
உள்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அந்த மாணவர் தலைவர் எங்கள் அமைச்சரைப் பார்க்க வருகிறார் என்று செய்தி கிடைக்கும்போதெல்லாம் ஒரு சினிமா நடிகனைப் பார்க்கின்ற பரவசத்துடன் தூரத்தில் நின்று பார்த்து விட்டு அன்று இரவே பரபரப்புடன் நண்பனுக்குக் கடிதம் எழுதிய நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது. அந்த மாணவத் தலைவன் - பிரஃபுல்ல குமார் மஹந்தா இப்போது என்னைப் போலவே சற்று வயதாகி முன் மண்டையில் வழுக்கை விழுந்து கண்களை இடுக்கிக் கொண்டு சிரிக்கிறார்.
உங்களுக்கு என்னுடைய வயதிருந்தால் அல்லது எனக்கு மூத்தவராக இருந்தால் அஸ்ஸôம் தொடர்பான இன்னொரு நிகழ்வும் வேதனையுடன் உங்கள் நினைவில் இருக்கலாம்.
1983ல் அசாமின் நவ்கோன் மாவட்டத்தில் நெல்லி என்னும் இடத்தில் வெளிநாட்டவர்களுக்கு குறிப்பாக பங்களாதேஷ் முஸ்லிம்களுக்கு எதிராகக் கையில் எடுத்த படுபாதகமான கலவரத்தில் சுமார் 1800 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தப் படுகொலைகளை அரங்கேற்றிய பாதகர்கள் பெண்கள், சிறுவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை. அப்போது தினசரிகளில் இந்தப் படுகொலைகள் தொடர்பாக வந்த புகைப்படங்கள் பார்ப்பவர்களை கதிகலங்க வைத்தது. நல்ல வேளை. இப்போது போல அப்போது ஊடகங்கள் பரவலாக இல்லை. பல கோரக்காட்சிளைக் காண்பதில் இருந்து நாங்கள் அப்போது தப்பித்தோம். மிகக் கோரமான கொலைகள் அங்கு நிகழ்த்தப்பட்டன. மிகச்சரியாக ஞாபகம் இல்லை. இந்தியா டுடே என்று நினைக்கிறேன். மற்றும் உள்துறை அமைச்சகத்தின் நூலகத்தில் கிடைத்த சில வெளிநாட்டு சஞ்சிகைகளிலும் நெல்லி படுகொலைகள் குறித்த மிகக் கோரமான புகைப்படங்கள் காணக்கிடைத்தன.
என்னைப் போன்ற பயந்தாங்கொள்ளிகள் மற்றும் பலவீனமானவர்களைப் பதறவைத்த புகைப்படங்கள் அவை.

இவற்றைத்தவிர வன்முறைக்குப் பலியாகிப் பிழைத்தவர்கள் மற்றும் கொலையுண்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் தப்பிப் பிழைத்தவர்களை சந்தித்து மனித உரிமைக் கழகங்களும் ஆங்கில சஞ்சிகைகளுக்கும் பேட்டிகளைப் பிரசுரித்தார்கள். ஒவ்வொரு பேட்டியும் மனதைப் பதறவைத்தன.
இப்போதைய குஜராத் வன்முறைக்கு எந்தவகையிலும் குறையாத ஏன் சொல்லப்போனால் இன்னும் படுபாதகமான படுகொலைகள் - வன்முறைச் சம்பவங்களை உலகம் கண்டது அப்போது. அந்த நேரத்தில் அஸ்ஸôம் கணசங்ராம் பரிஷத் என்னும் அமைப்பும் ஆல் அஸ்ஸôம் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் என்னும் அமைப்புக்கள் அஸ்ஸôமில் மிகவும் பிரபலம் அடைந்து வந்தன. ஆல் அஸ்ஸôம் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் அமைப்புக்கு பிரஃபுல்ல குமார் மஹந்தா தலைவராக இருந்தார்.
இந்த இரண்டு அமைப்புக்களின் ஏற்பாட்டின் பேரில் அப்போது அசாமில் குடியேறியிருந்த அந்நிய நாட்டவர்களை (பங்களாதேஷிகள்) வெளியேற்ற மாபெரும் போராட்டம் ஒன்று வெடித்தது. அந்தப்போராட்டத்தின் ஒரு பகுதிதான் நெல்லியில் மேலே குறிப்பிட்டுள்ள படுகொலைகள் நிகழ்ந்தன. அப்போது ஹிதேஸ்வர் சைக்கியா அஸ்ஸôம் மாநிலத்தின் முதல்வராக இருந்தார். அவர் தலைமையில் இருந்த மாநில அரசு திவாரி கமிஷன் என்ற பெயரில் விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்தார். திவாரி கமிஷன் 1984ல் நெல்லி படுகொலைகள் தொடர்பாக ஒரு அறிக்கையை சுமார் 600 பக்கத்துக்கு சமர்ப்பித்தது.
ஆனால் இதுவரை அந்த அறிக்கை அஸ்ஸôம் மாநில அரசு மற்றும் மைய அரசினால் இன்று வரை மிகப்பெரும் ராஜரகசியமாகப் போஷிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடந்த பதினெட்டு ஆண்டுகளாக அரசின் தூசு படிந்து கிடக்கும் எத்தனையோ கோப்புக்களின் குவியலில் இந்த அறிக்கையும் தூங்கிக்கொண்டு இருக்கலாம் என்கிறார்கள்.
ஆனால் நெல்லி கொடுமைகள் இன்றும் அசாம் மாநிலத்தின் சிறுபான்மையினரால் மிகவேதனையுடன் நினைவு கூரப்படுகிறது. (சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு பழைய ஆவணப்படத்தில் கூட அந்தக் கலவரத்தில் காயப்பட்டு உயிர்பிழைத்த ஒருவர் கண்களில் பீதிபொங்க அந்த சம்பவத்தை விவரித்து வந்தது முதுகுத் தண்டில் குளிரெடுக்க வைத்தது).
அந்த நெல்லி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்போது கிடைத்த ஈட்டுத்தொகை வெறும் ஐந்தாயிரம் ரூபாய்கள். ஆனால் அந்தக் கலவரத்தை நிகழ்த்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அஸ்ஸôம் கணசங்ராம் பரிஷத் 1985ல் நடைபெற்ற தேர்தலில் வென்று பிரஃபுல்ல குமார் மஹந்தாவின் தலைமையில் ஆட்சியமைத்தது. இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டதாக (!) தன் கட்சியைச் சேர்ந்த பலருக்கு பெருத்த ஈட்டுத்தொகையை ஏற்பாடு செய்ததாக அஸ்ஸôமின் பத்திரிகைகள் மஹந்தா மீது குற்றச்சாட்டுக்களை வைத்தன.
மஹந்தா தொடர்பான இன்னொரு சர்ச்சை சமீபத்தில் அசாம் மாநில அரசியலை வெகு பரபரப்பாக்கி இருக்கிறது.
பல ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கே.என்.சைக்கியா கமிஷன் அறிக்கை தற்போது மாநிலத்தின் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கமிஷனின் பின்னணி பற்றிச்சொல்லியாக வேண்டும்.
1996ல் அஸ்ஸôம் கணசங்ராம் பரிஷத் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி ஆட்சி ஏற்பட்டது. இந்தக் கூட்டணி அமைத்த அமைச்சரவையில் மஹந்தா உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது இந்திய ராணுவத்தின் தலைமையில் யூனிஃபைடு கமாண்ட் ஸ்ட்ரக்சர் என்னும் படையை மஹந்தாவின் கீழ் இருந்த மாநில உள்துறை நிர்வாகம் அமைத்தது. இந்தப் படை அப்போது அஸ்ஸôம் அரசுக்கு மிகப்பெரும் தலைவலியாக இருந்த உல்ஃபா தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமைக்கப்பட்ட படை. இந்தப் படை, குப்த்ஹொத்யா (ரகசியக் கொலை) என்ற பெயரில் விசாரணை, கைதுகள் எதுவுமின்றி உல்ஃபா போராளிகளை பரலோகத்துக்கு அனுப்பிவைத்த பரமகைங்கர்யத்தை செய்தன என்று குற்றம் சாட்டப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட உல்ஃபா போரளிகள் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் இந்த விஷயத்தைப் படுகெட்டியாகப் பிடித்துக்கொண்டு அப்போதைய அரசுக்கு எதிராகப் போராட்டங்களைத் துவக்கின. மே, 2001ல் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த ரகசியப்படுகொலைகளை விசாரிக்க ஜஸ்டிஸ் மீரா சர்மா என்னும் நீதியரசர் தலைமையில் ஒரு கமிஷனை அமைத்தது.
நவம்பர் 2002ல் ஜஸ்டிஸ் மீரா சர்மா, அப்போது முதல்வராக இருந்த தருண் கோகோய் தலைமையில் இருந்த அரசு போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்று குற்றம் சாட்டி விசாரணையில் இருந்து விலகினார்.
ஜஸ்டிஸ் ஜே.என்.சர்மாவின் தலைமையில் மீண்டும் விசாரணைக் கமிஷன் தொடர்ந்தது. ஒரு பதினொரு வழக்குகளைக் கணக்கில் கொண்டு விசாரணையைத் தொடர்ந்தார் சர்மா. ஆகஸ்டு 2005ல் அவர் சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில் மஹந்தாவின் மீது எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்தார் சர்மா. கோகோய் இந்த விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்தார். சர்மா மேற்கொண்ட விசாரணையில் பல குளறுபடிகள் இருந்தன என்று அந்த அறிக்கையைத் தூக்கிக் குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு மீண்டும் இன்னொரு விசாரணைக் கமிஷனை அமைத்தார். செப்படம்பர் 2005ல் அமைக்கப்பட்ட இந்த விசாரணைக் கமிஷன் இப்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் ஜஸ்டிஸ் கே.என்.சைக்கியா தலைமையில் அமைக்கப்பட்டு சுமார் 35 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
தற்போது சமர்ப்பிக்கப்பட்டு இருக்கும் இந்த கே.என்.சைக்கியா விசாரணைக் கமிஷன் அறிக்கையின் படி அப்போதைய உள்துறை அமைச்சர் மஹந்தா அந்த ரகசியப் படுகொலைகளில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார் என்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முகமூடி அணிந்த மனிதர்கள் சந்தேகப்படும் நபர்களின் இல்லங்களுக்கு நடுநிசியில் சென்று கதவைத்தட்டுவார்களாம். கதவைத் திறந்ததுமே யார் என்ன என்று கேட்காமல் அவர்களைக் குடும்பத்தோடு வெளியே தரதரவென்று இழுத்து வந்து நடுத்தெருவில் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள். அல்லது குடும்பத்தோடு சுட்டுக்கொன்று பிணங்களை கண்காணாத இடங்களில் வீசி எறிந்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளது இந்த அறிக்கை. உல்ஃபா இயக்கத்தின் ஆள்காட்டிகளின் துணையுடன் மஹந்தாவின் ஆணையின் பேரில் போலீஸ்துறை இந்தப் படுகொலைகளில் ஈடுபட்டன என்றும் நேரடியாகக் குற்றம் சாட்டுகிறது சைக்கியா அறிக்கை.

தற்போது கௌஹாத்தி உயர்நீதிமன்றம், சைக்கியா அறிக்கையுடன் முன்னர் கோகோய் அரசினால் நிராகரிக்கப்பட்ட, மஹந்தாவுக்கு ஆதரவாக சமர்ப்பிக்கப்பட்ட ஜஸ்டிஸ் ஜே.என்.சர்மா கமிஷன் அறிக்கையினையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.
மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தல்கள் மும்முரமாக இருக்கும் நேரத்தில் இப்படிப்பட்ட ஒரு அறிக்கையை சட்டசபையில் வெளியிட்டிருப்பது காங்கிரஸ் கட்சியின் உள்நோக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது என்று கர்ஜிக்கிறார் மஹந்தா. இந்த அறிக்கையின் குற்றச் சாட்டுக்களை மீறி காங்கிரஸ் கட்சியை பஞ்சாயத்துத் தேர்தலில் மண்கவ்விட வைப்பேன் என்று சூளுரைக்கிறார்.
காங்கிரஸ் கட்சி இந்த அறிக்கையை மிகப்பெரும் ஆயுதமாக மஹந்தாவுக்கு எதிராகக் கையில் எடுத்திருக்கிறது.
அசாம் மாநிலத்தில் மாணவர் தலைவனாக ஒரு இயக்கத்தைத் துவக்கி அந்த இயக்கத்தை ஆட்சி பீடத்தைக் கைப்பற்றும் அளவுக்குக் கொண்டு சென்ற மஹந்தாவுக்கான எதிராக அவருடைய கட்சியிலேயே ஒரு சமயம் மிகப்பெரும் எதிர்ப்புக்கள் வலுத்தன. ஒரு பெண்ணுடன் அவருக்கிருந்த தொடர்பைக் காரணமாகக் காட்டி அவரைக் கட்சியில் எந்தப் பதவியை வகிப்பதில் இருந்தும் விலக்கி வைத்தார் அவருடைய கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர் கோஸ்வாமி. இவை போன்ற உள்ளடி அரசியல்களை எதிர்கொண்டு அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அரசிலையும் கவனித்து வந்தார் மஹந்தா.
இப்போது இந்தக் கமிஷன் அறிக்கை மஹந்தாவுக்கு மாநிலத்தில் இன்னும் ஒரு பெரிய நெருக்கடியை முன்வைத்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
எது எப்படியோ, குற்றம் சாட்டப்பட்டவர்களும் குற்றம் சாட்டும் காங்கிரஸ் கட்சியும் அரசியல் விளையாட்டுக்களை மாநிலத்தில் ஒருவிதமான குதூகலமான மனநிலையில் விளையாடிக்கொண்டு இருக்கின்றன.
இந்த விளையாட்டில் மைய அரசும் தென்கிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்டுகிறோம் என்று சொல்லி பல கோடிக்கணக்கில் செலவழித்து உட்டாலங்கடி விளையாட்டைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நெல்லியில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களை இழந்து வாடிய குடும்பங்களும் இந்த குப்த்ஹொத்யாவில் நடுத்தெருவில் இழுத்துக்கொல்லப்பட்ட போராளிகள் மற்றும் போராளிகள் எனச் சித்தரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னும் நீதிக்காகவும் ஈட்டுக்காகவும் ஒரு சாதாரண மனிதன் வாழவேண்டிய மிகச்சாதாரணமான வாழ்வுக்கும் ஏங்கித்தன் நாட்களைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள்.