Tuesday, July 3, 2007

காந்திய நெறியில் ஒரு தடம் - கோவை அய்யாமுத்து

ராகவன் தம்பி
அனைவருக்கும் வணக்கம்.

பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தத் தடம் பதித்த தமிழர்கள் தொடர் உயிர்பெற்றுள்ளது, உயிர் கொடுத்த தில்லித் தமிழ்ச் சங்கத்தின் புதிய செயற்குழுவுக்கு நன்றி.

கோவை அய்யாமுத்துவைப் பற்றிப் பேசுவதாக இதுவரை மூன்று தடவை முயற்சித்து ஏதோ காரணங்களால் தடைபட்டுக் கொண்டே போனது. இன்றும் தலைமை தாங்க வருவதாக இருந்த திரு.கார்த்திகேயன் அவர்கள் பணி நெருக்கடியால் வர இயலாமல் போனதை எனக்கான துரதிருஷ்டமாக எண்ணி வருந்துகிறேன். செய்யும் எதையும் திருந்தச் செய்ய வேண்டும் என்னும் திடம் உள்ளவர் அவர், அவருக்கு நேரத்தில் என்னால் அய்யாமுத்து குறித்த குறிப்புக்களையும் புத்தகத்தையும் அனுப்ப முடியாமல் போனது. அதற்கான முழுத்தவறும் என்னுடையதே. அத்தவறுக்குப் பொறுப்பேற்று திரு.கார்த்திகேயன் அவர்களிடமும், தில்லித் தமிழ்ச் சங்கத்திடமும் பார்வையாளர்களாகிய உங்களிடமும் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக்கோருகிறேன்.

வழக்கமாக தமிழுக்கே உரிய சாபக்கேடாக அய்யாமுத்து பற்றிய குறிப்புக்களும் நூல்களும் தமிழில் அதிகம் வரவில்லை. அவர் வாழும் காலத்திலும் மறைந்த பின்னரும் நன்றி மிகுந்த தமிழர்களாலும் அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் இயக்கத்தினராலும் வெகுவாகப் புறக்கணிக்கப்பட்டார். அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் மட்டுமே தனியொருவராக அய்யாமுத்து அவர்களின் நினைவினைப் போற்றி வருகிறார், அவருடைய நிறுவனத்தின் ஆதரவில் வெளிவரும் ஓம்சக்தி இதழ் பலமுறை அய்யாமுத்துவைப் பற்றிய நினைவுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. பொள்ளாச்சியில் அருட்செல்வர் கட்டியுள்ள திருமண மண்டபத்தில் அய்யாமுத்து மற்றும் அவருடைய துணைவியார் கோவிந்தம்மாள் ஆகியோரின் உருவப்படங்கள் அவர்கள் உயிருடன் இருந்த போதே திறந்து வைக்கப்பட்டன.

இதைத் தவிர அந்த மாபெரும் மனிதர் மற்றும் அவருடைய ஒப்பற்ற துணைவியார் பற்றிய நினைவுகள் தமிழர்களின் நினைவுத் தடத்திலிருந்து முற்றாக அழிந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

பல வருடங்களுக்கு முன் வானதி பதிப்பகம் வெளியிட்ட கோவை அய்யாமுத்துவின் எனது நினைவுகள் என்னும் அருமையான புத்தகம் பற்றி என்னுடைய நண்பன் சுரேஷ் சுப்பிரமணியன் மிகவும் சிலாகித்துப் பேசினான். அந்தப் புத்தகத்தில் அய்யாமுத்து நேர்மையாகப் பதிவு செய்திருக்கும் பல விஷயங்கள் பற்றியும் அவன் அடிக்கடி சொல்லவே சாகித்ய அகாடமியின் நூலகத்தில் அந்தப் புத்தகத்தை எடுத்து வாசித்தேன். அந்த வாசிப்பிலிருந்து என்னை மிகவும் ஈர்த்த மனிதர் ஆனார் அய்யாமுத்து. அவரைப் பற்றித் தகவல்கள் சேர்க்க முயற்சித்தேன். அவருடைய தலைமுறை மனிதர்களிடம் பேசிய போதும் அவரைப் பற்றி அதிகம் பேருக்குத் தெரிந்திருக்கவில்லை. தெரிந்த ஒரு சிலர் மிகவும் அலட்சியமான ஒரு கருத்தினை அவர் குறித்து வைத்திருந்தனர். எழுத்து வழித் தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை. அய்யாமுத்துவைப் பற்றிப் பேச ஒப்புக் கொண்டதும் சாகித்ய அகாடமி நூலகத்தில் இருந்த நூல் எங்கோ ஒüõந்து கொண்டது, பலமுறை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் பொள்ளாச்சியில் இருந்து நூலைத் தேடிப் பிடித்து எனக்காக வரவழைத்த தோழர் சக்தி பெருமாள் அவர்களுக்கு என் நன்றி என்றும் உரியது. அதேபோல அய்யாமுத்து இந்திய சுதந்திர தின வெள்ளிவிழாவில் கலந்து கொள்வதற்கு 1972ல் செய்த தில்லி விஜயத்துடன் அந்த நூல் முடிவடையும். அவருடைய அந்திம நாட்களைப் பற்றிய குறிப்பு ஓம் சக்தி இதழின் ஆசிரியர் திரு.சிதம்பரநாதன் அவர்கள் தொலைநகலில் அனுப்பி வைத்தார். அவருக்கும் என் நன்றி என்றும் உரியது.

இனி அய்யாமுத்து....கோவை மாவட்டம் காங்கயத்தை அடுத்த பரஞ்சேர்வழி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அங்கண்ணன் மாரம்மாள் தம்பதியருக்குக் கடைசிப் புதல்வராகக் கோவையில் 1898 டிசம்பரில் பிறந்தவர் அய்யாமுத்து. கொங்கு வேளாளர் சமூகத்தில் பயிரன் கூட்டத்தை சேர்ந்த மிக எளிய விவசாயக் குடும்பம் அது. மிகச் சிறிய வயதிலேயே அய்யாமுத்துவுக்கு நாடகம், இசை போன்ற கலைவடிவங்களுடன் தொடர்பு இருந்திருக்கிறது. அவருடைய மூத்த சகோதரர் நஞ்சப்பன். 1903ம் ஆண்டில் ஐந்து வயதுப்பையனாக இருந்தபோது கோயமுத்தூர் ஆதம்சா மக்கான் கொட்டகையில் நடைபெற்ற நாடகத்தில் வேடமிட அவருடைய சகோதரர் இவரை அழைத்துச் சென்றது தொடங்கி பதிவுகள் இருக்கும். அவர் நடித்தது நல்லதங்காள் நாடகம். நல்லதங்காளின் ஏழு பிள்ளைகளில் ஒருவர் இவர். நல்லதங்காள் ஒவ்வொரு பிள்ளையாகக் கிணற்றில் தள்ளும் காட்சியில் இவர் முறை வந்தபோது அதனை நிஜக் கிணறு என்று நம்பி அழுது ஊரைக் கூட்டி மேடையை விட்டு இறங்கி ஓடியதும் "இந்த சனியனை எங்கிருந்து பிடித்து வந்தாய்' என்று நல்லதங்காள் கூச்சலிட்டதையும் நடிகர் கேட்டதும் மிக அழகாகப்பதிவு செய்திருப்பார் அய்யாமுத்து.இவர் படிக்கும் காலத்தில் வ.உ.சியையும் சுப்பிரமணிய சிவாவையும் கோவை மத்திய சிறையில் அடைக்க போலீசார் விலங்கு பூட்டிக் கோவைத் தெருக்கள் வழியே இழுத்துச் சென்றதைப் பதிவு செய்திருக்கிறார். அன்றிரவு வேறு சில பையன்களுடன் சேர்ந்து வெள்ளை வெளேரென்றிருந்த சுவர்களில் வந்தேமாதரம் என்று அடுப்புக் கரித்துண்டால் கொட்டை கொட்டையாக எழுதினோம் என்று எழுதியிருக்கிறார். கோவை சுவர்களில் கரிக்கட்டையில் அன்று எழுதிய வந்தேமாதரம் அவருடைய மனதில் பதிந்து பின்னாளில் சுதந்திரப் போராளியாகவும் காங்கிரஸ் பேரியக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளவும் வழிவகை செய்திருக்க வேண்டும்.

பள்ளிப் படிக்கும் காலத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தீவிர ஆர்வம் கொண்டு இருமொழிகளையும் பேசவும் எழுதவும் தன்முனைப்புடன் கற்றிருக்கிறார். இளமையில் வெள்ளைக்காரப் பிள்ளைகளுடன் விளையாட்டு மற்றும் குத்துசண்டை முதலியன போட்டியிருக்கிறார். இளமையிலேயே அவருக்குக் கிடைத்த இந்த அனுபவங்கள் பிற்காலத்தில் அவரை மகாதுணிச்சல்காரராக மாற்றியிருக்கிறது. 1918ல் முதல் உலகப்போரின் போது ஐரோப்பியப் படையில் சேர்ந்து பஸ்ரா, மெஸபடோமியா போன்ற நாடுகளில் பணியாற்றியிருக்கிறார். போர் முடிந்து ஊர் திரும்பி வந்து 1921ல் கிணத்துக்கடவைச் சேர்ந்த கோவிந்தம்மாளை மணம் செய்து கொண்டார். 1921ல் கோவைக்கு வருகை தந்த காந்தியின் உரை இத்தம்பதியரை மிகவும் பாதித்துவிட இருவரும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டனர். சுதந்திரப் போராட்டத்தில் தம்பதி சமேதராகப் பங்கு கொள்கின்றனர்.1923ல் கோவையில் குடியேறிய அய்யாமுத்து þ கோவிந்தம்மாள் தம்பதியினர் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு ஊர் ஊராக கதர் விற்பனையில் ஈடுபட்டனர். இக்காலத்தில் தான் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்த ஈ.வெ.ராவின் தொடர்பு அய்யாமுத்துவுக்குக் கிட்டுகிறது. கோவையில் அகில பாரத சர்க்கா சங்கத்தின் கதர் உற்பத்திசாலையை நிறுவி பணியாற்றி வருகிறார். அப்போது (1931) போலீஸ் குடியிருப்பில் அக்குடியிருப்பின் கிணற்றில் தண்ணீர் எடுக்க ஒரு தலித் போலீஸ் காவலரை மற்ற ஜாதிகளை சேர்ந்த போலீசார் அனுமதி மறுத்தனர். இதைக் கேள்விப்பட்ட அய்யாமுத்து தன் மனைவியுடன் அங்கு சென்று அந்தத் கிணற்றுக்கு அழைத்துச் சென்று அந்தப் பொதுக்கிணற்றில் தண்ணீர் இறைக்கின்றனர். ஊர்மக்கள் எல்லோருக்கும் கோபம் பொங்குகிறது. அய்யாமுத்துவை அடித்துக் கொல்ல ஒரு கூட்டம் வருவதாக செய்தி கிடைக்கிறது. அய்யாமுத்துவின் மனைவி தங்கள் கதர்க் கடைக்கு முன் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அய்யாமுத்துவை உட்கார வைக்கிறார். வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தைப் பார்த்து அவர் தன்னுடைய கணவர் இறந்ததும் மாரடித்து அழுவதற்கு பின்னர் வருமாறு அழைக்கிறார். இத்தம்பதியினரின் மன உறுதியினைப் பார்த்து கோவை நகரமே வாய்பிளந்திருக்கிறது அன்று.

1924ல் பெரியாரின் அழைப்பின் பேரில் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். வைக்கம் போராட்டத்தின் போது பாரதியாரின் பாடல்களை உரத்த குரலில் பாடிக்கொண்டு நகர்ப்பிரவேசம் செய்திருக்கிறார் அய்யாமுத்து. பின்னாளில் தமிழகத்தில் சுதந்திரப் போரின்போது பாரதியார் பாடல்களை பாடிச் செல்வதற்கு ஒரு முன்னோடியாக செயல்பட்டிருக்கிறார் அவர். இப்போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பலமாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார்.சுசீந்திரம் ஆலயப்பிரவேசப் போராட்டத்திலும் தீவிரப் பங்கேற்றார். 1926ல் பாரத சர்க்கா சங்கத்தின் தமிழ்நாட்டு செயலாளர் எஸ்.இராமநாதன் வேண்டுகோளை ஏற்று எர்ணாகுளம் வஸ்திராலயத்தை வழிநடத்தினார்.1931ம் வருடம் திருநெல்வேலியில் முதலாவது விவசாயிகள், தொழிலாளர்கள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டின் திறப்பாளராக அழைக்கப்ட்டார் அய்யாமுத்து. சர்தார் வேதரத்தினம் பிள்ளை தலைமை. திறப்புரையை பல நாட்களுக்கு முன்னரே எழுதி அனுப்பினார் அய்யாமுத்து. அதை அச்சிட்டுக் கொடுக்க பல அச்சகத்தினர் மறுத்துவிடுகின்றனர். அந்த அளவு அந்நியர் ஆட்சியை எதிர்த்துக் காட்டமாக எழுதப்பட்டிருந்தது அந்தத் திறப்புரை. அந்தக் கூட்டத்தில் வேதரத்தினம்பிள்ளை காந்தியை அரிச்சந்திரனுடன் ஒப்பிட்டுப் பேச, அய்யாமுத்து அரிச்சந்திரன் ஏற்கனவே நாடு நகரத்தை விசுவாமித்திரன் பெயருக்கு எழுதிவிட்டான். அதில் பொன்னும் பொருளும் அடக்கம். ஆனால் அவனுக்குத் தரவேண்டிய பொன்னுக்காக தானும், மனைவி மகனுடன் அடிமையான அரிச்சந்திரன் அடிமுட்டாள் என்றும் காந்தியார் அப்படிப்பட்ட முட்டாள் அல்ல என்றும் பேசியிருக்கிறார். என்ன காரணத்தால் இவரை கைது செய்யலாம் என்று பார்த்த ஆங்கிலேய அரசு அரிச்சந்திரனைப் பழித்துப் பேசியதால் இந்துக்களின் மனதைப் புண்படுத்தியதாக அவருக்கு ஆறுமாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்குப் பிறகு இவரும் இவருடைய துணைவியாரும் எண்ணிலடங்கா முறை சிறைவாசம் அனுபவித்திருக்கின்றனர்.அயர்வறியாத உழைப்பாளி என்று காந்தியாரால் பாராட்டப்பெற்ற அய்யாமுத்து 1933ல் திருப்பூர் கதர் வஸ்திராலயத் தலைவரானார். 1936ல் தமிழ்நாடு சர்க்கா சங்கத் தலைவரானார். பம்பரம் போல் சுழன்று பணியாற்றி இழப்பில் இருந்த அந்த சங்கத்தை லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றினார். 1940 வரை கதர் இயக்கத்தின் தீவிர வெற்றிக்குக் காரணமாக இருந்தனர்.

1932ல் காந்தியடிகள் சிறைப்பிடிக்கப்பட்டதை எதிர்த்துப் போராடியதால் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்றார் அவருடைய துணைவியார். அதேபோல அய்யாமுத்துவும் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை அடைத்திருக்கும் கண்டம்டு செல்லில் கால்களில் இரும்பு வளையங்கள் பூட்டி அடைக்கப்பட்டார். 1934ல் திருப்பூரில் அகில பாரத சர்க்கா சங்கக் காதிவஸ்திராலய முதல்வராகப் பணியில் இருந்தபோது அவருடைய தாயார் இறந்த செய்தி வருகிறது. அந்த நேரம் அய்யாமுத்துவின் துணைவியார் கோவிந்தம்மாள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கோவையில் அவருடைய சொந்தங்கள் மற்றும் ஜாதியினரின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் தலித் மாணவர்களுக்குப் பாடசாலை நடத்தினார். உண்மை நாடுவோர் சங்கம் ஒன்றை நிறுவி கிராம வாலிபர் பலர் அதில் பங்கு கொண்டு பல விஷயங்களைப் பற்றி விவாதிக்கச் செய்தார். இந்த நேரத்தில் பஞ்சமாபாதகங்கள் என்னும் ஒரு நூலை எழுதிகிறார் அய்யாமுத்து. இந்நூலைப் பற்றி பெரியார் குடியரசுவில் மிகவும் பாராட்டி தலையங்கம் எழுதியிருக்கிறார். இந்நிலையில் ஒரு நாள் பெரியார் இவரைத் தேடிக்கொண்டு இவர் இருந்த புளியம்பட்டிக்கே வந்திருக்கிறார். ஈரோட்டிலிருந்து வெளிவரும் குடியரசு வாரப்பத்திரிகையில் எழுதச் சொல்லிக் கேட்டுக் கொள்ளவே பல கட்டுரைகளை குடியரசில் எழுதியுள்ளார். சில சமயம் தான் எழுதாதவைகளையும் பெரியார் பிரசுரித்ததாக ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். பின்னர் பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க சென்னைக்குக் குடிபெயர்ந்த குடியரசு பத்திரிகையின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் அய்யாமுத்து. நட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த குடியரசு சென்னைக்கு வந்ததும் அய்யாமுத்துவின் நிர்வாகத்தில் செழிக்கத் துவங்கியது. நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் முன்னர் அய்யாமுத்துவின் அனைத்து நிபந்தனைகளையும் பெரியார் ஏற்றார். ஒரு நாள் பகல் குடியரசு அலுவலகத்தில் கண்ணப்பரும் பெரியாரும் சாப்பிட உட்கார்ந்திருக்கிறார்கள். பெரியார் வந்ததைத் தெரிந்து கொண்ட அய்யாமுத்துவின் துணைவியார் எப்போதையும் விசேஷமாகவும் அதிகமாகவும் சாப்பாடு அனுப்பியிருக்கிறார். ""அய்யாமுத்து தனது யோக்கியதைக்கு மீறிய சாப்பாடு சாப்பிடுகிறார்'' என்று கண்ணப்பனிடம் பெரியார் சொன்னது இவர் காதில் விழுந்திருக்கிறது. உடனே மேஜை மேல் இருந்த சாவியை எடுத்து பெரியாரின் முகத்தில் விட்டெறிந்து நில்லாமல் சொல்லாமல் வீடு போய் சேர்ந்திருக்கிறார். வீட்டுக்கும் ரயில் நிலையத்துக்கும் தேடி வந்த பெரியாரால் இவரை சமாதானப்படுத்த முடியவில்லை. ஆனால் இந்த சம்பவம் பெரியாருடன் அய்யாமுத்து வைத்திருந்த நட்பினை முறித்துவிட வில்லை. வேறு பல சந்தர்பங்களில் சுயமரியாதை மாநாடுகளின்போதும் பொதுக்கூட்டங்களின்போதும் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்கின்றனர். பல மாநாடுகளின் தீர்மானங்களின்போது பெரியாரை மிகவும் பலமாக ஆதரித்து இருக்கிறார் அய்யாமுத்து. அதேபோல பெரியாரும் அய்யாமுத்துவைப் பற்றி பல இடங்களில் மிகவும் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார். ம.பொ.சிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அஞ்சா நெஞ்சன் என்ற பெயருக்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் அய்யாமுத்து என்று பதிவு செய்திருக்கிறார்.

அதே போல அய்யாமுத்து மகாத்மா காத்தியையும் விட்டுவைக்கவில்லை. காதி வஸ்திராலயம் தொடர்பான ஒரு விஷயத்தில் நியாயத்துக்காக மிகவும் வலுவாகப் போராடினார். இவருடைய வாதத்தில் இருந்த உண்மையைக் காந்தி இவரிடம் மன்னிப்புக் கேட்டு மன்னிப்புக் கடிதம் ஒன்றினை எழுதியிருக்கிறார்.ஒரு கட்டத்தில் காந்தியுடனான இவருடைய தகராறு முற்றி காந்தியடிகள் இவரிடம் ஒரு கடிதம் கொடுத்தார். அதில்

My dear ayyamuthu

I do hereby resign my President ship of the All India Chakra Sangh.

Yours truly,

Bapu.
என்று எழுதப்பட்டிருந்தது. அதற்கு அய்யாமுத்து காந்தியிடம்,

Why to me? Give it to your creator
என்று சொல்லி அந்தக் கடிதத்தை காந்தியிடமே திருப்பிக் கொடுத்தார்.
Oh, you want me to send my resignation to my Creator and you submit yours to me. That won't do. Now I tear both. Get back to Tirupur and carry on as usual as a good boy
என்று அய்யாமுத்துவை கஸ்தூரிபாய் அவர்களிடம் அனுப்பி சாப்பிட்டு விட்டு போகச் சொல்லியிருக்கிறார் காந்தியடிகள்.இவர் ராஜாஜியை தந்தையென்று அழைப்பார். ராஜாஜி என் தந்தை என்னும் தலைப்பில் ஒரு நூலே எழுதியுள்ளார். பிற்காலத்தில் 1960லிருந்து 1967 வரை அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ராஜாஜி உறவு கொண்டது வரை சுதந்திராக் கட்சியில் இருந்தவர் அய்யாமுத்து. ராஜாஜியுடன் அவர் தனித்து உரையாடிக் கொண்டிருந்தபோது ஒருமுறை கோவையில் சுதந்திராக் கட்சிக்கு தனித்த அலுவலம் வேண்டும் என்றிருக்கிறார். எதற்கு சீட்டாடவா என்று கேட்டாராம் ராஜாஜி. பத்திரிகை வேண்டும் என்று கேட்டதற்கு சுயவிளம்பரம் தேடிக்கொள்ளவா என்றாராம் ராஜாஜி. அதற்கு அய்யாமுத்து, உங்கள் கட்சி உருப்படாது என்றும் இப்போதுள்ள நிலையில் இன்னும் ஆயிரம் வருஷத்துக்கு முயன்றாலும் உங்கள் கட்சி ஜெயிக்காது என்று ராஜாஜியின் முகத்தில் அடித்துச் சொல்லியிருக்கிறார்.நாற்பதுகளில் கதர் இயக்கத்துக்காகக் குடிநூல் என்னும் இதழை நடத்தி வந்தார். 1950ல் நாசிக் காங்கிரஸ் மாநாட்டுக்குப் பின் தீவிர அரசியலை விட்டு ஒதுங்கினார். 1951ல் கோவை þ பொள்ளாச்சி சாலையில் கோதைவாடி என்னும் ஊருக்கு அருகில் 23 ஏக்கர் நிலம் வாங்கி காந்தி பண்ணை என்று பெயரிட்டு வேளாண்மை செய்து வந்தார். தம் இல்லத்துக்கு ராஜாஜி இல்லம் என்று பெயர் சூட்டினார்.
மூன்று முறை இதயநோயால் தாக்கப்பட்டு நலிவுற்ற அய்யாமுத்து 21-12-1975ல் காலமானார். இவர் காலமான அடுத்த வாரமே 27-12-1975ல் இவருடைய துணைவியார் கோவிந்தம்மாளும் காலமானார்.

தங்கள் மறைவுக்கு முன் தங்கள் நிலத்தை நாட்டுப் பணிக்குப் பயன்படுத்தும்படி அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களுக்கு ஒப்படைத்தனர் இந்த ஆதர்சத் தம்பதியினர். இப்போது அந்நிலம் சர்வோதய சங்கத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.அய்யாமுத்துவின் என் நினைவுகள் என்ற நூலின் தனிச்சிறப்பு என்று சொல்வதற்கு அதில் செய்யப்பட்டுள்ள மிக நேர்மையான பதிவுகள். அதேபோல காலம் மிக அற்புதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல அரசியல் ஜாம்பவான்களால் எழுதப்பட்ட சுயதம்பட்டங்களும் சொந்தக் கதைகளும் விஷயமங்களும், பொய்யும் புனைசுருட்டுக்களும் மிகுந்த சுயவாழ்க்கை வரலாற்றுக் குப்பைகளைப் படித்துச் சலித்துப்போன தமிழனுக்கு ஒரு வாழ்க்கை வரலாற்றினை எத்தனை நேர்மையாக எழுதமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது இவருடைய எனது நினைவுகள் .அரசியல் மட்டுமல்லாது பல துறைகளில் ஆர்வம் கொண்டு விளங்கியிருக்கிறார். அந்தக் கால நாடகங்கள் பற்றிய அவருடைய பதிவுகள் நாடகங்களில் ஆய்வு செய்பவர்களுக்கு கிடைத்த மிக அற்புதமான பொக்கிஷம். திரையை விலக்கியதிலிருந்து கட்டியக்காரன் பிரவேசம், ராஜபார்ட், ஸ்திரீபார்ட் பிரவேசத்திலிருந்து நாடகப் பாடல்முறைகள், இசைவகைகள் போன்றவற்றை மிகவும் விரிவாக எழுதியிருப்பார். அவரே எழுதிய இன்பசாகரன் என்னும் நாடகம் அந்தக்காலத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட ஒன்று. ராஜபக்தி என்னும் அரசியல் நாடகம் பல சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்த நாடகம் எழுதியதற்காகவும் கைது செய்யப்பட்டிருக்கிறார். பின்னாளில் நவாப் டி.எஸ்.ராஜமாணிக்கம் பிள்ளையுடன் ஆழ்ந்த நட்பு பூண்டிருக்கிறார் அய்யாமுத்து. நவாப் ராஜமாணிக்கத்துக்கு மிகவும் ஆதரவாக இருந்து அவருக்குத் திருமணம் செய்வித்ததல்லாது அவருடைய மகனுடைய திருமணத்தையும் நடத்தி வைத்தார் அய்யாமுத்து. தொழுநோயால் பாதிக்கப்பட்ட கோவிந்தன் என்னும் தொழில்முறை நடிகருக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததோடு மட்டுமல்லாது அவருக்குப் பலவகைகளிலும் உதவியர்கள் அய்யாமுத்து தம்பதியினர். ராஜமாணிக்கம் பிள்ளையை திரைப்படங்களிலும் அறிமுகப்படுத்தினார். அய்யாமுத்துவே மோலியரின் கஞ்சன் என்னும் நாடகத்தைத் தழுவி திரைப்படமாக எடுத்தருக்கிறார். இது அக்காலத்தில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம். பாரதிதாசனுக்கு மிகநெருக்கமான நண்பராக இருந்திருக்கிறார் அய்யாமுத்து. பாரதிதாசனின் கவிதா மண்டலத்தில் அய்யாமுத்துவின் பல கவிதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. இவருடைய தேய்ந்த லாபம் என்னும் கவிதைத் தொகுப்பு பாரதிதாசனால் வெளியிடப்பட்டது.அய்யாமுத்து எழுதிய நூல்கள் þ தேசத்தொண்டனும் கிராமவாசியும், பஞ்சமா பாதகங்கள், மேயோ கூற்று மெய்யா பொய்யா (இதை பெரியார் பதிப்பித்தார்) இராமசாமியும் கதரும், நச்சுப்பொய்கை, இராஜபக்தி, மேவாரின் வீழ்ச்சி, பிச்சைக்காரி, அக்காளும் தங்கையும், நாட்டுப்புறம், சோசலிசம், சுதந்திரா கட்சி ஏன், எங்கே செல்கிறோம், சுதந்திரனுக்கு முன்னும் பின்னும், சென்னை சர்க்காரின் கதர்த்திட்டம், திருவிழா போன்றவை. இந்த நூல்கள் எவையும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நூலகத்தில் இல்லை.நான் ஏற்கனவே சொன்னதுபோல இவருடைய பதிவுகள் மிகவும் அற்புதமானவை. நேர்மையானவை. அவற்றில் ஒன்றிரண்டைப் படித்து என் உரையை முடிக்கிறேன்.அக்கால நாடகங்கள் பற்றி எழுதியிருப்பார் þசாம்பிராணிப்புகை காட்டுவார்கள். முன்திரை தூக்கப்படும். பபூன் என்னும் கோமாளி ஆடிப்பாடி மேடையில் காட்சியளிப்பான். அவனைத் தொடர்ந்து சூத்திரதார் வருவார். புல்லாகிப் பூடாகிப் புழுவாகி... எல்லாப் பிறப்பிலும் மானிட ஜன்மமே சிறந்ததென ஒரு சிற்றுரை ஆற்றி சரஸ்வதியை ஸ்தோத்திரம் செய்வார்.சரஸ்வதி வேடம் தாங்க ஆள் இருந்தால், சரஸ்வதி பிரத்யட்சமாவாள். இல்லையேல் திரையின் பின்னாலிருந்து சரஸ்வதியின் குரல் மட்டுமே கேட்கும்.தாயே இன்று இன்ன நாடகம் நடத்த உத்தேசித்திருக்கிறோம். அது நன்கு நிறைவேற அருள்புரிய வேண்டுமென சூத்திரதாரர் சரஸ்வதியிடம் வரம் கேட்பார்.அப்படியே ஆகட்டும் என சரஸ்வதி அருள்புரிவாள்.தட்டுவாணி நமஸ்கரிக்கிறேன். என்பான் கோமாளி.தூஷித்த நீ ஊமையாகக் கடவது என்று சபிப்பாள் சரஸ்வதி. கோமாளி ஊமையாகித் ததாபுதா என்பான்.தாயே தட்டு என்றால் கமலம். வாணியென்றால் சரஸ்வதி. தங்களை கமல சரஸ்வதி என்றுதானே விளித்தான் அவன். அதற்காகத் தாங்கள் கோபம் அடையலாமா என்று சூத்திரதாரர் பரிவுடன் சரஸ்வதியுடன் மன்றாடுவார். அவனது விகடத்தை மெச்சினேன். அவன் வாய்திறந்து பேசுவானாக என்று சரஸ்வதி கூறவும் விதூஷகன் வாய்திறந்து வணக்கம் தானே என்பான்.இப்படிப்போகும் பதிவுகள்.அதே போல கோவை மாநகரம் பற்றியும் அதன் தொழிலாளர்கள் பற்றியும் நாதஸ்வர வித்வான் அங்கண்ணன் பற்றியும் கோவையில் பிளேக் நோய் பரவியது பற்றியும் அவருடைய பதிவுகள் மிகவும் சுவாரசியமானவை.படிக்கப் படிக்க சுவாரஸ்யம் ஊட்டும் பதிவுகள் அவை. இதை நான் மேலும் படிப்பதை விட திரு.பெருமாள் அவர்கள் இந்தக் கட்டுரைக்காக எனக்குக் கொடுத்த அய்யாமுத்துவின் எனது நினைவுகள் நூலை அவருடைய அனுமதியுடன் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நூலகத்துக்கு அளிக்கிறேன். என்னுடைய இந்தக் கட்டுரையால் உந்தப்பட்டு அய்யாமுத்துவை யாரேனும் ஒருவராவது அதைப் படிப்பார்கள் என்றால் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவேன்.நன்றி.

வணக்கம்.

12 comments:

 1. My dear Mr. Penneswaran,
  Glad to see your magazine on web. Thanks to think my email address also to add in your mailing list. It is very interesting to read the Sani Moolai because it deals with human beings and the value of humanity. Humanity has also become a rare commodity nowadays and every thing has been seen on the basis of return. People donante help only when they are recognised their contribution. I was also like that only a few years back. I used to send money to so many organisations and institutions for the betterment of old age people, education for poor, contribution for good cause and when my name is not printed I get disappointed. I used to write to them that you have not mentioned my name in the list of donars etc. But when we hear about the big people who have done so much to the society but never thought of getting their name registerd I feel how small I am. Just throwing some money does not take me any where. Life is a big teacher. I learn a lot from the way my life is being dragged. The knowledge increased by experience will never leave me. By facing difficulty, learning about the treachery by your so called friends and relatives, facing the unexpected loss etc. always teach the reality of life. The 'Atma Gyan' seems to come near to my heart.
  It seems that the space Sani Moolai gives you the freemdom to write the inner feelings of your's so that others can also know what is happening in the world outside the window. One unsolicited advise: Read the coloums of R. Smith in Hindu 'Memory Line" and Randor Guy and Gangadhar which may help you to polish the language and force the reader to finish without stopping the page.
  We talk many things about the invasions of Mohuls, British, etc. and always feel pleasure in declaring that India has been looted by these people and still we are able to come up blaw,blaw. But have we ever thought about our own race, the great politicians, who are looting every day and never bother to sell our country to any body without any feeling. They think about their own blood relations and another force which is called Money Power. All their wards will be either studying in foreign country and have business interest in other part of the world other than India. Because every politician knows that we the GREAT INDIAN PEOPLE will be willing to be fooled by others. We like to talk about the old glories and get pleasure. We want to connect ourselves with great achievers in all fields. e.g. When Dr. Chandrasekar got noble we remembered the Indian connection evern thoug he is a full fledged US citizen. Same with Sunita
  Williams and Ms. Chawla. Indian government system which is still the replica of British system wants only YESMEN and not intellectuals but give an image that the IAS officers are the world's best brains whereas they are taught how to say NO for everying with beautiful language and implement the wishes of higher ups.
  Rest after some time.
  Easwar/Pamara Vasakan.

  ReplyDelete
 2. அன்புள்ள ஈஸ்வர்

  தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி.

  நான் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன்.

  நீங்கள் பாமர வாசகர் அல்ல.

  ReplyDelete
 3. என்ன இப்படிச் சொல்லீட்டீங்க? நான் இப்பத்தான் சின்னக் குத்தூசி அய்யா சொல்லி, அய்யா முத்து அவிங்களைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். அருமை, அருமை!

  ReplyDelete
 4. ஒருவர் என்ன, பலர் இந்தக் கட்டுரையை படிக்க வைப்பேன்.

  ReplyDelete
 5. பழமைபேசி, இந்த கட்டுரையைப் படிக்க வைச்சுட்டீங்க. உங்க பதிவிலிருந்து தான் வந்தேன். நன்றி.

  பதின்ம வயதில் படித்த புத்தகம் அய்யாமுத்து அவர்களின் சுயசரிதை 'எனது நினைவுகள்'. அதன் எளிமை, எழுதியவரின் எளிமை இன்றைக்கும் மனதில் நிற்கிறது.

  நன்றி.

  ReplyDelete
 6. nanri anaani aiya.

  engal valaithalam http://www.vadakkuvaasal.com pakkamum konjam othungi vitu ponga.

  Raghavanthambi

  ReplyDelete
 7. இந்த பதிவிற்கு வர தடம் காட்டிய பழமைபேசிக்கும்,மனதை நெகிழ வைத்த பதிவினை தந்த உங்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 8. சமீபத்தில்தான் எனது பதிவில் தூரன்ஐயா பற்றிய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தேன்.மேலும் ஒரு மாமனிதரை பற்றி தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 9. @@@@வேளராசி
  //

  நானே உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கலாம் என்று இருந்தேன். தாங்களாகவே வந்தமைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 10. அன்புள்ள அய்யா,

  அருமையான இப்பதிவிற்க்கு மிக மிக நன்றி. கோவை அய்யாமுத்து தாம் எமது ஹீரோ. அவரது "எனது நினைவுகள்" நூலை பொக்கீசம்
  போல பாதுகாத்து வருகிறேன். வருடம் ஒரு முறை அதை படித்து பயன் பெறுகிறேன்.

  அவரின் 'நான் கண்ட பெரியார்" (1957) வீட்டு நூலகத்தில் இருந்தது. பிறகு தொலைந்து விட்டது. சென்னை தரமணி ரோஜா முத்தையா நூல்னிலைத்தில் அது உள்ளது. ஸ்கான் காபி ஒரு முறை
  கிடைத்தது. இது ஒரு முக்கிய ஆவணம்.

  அவரின் "நாடு எங்கே செல்கிறது ? " என்ற நூலும் முக்கியமானது. முன்னர் படித்திருக்கிறேன்.

  1972இல் அவர் வெளியிட்ட "ராஜாஜி எனது தந்தை" என்ற நூலை பார்க்க பல வருடங்களாக‌ துடிக்கிறேன். விலை மதிக்க முடியாத நூல் அது.
  எங்கும் கிடைக்கவில்லை.

  ராஜாஜி ஒரு மகத்தான தலைவர். பெரும் ஞானி. அவ‌ரின் தீவிர‌ ர‌சிக‌ன் யான்.

  பொள்ளாச்சியிலும் கோவையிலும் க‌ல்வி ப‌யின்ற‌ கால‌ங்க‌ளில் (80க‌ளில்) இவ‌ர்க‌ளின் அருமையை
  உண‌ராம‌ல் போனேன். அருட்கசொல்வ‌ர் நிறுவிய‌
  க‌ல்வி நிறுவ‌ன‌த்தில் தான் ப‌டிப்பு.

  "என‌து நினைவுக‌ளில்" உலாவும் சிலரை நேரில் கண்டு பழகும் பாக்கியம் கிடைத்தது. திருச்சி
  பேராசிரியர் (காலம் சென்ற) எம்.எஸ்.நாடார் எமது குடும்ப நண்பர். இன்றுதான் திருமதி.சவுந்திரா
  கைலாசம் அவர்களை சந்தித்து திரு.அய்யாமுத்து பற்றிய அவரின் நினைவுகளை கேட்டறிந்தேன்.

  திருப்பூரில் யாம் வாழ்ந்த காலத்தில் அவர் நிர்மாணித்த‌ காந்தி நகரை கண்டு மகிழ்ந்தேன். அவர் கட்டிய வீட்டையும் பார்த்தேன். (வீடு விற்ற‌ ப‌ட‌ல‌ம்). இன்று அந்த‌ வீடு
  இல்லை.

  மிக‌ மிக‌ போற்றப்ப‌ட‌ வேண்டிய‌ மாம‌னித‌ர் அவ‌ர். வாழ்க‌ அவ‌ர் புக‌ழ்.

  ReplyDelete
 11. அன்பு அதியமான் அவர்களுக்கு

  வணக்கம்.

  உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி.

  ராஜாஜி பற்றிய உங்கள் பதிவைப் படித்தேன். அருமை. மிக விரைவில் உங்கள் பதிவுகளைப் படித்து விடுவேன்.

  தலைநகரில் வடக்கு வாசல் இதழை நடத்தி வருகிறேன். எங்களை இணையத்திலும் படிக்கலாம். எங்கள் இணைய முகவரி

  www.vadakkuvaasal.com

  இந்த மாத இறுதியில் www.delhigalata.com என்னும் இணைய இதழை துவங்க திட்டமிட்டு இருக:கிறேன். அரசியல் மின்னிதழாக இது மலரும்.

  உங்கள் ஆதரவும் ஆலோசனையும் தேவை.

  அன்புடன்

  பென்னேஸ்வரன்

  ReplyDelete
 12. வணக்கம்,
  அய்யாமுத்து குறித்து நீங்கள் எழுதியதை வாசித்தேன்..இதை மீள் பதிவு செய்வதற்கு உங்கள் அனுமதியை வேண்டுகிறேன்..www.gandhitoday.in தளத்தில்...

  ReplyDelete