பத்திரிகையில் எழுதச் சொல்லிக் கேட்டுக் கொள்ளவே பல கட்டுரைகளை குடியரசில் எழுதியுள்ளார். சில சமயம் தான் எழுதாதவைகளையும் பெரியார் பிரசுரித்ததாக ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். பின்னர் பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க சென்னைக்குக் குடிபெயர்ந்த குடியரசு பத்திரிகையின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் அய்யாமுத்து. நட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த குடியரசு சென்னைக்கு வந்ததும் அய்யாமுத்துவின் நிர்வாகத்தில் செழிக்கத் துவங்கியது. நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் முன்னர் அய்யாமுத்துவின் அனைத்து நிபந்தனைகளையும் பெரியார் ஏற்றார். ஒரு நாள் பகல் குடியரசு அலுவலகத்தில் கண்ணப்பரும் பெரியாரும் சாப்பிட உட்கார்ந்திருக்கிறார்கள். பெரியார் வந்ததைத் தெரிந்து கொண்ட அய்யாமுத்துவின் துணைவியார் எப்போதையும் விசேஷமாகவும் அதிகமாகவும் சாப்பாடு அனுப்பியிருக்கிறார். ""அய்யாமுத்து தனது யோக்கியதைக்கு மீறிய சாப்பாடு சாப்பிடுகிறார்'' என்று கண்ணப்பனிடம் பெரியார் சொன்னது இவர் காதில் விழுந்திருக்கிறது. உடனே மேஜை மேல் இருந்த சாவியை எடுத்து பெரியாரின் முகத்தில் விட்டெறிந்து நில்லாமல் சொல்லாமல் வீடு போய் சேர்ந்திருக்கிறார். வீட்டுக்கும் ரயில் நிலையத்துக்கும் தேடி வந்த பெரியாரால் இவரை சமாதானப்படுத்த முடியவில்லை. ஆனால் இந்த சம்பவம் பெரியாருடன் அய்யாமுத்து வைத்திருந்த நட்பினை முறித்துவிட வில்லை. வேறு பல சந்தர்பங்களில் சுயமரியாதை மாநாடுகளின்போதும் பொதுக்கூட்டங்களின்போதும் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்கின்றனர். பல மாநாடுகளின் தீர்மானங்களின்போது பெரியாரை மிகவும் பலமாக ஆதரித்து இருக்கிறார் அய்யாமுத்து. அதேபோல பெரியாரும் அய்யாமுத்துவைப் பற்றி பல இடங்களில் மிகவும் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார். ம.பொ.சிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அஞ்சா நெஞ்சன் என்ற பெயருக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் அய்யாமுத்து என்று பதிவு செய்திருக்கிறார்.

அதே போல அய்யாமுத்து மகாத்மா காத்தியையும் விட்டுவைக்கவில்லை. காதி வஸ்திராலயம் தொடர்பான ஒரு விஷயத்தில் நியாயத்துக்காக மிகவும் வலுவாகப் போராடினார். இவருடைய வாதத்தில் இருந்த உண்மையைக் காந்தி இவரிடம் மன்னிப்புக் கேட்டு மன்னிப்புக் கடிதம் ஒன்றினை எழுதியிருக்கிறார்.ஒரு கட்டத்தில் காந்தியுடனான இவருடைய தகராறு முற்றி காந்தியடிகள் இவரிடம் ஒரு கடிதம் கொடுத்தார். அதில்

My dear ayyamuthu

I do hereby resign my President ship of the All India Chakra Sangh.

Yours truly,

Bapu.
என்று எழுதப்பட்டிருந்தது. அதற்கு அய்யாமுத்து காந்தியிடம்,

Why to me? Give it to your creator
என்று சொல்லி அந்தக் கடிதத்தை காந்தியிடமே திருப்பிக் கொடுத்தார்.
Oh, you want me to send my resignation to my Creator and you submit yours to me. That won't do. Now I tear both. Get back to Tirupur and carry on as usual as a good boy
என்று அய்யாமுத்துவை கஸ்தூரிபாய் அவர்களிடம் அனுப்பி சாப்பிட்டு விட்டு போகச் சொல்லியிருக்கிறார் காந்தியடிகள்.இவர் ராஜாஜியை தந்தையென்று அழைப்பார். ராஜாஜி என் தந்தை என்னும் தலைப்பில் ஒரு நூலே எழுதியுள்ளார். பிற்காலத்தில் 1960லிருந்து 1967 வரை அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ராஜாஜி உறவு கொண்டது வரை சுதந்திராக் கட்சியில் இருந்தவர் அய்யாமுத்து. ராஜாஜியுடன் அவர் தனித்து உரையாடிக் கொண்டிருந்தபோது ஒருமுறை கோவையில் சுதந்திராக் கட்சிக்கு தனித்த அலுவலம் வேண்டும் என்றிருக்கிறார். எதற்கு சீட்டாடவா என்று கேட்டாராம் ராஜாஜி. பத்திரிகை வேண்டும் என்று கேட்டதற்கு சுயவிளம்பரம் தேடிக்கொள்ளவா என்றாராம் ராஜாஜி. அதற்கு அய்யாமுத்து, உங்கள் கட்சி உருப்படாது என்றும் இப்போதுள்ள நிலையில் இன்னும் ஆயிரம் வருஷத்துக்கு முயன்றாலும் உங்கள் கட்சி ஜெயிக்காது என்று ராஜாஜியின் முகத்தில் அடித்துச் சொல்லியிருக்கிறார்.நாற்பதுகளில் கதர் இயக்கத்துக்காகக் குடிநூல் என்னும் இதழை நடத்தி வந்தார். 1950ல் நாசிக் காங்கிரஸ் மாநாட்டுக்குப் பின் தீவிர அரசியலை விட்டு ஒதுங்கினார். 1951ல் கோவை þ பொள்ளாச்சி சாலையில் கோதைவாடி என்னும் ஊருக்கு அருகில் 23 ஏக்கர் நிலம் வாங்கி காந்தி பண்ணை என்று பெயரிட்டு வேளாண்மை செய்து வந்தார். தம் இல்லத்துக்கு ராஜாஜி இல்லம் என்று பெயர் சூட்டினார்.
மூன்று முறை இதயநோயால் தாக்கப்பட்டு நலிவுற்ற அய்யாமுத்து 21-12-1975ல் காலமானார். இவர் காலமான அடுத்த வாரமே 27-12-1975ல் இவருடைய துணைவியார் கோவிந்தம்மாளும் காலமானார்.

தங்கள் மறைவுக்கு முன் தங்கள் நிலத்தை நாட்டுப் பணிக்குப் பயன்படுத்தும்படி அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களுக்கு ஒப்படைத்தனர் இந்த ஆதர்சத் தம்பதியினர். இப்போது அந்நிலம் சர்வோதய சங்கத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.அய்யாமுத்துவின் என் நினைவுகள் என்ற நூலின் தனிச்சிறப்பு என்று சொல்வதற்கு அதில் செய்யப்பட்டுள்ள மிக நேர்மையான பதிவுகள். அதேபோல காலம் மிக அற்புதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல அரசியல் ஜாம்பவான்களால் எழுதப்பட்ட சுயதம்பட்டங்களும் சொந்தக் கதைகளும் விஷயமங்களும், பொய்யும் புனைசுருட்டுக்களும் மிகுந்த சுயவாழ்க்கை வரலாற்றுக் குப்பைகளைப் படித்துச் சலித்துப்போன தமிழனுக்கு ஒரு வாழ்க்கை வரலாற்றினை எத்தனை நேர்மையாக எழுதமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது இவருடைய எனது நினைவுகள் .அரசியல் மட்டுமல்லாது பல துறைகளில் ஆர்வம் கொண்டு விளங்கியிருக்கிறார். அந்தக் கால நாடகங்கள் பற்றிய அவருடைய பதிவுகள் நாடகங்களில் ஆய்வு செய்பவர்களுக்கு கிடைத்த மிக அற்புதமான பொக்கிஷம். திரையை விலக்கியதிலிருந்து கட்டியக்காரன் பிரவேசம், ராஜபார்ட், ஸ்திரீபார்ட் பிரவேசத்திலிருந்து நாடகப் பாடல்முறைகள், இசைவகைகள் போன்றவற்றை மிகவும் விரிவாக எழுதியிருப்பார். அவரே எழுதிய இன்பசாகரன் என்னும் நாடகம் அந்தக்காலத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட ஒன்று. ராஜபக்தி என்னும் அரசியல் நாடகம் பல சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்த நாடகம் எழுதியதற்காகவும் கைது செய்யப்பட்டிருக்கிறார். பின்னாளில் நவாப் டி.எஸ்.ராஜமாணிக்கம் பிள்ளையுடன் ஆழ்ந்த நட்பு பூண்டிருக்கிறார் அய்யாமுத்து. நவாப் ராஜமாணிக்கத்துக்கு மிகவும் ஆதரவாக இருந்து அவருக்குத் திருமணம் செய்வித்ததல்லாது அவருடைய மகனுடைய திருமணத்தையும் நடத்தி வைத்தார் அய்யாமுத்து. தொழுநோயால் பாதிக்கப்பட்ட கோவிந்தன் என்னும் தொழில்முறை நடிகருக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததோடு மட்டுமல்லாது அவருக்குப் பலவகைகளிலும் உதவியர்கள் அய்யாமுத்து தம்பதியினர். ராஜமாணிக்கம் பிள்ளையை திரைப்படங்களிலும் அறிமுகப்படுத்தினார். அய்யாமுத்துவே மோலியரின் கஞ்சன் என்னும் நாடகத்தைத் தழுவி திரைப்படமாக எடுத்தருக்கிறார். இது அக்காலத்தில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம். பாரதிதாசனுக்கு மிகநெருக்கமான நண்பராக இருந்திருக்கிறார் அய்யாமுத்து. பாரதிதாசனின் கவிதா மண்டலத்தில் அய்யாமுத்துவின் பல கவிதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. இவருடைய தேய்ந்த லாபம் என்னும் கவிதைத் தொகுப்பு பாரதிதாசனால் வெளியிடப்பட்டது.அய்யாமுத்து எழுதிய நூல்கள் þ தேசத்தொண்டனும் கிராமவாசியும், பஞ்சமா பாதகங்கள், மேயோ கூற்று மெய்யா பொய்யா (இதை பெரியார் பதிப்பித்தார்) இராமசாமியும் கதரும், நச்சுப்பொய்கை, இராஜபக்தி, மேவாரின் வீழ்ச்சி, பிச்சைக்காரி, அக்காளும் தங்கையும், நாட்டுப்புறம், சோசலிசம், சுதந்திரா கட்சி ஏன், எங்கே செல்கிறோம், சுதந்திரனுக்கு முன்னும் பின்னும், சென்னை சர்க்காரின் கதர்த்திட்டம், திருவிழா போன்றவை. இந்த நூல்கள் எவையும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நூலகத்தில் இல்லை.நான் ஏற்கனவே சொன்னதுபோல இவருடைய பதிவுகள் மிகவும் அற்புதமானவை. நேர்மையானவை. அவற்றில் ஒன்றிரண்டைப் படித்து என் உரையை முடிக்கிறேன்.அக்கால நாடகங்கள் பற்றி எழுதியிருப்பார் þசாம்பிராணிப்புகை காட்டுவார்கள். முன்திரை தூக்கப்படும். பபூன் என்னும் கோமாளி ஆடிப்பாடி மேடையில் காட்சியளிப்பான். அவனைத் தொடர்ந்து சூத்திரதார் வருவார். புல்லாகிப் பூடாகிப் புழுவாகி... எல்லாப் பிறப்பிலும் மானிட ஜன்மமே சிறந்ததென ஒரு சிற்றுரை ஆற்றி சரஸ்வதியை ஸ்தோத்திரம் செய்வார்.சரஸ்வதி வேடம் தாங்க ஆள் இருந்தால், சரஸ்வதி பிரத்யட்சமாவாள். இல்லையேல் திரையின் பின்னாலிருந்து சரஸ்வதியின் குரல் மட்டுமே கேட்கும்.தாயே இன்று இன்ன நாடகம் நடத்த உத்தேசித்திருக்கிறோம். அது நன்கு நிறைவேற அருள்புரிய வேண்டுமென சூத்திரதாரர் சரஸ்வதியிடம் வரம் கேட்பார்.அப்படியே ஆகட்டும் என சரஸ்வதி அருள்புரிவாள்.தட்டுவாணி நமஸ்கரிக்கிறேன். என்பான் கோமாளி.தூஷித்த நீ ஊமையாகக் கடவது என்று சபிப்பாள் சரஸ்வதி. கோமாளி ஊமையாகித் ததாபுதா என்பான்.தாயே தட்டு என்றால் கமலம். வாணியென்றால் சரஸ்வதி. தங்களை கமல சரஸ்வதி என்றுதானே விளித்தான் அவன். அதற்காகத் தாங்கள் கோபம் அடையலாமா என்று சூத்திரதாரர் பரிவுடன் சரஸ்வதியுடன் மன்றாடுவார். அவனது விகடத்தை மெச்சினேன். அவன் வாய்திறந்து பேசுவானாக என்று சரஸ்வதி கூறவும் விதூஷகன் வாய்திறந்து வணக்கம் தானே என்பான்.இப்படிப்போகும் பதிவுகள்.அதே போல கோவை மாநகரம் பற்றியும் அதன் தொழிலாளர்கள் பற்றியும் நாதஸ்வர வித்வான் அங்கண்ணன் பற்றியும் கோவையில் பிளேக் நோய் பரவியது பற்றியும் அவருடைய பதிவுகள் மிகவும் சுவாரசியமானவை.படிக்கப் படிக்க சுவாரஸ்யம் ஊட்டும் பதிவுகள் அவை. இதை நான் மேலும் படிப்பதை விட திரு.பெருமாள் அவர்கள் இந்தக் கட்டுரைக்காக எனக்குக் கொடுத்த அய்யாமுத்துவின் எனது நினைவுகள் நூலை அவருடைய அனுமதியுடன் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நூலகத்துக்கு அளிக்கிறேன். என்னுடைய இந்தக் கட்டுரையால் உந்தப்பட்டு அய்யாமுத்துவை யாரேனும் ஒருவராவது அதைப் படிப்பார்கள் என்றால் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவேன்.நன்றி.

வணக்கம்.