Saturday, November 3, 2007

சனிமூலை

ராகவன் தம்பி


நீங்கள் அதிகம் கவனித்து இருப்பீர்களா என்று தெரியாது. சென்னையில் எப்படி என்று தெரியாது.
இங்குள்ள குருமார்கள் - இசை, நாட்டியம் என்று கற்பிக்கிறவர்கள் தங்கள் மாணாக்கர்களை பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளும்போதே அடுத்தவர்களின் நிகழ்ச்சிகளை அவர்கள் பார்க்கப் போகக்கூடாது என்று தலைமேல் அடித்து சத்தியம் வாங்கி செயல்படுவது போல இருக்கும்.

அந்த மாணாக்கர்களும், அடுத்தவர்களின் நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே ஏதோ தங்கள் குருவுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்து விடுவோமோ என்று அச்சப்படுவது போல மற்ற குருமார்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது முடிந்த வரை நிகழ்ச்சி நடக்கும் பகுதியைச் சுற்றிக் குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரத்துக்காவது சுற்றி வளைத்துச் செல்ல முயற்சிப்பார்கள்.சில இடங்களில் ஒரே வேளையில் இரண்டு பேருடைய கச்சேரி அமைந்து விடும்.

அந்த இரண்டு பேரும் வேறு வேறு குருமார்களின் சிஷ்யப் பிள்ளைகளாக இருந்தால் இன்னொருவர் பாடும்போதோ அல்லது நடனமாடும்போதோ அரங்கத்துக்கு உள்ளே ஏதோ வெடிகுண்டு வைத்திருப்பது போன்ற பாவனையில் வெளியே சற்றுத் தூரமாகத் தள்ளி நின்று முந்தைய நிகழ்ச்சி முடிந்ததும் எவ்விதப் பயமும் இன்றி உள்ளே பிரவேசிப்பார்கள்.அப்படித் தவறி உள்ளே இருந்து விட்டால், முந்திப் பாடியவர் அடுத்துப் பாடுபவரின் நிகழ்ச்சி துவங்கியதுமே, படை பரிவாரங்களுடன் அரங்கத்தை விட்டு வெளியேறுவார்கள்.இந்த அரிய காட்சியை நீங்கள் என்றாவது கண்டு களித்தது உண்டா?
நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்கத்துக்குள் தின்பண்டங்கள் அல்லது திரவ பானங்களைக் கொண்டு செல்லக்கூடாது என்பது பொது விதி. எந்த சட்டமும் இதை வலியுறுத்த வில்லை. ஆனாலும் நாகரிகத்தை மதிக்கும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு சுயக்கட்டுப்பாடு இது. அரங்கம் என்பது ஒரு ஆலயம். சரஸ்வதி அங்கே பிரத்யட்சமாகி இருக்கிறாள். அரங்கத்துள் சூழ்ந்த ஒவ்வொரு அணுவும் துகளும் கலைஞனுக்கு ஆராதனைக்கு உரியவை. பார்வையாளனும் குறைந்த பட்ச மரியாதையையாவது அரங்கத்துக்குத் தரவேண்டும். நீங்கள் ஒருவேளை ஏதாவது ஒரு வண்ணத்தில் துண்டு, கைக்குட்டை, கற்கள் பதித்த மோதிரங்கள், ஏதாவது ஒரு கோயில் வழியாக யாருக்கும் தெரியாமல் அலுவலகத்துக்குப் போவது போன்ற ஒரு சில சின்னத் தள்ளுபடிகளை மட்டும் சலுகையாக்கிக் கொள்ளும் பகுத்தறிவு சிங்கங்களில் ஒருவராக இருக்கலாம். சரஸ்வதி, பிரத்யட்சம், ஆலயம், புனிதம் போன்ற விஷயங்களில் ஏற்பில்லாதவராக இருக்கலாம். அப்படி இருந்தாலும் அரங்கத்தில் தின்பண்டங்களைக் கொண்டு போவது என்பதில் சில கெடுதிகள் உண்டு என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. அரங்கத்தின் உள்ளே மிகவும் விலை உயர்ந்த தரைவிரிப்புக்களை பயன் படுத்தியிருப்பார்கள். நீங்கள் கொண்டு செல்லும் உணவுப்பண்டங்கள் அவற்றில் சிதறியது என்றால், இரவு வேளையில் எலிகள் வந்து அந்த விலை உயர்ந்த தரைவிரிப்பினைக் கடித்துக் குதறிவிடும் ஆபத்து இருக்கிறது.இரண்டாவதாக குளிர் பதனப்படுத்தப்பட்ட அந்த அரங்கில் நீங்கள் வெங்காயம், பூண்டு போன்ற வாசனைத் திரவியங்கள் கலந்த பதார்த்தங்களை சாங்கோபாங்கமாக உள்ளே தள்ளும் போது அþரம்மியமாகப் பரவும் அதன் வாடை கச்சேரியை ரசித்துக் கொண்டிருப்பவர்களை சில கணங்களாவது சற்று நிலைகுலைய வைக்கும். இசைமழை இதமாக வருடிக் கொண்டிருக்கும் வேளையில் அங்கிள் சிப்ஸ் போன்ற வறுவல் விஷயங்களை சத்தம் வரக்கூடாது என்று திருட்டுத்தனமாக நீங்கள் பிரிக்கையில் அடுத்த இருக்கையில் இருப்பவருக்கு மண்டையில் ஏதோ ஆணி வைத்துக் கீறியதைப் போன்ற ரணவேதனையை உண்டாக்கும் பாவம் உங்களுக்கு வந்து சேரும். எல்லாவற்றுக்கும் மேலாக மேடையில் நமக்கு நிகழ்ச்சியை வழங்கும் கலைஞரை நாம் அவமதிக்கிறோம். தலைநகரில் கமானி, ஸ்ரீராம் சென்டர். சிரி ஃபோர்ட் போன்ற அரங்கங்களில் நிகழ்ச்சிகள் நடக்கும் போது எதையும் நீங்கள் எடுத்துச் செல்ல முடியாது. நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் அத்திம்பேராக இருக்கலாம். மாமனாராக இருக்கலாம். மச்சினனாக இருக்கலாம். கைத்தடியாக இருக்கலாம். அங்கு அரங்கத்துக்குள் உள்ளே நுழையும் போது வெறுங்கையுடன் தான் நீங்கள் நுழைய வேண்டும். உணவுப் பண்டங்கள் எதையும் எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். அங்கிருக்கும் காவலர்கள் உங்களை வழிமறித்து தின்பண்டங்களை வெளியில் வைத்து விட்டு வருமாறு எச்சரிப்பார்கள். எந்தத் தமிழனும் அங்கு உணவுப் பொருட்களை உள்ளே எடுத்துச் சென்று நான் பார்த்தது இல்லை.இங்கு தலைநகரில் நமக்கென்று ஒரு அற்புதமான அரங்கம் இருக்கிறது. வேறு எந்த மொழிக்காரர்களுக்கும் இல்லாத ஒரு பெருமையைத் தருகிறது அது நமக்கு. தெலுங்கு சங்கங்களும், கன்னட சங்கங்களும் மலையாள சங்கங்களும் இன்னும் பல மொழிச் சங்கங்களும் தலைநகரில் தலைகீழாக முயற்சித்தும் திருவள்ளுவர் கலையரங்கத்தைப் போன்ற ஒரு கலையரங்கத்தை அவர்களால் நிர்மாணிக்க முடியவில்லை. கன்னட சங்கத்தில் சமீபத்தில் ஒரு கலையரங்கத்தை நிர்மாணித்து இருக்கிறார்கள். அதுவும் பரப்பிலும் மற்ற வசதிகளிலும் திருவள்ளுவர் கலையரங்கத்தின் அருகில் நெருங்க முடியாது. தில்லித் தமிழ்ச் சங்கம் தலைநகர்த் தமிழனுக்கு ஒரு பெருமைதரும் முகவரி. அதில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் கலையரங்கம் நாம் சூடிக்கொண்டிருக்கும் ஒரு கலாபூர்வமான மகுடம். ஆனால் நம்மில் எத்தனைபேர் இதை உணர்கிறோம் என்று தெரியவில்லை. தமிழ்ச் சங்கத்தின் இப்போதைய செயற்குழு மிகவும் அருமையான நிகழ்ச்சிகளை ஒவ்வொரு மாதமும் ஏற்பாடு செய்து வருகிறது. தலைநகரில் இதனைப் பாராட்டாத தமிழ் நெஞ்சங்கள் இல்லை என்றுதான் சொல்லலாம். சமீபத்தில் தமிழ்ச் சங்க அரங்கத்தின் ஒலிபெருக்கி சாதனங்களையும் தேசிய நாடகப் பள்ளியின் பேராசிரியர் மனோகரனின் வழி காட்டுதலுடன் மிகவும் நவீனமாக்கி இருக்கிறார்கள். (இன்னும் திரைப்படம் காட்டப்படும் அந்தத் திவச வேஷ்டித் திரையை மட்டும் மாற்ற வேண்டும். அதையும் சீக்கிரம் மாற்றலாம் என்று சொல்லி விட்டார் முகுந்தன்).இப்படி அனைத்து மேன்மைகளும் உள்ள அந்த அரங்கத்தை நாம் எப்படி மதிக்கிறோம் என்பதுதான் மிகவும் வேதனையாக இருக்கிறது. தமிழ்ச் சங்கத்தில் மிகவும் அதிகமான கூட்டம் இருக்கும் நிகழ்ச்சியன்று நீங்கள் போய்ப் பார்த்தால் தெரியும். எந்தக் கட்டுப்பாடும் அங்கு இருக்காது. உங்களுக்குத் தெரிந்த பெரிய ஆட்களே வகை வகையாக தின்பண்டங்களை உள்ளே எடுத்துச் செல்வார்கள். திரவபானங்கள்- சூடானவை, குளிர்ந்தவை என்று விதவிதமாக அரங்கத்துக்கு உள்ளே எடுத்துச் செல்லப்படும். நம் கலாரசிகர்களை விட்டால் அரங்கத்துக்கு உள்ளேயே ஒரு அடுப்பையும் எடுத்துச் சென்று அங்கேயே உப்புமா கிளறி சாப்பிட்டு நிதானமாக ஒரு காப்பியையும் கலந்து சாப்பிட்டு வாயைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்து விடுவார்கள். தமிழ்ச் சங்க ஊழியர்களும் இவர்களைக் கண்டிப்பது இல்லை. நிறுத்துவது இல்லை. அவர்களும் என்ன செய்வார்கள்? அடுத்த தேர்தலில் அந்த முட்டாளோ முரடனோ ஜெயித்து செயற்குழுவில் வரலாம். நமக்கு எதற்குப் பகை என்று அவர்கள் இருப்பார்கள். பார்வையாளர்கள் இப்படி ஒரு பக்கம் என்றால் நாம் தேர்ந்து எடுத்து அனுப்பும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்யும் கொடுமைதான் மிகவும் அதிகபட்சமானது. விழாவுக்கு வரும் பெரிய மனிதர்களுக்கு தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகிகளே வலிந்து உள்ளே காப்பியும் தின்பண்டங்களையும் அனுப்பி வைப்பார்கள். அவர்களுடன் இவர்களும் அமர்ந்து சாப்பிடுவார்கள். அப்படி அந்த பிரபலங்களுடன் பக்கத்தில் அமர்ந்து அரங்கத்தில் சாப்பிடுவது அல்லது குடிப்பதை ஏதோ இந்திர பதவி கிடைத்து விட்டதாக நினைத்து அடுத்தவர்கள் மீது பார்வையை வீசுவார்கள் இந்த இரண்டாண்டு நட்சத்திரங்கள். (பதவி இல்லையென்றால் யார் செத்தாலும் பிழைத்தாலும் இந்தப் பக்கமே எட்டிப்பார்க்க மாட்டார்கள் இந்த இரண்டாண்டு நட்சத்திரங்கள்.). அப்படி அந்த சிறப்பு விருந்தினர்களால் ஒரு அரை மணி நேரத்துக்கு (பொதுவாக எந்த சிறப்பு விருந்தினரும் அரை மணி நேரத்துக்கு மேல் நிகழ்ச்சியில் தங்கி இருந்து அருள்பாலிப்பது இல்லை) பசி தாகம் தாங்க முடியாத நிலை என்று இவர்கள் கருதினால் மேடையின் உள்ளே ஒப்பனை அறைகள் இருக்கின்றன. அங்கே அவர்களுக்கு இவர்கள் ஊட்டிக்கூட விடலாம். அல்லது சங்க அலுவலகத்தில் எல்லா சேவைகளையும் செய்து முடித்து இங்கே அழைத்து வரலாம். ஆனால் முன்வரிசையில் உட்கார்ந்து இப்படி அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருப்பது மிகவும் வேதனை தரும் விஷயம். பல முறை நேரில் சொல்லிப் பார்த்தாகி விட்டது. சில முறை சில விருந்தினர்கள் முன்னிலையிலேயே சத்தம் போட்டு இருக்கிறேன். இதில் நிறைய விரோதங்களையும் கெட்ட பெயரையும் ஈட்டியதுதான் பலன். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றை சொல்லியே ஆகவேண்டும். யாரையும் எப்போதும் எதற்காகவும் ஒன்றும் சொல்லக்கூடாது என்று எனக்குப் பாடம் கற்பித்த நிகழ்ச்சி அது. சமீபத்தில் தமிழ்ச் சங்கத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. உள்ளே பட்டிமன்றத்துக் காரர்கள் பார்வையாளர்களை ஒருவகையான வன்மத்துடன் இரக்கமின்றி வதைத்துக் கொண்டிருந்தார்கள். நான் வெளியே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். எங்கள் நண்பர் ஒருவர் þ அரசு நிறுவனம் ஒன்றில் மிகப் பெரிய பதவியை வகிக்கிறார். இசைக்கலைஞரும் கூட. அவர் தின்பண்டங்களை ஒரு மூட்டையாக சுமந்து கொண்டு அரங்கத்தை நோக்கி வேகமாக வீரநடை போட்டு முன்னேறினார். என்னுடைய கெட்ட காலம். அவரை நிறுத்தி, ""சார், நீங்களே இப்படி பண்ணா எப்படி? தயவு செய்து எல்லோரையும் வெளியே கூப்பிட்டுக் குடுத்துடுங்கோ'' என்று சொன்னேன். சரி, என்று அவர் சிரித்துவிட்டுப்போனார். ஆனால் நான் சொன்னது அவருக்குக் கண்டிப்பாகப் பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரிந்தது. என்ன, என் மேல் விரோதம் பாராட்டத் தலைநகரில் இன்னும் ஒருத்தருக்கு நானே ஆயுதத்தைத் தீட்டிக் கொடுத்து விட்டேன். அதை பத்திரமாக வைத்துக் கொண்டு என்மீது எங்காவது பிரயோகிக்க இன்னும் ஒருவரை ஏற்பாடு செய்து கொண்டேன்.சற்று நேரத்துக்குப் பிறகு அரங்கத்துக்கு உள்ளே போனேன். அந்த மனிதர் ஜென்ம விரோதத்தைக் குரலில் குழைத்துக் கொண்டு என்னைக் கூப்பிட்டார். ""அங்கே பாருங்க'' என்று காட்டினார். அங்கே சிறப்பு விருந்தினராக வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு இரண்டாண்டு நட்சத்திரம் தின்பண்டங்களையும் தேனீரையும் கொடுத்துக் கொண்டிருந்தது. இன்னொரு இரண்டாண்டு நட்சத்திரம் அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பெருமை வழியும் பாவனையுடன் தின்று கொண்டிருந்தது. எனக்கு என்னமோ உபதேசம் பண்ணீரே? இப்போ என்ன சொல்றீர்?'' என்று ஆவேசமாக என்னைக் கேட்டார் அந்த அதிகாரி. என்ன சொல்வது? ""ரெண்டு செருப்பையும் கையாலே எடுத்துண்டு என்னை நாலு சாத்து சாத்துங்க. எனக்குப் புத்தி வந்துடும். என்னை மன்னிச்சிக்குங்க'' என்று கைகூப்பினேன்.இனி யாரையும் ஒன்றும் சொல்வதாக இல்லை. யாராவது இனி வீட்டில் இருந்து அடுப்பை எடுத்துக்கொண்டு வந்து சமைத்துச் சாப்பிட்டாலும் ஒன்றும் சொல்லப் போவதில்லை. ஏற்கனவே ஏழு பிறவிக்குத் தேவையான எதிரிகள் எனக்கு இருக்கிறார்கள். எதற்கு இன்னும் பட்டியலைப் பெரிதாக்க வேண்டும்?

1 comment:

  1. The way the author has narated the incident about 'a gentlemen taking eatbles into the auditorium' made me laugh, helped me to ease my tension
    Thank you

    ReplyDelete